
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

கனவுகள் கலைந்த பின்னும், அவை நினைவிலிருந்து மறைவதில்லை. ஏனென்றால், கனவுகள் தோன்றுவதே நினைவுக்குழிக்குள்ளிருந்துதான். அவை மறைந்துகொள்ளும் இடமும் வெளிப்படுத்திக்கொள்ளும் இடமும் ஒன்றுதான். சிறகுநாவல்கள் மொய்த்துக்கிடக்கும் பொதினியின் குலமகளைக் கனவிலே பார்க்கும்முன் காலடியோசை கேட்டு விழிப்புற்றான் பாரி. கனவு கலைந்தது. ஆனால், அதன்பின் நினைவு கலங்கியே இருந்தது. கனவின் ஆற்றல் அதுதான்.
நாவற்பழத்தின் துவர்ப்புச்சுவை படிந்துகிடக்கும் பெண் யாராக இருப்பாள் என்ற வினா எளிதில் உதிர்வதாக இல்லை. மேழகன் ஐஞ்சுவைக் கள் கொடுத்து வரவேற்ற கணத்திலிருந்து பாரியின் கண்கள் ஆதினியைத் தேடத் தொடங்கின. அவன் நினைவில் நாவற்பழங்கள் பறந்தபடியேதான் இருந்தன. ஆதினி மட்டும் கண்ணிற்படாமலே இருந்தாள்.
வந்தவர்கள் விருந்துண்டு மகிழ்ந்தனர். எவ்வியூர்போல மலைமுகட்டில் உள்ள ஊரல்ல பொதினி; மலையடிவாரத்துச் சிறுகுன்றின் மேல் நிலைகொண்டுள்ள ஊர். புல்வேய் குரம்பைக் குடில்கள் இதமான சூழலைக்கொண்டிருந்தன. பாரியின் கண்கள் முதன்முறையாக ஆதினியைக் கண்டபொழுது அவள் சற்றே மறைந்திருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தான் பார்த்த கணம் சட்டென மறையும் ஒருத்தி அவளின்றி வேறு யாராக இருக்க முடியும்? அவள் மறையத் தொடங்கும்பொழுதே மனம் கண்டறியத் தொடங்கிவிட்டது. அதன்பின் மனதைக் கட்டுப்படுத்தி அழைத்துச் செல்வது எளிதல்ல. ‘இழுத்துச்செல்லுதல் இயல்பாய் வாய்க்குமோ பெண்ணுக்கு’ என்று வாரிக்கையனிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது. ‘சேரனுடனான போரில் முன்களத்தில் நிறுத்தி எந்த பதிலும் சொல்லாமல் தவிக்கவிட்டவன்தானே நீ. இப்பொழுதும் விடையின்றித் தவித்தலை’ என அவன் எண்ணுவானோ என்று தோன்றியது.
இருவரும் காண்பதற்கு முன்பே ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துவைத்திருந்தனர். செம்மாஞ்சேரலுடனான போரில் பாரி ஈட்டிய வெற்றி மலைநாடெங்கும் பரவியிருந்தது. ஆதினியின் கனவுக்குள் அவ்வெற்றிநாயகனே நிலைகொண்டிருந்தான். பாரியின் கனவுகளுக்குள் பறக்கும் நாவற்பழம் நிலைகொண்டிருந்தது. அவன் அந்தக் கதையை நம்பவில்லை. ஆனால், கதைகளால் சூழப்பட்ட ஒருத்தி, பார்க்கும் முன்பே பழக்கமாகிவிடுவாள். நன்றாகப் பழகிய ஒருத்தியை இன்னும் பார்க்கவேயில்லை என்றால் யாராவது நம்புவார்களா? காதல் இப்படித்தான் செய்யும். நீரற்ற குளத்தில் குளித்து நனைந்த கூந்தலோடு வருகிறவளுக்கு ஆடைகொடுக்கச் சொல்லிக் காதலனை அனுப்பிவைக்கும்.

உறக்கத்தில் பூக்கும் கனவுபோல மயக்கத்தில் பூக்கும் கனவுதான் காதல். ஆனாலும் கனவைவிட வலிமைமிக்கது. கனவு உள்ளுக்குள் மட்டுமே செயலாற்றுகிறது. தனக்குள் மட்டுமே பூக்கும் பூ. ஆனால், காதல் அப்படியல்ல; உலகத்தையே பூக்கச்செய்யும் பூ. பூத்துக்குலுங்கும் பொதினியின் இளங்காற்றினூடே திக்குத்தெரியாமல் அழைந்துகொண்டிருந்தான் பாரி.
தவித்தலைந்த அவன் கண்களுக்கு இரண்டாம் நாள் காலையில் அவள் தென்பட்டாள். மயில்கொன்றை மரத்துக்கு மலர்சூடி வணங்கிக்கொண்டிருந்த ஆதினியைத் தற்செயலாய்ப் பார்த்தான் பாரி. உடன் மேழகனும் வாரிக்கையனும் இருந்தனர்.
பார்த்த கணத்தில் பாரி நகர்தலற்று நின்றான். மேழகனும் வாரிக்கையனும் நின்றனர். ஆதினி மயில்கொன்றை மரத்தைப் பார்த்துநின்று வணங்கிக்கொண்டிருந்தாள். தான் நிற்பதற்கான காரணத்தைச் சொல்ல முடியாமல் நின்றான் பாரி. மேழகனோ அவள் மயில்கொன்றைக்கு மாலைசூட்டி வணங்குவதற்கான காரணத்தைச் சொல்ல முடியாமல் நின்றான்.
பொதினிமலைப் பெண்கள் தனக்கானவனைக் கண்டுவிட்டால் மயில்கொன்றை மரத்துக்கு மாலைசூட்டி மகிழ்வர். ஆதினி அதைத்தான் செய்துகொண்டிருக்கிறாள். அது மேழகனுக்குப் புரிந்தது. ஆனால், அதைப் பாரியிடம் சொல்லத் தயங்கி நின்றான்.
பாரியின் தயக்கம் வேறுவிதமாக இருந்தது. ‘சூட்டிய மாலையை எடுத்து அவளுக்குச் சூட்டிவிடுவோமா?’ என்று எண்ணம் ஓடத்தொடங்கியது. தான் பறம்பின் தலைவன். வந்த பணிமுடியாமல் பிற பணியில் கவனம் சிதறுவது அழகன்று எனத் தோன்றியது. எனவே, அப்பணி முடியும் வரை ஆதினியைப் பார்ப்பதில்லை என்று முடிவுசெய்து நடக்கத் தொடங்கினான்.

அவளின் முகம்பார்க்காமல் பொழுதைக் கடத்த முயன்றான் பாரி. அது அவ்வளவு எளிதாக இல்லை. பொதினியின் இளங்காற்றும் புல்மேடும் பெருமலையும் மணக்கும் மலைவாசமும் அவனைப் பாடாய்ப்படுத்தின. ஆனாலும் மிகுந்த கட்டுப்பாட்டோடு எண்ணங்களைச் சிதறவிடாமல் இருந்தான். ஆனால், ஆதினியோ தனது நிழல் அவனது நிழலிற்படும்படி பொழுதுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்தாள். அவள் கைவீசி நடந்தபொழுது வலக்கையின் நீள்நிழல் தனது மார்பை அணைத்துச் சென்றபொழுது துடித்துப்போனான் பாரி. நிழலுக்குள் புகுந்து உடலுக்குள் வெளிவந்துகொண்டிருந்தாள் ஆதினி. என்னதான் செய்ய முடியும் பாரியால்?
மூன்றாம் நாள் மாலைநேரத்தில் பொருத்தமான சூழலில் சாணைக்கல் பற்றிய பேச்சு வந்தது. வாரிக்கையனும் கூழையனும் மிகுந்த மகிழ்வோடு அதில் பங்கெடுத்தனர். பாரி அக்கல்லினைப் பறம்புக்குத் தந்துதவ வேண்டும் என்று கேட்டான். மேழகனும் அதற்குச் சம்மதித்தான். இப்பேச்சு நடந்துகொண்டிருக்கையில் சற்று தொலைவில் நெல்லிமரமொன்றின் அடியில் தோழிகளோடு வீற்றிருந்தாள் ஆதினி. பாரி கேட்டதும் மேழகன் ஒப்புக்கொண்டதும்ஆதினியின் காதிலே விழுந்தன.
ஒருகணம் திகைத்தாள் ஆதினி. ‘பாரியா இதனைக் கேட்டது?’ என மீண்டுமொருமுறை மனதுக்குள் உறுதிப்படுத்தினாள். அவள் கண்கள் கலங்கின. சட்டென அவ்விடம் விட்டு அகன்றாள். உடனிருந்த தோழிகளுக்குக் காரணம் புரியவில்லை.
மேழகன் சாணைக்கல்லினைத் தர ஒப்புக்கொண்டதற்குப் பிறகுதான் பாரியின் மனம் இயல்புநிலைக்குத் திரும்பியது. அதன்பின்தான் அவன் கண்கள் ஆதினியைத் தேடத் தொடங்கின. அவள் நெல்லிமரம் விட்டு அகன்றிருந்தாள். தேடிப் பார்த்தான், அவளைக் காணவில்லை. மறுநாள் காலையில் எழுந்ததும் பாரியின் கண்கள் அவளைத்தான் தேடின. மேழகன் வந்தான். சாணைக்கல் இருக்குமிடம் செல்ல எல்லோரும் ஒன்றுகூடினர். ஆனால், ஆதினி கண்ணில் தட்டுப்படவேயில்லை. மூன்று நாள்களாகத் தனது நிழலோடு உரசி நகர்ந்த அவள், இப்பொழுது கண்பார்க்கும் வெளியிலேயே இல்லையே ஏன் எனப் புரியாமல் திகைத்தான்.
ஆதினியின் தோழிகளுக்கும் இது புரியவில்லை. பார்த்த கணம் முதல் பாரியை விட்டு அகலாத ஆதினியின் கண்கள் இப்பொழுது அவனிருக்கும் திசைப்பக்கமே திரும்ப மறுப்பது ஏன் என்று அவர்களுக்கும் புரியவில்லை. சாணைக்கல்லை அரக்கோடு கலந்து பேருருளைகளாகச் செய்து காயவைப்பதைப்பற்றி மேழகன் விளக்கினான். பாரி அதைப் பார்த்துக்கொண்டுதானிருந்தான். ஆனால், கல்லும் அரக்கும் ஒட்டாமலிருக்கும் துயரம்தான் அவன் மனதில் இருந்தது.
சாணைக்கல் காய்வதற்கு நாள்கள் ஆயின. அதுவரை காத்திருந்தனர். ஆனால், பாரியால் ஆதினியின் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, தாங்கிக்கொள்ளவும் இயலவில்லை. அவளுடன் இருந்த தோழிகளுக்கும் விளங்கவில்லை.

அன்று காலை வாரிக்கையனும் கூழையனும் உடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவக்குடில் நோக்கிப் புறப்பட்டுப் போனபொழுது பாரி மட்டும் போகாது தனித்திருந்தான். இன்று ஆதினியைக் கண்டுபேசுவது என முடிவோடிருந்தான். சிற்றோடைக்கரையிலிருந்த செண்பகமரத்தின் அடியில் அவள் அமர்ந்திருந்தாள். தனித்திருந்தவளின் முகத்தில் கவலையின் கீற்று தென்பட்டது.
குழப்பத்தின் பிடியிலிருந்த பாரி அவள் முன்னர் வந்து நின்றதும், பேச ஏதுமற்ற அவள் புறப்பட ஆயத்தமானாள். மறித்த பாரி, “என்னை விட்டு அகல்வதன் காரணமென்ன?” எனக் கேட்டான்.
நிமிர்ந்து பாரியின் கண்களைப் பார்த்தாள் ஆதினி. பார்வையின் பொருள் அவனுக்குப் புரியவில்லை.
அவள் சொன்னாள், “பறம்பின் தலைவன் நான் நினைத்ததுபோல் இல்லை.”
அதிர்ந்தான் பாரி. அவள் எதன் பொருட்டு இவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறாள் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை இவள் தந்தையிடம் சாணைக்கல் வேண்டும் என உதவிகேட்டதால் இப்படி எண்ணுகிறாளோ என்று தோன்றியது. இதில் தவறொன்றும் இல்லையே; வேளிர்குலம் தங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து மாற்றிக்கொள்ளும் பழக்கம் எப்பொழுதும் உள்ளதுதானே. இதற்கு ஏன் இப்படி நினைக்க வேண்டும் என்று எண்ணியபடி அவளைப் பார்த்தான். அவள் நேர்கொண்ட பார்வையைக் கீழிறக்காமலிருந்தாள்.
அவளின் உறுதி பார்வையின் கோணத்திலேயே வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. பாரியால் புரிந்துகொள்ள முடியவில்லை. “யான் செய்த பிழையென்ன?” என்று கேட்டான்.
“குலத்தலைவனுக்கு எது அழகு?”
“தன் குலம் காக்கும் துணிவும் வீரமும்.”
“அவை இரண்டும் இருப்பதால்தான் அவன் தலைவனாகிறான். ஆனால், அவனுக்கு அழகு சேர்ப்பது அவற்றையும் மீறிய பண்புகள்தானே?”
இது கேள்வியல்ல; விடை. ‘நான் பண்புபாராட்டுவதில் குறையேதும் வைத்தேனா?’ என்று மனதுக்குள் எண்ணத் தொடங்கியபொழுதே, குரலின் வீரியம் குறையத்தொடங்கியது. சிறு செருமல்கொண்டு நிலைமையைச் சமாளித்தபடி பாரி கேட்டான். “நீ கண்டறிந்த குறையைத் தயக்கமின்றிச் சொல்.”
“குறையைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால், சொல்லும் உரிமையில்லாததே எனது தயக்கத்துக்குக் காரணம்.”
“நீ மயில்கொன்றைக்கு மாலையிட்டபொழுதே மன அளவில் நாம் உரிமைகொண்டுவிட்டோம். பின் ஏன் தயங்குகிறாய்?”
ஆதினிக்குச் சற்றே அதிர்ச்சியாக இருந்தது. பொதினியின் வழக்கத்தை அதற்குள் பாரி அறிந்துகொண்டானே என்று தோன்றியது.
“பறம்பின் தலைவன் வந்துள்ளான் என அறிந்ததிலிருந்து எனது மனம் நிலைகொள்ளவில்லை. வேளிர்கூட்டத்தின் இணையற்ற வீரனாக உம்மைப் பற்றிய கதை காடெங்கும் பரவிக்கிடக்கிறது. உன்னைப் பார்க்காமலே நான் காதல்கொண்டு கிடந்தேன். உனது வருகை, நான் காதல்கொண்டு நீண்ட நாள்களுக்குப் பின்னர்தான் நடந்தது” என்றாள்.
பாரி வியப்புற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“ஆனால்…” சொல்ல சற்றே தயங்கினாள்.
பாரி அவளது வார்த்தையைக் கூர்ந்து கவனித்தான்.
“பொதினிமலை வருகிறவர்கள் தம் குலங்காக்க மருத்துவ உதவியைத்தான் கேட்பார்கள். நீயோ ஆயுத உதவியைக் கேட்டாய். என்னால் அதனை ஏற்க முடியவில்லை.”
ஆதினி கூறிய பிறகு பாரியின் மனவழுத்தம் சற்றே குறைந்தது. அவன் சொன்னான், “வேளிர் கூட்டத்தில் மருத்துவ அறிவில் உச்சங்கொண்டவர்கள் பொதினிமலை வேளிர்களே என்பதை நான் அறிவேன். ஆனால், எங்களுக்குத் தேவையானதைத்தானே நாங்கள் கேட்க முடியும்.”
மறுமொழி ஆதினியை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “தங்களுக்கு என்ன தேவை என்பதையே அறியாமல் குலத்தலைவன் எப்படி இருக்க முடியும்?”
ஆதினியின் சொல் கடுந்தாக்குதலாக இருந்தது. எதன் பொருட்டு இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாள் என்பது பாரிக்குப் புரியவில்லை. “பறம்பின் தேவைகளை நான் அறியவில்லை என்றா சொல்கிறாய்?”
கேள்வியைப் பாரி முடிக்கும் முன் ஆதினி சொன்னாள் “ஆம்.”
மீண்டும் அதிர்ந்தான் பாரி. ‘பறம்புநாட்டைப் பார்த்தறியாதவள் பறம்பின் தேவையை நான் அறியவில்லை என்று எப்படிச் சொல்லமுடிகிறது?’ அதிர்ச்சியும் ஆவேசமுமாக மாறியது மனம்.
சற்றே மனதை அமைதிப்படுத்தியபடி பாரி சொன்னான், “நீ பறம்பை அறியாதவள். பறம்பும் தேர்ந்த மருத்துவக்குடிகளைக் கொண்டதுதான். எனவே எங்களுக்கு அது சம்பந்தமான தேவையெதுவும் எழவில்லை. எனவேதான் நாங்கள் மருத்துவ உதவி எதுவும் கேட்கவில்லை. சாணைக்கல்...” என்று பாரி பேசிக்கொண்டிருக்கும்பொழுது கையை உயர்த்தி, பேச்சை நிறுத்தச்சொன்னாள் ஆதினி.
அவள் பார்வையில் இருந்த அழுத்தமும் கையை உயர்த்திய வேகமும் இடைவெளியின்றி நிறுத்தியது பாரியின் சொற்களை. பாரி விழி அசையாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆதினி சொன்னாள், “மருத்துவத் தேவை எதுவுமில்லாத ஒரு குலம், தன் குல ஆசானின் மூன்று மகன்களையும் ஆட்கொல்லிமரத்துக்கு சாகக்கொடுப்பானேன்?”
ஒற்றைக் கேள்வியால் பாரியை இருகூறாகப் பிளந்தாள் ஆதினி.
தொலைவில் கூழையனும் வாரிக்கையனும், பிரண்டை தேய்த்த சிரட்டையையும் பூனை வணங்கியையும் பார்த்துவிட்டு, பாரியை நோக்கி வந்தனர். அவர்கள் வருவது அறிந்த ஆதினி அவ்விடம் விட்டு நகர்ந்தாள். உறைகல்லென நிலைகொண்டிருந்த பாரியைப் பார்த்த வாரிக்கையனும் கூழையனும் திகைத்து நின்றனர்.
பாரியின் அதிர்ச்சி கலைய நாளானது. சாணைக்கல் காய்ந்துகொண்டிருந்தது. செங்காற்சேவல் விருந்து நாள்தோறும் நடந்தது. பாரி அதன்பின் ஒவ்வொன்றாக அறியத் தொடங்கினான். ஆட்கொல்லி மரத்தின் அருகிற்செல்லப் பொதினி மருத்துவர்கள் வழிகண்டுள்ளனர் என்பது பிறகுதான் தெரியவந்தது. சேராங்கொட்டை விதையுடன் மூன்றுவிதமான மூலிகைகளை அரைத்து உடலெங்கும் தேய்த்துக்கொண்டால் அதனருகில் சென்றுவரலாம் என்று சொன்னார்கள். சரி, இவ்வளவையும் தேய்த்து அதனருகில் செல்லவேண்டிய தேவை என்ன என்று கேட்டபொழுது, அதற்கு அவர்கள் சொன்ன காரணம் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொதினிவாழ் வேளிர் கூட்டத்தின் மருத்துவ அறிவு எவ்வளவு உச்சங்கொண்டிருக்கிறது என்பதைப் பாரியால் அப்பொழுதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
செம்மாஞ்சேரலுடன் போரிட்டு அடைந்த வெற்றி மட்டுமன்று, தேக்கனின் மகன்களை ஆட்கொல்லி மரத்துக்குச் சாகக்கொடுத்ததுகூடக் கதைகதையாய் மலையெங்கும் பரவிக்கிடக்கிறது என்பதும் பாரிக்குப் புரிந்தது.
வந்த புதிதில் சாணைக்கல்லைப்பற்றியே கேட்டுக்கொண்டிருந்த பாரி, இப்பொழுது ஆட்கொல்லி மரத்துக்கான மருத்துவத்தையே கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை மேழகன் கவனித்தபடி இருந்தான். வேளிர் கூட்டத்தோடு ஒருமாற்றுச் செய்யலாம் என்பது முன்னோர் வாக்கு. ஆனால், பாரி இருபொருள் கேட்பானோ என்று தோன்றியது.
சாணைக்கல் அரக்கோடு காய்ந்து இறுகப்பற்றி வட்டவடிவ உருளையாக மாறியது. நாளை அதனை எடுத்துப் பயன்படுத்தலாம் என்று மேழகன் சொன்னபொழுது பாரி சொன்னான், “எனக்கு சாணைக்கல் தேவையில்லை.”
இது மேழகன் எதிர்பார்த்ததுதான். சாணைக்கல்லுக்கு மாறாக ஆட்கொல்லி மரத்துக்கான மருந்தினைக் கேட்பான் என்று முன்கூட்டியே நினைத்திருந்தான். “ஆனால், அம்மருந்தினை இனிமேல்தான் உருவாக்கவேண்டும்” என்றான்.
“நான் அம்மருந்தினைக் கேட்கவில்லையே” என்றான் பாரி.
மேழகன் அதிர்ந்தான். “சாணைக்கல்லும் வேண்டாம், ஆட்கொல்லி மரத்துக்கான மருந்தும் வேண்டாம் என்றால், உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

“அதனை ஆதினியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றான் பாரி.
மேழகனுக்கும் புரியவில்லை உடனிருந்த வாரிக்கையனுக்கும் புரியவில்லை. சற்றே குழப்பத்தோடு மகளிடம் போய்க் கேட்டான் மேழகன், “பாரிக்கு என்ன வேண்டும்?”
“இதனை ஏன் என்னிடம் வந்து கேட்கிறீர்கள்?”
“பாரிதான் உன்னிடம் கேட்கச் சொன்னான்.”
‘பறம்பின் தேவையை என்னைவிட நீதான் அதிகம் புரிந்திருக்கிறாய். இப்பொழுது சொல் நான் எதைக் கேட்கவேண்டும்?’ என்று பாரி காதோடு கேட்கும் குரல் அவளுக்குள் எதிரொலித்தது.
உள்ளுக்குள் ஓடிய சிரிப்பை மறைத்தபடி ஆதினி சொன்னாள், “மணவிழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் தந்தையே.”
மேழகனுக்குப் புரியவில்லை. “பறம்பின் தேவை என்ன என்றுதானே உன்னைக் கேட்கச் சொன்னான்?”
“ஆம். பறம்பின் தேவை நான்தான். அதை நான் சரியாகக் கணிக்கிறேனா என்பதை அறியவே பாரி உங்களை அனுப்பியுள்ளான்.”
மேழகனுக்கு இப்பொழுதும் புரியவில்லை. ஆதினி மீண்டும் சொன்னாள், “என்னை வைத்தே என்னைக் கணிக்கும் ஒரு விளையாட்டைப் பாரி விளையாடுகிறான். அதுமட்டுமன்று, பறம்புமீதான எனது அக்கறையைக் காதல்கொண்டு உரசிப்பார்க்கிறான். சாணைக்கல்லில் இரும்பைக் கூர்தீட்டிப் பார்ப்பது இதுதான் தந்தையே.”
ஆதினி சொல்வது விளங்குவதுபோல இருந்தது. ஆனாலும் காதலின் ஆழத்தை அடுத்தவர் விளங்கிக்கொள்ளுதல் எளிதன்று. நிலைமையைச் சமாளித்தபடி மேழகன் சொன்னான், “நீ கடந்த சிலநாள்களாக அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருந்ததால், உனக்கு அவனைப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துவிட்டேன்.”
“இவ்வளவு ஆற்றலும் அழகுங்கொண்ட காதலனைப் பார்த்துக்கொண்டே விலகி நடப்பதைவிட, பார்க்காமல் திரும்பி நடப்பதுதான் உயிர்வாழ்வதற்கான சிறந்தவழி.”
அதன் பிறகு மேழகன் பேசவில்லை.
மணவிழாவுக்கு வரச்சொல்லி எவ்வியூருக்கு வீரர்களை அனுப்பிவைத்தான் வாரிக்கையன். நான்கு அருவிகளையும் எட்டு முகடுகளையுங்கடந்து பாய்ந்து சென்றது காதலின் கதை. பொதினியின் மகிழ்வுக்கு அளவேதும் இல்லை. விருந்து நாள்தோறும் நடந்தது. பறம்போடு மணவுறவு காண்பது வேளிர் குலப்பெருமை என ஊரே மனம் நெகிழ்ந்து கொண்டாடியது.
இறைச்சிகளின் சுவை சுனைநீரின் கலவையோடு இணைந்தது. இவ்விருந்தில் பரிமாறப்படும் இறைச்சிகள் இவ்வளவு சுவையோடு இருப்பதற்குச் சுனை நீர் முக்கியக் காரணம். இடிவிழுந்து பாறைகள் பிளவுறுதல் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், பாறையின் பிளவுகளின் ஊடே உருவாகும் புதிய சுனைநீர் கடினத்தன்மை கொண்டிருக்கும். ஆழப்புதைந்த இடியில் உருவான நிலவுப்பு நீரிற்கலந்து சில மாதங்களாவது வந்துகொண்டே இருக்கும். அந்நீரில் வேகவைக்கப்படும் இறைச்சி இணையற்ற சுவைகொண்டிருக்கும். விழுந்த இடியின் நாட்கணக்கும் பிடிபட்ட விலங்கின் வயதுக்கணக்கும் இணைந்துதான் இலையில் விருந்தாகிறது.
இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாகச் சமைக்கத்தெரிந்ததுதான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. பொதினி மக்கள் இறைச்சி தொடங்கி இடி வரை பலவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்தினர். மண்ணும் தாதுக்களும் என்னவெல்லாம் செய்யும் என்பதில் இவர்களுக்கிருக்கும் ஆற்றல் இணைசொல்ல முடியாதது.
புதிய இடியூற்றின் சுனைநீர்கொண்டே விருந்துக்கான இறைச்சி ஏற்பாடானது. வாரிக்கையனும் உடன்வந்த எவரும் எதனையும் விட்டுவைக்காமல் விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.
பொதினியின் ஐஞ்சுவைக்கள்ளுக்குள்ள குணம் தனிதான். அதனை விளக்கியபடியே மேழகன் சொன்னான், “ஆதினி மயில்கொன்றை மரத்துக்கு மாலையிட்ட அன்றே இத்திருமணம் முடிவாகிவிட்டது.”
சின்னதாய்ச் சிரித்தான் வாரிக்கையன்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?” எனக் கேட்டான் மேழகன்.

“அதற்கு முன்பே முடிவாகிவிட்டது” என்றான் வாரிக்கையன். மேழகனுக்குப் புரியவில்லை.
“பறம்பின் ஆதிக்கள்ளான ஆலம்பனைக்கள்ளை மணவுறவுக்காக மட்டுமே கொடுக்கும் பழக்கம் எங்களுடையது” என்றான் வாரிக்கையன்.
“அப்படியென்றால் நீங்கள் சாணைக்கல்லுக்காக வரவில்லையா?”
“சாணைக்கல்லுக்கு மட்டுமென்றால் பாரி ஏன் வரவேண்டும், நாங்கள் மட்டும் போதாதா?”
“பாரி அறிந்துதான் வந்தானா?”
சிரித்தபடி வாரிக்கையன் சொன்னான், “நாங்கள் யாரும் அறியமாட்டோம் என்று நம்பி வந்தான். அவன் அப்பனுக்கே மணமுடித்துவைத்தவன் நான். என்னிடமே விளையாடுகிறான்” என்றான்.
“உங்களுக்கே இந்தச் செய்தி தெரியாதா?”
“சாணைக்கல்லைப்பற்றிச் செய்தி சொன்ன முதுபாணனிடம் இவன் அதிகம் வினவியது ஆதினியைப் பற்றித்தான்.”
“அப்படியா?” எனக் கேட்டான் மேழகன்.
“இடிநீரில் இறைச்சியைச் சேர்க்கும் உங்களுடைய அறிவைப்போலத்தான் ஆயுதத்தோடு ஆதினியைச் சேர்த்தான் பாரி.”
மேழகன் வியப்பிலிருந்து மீள நேரமானது.

குன்றின் சிறுபாறை முனையில் அமர்ந்திருந்தான் பாரி. அவனது தோளிலே சாய்ந்திருந்தாள் ஆதினி. கும்மிருட்டு நிலைகொண்டிருந்தது. ‘பாறையின் முகப்பில் ஏன் அமரவைத்திருக்கிறாள். ஏதாவது காரணமிருக்கும்’ என்று சிந்தித்தபடியிருந்தான். இருளுக்குள்ளிருந்து முழுநிலவு மேலேறி வரும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
பற்றிய தோளிலிருந்து முகம் விலக்காமல் ஆதினி கேட்டாள், “எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
மெல்லிய குரல் மேலெழுந்து வந்தது, “குலத்தின் தலைவனுக்கு எது அழகு?”
ஆதினி இதனை எதிர்பார்க்கவில்லை. விடைசொல்ல வாயெடுத்தவள் சற்றே அமைதியானாள்.
“ஏன் விடைசொல்ல மறுக்கிறாய்?”
“அழகான தலைவன் தன் குலத்தோடு சேர்த்த பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது?” சொல்லி நிறுத்திய ஆதினி அசைவற்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“காதலியிடம் கற்றுக்கொள்ளும் சுகம் ஆணுக்கு வாய்ப்பது அரிது. நீ எனக்கு என்னுடைய அறியாமையைக் காண்பித்தாய். என்னுள் புகும் உனது ஆற்றல் என்னைத் திகைக்கச்செய்துவிட்டது.”
ஆதினி சொன்னாள். “என்னுள் புகும் உனது ஆற்றல் என்னை என்ன செய்கிறது தெரியுமா?”
பாரி மெல்ல தலையசைத்து, “தெரியவில்லை” என்றான்.
அவன் தோள் தழுவிய கையைச் சற்றே மேல் நகர்த்தி “இந்த அறியாமைதான் பேரழகு” என்றாள்.
இமைகள் மூடத்தலைப்பட்டபொழுது உச்சிமலையிலிருந்து பெருங்காற்று வீசி இறங்கியது. எதிர்ப்புறக் குன்றின் பின்புறத்திருந்து முழுநிலவு மேலெழ மஞ்சள் ஒளியில் மரங்களின் நுனியிலைகள் கூசிச் சிலிர்த்தன. மயங்கிய பாரி இயற்கையின் பேரழகை விஞ்சும் ஆற்றல் தனது கன்னத்தை ஏந்தி நிற்கும் கைகளுக்கு இருக்கிறதோ என நினைத்துக்கொண்டிருக்கையில் ஆதினி சொன்னாள், “கண்களை மூடுங்கள். உலகின் பேரழகைக் காட்டுகிறேன்.”
அவள் சொல்லியவிதமே பெருமயக்கத்தை ஊட்டியது. என்ன செய்யப்போகிறாள் என அறியும் ஆவலில் கண்களை மூடினான். இவ்வளவு பொழுதும் தனது உடலோடு ஒட்டியிருந்த அவள் தன்னை விட்டு விலகுகிறாள் என்பதை உணர்ந்தபடியே இருந்தான் பாரி.
சிறிதுநேரம் எதுவும் சொல்லாமல் இருந்தாள். பாரியின் எண்ணங்கள் எங்கெங்கோ போய்த் திரும்பின.
“இப்பொழுது கண்களைத் திறங்கள்” என்றாள்.
பாரி மெல்ல கண்களைத் திறந்தான். எதிரில் ஆதினி நின்றுகொண்டிருந்தாள். சிறு புன்னகையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் வலப்புற மலையுச்சியைக் கைகாட்டி, “அங்கே பாருங்கள்” என்றாள்.
பாரி திரும்பிப்பார்த்தான். நிலவொளியில் மலையுச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஏதோவொரு வேறுபட்ட தன்மையை உணர்ந்தான். என்னவென்று புரியவில்லை. காற்று வீசிக்கொண்டிருந்தது. கணநேரத்துக்குள் நூற்றுக் கணக்கான சிறகுநாவற்பழங்கள் மலையுச்சியிலிருந்து காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தன. இமைக்காமல் பார்த்தான் பாரி. அலையலையாய் அந்த அதிசயம் வந்திறங்கியது.
உச்சிமலையில் எட்டிப்பார்க்கும் நிலவுக்குள்ளிருந்து கருநீலப்பொன்வண்டு காற்றெங்கும் மிதந்தபடி பாரியை நோக்கி வந்தது. நம்பமுடியாத காட்சி வானம் முழுவதும் வந்துகொண்டிருந்தது. கணநேரத்தில் கிறுகிறுத்துப்போனான்.
மலையுச்சியிலிருக்கும் சிறகுநாவற் காட்டிற்கு நேர்கீழாக இருப்பதுதான் பொதினிக் குன்று. உட்கார்ந்திருக்கும் இந்தப் பாறைமுனை இன்னும் துல்லியமானது.
விரிந்த ஈரிலையால் மிதந்துவரும் நாவலை அவனது கை எட்டிப்பிடிக்கும்பொழுது, விலகியிருந்த ஆதினி அருகில்வந்து கட்டிப்பிடித்தாள். ஈரிலைகொண்டு இருவரையும் மூடின சிறகுநாவல்கள்.
கண்திறக்கவும் முடியாமல் மூடவும் முடியாமல் அவன் தவித்தபொழுது துவர்ப்பின் சுவையை அவனுக்கு ஊட்டத்தொடங்கினாள் ஆதினி. நாவற்பழத்தின் சாறு உள்ளிறங்கியது. பறப்பதற்கு ஈரிலைகூடத் தேவையில்லை, ஈரிதழே போதும்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...