மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 57

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

செம்மாஞ்சேரலுடன் நடந்த போர்தான் பறம்புக்கு எல்லாவகையிலும் புதிய தொடக்கத்தை உருவாக்கியது. அப்போரில்தான் குதிரைப்படையின் ஆற்றலைக் கண்டான் பாரி. ஏறக்குறைய சேரனின் குதிரைப்படையிலிருந்த மூன்றில் இருபங்குக் குதிரைகளை வெற்றிகரமாகக் கைப்பற்றினான். குதிரைகளைப்பற்றித் தெரிந்துகொள்வதும் பயில்வதும் பயிற்றுவிப்பதுமாக, புதிய பணிகள் தொடங்கின. முழுமையும் மலையுச்சிப்பகுதியான பறம்பின் நில அமைப்பிற்கு ஏற்ப குதிரைகளை எளிதில் பயிற்றுவிக்க முடியாது என்று சிலர் கூறினர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 57

தொடக்கத்தில் அந்தக் கூற்று உண்மைபோலத்தான் தோன்றியது. ஆனால், எங்குமில்லாத புல்வகையான தும்பையிலையும் முயற்புல்லும் குதிரைகளின் வாய்ச்சுவைக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. அது அவற்றின் குணமாற்றத்துக்கு அடிப்படையாய் அமைந்தது. மனித இயல்போடு அவை தம்மைப் பிணைத்துக்கொள்ள இயற்கையின் எண்ணற்ற தன்மைகள் இயைவு செய்தன. பறம்பின் வீரர்களோடு உரசி நின்ற குதிரைகள் எளிதில் விலகவில்லை. அதன்பின் அவை பறம்புக்கான தன்மைமாற்றத்தை அடையத்தொடங்கின. இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறுவிதமாக மாறிவிட்டது. பல தலைமுறைக் குதிரைகள் பறம்பில் அலைந்து கொண்டிருக்கின்றன. பறம்பின் மருத்துவர்கள் குதிரையை எவ்வித நோயிலிருந்தும் காக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டனர்.

செம்மாஞ்சேரலுடனான போர்தான் மாற்றத்திற்கான கண்ணைத் திறந்துவிட்டது என்பான் பாரி. போர் முடிந்த அன்று வெற்றிக் கொண்டாட்டத்தில் பறம்புநாடே திளைத்துக் கிடந்தது. பாரியின் தலைமையில் நடந்த முதற்போர்; அதுவும் பேரரசனாகப் புகழப்படும் சேரனை எதிர்த்து. அவனது குதிரைகளில் பெரும்பகுதியைப் பறித்துக்கொண்டு அவனை வீழ்த்தி முடித்த போர்முறை பலரையும் வியப்பிலாழ்த்தியது. இளைஞனான பாரியின் சாதனையிதுவெனப் போற்றிப் பாடப்பட்டது. கொண்டாட்டங்கள் அளவற்று நிகழ்ந்தன.

ஆனால், பாரியின் முகத்தில் அதற்கான மகிழ்வு இல்லை. அதனைக் கவனித்தான் வாரிக்கையன். தேக்கனின் மகன்கள் இறந்ததால் பாரி மிகவும் சோர்வுற்று இருக்கிறான் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால், அதுமட்டும் காரணமல்ல என்று பின்புதான் தெரிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 57

சேரவீரன் ஒருவன் எறிந்த ஈட்டியொன்றினை பாரி எப்பொழுதும் உடன் வைத்திருந்தான். கைப்பற்றப்பட்ட ஆயுதத்தை நினைவுக்காக வைத்திருக்கிறான் என்றுதான் வாரிக்கையன் எண்ணினான். ஆனாலும் பாரியை இளைஞனாக மட்டுமே நினைத்துவிட முடியாது. அவனது அறிவுக்கூர்மை அளவிடற்கரியது என்பதைப் போர்முனையிலும் கண்டு விட்டுத்தான் வந்துள்ளோம் என்று நினைத்தபடியிருந்தான் வாரிக்கையன்.
பாரியின் ஆழ்ந்த சிந்தனைக்கான காரணம் விரைவில் தெரியவந்தது. பறம்பின் கொல்லர்களை அழைத்து, தன்னிடம் இருந்த அம்பினைப்போன்ற நீண்ட ஆயுதத்தைக் காண்பித்தான். அவர்கள் வாங்கிப் பார்த்தனர். இரலைமான் கொம்பினைப்போன்று முறுகிய வடிவுடைய ஆயுதம் அது.  கொல்லர்கள் நீண்டநேரம் பார்த்தபடி நின்றனர்.

“நாம் இரும்பினை வைத்துத்தான் ஈட்டியையும் வேல்முனையையும் உருவாக்குகிறோம். ஆனால், அவற்றைத் திருகி முறுக்க முடிவதில்லை. நமது ஆயுதங்கள் ஒரே நேர்கோடாக மட்டுமே நீண்டு இருக்கின்றன. ஆனால், இவர்கள் இரும்பினைத் திருகி முறுக்கியுள்ளனர். இது எப்படிச் சாத்தியமானது. இது எந்த வகை இரும்பு? இதனை உருவாக்கும் நுட்பவேலைகளை நாம் எப்படி அறியப்போகிறோம்?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 57பாரி கேள்விகளை எழுப்பினான். பறம்பின் கொல்லர்கள் அதற்கான விடையைக் கண்டறிய இரவு பகலாய் உழைத்தனர். சிறுபாழி நகரில் அமைந்த தொழிற்கூடங்கள் வெவ்வேறு வகைகளில் வடிவமாற்றம் அடைந்தன. நெருப்பு எரியும் உலை, தாதுக்களை நெருப்பிலிட்டு எடுப்பதற்கான நீள்வடிவத்தொட்டி. பக்கச்சுவர், ஊதுந்துருத்தி என எல்லாம் வெவ்வேறு வடிவங்களாக மாற்றமடையத் தொடங்கின.

இரும்பை உருவாக்கத் தேவைப்படும் தாதுக்களிமண் கட்டிகள் ஒரே இடத்தில்தான் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், அவை மூன்று இடங்களிலிருப்பதை அறிந்து மூன்றையும் எடுத்து வந்தனர். மூன்றின் தன்மையும் நிறமும், வெவ்வேறானவையாக இருந்ததால், மூன்றையும் மூன்றுவிதமாக உலையிலிட்டு வடிக்கும் வேலையைச் செய்தனர்.

பறம்பின் பேராற்றல் நெருப்பினை ஆளும் அதன் சக்தி. நெருப்பின் அளவையும் சுடரின் உள்ளிறுக்கத்தையும் அவர்களால் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கவும் முடிந்தது. அது இரும்பின் மாற்றம் எந்த அளவில் என்னவாக மாறுகிறது என்பதைத் துல்லியமாக அறியவும், அதே அளவினைப் பேணவும் ஏதுவாக இருந்தது.

உள்ளூற்றிய உலோகம் வெப்பமாகிச் செந்நிறமடையும் பருவத்தைக் குறிக்க செவ்வெப்பம் எனவும், தவிட்டுநிறப் புள்ளிகளோடு உலோகம் ஒளிர்செந்நிறத்தை அடையத் தேவையான வெப்பத்தைக் கருஞ்செந்நிற வெப்பமெனவும், தவிட்டுநிறம் மாறி முற்றாக வெண்மையடைய வெண்ணிற வெப்பம் எனவும் பெயரிட்டனர். வெண்ணிற வெப்பத்தைத் தாண்டி மேலும் வெப்பமாக்கும்பொழுது அது உருகும் தன்மையுடையதாகிறது என்பதையும் கணித்தனர்.

இவ்வெப்பத்தை உருவாக்க ஊதுந்துருத்தியில் காற்றினை எந்தளவிற்கு எவ்வளவு காலம் செலுத்துவது என்பதனையும் துல்லியப்படுத்தினர். பெண்யானை துதிக்கையில் மூச்சுவிடுவதைப் போன்ற மிதமான வேகத்தில் தொடங்கி, சீற்றம் காணும் காட்டெருமையின் மூச்சுக்காற்றைப் போன்ற முழுவிசையோடு காற்றினைச் செலுத்துவதற்கான குறிப்புகளைக் கணித்தனர்.

பறம்பின் வடிவக்கலைஞன் பல்வேறு வடிவங்களை வரைந்தபடியே இருந்தான். கணிதக்கலைஞன் எந்நேரமும் காட்சிகளை எண்களாக மாற்ற முயன்றுகொண்டேயிருந்தான். இரும்பு திருகி வளையத் தொடங்கியது. திருகும் இரும்பின் சேர்மானம் கண்டறியப்பட்டவுடன் நிலைமை தலைகீழாக மாறியது. எல்லா ஆயுதங்களையும் வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

கொடிமரவில் கார்முகங்கொண்டது. வில்லின் இருதலைக் குதைகளிலும் கனம் கூடியது. அதற்குத் தகுந்தாற்போல இழுபடும் நாண் புதுவகையில் உருவாக்கப்பட்டது.  பாய்ந்து செல்லும் அம்பின் தொலைவு மூன்று மடங்கு அதிகரித்தது. கூர்வாளும் சிறுவாளும் ஈர்வாளும் கைவாட்களாக மாறின. கழுமுட்சூலம் ஏந்தி வாரிக்கையன் நின்றதைப் பார்த்தபொழுது காடே நடுங்கியது. ஆயுதங்களின் கூர்முனையும் ஆற்றலும் அளவிடற்கரியனவாகப் பரிணமித்தன.

யவனத்தொடர்பால், தமிழ்நிலத்தின் பல மாற்றங்கள் சேரமண்ணில்தான் முதலில் தொடங்கின. வலிமைமிகுந்த குதிரைகள் தொடங்கி வளமையான போர் ஆயுதத்துக்கான பொறிகள் வரை பலவும் சேரமண்ணில் காணக்கிடைத்தன. சேரனுடனான பெரும்போரில் பறம்பு வெற்றிபெற்றதால் அவற்றுள் பலவும் பறம்புக்கு அறிமுகமாயின. நவீன மாற்றங்கள் பலவும் பறம்புக்குள் நுழைந்து பாரம்பர்யமான அறிவுச்சேகரத்தோடு இணைந்து பெருவளர்ச்சி அடைந்தன.

இது தற்செயல்தான்; ஆனால், பறம்பின் வலிமையை அது எண்ணிலடங்காத மடங்குகளாகப் பெருக்கிவிட்டது. பாரம்பர்ய அறிவுச்சேர்மானத்தோடு நவீனக் கண்டுபிடிப்புகள் இணையும்பொழுது அது மதிப்பிட முடியாத ஆற்றலைப் பெற்றுவிடுகிறது. சிறுபாழியில்தான் எல்லாவித ஆயுதங்கள் செய்யும் தொழிற்கூடங்களும் இருக்கின்றன. ஊதுந்துருத்தி காற்றை ஊதிக்கொண்டே இருந்தது; கரடி கிண்டுகிற ஈசல் புற்றில் இடைவிடாது ஈசல்கள் பறப்பதைப்போல துருத்தி ஊதும் அடுப்பிலிருந்து இடைவிடாது நெருப்புப்பொறிகள் பறந்தவண்ணமே இருந்தன.

செய்யப்பட்ட ஆயுதங்களின் முனையைத் தட்டிக் கூர்மையாக்கும் வேலைநடப்பதால் உலோக ஒலி கேட்டுக்கொண்டேயிருந்தது. சிறுபாழி கடந்து எவ்வியூர் நோக்கி வந்த பாணன் ஒருவன், தொடர்ந்து எழும் உலோக ஒலி கேட்டு என்ன இது என வினவினான்.

``ஆயுதங்களைத் தட்டிக் கூர்மையாக்குகிறார்கள்” என்று விடை கூறினர் பறம்பு மக்கள்.

அப்பொழுது அவன் சொன்னான், “பொதினி மலையில் ஆயுதங்களை உலோகத்தால் தட்டிக் கூர்மையாக்குவதற்குப் பதில், வட்டவடிவக் கல் ஒன்றினை உருட்டியபடி அதன் மேல் உரசுகிறார்கள். அப்படி உரசும்பொழுது அந்த ஆயுதம் அளவிடற்கரிய கூர்மையை அடைகிறது.”

செய்தி பாரிக்கு எட்டியது. “இரும்பினை உரசிக் கூர்மையாக்கும் கல் இருக்கிறதா?” என்று வியப்போடு கேட்டான்.

“ஆம், இருக்கிறது. நான் நேரில் பார்த்தேன். செய்யப்பட்ட ஆயுதத்தை ஒருநாள் முழுவதும் தட்டிக் கூர்மையாக்குவதைவிட, சிறுபொழுது அக்கல்லில் உரசி அதிகூர்மையாக்குகின்றனர். அது ஒரு அரியவகைக் கல்” என்றான் பாணன்.

‘நம்பும்படியாக இல்லையே’ என்று அவர்கள் ஐயங்கொள்வதைப் பார்த்தபடி மீண்டும் முதுபாணன் சொன்னான், “பொதினி மலையின் வேளிர்குலத்தலைவன் மேழகன் என்னிடமே சொல்லியுள்ளான். இக்கல்லை முதலில் கண்டறிந்தவர்களைக் காரோடர்கள் எனப் பெயரிட்டு அழைத்தான். நான் அவ்வரியவகைக் கல்லை நேரில் பார்த்திருக்கிறேன்” என்றான்.

ன்றிரவு கூத்து முடிந்து கலைஞர்கள் புறப்படும் முன்பே பாரி புறப்பட்டுவிட்டான் என்பது முதுபாணனுக்குத் தெரியாது. பதினான்கு வேளிர் குடிகளில் ஒன்றுதான் பொதினிமலை வேளிர்குடி. அவர்களும் தங்களின் ஆதிச்செல்வத்தைப் பெரும்பாழியில்தான் வைத்துள்ளனர். அதனைக் காக்கும் பணியைப் பறம்பு மக்கள்தான் பார்த்துக்கொள்கின்றனர். ஆனாலும் தலைமுறைக்கு ஒருமுறையோ, இருமுறையோதான் ஆட்களின் முகம்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பாரி மிகவும் இளையவனாதலால் பொதினி மக்களை அவன் பார்த்ததில்லை. ஆனால், அவர்களைப் பற்றி தந்தை சொல்லக் கேட்டுள்ளான். பறம்பின் மூத்தவீரனான வாரிக்கையனும் கூழையனும் சில வீரர்களும் கொல்லர்கள் சிலருமாக மொத்தம் பத்துப்பேர் உடன்வர, பொதினி நோக்கிப் புறப்பட்டான் பாரி. பறம்பு நாட்டுக்கும் பொதினி மலைக்கும் நீண்ட தொலைவு இடைவெளி இருந்தது. பயணம் முடிந்து திரும்பச் சில மாதமாகலாம் எனச் சொல்லித்தான் சென்றனர்.

தென்திசை நோக்கிப் பயணம் தொடங்கியது. பயணம் எப்போதும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அடர்காட்டுப் பயணத்தில் இருக்கும் வியப்புகள் எண்ணிலடங்காதவை. பெருங்காட்டிற்குள் நிலவும் பேரமைதி எந்தக் கணத்திலும் விழிப்பைக் கோரக்கூடியது. அவர்கள் இரவுபகலாக நடந்தனர். உறங்கும்பொழுதும் புலன்கள் விழித்திருந்தன.

வாரிக்கையன்தான் பொதினிக்கான வழியமைப்பைச் சொன்னான். “எண்முகடு கடந்தால் கீரிச்சொளவு வரும். அதிலிருந்து நிலையருவிகள் நான்கைக் கடந்தால் சிறகுநாவல் காடிருக்கும். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் ஓரிலைத்தாமரைத் தெப்பம் உண்டு. தெப்பக்கரையில் நின்று பார்த்தால் ஓடும் ஆறு தெரியும். ஆற்றங்கரையில் கீழ்நோக்கி நடக்க பொதினியை அடைவோம்” என்றான்.

முன்னோர்கள் சொல்லிவைத்துள்ள வழி இது. நாட்கணக்கில் நடந்து எண்முகடு கடந்து கீரிச்சொளவுக்கு வந்து சேர்ந்தனர். அப்பெரும் சொளவு நிறைய கீரிகளே இருந்தன. மண்ணெங்கும் கீறிப்புழுக்கைகள் கால்வைக்க முடியாதபடி கிடந்தன. அவற்றைக் கடந்து நிலையருவி அடைந்தனர். மலையெங்கும் ஆங்காங்கே அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன. கோடைமலை என்று அழைக்கப்படும் அம்மலைத்தொடரின் நான்காம் அருவியைக் கடந்து, சிறகுநாவல் காட்டினை அடைந்தனர்.

அழகிய நாவல் பழங்கள் எங்கும் உதிர்ந்து கிடந்தன. ஆனால், ஒவ்வொரு பழத்தின் இருபக்கங்களிலும் சிறகுகளைப்போல இலைகள் ஒட்டியிருந்தன. பாரி இவ்வகை நாவலைப் பார்த்ததில்லை. நாவலின் சிறகுகளை விரித்துப்பார்த்தான். உதிரப்போகும் சறுகுகளைப் போல இருந்தன; ஆனால் உதிரவில்லை.

வாரிக்கையன் சொன்னான், “பழங்கள் மரத்தில் இருக்கும் வரை விரிந்த சிறகுகளைப்போல இவ்விரண்டு இலைகளும் பழத்தையொட்டி விரிந்திருக்கின்றன. உதிரும்பொழுது கீழே விழுந்து பழம் தெறித்துவிடாமலிருக்க இயற்கை செய்த ஏற்பாடிது. விரிந்த சிறகுகளோடுதான் பழம் மேலிருந்து உதிரும். காற்றில் மிதந்தபடிதான் அது மண்ணை வந்துசேரும்; அதனால் பழம் அடிபடாது. அதன் பிறகுதான் இலைகள் காயத் தொடங்குகின்றன. ஆனாலும் ஒருபொழுதும் இவ்விலைகள் பழத்தை விட்டு உதிராது.”
 
பாரி வியப்போடு அதனைப் பார்த்தான். வாரிக்கையன் சொன்னான், “காற்றடி காலத்தில் இப்பழம் மரத்திலிருந்து உதிரும்பொழுது நேராகக் கீழே விழாமல் நீண்ட தொலைவு காற்றோடு போகிறது. இதன் இலையமைப்பு எளிதில் தரையிறங்கவிடாது. காண்போர் இதனைப் `பறக்கும் பழம்’ என்று சொல்வர்.”

பாரி வியப்பு குறையாமல் கேட்டுக்கொண்டிருந்த பொழுது கூழையன் சொன்னான், “என் கிழவன் இந்தப் பழத்தைப்பற்றி ஒரு கதை சொன்னான். இது பெண்பழம் என்றும் இறகுகொண்டு மூடி, தன்னை எப்பொழுதும் பாதுகாத்துக்கொள்ளும் என்றும், பெரும்பாலான பழங்கள் இரவில்தான் உதிருமென்றும். முழுநிலா இரவில் காற்றில் பறக்கத் தொடங்கும் இப்பழங்கள் பொதினியின் குலமகளை எந்நேரமும் மொய்த்துக்கிடக்கின்றன.”  

‘நம்பும்படியாகவா இது இருக்கிறது?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உதித்தபடிதான் இருந்தது. சிறகு முளைக்கத் தொடங்கும் சிறுகுருவி போல உதிர்ந்து கிடக்கும் சிறகுநாவலின் அழகை நீண்டநேரம் பார்த்து மகிழ்ந்தான் பாரி.

அவர்கள் தொடர்ந்து நடந்தனர். வாரிக்கையன் சொன்னான், “பொதினியில்தான் மிக அதிக மருத்துவக்குடிகள் இருக்கின்றனர். எண்ணற்ற தாவரங்களையும் தாதுக்களையும் அறிந்து அதனை மருந்தாக மாற்றியுள்ளனர்.” அனைவரும் அதனை வழிமொழிந்தனர். வேளிர் கூட்டத்தில் மருத்துவ அறிவின் உச்சங்கண்டோர் பொதினிவாழ் வேளிர்களே என்று முன்னோர் சொல் கேட்டுள்ளதாகக் கூழையன் சொன்னான். பேசியபடி ஓரிலைத் தாமரைத் தெப்பத்தைக் கடந்து ஆற்றின் ஓரம் இறங்கத் தொடங்கினர்.

கீழே இருந்த சிறுகுன்றில் குடில்கள் இருப்பது தெரிந்தன. இரவு இங்கே படுத்துறங்கி, காலையில் எழுந்து அக்குன்று நோக்கி நடப்போம் என முடிவுசெய்தனர்.

உறங்கும் இரவுகளில் கனவுகளை நிறுத்தும் வல்லமையை மனிதன் ஒருபொழுதும் பெற்றுவிட முடியாது. பழங்கள் பறப்பது நம்பும்படியாகவா இருக்கிறது எனக் கேட்ட பாரியின் கனவில் பழங்கள் பறந்துகொண்டிருந்தன. அவை பொதினியின் குலமகளை அடையுமா என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தபொழுது காலடியோசை கேட்டபடியிருந்தது. யாரோ நம்மைச் சுற்றி நிலைகொள்கின்றனர் என்பதைப் பாரி உணர்ந்தான்; ஆனாலும் அசைவின்றிப் படுத்திருந்தான். 

பொழுது விடியும்பொழுது பொதினி வீரர்கள் ஆயுதங்களோடு சூழ்ந்திருந்தனர். எழுந்து உட்கார்ந்தான் பாரி. சற்றுமுன் எழுந்த வாரிக்கையன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 57

பாரி கேட்டான், “நள்ளிரவே வந்துவிட்டீர்களே, ஏன் அமைதிகொண்டே நின்றீர்கள்?”

“கடம்பமரத்தின் அடிவாரத்தில் வேலூன்றிப் படுத்திருப்பவர்களை நாங்கள் தாக்கமுடியாதே. காப்பதுதானே எங்களின் கடமை” என்றான் வந்துள்ள வீரன்.

கடம்பமரம் முருகனின் உறைவிடம். அம்மரத்தின் அடிவாரத்தில் படுத்துறங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் காப்பது வேளிர்களின் கடமை. பறம்பின் மக்கள் அங்கு படுத்துறங்கியதும் பொதினிவீரர்கள் அவர்களைக் காத்து நின்றதும் வேளிர் குலங்களின் காலகாலத்துப் பழக்கம்.

வந்துள்ளது யாரென விசாரித்துவிட்டு, பொதினித்தலைவன் மேழகனுக்குச் செய்தி சொல்ல வீரர்கள் ஓடினர். வேள்பாரி வந்துள்ளான் என்று செய்தி சொல்லப்பட்டது. செம்மாஞ்சேரலுடனான போர், பாரியின் பெயரை நிலமெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது. பொதினித்தலைவன் மேழகன், பாரியை எதிர்கொண்டு வரவேற்க மலையேறி வந்தான்.

பொதினித்தலைவனுக்குக் கொடுப்பதற்காகப் பறம்பின் ஆதிக்கள்ளான ஆலப்பனைக் கள்ளினை மூங்கிற்குடுவை நிறைய எடுத்து வந்திருந்தனர். எதிர்வந்த மேழகனோ பொதினியின் பூர்வக்கள்ளான ஐஞ்சுவைக்கள்ளினைக் கொடுத்து வரவேற்றான்.

நான் நினைத்ததைவிட இளைஞனாகவும் மாவீரனுக்குரிய உடல் தகுதியோடும் பாரி இருக்கிறான் என்று மேழகன் புகழ்மாலை சூடியபடியிருந்தான். வரவேற்பும் விருந்துமாக, பின்வந்த நாள்கள் கழிந்தன. செங்காற்சேவலடித்து மேழகன் தொடர்ந்து விருந்து வைத்தான். விருந்தின் சுவையில் மகிழ்ந்த பாரி, மூன்றாம் நாள்தான், தான் வந்த நோக்கத்தைத் தெரிவித்தான்.

மேழகன் சற்றே வியந்தான். இச்செய்தி அதற்குள் அங்கு எப்படிப் போனது எனச் சிந்தித்தபடியே சொன்னான், “இரும்பினைக் கூராக்கும் அக்கல்லுக்குச் சாணைக்கல் என்று பெயரிட்டுள்ளோம். அதனை எப்படி வெட்டியெடுத்து உருளையாய்ச் செய்து முடிக்கிறோம் என்பதை உங்களை அழைத்துச்சென்று காண்பிக்கிறேன்” என்றான்.

“காண்பித்தால் மட்டும் போதாது. எங்களுக்கு நீங்கள் அதனைக் கொடுத்துதவ வேண்டும்” என்றான் வாரிக்கையன்.

மேழகன் சொன்னான், “எம்குலம் கண்டறியும் எதனையும் பயன்படுத்திக் குறைதீர்ப்போம்; பயன்பாட்டுக்குக் கொடுத்தனுப்பும் வழக்கமில்லை. ஆனாலும், வேளிர்குலத்தோடு ஒரு மாற்றைச் செய்யலாம் என்பது முன்னோர் வாக்கு. எனவே, நீங்கள் கேட்கும் ஒன்றினை என்னால் தர முடியும்” என்றான்.

மேழகனின் சொல் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தனர். சாணைக்கல்லினைப் பெற்றுச்செல்ல இருந்த தடை அகன்றது. மறுநாள் சாணைக்கல் இருக்கும் இடத்துக்குச் சென்றனர். அதனை எடுத்து அரக்குக் கலந்து ஓர் உருளையாக மாற்றிக் காயவைக்கின்றனர். நன்றாகக் காய ஒரு வாரம் ஆகும் என்றார் மேழகன். காத்திருந்து பெற்றுச்செல்கிறோம் என்று பொறுத்திருந்தனர்.

நாள்தோறும் பொதினிமலை மருத்துவர்களின் செயல்களையும் தொழில்கலைஞர்களின் செயல்களையும் அவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். ஆனால், பாரி வேறொன்றைக் கவனித்தபடியிருந்தான். வந்த அன்றே மேழகன் மகள் ஆதினியைப் பார்த்துவிட்டான். ஆனால், பாரியின் கவனம் முழுவதும் சாணைக்கல்லின் மீதே இருந்ததால் வேறுபக்கம் திசைதிரும்பவில்லை. பலமுறை ஆதினியின் கண்கள் பாரியைக் கடந்துபோக முடியாமல் தவித்ததை மற்றவர்கள் பார்த்தனர்.

சாணைக்கல்லினைத் தருவதாக மேழகன் சொன்ன பின்னர்தான் பாரிக்கு வேறு சிந்தனையின் பக்கம் எண்ணங்கள் போகத் தொடங்கின. ஆனால், அதன்பின் ஆதினி பாரியின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏன் இந்த மாற்றம் என்று அவள் தோழிகளுக்கு விளங்காததைப்போல பாரிக்கும் விளங்கவில்லை. சற்றே குழப்பத்தில்தான் இருந்தான் பாரி.

அவள் தன்னைத் தவிர்க்கத் தொடங்கிய பிறகுதான் அவளைப் பார்த்தாக வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆதினியோ அவன் கண்ணிற்படாமல் கடந்துகொண்டிருந்தாள். அவள் தவிர்க்கும் கணமெல்லாம் தவிப்பு மேலெழுந்தபடியிருந்தது.

பாரியைத் தவிர மற்ற அனைவரும் பக்கத்திலிருந்த மருத்துவக் குடியிருப்புக்குப் போயிருந்தனர். வாரிக்கையனும் கூழையனும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் போய்ப் பார்த்து வருவோம் என்று சொல்லி இரு கூறாகப் பிரிந்து சென்றனர். கூழையன் போனதிசையில் எரியும் நெருப்பின்மேல் சிரட்டையை வைத்து அதில் நீரூற்றி மருந்தினைக் காய்ச்சிக்கொண்டிருந்தார் மருத்துவர். அதனைப் பார்த்த கூழையனுக்கும் மற்றவர்களுக்கும் பெரும்வியப்பாக இருந்தது. நெருப்பில் சிரட்டை எரியாமல் எப்படி இருக்கிறது, நீர் எப்படிக் கொதிக்கிறது எனக் கேட்டனர்.

அம்மருத்துவர் சொன்னார், “பிரண்டையின்மேல் சிரட்டையை நன்றாகத் தேய்த்துக் காயவைக்க வேண்டும். பின்னர் சிரட்டையைப் பக்குவமான சிறுநெருப்பிலே வைத்தால் சிரட்டை எரியாது. உள்ளே இருக்கும் நீர்தான் கொதிக்கும்” என்றார். பிரண்டை நெருப்பைக் கடத்தும் ஆற்றலோடு இருப்பதை அம்மருத்துவன் எளிய முறையிலே சொல்வதை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் கூழையன் கூட்டத்தினர்.
வாரிக்கையனோடு போனவர்கள் அவ்வூர் முழுவதும் சுற்றிவந்து ஒரு குடிலில் உட்கார்ந்தனர். தாகமாக இருந்ததால் குடிக்க நீர் கேட்டான் ஒருவன். உள்ளிருந்த பெரியம்மா ஒருத்தி, “சிறிது பொறப்பா. எலிக்குத் தீனிவைத்துவிட்டு வருகிறேன்” எனச் சொல்லி உள்ளே போனாள். இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் ஓரம் பெரும்பூனை ஒன்று நின்று கொண்டிருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 57

பூனை இருக்குமிடத்தில் எப்படி எலிக்குத் தீனி போடுவாள் எனக் குழம்பிக் கொண்டிருக்கையிலே கைநிறைய பயறுகளை எடுத்துவந்து வாசலோரம் தூவிவிட்டாள். செடிகொடிகளின் இடுக்குகளுக்குள்ளிருந்து ஏழெட்டு எலிகள் வந்து அதனை மேயத்தொடங்கின. பூனை அவற்றின்மீது பாயப்போகிறது என நினைத்து சற்றே பதற்றத்தில் வாரிக்கையனும் மற்றவர்களும் உட்கார்ந்திருந்தனர். ஆனால், பூனை எதுவும் செய்யாமல் அப்படியே இருந்தது.

வாரிக்கையன் பேரதிர்ச்சிக்கு உள்ளானான். எலியை விரட்டிப் பிடிக்காத பூனை எப்படி இருக்க முடியும்? அவனால் நம்பவே முடியவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்து விழித்துக்கொண்டிருந்தான். பெரியம்மா குவளையில் தண்ணீர்கொண்டு வரும்பொழுது வாரிக்கையன் கேட்டான். “இந்தப் பூனை ஏன் எலியைப் பிடிக்காமல் உட்கார்ந்திருக்கிறது?”

“இதென்ன கேள்வி? அந்தப் பூனைக்கு அருகில் இருப்பது என்ன செடி?”

வாரிக்கையனும் மற்றவர்களும் அந்தச் செடியை உற்றுப்பார்த்தனர். அவர்களால் அது என்ன செடியெனக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் விழிப்பதைப் பார்த்தே அவள் சொன்னாள், “அது பூனைவணங்கி.”
அவர்களுக்கு அப்பொழுதும் புரியவில்லை.

“அந்தச்செடியின் வாசனைபட்டால் சிறிதுநேரம் பூனைக்கு மயக்கம் வந்துவிடும். அதனால் எதுவும் செய்யமுடியாது. அப்படியே உட்கார்ந்துவிடும். எலிக்குத் தீனிவைக்கும் முன் பூனைக்கு அந்தச் செடியினடிவாரத்தில் சிறிது உணவு வைத்தால் போதும், தின்று முடித்தவுடன் மயங்கி உட்கார்ந்துவிடும். அப்பொழுது எலிகளுக்கு உணவிட்டால் அவை வந்து மேய்ந்துவிட்டுப் போகின்றன” என்று சொல்லிச் சென்றாள். வாரிக்கையனுக்கும் மற்றவர்களுக்கும் வாய்பேச எதுவுமில்லை.

ஊர்விட்டு வெளியேறி அவர்கள் வந்தபொழுது கூழையனும் மற்றவர்களும் வந்துகொண்டிருந்தனர். யாரும் யாருடனும் பேச்சுக்கொடுக்கக்கூட ஆயத்தமாக இல்லை. பேசாமல் வந்தனர். சரி, பாரியைப் பார்த்து அடுத்து ஆகவேண்டிய வேலையைப் பார்ப்போம் என முடிவுசெய்து பாரியைத் தேடி வந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 57

சிற்றோடைக்கரையில் இருந்த செண்பகமரத்தின் அடிவாரத்தில் பாரி அமர்ந்திருந்தான். இவர்கள் வரும்பொழுதுதான் ஆதினி பாரியின் அருகிலிருந்து விலகிப் போனாள்.

இவள் தனியே வந்து பாரியிடம் என்ன பேசிவிட்டுப் போகிறாள் என்று எண்ணியபடி வந்தனர். பாரியின் அருகில் வந்து அவனது முகத்தைப் பார்த்த கூழையனும் வாரிக்கையனும் அதிர்ந்துபோயினர். நெருப்பில் சிரட்டை எரியாமல் இருப்பதைப் பார்த்தபொழுது கூழையன் முகமும், எலியின் மீது பூனை பாயாமல் இருந்தபொழுது வாரிக்கையன் முகமும் எப்படி இருந்தனவோ அவற்றைவிட அதிக மிரட்சியோடு இருந்தது பாரியின் முகம்.

என்னதான் செய்துவிட்டுப் போனாள் ஆதினி?

- பறம்பின் குரல் ஒலிக்கும்...