
சொல்வனம்
ஆடி அமாவாசை
மரித்துப்போன மூதாதையர்களுக்கு
சாப்பாடு கொண்டுசென்றேன்
மொட்டை மாடிக்கு,
மூதாதையர்கள் காக்கை வடிவிலே
வருவார்களாமே...
கரன்ட் கம்பியில்
கால் பதித்து ஏகப்பட்ட காக்கைகள்,
அப்பா காக்கை எது
அம்மா காக்கை எது
தாத்தா பாட்டி காக்கை எது
தெரியவில்லை எனக்கு.
இலையுடன் சாப்பாட்டை
கட்டைச் சுவரில் வைத்தேன்,
தாவி வந்தன காக்கைகள்,
வந்ததுமே அப்பளத்தைக்
கவ்விச் சென்றது ஒரு காக்கை,
அது அப்பாதான்...
முருங்கைக்காய் கொத்திய காக்கை தாத்தா,
பாயசத்தை மட்டுமே
பதம்பார்த்த காக்கை
அம்மாவாக இருக்கும்.
அம்மாவுக்குப் பாயசம் அவ்வளவு பிடிக்கும்,
சோற்றை மட்டுமே
சாப்பிட்ட காக்கை நிச்சயம் பாட்டிதான்,
சுற்றி நின்று வேடிக்கை
பார்த்தன மற்ற காக்கைகள்,
அவை சாப்பிட வரவே இல்லை,
ஒருவேளை எங்களுக்கு
வேண்டாதவர்களாக இருக்கலாம்,
படியில் இறங்கி
வீட்டினுள் நுழையும்போது
“அம்மா தாயே சோறு போடுங்கம்மா”
சிறுமியின் குரல்,
இவள் எனக்கு யாராக இருப்பாள்?
- பட்டுக்கோட்டை பாலு

வயல்
ஆரம்பத்தில்
தண்ணீர் நிறைய இருந்தது.
பக்கத்திலேயே ஆறு ஓடுவதால்
மழைக்காலங்களில்
மாட்டை ஓட்டியே
கிணற்றிலிருந்து
நீர் இறைத்து விடுவோம்.
மோட்டார் வந்ததற்குப் பின்புதான்
நீர்மட்டம்
வெகுவாய்க் குறைந்துபோனது.
மழையும் சரிவர பெய்வதில்லை.
பல வருடங்களாக நெல்தான்
போட்டுக்கொண்டிருந்தோம்.
தண்ணீர் அதிகம் உறிஞ்சுவதால்
அடுத்து மரவள்ளி போட்டோம்.
இடையிடையே சிலதடவை
எள் போட்டோம்.
மல்லாட்டை போட்டோம்.
பின் சுத்தமாய்
நீர் பொய்த்துவிட்டதால்
கம்பு போட்டோம்.
ஒருதடவை சவுக்கு போட்டோம்.
கரடாகவே கிடந்தது சிலவருடம்.
போனமாதம்தான்
பிளாட் போட்டோம்.
- எஸ்.நடராஜன்.
தொலைந்த நகரம்
தொலைந்த நகரம் என்பது
அடர்ந்த வனத்தின் நடுவே இருக்கலாம்
ஆழ் கடலில் புதையுண்டு இருக்கலாம்
ஆகாயத்தின் மேல் மிதந்துகொண்டிருக்கலாம்
என நீங்கள் நினைத்துக்கொள்கிறீர்கள்...
உங்களது சொந்த நகரம்
நரகமாகும் போது,
அதைத் துறந்து நீங்கள் நுழையும்
புது நகரம் தொலைந்த நகரமாகிறது
ஆம்! நீங்கள் தொலைந்த நகரம்.
- ஹரிகரன்
நேசம்
உனக்கும் எனக்குமான நேசமென்பது
பெருவெளிகள் கடந்த நிசப்தம்!
செயலூக்கக் காட்சி தாகங்களின் ஆதிக்கங்கள்!
ஆன்மா இசைக்கும் கருவி!
எத்தனிக்கும் நினைவுகளின் சாட்சி மிகைகள்!
விண்ணை இடம்பெயர்த்தும் பெரும் மலைகள்!
உணர்வுகள் சூடேறும் தனிமையின் ஆழம்!
நிச்சலனம் சிறு அமைதி பழகிவிட்ட கணம்!
போர்முரசு பெரும் ஒலியின் சிறுதுணிவு!
காத்திருந்த அன்பின் பெரும் வசவு!
குழந்தை குதூகலிக்கும் இனிப்புத் துண்டங்கள்!
எல்லா திசையிலும் அதிசயம் நிகழ்த்தும் மாயவித்தை!
கரும்வானத்தின் பெரும் மழையின் சிறுதூறல்!
சேற்றுச் செந்தாமரையின் அன்றலர்ந்த வனப்பு!
- ஆனந்தி ராமகிருஷ்ணன்