
முகில்
மிக மிகச் சோகமான, நெஞ்சைப் பிழியும் நிகழ்வுகளுடன்தான் ஆரம்பிக்கப் போகிறோம். கண்ணீர் பீறிட்டுக் கொட்டினாலும் கொட்டலாம். எதற்கும் கைக்குட்டையை எடுத்துவைத்துக்கொண்டு ஆரம்பியுங்கள்.
பால்ய வயதில் ஒருவருக்கு ஓரிரு துயரங்கள் நிகழலாம். ஆனால், பால்யமே துயரமாக இருந்தால்? பாவம் அல்லவா! அவன், அன்றைக்கு சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த துர்க்மெனிஸ்தானில் பிறந்தான். என்னது... அவன் இவன் என்ற ஏக வசனமா? சரி, அவர் 1940, பிப்ரவரி 19-ம் தேதி பிறந்தார். அவருடைய இயற்பெயர் சபார்முராத் நியாஸோவ் (Saparmurat Niyazov).
நிச்சயம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகத்தான் இருந்திருக்க வேண்டும். குடும்பத்தின் தூண் போல இருந்த நியாஸோவின் தாத்தா, ஊரில் சொந்தமாக வணிகம் செய்தார். ஜோசப் ஸ்டாலின் அதற்குத் தடைவிதித்தார். தாத்தா வாழ வழியின்றி பரதேசம் போனார். நியாஸோவின் அப்பா, ஆகச்சிறந்த, தேசபக்தி மிகுந்த, நேர்மையான, விவேகமான, எல்லையிலே போரிட்ட ராணுவவீரர். இரண்டாம் உலகப்போரில் வடக்கு ஒசேத்தியப் பகுதியில், கொடும்பாவி ஹிட்லரின் நாஸிப் படைகளுடன் போரிட்டபோது, வீரமரணமடைந்தார். மிச்சமிருந்தது தாயும், உடன்பிறந்தவர்களும் மட்டுமே.

மீண்டும் விதி வீறுகொண்டு விளையாடியது. துர்க்மெனிஸ்தானின் தலைநகரமான அஸ்காபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1948-ல் மிகப்பெரிய நிலநடுக்கம் உண்டானது. ரிக்டர் அளவு 9.0. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அது, துர்க்மெனிஸ்தானின் மக்கள் தொகையில் பத்து சதவிகிதம். அதில் நியாஸோவின் தாயும் சகோதரர்களும் அடக்கம்.
நியாஸோவுக்கு மட்டும் விதி மிச்சமிருந்திருக்கிறது. ஆம், துர்க்மெனியர்களின் தலைவிதியையே மாற்றி எழுதுவதற்காக அவர் மட்டும் அப்போது தப்பித்திருந்தார். சாதாரணமாக அல்ல. இடிந்த ஒரு கட்டடத்தின் உள்ளே சிக்கி, மூச்சுத்திணறி, அரண்டு, அழுது, தனித்திருந்து, பசித்திருந்து, விழித்திருந்து, நம்பிக்கை வற்றாமல், கொஞ்சம் கொஞ்சமாக இடிபாடுகளை அகற்றி, தட்டுத்தடுமாறி உயிரைத் தக்கவைத்து மேலே வந்துசேர, அவருக்கு எட்டு நாள்கள் பிடித்தன. அப்போது அவருக்கு வயதும் எட்டு.
எட்டு எட்டாகப் பிரிக்கப்பட்ட மனித வாழ்வின் முதல் எட்டு, நியாஸோவுக்குச் சோகம் சொட்டச் சொட்டத்தான் இருந்திருக்கிறது. ஆம், இதை யாவரும் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில், நிகரற்ற நியாஸோவே இதைத் தன் ‘சுயசரிதை’ நூலில் செதுக்கியிருக்கிறார். இங்கே ‘சுயசரிதை’ என்பதுகூட வலுவற்ற, முறையற்ற வார்த்தைதான். அது, அதற்கும் மேலே. எதற்கும் மேலே? அதையெல்லாம், மேலே போகப்போக பார்த்துத் தொலைக்கலாம்.
மீட்புப் பணியிலிருந்தவர்கள் நியாஸோவுக்குச் சிகிச்சையளித்தனர். கொஞ்சம் உணவு கொடுத்தனர். அநாதை என்று அறிந்து, காகசஸ் மலைப்பகுதியிலுள்ள ஆதரவற்றோர் விடுதி ஒன்றுக்கு அனுப்பிவைத்தனர். அங்கேதான் தனது இரண்டாம் எட்டில் நல்லதொரு மாணவனாக, மனிதனாக, குடிமகனாக, ஒழுக்கசீலனாக, நேர்மையான கொம்பனாக, etc., etc.,-ஆக நியோஸோவ் வளர்ந்தார்.
1959-ல் பள்ளிப்படிப்பை முடித்தார். பாலிடெக்னிக் படித்தார். எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் முடித்தார். சில வேலைகளில் இருந்தார். மேற்படிப்புக்கு ரஷ்யா சென்றார். தோல்வியுடன் திரும்பினார். அதற்கெல்லாம் முன்பாகவே, அந்தப் பிரதேசத்துக்குரிய கல்யாண குணங்கள் நிரம்பிய கம்யூனிஸ்ட்டாகத் தன்னை வார்த்துக் கொண்டிருந்தார். துர்க்மென் சோவியத் சோஷலிசக் குடியரசின் (Turkmen SSR) கம்யூனிஸ்ட் கட்சியில் அடிமட்டத் தொண்டராக இணைந்து, பணிந்து, கலந்து, துணிந்து, கவிழ்த்து, வளர்ந்து, நிமிர்ந்து, அடுத்தடுத்த மட்டங்களுக்கு உயர்ந்து ஒரு தலைவராக நின்றார் நியாஸோவ். (ஒரே பாடலில் ஹீரோ ஓஹோ ஆகும் கதைதான். அதெப்படி என்றெல்லாம் நியாஸோவ் நீட்டி முழக்கவில்லை.)
முகம்மத்நாசர் கேபுரோவ் என்பவர் துர்க்மெனிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். பல முறைகேடுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்மீது, 1985-ல் பருத்தி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு பெரிதாக வெடித்தது. சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மிகேல் கோர்பசோவ், கேபுரோவைப் பதவியிலிருந்தும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார். அந்த இடத்தில் கோர்பசோவால், நியாஸோவ் நியமிக்கப்பட்டார். 1990-ல் நியாஸோவ், The Supreme Soviet of the Turkmen SSR-ன் சேர்மனாக நியமிக்கப்பட்டார். இது, அதிபர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்டது.
1991 ஆகஸ்டில் சோவியத் ஒன்றியத்தைக் கலைக்கும் வகையில், கோர்பசோவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கவிழ்ப்பு முயற்சியில் நியாஸோவும் மறைமுகமாகப் பங்குவகித்தார். அந்த முயற்சி அப்போது தோல்வியடைந்தது. அந்த டிசம்பர் 8-ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. ஆனால், அக்டோபரிலேயே நியாஸோவ் துர்க்மெனிஸ்தானை தனி நாடாகப் பிரித்துக் கொண்டுவந்திருந்தார். அதன் முதல் அதிபராக அறிவிக்கப்பட்டும் இருந்தார்.
இருந்தாலும் ஜனநாயகம் கொஞ்சமாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டுமென புதியதாக ‘ஜனநாயகக் கட்சி’யை ஆரம்பித்தார். 1992-ல் அதிபர் தேர்தலையும் நடத்தினார். அவர் மட்டுமே வேட்பாளர். அமோக வெற்றி. மக்கள், 99.5 சதவிகித ஆதரவு வாக்குகளை அளித்து அழகு பார்த்தனர். துர்க்மெனிய மக்கள் தேர்ந்தெடுத்த மகத்தான அதிபராக சபார்முராத் நியாஸோவ் பதவியேற்றார். என்மீது இத்தனைப் பாசம் வைத்திருக்கும் இந்த மக்களுக்கெல்லாம் ஏதாவது செய்தே ஆகவேண்டுமே என்று உட்கார்ந்து யோசித்தார். வெச்சி செய்ய ஆரம்பித்தார்!
துர்க்மெனிஸ்தான், இஸ்லாமியர்கள் நிரம்பிய நாடு. என்றாலும், ஸ்டாலின் காலத்திலெல்லாம் அங்கே மசூதிகள் காணாமல்போயிருந்தன. துர்க்மெனியர்களுக்கான தனித்துவ கலாசாரமெல்லாம் கம்யூனிஸப் போர்வையில் புதைந்துபோயிருந்தன. அங்கே முக்கிய விளைபொருள் பருத்தி. இயற்கை எரிவாயும், எண்ணெய் வளமும் செழிப்பாக நிரம்பிய நாடு. இருந்தாலும், அந்த வளங்கள் சோவியத் யூனியன் பிரதேசங்களுக்குக் குறைந்த விலையில் பகிரப்பட்டதால், மக்கள் செழிப்பாக இல்லை. தேசத்தின் பொருளாதாரமும் அதுவரை வளமாக இல்லை.
துர்க்மெனிஸ்தான் புதிய தேசமாக உருவாகியபோது, கம்யூனிஸத்தின் சுவடுகளும், திணிக்கப்பட்ட ரஷ்யர்களின் கலாசாரமும் தன் தேசத்தில் இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தார். துர்க்மெனிஸ்தானின் தனித்துவ அடையாளங்களை, கலாசாரத்தை அழுத்தமாக உலகத்துக்குத் தெரியப்படுத்த விரும்பினார் நியாஸோவ். ஆனால், தானே இனி துர்க்மெனிஸ்தானின் பெருமைக்குரிய அடையாளம், தான் உருவாக்குவதே இனி துர்க்மெனியர்களின் கலாசாரம் என்று செயல்பட ஆரம்பித்தார்.
உலகமெங்கும் வாழும் துர்க்மெனியர் களுக்கான அமைப்புக்கு (Association of Turkmens of the World) தலைவரானார். ‘உலகவாழ் துர்க்மெனியர்களின் தன்னிகரற்ற ஒரே தலைவர் நானே. துர்க்மெனிஸ்தான் தேசத்தின் தந்தையும் நானே. இனி என்னை எல்லோரும் ‘துர்க்மென்பாஷி’ (Turkmenbazy) என்றே அன்புடன் அழைத்து இன்புறுங்கள்!’ துர்க்மெனியர்களுக்குப் புல்லரித்தது. ‘தலைவன் இருக்கிறான்’ என்று தலைநிமிர்ந்து பார்த்தார்கள். அந்தத் தலைவரோ, தன்னையே கடவுளாக நினைக்க ஆரம்பித்திருந்தார். அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் ஆட்சியாளர்களுக்கு மண்டைக்கனம் மிகுதல் இயல்புதானே.
துர்க்மெனிஸ்தானைப் பொருளாதாரச் செழிப்புள்ள தேசமாக முன்னேற்ற என்னிடம் பல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எனக்குப் பத்தாண்டுகள் தேவை. ஆம், புதிய துர்க்மெனிஸ்தான் பிறக்கப்போகிறது! (குழந்தைக்குப் பத்து மாதம். தேசத்துக்குப் பத்தாண்டுகள். கணக்கு சரிதானே!) அதற்கு ஐந்து வருட அதிபர் பதவி என்பது போதாது. 2002 வரை தானே அதிபர் என்று 1994-ல் அறிவித்தார் நியாஸோவ். சரி, அதுவரையிலான அந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன ஆணிகள் பிடுங்கியிருந்தார்?
துர்க்மெனிஸ்தானுக்கும் கம்யூனிஸத்துக்கும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. அது ஒரு தூய்மையான இஸ்லாமிய தேசம் என்று அடையாளப்படுத்துவதற்காக, சவுதியுடன் பிணைப்பை நெருக்கமாக்கிக்கொண்டார். தான் ஓர் உண்மையான இஸ்லாமியன் என்று காட்டிக்கொள்ள அடியார்கள் புடைசூழ மெக்காவுக்கும் சென்று வழிபட்டுவந்தார். இதன்மூலம் The Organisation of Islamic Cooperation என்ற உலக இஸ்லாமிய தேசங்களின் கூட்டமைப்பில் துர்க்மெனிஸ்தானையும் உள்நுழைத்துக் கொண்டார். துருக்கியுடன் பாசமாகக் கைகுலுக்கி கடனுதவி பெற்றுக் கொண்டார். ஈரானுக்கு எண்ணெய், எரிவாயு, மின்சாரம் விற்க ஒப்பந்தம் செய்துகொண்டார். கொள்ளை லாபம் கொண்ட திட்டம் அது. ஈரானுக்குக் குழாய்கள் வழியாக எரிவாயு கொண்டு செல்ல பணிகள் ஆரம்பமாயின. ஆனால், அதற்கு முன்பு அது பாதுகாப்பானதா, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களைத் தாங்கும் வல்லமை கொண்டதா, மக்களுக்குப் பாதிப்பு உண்டாகுமா என்ற ஆய்வுகளெல்லாம் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்சியாளர்கள் நினைத்தால் எங்கும், எவன் நிலத்தையும் குடைந்து குழாயைப் பதித்துவிடலாம் என்பதுதானே உலக நடைமுறை.
இது ஒரு மதச்சார்பற்ற நாடு. எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அப்படித்தான் தேனொழுக வெளியே சொன்னார்கள். ஆனால், துர்க்மெனிஸ்தானில் வாழ்ந்த பிற மதத்தினரும், சிறுபான்மை இனத்தினரும் அடக்குமுறைக்கு ஆளாகத் தொடங்கினர். துர்க்மெனிய வாழ் ரஷ்யர்கள் இனிமேல் இங்கே வாழவே முடியாதோ என்று அச்சம் உருவானது. ஆனால், முஸா ஸோகோலோவா என்ற ரஷ்யப் பெண்ணைத்தான் நியாஸோவ் திருமணம் செய்திருந்தார். முராட் என்ற மகனும், இரினா என்ற மகளும் அவர்களுக்கு இருந்தனர். ஆகவே, அந்தப் பிணைப்பு கொடுத்த நம்பிக்கையில் ரஷ்யர்கள் காலம் தள்ள ஆரம்பித்தனர்.

துர்க்மெனிஸ்தானின் பிற கட்சிகள் முகவரியின்றி நசுக்கப்பட்டன. தொலைக் காட்சிகளும், பத்திரிகைகளும் அரசின் வசம் சென்றன. எதை மக்கள் பார்க்க வேண்டும், வாசிக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. தணிக்கை தறிகெட்டு நடந்தது. தினமும் நியாஸோவே வண்ண வண்ண உடைகளுடன் தலைப்புச் செய்தியாகக் காட்சி தந்தார். 1992-ல் நியாஸோவுக்கு ‘துர்க்மெனிய மக்களின் நாயகன்’ விருது வழங்கப்பட்டது. ஆம், தனக்குத்தானே விருதளித்துக் கொண்ட தானைத் தலைவர்!
ஒரு சாலைக்கு லெனினின் பெயர் இருந்தது. ஒரு பண்ணை, இன்னும் சில இடங்கள் லெனினின் பெயருடன் திகழ்ந்தன. அத்தனைக்கும் தன் பெயரையே அருளி, துர்க்மெனியர்களை உய்வித்தார். ஸ்டாலின்போல நியோஸோவும் ஒரு சர்வாதிகாரியே என்று சலசலப்புகள் கிளம்பின. இடுங்கிய கண்களிலும் புன்னகை தேக்கி நியாஸோவ் பதில் சொன்னார், ‘ஸ்டாலின் அனைத்தையும் அடக்குமுறையால் சாதித்தார். நான் எனது களங்கமற்றப் புகழால் இவற்றை அடைந்திருக்கிறேன்!’
1999-ல் கடைந்தெடுத்த ஜனநாயகவாதியான நியாஸோவ், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினார். அதில் அவரது ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே போட்டியிட்டு, வியர்வை சிந்தி மக்கள் தொண்டாற்றி, அமோக ஆதரவுடன் நேர்மையாக வென்றனர். அந்த டிசம்பர் 28-ல் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ‘துர்க்மெனிஸ்தானின் வாழ்நாள் அதிபர் நியாஸோவ்தான்.’
அவரின் அடிப்பொடிகளுடைய பரிபூரண ஆதரவுடன் அந்தத் தீர்மானம் பூப்போல நிறைவேற்றப்பட்டது. நியாஸோவ், துர்க்மெனிஸ்தானின் அதிகாரபூர்வ சர்வாதிகாரியாக விஸ்வரூபம் எடுத்தார். அந்தத் தேசம் இரும்புத்திரைக்குள் கட்டுண்டது.
- (நியாஸோவ் வருவார்...)