Published:Updated:

வெள்ளி நிலம் - 26

வெள்ளி நிலம் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 26

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அப்போது, ஒரு மம்மி கிடைக்கிறது. அதைக் கடத்திச்செல்ல ஒரு கும்பல் வருகிறது. அதைப் பற்றி துப்புதுலக்க, காவலர் பாண்டியன் தலைமையில் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் சிறுவன் நோர்பாவும் களம் இறங்குகிறார்கள். அந்தக் கடத்தல் கும்பல் அனுப்பும் செய்தியை வழிமறித்து, அதன் ரகசியத்தை ஓரளவுக்கு யூகிக்கும் நரேந்திர பிஸ்வாஸ், அதை முழுமையாகக் கண்டுபிடிக்க, ஜாக்கோங் மடாலயம் சென்று, அங்குள்ள மூத்த புத்த பிட்சுவைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார்கள். அங்கு அப்போது நோர்பா ஒருவரைப் பார்த்து அவர்தான் மம்மியைக் கடத்த வந்தவர் என்கிறான்... 

வெள்ளி நிலம் - 26

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சற்றுத் தயங்க, அந்த மனிதர், “தயங்கவேண்டியதில்லை. இந்த மடாலயம் முழுமையாகவே என் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களை எதிர்பார்த்து இங்கே நான் காத்திருந்தேன்.” என்றார். “என் பெயர் கர்னல் லீ பெங் ஸூ. நான் சீன உளவுத்துறையைச் சேர்ந்தவன்.”

பாண்டியன், “ஆம், தெரியும்” என்றான்.

“என்னை இவன் படமாக வரைந்தது எனக்குத் தெரியும். அதைக் கண்டுதான் நீங்கள் எச்சரிக்கை அடைந்தீர்கள் என்றும் தெரியும். அது, நான் செய்த மிகச்சிறிய பிழை. ஆனால், அதுவும் நன்மைக்கே என்று பிறகு நினைத்தேன். வாருங்கள்.”

அவர்களை அவர் அழைத்துச்சென்றார். நாக்போ அசையாமல் நின்றது. நோர்பா “வா” என்று அதை அழைத்தான்.

‘‘இவர் கெட்டவர். இவரை நான் கொல்வேன்” என்றது நாக்போ.

“என்ன சொல்கிறது?” என்றார் லீ பெங் ஸூ.

“நீங்கள் அதன் உரிமையாளரைக் கொன்றீர்கள் என்கிறது.”

“நான் கொல்லவில்லை. அங்கே புத்தபிட்சு தோற்றத்தில் இருப்பவன் கொன்றான். அவனை நான் அனுப்பினேன். எவருக்கும் தெரியாமல் அந்த மம்மியை எடுத்துவரச் சொன்னேன். அவன் அவசரப்பட்டுவிட்டான்” என்றார் லீ பெங் ஸூ.

அவர்கள் உள்ளே சென்றனர். லீ பெங் ஸூ “அழைத்து வந்துவிட்டேன்” என்று வெளியே நின்று சீன மொழியில் சொன்னார்.

“அவர்களை உள்ளே அனுப்பு” என்று குரல் கேட்டது.

“இதே குரல்தான்! அன்று காரில் இருந்தவர் இவர்தான்” என்றான் நோர்பா.

‘‘அவர்தான் எங்கள் தலைவர். ஜெனரல் பான் ஸூக்யுன் (Ban Xueqin) உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.”

“அவர் உங்களைவிடப் பெரிய வில்லனா?” என்றான் பாண்டியன்.

வெள்ளி நிலம் - 26

“அல்ல, அவர் இந்தக் கதையையே நிகழ்த்துபவர்” என்றார் லீ பெங் ஸூ.

அவர்கள் உள்ளே சென்றனர். அங்கே, தரையில் இடப்பட்ட கம்பளி மெத்தையாலான இருக்கையில், புத்த பிட்சு ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவர்கள் தயங்கியதைக் கண்ட லீ பெங் ஸூ, “குழப்பம் வேண்டாம். அவர் சீன ராணுவ உயரதிகாரி. இங்கே புத்தபிட்சுவின் வடிவில் இருக்கிறார்” என்றார், “ஜாம் யாங் என்ற பெயரில் ஜோக்காங் மடாலயத்தில் அவர் தங்கியிருந்தார்.”

பாண்டியன், “நல்ல வேடப்பொருத்தம்” என்றான்.

பான் ஸுக்யுன், “வாருங்கள், அமர்ந்துகொள்ளுங்கள்” என்றார்.

அவர்கள் அமர்ந்தனர். பாண்டியன், அந்தச் சூழலைக் கூர்ந்து கவனித்தான். அது ஒரு சாதாரண மடாலயத்தின் அறைபோலத்தான் இருந்தது. ஆனால், அங்கே நவீன ஒலிப்பதிவுக்கருவிகள் இருப்பதை அவன் உணர்ந்துகொண்டான்.

பான் ஸுக்யுன், “உங்கள் பயணம் முடிந்துவிட்டது” என்றார்.

அந்தப் புன்னகையைக் கண்டதும் நோர்பாவுக்கு அச்சமாக இருந்தது.

பான் புன்னகையுடன் டாக்டரிடம், “சீனாவில் வாத்துகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் தந்திரம் ஒன்று உண்டு. கேட்டிருப்பீர்கள், வாத்துகளின் கழுத்தை இறுக்கிக்கட்டி, நீருக்குள் விடுவார்கள். அவை, மீனைத் தேடிச்சென்று கவ்வும். ஆனால், கழுத்து கட்டப்பட்டிருப்பதால் விழுங்க முடியாது. வாத்தின் கால்களில் நீண்ட கயிற்றைக் கட்டியிருப்பார்கள். அக்கயிற்றைப் பிடித்து இழுத்து, வாத்தை எடுப்பார்கள். அதன் வாயிலிருந்து மீனை எடுத்து, தங்கள் கூடையில் போட்டுக்கொள்வார்கள்” என்றார்.

“ஆம் தெரியும்” என்றான் பாண்டியன்.

“அதேதான் எங்கள் உத்தி. நீங்கள் எங்களைத் தேடுவதை அறிந்துகொண்டோம். நாங்கள் தேடுவது உங்கள் நாட்டில்தான் இருக்கிறது. அதை எங்களால் தேடிக் கண்டடைய முடியாது. நீங்களே அதைக் கண்டுபிடிக்கட்டும் என விட்டுவிட்டோம். நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் தொடர்ந்து வந்தோம். எங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்களே கண்டுபிடித்துத் தந்தீர்கள். நன்றி” என்றார் பான்.

பாண்டியன், “இன்னும் ஆட்டம் முடியவில்லை” என்றான்.

“பார்ப்போம்” என பான் புன்னகைத்தார். அதைக் கண்டு லீ உரக்கச் சிரித்தார்.

“நாங்கள் இங்கிருந்து இந்தியா திரும்பமுடியாது. ஆகவே, இப்போதேனும் இதெல்லாம் என்ன என்று எங்களிடம் சொல்லமுடியுமா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

 “இருங்கள் காட்டுகிறேன்” என்று பான் ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டினார். அது ஒரு சிலை. மம்மி அமர்ந்திருந்த அதேவடிவில் அது அமர்ந்திருந்தது.

“இது என்ன சிலை?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“இது சிலை அல்ல. இது ஒரு மம்மி” என்றார் பான். “இறந்த உடலுக்கு மேலே வெள்ளைக் களிமண்ணைப் பூசிச் சிலையாக ஆக்கியிருக்கிறார்கள்.” 

“எங்கே கிடைத்தது?” என்றார் டாக்டர்.

வெள்ளி நிலம் - 26

“இந்த அரசர்களின் சமவெளியில் ஒன்பது கல்லறைமேடுகள் உள்ளன என்று தெரியும் அல்லவா? டுமுலஸ் (Tumulus) எனப்படும் இத்தகைய கல்லறைமேடுகள், உலகின் பல பகுதிகளில் உள்ளன. ஐரோப்பாவில்கூட உள்ளன. புராதனமான நாகரிகங்களில் உள்ள வழக்கம் இது. இந்த மேடுகளில் இப்போது எட்டுதான் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் ஒன்று இடிந்துவிட்டது. அதைச் சுற்றி அகழ்வுசெய்து ஆராய்ந்துகொண்டிருந்தோம். அப்போது, இந்தச் சிலை கிடைத்தது”

“இங்கே அருங்காட்சியகத்தில் இது இருந்தது. 10 ஆண்டுக்காலம் இதைச் சிலை என்றுதான் நினைத்தார்கள். அதன்பின்னர், இதை இடமாற்றம் செய்தபோது கால்கட்டைவிரல் உடைந்தது. உள்ளே எலும்பு இருப்பதை அப்போதுதான் கண்டுபிடித்தனர். இது ஒரு மம்மி என்று கேளா ஒலியைக்கொண்டு ஆராய்ந்து கண்டுபிடித்தனர்.”

டாக்டர் அந்தச் சிலையைப் பார்த்துவிட்டு, “நீங்கள் சொன்னபின்னர்தான் எலும்புகள் தெரிகின்றன” என்றார்.

“இதற்குள் இருப்பது முழுமையான மானுட உடல் அல்ல; எலும்புக்கூடுதான். உடலைக் கழுகுகளுக்கு இரையாக்கிய பின்பு. எலும்புக்கூட்டை எடுத்து இதைச் செய்திருக்கிறார்கள்” என்றார் பான்.

“இதேபோன்ற வேறு மம்மிகள் கிடைத்தனவா?” என்று டாக்டர் கேட்டார்.

“இல்லை. 13 ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தோம். இதை நாங்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால், இதன் கையில் ஓர் எழுத்து இருந்தது. முதலில் ஏதோ கீறல் என நினைத்தார்கள். அதன்பிறகுதான் அது எழுத்து என்று தெரிந்தது. அந்த எழுத்தின் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை.”

“அப்போதுதான்,  ஸ்கிஜின்போ மடாலயத்தில் மம்மி கிடைத்தது. அந்தச் செய்தியை நீங்கள் அறிந்தீர்கள்” என்றார் டாக்டர்.

“ஆமாம். இவர் சீனாவின் உளவுத்துறை நிபுணர். சீனா, திபெத் பற்றி பேசிக்கொள்பவர்களின் உரையாடல்களை எங்கள் உளவுத்துறை இடைமறித்துக் கேட்கும். ஸ்கிஜின்போ மம்மியைப் பற்றி அவர்கள் பேசியதை இவர் என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்” என்றார் பான்.
நோர்பாவுக்கு அனைத்தும் புரியத் தொடங்கியது.

“ஸ்கிஜின்போ மம்மியின் உடலில் இன்னொரு எழுத்து இருந்தது. இந்த இரண்டு எழுத்துக்களையும் இணைத்தால், ஒரு சொற்றொடராக மாறியது. அதற்கு ஏதோ பொருள் இருக்கிறது என்று தெரிந்தது. ஆகவே, அதைக் கொண்டுவர ஆணையிட்டேன். இவருடன் நானே இந்தியாவுக்குள் வந்தேன். ஸ்பிடி சமவெளியில் தங்கி, அந்த மம்மியைத் திருட முயன்றோம். சத்தமே இல்லாமல் அனைத்தும் முடிந்திருக்கும். இந்த நாய் எல்லாவற்றையும் கெடுத்தது.”

நாக்போ, “நான் உன்னைக் கடிப்பேன். நீ கெட்டவன்” என்று சொன்னது.

நோர்பா, “சும்மா இரு” என்றான்.

பான், “நாய் முனகுகிறது” என்றார். பின்பு பாண்டியனிடம், “எங்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொண்டதும் எனக்கு ஓர் எண்ணம் வந்தது. இனித் தேடலை நீங்களே செய்யட்டும் என்று விட்டுவிட்டு நாங்கள் பின்னால் வந்தோம்” என்றார்.

“நீங்கள், எங்கள் பின்னால் இருக்கலாம் என நான் சந்தேகப்பட்டேன். ஆனால், எங்களுக்கும் வேறுவழியில்லை” என்றான் பாண்டியன்.

“முதலில் நீங்கள் டாக்டரைத் தேடி லடாக்குக்கு வந்தீர்கள். அவரிடமிருந்து தொன்மையான எழுத்துகள்கொண்ட திரைச்சீலைகள் எங்களுக்குக் கிடைத்தன. பின்னர், நாங்கள் உங்களைத் தொடர்ந்து பூட்டானுக்கு வந்தோம். பூட்டானில் மிலரேபாவின் குகையில் எங்களுக்குத் தேவையான முழுத்தகவலும் கிடைத்துவிட்டது” என்றார் பான்.

பான், ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டினார். அதில், அவர்களிடமிருந்த மம்மியிலிருந்த எழுத்துக்கள் இருந்தன. அதன் பின்னர், ஸ்கிஜின்போ ஊரில் கிடைத்த மம்மியின் உடலில் இருந்த எழுத்துக்களை வைத்தார். அந்த எழுத்துக்களுடன் திக்ஸே மடாலயத்தில் இருந்த பழைமையான திரைச்சீலை ஓவியங்களில் இருந்த எழுத்துக்களைச் சேர்த்துவைத்தார். கடைசியாக, பூட்டானில் குகையில் கிடைத்த எழுத்துக்களைச் சேர்த்துவைத்தார். அவ்வெழுத்துக்கள் இணைந்தபோது, ஒரு முழுமையான வரி கிடைத்தது.

“இதைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். இவற்றில் எது முதலில் என்று தெரியவில்லை. ஆகவே, பலவகைகளில் அடுக்கிப்பார்த்தோம்” என்றபடி பான், அந்த வரிசையை வேறுவகையில் மாற்றிவைத்தார். “இப்போது நாங்கள் தேடிக்கொண்டிருந்த வரி கிடைத்துவிட்டது” என்றார்.

வெள்ளி நிலம் - 26

“என்ன அது?” என்றான் பாண்டியன்.

 “அதை நானே காட்டுகிறேன். வாருங்கள்” என்று பான் எழுந்தார்.

“இப்போதா?”. என்றான் பாண்டியன் திகைப்புடன்.

“இதுதான் சரியான நேரம். கடுமையாகப் பனி பொழிகிறது. இருட்டும் உள்ளது. நம்மை, இந்தியா அனுப்பியிருக்கும் உளவுபார்க்கும் செயற்கைக்கோள்களில் உள்ள கேமராக்கள் அடையாளம் காணமுடியாது.”

பாண்டியன் பெருமூச்சுவிட்டான்.

பான் எழுந்து, குளிருக்கான ஆடைகளைப் போட்டுக்கொண்டார். “பூட்டானில் உங்களைக் கொல்ல ஆணையிட்டேன். தப்பித்துவிட்டீர்கள். அங்கிருந்து எங்களைத் துரத்திக்கொண்டு திபெத்துக்கே வந்தீர்கள். நீங்கள் விமானமிறங்கியதுமே நான் அடையாளம் கண்டுகொண்டேன். ஜம்பா உங்கள் ஒற்றன் அல்ல. நீங்கள் எங்களை வேவுபார்க்க அவனை அனுப்பினீர்கள். அவனை மேலும் பணம் கொடுத்து எங்கள் ஒற்றனாக ஆக்கிக் கொண்டோம். நீங்கள் வருவதை அவன் உடனே எங்களுக்குத் தெரிவித்துவிட்டான்” என்றார்.

லீ பெங் ஸூ அவர்களிடம், “கிளம்புங்கள். தப்ப முயற்சி செய்யவேண்டாம். நான் துப்பாக்கிவைத்திருக்கிறேன். உங்களில் இருவரைச் சுட என்னால் முடியும். பான் என்னைவிடச் சிறந்த துப்பாக்கிப் பயிற்சி கொண்டவர்” என்றார்.

அவர்களை வெளியே கொண்டுசென்றார்கள். அங்கே ஒரு ஜீப் நின்றது. பனியில் பயணம்செய்வதற்குரியது. அதில், அவர்களை ஏறச்சொன்னார்கள்

“நானும் வரவேண்டுமா? நல்ல பனியாக உள்ளதே... நான் இங்கே பன்றியிறைச்சி தின்றுவிட்டுப் படுத்துக்கொள்கிறேனே” என்றது நாக்போ.

“வாயைமூடு... நீ ரெட்ரீவர் இன நாய்... பனியில் மூழ்குபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே கனடா நாட்டில் உன்னை உருவாக்கியிருக்கிறார்கள்” என்றான் நோர்பா.

“யார், என்னையா? என்னைப் பன்றியிறைச்சி தின்னத்தான் உருவாக்கினார்கள்.”

“வருகிறாயா இல்லையா?” என்று நோர்பா அதட்டினான்.

‘‘வாழவிட மாட்டார்களே” என்றபடி நாக்போவும் அந்த வண்டியில் ஏறிக்கொண்டது.

அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கடுமையான குளிர் இருந்தது. ஜீப்பின் முகப்பு வெளிச்சம் சுவரில் படுவதுபோலப் பனிப்பொழிவில் பட்டு நின்றது.

“நாம் எங்கே செல்கிறோம்?” என்று பாண்டியன் இந்தியில் கேட்டான்.

“அரசர்களின் சமவெளிக்கு என நினைக்கிறேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 26

மொய்தாம்கள்

டாய்-அகோம் என்னும் அரசகுலம், 12-ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அஸ்ஸாமுக்கு வந்து, அந்நிலத்தைக் கைப்பற்றியது. அவர்கள் 400 ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். அவர்களின் மன்னர்களைப் புதைத்த பின், அவர்களின் கல்லறைக்கு மேல்  மிகப்பெரிய மண்குன்றுகளை உருவாக்கினர். அவை, மொய்தாம் (Moidam) எனப்படுகின்றன. பிரம்மபுத்ரா நதிக்கரையில் பட்கய் குன்றின் அடிவாரத்தில் இவை அமைந்துள்ளன. 

செங்கல்லால் ஆன கல்லறைகள், அந்த மண்குன்றுகளுக்குள் உள்ளன. அங்கே செல்ல, செங்கல்லால் ஆன சுரங்க வழி உண்டு. உள்ளே அடக்கம் செய்யப்படும் அரசர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் அங்கே வைக்கப்பட்டிருக்கும். இவற்றை இந்தியாவில் உள்ள பிரமிடுகள் என்று சொல்லலாம்.

“இந்த மம்மிகள், ஷென்ரப் மிவோச்சே என்னும் தெய்வத்தின் வடிவில் அமைந்துள்ளன.”