
ஏரிகள் திறக்கவில்லை... புயல் வரவில்லை...
‘இது ஒரு செயலற்ற அரசு’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறது எடப்பாடி அரசு. அக்டோபர் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஏரிகள் திறக்கப்படவில்லை; புயல் வரவில்லை; வெறும் பருவமழைக்கே சென்னை மிதக்கிறது. அக்டோபர் 30-ம் தேதி பெய்த வெறும் 13.4 செ.மீ மழைக்கே தண்ணீரில் தத்தளித்தது சென்னை. அரசியல் ரீதியாக ஆட்சியாளர்கள் சிக்கலில் இருப்பதால், மக்களைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை போலும் (இல்லாட்டியும்!).

சென்னையின் ஆதாரங்களாக இருக்கும் நீர்நிலைகளை அலட்சியப்படுத்தியதுதான், 2015 மழை வெள்ளத்துக்குக் காரணம். அந்தப் பிரச்னைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிசெய்யப்படவில்லை. அடையாறு ஆற்றை அகலப்படுத்தவும், அதன் கரைகளைப் பலப்படுத்தவும் 19 கோடி ரூபாய் செலவில் ஓராண்டுக்கு முன்பு தொடங்கிய பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.தி.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் வழியே செல்லும் மாம்பலம் கால்வாய் சரியாகத் தூர்வாரப்படாததால், 2015-ம் ஆண்டு, நகரின் மையப்பகுதிகள் மூழ்கின. பிறகு, கால்வாயைத் தூர்வாரினார்கள். ஆனால், முழுமையாக முடிக்கப்படவில்லை. தேனாம்பேட்டை, நந்தனம், போன்ற பகுதிகளில் கால்வாயின் பல்வேறு பகுதிகள் தூர்வாரப்படவில்லை.
“2015-ம் ஆண்டு மழையில், போரூர் ஏரியின் தண்ணீர் மணப்பாக்கம், போரூர், முகலிவாக்கம் பகுதிகளுக்குள் நுழைந்தது. இப்போது இந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து வருகின்றனர். மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பணிகள் முடிவுறாமல் உள்ளன. மழைநீர் வடிகால்களை மணப்பாக்கம், முகலிவாக்கம் கால்வாய்களுடன் இணைத்துள்ளனர். மீண்டும் ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும்” என்று அச்சம் தெரிவிக்கிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த அருணாசலம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் முருகேசன், “சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் கூவம் கரையில் இருந்த குடிசைகளைச் சில நாள்களுக்கு முன்பு அகற்றினர். இதை, மே மாதமே செய்திருக்க வேண்டும். மழைநீர் கால்வாய்கள், தரமான பொருள்களால் அமைக்கப்படவில்லை. அவை, சிறிய மழைக்கே சேதமடைந்துவிட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை மழைநீர் கால்வாய்கள் அமைத்துள்ளனர். ஒருமுறைகூட தரமாக அமைக்கப்படவில்லை. வீட்டில் தண்ணீர் தேங்கினால் அபராதம் போடுகின்றனர். ரோட்டில் தண்ணீர் தேங்குவதற்கு யார் மீது நடவடிக்கை எடுப்பது?” என்றார்.
முன்னாள் மேயரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “சென்னையில் 1,137 கி.மீ மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் சொன்னார். தூர்வாரப்பட்டிருந்தால், இந்தச் சிறிய மழைக்கே மழைநீர் தேங்கி நிற்காது. பருவமழைக்கு முன்பாக, கடலோர காவல்படை, ராணுவம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மாவட்ட ஆட்சியர், குடிசைமாற்று வாரியம் உள்ளிட்ட 85 துறைகளைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அப்படி எந்தக் கூட்டமும் பருவமழைக்கு முன்பு நடைபெறவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகளைக்கொண்டு சிறிய கூட்டம் மட்டுமே நடந்தது. அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, சாலையில் பள்ளம் தோண்ட அனுமதிக்கக்கூடாது. ஆனால், கிண்டி, சைதாப்பேட்டை எனப் பல இடங்களில் முழுவதும் சாலைகளை வெட்டியுள்ளனர். அவற்றை மூடவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில், புறநகர் பகுதிகளில் வடிகால் வசதிகள் செய்திருக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் சொத்துவரி அதிகமாக வசூலாகிறது. அங்கு, அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. மாநகராட்சிக்குச் சொத்துவரி, தொழில்வரி தவிர, தமிழக அரசிடமிருந்தும் நிதி தரப்பட வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நிதியைத் தமிழக அரசு அளிக்கவில்லை” என்றார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தரராஜன், “2015 மழை அனுபவத்திலிருந்து ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கொசஸ்தலை, கூவம், அடையாறு என்ற மூன்று ஆறுகள் சென்னையின் ஆதாரம். அவற்றைப் பக்கிங்ஹாம் கால்வாய் இணைக்கிறது. இவை தவிர மாம்பலம், கேப்டன், விருகம்பாக்கம் என 18 பெரிய கால்வாய்கள் இருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கால்வாய்கள் இருக்கின்றன. இந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து விட்டால், எப்படி மழைநீர் வடியும். சூழல் மண்டலம், ஆறு, தண்ணீர், பருவநிலை மாற்றம் போன்றவற்றின் முக்கியத்துவம் ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. சேத்துப்பட்டு ஏரியைப் புனரமைக்கிறோம் எனத் தேவையில்லாமல் 42 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆழ்குழாய் அமைத்து, அந்த ஏரிக்குத் தண்ணீர் எடுக்கின்றனர். டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றுகின்றனர். இதற்குச் செலவழித்த 42கோடியில் 25 பெரிய ஏரிகளைத் தூர்வாரியிருக்கலாம். நீர் நீலைகளைத் தூர்வாரி, ஆற்றின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகள் சுருங்கிவிட்டன. 2015-ல் ஆற்றின் முழுக்கொள்ளளவுக்குக் குறைவாகத்தான் தண்ணீர் வந்தது. ஆனால், அதைக்கூட தாங்க முடியாத அளவுக்கு ஆறுகள் இருக்கின்றன”என்றார். பெருமழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதும், நிவாரண உதவித் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதும் மட்டுமே அரசின் பணி என நினைத்துவிட்டார்களோ?
-கே.பாலசுப்பிரமணி
படங்கள்: ப.சரவணகுமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார், வி.ஸ்ரீனிவாசுலு
அம்மா உணவகம் அமோகம்.. மக்களோ அம்போ!
நிதி இல்லாமல் திவாலாகும் நிலையில் சென்னை மாநகராட்சி இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது, சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், குப்பை அள்ளுதல் போன்ற பணிகள்தான் ஆனால், அம்மா உணவகம் என்ற பெயரில் உணவு விடுதிகள் நடத்தினார்கள். அம்மா உணவகங்களுக்காக சப்பாத்தி செய்வதற்காக வாங்கப்பட்ட மிஷின்கள் 14 மண்டல அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மெஷின் ஒன்றின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த வகையில் 14 கோடி ரூபாய் நஷ்டம். இந்த மெஷினை வைப்பதற்கு தலா 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டியிருக்கிறார்கள். இப்படி அம்மா உணவகங்களினால் மட்டும் பல கோடி ரூபாய் நஷ்டம். சில அம்மா உணவகங்களில் ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்குக்கூட விற்பனை ஆவதில்லை. அந்த உணவகங்களில் நாள் ஒன்றுக்கு ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
மழை, வெள்ள பாதிப்புகளின்போது, மாநகராட்சி சார்பில் உணவு சமைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அண்மையில், வடசென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்படவில்லை. வெளியிலிருந்து பணம் கொடுத்து வாங்கப்பட்ட உணவுப்பொட்டலங்களைச் சிலருக்கு மட்டுமே வழங்கினர். ‘நிதி இல்லை’ எனக் காரணம் சொல்கிறார்களாம். 2015 மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டபோதும், நகரப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டன. அக். 30-ம் தேதி கனமழையின்போது மாலை ஐந்து மணியிலிருந்து பஸ்கள் ஓடவில்லை. “சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. பழைய, ஓட்டை, உடைசல் பேருந்துகளை மழைக்காலத்தில் ஓட்டுவது பெரும் சவாலாக இருக்கிறது” என்று குமுறுகிறார்கள், போக்குவரத்துப் பணியாளர்கள்.