
நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 12
வல்லான் வகுத்தது!
##~## |
ஸ்ரீரங்கத்தில் -
சின்னஞ்சிறுவனாய் இருந்த காலத்தில், நான் சைக்கிள் விடுவேன், ஆசை ஆசையாக. அதுவும் அவ்வளவு உயரம் இல்லாத அரை டிக்கெட்டாய் நானிருந்ததால் - குரங்குப் பெடல்தான் எனக்குக் கொடுப்பினையாய்இருந்தது!
சைக்கிளைப் பார்த்தாலே, நான் சந்தோஷிப்பேன். அடடா! அதை ஓட்டும்போது, நானடைந்த அலாதி சுகத்தை - தமிழ் எனக்கு ஓரளவு வசப்பட்ட நிலையிலும் - விவரித்து விளம்பல் எனக்கு ஏலாத காரியம்!

அக்கம்பக்கம் தெரிந்த வீடுகளில் ஒரு சிலர் சைக்கிள் வைத்திருப்பார்கள். அதைக் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி - ஓர் அரை மணி நேரமாவது -
உத்தர வீதி, சித்திரை வீதி சுற்றி வந்தால் தான் எனக்குத் திருப்தி!
எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர முடியாத அளவு, வறியவரல்ல என் தந்தை. வாங்கிக் கொடுத்தால், பயல் பொழுதும் ஊர் சுற்று வான்; படிப்புக் கெடும் என்பதால்தான் -
நான் அழுது அடம்பிடித்து ஆகாத்தியம் பண்ணியும் - என் அம்மா பலமாக சிபாரிசு செய்தும் -
என் அப்பா முருங்கை மரத்தில் ஏறி உட்கார்ந்தவராகவே இருந்தார். இறங்கியபாடில்லை; என் பொருட்டு இரங்கியபாடில்லை!
'பின்னாளில் - நான் சம்பாதிக்கையில் - ஒரு புது சைக்கிள் வாங்க வேண்டும்; அதன் கிராஸ் பாரை வெல்வெட் துணியால் வழவழ வென்று மூட வேண்டும்; சுற்றிவிட்டால் அடிக்கின்ற மணியோடு, டைனமோ லைட்டும், கேரியரும் ஃபிக்ஸ் பண்ணி - செய்ன் கார்டும் போட வேண்டும். அதில் ஏறி ஆசை தீர, நகர் வலம் வர வேண்டும்!’
- என்று எனக்குள் ஓர் ஆசை; அல்ல அல்ல, ஒரு வெறி -
வேர்விடத் தொடங்கியது. வளர்ந்தேன்; சம்பாதித்தேன்; என்ன விந்தை! நான் எண்ணியது ஒன்றாகவும் நாயகன் எண்ணியது வேறாகவும் இருந்தது.
சைக்கிள் வாங்காமல், நேராக எடுத்த எடுப்பிலேயே -
கார் வாங்கும் இடத்தில் என்னை நிறுத்தியது பொருளும் புகழும் நிறைந்த என் சூழல்! சைக்கிள் வாங்கும் ஆசை மனத்திற்குள்ளேயே சமாதி ஆகிவிட்டது!
இவற்றையெல்லாம், யோசிக்குங்கால் - 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ எனும் சொலவடை அர்த்தமுள்ளதாகிறது!
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் ஆரம்ப காலம். நானிருந்த அறைக்கு நேரே என் நண்பன் துருவன் இருந்தான்.
துருவன் ஒரு Percussionist: அதிலும், Perfectionist. துல்லியமாகவும் துலாம்பரமாகவும் இருக்கும் அவனது தாளக்கட்டு.
டோல் வாத்தியம் ஒரு தோல் வாத்தியம்; தோல் வாத்தியம் மட்டுமல்ல; தொல் வாத்தியமும்கூட. அஜந்தா; எல்லோரா; நம்ம பக்கத்து சிற்றன்னவாசல் - இங்கெல்லாம் உள்ள குகைச் சிற்பங்களில் சித்திரங்களில் பார்த்தால் தெரியும் -
ஆடவர் பெண்டிர் டோல் வாசித்தபடி அபிநயிப்பதை!
பல இசையமைப்பாளர்களுக்கு - துருவன் தான் டோல் வாசிப்பான். துருவன் வாசித் தால்தான் அவர்களுக்குப் பிடிக்கும்.

துருவனும் நானும், எதிர்எதிர் அறையில் இருந்தாலும் -
ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், நான் அவன் அறையில்தான் இருப்பேன். நான் சினிமாவில் வருவதற்கு Struggle பண்ணிக்கொண்டிருந்த நேரம் அது.
துருவனைப் பார்க்க வரும் சினிமாக் காரர்கள், துருவனால்தான் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.
வட நாட்டிலிருந்து வரும் இசையமைப்பாளர் திரு.ஸலீல் சவுத்ரி - மலையாள உலகின் புகழ்வாய்ந்த இசையமைப்பாளர்கள் திரு.தேவராஜ் மாஸ்டர்; திரு.அர்ஜுன் மாஸ்டர் -
இவர்களுக்கெல்லாம் துருவன், இன்றியமையாத வாத்தியக்காரன்.
துருவனுக்கு புரொகிராம் சொல்ல - அங்கு வரும்போதுதான் கல்யாணம் எனக்குப் பழக்கம். திரு.கல்யாணம், நாடக உலகச் சக்கரவர்த்தியாய் விளங்கிய திரு.எஸ்.ஜி. கிட்டப்பாவின் சகோதரர் மகன். கல்யாணமும் ஒரு லய வாத்தியக்காரன்தான்.
இத்துணை காலம் திரு.இளையராஜாவிற்குக் காரியதரிசியாக இருந்துவிட்டு - கல்யாணம் காலமானது சமீபத்தில்தான்.
அந்தக் கல்யாணத்தோடு, துருவனைப் பார்க்க இன்னொருவர், வருவதுண்டு.
அவர் பேர் திரு.சேகர். குடியாத்தம்அவரது சொந்த ஊர். குட்டையாக - சுருள் முடியோடு - எப்பவும் சிரித்த முகத்தோடு, விறுவிறுவென்று நடை பயில்பவராக இருந்த சேகர் -
எனக்கு அறிமுகமான நாளில், நான் பட உலகில் பிரபலமாகத் தொடங்கிவிட்டேன்.

திரு.சேகர் சில மலையாளப் படங்க ளுக்கு இசையமைத்திருந்தாலும் அங்குள்ள இசையமைப்பாளர்களுக்கு Conductor ஆகவும் இருந்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் பின்னாளில் திரு.வி.குமார் கூடவும் பணியாற்றி இருக்கிறார், composing நேரத்தில் - உடன் ஆர்மோனியம் வாசிப்பவராக!
திரு.சேகர், வித்யோதயா காலனியில் குடியிருந்ததாக ஞாபகம். 'அருண் ராகவன்’ என்று இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான திரு.அருண் அங்கு இருந்தார்.
நான், அருணைச் சந்திக்கப் போகும் போதெல்லாம் திரு.சேகரையும் சந்திக்க நேரும். அப்போது வெளிவந்த என் பாடல்களைப்பற்றிப் பேசுவார். சேகர், நல்ல தமிழ் ஆர்வலர்.
இந்த நல்ல மனிதரைப்பற்றிய ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது!
நான் எம்.டி.கே. 1233 - என்று ஒரு ஹெரால்டு கார் வைத்திருந்தேன். அந்த சமயத்தில் வேறொரு கார் வாங்கினால் தேவலை எனும் எண்ணம் எனக்கிருந்தது.
'ஆலயமணி’ முதலிய படங்களை இயக்கிய அந்நாளைய பிரபல இயக்குநர் திரு.கே.சங்கரின், ஆஸ்தான ஒளிப்பதிவாளர் திரு.தம்பு அவர்கள். அதுபோல் ஆஸ்தான Still Photographer திரு.சாரதி அவர்கள்.
நான் நிறைய சங்கர் படங்கள் பாட்டு எழுதி வந்ததால், இவர்கள் எனக்கு மிக நெருக்கம்.
திரு.தம்பு, அழகான ஓர் ஆஸ்டின் கார் வைத்திருந்தார். அதை அவர் எனக்குத் தரத் தயாராக இருந்தார்; இதை சாரதிதான் எனக்குச் சொன்னார்.
அந்த சமயத்தில் திரு.சேகர் என்னோடு ஒரு கம்போஸிங்கில் இருந்தவர் என்னிடம், 'அண்ணே! சித்ராலயா கோபு - தன்னுடைய ஸ்கூட்டரைக் கொடுத்துவிடப் போவதாக, யாரோ சொன்னாங்க; அதெ எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார்.
உடனே நான் சொன்னேன், 'சேகர்! ஸ்கூட்டர் எதுக்குய்யா? ஒரு ஆஸ்டின் காரே விலைக்கு வருது! நான் உமக்கு வாங்கித் தரேன். எனக்குத் தெரிஞ்ச செட்டியார்கிட்ட - H.P போடலாம்; குறைச்ச மாசத் தவணைதான்; உம்மாலே ஈஸியா கட்ட முடியும்!’ என்று.
'காரு, மாசத் தவணை - இதெல்லாம் இப்ப நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்துக்காது! நீங்க, ஸ்கூட்டரைப் பேசி முடிச்சுக் கொடுங்க’ என்றார் சேகர்.
அன்றைய சூழ்நிலையில் ஆஸ்டின் கார் - அவருக்குப் பிடித்திருந்த போதும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று இருந்துவிட்டார் நண்பர் சேகர்.
பின்னாளில் அவர் வேறு கார் வாங்கியிருக்கலாம். அது எனக்கு சரியாக நினைவிலில்லை. ஆனால், அன்று, அவர் விரும்பிய போதும் -
கேமராமேன் தம்புவின் ஆஸ்டின் காரை வாங்க இயலாது போயிற்று!
அன்று -
அவரால் வாங்க இயலவில்லை
ஆஸ்டின் கார்;
இன்று -
அவர் மகன் வாங்கிவிட்டான் ஆஸ்கார்!
அதுவும் -
ஒன்றல்ல; இரண்டு!
இதுதான்
வல்லான் வகுத்தது!
- சுழலும்
ஒவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்