
தஞ்சாவூர் தலையெழுத்து
டெங்கு ஆய்வுக்காகச் சென்ற கலெக்டரைப் பார்த்து நாய் குரைத்ததால், என்ன செய்வார்கள்? அந்த நாயை வளர்த்தவருக்கு 10,000 ரூபாய் அபராதம் போடுவார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது.
தஞ்சாவூர், வாணக்காரத் தெருவில் வசிப்பவர் பசுபதி. அவர் வசிக்கும் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் கலெக்டர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போதுதான், அதிகாரிகளைப் பார்த்து நாய் குரைத்த சம்பவம் நிகழ்ந்தது. என்ன நடந்தது என்பதை பசுபதியே நம்மிடம் விவரித்தார்.

“நான், அரிசி மொத்த வியாபாரம் செய்கிறேன். என் வீட்டை யொட்டியுள்ள என் தம்பியின் இடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் தகரத்தால் ஷெட்போட்டுச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திவருகிறேன். கலெக்டர் அண்ணாதுரை உள்பட பல அதிகாரிகள் டெங்குக் கொசு ஒழிப்புப் பணிக்காக எங்கள் பகுதிக்கு வந்தனர். எங்கள் வீட்டு கேட்டை அவர்கள் திறந்தபோது, அவர்களைப் பார்த்து எங்கள் நாய் குரைத்துள்ளது. அதனால், கலெக்டரும் பிற அதிகாரிகளும் சத்தம் போட்டனர். சட்டப் படிப்பு படிக்கும் என் மகள் கதவைத் திறந்தபோது, ‘நாயைக் கட்டிவைக்க மாட்டீர்களா... எதற்காக நாய் எங்களைப் பார்த்துக் குரைக்கிறது? மாநகராட்சியில் பிடித்துப்போகச் சொல்லிவிடுவேன்’ என கலெக்டர் கோபமாகச் சொன்னார். அதற்கு என் மகள், ‘நாய் எங்கள் வீட்டுக் காம்பவுண்டு சுவருக்கு உள்ளேதான் இருக்கிறது. நீங்கள் சொல்லாமல் கேட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்தது உங்கள் தவறு. நாய்க்கு, கலெக்டர் வருகிறார் என்றெல்லாம் தெரியாது. அது யார் வந்தாலும் குரைக்கும்’ எனச் சொல்லியுள்ளார்.

அந்த நேரத்தில், அங்கு நான் வந்துவிட்டேன். ‘டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வுக்காக வந்த கலெக்டரை எதிர்த்து இப்படிதான் பேசுவீர்களா’ என கலெக்டர் என்னிடம் கோபமாகப் பேசினார். ‘இதில் கோபப்பட ஒன்றுமில்லை. கேட்டை திறந்து கும்பலாக வீட்டுக்குள் வந்ததால், நாய் குரைத்தது. அதற்குக் கோபப்பட வேண்டிய அவசியமில்லையே’ எனச் சொன்னேன். உடனே அவர், ‘உங்கள் நாயை மாநகராட்சியில் சொல்லி பிடித்துப்போகச் சொல்கிறேன்’ என்றார். ‘அரசு விதிப்படி, கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு வளர்க்கிறேன். இதுவரை இந்த நாய் யாரையும் தொந்தரவு செய்ததில்லை. உங்களால் அதைப் பிடித்துப்போக முடியாது’ என்றேன். உடனே அவர், ‘உங்கள் ஷெட்டில் உள்ள டயர்களில் டெங்கு கொசு உள்ளது. உங்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு, அந்த டயர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த டயர்களை ஒரு வாரத்துக்கு முன்பு வாங்கி, டிஸ்க் மாட்டி வைத்திருந்தேன். அதில் எப்படி மழைநீர் தேங்கும்? எனவே, ‘அபராதம் கட்டமுடியாது’ என்று சொல்லிவிட்டேன். இரண்டு நாள்கள் கழித்து மாநகராட்சியின் பில்டிங் பிரிவிலிருந்து அதிகாரிகள் வந்து, ‘உங்கள் கட்டடம் விதிமுறைமீறி கட்டப்பட்டுள்ளது. அதனால், அந்தக் கட்டடத்துக்குத் தண்ணீர், மின்சார இணைப்பு துண்டிக்கப்படும்’ என நோட்டீஸ் கொடுத்தனர்.

எதற்கு வம்பு என 10,000 ரூபாய் அபராதம் கட்டினேன். அதற்கு, ரசீது கொடுத்தார்கள். ‘அபராதம் எதற்காக விதிக்கப்பட்டது என்பதற்கு உரிய விளக்க நோட்டீஸ் கொடுங்கள்’ எனக் கேட்டேன். ஆனால், அவர்கள் தரவில்லை.

விதிமுறைகளை மீறிய கட்டடம் என்று சொல்கிறார்கள். ஆனால், அது ஒரு தகர ஷெட். அதற்கு வரியும் கட்டிவருகிறேன். கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி இப்படியொரு நோட்டீஸ் அனுப்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்பகுதியில் டெங்கு ஆய்வு செய்தபோது, மற்ற வீடுகளில் 500 ரூபாய் மட்டும்தான் அபராதம் விதித்துள்ளனர். என் வீட்டுக்கு மட்டும் 10,000 ரூபாய் அபராதம். கலெக்டர் வந்தபோது நாய் குரைத்ததும், மகள் கேள்வி கேட்டதும்தான் இதற்குக் காரணம்” என்றார்.
கலெக்டர் அண்ணாதுரையின் செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். அவருடைய உதவியாளர் எடுத்து, விவரங்களைக் கேட்டுவிட்டு, ‘சார் பிஸியாக இருக்கிறார்’ என்றார். பிறகு, அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினோம். பதில் இல்லை. தஞ்சை மாநகராட்சி கமிஷனர் வரதராஜைத் தொடர்புகொண்டோம். “நாய் குரைத்ததற்காக யாராவது அபராதம் விதிப்பார்களா? கலெக்டர், ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் சென்றபோது, அவர்களிடம் பசுபதி கடுமையாக நடந்துகொண்டார். அங்கு, டயரில் டெங்கு கொசு இருந்ததால் அபராதம் விதித்தார்கள். தியேட்டர்களுக்கு ஒரு லட்சம் வரை அபராதம் விதித்துள்ளோம்” என்றார்.
பசுபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், ‘‘10,000 ரூபாய் அபராதம் விதித்தது அதிகார துஷ்பிரயோகம்” என்றார்.
கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா!
- ஜெ.அன்பரசன்