மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 18

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

காலையில் எழுந்து கேஷுவலாக, ''ஸாரிப்பா... நைட் உன்னை எதாவது படுத்திட்டேனா..?'' என்றாள் லிசி.

ஏழு வருடங்களுக்கு முன்பு கோவா திரைப்பட விழாவுக்குப் போயிருந்தபோது இது நடந்தது!

 விழாவின் இரண்டாம் நாள் போனதால், மீடியா அலாட்மென்ட்டில் கிடைக்கும் அறை எனக்குக் கிடைக்கவில்லை. என் போலவே அறை கிடைக்காமல் அரங்கத்துக்கு வெளியே நின்று இருந்தாள் லிசி தாமஸ். டெல்லி சேனலில் வேலை பார்க்கும் மலையாளப் பெண். நண்பர் ஒருவர் லிசியை எனக்கு அறிமுகப்படுத்தினார். பாவனா சாயலில் லிசி அப்படியே மேட் இன் கேரளா.

இரண்டு உலகப் படங்களுக்குப் பிறகு மறுபடியும் அவளை தேநீர்க் கடையில் சந்தித்தேன். அதன் பிறகு நடந்தது எல்லாம்அப்படியே உள்ளூர் சினிமா. 'மறுநாள் தனக்கு வேறு இடத்தில் ரூம் தயாராகிவிடும். வழக்கமான தனது நண்பர்கள் வராததால், அன்று இரவு மட்டும் ஓர் அறை எடுத்து இருவரும் ஷேர் பண்ணிக்கொள்ளலாம்’ என்றாள் லிசி.

எனக்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு நிகழ்வு வாய்த்தது இல்லை. அடிவயிற்றில் ஐஸ் உருண்டது. மாலை, ஒரு விடுதியில் இரு படுக்கை அறை எடுத்தோம். கொஞ்சம் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியே போனாள் லிசி.

வட்டியும் முதலும் - 18

என்னைப் பரவசமும் பதற்றமும் பந்தாடியது. அப்போது பெண் சிநேகிதம் என்ற ஏரியாவே எனக்குத் தெரியாது... புரியாது. தயக்கமும் ஏக்கமுமாக ஓர் உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டவன்தான் நானும். இப்படி ஒரு பெண்ணோடு தனியாகத் தங்குவது என்றால்... அந்த இரவு அவளோடு பேசப்போகிற, தங்கப்போகிற ஒவ்வொரு நொடியையும் கற்பனை செய்யத் தொடங்கினேன். 8 மணிக்கு மேல் அவளுக்கு போன் பண்ணினால், 'கொஞ்சம் லேட்டாகும்... வந்துருவேன்’ என்றாள்.

நான் வெளியே போய் கொஞ் சம் பீர் குடித்தேன். ஒரு பெண்ணோடு தங்கப்போகிறோம் என்ற நினைவுறுத்த லில் அளவோடு குடித்துவிட்டு (அதுவும் ஒரு தைரியத்துக்காக) அறை எய்தினேன். கொலாஜ் கனவுகள். இலக்கியம், சினிமா, அரசியல், காதல், லட்சியம்... என அவளிடம் பேச ஒரு ஸ்பீச்சே ரெடி பண்ணிக் காத்திருந்தால், ஆளையே காணோம். போன் பண்ணினால், நாட் ரீச்சபிள். சாப்பிட்டு முடித்துத் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டால்... நள்ளிரவு 1 மணிக்கு மேல் கதவு திறக்கிற சத்தம். வெளியே ஒரு வெள்ளைக்கார கிழவன் கிழவியோடு லிசி. ஒரு கையில் நாய்க்குட்டி. இன்னொரு கையில் கிலோ கணக்கில் கிளிஞ்சல் மாலைகள். நிற்கவே முடியாத போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தாள்.

அவளை ஒப்படைத்து விட்டு அந்த வெள்ளைக்காரப் பெருசுகள் சிதறி ஓடினார்கள். அறை முழுக்கக் கடற்கரை மணல் சிதற உள்ளே நுழைந்த லிசி என்னைப் பார்த்து கோபமாக, 'ஹூ ஆர் யூ மேன்?’ என்றாள் பாரதிராஜா ஸ்டைலில். நான் அதிர்ச்சியாகி நிற்க, 'கெட்-அவுட்’ எனக் குழறிக் கொண்டே அந்த நாய்க்குட்டியை எனது படுக்கையில் விட்டாள். அடுத்த கணம் பொத்தேர் என்று தனது படுக்கையில் விழுந்து மட்டையாகிவிட்டாள். எனக்குத் திகிலடித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பால்கனியில் நின்று இரண்டு தம்மைப் போட்டுவிட்டு, ஓரமாய் சுருண்டேன்.

காலையில் எழுந்து கேஷ§வலாக, ''ஸாரிப்பா... நைட் உன்னை எதாவது படுத்திட்டேனா..?'' என்றாள் லிசி. அன்று தியேட்டரில் நடந்த கான்ஃபரென்ஸில் எல்லோரையும் திகைக்கவைக்கும்படி நிறையக் கேள்விகளைக் கேட்டாள். சாயங்காலம் பீச்சில் மஜீத் மஜீதி, அருந்ததி ராய், சாருமஜூம்தார் என மணிக்கணக்கில் பேசித் திரிந்தாள். இரவு வெள்ளைக்காரத் தம்பதியோடு குடித்துவிட்டு வந்து பாப் மார்லிக்கு டான்ஸ் ஆடினாள்.

அங்கே இருந்து விடைபெறும்போது, எனக்கு ஒரு கிளிஞ்சல் மாலையைப் பரிசளித்தாள். அதன் பிறகு லிசியை நான் பார்க்கவில்லை. ஆனால், இன்றுவரை அவள் எனக்குத் தோழி. அலைபேசியிலும் மின் அஞ்சலிலும் இன்றும் தொடர்பில் இருக்கிறோம். கல்யாணப் பத்திரிகை  அனுப்பியிருந்தாள். சென்னை வந்து என்னோடு சக்தி கருமாரியில் படம் பார்க்க வேண்டும் என்பது அவளுக்கு ரொம்ப நாள் ஆசை!

வட்டியும் முதலும் - 18

என் மனதில் புதிய கதவுகளைத் திறந்துவிட்டவள் லிசி. என் போல் கிராமங்களில் இருந்து பெரு நகரம் எய்தும் ஒரு தலைமுறைக்கு ஆண்-பெண் சிநேகிதம் என்பது ஒரு புதிர்... கனவு... ஆச்சர்யம். சிறு வயதில் இருந்து பெண் பிள்ளைகளோடு சமமாய்ப் பேசி வளராத சமூகக் கட்டமைப்பில் இருந்து வந்தவர்களுக்கு இது ஓர் அவஸ்தை. முதன்முதலில் சைக்கிளில் குரங்கு பெடல் போட்டுப் போன குளோரி யாவைப் பார்த்தபோது வந்த அதே ஆச்சர்யம் தான், சிட்டி சென்டரிலும் எக்ஸ்பிரஸ் அவென்யூவிலும் நடமாடும் பெண்களைப் பார்த்ததும் வருகிறது. உடல் சார்ந்த பார்வைகளிலேயே மனசு நிலைக்கிறது. ஒரு புன்னகையும் பார்வையும் ராத்திரிகளைத் தின்கிறது.

எல்லாமே அபத்தம் என்பது எல்லோருக் கும் ஒரு நாள் புரியும். காலமும் வயதும் பக்குவமும் மீட்டெடுக்கும்போதுதான் ஆண் - பெண் சிநேகிதத்தின் அற்புதங்கள் புரிய ஆரம்பிக்கும்.

உண்மையில் உடல் என்பது காலிப் பெருங்காய டப்பா. மனதின் தேவைகள்தான் எப்போதைக்குமானது. சிநேகம்தானே எப்போதும் மனதின் தேவை. ஆனால், பொதுவாகவே இந்தச் சமூகத்தின் அறுதிப் பெரும்பான்மை மனநிலை என்ன? பலருக்கு இரண்டாவது சந்திப்பிலேயே அத்தனை ஆதுரமாய்ப் பேசும் தோழியிடம் இருந்து பயந்து விலகி நிற்கத் தோன்றுகிறது. அலுவலகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தொடர்ந்து தேநீர் குடிக்கப் போனாலே, தவறாகப் பேசவைக்கிறது. தோழமை என்ற

வார்த்தையை சட்டென்று யாராலும் கொச்சைப்படுத்த முடிகிறது. சந்தோஷத்திலும் துயரத்திலும் குறுஞ்செய்தி அனுப்பும் சிநேகிதத்தைப் பற்றி தவறாகப் பரப்பச் செய்கிறது. ஸ்பரிசங்களைப் பிரித்து உணரவே முடியாமல் போகிறது. காதல், காமம் என்ற வார்த்தைகளைத் தாண்டி, பிரியம், விருப்பம், ஆறுதல், அக்கறைஎன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடாமலே குறுகிவிட முடிகிறது. எவ்வளவு பெரிய அன்பையும், நல்லியல்புகளையும், குடும்பங்களையும்... எங்கோ பார்களிலும் ஹோட்டல் களிலும் ஆபீஸ்களிலும் குட்டிச் சுவர்களிலும் உட்கார்ந்துகொண்டு, கலைத்துவிட முடிகிறது!

சில வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலை யில், அப்போது வடபழனியில் இருந்த எனது அறைக்கு இந்துமதி அக்கா வந்தது. எனது அறையில் இருந்த விஜி அண்ணனின் காலேஜ்மேட். வீட்டில் கோபித்துக்கொண்டு யாரையும் தெரியாமல் இவரைத் தேடி வந்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்கள் எங்கள் அறையில்தான் தங்கியிருந்தது. அதன் பிறகு அவரை அழைத்துப் போய் தி.நகரில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார் அண்ணன். ஒரு ஸ்டெபி ளைஸர் கம்பெனியில் வேலையும் வாங்கித் தந்தார். வாரத்துக்கு ஒரு தடவை இந்துமதி அக்கா எங்கள் அறைக்கு வந்து சமைத்துப் போடும். பீச் போவோம். சினிமா போவோம். இரவு வரை கதை பேசிக்கொண்டு இருப்போம்.

ஒரு நாள் இந்துமதி அக்கா வீட்டில் இருந்து பெருங் கூட்டமே திரண்டு வந்தது. விஜி அண்ணனை வளைத்து அடித்தார்கள். ''அவள வெச்சுருக்கி யாடா நீயி... கல்யாணம்முடிச்சுட்டீங் களா இல்லையா... மானத்தை சந்தி சிரிக்கவெச்சுட்டீங்களேடா...'' எனக் கத்தியபடி தெருவே பார்க்கக் களேபரம் பண்ணிவிட்டு, இந்துமதி அக்காவை அப்படியே அடித்து ஊருக்கு இழுத்துப்போனார்கள். எனக்குத் தெரிந்து விஜி அண்ணனுக் கும் இந்துமதி அக்காவுக்கும் இருந்தது அழகான தோழமை. அந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த அக்கா வீட்டைவிட்டு நிரந்தர மாகப் பிரிந்து போய், இப்போது புனேவில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறது. விஜி அண்ணன் மலேசியாவில் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இரண்டு பேருமே 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை!

வட்டியும் முதலும் - 18

ஆண்-பெண் தோழமை எவ்வளவு வைராக்கியமானது. ஒரு பெண்ணின் நட்புதான் ஆணுக்குப் பெரும் கொடை.  எல்லா தோழிகளுக்கும் கொஞ்சம் அம்மா சாயல் இருக்கிறது. அவர்களின் ஒரே ஒரு குறுஞ்செய்தி... நமது நாளையே மலர்த்திவிடுகின்றன. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவோ நம்பிக்கைகளை அளித்துவிடுகின்றன. கனவுகளைப் புதுப்பிக் கின்றன. அவர்கள் உடன் இருந்தால், துயரங்கள் சிறியதாகிவிடுகின்றன. உறவுகளாலும் பிரிவுகளாலும் மனதில் எரியும் காயங்களுக்கு இந்த விரல்கள்தான் விசிறிவிடுகின்றன. யாரோ தவறாகப் பேசுவதைக் கேட்டு, நம்மிடம் முகத்தைத் திருப்பிக்கொண்டுபோகும் ஒரு தோழி நமது எல்லா வேலைகளையும் முடக்கிவிடுகிறாள்!

சிலருக்கு இந்தத் தோழமை... காதலாகக் கனியும் நேரம் மிகவும் ரகசியமானது. கர்ப்பக்கிரகத்தில் உறைந்துகிடக்கும் இருளில், ஒரு தீபம் எழுவதைப்போல அது சுடர்விடும்போது இரண்டு மனங்களுக்கு மட்டுமே தெரியும். அது பிரியத்தின் இன்னொரு கட்டம். 'நாம் ஏன் வாழ்க்கைத்துணையாக இருக்கக் கூடாது?’ என்ற கேள்வி பரஸ்பரம் எழுவது என்பது பெரிய புரிதல். நீண்ட சிநேகிதத்துக்குப் பிறகு, ஒரு பின்னிரவில் 'நாளை உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன்’ என ஒரு குறுஞ்செய்தி. இள வெயில் புன்னகைத்த மறுநாள் காலை வீட்டுக்கு வந்து, ''நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?'' எனக் கேட்ட ஒருத்தி... இப்போதும் என் ஆத்மார்த்த தோழிதான்.

என்னைப் பொறுத்தவரை நட்பும் பிரிய மும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழ் வோம். உறவையும் பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள், எதையும் கலைத்துப் போட்டுவிடும். ஆனால், எப்போதும் நமக்கு நடுவே அன்பும் பரிவும் நிரந்தரம். எதிர்பார்ப்பும் அப்பழுக்கும் இல்லாத ஆண் - பெண் சிநேகிதத்தால்தான் இந்த உலகம் இன்னும் மழை பெய்து ஈரம் எய்தி இயற்கை பூக்கிறது!        

போன வாரம் ஊரில் இருந்து நண்பன் அலைபேசினான்!

''நண்பா... நம்ம அனு விஷயமா உன்ட்ட பேசணும்ரா...''

அனு அவன் தங்கச்சி. எனக்கும் நண்பர்களுக்கும் அவள் தங்கையே. 2 முடித்துவிட்டு எங்கள் கிராமத்தில் இருந்து இப்போது திருவாரூர் போய் கல்லூரி படிக்கிறாள்.

''சொல்றா பங்ஸு...''

''ஏண்டா... அனு டென்த்ல எத்தனை மார்க்றா..?''

''நானூத்திச் சொச்சம்தானே... அவதானே ஸ்கூல் செகண்டு?''

''ஆமா... அவளே ப்ளஸ் டூவுல எத்தனை மார்க்கு..?''

''எழுநூத்தி சொச்சம்னு சொன்னா...''

''ஆமா... எப்பிடி டென்த்துக்கும் ப்ளஸ் டூ-வுக்கும் இவ்வளவு ஆவரேஜ் குறைஞ்சது..?''

''என்ன..?''

''அவ லவ்வுல இருக்காடா. ஆவூன்னா மொபைலைத் தூக்கிட்டு மொட்டை மாடிக்கு ஓடிர்றா... அப்பவே சந்தேகப்பட்டேன். நம்ம குணாதான் கண்டுபிடிச்சான்... பையன் நம்ம செல்லூருதான். கூடப் படிக்கிறானாம்.''

''என்னடா பண்றது..?''

''அதுக்குத்தான் உனக்கு போன் பண்ணேன்... என்ன பண்ணலாம்னு சொல்லு...''

''அனுகிட்ட பக்குவமா விசாரிப்போம். புரியும்படியா எடுத்துச் சொல்லுவோம்... பொறுமையா...''

''அதை நீயே பேசு...''

நான் அனுவுக்கு போன் பண்ணி தயங்கி தயங்கி இந்த விஷயத்தை கேட்க, அவள் வெடித்துச் சிரித்தாள். ''ஹலோ... அவன் என் ஃப்ரெண்டுண்ணா... ஆமா, இவன் செல்லூர்காரன்... புடிச்சு அடிச்சுருவீங்க. ஆஸ்திரேலியால எனக்கு ஃபேஸ்புக்ல ஒரு ஃப்ரெண்ட் இருக்கான்... அவனை என்ன பண்ணுவீங்க? பிரதர்... நீங்கெல்லாம் நிறைய சீரியலாப் பார்த்து ரொம்ப கெட்டுப் போயிருக்கீங்க. அய்யோ... அய்யோ...''

போனை வைக்கிறவரை அனு சிரித்துக்கொண்டே இருந்தாள்.

போன் வைத்த பிறகு எனக்கும் சிரிப்பு வந்தது!

(போட்டு வாங்குவோம்)  

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan