
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

பறம்பின் தலைவனுக்கு ஆதினியை மணமுடித்து எவ்வியூருக்கு அழைத்துவந்தனர். கொண்டாட்டங்களும் கூத்துகளும்தாம் எத்தனை வகை! விருந்துகளும் விளையாட்டுகளும் முடிந்தபாடில்லை. பொதினிவாழ் வேளிர்கள், இயற்கையின் அதிநுட்பங்கள் பலவற்றைக் கண்டறிந்தவர்கள்; தாதுக்களையும் உலோகங்களையும் நுட்பமாக அவதானித்த மாமனிதர்கள். அந்தக் குலமகள், பறம்புத் தலைவனை மணந்து எவ்வியூர் புகுந்தாள்.
மணமுடித்துச் செல்லும் குலமகளோடு பதினெட்டுக் குடிகளை அனுப்பிவைப்பது பொதினி வேளிர்களின் குலமரபு. பச்சிலை, தாதுக்கள், உலோகங்கள், உடற்கூறுகள் எனப் பலவற்றிலும் தேர்ந்த பதினெட்டு மருத்துவக்குடிகளை உடன் அனுப்பிவைத்தான் மேழகன். மதிப்பிட முடியாத மனிதச் செல்வங்களோடு ஆதினி எவ்வியூருக்குள் நுழைந்தாள்.
பொதினி, மலையடிவாரத்து ஊர். எவ்வியூர் பச்சைமலையின் உச்சியில் நிலைகொண்டுள்ள ஊர். மேகத்துக்குள் வாழ்வதுபோலவே எவ்வியூரின் பகற்பொழுது இருக்கும். நழுவி நகரும் மேகங்களுக்குள் கூந்தல் பறக்க ஓடவேண்டும் என்று ஆசை தோன்றியது ஆதினிக்கு. தான் ஒன்றும் குழந்தை அல்லள் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள். மரங்களின் எல்லா இலைகளின் மீதும் நீர் தேங்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
``ஆண்டின் பெரும்பான்மையான மாதங்களில் உலராத ஈரத்தோடுதான் இலைகள் இருக்கும்” என்றான் பாரி.
இயற்கையின் குளுமையைவிட ஆதினியின் ஆழ்மனம் அதிகம் குளிர்ந்திருந்தது. மேல்மாடத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். மாடத்துக்குள் மலர்ப்படுக்கையை ஆயத்தம்செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. எவ்வியூர்ப் பெண்கள் பொதினிக்குச் சென்ற அன்று மாலைதான் மணவிழா நடந்தது. அன்று இரவு பாரிக்கும் ஆதினிக்கும் தலைநாள் இரவு. பொதினியின் குலவழக்கப்படி குலசடங்குகளைச் செய்தனர்.
இரவு மலர்ப்படுக்கை ஆயத்தமானது. படுக்கையின் நடுவில் ஆவாரம்பூவின் இதழ்களைப் பரப்பியிருந்தனர். அது மஞ்சள் நிறத்திலானது. அதை அடுத்து அத்திப்பூவின் நீல நிறத்தாலான வளைந்த கோடுகளை உருவாக்கியிருந்தனர். மூன்று கோடுகளைச் சுற்றி வெண்டாழையின் வெண்மை பரவிக்கிடந்தது. அதன் விளிம்புப் பகுதியில் செந்தாழையின் சிவப்பு அணிவகுத்திருந்தது. அது ஒரு மாயப்படுக்கையைப்போல வண்ணத்திலும் மணத்திலும் பெருமயக்கத்தை உருவாக்குவதாக இருந்தது.
அது பொதினியின் பூப்படுக்கை என்றால், எவ்வியூரின் மலர்ப்படுக்கை வேறுவிதமாக இருந்தது. ஐவண்ணக் குறிஞ்சியினால் படுக்கையை ஆயத்தம் செய்தனர். பல்லாண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி, பச்சைமலையின் எத்திசையில் எல்லாம் பூத்துக்கிடக்கிறது என்பதை அறிந்து எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்தனர். பொன்வண்ணக் குறிஞ்சியின் மஞ்சள் இதழ்களைப் படுக்கையின் நடுவில் விரித்தனர். பச்சைமலையின் வடகோடியில் மட்டுமே பூத்துள்ள மழைவண்ணக் குறிஞ்சியின் நீலநிற இதழ்கொண்டு நடுவிலிருந்த மஞ்சளைச் சுற்றி அழகிய வட்டம் அமைத்தனர். பவளக்குறிஞ்சியின் செம்மை நிற இதழ்களையும், பெருங்குறிஞ்சியின் வெண்மை நிற இதழ்களையும் மாற்றி மாற்றி அடுக்கினர். ஒரு சுடர் படபடத்து எரிவதைப்போன்ற ஒரு தோற்றம் கொள்ளச்செய்தது. வாடாக்குறிஞ்சியின் செந்நீல இதழ்களை விளிம்பெங்கும் வரிசைப்படுத்தினர்.
குறிஞ்சி காமத்துக்கான பூ. அதன் மணமும் வண்ணமும் கணநேரத்தில் மனித ஆழ்மனத்தைத் தன்னகப்படுத்திக்கொள்ளும். குறிஞ்சி பூக்கத் தொடங்கினால் காடு முழுவதும் பூக்கும். காமத்தின் தன்மையும் அதுதான். கால்விரல் நுனியிலிருந்து நெற்றியில் சுருண்டுகிடக்கும் கூந்தல் வரை எல்லாவற்றிலும் காமத்தீ இணையாகப் பற்றும். பற்றியெரியும்போது மிச்சமின்றி எரியும் தீ அது. மொத்தக் காடும் எரிவதைப்போலத்தான் இருக்கும் குறிஞ்சி பூக்கும் காலம். அதுதான் காமத்தின் காலம். காத்திருந்து எரிந்து காலகாலத்துக்கு மணக்கும்.
படுக்கையின் தன்மைக்கு ஏற்ப அதுவே மணத்தை அறையெங்கும் நிரப்பியிருக்கும். மாலை நேரத்துக் கதிரவன் ஒளி மங்க, சிறிது நேரமே இருந்தது. சட்டென ஒரு சிந்தனை தோன்றியது பாரிக்கு. ஆதினியை அழைத்துக்கொண்டு மாடத்தை விட்டுக் கீழிறங்கி வந்தான். மாடத்தின் வெளிப்புறத்தில் புதிதாகச் செய்யப்பட்ட தேர் நின்றிருந்தது. குதிரைகளை அதில் பூட்டச் சொன்னான். வீரர்கள் குதிரைகளைப் பூட்டினர். ஆதினியைத் தேரில் அமரவைத்து பாரி தேரை ஓட்டினான்.
வீரர்களும் மற்றவர்களும் பார்த்திருக்க, நாகப்பச்சை வேலியைக் கடந்து தேர் வெளியேறிப் போனது. எங்கே போகிறான் என யாருக்கும் தெரியாது. `ஆதினியைத் தேரிலே உட்காரவைத்து, சுற்றிக்காண்பித்து வருவான்’ என நினைத்தனர்.
ஆதினி இதுவரை தேர்ப்பயணம் செய்ததில்லை. மாலை நேரத்துச் சுருங்கும் ஒலியும், சீறிப்பாயும் தேரின் ஓசையும், மலை மடிப்புகளின் இளம்பச்சையும் காணக்கிடைக்காத காட்சியாக இருந்தது. அவளது முகம், இயற்கையின் ஆதிச்சுவையை உணர்ந்துகொண்டிருந்தது. முறையான பாதைகள் உருவாக்கப்படாததால் வேகத்தைக் குறைத்து, தேரை மெதுவாக ஓட்டினான். தேர் சென்றுகொண்டே இருந்தது. கதிரவன், ஒளி சிறுத்து அணைய ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. மலை உச்சியில் ஒளி அகலுதல், விளக்கை ஊதி அணைப்பதைப்போலச் சட்டென நிகழ்ந்துவிடும். ஆனாலும் தேரைத் திருப்பாமல் முன்னோக்கி ஓட்டிச்சென்றான் பாரி. ஆதினி எதுவும் கேட்கவில்லை.
மலைமுகட்டோரம் போய் தேர் நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய பாரி, ஆதினி இறங்க உதவி செய்தான். சற்றே சிந்தித்தபடி நின்றவன், தேரிலிருந்து குதிரைகளைக் கழற்றி விட்டான். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை ஆதினியால் கணிக்க முடியவில்லை.
``உன்னை ஓரிடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் வா” எனச் சொல்லி, மலைமுகடு நோக்கி நடந்தான். ஒளி முற்றிலும் அகன்று இருள் கவிந்துவிட்டது. அவனைப் பின்பற்றி நடந்தாள் ஆதினி.
``குதிரைகளை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்களே, காட்டுக்குள் ஓடிவிடாதா?”
``போகாது. இந்த மேட்டில் மட்டுமே முயற்புல் இருக்கிறது. அதற்கு மிகப் பிடித்த உணவு அதுதான். இந்த இடம் விட்டு எளிதில் அகலாது.”
``அப்படியா!” எனக் கேட்டபடி நடந்தாள். இருள் முழுமையாக நிலைகொண்டுவிட்டது. முகட்டை அடைந்ததும் மலையின் சரிவை நோக்கி இறங்கத் தொடங்கினான்.
``கால்களை கவனமாக எடுத்து வை” என்றான்.

நீருக்குள் மூழ்கும்போது உள்ளே போகப் போக அடர்ந்த ஓசை பெருகிவந்து காதடைக்குமே, அப்படித்தான் காட்டின் ஓசையும். நேரம் ஆக ஆக இருள் அடரோசையாக மாறிக் கொண்டிருந்தது. சிறிதும் பெரிதுமான பாறைகளுக்கு நடுவில் ஆதினியைக் கவனமாக அழைத்துக்கொண்டு கீழிறங்கினான் பாரி.
இருளுக்குள் மீன்களைப்போல் மிதந்துகொண்டிருக்கும் செடிகொடிகளின் இலைகளைக் கையால் தட்டியபடி நடந்த ஆதினி கேட்டாள், ``எங்கே போகிறோம்?”
குறுக்கிட்டுக்கிடந்த மரக்கட்டையை அகற்றி ஆதினி நடப்பதற்கு வழி அமைத்தபடி பாரி சொன்னான், ``நீ பொதினி மலையின் பேரதிசயத்தை எனக்குக் காண்பித்தாய் அல்லவா, அதேபோல பறம்பின் அதிசயத்தை உனக்குக் காட்ட அழைத்துச் செல்கிறேன்.”
``அன்று முழுநிலவு நாள். சிறகுநாவல்பழங்கள் மிதந்துவந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இன்று நிலவற்ற காரிருள் நாள். இந்தக் கும்மிருட்டில் எதைப் பார்க்க முடியும்?”
``பொதினியின் அதிசயத்தைப் பார்க்க நிலவின் ஒளி தேவைப்பட்டது. ஆனால், பறம்பின் அதிசயத்தைத் தெளிவாகப் பார்க்க ஒளியற்ற காரிருள்தான் தேவை.”
ஆதினிக்கு வியப்பும் ஆர்வமும் ஒருசேரப் பெருகின. `ஒளியற்ற இருளில்தான் தெளிவாகப் பார்க்க முடியும் என்றால், அது என்னவாக இருக்கும்?’ என்று சிந்தித்தபடியே நடந்தாள்.
நின்று பொறுமையாக வழிக்குறிப்புகளைக் கவனித்தபடி முன்நடந்தான் பாரி. இருளில் இறக்கத்தில் கால் எடுத்து வைப்பதில் கூடுதல் விழிப்பு உணர்வு தேவை. பாரி முன் நடப்பதால் பதற்றம் இல்லாமல் நடந்தாள் ஆதினி.
நேரம் கூடியது. இருளின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டிருந்தது. முன் நடக்கும் பாரியின் கை பற்றிக் கீழிறங்குவதும், தோள் பிடித்து நடப்பதுமாக ஆதினி வேறொரு விளையாட்டை விளையாடியபடி வந்துகொண்டிருந்தாள். ஆனாலும், என்னதான் காண்பிக்கப்போகிறான் என்பதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
``நீங்கள் காண்பிக்கப்போகும் பறம்பின் அதிசயம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?”
``கண் முன்னால் அதைக் காண்பித்துச் சொல்கிறேன். அப்போது அடையும் அனுபவத்தை ஏன் இழக்க வேண்டும்?”
பற்றிய தோளை ஆதினியின் கை இறுகப்பிடித்தது. கால்கள் தடுமாறுகின்றனவோ எனப் பாரி நின்றான். ஆதினி சொன்னாள், ``பறம்பின் பேரதிசயத்தோடுதான் நான் நடந்துகொண்டிருக்கிறேன். இந்த உணர்வு மற்ற எல்லாவற்றையும்விட மிக உயர்ந்தது. நான் புதிதாக எதையும் அடையப்போவதுமில்லை, இழக்கப்போவதுமில்லை. நீங்கள் தயங்காமல் சொல்லலாம்.”
அவளின் சொற்களுக்குள் இருந்த காதல், பாரியைக் கிறங்கச்செய்தது. பிடித்து இறங்க முடியாத பள்ளம் இருந்தது. மிகப் பாதுகாப்போடு அவளைப் பிடித்து இறக்கினான். தோள் தொடுவதும் கை தொடுவதுமாகத்தான் இவ்வளவு நேரப் பயணம் இருந்தது. ஆனால், இந்தப் பள்ளத்தைக் கடந்தது அப்படியல்ல. கடக்க முடியாத பள்ளமாகப் பாரிக்குத் தோன்றியது. ஆதினியின் உணர்வோ அதையும் கடந்ததாக இருந்தது.
சற்றே கால் சரிந்து பாரியின் மேல் விழுந்தவளை, தூக்கி விலக்கி நிறுத்த முடியவில்லை பாரியால். அந்த இடைவெளி உருவானால்தான் நடக்க முடியும் எனத் தெரிந்தும் அதை உருவாக்குவது எளிதாக இல்லை. செங்குத்தாகச் சரிந்துகிடக்கும் மலைச்சரிவில், கும்மிருட்டில் கண்கட்டி விளையாடுவதுபோல காதல் விளையாடியது. பாரி சற்றே சிந்தித்து `இந்த விளையாட்டுக்குள் மனம் சிக்கிவிடக் கூடாது, கவனமாகக் காலடியெடுத்து வைக்கவேண்டும்’ என நினைத்து நடந்தான்.
ஆதினிக்கு அதுவெல்லாம் இல்லை. பாரி மட்டுமே அவளின் பார்வையில் இருந்தான். முன் நடந்த பாரி சொன்னான், ``நான் காண்பிக்கப்போவதை, இதற்கு முன் மிகச் சில மனிதர்களே பார்த்திருப்பார்கள்.”
``அப்படியா!” என்றாள் ஆதினி.
``ஆம், அதன் பெயர் இராவெரி மரம்.”
ஆதினிக்கு சட்டெனப் புரியவில்லை. ``என்ன மரம்?”
``இராவெரி மரம். அதன் இலைகள் பகலிலே வாங்கிய ஒளியை இரவிலே உமிழும். பார்ப்பதற்கு எண்ணிலடங்காத சுடர்கள் எரியும் விளக்கைப்போல் இருக்கும்.’’
கிறங்கி நின்றாள் ஆதினி. ``என்ன சொல்கிறீர்கள்? அப்படியொரு மரம் இருக்கிறதா?”

``ஆம். மழைநீரை உள்வாங்கிய மண், ஊற்றாகக் கசியவிடுகிறதல்லவா. அதேபோல பகல் முழுவதும் ஒளியை உள்வாங்கி இரவு முழுவதும் வெளிச்சத்தைக் கசியவிடும். பார்ப்பதற்கு மரம் பற்றி எரிவதுபோல் இருக்கும்.”
சொல் கேட்டு நின்ற ஆதினியின் தோள் தொட்டான் பாரி. கனவிலிருந்து மீண்டவளைப்போல மீண்டாள்.
``இன்னும் எவ்வளவு தொலைவில் அந்த மரத்தைப் பார்க்கலாம்?”
``சிறிது தொலைவு இறங்கினால் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் கிடக்கும். அங்கிருந்து பார்த்தால், எதிரில் இருக்கும் மலைச்சரிவில் இராவெரி மரம் தெரியும்.”
ஆதினியால் ஆசையை அடக்க முடியவில்லை. ஒளிரும் மரத்தைப் பார்க்க வாய்க்கும் அந்தக் கணத்தை அடைய மனம் தவித்தது. ``இப்போதுதான் இன்னும் கவனத்தோடு நடக்கவேண்டிய இடம். எனவே பார்த்து வா” என்று சொல்லியபடியே நடந்தான் பாரி.
``நீங்கள் எப்போது அந்த மரத்தைப் பார்த்தீர்கள்?”
``காடறியப் பயணப்படும்போது. தேக்கன் காண்பித்தார்.”
``பல ஆண்டுகள் ஆகியிருக்குமே. அதன் பிறகு பார்க்கவில்லையா?”
``இல்லை. பகலில் அந்த மரத்தை நம்மால் கண்டறிய முடியாது. அந்த மரம் பகலில் எப்படி இருக்கும் என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. இரவு நேரத்தில் எதிர்க் குன்றில் நின்று பார்த்தால்தான் கண்டறிய முடியும். அதுவும் நிலவற்ற இதுபோன்ற காரிருள் நாளின் நள்ளிரவில்தான் நன்றாகக் காண முடியும். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்துள்ளது” என்று சொல்லியபடி அழைத்துச்சென்றான்.
சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் திருகிக்கிடக்கும் இடம் வந்தது. அவற்றின் ஓரத்தில் நின்றபடி பார்த்தான், எதிரில் எதுவும் தெரியவில்லை. கும்மிருட்டாக இருந்தது. பாறையின் இன்னொரு முனையில் போய்ப் பார்த்தான். அப்போதும் எதிரில் மலைத்தொடர் தெரியவில்லை. தான் வந்தது சரியான பாதைதானா எனச் சிந்தித்தான். அந்த மலைச்சரிவில் இந்த இடம் மட்டும்தான் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டுக்கிடக்கும் ஒரே இடம். எனவே, தான் வந்துள்ளது சரியான இடம்தான் என்பதை முடிவுசெய்தபோதுதான் ஓர் உண்மை பிடிபட்டது.

ஆதினியிடம் சொன்னான், ``நாம் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளோம். ஆனால், மேகக்கூட்டங்கள் இரு மலைகளுக்கும் இடையில் முழுமையாக இறங்கி நிற்கின்றன. அதனால் எதிரில் இருக்கும் மலைத்தொடர் நம் கண்களுக்குத் தெரியவில்லை.”
``ஆதினியின் முகம் சற்றே கவலையடைந்தது. அப்படியென்றால், நம்மால் இன்று பார்க்க முடியாதா?”
அவள் கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் பாரிக்குத் தோன்றியது. `இன்னும் சிறிது நேரத்தில் மழை வந்துவிடும். நாம் இருப்பது மிகவும் ஆபத்தான இடம். பெருமழை என்றால் சரிவுப்பாறையில் மழைநீர் எவற்றையெல்லாம் இழுத்துக்கொண்டுவரும் எனத் தெரியாது. நாம் உடனடியாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும்’ என்று.
தொலைவில் இடியோசை கேட்டது. பாறையை இழுத்து அடிக்கையில் தோலின்மீது இருக்கும் தூசி அதிர்வதைப்போல மாமலை அதிர்ந்தது. பெருமின்னல் ஒன்று வெட்டி இறங்கியது. மொத்த மலைத்தொடரின் மீதும் ஒளியின் கண்திறந்து மூடியது.
சரிவுப்பாறையைக் கடந்து இடப்புறம் போவதுதான் பாதுகாப்பு எனக் கருதிய பாரி, ஆதினியின் கையைப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக நடந்தான். இவ்வளவு வேகமாக இருளுக்குள் நடப்பது சரியில்லை எனத் தோன்றியது. ஆனாலும் வேறு வழியின்றி நடந்தான்.
அடுத்தடுத்து மின்னல்கள் இறங்கத் தொடங்கின. மின்னல் ஒளியால் தென்பட்ட பாதையை வைத்து விரைந்து அழைத்துச்சென்றான். அவன் எண்ணிவந்ததுபோலவே பிளவுண்ட பாறைகளுக்கு நடுவில் பெருங்குகை ஒன்று இருந்தது. விரைந்து வந்து குகைக்குள் நுழைந்தனர்.
கொட்டும் மழையின் கொட்டம் தொடங்கியது. எங்கும் மழையின் பேரோசை, இடியால் நடுங்கியது காடு. ``உரிய நேரத்தில் குகைக்குள் அண்டியதால் ஆபத்திலிருந்து தப்பித்தோம். நாம் இருப்பது மலையின் சரிவான பகுதி. மேலேறவும் முடியாது; கீழிறங்கவும் முடியாது. இந்தப் பகுதியில் பாதுகாப்பாக அண்டுவதற்கு இந்த ஒற்றைக் குகை மட்டுமே உண்டு” என்று பாரி சொல்லிக்கொண்டிருந்தான்.
காரிருளும் அடர்மழையும் சற்றே அச்சத்தை வரவைப்பனவாக இருந்தன. மின்னல்கள் இடைவெளியின்றி இறங்கிக்கொண்டிருந்தன. ஆனாலும் மின்னல் ஒளியில் குகையின் உட்புறத்தைப் பார்க்க முடியவில்லை. `எவ்வளவு உள்வாங்கிய குகை இது! இதற்குள் விலங்குகள் எதுவும் பதுங்கியிருக்குமோ?’ என்ற எண்ணங்கள் தோன்றியபடி இருக்க, ஆதினி அமைதியானாள். இடுப்பில் இருக்கும் சிறு வாள் தவிர, பாரியிடம் வேறு ஆயுதங்கள் இல்லை என்பதையும் அவள் கவனித்தபடி இருந்தாள்.
மழையின் பேரோசை அடங்கும் வரை ஆதினியின் அமைதி நீடிக்கும் என்பதை உணர்ந்தான் பாரி. குகையின் நடுவில் இருந்த சிறுபாறையின் மீது ஆதினியைத் தோள் சாய்த்து உட்கார்ந்திருந்தான். இராவெரி மரத்தை ஆதினிக்குக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் மேகத்தின் தன்மையைக் கவனிக்காமல் இருந்துவிட்டோம் எனத் தோன்றியது. கவனித்திருந்தாலும் வராமல் இருந்திருப்போமா என்பது தெரியாது. காதல், இடிமின்னலுக்கு விலகி நடக்கத் தெரியாத உயிரினம் என்று மனதில் நினைத்தபடி உட்கார்ந்திருந்தான். ஒளியை உருவாக்க எந்த ஏற்பாடும் இல்லாமல் வந்துவிட்டோமே என்பதுதான் பாரிக்குக் குறையாகப் பட்டது.
நீண்டநேரம் கழித்து மழை நின்றது. அதன் பிறகுதான் நீரின் ஓசை மேலேறிவந்தது. காற்றெங்கும் ஈரம் மிதந்தபடி இருந்தது. குகையின் உள்ளொடுங்கித்தான் உட்கார்ந்திருந்தனர். ஆனாலும் நீர்த்தொட்டிக்குள் இருப்பதுபோலத்தான் இருந்தது. குளிர் நடுக்கியது. முகம் பார்க்க முடியாத கும்மிருட்டு. மழை பெய்யும் வரை விடாது வெட்டிய மின்னல் ஒளியில் அவ்வப்போது குகைக்குள் வெளிச்சம் தென்பட்டது. மழை நின்ற பிறகு, இருளின் அடர்த்தி மிக அதிகமானது. பாரியின் இடதுகையை இறுகப் பிடித்தபடி சாய்ந்திருந்தாள் ஆதினி.
பொழுதாகிக்கொண்டிருந்தது. `இந்நேரம் நள்ளிரவு கடந்திருக்கும்!’ என்று நினைத்த பாரிக்கு, முதன்முறையாக ஐயம் வந்தது. `பொழுது நள்ளிரவைக் கடந்திருக்குமா... இல்லையா... ஏன் குழப்பம்? ஆதினியின் பாதுகாப்புமீதே கவனம் குவித்திருந்த தால் பொழுதின் ஓட்டத்தைச் சரியாக மதிப்பிட முடியவில்லை. எப்படியோ, விடிந்த பிறகுதான் குகை விட்டு அகல முடியும். ஆதினியை இங்கேயே படுக்கச் சொல்லலாம். ஆனால், அவள் படுக்க மாட்டாள்’ என்று எண்ணியபடியே இருந்தான்.
கும்மிருட்டின் அச்சம் எளிதில் மனம் விட்டொழியாது. அதுவும் உள்காட்டின் அடர்குகைக்குள். ஆதினிக்கு அவ்வப்போது எழும் ஐயமே, தான் கண்ணைத் திறந்திருக்கிறோமா... மூடியிருக்கிறோமா என்பதுதான். இரண்டுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லாத நிலையில் பாரியின் கையை இறுகப்பற்றுவதன்றி வேறு எதையும் கவனிக்க முடியவில்லை.
`எந்தச் சொல்கொண்டு இந்த அமைதியைக் கலைப்பது?’ எனப் பாரி சிந்தித்துக்கொண்டிருக்கையில், குகையின் உள்ளடுக்கிலிருந்து சிற்றொளி வெளிப்பட்டது. அதை உணர்ந்த கணம், சட்டென குகையின் உட்பகுதியை நோக்கித் திரும்பினான் பாரி. தோளிலே சாய்ந்திருந்த ஆதினி திடுக்கிட்டு நடுங்கினாள். `உள்ளே இருப்பது விலங்கா... எந்த வகையான விலங்கு?’ எதையும் கணிக்க முடியவில்லை. `சட்டென குகையை விட்டு வெளியே போய் நின்று அதை எதிர்கொள்வது பாதுகாப்பானதா? உள்ளேயே எதிர்கொள்வது பாதுகாப்பானதா?’ பாரியால் முடிவெடுக்க முடியவில்லை.
ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருப்பதுபோல் தெரிந்தது. ஒளியின் தன்மை எதையும் கணிக்க முடியாததாக இருந்தது. `பரவும் ஒளிக்குப் பின்னால் இருப்பது பாறையா... இருளா? அல்லது மிருகத்தின் உடலா?’ எதுவும் புலப்படவில்லை. இவ்வளவு குழப்பங்கள் வாழ்வில் இதுவரை ஏற்பட்டதில்லை. இயற்கையின் கணிக்க முடியாத கூர்முனையில் முன்னால் நின்றுகொண்டிருந்தான் பாரி. காடு அறியும் காலத்தில்கூட இவ்வளவு பதற்றமான கணத்தைச் சந்தித்ததில்லை. இப்போது ஏற்படும் பதற்றத்துக்குக் காரணம், ஆதினி; எது நடந்தாலும் அவளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.
ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. மஞ்சள் கலந்த வெண்ணொளி பாறை இடுக்கின் ஓரத்தில் நீரோடுவதுபோல் கசிந்து ஓடியது. பாரியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. `இது என்ன உயிரினமா... தாதுக்களின் கசிவா? அல்லது ஏதாவது ஆபத்தின் அடையாளமா?’ ஒன்றும் புரியவில்லை. சட்டென ஆதினியை இழுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், மனம் அதைச் செய்ய மறுத்தது.
ஒளியின் நீளம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதன் நீளம் அதிகமாக அதிகமாக குகை முழுவதும் செவ்வொளி பரவியது. இது என்ன எனப் புரியவேயில்லை. துணிந்து அருகில் போக முடிவெடுத்தான் பாரி. ஆதினியின் இறுகிய பிடியைத் தளர்த்த முயற்சிசெய்யும்போது பரவும் நீளொளியின் முனைப்பகுதி குச்சிபோல மேலெழுந்தது. ஒருகணம் குப்பென வியர்த்தது பாரிக்கு.

அறிவு, ஐயத்தின் புள்ளியைக் கண்டறிந்தது. அந்த ஐயத்தை நோக்கியே சிந்திக்கத் தொடங்கியது. ஏறக்குறைய பாரி அது என்ன என்று கணிக்கத் தொடங்கினான். சற்று முன்னால் நகர்ந்து பார்ப்போம் என்று எண்ணி, அதற்கு இடப்புறமாக மெள்ள நகர்ந்து பார்த்தான். அவன் கணித்தது சரியானது என்று உறுதிப்படுத்திய கணம், காடு அதிர்வதைப்போல கத்த வேண்டும் என்று தோன்றியது. ஆனால், ஆதினி அச்சமடைவாள். அதுவும் இடம் விட்டு விலகி பொந்துக்குள் ஓடிவிடும் என்பதால் மகிழ்வை அடக்க முடியாமல் அடக்கினான்.
அவ்வளவு நேரமும் உறையிலிருந்த ஆயுதத்தைப் பிடித்திருந்த வலக்கையை எடுத்து இப்போது ஆதினியை இறுக அணைத்தான். அவளுக்குக் காரணம் புரியவில்லை. கட்டற்ற மகிழ்வை கசியும் காதல்மொழியில் சொன்னான், ``ஆதினி, நீ பார்த்துக்கொண்டிருப்பது இந்தப் புவியின் பேரதிசயம்.”
அவளுக்குப் புரியவில்லை.
``இராவெரி மரத்தைப் பார்த்த பறம்பு மக்கள் பலர் உண்டு. ஆனால், பல தலைமுறைகளாக மனிதர்கள் பார்த்திராத ஒன்றை இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”
அச்சம் நீங்காத குரலில் பாரியின் கைகளை இழுத்து அணைத்தபடி, ``என்ன அது சொல்” என்றாள்.
``இதுதான் ஒளி உமிழும் வெண்சாரை. நாகர்குடியின் குலதெய்வம். இதைப் பார்த்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள் என்று நாகர்கள் நம்புகிறார்கள்.”
பாரியின் சொல், ஒளியில் மிதந்தபடி இருந்தது. நேரம் ஆக ஆக அந்தக் குகை மிளிரும் வெண்மஞ்சள் ஒளியால் நிரம்பியது. சொற்கள், நாகர்களின் ஆதிவரலாற்றிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன.
ஆதினியின் முகத்தில் பூத்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. பாரியின் முகம், அதைவிடப் பெருமகிழ்வை வெளிப்படுத்தியது. பெருமின்னல் வெட்டி மீண்டும் மழை தொடங்கியது. குகைக்குள் மகிழ்வு எல்லையற்றதாக இருந்தது.
அவர்கள் அதைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தனர். அது பாறையின் ஓரம் அசையாமல் இருந்தது. செதில்களின் அசைவு, சிற்றகலின் நாக்கு அசைவதைப்போல ஒளியை அசைத்துக்கொண்டே இருந்தது. காலம் காலமாக இருக்கும் கதை ஒன்று காட்சியாக மாறிக்கொண்டிருக்கும் அதிசயத்தைக் கண்ணருகே பார்த்துக்கொண்டிருந்தனர். இருவருக்கும் இமைகள் துடிக்கவில்லை. உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் முகம் அசையவில்லை. ஆனாலும் ஒளியின் அளவு கூடுவதை அவர்களால் கவனம்கொள்ள முடியவில்லை.
அதிசயத்தை அளவிட முடியாது. மனம் கரைந்த ஒன்றைக் கணக்கிட முடியாது. அதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஆதினி, சட்டென திடுக்கிட்டுத் துள்ளியெழுந்தாள். என்னவெனப் பார்த்தான் பாரி. ஆதினியின் அருகில் இருந்த பாறையிடுக்கிலிருந்து இன்னொன்று ஊர்ந்து அதை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
பார்த்தபடி பாரியின் வலப்புறம் வந்து பதுங்கி உட்கார்ந்தாள். ஒளி உமிழும் இரு வெண்கோடுகளும் ஒன்றாகச் சந்தித்தன. சிறிது நேரத்தில் ஒன்றை ஒன்று சுற்றிப் பின்னத் தொடங்கின. காற்றுக்கு அசையும் சுடரொலிபோல வெண்ணொளி கூடிக்குறைந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒளிச்சுடர்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பின்னியபடியே இருந்தன.
ஆதினி, பாரியின் கைகளை இறுகப் பற்றினாள். அச்சம் உதிர்ந்த கணத்தில் ஆசை மேலேறத் தொடங்கியது. வெண்ணொளி பின்னுவதுபோல இருளுக்குள் இருந்த உருவங்களும் தயங்கித் தயங்கிப் பின்னத்தொடங்கின. மழையின் ஓசையைப்போல மூச்சுக்காற்றின் ஓசையும் கூடிக்கொண்டே இருந்தது.
எவ்வியூர் மாளிகையில் ஐவகைக் குறிஞ்சிமலர் கொண்டு படுக்கையை ஓர் ஓவியம்போல வரைந்து வைத்திருந்தனர். ஆனால், குறிஞ்சி நிலத்தின் உள்ளங்கைக்குள் காமம் தானே தனக்கான ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தது.

ஆதினி கால்களில் அணிந்திருந்த தண்டை இவ்வளவு ஓசையை எழுப்பியபோதும் பின்னிய நாகங்கள் விலகவில்லை. காமம், விலக முடியாத விளையாட்டு. நாகங்களும் விலகவில்லை, நாகங்கண்டும் விலகவில்லை.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...