அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! - அரசியல் அம்பு!

மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! - அரசியல் அம்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! - அரசியல் அம்பு!

மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! - அரசியல் அம்பு!

தொப்பலாக நனைந்துவந்தார் கழுகார். ‘‘மக்களுக்கு மழை பற்றிய பயத்தைவிட மின்சாரம் குறித்த பயம்தான் அதிகம்” என வருத்தமான குரலில் பேசத் தொடங்கினார்.

‘‘சென்னை கொடுங்கையூரில் இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.  ‘சென்னை தெருக்களில் உள்ள பழுதடைந்த மின் பெட்டிகளைச் சரிசெய்ய வேண்டும்’ என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்கிறார்கள் மின் ஊழியர்கள். சென்னையில் பெரும்பாலும் மின்சார இரும்புப் பெட்டிகள்தான். பல இடங்களில் உடைந்துகிடக்கும் இரும்புப் பெட்டிகளை, மாற்ற வேண்டும் அல்லது வெல்டிங் செய்ய வேண்டும். இதற்கு, மழை சீஸன் ஒத்துவராது. கதவுகள் இல்லாததால் மின் பெட்டிகள் பெரும்பாலும் திறந்தபடியே கிடக்கின்றன. ஒயர்கள் எல்லாம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன.  ஜெயலலிதா  முதல்வராக இருந்தபோது, எல்லா இடங்களிலும் ஸ்டீல் பெட்டிகளை அமைக்க உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை விரைந்து முடித்தால்தான், புது மின்பெட்டிகளைக் கொள்முதல் செய்யமுடியுமாம்.’’

‘‘கொடுங்கையூர் சம்பவத்துக்காகச் சிலரை சஸ்பெண்டு செய்துள்ளார்களே?”

‘‘இது, உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தெருவில் உள்ள மின்பெட்டிகளை ஃபீல்டில் உள்ளவர்கள்தான் கவனிக்கவேண்டும். இவர்களுடன் சேர்ந்து நிர்வாக பொறியாளரையும் சஸ்பெண்டு செய்திருப்பது தவறு.  ஃபீல்டில் உள்ளவர்கள்  மின்பெட்டியை மாற்றும்படி, மின் வாரியத்துக்கு மழை சீஸனுக்கு முன்பே பலமுறை புகார் சொல்லியுள்ளனர். ஆனால், அதைக் கண்டுகொள்ளவில்லை. அப்படியிருக்க, கொடுங்கையூர் அசம்பாவிதம் நடந்தவுடன், நடவடிக்கை என்கிற பெயரில் ஒரு சிலரைக் காவுகொடுத்துவிட்டு, மின் வாரியம் தப்பிக்க முயற்சி செய்கிறது’ என ஊழியர்கள் கொந்தளிக்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! - அரசியல் அம்பு!

‘‘வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஐந்து அமைச்சர்கள் பேசியிருக்கிறார்களே?”

‘‘வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். முதல் முறையாக, சென்னை மாநகர போலீஸை வைத்து வெள்ள மீட்புக் குழுக்கள் அமைக்க முடிவாகியதாம். என்னதான் திட்டமிட்டாலும், உரிய காலத்தில் செயல்படாவிட்டால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.”

‘‘சசிகலாவின் கணவர் நடராசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டாரே?”

“ஆமாம். சிகிச்சை முடிந்து நவம்பர் 1-ம் தேதி வீடு திரும்பினார். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி மாலை 4 மணிக்கு மயக்கம் ஏற்பட்டு, குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராசனுக்கு, உடனடியாக கல்லீரல், கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றனர் டாக்டர்கள். அவருக்குத் தகுந்த உறுப்புகள் கிடைக்கவில்லை. அக்டோபர் 4-ம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மூளைச்சாவு அடைந்தார். அவரின் உறுப்புகள் நடராசனுக்குப் பொருத்தப்பட்டன. பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவும் ஐந்து நாள்கள் பரோலில் வந்து நடராசனைப் பார்த்துச் சென்றார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகும், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த நடராசன், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.இப்போது வீடு திரும்பியிருக்கிறார். வீட்டில் ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார்கள் டாக்டர்கள்.”

“பெசன்ட் நகர் வீட்டில்தான் நடராசன் இருக்கிறாரா?”

“இல்லை. அங்கு தங்கினால், அவரைப் பார்க்க நிறைய விசிட்டர்கள் வருவார்கள். அது தொந்தரவாக இருக்கும் எனக் கருதி, வேறு ஒரு இடத்தில் அவரைத் தங்கவைத்து அவருடைய தம்பி ராமச்சந்திரன் பராமரிக்கிறார். நோய்த் தொற்று எதுவும் வந்துவிடக்கூடாது என்பதில் மருத்துவர்களும் நடராசனின் உறவினர்களும் கவனமாக உள்ளனர். அவர் மீண்டு வந்தது, அரசியல் ரீதியாக அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. ‘சசிகலா வெளியில் இருந்து செய்ய வேண்டிய அரசியல் நகர்வுகளை, நடராசன் செய்வார். அவரால் தங்களின் ஆட்சிக்குச் சிக்கல் வரலாம்’ என்று  எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாராம். ‘முக்கிய மருத்துவமனை சார்பில் கல்லீரல் தர முயற்சி செய்தபோது, அமைச்சர் ஒருவர் அதைத் தடுத்துவிட்டார்’ என்ற செய்தி ஒரு மாதத்துக்கு முன்பு பரவியது. அந்த அமைச்சர் நடுக்கத்தில் இருக்கிறாராம். ‘நம் உறவுகளிடமும் ஏராளமான தவறுகள் இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க என்பது நம் உழைப்பால்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளது. அதை நாம் மீட்க வேண்டும்’ என்று நடராசன் சொல்லி வருகிறாராம்.”

மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! - அரசியல் அம்பு!

“இரட்டை இலையை வாங்காமல் இவர்களால் என்ன செய்ய முடியும்?”

“உண்மைதான். இரட்டை இலை வழக்கில் நவம்பர் 1-ம் தேதி நடந்த வாதம்தான் இதற்கு முந்தைய வாதங்களைவிட அனல் பறப்பதாக இருந்தது. தினகரனின் வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவின் வாதத்தில், ‘இந்த வழக்கு ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு இடையிலானது. தற்போது ஓ.பி.எஸ் பக்கம் உள்ள எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த ஆவணங்களும் சசிகலாவுக்குச் சாதகமானவையே. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆவணங்களை சசிகலாவுக்கு ஆதரவாக தாக்கல் செய்துவிட்டு, இப்போது ஓ.பி.எஸ்ஸுடன் சேர்ந்துகொண்டால், அந்த ஆவணங்கள் மாறிவிடுமா? அதேநேரத்தில், ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி இணைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை. அவற்றில், பலரின் கையெழுத்துகள் முறைகேடாகப் பெறப் பட்டவை. முத்திரைத்தாள் வாங்கிய தேதிக்கு முன்பே, கையெழுத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இரட்டை இலையை ஓ.பி.எஸ் கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமிதான் கேட்கிறார் என்று வைத்துக் கொண்டால், அவர் சசிகலாவுக்கு ஆதரவாகத்தானே ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். இப்போது அவருக்கு இரட்டை இலையைக் கொடுப்பது சசிகலா, தினகரன் அணிக்குக் கொடுப்பதாகத்தானே அர்த்தம்’ என்று வாதிட்டார்.  இது, பிரச்னையை இன்னமும் சிக்கலாக்கி உள்ளது.”

‘‘என்ன சிக்கல்?”

“அதிகாரபூர்வமாக ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப் பட்டதாக அறிக்கை வெளியானது.  ஆனால், அவர்கள் மீண்டும் கட்சியின் சேர்க்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று தினகரன் தரப்பு வாதங்களை வைக்கிறது. ‘கட்சியில் சேர்க்கப்படாத ஒருவருக்கு எப்படி பொறுப்பு கொடுக்க முடியும். அவர் எப்படி இரட்டை இலைக்கு உரிமை கோர முடியும்?’ என்பதுதான் தினகரன் தரப்பின் வாதம். தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி நவம்பர் 6-ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார். ஆனால், 6-ம் தேதியும் இந்த வழக்கு முடிவுக்கு வராது என்று சொல்கிறார்கள்.” 

“நடிகர் கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி பற்றிய செய்திகள் உண்டா?’’

“கமல்ஹாசன்,  தீவிர அரசியலில் குதிப்பதற்கான சூழல் நெருங்கிவர ஆரம்பித்துள்ளது. அவருடைய பிறந்த நாள் நவம்பர் 7-ம் தேதி. ஆனால், நவம்பர் 5-ம் தேதியே, அவருடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க கமலின் ரசிகர்கள் முடிவுசெய்துள்ளனர். அதில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகும்.”

“கமலின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பா?”

“அதற்கு முன்னோட்டம் கொடுக்கும் அறிவிப்பாக அது இருக்கும். தற்போது கமல் ஒரு மொபைல் ஆப் தயார் செய்துள்ளார். அதில், பல சமூக ஆர்வலர்கள், சமூகப் பணி இயக்கங்கள் இணைந்துள்ளனர். பொதுமக்கள், அந்த ஆப்-க்கு தங்களின் குறைகளை அனுப்பலாம். அதை அந்தச் சமூக ஆர்வலர்கள் ஃபாலோ செய்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பவும், கமலின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களுடன் போய் அதிகாரிகளைச் சந்திப்பதற்கான ஒருங்கிணைப்பைச் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆப் அறிமுகம் 5-ம் தேதி நடக்கும். அரசியல் பிரவேசம் பற்றி உறுதியான அறிவிப்பு 7-ம் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

“ ‘மன்மதன் அம்பு’ மாதிரி, ‘அரசியல் அம்பு’ - ஆக இது இருக்குமோ?”

“இதைத்தான் தனது தொடக்கமாக கமல் நினைக்கிறாராம். பலதரப்பட்ட மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்வதன் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதுதான் கமலின் பாதை. குறிப்பிட்ட இந்தப் பிரச்னைகளை நோக்கி, மக்களின் கவனம் குவியும், அரசாங்கத்தின் கவனம் குவியும். அந்தப் பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்  தீர்வுகாண வேண்டும். தீர்வு ஏற்பட்டால், கமலால் நடந்தது என்பார்கள். நடக்காவிட்டால், அதுவே பிரச்னையாகும். இப்படி பல கோணங்களில் யோசிக்கிறாராம் கமல். ‘நான் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காகக் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்கள் நன்மைக்காகத்தான் பேசுகிறேன்’ என்று சொல்வதற்கும் இதுபோன்ற போராட்டக்களம் அடித்தளம் அமைக்கும் என்று கமல் நினைக்கிறாராம்.”

“இனி அவரை, ட்விட்டரில் அரசியல் செய்கிறார் என்று சொல்ல முடியாதோ?”

“ஆமாம். கமல் சவுண்டு சர்வீஸ் இந்த வாரத்திலிருந்து ஸ்டார்ட் ஆகப்போகிறது. சவுண்டு இன்னும் அதிகமாக இருக்கும்” என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி
படம்: க.பாலாஜி

போதைக்குப் பின்னால் பகை!

ள்ளச்சாராயத்துக்கு இணையாக, அதிகளவில் ஆசிட் கலக்கப்பட்ட, தரம் குறைந்த மதுபானங்களை டாஸ்மாக் நிர்வாகம் விற்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். அவர் குறிப்பிட்டுச் சொல்வது தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ரம் வகை பற்றிய குற்றச்சாட்டாம். அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ரம் வகை ஒன்றின் சாம்பிளை, கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு ஏரியாவில் உள்ள ஒரு கடையில் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான விஜய் வாங்கினார். அதற்கான பில்லையும் சேர்த்து வாங்கினார். அதை, சைதாப்பேட்டையில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கொடுத்து, தரத்தைச் சோதிக்கச் சொன்னார். அதில், அரசு நிர்ணயித்துள்ள அளவைவிட, டார்டாரிக் ஆசிட் அளவு நான்கு மடங்கு அதிகமாக இருந்ததாம். கண்பார்வை, குடல் பாதிப்பு ஆகியவற்றை அது ஏற்படுத்துமாம். இந்த அறிக்கையைத்தான் ராமதாஸ் கையிலெடுத்துள்ளார்.

அந்த தி.மு.க பிரமுகருக்கும், ராமதாஸுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆகாது. அந்தப் பகையும் உள்ளே இருக்கிறது என்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள்.