
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 ஓவியம்: ராமமூர்த்தி
நடத்துநரின் புத்திசாலித்தனம்!
சமீபத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்குத் தனியார் பேருந்தில் இரவு நேரத்தில் பயணம் செய்தேன். நள்ளிரவில் ஓர் ஊரில் இயற்கை உபாதையைக் கழிப்பதற் காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. அரைத் தூக்கத்தோடு இறங்கினோம். அப்போது பேருந்தின் நடத்துநர் எங்களிடம் ஆளுக்கொரு சிறு அட்டையைத் தந்து திரும்பி வரும்போது கொடுக்கச் சொன்னார். அவசரம் காரணமாக, அந்த அட்டை எதற்கென்று தெரியாமலேயே வாங்கிச் சென்றோம்.

திரும்பும்போதுதான் விஷயம் தெரிந்தது. அந்த இடத்தில் ஒரே மாதிரியான தனியார் பேருந்துகள் பல நின்றிருந்தன. இதில் நாங்கள் வந்த தனியார் பேருந்து எது என்ற குழப்பம் வர, அப்போதுதான் நடத்துநர் தந்த அட்டையைக் கவனித்தோம். அதில் பேருந்தின் பதிவு எண் ணும், எங்கள் இருக்கை எண்ணும் எழுதப்பட்டிருந்தது. எவ்விதச் சிரமமுமின்றி எங்கள் வண்டியை அடைந்தோம். நடத்துநரின் புத்திசாலித்தனத்தை மெச்சினோம்.
இதை மற்றவர்களும் பின்பற்றலாமே!
- எஸ்.சாந்தி, திருச்சி
சலிப்பில் ஆழ்த்திய சமையல் நிகழ்ச்சி!
சமீபத்தில் ஒரு சேனலில் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பங்கேற்ற ஒரு பெண் செய்முறை விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். `கர்ரி லீவ்ஸ் அண்டு கோரியண்டர் லீவ்ஸை ஸ்மால் பீஸா நறுக்கி அதில் போட வேண்டும்’ என்றார். இதையே தமிழில் `கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்க்க வேண்டும்’ என்று சொன்னால் குற்றமாகிவிடுமா அல்லது ஆங்கிலம் தெரியாதவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு அலையட்டும் என்கிற உயர்ந்த எண்ணமா? அதற்கும் மேல் தொகுப்பாளரின் ஆங்கில அலப்பறையோ தாங்க முடியவில்லை. தமிழ் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆங்கிலம் தெரிந்திருக்கத் தேவையில்லை என்பதை உணர்ந்து, நிகழ்ச்சியைத் தயாரித்தால் இப்படிப்பட்ட ஏமாற்றம் பார்வையாளர்களுக்கு ஏற்படாது.
- எம்.ஏ.நிவேதா, திருச்சி
பலே பயிற்சி!
நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பலகட்ட முன் தேர்வுகளுக்குப் பிறகு 16 நபர்களைத் தேர்வு செய்தார்கள். அதில் என் மகளும் இருந்ததால் உடன்சென்ற எனக்கு அவர்கள் கொடுத்த பயிற்சி வியப்பைத் தந்தது.
``நீங்கள் பல கட்டங்களைக் கடந்து தேர்வாகி யிருக்கிறீர்கள். இவை எல்லாவற்றையும்விட இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களால் நீங்கள் மதிக்கப்பட வேண்டுமானால் கை கால்களைத் தேவையில்லாமல் அசைத்துக்கொண்டிருப்பதையோ, அருவருக்கத்தக்க உடை அணிவதையோ தவிருங்கள். கேமரா உங்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதை மனதில் கொள்ளுங்கள்’’ என்று பல ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சரியாகப் பேசினால் போதுமென்று நினைக்காமல், மற்றவரின் பார்வைக்கும் மதிக்கத்தக்கவகையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் கற்பித்த விதம் பாராட்டுக்குரியது.
- சாந்தகுமாரி ஜெயராஜ், திருச்சி
விழா நடத்துபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
பிறந்த நாள் விழாவுக்காகத் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மாலை நான்கு மணிக்கு விழா நடப்பதாகக் கூறியிருந்தாள். ஆனால், ஆறு மணி ஆகியும் விழா ஆரம்பிக்கவில்லை. ``தூரத்துச் சொந்தக்காரர்கள் சிலர் வர வேண்டும், அதற்காகக் காத்திருக்கிறோம்’’ என்று கூறினாள். ``எனக்கு நேரமாகிறது, நான் கிளம்புகிறேன்’’ என்றாலும், என்னை அவள் விடவில்லை. ஒருவழியாக அந்தச் சொந்தக்காரர்கள் ஏழு மணிக்கு வந்தார்கள். அதற்குப் பிறகு விழா முடிந்து வீட்டுக்குக் கிளம்ப மணி எட்டாகிவிட்டது. பஸ் ஏறி ஊருக்கு வந்து, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து வீட்டுக்கு வந்துசேர கிட்டத்தட்ட 11 மணியாகிவிட்டது. என்னைப்போல எத்தனை தோழிகளுக்குச் சிரமம் ஏற்பட்டதோ தெரியவில்லை.
ஒரு சிலரைத் திருப்திப்படுத்த பலரையும் சங்கடத்துக் குள்ளாக்குவதை விழா நடத்துபவர்கள் தவிர்க்க வேண்டும்.
- பிரேமா சாந்தாராம், சென்னை