Published:Updated:

சக்கைக் குழி - சிறுகதை

ஓவியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓவியம்

சக்திவேல் என்ன பேசுவது எனத் தெரியாமல், தனது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த கணேசனைப் பார்த்தான்...

லைப்பாதையில் பேருந்து வளைந்து திரும்பி மெதுவாக நகர்ந்துசென்றது. பேருந்தின் முன்விளக்கின் வெளிச்சம் விழுந்த இடத்தைச் சக்திவேல் பார்த்தான். தேயிலைத் தோட்டத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு காட்டுப்பன்றிகள் பாதையின் குறுக்கே ஓடி, சரிவிலிருந்து தோட்டத்துக்குள் நுழைந்தன. பன்றிகள் உறுமிய ஓசையும் தேயிலைச் செடியின் ஊடே ஓடிய சலசலப்பும் கேட்டன. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விடிவதற்கு இன்னமும் நேரம் இருந்தது. பனிக்காற்றுடன் தேயிலையின் மணமும் காற்றில் பரவியிருந்தது. பின்னிருக்கைப் பயணிகள் சிகரெட்டைப் பற்றவைக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து புகையிலை கருகும் வாசமும் பேருந்து முழுக்க நிறைந்தன. கருக்கிருட்டின் வெளிச்சத்தில் மேலும் சில பன்றிகள் கூட்டமாகப் பாதையின் குறுக்கே ஓடுவதைக் கணேசனும் அவனின் தம்பி சக்திவேலும் ஜன்னலின் வழியாகப் பார்த்தார்கள். பன்றிகள் ஓடுவது, இருளில் சிறிய பாறைகள் உருளுவதுபோலிருந்தது. பன்றிகளின் காலடியில் மிதிபடும் சருகுகளின் ஓசையும் ஓடும்போது பூமி அதிரும் சத்தமும் கேட்டன. ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்றார்.

``முந்திதான் கப்பைக்காட்டுக்குள்ளே பன்னிக கூட்டமா ராத்திரி மேயுறதுக்கு வரும். இப்போ விடிஞ்சபெறகும்மில்லே மேயுது. பன்னி ஒண்ணொண்ணும் யானையாட்டமில்லே இருக்கு.” 

ஓவியம்
ஓவியம்

பேருந்திலிருந்த வயதானவர் பேசியதைச் சக்திவேல் கேட்டான். சக்திவேலும் கணேசனும் சக்கைக் குழி வெட்டுவதற்காக வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் மலைக் காட்டுக்கு வருவார்கள். இஞ்சிக்காட்டிலும் கப்பைக்காட்டிலும் குடியிருக்கும் தோட்டத்துக்காரர்களுக்குச் சக்கைக் குழி தோண்டிவிட வேண்டும். சக்கைக் குழியைச் சுற்றி நான்கு மூலைகளிலும் முள் முருங்கைக் கம்பை ஊன்றி, சாக்குத்துணியைக் கட்டி மறைப்பாக்கி, சக்கைக் குழியின்மேல் கடுக்காய், ஜாதிப் பலகையைப்போட்டு அதன் நடுவே அமர்ந்து கக்கூஸ் போவார்கள். எஸ்டேட்களில் தோட்டத்துக்காரர்களின் கழிவறை, சக்கைக் குழி. பத்தடி குழியில் சேரும் மலத்தை எருவாக்கி, கப்பைக் காட்டுக்குப் போட்டுவிடுவார்கள்.

அண்ணனும் தம்பியும் நேற்று முன்தினம் `குஞ்சுத் தண்ணி’ எஸ்டேட்டில் ஜேம்ஸின் கப்பைக்காட்டில் புதிதாக இரண்டு சக்கைக் குழிகள் வெட்டினார்கள். பத்தடி ஆழத்துக்கு வெட்டிய சக்கைக் குழியைப் பார்த்த மூராக்கூட் எஸ்டேட் முதலாளி குட்டப்பன், அவர்களைத் தனது காட்டில் குழிவெட்ட அழைத்தார். மூராக்கூட் எஸ்டேட் முழுக்கக் கப்பை. சில ரப்பர் மரங்கள், நிழலுக்குக் குடையாக நின்றிருந்தன. சவுக்கும் தென்னையும் ஆங்காங்கே உண்டு. தண்ணீரும் காய்ந்த இலைகளுமாகக் கப்பைக்காட்டு பூமி விரிந்திருந்தது.

கப்பைக்காட்டில் பத்து இருபது பெண்களும் ஆண்களும் வேரோடு கப்பையைப் பிடுங்கித் தரையில் போடுவதும் ஆண்கள் காதுவைத்த மூங்கில் கூடையில் கப்பையை அள்ளிக் கொண்டுவந்து பங்களாவின் முன்வாசல் பக்கம் கொட்டுவதுமாக இருந்தார்கள். கப்பையை நிறுவை இயந்திரத்தில் நிறுத்தி, சாக்குப் பையில் போட்டுக் கட்டிக்கொண்டிருந்தவர்களின் அருகில் கணேசன் சென்று, ``குட்டப்பன் முதலாளியைப் பார்க்க வேண்டும்’’ எனச் சொன்னான்.

அவர்கள், முதலாளி அமர்ந்திருக்கும் இடத்தைக் காட்டினார்கள். பங்களாவிலிருந்து காட்டுக்குப் போகும் பாதையில் குட்டப்பன் முதலாளி ஓலைப்பாயை விரித்து அதன்மேல் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஆள்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே பீங்கான் கோப்பையில் கறியும் விஸ்கி பாட்டிலும் இருந்தன. கணேசனும் சக்திவேலும் பங்களாவிலிருந்து காட்டுப்பாதையில் நடந்தார்கள். கப்பைக்காட்டுச் செடியின் இலைகளில் தெரிந்த சிவந்த கோடுகளும் அதன்மேல் விழுந்த சூரிய வெளிச்சமும் செடியின் வனப்பைக் காட்டின. குட்டப்பனின் சட்டையிலும் வழுக்கைத் தலையிலும் சூரிய வெளிச்சம் பட்டுத் தெறித்தது.

சக்திவேலுவும் கணேசனும் குட்டப்பன் முதலாளிக்கு வணக்கம் சொன்னார்கள். எஸ்டேட் முதலாளிமார்களுக்குப் பதில் வணக்கம் சொல்லும் பழக்கமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். குட்டப்பன் போதை மயக்கத்தில் இருந்தார். ``எடா பாண்டீ... குறைச்ச ஆழம் பத்தடி சக்கைக் குழி ரெண்டு உண்டாக்கணும் கேட்டோ” என்று அவர் மலையாளத்தில் சொன்னதும் அண்ணனும் தம்பியும் `சரி’ எனத்  தலையாட்டினார்கள். பங்களாவிலிருந்த வயதான காவல்காரர் அவர்களுக்கு டம்ளரில் சூடாக, பால் கலக்காத தேயிலையோடு வெந்த கப்பைக்கிழங்கைக் கொண்டுவந்து தந்தார். அவர்கள் கப்பையை வாங்கிச் சாப்பிட்டனர். கப்பை வெந்து மஞ்சள் நிறத்தில் பூவாக மலர்ந்திருந்தது. கப்பையின் மணமும் ருசியும் பசியைத் தூண்டின. முதலாளியிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு பொழுதடையும் வேளையில் மலை இறங்கி ஊருக்கு வந்தார்கள்.

ஊருக்கு வந்ததும் மூன்று நாள்களுக்குத் தேவையான மாற்றுத் துணிகளையும் சோப்பு, தேங்காய் எண்ணெய், அரிசி, வெங்காயம், புளி, உப்பு, மசால்பொடி எனப் பையில் கட்டி, விடிந்ததும் 3 மணிப் பேருந்தில் ஏறினார்கள். `இரண்டு குழிகள் வெட்டி முடித்தால், முதலாளி இருபதாயிரம் ரூபாய் தருவார்’ எனக் கணேசனுக்கு மனதில் எண்ணம் ஓடியது. `அந்த ரூபாய் கிடைத்தால், வீட்டின் முன்னால் இருக்கும் கூரையைப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு, முன் சுவரை மூன்று நான்கு அடிகளுக்குத் தூக்கிக் கட்டித் தகரம்போட்டு வீட்டை உயர்த்தலாம்’ என்ற கனவு அவனுக்கு வந்தது. கூரைவீட்டைப் பார்த்துவிட்டு, கணேசனுக்குப் பெண் தர யோசித்தார்கள். `இந்தக் காலத்துல இப்படி வீட்டை வெச்சிருக்காங்க!’ என்று அவனது காதுக்குக் கேட்பதுபோலப் பேசினார்கள். `அவன் கல்யாணம் தள்ளிப்போனது கூரைவீட்டினால்தான்’ என்று அவன் பாட்டி சொன்னாள்.  


 சக்திவேலுவுக்கும் கணேசனுக்கும் பெரிய உலக்கை அம்மன் தெருவில் வீடிருந்தது. வனபத்ரகாளி அம்மன் கோயிலுக்கு எதிரே இருந்த தெருவின் பெயர் `பெரிய உலக்கை அம்மன் தெரு’. சின்ன உலக்கை அம்மன் தெரு என்று ஊரில் எதுவுமில்லை. பெரிய உலக்கை அம்மன் தெருவில் கடைசி வீட்டில் சக்திவேலுவும், அவன் தம்பி கணேசனும், அவர்களின் பாட்டி ராஜாத்தியும் இருந்தார்கள். அது அவர்களது பூர்வீக வீடு. அவர்களின் அம்மாவும் அப்பாவும் அகமலை காப்பிக்காட்டில் வேலைசெய்தார்கள். மாதத்தில் முதல் நாள் சம்பளம் வாங்குவதற்காக ஊருக்கு வருவார்கள். காப்பித் தோட்டத்து முதலாளியின் வீடு ஊரில் இருந்தது. கணேசனின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மண்வீட்டை இடித்துச் செங்கல் வைத்து கான்கிரிட் போட்டு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. கணேசனின் அக்கா புஷ்பாவின் கல்யாணத்துக்கு அவர்களின் அப்பா காப்பித் தோட்டத்து முதலாளியிடம் பத்து மாதச் சம்பளத்தை மொத்தமாகக் கடனாக வாங்கியிருந்தார். முதலாளி மாதம் தவறாமல் சம்பளப் பணத்தைக் கடன் தொகையில் கழித்துவந்தார். கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் கழிந்திருந்தன.

புஷ்பாவைப் பண்ணைப்புரத்தில் கட்டிக்கொடுத்திருந்தார்கள். மாப்பிள்ளைக்குச் செங்கல்சூளையில் டிராக்டர் ஓட்டும் வேலை. `முகம் தலை எல்லாம் செங்கல்பொடியாக இருக்கிறது’ எனப் புஷ்பா `வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாள். ராஜாத்திப் பாட்டி அவளைச் சமாதானம் செய்து கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைத்தாள்.  ``அவங்க வூட்டுலே ஒரு பொம்பளைப்புள்ள இருக்குடி. அவளை நம்ம வூட்டுக்குக் கட்டிக்கிட்டு வந்திருவோம்” என்று ஆசைவார்த்தை காட்டினாள். தம்பிக்காக அவள் டிராக்டர் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டாள். ராஜாத்திப் பாட்டி அண்ணனுக்கும் தம்பிக்கும் சோறாக்கிப்போட்டு அசந்துபோனாள். அவளால் அடுப்படிப் புகையில் உட்கார்ந்து வேலைசெய்ய முடியவில்லை. `சித்திரையில் வனபத்ரகாளி அம்மன் திருவிழாவில் கல்யாணப் பேச்சைப் பேச வேண்டும்’ என நினைத்தாள். சித்திரைக்கு இன்னமும் பத்து நாள்கள்கூட முழுதாக இல்லை. 

``காப்பிக்காட்டிலிருந்து உங்கப்பனும் ஆத்தாளும் வரட்டும்” என்று பாட்டி பேச்சை ஆரம்பித்ததும் கணேசனுக்கு வெட்கமும் கூடவே பண்ணைப்புரத்துப் பிள்ளையின் முகமும் ஞாபகத்துக்கு வந்துவிடும். அவனுக்குப் பண்ணைப்புரத்துப் பிள்ளையைப் பிடித்திருந்தது. புஷ்பா அக்காவுக்கு வறுத்த காப்பிக் கொட்டையைக் கொடுக்கப் போகும்போதும் கப்பைக்கிழங்கு அவித்து மசால்பொடி போட்டுத் தாளித்துக் கொண்டுபோய்க் கொடுக்கும்போதும் அவளைப் பார்த்துப் பேசியிருக்கிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான்.

``உன் பேரு என்னா?’’

``நாகம்மா”

``அய்யோ... பேரே பயங்கரமா இருக்குது!”

``இது எங்க குலசாமி பேரு. எங்க குலசாமி துடியானது. பார்த்து இருந்துக்கங்க. சொல்றதைச் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் உன் இஷ்டம்” என்று சொன்ன நாகம்மா, ``எனக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் சாமிவரும். அன்று முழுக்கச் சாப்பிடாமல் விரதம் இருப்பேன்’’ என்று சொன்னாள்.

கணேசன், ``வனபத்ரகாளிக்குப் பொய் நாக்கு வேஷம் போட்டு ஆடுறவன் நான். எனக்கும் சாமிவரும். உனக்கும் எனக்கும் பொருத்தமா இருக்கு பார்த்தியா. சாமிக்குச் சாமி சரிக்குச் சரியாப்போச்சு. என்னை நீ கல்யாணம் கட்டிக்கச் சம்மதமா?”  என்று கேட்டான்.

ஓவியம்
ஓவியம்

சித்திரைத் திருவிழா தொடங்கும்போது கணேசன், வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு நீளமாக ரப்பர் நாக்கு வைத்துச் சூலாயுதம் ஏந்தி முகத்துக்குப் பச்சைநிறச் சாயம் பூசிச் சேலையுடுத்தி ஆடிவருவான். அவனது ஆட்டம் முளைப்பாரி தினத்தன்று நடக்கும். முளைப்பாரி ஊர்வலத்தில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஆடி வருவதைத் தெருப் பெண்கள் வரிசையாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவனைப் பார்க்கும் பெண்களுக்கு, திடீரென சாமி வரும். அவனுக்குப் பக்கத்தில் நின்றிருக்கும் சக்திவேல், சாமி வந்த பெண்களுக்கு விபூதி பூசிச் சாமியை மலையேற்றிவிடுவான். கூடவே கணேசனின் வேகமான ஆட்டத்துக்குத் தவறி விழும் ரப்பர் நாக்கை எடுத்து அவனது வாயில் மாட்டிவிடுவான்.

கணேசனுக்குப் பிறந்ததிலிருந்து பேச்சு வராமலிருந்தது. பத்ரகாளி அம்மன் கோயில் பூசாரி, ``சாமிக்கு நாக்கு செய்து காளி வேஷம் போட வேண்டும்’’ என்று சொன்னார். அப்படி ஒரு வருஷம் வேஷம்கட்டி ஆடியதால்தான் அவனுக்குப் பேச்சு வந்தது. அதிலிருந்து வருஷம் தவறாமல் வேஷம்கட்டி ஆடிவருகிறான். இந்த வருஷச் சித்திரைத் திருவிழாவுக்கு நாகம்மாளும் வருவதாகப் புஷ்பா அக்கா அவனிடம் சொல்லியிருந்தாள். மூன்று நாள் திருவிழா. `அவள் வருவதற்குள் கூரையைப் பிடுங்கிப் போட்டுத் தகரம் போட்டுவிட்டால் வீடு பளிச்சென்று இருக்கும்’ என நினைத்தான் கணேசன். அவனுக்கு நாகம்மாளை நினைக்க நினைக்க மனதுக்குள் ஆசை பொங்கியது. `கையில் பணம் கிடைத்தால், வேறு ஏதாவது செலவுவருகிறது. மாதத்தில் மூன்று நாள்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம்!’ என்ற யோசனையில் பேருந்தில் அமர்ந்திருந்தான்.

பேருந்து மெதுவாக உச்சிமலைக்கு ஏறுவதும், அதைத் தொடர்ந்து இன்ஜின் உறுமலும் அனத்தலுமாகத் தடுமாறுவதும் இருட்டில் தெரிந்தது. பேருந்து முழுக்க அனலாக இருந்தது. சக்திவேல் தன் இருக்கையில் இருந்தபடித் திரும்பிப் பின்கண்ணாடியைப் பார்த்தான். பேருந்து அந்தரத்தில் நின்றிருப்பதுபோல் தெரிந்தது. பேருந்துக்குப் பின்னால் சாம்பல் நிறத்திலான வானமும் பனிப்புகையும் மிதந்துவருவதுபோல் இருந்தது. கணேசன் முன்பக்கமாகப் பார்த்தான். பேருந்து செங்குத்தான பாறையின்மேல் மோதிவிடுவதுபோல நகர்ந்து சென்று திரும்பியது. `மூராக்கூட் எஸ்டேட்டுக்குச் செல்லும் வழி’ என்ற பெயர்ப் பலகைக்குப் பக்கத்தில் பேருந்து நின்றது.

மூராக்கூட் எஸ்டேட்டுக்கு நடந்து போக வேண்டும். `எஸ்டேட்டிலிருந்து யாராவது ஜீப் இல்லையென்றால், மோட்டார் வாகனத்தில் வந்து பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏற்றிக்கொண்டு சென்றால் நடக்கிற வேலை மிச்சம்’ என்று நினைத்தான் கணேசன். ஆனால், முதலாளி முன்பணம் தரும்போது ``வண்டியெல்லாம் அனுப்ப முடியாது. நடந்து வா’’ என்று சொல்லிவிட்டார். பேருந்திலிருந்து இறங்கியதும் கணேசன் மண்மேட்டில் அமர்ந்துகொண்டான். அவனுக்குத் தலைச் சுற்றலாகயிருந்தது. கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். மலையிலிருந்து அடிவாரத்தைப் பார்க்கக் கூடாது. அடிவாரத்தைப் பார்த்தால் அவனுக்கு மேலும் தலைச்சுற்றல் அதிகமாகி வாந்தி வருவதுபோலாகிவிடும். இரண்டு பிளாஸ்டிக் கூடைகளையும் இரண்டு மம்பட்டி களையும் தரையில் கிடந்தன. அவர்களது உடையும் சாமான்களும்கொண்ட பையை, சக்திவேல் கையில் வைத்திருந்தான்.

``விடியுறதுக்கு முன்னாலே நடந்து போயிருவோம் வாடா” என்று கணேசன் தன் தம்பியைப் பார்த்துச் சொன்னான்.

``உனக்கு இன்னிக்கே குழியை வெட்டி இன்னிக்கே காசை வாங்கிட்டுப் போகணும்னு ஆசை. பண்ணைப்புரத்துக்காரி மேலே இம்புட்டுக் கிறக்கம் கூடாதுடா கணேசா” என்று சொன்னான் சக்திவேல். கணேசனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் சிரிப்பதைப் பார்த்து, அவன் அமர்ந்திருந்த இடத்தில் கிடந்த சிறு கல்லை எடுத்து அவன்மேல் வீசினான் சக்திவேல். கணேசன் ஒதுங்கிக்கொண்டான்.

சக்திவேல், ``அவளும் அவ மூஞ்சியும்! பார்த்தாளே வாந்தி வர்ற மாதிரி இருக்கு. அடியே... வெள்ளிக்கிழமையானா சாமிவரும் அவளுக்கு. வெள்ளிக்கிழமை தனியா படுத்துப் பழக்கிக்கோ” என்று சொல்லியபடி எழுந்து பிளாஸ்டிக் கூடையையும் மம்பட்டியையும் எடுத்துக்கொண்டு நடந்தான். அவனுக்குப் பின்னால் கணேசன் நடந்தான். மூராக்கூட் எஸ்டேட் பாதை இறக்கமானது. பாதையில் கருங்கற்கள் பதித்திருந்தார்கள். கற்களுக்கு ஊடே புற்கள் வளர்ந்திருந்தன. அவர்கள் பாதையில் நடந்துசென்றபோது பேருந்து நிறுத்தத்தில் மோட்டார் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். வண்டியின் பின்பக்கத்தில் எஸ்டேட் காவலாளி அமர்ந்திருந்தார். அவரது கையில் வொயர்கூடை இருந்தது. அதில் இரண்டு தூக்குவாளி இருந்தது, வாகனத்தின் வெளிச்சத்தில் தெரிந்தது. அவரை இறக்கிவிட்டு மோட்டார் வாகனம் பாதையில் மேலேறியது.

வயதானவர் பாதையில் நின்று இருந்தவர்களைப் பார்த்து, ``சக்கைக் குழி தோண்டுறதுக்கு வந்திருக்கிற ஆளுகளா நீங்க?” என்று கேட்டார்.

அவர்கள் ``ஆமாம்’’ என்று சொன்னார்கள். அவர்கள் மூவரும் ஒருவர்பின் ஒருவராக நடந்து சென்றார்கள். வயதானவர் அவர்களுக்கு முன்பாக டார்ச்லைட்டின் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தைக் காட்டியபடி நடந்தார். பனிமூட்டத்தில் வெளிச்சம் ஊடுருவி விழுந்து பாதையைக் காட்டியது. பனியின் ஊடே நடந்து செல்வது அவர்களுக்குக் குளிரெடுத்தது. உள்ளங்காலில் நுழைந்து தலைக்குள் வெளியேறுவதுபோலக் குளிர் அவர்களது உடலில் புகுந்தது.

வயதானவர் கால் முன்விரலை அழுத்திவைத்துப் பாதையில் இறங்கிச் செல்வதை இருவரும் பார்த்தார்கள். பாதையின் இருபுறமும் தேயிலைச் செடி ஆள் உயரத்துக்கு வளர்ந்து நிற்பதை டார்ச்லைட் வெளிச்சத்தில் பார்த்தார்கள். பூச்சிகளின் சத்தமும் காற்று வீசும்போது அசையும் இலைகளின் சரசரப்பும் தொடர்ந்து பாதை முழுக்கக் கேட்டன. பலாப்பழத்தின் வாசத்தை உணர்ந்த கணேசன், திரும்பிப் பார்த்துக்கொண்டு நடந்தான். `சக்கைக் குழி வெட்டி முடித்துச் சம்பளம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகும்போது பலாப்பழம் வாங்க வேண்டும்’ என்றும் `பழத்தைப் பண்ணைப் புரத்துக்குக் கொண்டுப்போய் நேராக நாகம்மாளிடம் கொடுத்துத் திருவிழாவுக்கு வரச்சொல்ல வேண்டும்’ என்றும் நினைத்தான்.

கணேசன், பத்து நாள்களுக்கு முன்பாக புஷ்பா அக்காவைப் பார்க்கச் சென்றிருந்தான். பஸ்ஸைவிட்டு ஊருக்குள் இறங்கியதும் சாரல் விழுந்தது. சாரலுக்கு ஒதுங்கி ஆலமரத்தடியில் நாகம்மா ஆடுகளுடன் நின்றிருந்தாள். அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. மரத்துக்குப் பின்னால் நின்றிருந்தவளை அணைத்துக் கொண்டதும் அவள், ``அய்யோ ஆடு போயிரும்... ஆடு போயிரும்” என்று சிணுங்கியபடி அவனிடமிருந்து விலகி ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றாள். அவளை அணைத்துக் கொண்டதற்குத் தன்னை ஒன்றும் சொல்ல வில்லை. தன்னைக் கோபித்துக் கொள்ளவில்லை யென்றால், தன் மேல் இஷ்டமாகத்தான் இருக்கிறாள் என நினைத்த கணேசன், அவள் பின்னால் நடந்தான்.

``என்னைய நீ கல்யாணம் செஞ்சுக்குவியா நாகம்மா?” என்று கணேசன் அவளிடம் கேட்டான்.

அவள் அவனிடம், ``நீ முதல்ல உங்க வீட்டுக் கூரையை மாத்து. அப்புறம் என்னைய கல்யாணம் செய்றதைப் பத்திப் பேசுவோம்” என்று சிரித்தபடிச் சொன்னாள். அவள் பின்னாலேயே நடந்து வீட்டுக்குச்சென்றான். அவள், ஆட்டைப் பட்டியில் அடைக்கும் வரை காத்திருந்தான். நாகம்மா பட்டியிலிருந்து வந்தததும் அவள் கையைப் பிடித்து இழுத்து முத்தமிட முனைந்தான். அவள், “அய்யோ ஆளுக யாராச்சும் வந்திருவாங்க… யாராச்சும் பார்த்திடப்போறாங்க” என்று அவனிடமிருந்து தன்னை உதறிக்கொண்டு வீட்டுக்குள் நடந்தாள். அவள் தன்னை விலக்கிவிட்டு நடந்த நடையும் அவளின் பின்னழகும் இப்போதும் தன் கண் முன் தெரிவதாக நினைத்தான் கணேசன். யாருக்காக இல்லையென்றாலும் நாகம்மாவுக்காக உடனே கூரையை மாற்றவேண்டும் என அவனுக்குள் வேகம் வந்தது. 
 
காவலாளி, ``பலாப்பழம் வாசமடிக்குதானு மோந்துபார்க்காதீங்க. திரும்பிப் பார்க்காமே வாங்க. காட்டுக்குள்ளே இருக்கிற பலா மரத்துலே மலையாளத்துக்காரி தூக்கு மாட்டிக்கிட்டுச் செத்துப்போயிட்டா. மத்தியான வேளையிலே மீன்குழம்பு வாசமடிக்கும். சாயங்காலத்துலே பலாப்பழம் வாசமடிக்கும். திரும்பிப் பார்க்காம வாங்கப்பா” என்றார்.

அவர் சொல்லியதைக் கேட்டதும் அவர்கள் பயந்துபோய், அவர் அருகில் வேகமாக நடந்து சென்றார்கள். கணேசனுக்குப் பயம் வந்தது. `ரப்பர் நாக்கு வைத்துச் சாமியாடுகிறவனுக்குப் பக்கத்தில் பேய் பிசாசு எல்லாம் நெருங்காது’ எனத் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டவன் காவலாளியின் அருகில் நடந்தான்.  

ஓவியம்
ஓவியம்

அவர்கள் மூவரும் மூராக்கூட் எஸ்டேட்டுக்குள் நுழைந்தபோது கிழக்குப் பக்கம் இருந்த  தேயிலைத் தோட்டத்து இலைகளின்மேல் சூரிய வெளிச்சம் படர்ந்திருந்தது. பங்களாவின் முன்வாசல் அடைத்திருந்தது. இரும்பு கேட்டைத் திறந்துகொண்டு மூவரும் உள்ளே சென்றனர். வயதானவர் தனது சட்டைப்பையிலிருந்த சாவியை எடுத்துப் பங்களாவின் கதவைத் திறந்தார். கதவைத் திறந்ததும் பத்துக்கும் மேற்பட்ட காட்டு மந்திகள் வெளியே ஓடிவந்தன. கணேசனும் சக்திவேலும் ஒதுங்கி நின்றனர். மந்திக்கூட்டம் முழுவதுமாக அறையிலிருந்து வெளியேறியதும், காவலாளி தனது மடியிலிருந்த இரண்டு வெடிகளைத் தரையில் வைத்துத் தீ வைத்தார். வெடி வெடித்துச் சிதறியது. அதன் சத்தம் நான்கு புறமும் எதிரொலித்தது. 

 கணேசன் அவரிடம், ``எதுக்கு வெடி போட்டீங்க?” என்று கேட்டான்.

காவலாளி, ``இந்தப் பக்கம் காட்டு மந்தி ஜாஸ்தி. மேகம் தெளிஞ்சதும் மரத்துலேயிருந்து தரையிறங்கி வந்திரும். எது கைக்குச் சிக்குதோ, அதைத் தூக்கிட்டுப் போயிரும். மனுஷங்கள் எப்போதாவது வர்றவங்க. மந்திக்கூட்டம் இங்கேயே பிறந்து வளர்ந்து கிடக்குற பிறவி. அதுகளுக்கு மனுஷங்க வர்றோம்னு வெடிபோட்டுச் சொல்றோம். அதேமாதிரி காட்டைவிட்டுப் போறப்போ வெடிப் போடணும். காட்டைவிட்டு மனுஷங்க போறாங்கன்னு தெரிஞ்சுக்கும்” என்றார். 

``காலையிலே வெடிக்கும் வெடிக்கு, காட்டுக்குள்ளே ஆளுக வர்றாங்கன்னு அர்த்தம். சாயங்காலம் வெடிக்கிற வெடிக்கு, காட்டைவிட்டுப் போறாங்கன்னு அர்த்தம்” என்று சக்திவேல் சொன்னதும் அவர் சிரித்துக்கொண்டார்.

``மந்திகிட்டே கையிலே இருக்கிறதைக் கேட்டா தந்திரும். ஆனா, மனுஷன் தனக்கு முன்னாடி இருக்கிறவனுக்கு ஒண்ணையும் தர மாட்டான்” என்று அவர் பங்களாவுக்குள் நடந்தபடிச் சொன்னார். அவரது பேச்சு, சுவர்களின்மேல் விழுந்து இரண்டு மூன்று நபர்கள் பங்களாவுக்குள் இருந்து பேசுவதுபோலக் கேட்டது.

``இரண்டு சக்கைக் குழி தோண்டுறதுக்கு எத்தனை நாளாகும் தம்பி?”

``மூணு இல்லைன்னா நாலு நாளாகும்” என்று சொன்ன சக்திவேல், பங்களாவுக்குள் இருந்த சமையலறையைப் பார்த்தான். டப்பாக்களிலும் பெட்டிகளிலும் சமையல் பொருள்கள் இருந்தன. பாத்திரங்களை அடுக்கிவைத்திருந்தனர். மின்சார அடுப்பு, மேடையின்மேல் இருந்தது. அவர்கள் தாங்கள் கொண்டுவந்த பொருள்களை அந்த அறையில் வைத்தார்கள். வயதானவர் தனது வொயர்கூடையை அங்கு வைத்துவிட்டு, வேட்டி சட்டையைக் கழற்றிக் காக்கி டவுசரையும் காக்கி நிறச் சட்டையையும் உடுத்திக்கொண்டார். நீளமான தடிக்கம்பை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டார்.

``சரி... சரி! வேலையை ஆரம்பிங்கப்பா. முதலாளி வர்ற நேரம். இன்னிக்கு லாரி வரும். கப்பை லோடு ஏத்த ஆளுக வருவாங்க” என்றார்.

சக்தியும் கணேசனும் தங்களது உடையை மாற்றினார்கள். குட்டப்பன் பங்களாவுக்குப் பின்புறமாக இரண்டு இடங்களில் சக்கைக் குழி தோண்டுவதற்கு அடையாளமாகக் குச்சி நட்டு வைத்திருந்தார். இருவரும் ஓரமாகவே நடந்து போனார்கள். கருநிற மண் பூமி. கப்பையின் தோலும் கப்பைச்செடியின் வேர்களும் இலைகளுமாகச் சொதசொதத்துக் கிடந்தன. பூமியில் கால்லூன்ற முடியவில்லை. ஈரமண், அவர்களது பாதங்களை உள்வாங்கி விரல்களின் வழியாகப் பிதுங்கி வெளியேறியது. வேரோடு கப்பை ஒடிந்து பூமியில் கிடந்தது. கரு நிறத்திலான தடியான கப்பையைக் கணேசன் எடுத்தான். ஜில்லென்றிருந்தது. அதன்மேல் அப்பியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு மோந்துபார்த்தான். மண் வாடையாக இருந்தது.

அவனாக, ``வெந்தாதான் வாசம் வரும்போல” என்று சொல்லிக்கொண்டான். அவன் பேசியதைக் கேட்ட சக்திவேல், ``ஒரு சாக்குமூடை நிறைய கப்பையை அள்ளிட்டுப் பண்ணைப்புரத்துக்குப் போ. போயி... அவளுக்குத் தா” என்று கோபத்தில் சொன்னான்.

அதற்கு அவன், ``கப்பையெல்லாம் வேணாம். பலாப்பழத்தைக் கொண்டுபோய்த் தரணும்” என்று வெட்கத்துடன் சொன்னான்.  

``ரெண்டு பேரும் விளையாடாம வேலையை ஆரம்பிங்கப்பா... முதலாளி வர்ற நேரமாச்சு” என்ற காவலாளி, பங்களாவின் பின்வாசலில் அமர்ந்திருந்ததை அவர்கள் பார்த்தார்கள். சக்திவேல் தனது இடுப்பிலிருந்த அளவு நாடாவை எடுத்துப் பத்தடி நீளத்துக்கும் பத்தடி அகலத்துக்கும் சம சதுரத்தை அளந்து குறித்தான். கணேசன் கப்பைச் செடியின் வேர்க்குச்சியை எடுத்து அவன் குறித்த இடத்தில் மண்ணில் கோடிட்டான்.

``சரியா அளந்து வெட்டு. முதலாளி வந்து அளந்து பாப்பாருப்பா” என்று காவலாளி அவர்களைப் பார்த்துச் சொன்னார்.

கணேசன் ``அதெல்லாம் சரியா இருக்கும். யாரு வேணும்னாலும் அளந்து பார்த்துக்கலாம்” என்று சொன்னான்.

 சக்திவேல் மம்பட்டி பிடித்தான். தனது இரு கால்களையும் அகலமாக வைத்து நின்று கால்களுக்கு ஊடே மம்பட்டி விழும்படியாக வெட்டினான். மேல் மண்ணைக் கண்மூடித் திறப்பதற்குள் வெட்டி எடுத்திருப்பதைப் பார்த்த காவலாளி, மனதுக்குள் `இரண்டு நாளிலே குழியை வெட்டிருவானுங்க’ என நினைத்தார். சக்திவேல் ஒதுங்கியதும், கணேசன் தன்னிடம் இருந்த மம்பட்டியில் மண்ணை அள்ளிக் கூடையில் நிரப்பினான். வெட்டி எடுத்த மண்ணைக் குழிக்குப் பக்கத்திலேயே கொட்டிக் குமித்தான் கணேசன். மண்ணை அள்ளி முடித்ததும் சக்திவேல் மம்பட்டியில் திரும்பவும் வெட்ட ஆரம்பித்தான்.

 காவலாளி, அவர்களுக்குப் பால் கலக்காத தேயிலையைக் கண்ணாடி டம்ளர்களில் கொண்டுவந்தபோது, மூன்று அடிக்கும் மேலாகச் சக்திவேல் மண்ணைத் தோண்டியிருந்தான். இருவரின் முகங்களிலும் முத்து முத்தாக வியர்வை அரும்பி நின்றிருந்தது. காவலாளிக்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. டீ டம்ளரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் குடித்து முடிக்கும் வரையில் அவர்கள் அருகில் நின்றிருந்தார். சக்திவேல் கண்ணாடி டம்ளரை வாங்கிக் குடித்தான். அவனது இரண்டு கையில் ஈரமண் ஒட்டியிருந்தது. சட்டை தொப்பலாக நனைந்து சொதசொதவென இருந்தது. கணேசனுக்குத் தலையிலும் முகத்திலுமாக மண் ஒட்டி, ஆள் அடையாளமே மாறியிருந்தான். வீரபாண்டி கோயிலுக்குச் சேத்தாண்டி வேஷம் போட்டவனைப்போல் இருந்தான். அவனது வெறும் உடம்பின்மேல் ஈரமண் படிந்து வியர்வை நீரில் உடம்போடு ஒட்டியிருந்தது. அவர்கள் டீ குடித்து முடித்து டம்ளரை அவரிடம் கொடுத்தார்கள்.

கண்ணாடி டம்ளரை வாங்கிக்கொண்டவர், ``பொறுத்துச் செய்யுங்க அவசரப்படாம. கால் கையிலே மம்பட்டியப் போட்டுக்கிறாதிங்கப்பா” என்று அனுசரணையாகச் சொன்னார். அவர்கள் இருவரும் அவர் பேசியதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. குழியை வேகமாக வெட்டுவதும் மண்ணை அள்ளி எடுத்து மேல்மட்டத்தில் குமிப்பதுமாக இருந்தார்கள்.

காவலாளி சமையலறைக்குள் சென்று டீ குடித்த கண்ணாடி டம்ளர்களைக் கழுவினார். அவர்கள் இருவரும் குடித்த டம்ளரில் அவர்களது விரல்தடம் ஈரமண்ணாக ஒட்டியிருந்தது; தண்ணீர் விழுந்ததும் கரைந்தது. பெரியவர் என்ன நினைத்தாரோ, அவர்கள் கொண்டுவந்திருந்த பையையும் அதிலிருந்த பொருள்களையும் பார்த்தார். பிறகு, பின்வாசலுக்கு வந்து, ``காலையில என்னடா சாப்பிடப்போறீங்க?” என்று கேட்டார்.
அதுவரை காலை உணவைப் பற்றிய எண்ணமில்லாதிருந்தவர்கள், நிமிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ``பழைய சோறு கொண்டுவந்திருக்கேன் சாப்பிடுறீங்களா?” என்று பெரியவர் கேட்டார்.
அவர்கள் ``சரி’’ என்று சொன்னார்கள்.

காவலாளி, தான் கொண்டுவந்திருந்த தூக்குவாளியை எடுத்துவந்தார். அவர்கள் இருவரும் கை, கால், முகத்தைக் கழுவிய பிறகும் முகத்திலும் உடம்பிலும் கையிலும் காலிலும் மண் அரைகுறையாக ஒட்டியிருந்தது. காவலாளியின் முன்பாக அமர்ந்தனர். இருவரின் முகத்தையும் உடம்பையும் பார்த்தவர், இரண்டு தூக்குச்சட்டியை ஆளுக்கு ஒன்றாகத் தந்தார். பழையசோற்றில் உப்புப் போட்டுக் கரைத்துக் கூடவே வெங்காயமும், பச்சைமிளகாயையும், வெந்த கத்திரிக்காயையும் சோற்றின்மேல் வைத்திருந்தார்.

கணேசன், ``நீங்க சாப்பிடலையா?” என்று அவரிடம் கேட்டான்.

காவலாளி, ``கொஞ்சம் நேரம் போகட்டும். சுடுகஞ்சி வெச்சுக் குடிச்சி, கப்பை அவிச்சுத் திம்போம்” என்று பதில் சொன்னார். அண்ணனும் தம்பியும் இரண்டு தூக்குவாளி பழைய சோற்றைக் குடித்து முடித்தார்கள்.
 கணேசன் தனது செல்போனை எடுத்து புஷ்பாவுக்கு போன் செய்தான்.

காவலாளி, ``இங்கிருந்து போன் பேச முடியாது. பஸ் நிக்குற இடத்துக்குத்தான் போகணும்” என்றார்.

கணேசன் சிறுநீர் கழிப்பதற்கு ஒதுக்குப்புறமாகச் சென்றான். `குட்டப்பன் தரும் பணத்தில் தகரம் போட்டுவிடலாமா... தகரம் போட்டதும் தனக்கும் நாகம்மாவுக்கும் திருமணம் நடக்குமா?’ என்று கணேசனுக்கு நாகம்மாவைப் பற்றி பல சிந்தனைகள், பாதையில் வடிந்தோடும் நீரைப்போல சடசடவென ஓடின. மீண்டும் புஷ்பாவுக்கு போன் செய்தான். சிக்னல் கிடைக்க வில்லை. சிக்னலுக்காகக் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தான். செல்போனைக் காதில் வைத்துக் கேட்டான். ஆகாயத்துக்குத் தூக்கிக்காட்டி சிக்னல் வருகிறதா எனப் பார்த்தான்.

 ``இங்கேதான் சிக்னல் கிடைக்காதுன்னு சொல்றாரில்ல” என்று சக்திவேல் அவனைத் திட்டினான். கணேசனுக்கு மண்வெட்டியை எடுப்பதற்கு இஷ்டமில்லை. மதியச் சாப்பாட்டு நேரத்துக்குள்ளாகப் பத்தடி குழி தோண்டி முடிக்க வேண்டும் என்கிற காலையிலிருந்த ஆர்வம் அவனுக்கு வடிந்துவிட்டது. `பஸ் நிற்கும் இடத்துக்குப் போய் புஷ்பாவிடம் பேசலாமா? அவளிடம் பேசும்போது நாகம்மா என்ன செய்துகொண்டிருப்பாள்? நாகம்மாவைத் தான் கேட்டதாகச் சொல்லச் சொன்னால் புஷ்பாவும் அவளிடம் சொல்வாள். ஒருவேளை புஷ்பா அக்கா இல்லையென்றால், போனை நாகம்மாவே எடுத்துத் தன்னுடன் பேசினாலும் பேசுவாள்’ என்று அவன் நினைத்தான்.

அந்த நேரத்தில் குட்டப்பன் முதலாளி, ஜீப்பில் நான்கு பேருடன் வந்தார். அவர்கள் தாடிவைத்திருந்தனர். அழுக்குப் பனியனும் வேட்டியும் கட்டியிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களது கையில் பழைய சாக்கும் காதுவைத்த டயர் கூடையும் வைத்திருந்தார்கள். பழைய குழியில் இருந்த எருவை அள்ளி எடுத்துக் கப்பைக்காட்டுக்குள்போட வந்திருந்தார்கள். முதலாளி புதிதாகத் தோண்டிய சக்கைக் குழியை எட்டிப்பார்த்தார்.

குட்டப்பன், ``பதுக்க பணி செய்யடா பாண்டீ... கேட்டோ” என்று மலையாளத்தில் பேசினார். சிகரெட்டைப் புகைத்தபடி முன்வாசலுக்குச் சென்று மூங்கில் நாற்காலியில் அமர்ந்துகொண்டார். பிராந்தியும் சிகரெட்டும் கலந்து குட்டப்பன்மேல் மணந்தது. மதியச் சாப்பாட்டு நேரத்தில் பேருந்து நிற்கும் இடத்துக்குப்போய்ப் பேசிவிட்டு வரலாம் என மண்வெட்டியை எடுத்து வெட்டினான். சக்தி தன்னிடம் இருந்த அளவுக்குச்சியை வைத்து குழியை அளந்துபார்த்தான். பத்தடிக்குமேல் இருந்தது.

``போதும்... போதும்... நாகம்மாளை நினைச்சுட்டே அரை அடியைச் சேர்த்துத் தோண்டிட்டே” என்று கத்தினான்.

குழியை எட்டிப்பார்த்த காவலாளியிடம், ``உங்க முதலாளி காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் குடிச்சுட்டே இருக்காரே, வீட்டிலே பொண்டாட்டி ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா. வீட்டுக்கும் போய்க் குடிச்சிட்டுத்தான் இருப்பாரா?” என்று கேட்டான்.

காவலாளி, ``யா ஆள் கொப்பைப் பிடிக்கும். அப்புறம் தாழைக் கிடக்கும்” என்று குட்டப்பனைக் கேலிசெய்து சிரித்தார்.

கணேசனும் சக்தியும் அவர் சொல்லியது புரியாமல் ஒருவரையொருவர் பார்த்தனர். சக்கைக் குழியிலிருந்து மேலேறி வருவதற்கு ஐந்தடியில் மரத்திலான ஏணிப்படி வைத்திருந்தார்கள். சக்திவேல் மேலேறி குழிக்கு மேல்மட்டத்தில் வந்து நின்றான். கணேசன் மண்வெட்டியை பிளாஸ்டிக் கூடையையும் எடுத்துக்கொடுத்துவிட்டு, ஏணியில் கால் வைத்து ஏறினான். கணேசன் மேலேறி பஸ் நிற்கும் இடத்துக்குச் சென்றதும் போன் பேச வேண்டும் என அவசரமாக ஏணிப்படியில் கால் வைத்து ஏறினான். நாகம்மாவை இப்போதே பார்க்க வேண்டும். அவளுடன் பேச வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. நாகம்மாளைத் திருமணம் செய்த பிறகு, இந்த இடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்து சுற்றிக்காட்டவேண்டும் என்றும் இந்த இடத்திலிருந்து அவளுக்கு போன்செய்ய அலைந்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனவும் நினைத்துக்கொண்டான். முதலில் அவனது செல்போன் குழியில் விழுந்தது. நாகம்மாளே குழிக்குள் விழுந்துவிட்டதுபோலப் பதறிய கணேசன் திரும்பினான்.

சக்திவேல் பார்த்துக்கொண்டிருந்தபோதே குழியிலிருந்து மேலேறிக்கொண்டிருந்த கணேசன், பிடிமானமற்று தவறிக் குழிக்குள் விழுந்தான். அவன் அலறிய சத்தத்தில் முன்வாசலில் அமர்ந்திருந்த முதலாளியும் அவருடன் பேசிக்கொண்டிருந்த எரு அள்ளுபவர்களும் வேகமாகக் குழிக்கு ஓடிவந்தார்கள். எரு அள்ளிப் போட வந்தவர்களுடன் சக்தியும் சேர்ந்து கயிறு கட்டி அவனைக் குழிக்குள்ளிருந்து தூக்கிப் பங்களாவுக்குக் கொண்டுவந்தார்கள். காவலாளி தரையில் படுத்திருந்த கணேசனின் தொடையையும் இடுப்பையையும் தொட்டார். அவன் வலியால் அலறினான். அவனது முகத்திலும் கையிலும் அடி விழுந்திருந்தது. அந்த அடிக்குக் கதறுபவன்போலத் தோன்றவில்லை. இடுப்பைப் பிடித்துக்கொண்டு அழுதான். தொடை புசுபுசுவெனச் சிறிது நேரத்தில் பலூன்போல வீங்கியது.  

 காவலாளி குட்டப்பனிடம் ``சேட்டா ஈ புள்ளித் தாழச் சாடி விழுந்து, தொடை எலும்பு முறிஞ்சிருச்சு பாருங்க. வீங்கிப்போச்சு. இடுப்பிலே என்னான்னு பார்க்கணும். பாண்டி... ஸ்தலத்துக்கு வண்டி மேடிச்சுப் போய்தான் வைத்தியம் செய்யணும்” என்று சொன்னார்.

``பிலாக்கி இருந்தால் வரச்சொல்லி வைத்தியம் செய்யலாம்’’ என எரு அள்ள வந்தவர்களில் ஒருவன் குட்டப்பனுக்கு யோசனை சொன்னான்.  பிலாக்கி, பக்கத்து எஸ்டேட்டில் வைத்தியம் செய்பவன். உடைந்த எலும்பைப் பிடித்து நேராக்கி, கட்டுப் போட்டுத் தைலம் கொடுப்பவன். அவன் இருக்கும் இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போக முடியாது என்பதால், அவனை ஆள்விட்டு அழைத்துவரச் சொன்னார். 

பிலாக்கியும் அவனுடன் இரண்டு வைத்திய உதவியாளர்களும் மூராக்கூட் எஸ்டேட்டுக்கு வந்தபோது, மதியச் சாப்பாட்டுப் பொழுதையும் கடந்துவிட்டது. அதற்குள் இரண்டு தடவை கணேசன் சிறுநீர் கழிக்கத் தவியாய்த் தவித்துவிட்டான். ஒருக்களித்துப் படுத்து இரும்பு வாளியில் மூத்திரமிருக்கச் செய்தான் சக்திவேல். அவன் படுத்திருந்த இடமும் துணியும் சிறுநீர் வாடையடித்தது.

பிலாக்கி வந்ததும் முதலில் உடைகளைக் கழற்றி அவனை நிர்வாணமாக்கினான். உடம்பில் எங்கெங்கு அடிவிழுந்திருக்கிறது எனத் தொட்டுப்பார்த்து அவன் வலிக்குக் கத்துவதைக்கொண்டு அடையாளம் பார்த்தான். ``இடுப்பிலும் தொடையிலும் அதிகமாக அடி விழுந்து, எலும்பு சேதமாகிவிட்டது’’ என்று குட்டப்பனிடம் சொன்னான்.

``வலி தெரியாம இருக்க மருந்து தர்றேன். குடிச்சுட்டு ஊருக்குப் போங்க. அங்கே கட்டுக் கட்டுறவங்ககிட்டே காட்டி வைத்தியம் செஞ்சுக்கோ. அதான் உனக்கு நல்லது. மலைக்காட்டிலே வைத்தியம் செஞ்சா இங்கேயே தங்கியிருக்கணும்; இல்லைன்னா வந்து போகணும். உன்னாலே முடியாது” என்று பிலாக்கி சொன்னதும் ``அய்யோ... கூரையை மாத்தித் தகரம்போட முடியாமப்போச்சே!” என்று கணேசன் கதறினான்.
கணேசனைத் தூக்கி ஜீப்பில் உட்காரவைத்தனர். அவனால் உட்கார முடியவில்லை. படுக்கவைத்தனர். அவனுக்கு வலியில் உயிர் போவதுபோலிருந்தது. முன்பைவிட இப்போது இடுப்பும் தொடையும் பெரிதாக வீங்கியிருப்பது தெரிந்தது.

குட்டப்பன்,  வேகமாக சிகரெட்டை உறிஞ்சி எறிந்தார். தனது சட்டைப்பையிலிருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துச் சக்தியிடம் கொடுத்து ``சுகமாயிட்டு விளிக்கும். பின்னே நான் பறையும்” என்றார்.

கணேசன் ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு மீதிப் பணம் கேட்டதற்குக் குட்டப்பன் ``ஜீப்புக்கு யாரு பணம் தருவா?’’ என்று தமிழில் திட்டினார். ஜீப் மெதுவாக நகர்ந்தது. இரண்டு வளைவுகளைக் கடந்து வந்ததும் கணேசனின் போன் ஒலித்தது. சக்திவேல் அவனின் சட்டைப்பையில் இருந்த போனை எடுத்துப் பார்த்தான். புஷ்பா பேசினாள். 

``எங்கடா இருக்கிங்க. திருவிழாவுக்கு வரும்போது கூரையை மாத்திருவீங்களாடா?” என்று அவனிடம் கேட்டாள். சக்தி எதுவும் பேசவில்லை.

``சரி... சரி!’’ என்றான்.

பிறகு புஷ்பா  ``எங்க வீட்டுலே இன்னிக்கு நாகம்மாவைப் பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க” என்றாள்.

புஷ்பா சொன்னதைக் கேட்டதும் சக்திவேல் பதறியவனாக, ``பேசி முடிச்சுட்டீங்களா?” என்று அவளிடம் கேட்டான்.

புஷ்பா, “நாகம்மாவுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலை. மாப்பிள்ளைக்கு வலதுகண்ணு மாறு கண்ணு. `ஒச்சமா இருக்கிற மாப்பிள்ளை வேணாம்’னு சொல்லிட்டாடா தைரியமா அத்தனை பேத்துக்கும் முன்னாடி” என்றாள்.

சக்திவேல் என்ன பேசுவது எனத் தெரியாமல், தனது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த கணேசனைப் பார்த்தான். அவனுக்குக் கண்கள் கலங்கின.

- எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில்