Published:Updated:

வெள்ளி நிலம் - 25

வெள்ளி நிலம் - 25
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 25

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப் பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அப்போது, ஒரு மம்மி கிடைக்கிறது. அதைக் கடத்திச்செல்ல ஒரு கும்பல் வருகிறது. அதைப் பற்றித் துப்பு துலக்க காவலர் பாண்டியன் தலைமையில் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் சிறுவன்  நோர்பாவும் களம் இறங்குகிறார்கள். திபெத், காட்மாண்டு எனப் பல்வேறு இன்னல்களுக்கிடையே பயணப்படும் அவர்கள், இறுதியாக ஜாக்கோங் மடாலயம் சென்று, அங்குள்ள மூத்த புத்த பிட்சுவை சந்தித்துப் பேசுகிறார்கள். பாண்டியனிடம் உள்ள சங்கேத வார்த்தைகளில் மறைந்திருக்கும் ரகசியத்தை, மூத்த புத்தபிட்சு  விளக்குகிறார். அங்கிருந்து கிளம்பும்போது, உடன்வந்த நாய் நாக்போ எதையோ கண்டுபிடித்து, ஓடிச்சென்று ஓர் அறை முன் நின்று கதவைப் பிறாண்டுகிறது. அந்த அறையை உடைத்துத் திறக்கின்றனர். அங்கு தங்கியிருந்த புத்த பிட்சுவின் உடைகள் மட்டும் இருக்கின்றன. அவரைக் காணவில்லை. அவர், ‘இறந்தவர்களின் சமவெளிக்குச் சென்றிருப்பதாக சிஷ்யர்கள் சொல்கிறார்கள்...

வெள்ளி நிலம் - 25

“இறந்தவர்களின் சமவெளி என்றால் என்ன?” என்று பாண்டியன் கேட்டான். அவர்கள் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர். ஜம்பா அவர்களை ஒரு சுற்றுலா மையத்துக்கு அழைத்துச்சென்று,  ஒரு  ஜீப்  ஏற்பாடுசெய்தான். சுற்றுலாப் பயணிகளின் தோற்றத்தில் அவர்கள் இருந்தனர்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார், “பொதுவாக, இறந்தவர்களை மண்ணில் அடக்கம்செய்வது வழக்கம். இந்துக்கள் எரிக்கிறார்கள். ஆனால், உலகின் சில மதங்களில், இறந்தவர்களை அப்படியே கழுகுகள் உண்பதற்காக விட்டுவிடுவார்கள். பாரசீக மதத்தில் இவ்வழக்கம் உண்டு. அவர்கள் பெரிய கோபுரங்களைக் கட்டி, அங்கே இறந்தவர்களைக் கொண்டுசென்று வைத்துவிடுகிறார்கள். அதை, டக்மா என்கிறார்கள். ‘அமைதிக் கோபுரம்’ என்று அதற்குப் பொருள்.”

“ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பாண்டியன்.

“அதே வழக்கம், முன்பு திபெத்திலும் இருந்தது. திபெத்தியர், பிணந்தின்னிக் கழுகுகளைப் புனிதமானவை என நம்பினர். அவை, வானிலிருந்து இறங்கிவந்து மனிதர்களை விண்ணுலகுக்குக் கொண்டுசெல்கின்றன என்று எண்ணினர். இறந்தவர்களின் உடல்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, மலையுச்சியில் கொண்டுசென்று வைப்பார்கள். கழுகுகள் வந்து அவற்றை உண்டு செல்லும்.  அவை, ‘வானில் நல்லடக்கம்’ என்று சொல்லப்பட்டன.”

“எங்கள் ஊர்ப்பக்கம் இவ்வழக்கம் இருந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன்” என்றான் நோர்பா.

“அத்தகைய இடம்தான் இறந்தவர்களின் சமவெளி. நெடுங்காலமாகவே அங்கே கழுகுகளுக்கு மானுட உடல்களை அளித்துவந்தனர். அவ்வாறு கழுகுகளால் உண்ணப்பட்ட உடல்களின் எச்சங்களை அங்கே அடக்கம்செய்தனர். திபெத்தில் பௌத்த மதம் வருவதற்கு முன்னரே இந்த வழக்கம் இருந்தது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“பான் மதத்தின் வழக்கம் என நினைக்கிறேன்” என்றான் பாண்டியன்.

“அங்கே அடக்கம்செய்யப்பட்ட மன்னர்களுக்கு, மண்ணால் சமாதிகளை அமைத்தனர். அவை, இயற்கையான குன்றுகள்போலத் தெரியும். ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்டவை.”

“ஆம், அஸ்ஸாமில் அப்படி ஓர் இடம் உள்ளது” என்று பாண்டியன் சொன்னான். “அதற்கு ‘மொய்தாம்கள்’ என்று பெயர். பிரம்மபுத்ரா சமவெளியில் அவை உள்ளன. பன்னிரண்டாம் நூற்றாண்டில், அஸ்ஸாமை ஆண்ட அகோம் வம்சத்து அரசர்கள் அமைத்தவை. அரசர்களை அடக்கம் செய்த இடங்களின் மேல்  மிகப்பெரிய மண்குன்றுகளை செயற்கையாக உருவாக்கினார்கள். அவை அரைவட்டவடிவமான புல்மேடுகள்போல இருக்கும். ஆனால், உள்ளே செங்கல்லால் ஆன கல்லறைகள் உண்டு. அவற்றை அகழ்வாய்வு செய்திருக்கிறார்கள். கல்லறைகளுக்குள் அகோம் மன்னர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.”

“நான் அங்கே சென்று ஆராய்ந்திருக்கிறேன். மிகப்பெரிய மொய்தாம் 40 அடி வரை உயரமானவை” என்றார் டாக்டர். “அதைப் போன்ற ஒன்பது மண்குன்றுகள் இந்தச் சமவெளியில் உள்ளன. இங்கே அடக்கம்செய்யப்பட்ட மன்னர்களின் எலும்புகளுக்கு  மேல்  அவை   கட்டப்பட்டு உள்ளன. முன்பு ஏராளமான சிறு மண்மேடுகள் இருந்துள்ளன. பனி உருகிப் பெருகும் மண் அரிப்பால் அவை அழிந்துவிட்டன. இப்போது, எட்டுக் குன்றுகளே உள்ளன” என்றார் டாக்டர்.

தன் செல்பேசியில் கூகுள் உலக வரைபடத்தை எடுத்து, செல்லும் பாதையைப் பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டியன். “இந்தச் சமவெளி, மன்னர்களின் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது அல்லவா?” என்றான்.

“ஆம், முன்பு இது தடைசெய்யப்பட்ட பகுதி. இன்று ஓரளவு சுற்றுலாப்பயணிகளை சீன அரசு அனுமதிக்கிறது. இதன் பெயரை அரசர்களின் சமவெளி என மாற்றிப் பதிவுசெய்துள்ளது. ஆனால், இன்னும்கூட இதன் பெரும்பகுதி அணுக முடியாத ரகசிய நிலமாகவே உள்ளது. அங்கே என்ன இருக்கிறது என்பது உலகுக்குத் தெரியாது.”

“ஆம், கூகுள் உலகப் படத்திலேயே இப்பகுதி இல்லை. இரண்டு சாலைகளும் இரண்டு சிறிய ஊர்களும் மட்டுமே அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. மற்றபடி வெண்மை நிறம் மட்டுமே உள்ளது” என்றான் பாண்டியன்.

வெள்ளி நிலம் - 25

சீன அரசு உருவாக்கிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஆனால், அது வெண்பனி மூடிக்கிடந்தது. இரு பக்கமும் மலைகள் பனியால் மூடியிருந்தன. சாலையோரங்களில் பனி குவிந்திருந்தது. சாலைமேல் கண்ணாடிபோலப் பனிப்படிவம் இருந்தது.

“சீனர்கள் இங்கே மிகச் சிறந்த சாலைகளை உருவாக்கியிருக்கிறார்கள்” என்றான் நோர்பா.

“ஆம் ,இந்தியாவில் நாம் உருவாக்கியிருக்கும் பாதைகளுடன் ஒப்பிட்டால், இவை மிகமிகச் சிறந்தவை” என்றார் டாக்டர்.

“ஒரு போர் வந்தால், சீனாவின் படைகள் ஒரே நாளில் நம் எல்லைவரை வந்துவிட முடியும்” என்றான் பாண்டியன்.

அவர்களின் ஜீப், பனியில் செல்வதற்குரிய அமைப்புகொண்டது. எட்டுச் சக்கரங்களும் இயந்திரத்துடன் பொருத்தப்பட்டவை. அவற்றின் விளிம்பு அகலமானது. ஆழமான வெட்டுகள் கொண்டதாகையால், பனியில் சறுக்கிச் சுற்றுவதில்லை. ஆனாலும் அது மிகவும் முயன்றே செல்லவேண்டியிருந்தது.

“இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?’’ என்று பாண்டியன் ஜீப்பை ஓட்டிய ஜம்பாவிடம் கேட்டான்.

“இறந்தவர்களின் சமவெளி, யார்லங் மலைச் சமவெளியின் ஒரு பகுதிதான். இன்னும் சற்று நேரத்தில் நாம் ட்ஸேடாங் நகரைச் சென்றடைவோம். அதுதான் திபெத்தில் நாலாவது பெரிய ஊர். அங்கிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இறந்தவர்களின் சமவெளி” என்றான் ஜம்பா.

“இந்த மலைப் பகுதியில் மிக மெதுவாகத்தான் நம்மால் செல்லமுடிகிறது. அனேகமாக, இன்று நாம் அங்கே செல்ல முடியாது. ட்ஸேடாங் செல்வதற்குள் இருட்டிவிடும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பனிமலைகளைப் பார்த்துக்கொண்டே பயணம்செய்வது முதலில் சலிப்பாக இருந்தது. அத்தனை மலைகளும் ஒன்றேபோலத் தோன்றின. ஆகவே, ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகக் கண்கள் பழகின. மலைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடையாளம் காணமுடிந்தது.

மலைகளுக்கு அப்பால் சூரியன் மறையத் தொடங்கியது. பனிப்பாளங்கள் மெள்ள நிறம் மாறின. அவற்றின் வெண்மை குறைந்தது. மலையுச்சிகள் பொன்னிறமாக ஆகின. பனிப்பாளங்கள் பொன் வேய்ந்ததுபோல மின்னின.

நோர்பா கைகூப்பி வணங்கி, “புத்தம் சரணம் கச்சாமி! தர்மம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி!” என்று சொன்னான்.

அந்தப் பனிப்பாளம் அப்படியே சிவக்கத் தொடங்கியது. சுட்டுப் பழுத்த பொன்னிறத்தகடுகளாக அவை மாறின. நோர்பா புத்தரின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

பாண்டியன், “அற்புதமான காட்சி. இனிமேல் இதற்கிணையான ஒன்றை என்னால் காணமுடியாமல்கூடப் போகலாம். ஆனால், ஒரு சில நிமிடங்கள்தான் என் மனம் இக்காட்சியில் நிலைகொள்கிறது. பிறகு வேறு எண்ணங்கள் வந்துவிடுகின்றன” என்றான்.

டாக்டர் நாக்போவைப் பார்த்தபின் பாண்டியனிடம் இந்தியில் சொன்னார். “அந்த நாயைப் பாருங்கள்.”

நாக்போவும் ஜன்னல் வழியாகப் பனியில் செவ்வொளி பரவுவதை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தது.

“நாய்கள், குரங்குகள் எல்லாம் சூரியன் அணைவதை மெய்மறந்து பார்க்கின்றன” என்று டாக்டர் சொன்னார்.

“ஆம், நான் கவனித்திருக்கிறேன்” என்றான் பாண்டியன்.

“ஒன்று, நாம் இந்த நாய்போல இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், நம்மால் அது முடியாது.  நம் எண்ணங்கள் கலைந்து கொண்டே உள்ளன. ஆகவே, நோர்பாவைப் போல தியானம்செய்ய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவனுக்குப் புத்தர்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இந்தச் சூரியன் மறையும் காட்சியைப் புத்தரின் தோற்றமாக வழிபடுகிறான். இதைப் பௌத்தர்கள் ‘மகாதர்மகாயத் தோற்றம்’ என்கிறார்கள்.”

“அதற்குத்தான் மதங்கள் தேவையாகின்றன” என்றான் பாண்டியன்.

“ஆம், நீங்கள் செயலில் ஆர்வம் உடையவர். ஆகவே, உங்களால் மெய்மறந்து எதையும் பார்க்க முடியவில்லை. நான் சிந்தனையில் ஆர்வம் உடையவன். என்னாலும் அது முடியவில்லை. மதம், இரண்டுக்கும் அப்பால் இறைவன் என்ற அடையாளத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இயற்கையையும் வான்வெளியையும் இறைவனின் தோற்றமாக மாற்றிக்காட்டுகிறது. அதை நம்பினால், நாம் நம்மை மறந்து ஒன்றியிருக்க முடியும்” என்றார் டாக்டர்.

‘‘ஆம்” என்றான் பாண்டியன்.  “இதனால்தான், மனிதர்கள் வயதாகும்போது மத நம்பிக்கை கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.”

“உண்மை. இந்தத் தேவை இருக்கும் வரை மதங்களும் இருக்கும்” என்றார் டாக்டர்.

“மதங்களில்தான் பண்டைய பண்பாடு அடங்கியிருக்கிறது. ஆகவே, அதைவைத்து அரசியல் ஆட்டங்களைச் செய்கிறார்கள். ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கிறார்கள். மதம் சார்ந்த அமைப்புக்களில் ஊழலும் ஒழுக்கமின்மையும் உள்ளன. ஆனாலும் மதத்தின் சாரமாக உள்ளது இந்த அனுபவம்தான். சாதாரண மனிதனை இயற்கையுடனும் வான்வெளியுடனும் நினைப்பே இல்லாமல் ஒன்றவைக்க அதனால் முடிகிறது.”

அதன்பின் அவர்கள் பேசவில்லை. வானில் சூரியன் அணைந்த  பின்பும் பனியில் வெளிச்சம் இருந்தது. நன்றாக இருட்டிய பின்னரும் நீர்ப்பரப்பு இருட்டில் மின்னுவதுபோல மலைச்சரிவுகள் கண்களுக்குத் தெரிந்தன.

அவர்கள் ட்ஸேடாங் நகருக்குள் நுழைந்தனர். அந்நகரமே பனியால் மூடப்பட்டிருந்தது. கட்டடங்கள், சாலைகள் அனைத்துமே பனியால் ஆனவைபோல இருந்தன.

“நம்மை எவரோ கண்காணிக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.

“எங்கே?” என்று டாக்டர் கேட்டார்.

“இங்கே எவரும் இல்லை. ஆனால், இன்று நம்மைச் செயற்கைக்கோள் வழியாகவே கண்காணிக்க முடியும்...” என்று பாண்டியன் சொன்னான்.

“ஆம், இந்தப் பனிக்காலத்தில் இங்கே வருபவர்கள் மிகக்குறைவு” என்றார் டாக்டர்.

“ஆபத்துக்குள் வலியச்சென்று சிக்கிக்கொள்கிறோம்” என்றான் பாண்டியன். “ஆனால், நமக்கு வேறுவழி இல்லை. நாமாகவே விரும்பி புலியின் வாலைப் பிடிப்பதுபோல இந்தப் பிரச்னையைத் தொட்டோம். இனி விடமுடியாது.”

வெள்ளி நிலம் - 25

ட்ஸேடாங் நகருக்குப் பின்னால் கோங்போரி மலைச் சிகரம் பெரிய திரைபோல எழுந்து நின்றிருந்தது. முழுக்கவே இருட்டாக இருந்தாலும் வானத்துக்கும் மலைக்குமான இடைவெளி கோடுபோல தெரிந்தது.

“எண்ணெய்யும் நீரும்போல வானமும் மலைகளும் எப்போதும் பிரிந்தே தெரியும்” என்று நோர்பா சொன்னான்.

ஜாங்கோ “கோம்பா” எனச் சுட்டிக்காட்டினான். திபெத்திய மொழியில் மடாலயம் என அதற்குப் பொருள்.

“இதுதான் சாம்யே மடாலயமா?” என்று கேட்டார் டாக்டர்.

“ஆமாம்” என்றான் ஜாங்கோ  “இது 1200 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. திபெத்தில் கட்டப்பட்ட முதல் மடாலயம் இதுதான். இதை, சாங்ஸ்டென் காம்போ மன்னர் கட்டினார்.”

அவர்களின் ஜீப் அந்தச் சிறிய நகரத்தின் தெருக்கள் வழியாகச் சென்றது. மடாலயத்தின் முன்னால் சென்று நின்றது. மூன்று அடுக்குகளாக ஓட்டுக்கூரைகொண்ட மடாலயம் அது. திபெத்திய பாணியில் வெண்ணிற மண்சுவர்கள். அதற்குமேல் மரத்தாலான மாடிகள். வாயிலில் இரு பக்கமும் இரண்டு சிங்கங்களின் சிலைகள் கர்ஜித்தபடி நின்றிருந்தன.

அவர்கள் உள்ளே சென்றதும் ஒரு பிட்சு வெளியே வந்து வணங்கினார்.

“நாம் வருவதை உள்ளே குற்றலைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.

பிட்சு அருகே  வந்து, “வருக... இங்கே சுற்றுலாப் பயணிகள் இப்பருவத்தில் வருவதில்லை.” என்றார்.

“நாங்கள் இலங்கையிலிருந்தும் பர்மாவிலிருந்தும் வரும் பௌத்தர்கள்.  பனிக்காலத்தில் இந்த இடத்தைப் பார்க்க வந்தோம்.” என்றான் பாண்டியன்.

“ஆம், முன்னரே எங்களுக்குச் செய்தி வந்தது” என்று அவர் அவர்களை உள்ளே அழைத்துச்சென்றார்.

“இவர் மிகவும் பயம்கொண்டவர் போலிருக்கிறார்” என்றான் பாண்டியன்.

“பார்ப்போம்” என்றார் டாக்டர்.

அவர்கள் இறங்கி உள்ளே செல்ல, ஜாங்கோ அவர்களின் பெட்டிகளை எடுத்துக்கொண்டான். நாக்போ, “சிறந்த மடாலயம். இங்கே பன்றியிறைச்சி மணக்கிறது” என்றது.

“வாயைமூடு” என்றான் நோர்பா.

“ஏன் மூடவேண்டும்? நன்றாகத் திறந்து பன்றியிறைச்சியைத் தின்பேன்” என்றது நாக்போ . உடனே அது மூக்கை நீட்டி மணம் பிடித்தது. மெள்ள உறுமியது. குரைத்தபடிப் பாய்ந்தோடத் தொடங்கியது.

‘‘நாக்போ” என்று பாண்டியன் கூவினான்.

அதற்குள் நாக்போ பாய்ந்து உள்ளே சென்று, அங்கே நின்றிருந்த ஒரு புத்தபிட்சுவைப் பாய்ந்து கவ்விக்கொண்டது. அவர், அதை மிதித்து உதறினார்.

“திருடவந்தவன்... என் உரிமையாளரைக் கொன்றவன்...” என்று நாக்போ கூவியது.

“இவர் ஸ்கிஜின் போ ஊருக்கு மம்மியைத் திருட வந்திருக்கிறார். தன்னை வளர்த்த முதியவராகிய சோடாக்கைக் கொன்றவர் இவரே என்கிறது நாக்போ” என்றான் நோர்பா.

“ஆம், நாங்கள்தான் அங்கே மம்மியைத் தேடி வந்தோம்” என்று சொன்னபடி அறைக்குள்ளிருந்து ஒருவர் வந்தார்.

“இவர்தான்... இவரைத்தான் நான் பார்த்தேன். எங்கள் விடுதிக்கு வந்திருந்தார்” என்று நோர்பா சொன்னான். தன் பையிலிருந்து தான் வரைந்த அந்தக் கோட்டுச்சித்திரத்தை எடுத்துக்காட்டி, “இவரேதான்” என்றான்.

அந்த மனிதர், “ஆம், நானேதான். உங்களை நான் அன்றுமுதல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

 “இந்தக் கதையின் வில்லன் நான்தான்.”

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 25

அமைதிக்கோபுரம்

ஈரான் நாடு, முன்னர் பாரசீகம் என அழைக்கப்பட்டது. அங்கே இருந்த தொன்மையான மதம், பார்ஸி. அதை நிறுவியவர், ஜரதுஷ்டிரர். கி.பி 7-ம் நூற்றாண்டில், இஸ்லாமிய நாடாக மாறியது ஈரான். அங்கே, பார்ஸி மதம் தடைசெய்யப்பட்டது. பார்ஸி மதத்தவர் பிற நாடுகளில் குடியேறினர்.

இந்தியாவில் ஏராளமான பார்ஸிகள் உள்ளனர். அவர்கள், இந்தியாவுக்கு மிகப்பெரிய கொடைகளை அளித்தவர்கள். புகழ்பெற்ற டாட்டா தொழில் நிறுவனத்தை உருவாக்கிய ஜாம்ஷெட்ஜி நௌரோஜி டாட்டா பார்ஸிதான். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தியும் ஒரு பார்ஸியர்தான்.

பார்ஸிகள் சடலங்களைக் கழுகுகளுக்கு உணவாக அளிப்பார்கள். அதற்காக அவர்கள், ஊருக்கு அப்பால் மலைகளில் செங்கல்லால் ஆன கோபுரங்களை அமைப்பார்கள். அவை, பெரிய தண்ணீர்த்தொட்டிபோல இருக்கும். அவற்றுக்குள் சடலங்களைப் போட்டுவிடுவார்கள். அங்கே ஏராளமான கழுகுகள் வாழ்ந்துவரும். அவை, அந்தச் சடலங்களை உண்ணும்.

அந்தக் கோபுரத்தில் பேசவோ அழவோ கூடாது. அதனால், அதற்கு ‘அமைதிக்கோபுரம்’ என்று பெயர்.