
கவிதை: சுகுணா திவாகர்
காலத்தை வெளியேற்று
மூதாதையர் பயன்படுத்திய
மணல்கடிகாரம் ஒன்று
எனக்குக் கிடைத்திருக்கிறது.
கடற்கரை மணலில் விளையாடிய
என் குழந்தை கண்டெடுத்ததுதான் அது.
அப்போது நான் கடலையோ அலைகளையோ
மேற்கிலிருந்து விழுந்த சூரியனையோ
முத்தமிட்டுக்கொள்ளும் காதலர்களையோ
வெட்டுப்பட்டுக்கிடந்த காலிஃபிளவர்களையோ
ரத்தச்சிவப்பில் வறுபடக் காத்திருந்த மீன்களையோ
பஞ்சுமிட்டாய் தின்ற முதியவரையோ
போராட்டக்காலத்தில் பெரிதும் விற்று
இப்போது எளிதாய்க்கிடக்கும்
நியான் ஒளிரும் காளைமாட்டுக் கொம்புகளையோ
கவனிக்கவில்லை.
ஆம், நான் கடலையோ அலைகளையோ
கவனிக்கவில்லை.
குழந்தையிடமிருந்த கடிகாரத்தில்
மணல்துகள்கள் கீழிறங்கிக்கொண்டிருந்தன.
காலிக்குடுவையாக்கி
விளையாடக்கொடுக்கலாமா
என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

நமது அலுவலகம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது
எட்டாவது மாடியிலிருந்து விழுந்த இளைஞனை
மூன்றாவது மாடியிலிருந்த நான்
தாங்கிப்பிடித்திருக்கலாம்தான்.
அதற்குள் உள்ளறையில் அலைபேசிக்கு
வாட்ஸ்-அப் செய்தி வந்துவிட்டது.
மேலாளரின் செய்திதான்.
நேற்றைய பணித்தாமதத்திற்கான காரணம் கேட்கிறார்.
வெளியே தலைமோதிச் சிதறும் ஓசை கேட்கிறது.
இல்லை, நேரமில்லை.
இன்று விடுப்பு எடுக்க முடியாது.
அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங்.
நமது அலுவலகம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது.
முதலில் ஒரு குழுதான் இருந்தது.
பிறகு புற்றுநோய்ச் செல்களைப்போல்
பல்கிப்பெருகிவிட்டது.
சில குழுக்களில் அட்மினாய்...
சில குழுக்களில் நிர்வகிக்கப்படுபவனாய்...
நேரம் இரவை நெருங்கிவிட்டது.
அலுவலகத்திலிருக்கிறேன்.
பசலை படர்ந்து நழுவிய வளையல்களைக்
கோப ஸ்மைலிகளாய் அனுப்புகிறாள் மனைவி.
பதிலுக்கு ஹார்ட்டின்களை அனுப்பவேண்டியதுதான்.
மகனுக்கு எரேசர் வாங்கிவர வேண்டுமாம்.
வீடு செல்லும் நேரம்
கடைகள் இருக்க வாய்ப்பில்லை.
இல்லை, எரேசர் கொண்டு
அவன் இனி எதையும் அழிக்கமுடியாது,
நானும்கூட.
மணி 12-ஐ நெருங்குகிறது.
குழுத்தலைவரின் பிறந்தநாள்.
கேக் மற்றும் பூங்கொத்து எமோஜிகளை
வாட்ஸ்-அப்பில் அனுப்பவேண்டியதுதான்.
நமது அலுவலகம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது.
நமது குடும்பம் வாட்ஸ்-அப்பில் இயங்குகிறது.
சொல்ல மறந்துவிட்டேன்
நமது அரசு
ட்விட்டரில் இயங்குகிறது.