அலசல்
Published:Updated:

“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்!”

“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்!”

மின்சாரத்தில் கருகிய சிறுமியின் கனவு

“என் மகளைத் தனியார் ஸ்கூல்லதான் படிக்க வெச்சோம். அவளோட கையெழுத்து முத்துமுத்தா இருக்கும். நல்லா படிப்பா. அருமையா டான்ஸ் ஆடுவா. இரண்டுலயும் அவதான் ஃபர்ஸ்ட். நல்ல மனசுக்காரி. ‘அம்மா.... இந்த ஊர்ல டெங்கு ஜுரமே இல்லாம செய்யணும்மா. அதுக்காகவே நான் டாக்டராகணும்’னு சொல்லுவா. இனிமே அவளை எப்படி டாக்டராக்குவேன்” - பெருங் குரலெடுத்துக் கதறுகிறார் சிறுமி யுவஸ்ரீயின் தாய் மோகனா. இவர் மாநகராட்சியின் ஒப்பந்தத் தொழிலாளி. தந்தை மூர்த்தி,  தினக்கூலி பணியாளர்.

மழைக்கால முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்பதை, பாவனாவும் யுவஸ்ரீயும் மின்சாரத்துக்கு உயிரைக் கொடுத்து உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்!”

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில், சேதமடைந்த மின்சார கேபிள்கள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பது சர்வசாதாரணம். மழைகாலத்திலோ, அவை எமன்கள். கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் ஒரே தெருவில் வசித்த பாவனா, யுவஸ்ரீ என்ற சிறுமிகள் மழையால் விடப்பட்ட விடுமுறையை விளையாட்டுக் கனவுகளுடன் கொண்டாட வீதிக்கு வந்தனர். கேபிளில் கசிந்த மின்சாரம் தேங்கிய தண்ணீரில் பாய்ந்திருப்பதை அறியாமல், மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவர்கள், இணைபிரியாத தோழிகள்.

பார்த்திபன் - அனு தம்பதிதான் பாவனாவின் பெற்றோர். நம்மிடம் பேசிய பார்த்திபன்,  “பாவனாவைக் கொடுங்கையூர் மாநகராட்சிப் பள்ளியில் படிக்க வைத்தேன். டூ வீலருக்கு பஞ்சர் ஒட்டிக் கிடைக்கும் வருமானத்தில் பிழைக்கிறோம். ‘பெரிய ஸ்கூல்ல சேர்த்துப் படிக்க வைங்கப்பா’னு சொல்வாள். ‘படிக்க வைக்கிறேன்’னு சொல்வேன்.  நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும் என்பது அவள் ஆசை” என்றார் கண்ணீருடன்.

அரசின் அலட்சியத்தால் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களைக் கொந்தளிக்க வைத்தது. அரசைக் கண்டித்து சாலை மறியல் செய்தனர். 

“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்!”

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வம், ரகு ஆகியோர், “இங்கே உயர்மின் அழுத்தம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்யும்படி பலமுறை மனு கொடுத்தோம்; போராட்டம் நடத்தினோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. மின் கசிவு எனப் புகார் கொடுத்தால், புது கேபிள்களைப் போடாமல், டேப் அடித்துவிட்டுப் போய்விடுவார்கள். கேபிளை மாற்றச் சொன்னால், ‘ஸ்டாக் இல்லை’ என்பார்கள். மின்சார இணைப்பு பாக்ஸ்கள் திறந்த நிலையில்தான் உள்ளன. கேபிள்களெல்லாம் ரோட்டில் தரையோடு தரையாகத்தான் இருந்தன. இந்த அலட்சியம்தான் இரண்டு பிஞ்சுகளைப் பலி வாங்கிவிட்டது” என்றனர்.

  “தகவல் கிடைத்து ஓடினோம். மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் குழந்தைகள் கிடந்தார்கள். யுவஸ்ரீக்கு கொஞ்சம் உயிர் இருந்தது. பாவனா தலையின் பின்பகுதிவரை கருகிவிட்டது. எங்களால் தண்ணீரில் கால் வைக்க முடியவில்லை. ஒட்டடை அடிக்கும் கம்பை வைத்துப் பிள்ளைகளின் உடல்களை வெளியில் தள்ளி எடுத்தோம். அப்போது, யுவஸ்ரீக்கு நாடி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக்கொண்டிருந்தது. ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு, அதுவும் அவசரத்துக்கு வரவில்லை. எல்லாம் முடிந்த பின்புதான் மின்சாரத்தைத் துண்டித்தார்கள், பாவிகள்” என்றனர், ஆர்.ஆர். நகர் பொதுமக்கள்.

உயிர்கள் உதிர்ந்த பிறகுதானே நடவடிக்கை எடுப்பார்கள்? மின்வாரிய செயற்பொறியாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எட்டுப் பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மழைக்கால முன்னெச்சரிக்கையாக, மின் இணைப்புப் பெட்டிகளில் கசிவு ஏற்படாமல் இருப்பதை மின்சார வாரியம் உறுதி செய்திருக்க வேண்டும். அதனால், இது விபத்து அல்ல; கொலை. இதனையே வீட்டு உரிமையாளர் ஒருவர்  யாராவது அலட்சியமாக இருந்து மின்கசிவு ஏற்பட்டு ஊழியர்கள் இறந்திருந்தால் உரிமையாளர்மீது வழக்குப் பதிவு செய்வார்கள். ஆனால், மின்சார வாரிய ஊழியர்கள்மீது வழக்கில்லை. வெறும் சஸ்பெண்டுதான் என்பது எத்தனை பெரிய அநியாயம்.

“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்!”

‘‘அமெரிக்காவிலும், லண்டனிலும் செய்யப்பட்டதைவிட மிகச் சிறப்பாக மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன’’ என்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. ‘‘மின் தடை, மின்கசிவு ஏற்படாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன’’ என்று சொன்னார், மின்துறை அமைச்சர் தங்கமணி. இங்கே யாருக்கும் வெட்கமே இல்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும்  அரசின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் தொடர்வது மிகப்பெரிய அநியாயம். மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு வாங்கி கரன்சியை பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறவர்கள் வீடுகளில் குழந்தைகள் இல்லையா?

 திதி முடிந்த பிறகு நிதி கொடுத்து என்ன பயன்?

- ந.பா.சேதுராமன்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு