சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

ஒரு பேய்க் கதை சொல்லட்டுமா?

ஒரு பேய்க் கதை சொல்லட்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு பேய்க் கதை சொல்லட்டுமா?

ஓவியம்: அஷோக்

ரு கதை சொல்லட்டுமா ஃப்ரெண்ட்ஸ்? முதலிலேயே சொல்லிடறேன், இது பேய்க் கதை. தைரியம் உள்ளவங்க மட்டும் தொடர்ந்து படிங்க. கடைசியில் சில கேள்விகள் கேட்பேன்.

அது ஓர் அழகான கிராமம். எட்டாம் வகுப்பு படிக்கும் திவ்யா, லீவு விடும்போதெல்லாம் அந்தக் கிராமத்துக்கு வந்துவிடுவாள். அவளின் பாட்டியும் தாத்தாவும் அங்கேதான் இருக்காங்க. இந்தமுறை காலாண்டு லீவுக்கு அவளுடைய நண்பர்களான பிரியா, விஜய், விக்னேஷ் ஆகியோரையும் கூட்டிட்டு வந்திருந்தாள். மூன்று நாள்கள் அங்கே இருக்கிறதா திட்டம்.

‘‘பாட்டி, நாங்க ஆத்தங்கரைக்குப்போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு அப்படியே குளிச்சிட்டு வந்திடுறோம்’’ என்றபடி வந்து நின்றாள் திவ்யா.

ஒரு பேய்க் கதை சொல்லட்டுமா?

‘‘சரி, ஜாக்கிரதை. அந்தப் பங்களா பக்கம் கூட்டிட்டுப் போயிடாதே திவ்யா. உன் தாத்தா வர்றதுக்குள்ளே சீக்கிரம் வந்துடணும். இல்லைனா, என்னைத் திட்டுவார்’’ என்று பாட்டி சொல்லி முடிக்கும் முன்பு, அவர்கள் வாசலைத் தொட்டிருந்தார்கள்.

அவர்கள் நான்கு பேரும் ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், ‘‘திவ்யா, பாட்டி என்னமோ பங்களா பற்றிச் சொன்னாங்களே என்ன அது?’’ என்று கேட்டான் விக்னேஷ்.

‘‘ஓ... அதுவா? போற வழியிலே ஒரு பங்களா இருக்கு. இந்த ஊரிலேயே ரொம்பப் பணக்காரர் வீட்டுப் பங்களா. ஒருமுறை திருவிழா வந்தப்போ, அவங்க சொந்தக்காரங்க எல்லோரும் வந்திருந்தாங்க. அப்போ, அவங்க வீட்டுல கேஸ் சிலிண்டர் வெடிச்சு பங்களாவுக்குள்ளே இருந்த எல்லோரும் செத்துட்டாங்க. அன்னைலேர்ந்து அங்கே பேய் நடமாடுறதா பேச்சு இருக்கு’’ என்றாள் திவ்யா.

‘‘பேயா... உன் ஊரைப் பற்றி எவ்வளவோ சொன்ன நீ, இதுபற்றி ஏன் ஒருமுறைகூட சொன்னதில்லே?’’ எனக் கேட்டாள் பிரியா.

‘‘ஏன்னா... நான் அதை நம்பறதில்லே. இல்லாத ஒண்ணை பத்தி தேவையில்லாம எதுக்குப் பேசணும். அதோ... அதுதான் அந்தப் பங்களா’’ என்று சுட்டிக்காட்டினாள் திவ்யா.

சினிமாவில் காட்டுவதுபோல பெரிய இரும்பு வாசல்கதவுக்கு உள்ளே இருந்தது அந்தப் பங்களா.

‘‘இப்போ, அங்கே யாரும் இல்லியா?’’ எனக் கேட்டான் விஜய்.

ஒரு பேய்க் கதை சொல்லட்டுமா?

‘‘ம்ஹூம்... அந்தச் சொத்தை யார் பிரிச்சுக்கிறதுனு சொந்தக்காரங்களுக்குள்ளே நடந்த தகராறில் அரசாங்கம் சீல் வெச்சிடுச்சு. கோர்ட்டில் கேஸ் இருக்கு. அது முடியற வரைக்கும் யாரும் பயன்படுத்த முடியாது’’ என்றாள் திவ்யா.

மூன்று பேரும் அந்தப் பங்களாவைக் கொஞ்சம் பயத்துடன் பார்த்துக்கொண்டே நடந்தார்கள். சற்று நேரத்தில் ஆற்றங்கரைக்கு வந்துவிட்டார்கள். சலலத்து ஓடும் ஆறு... சில்லென வீசும் காற்று... தூரத்தில் தெரியும் மலை... அங்கே மேயும் ஆடுகள் என அந்த இடத்தைப் பார்த்ததுமே நண்பர்கள் உற்சாகமாகிவிட்டார்கள்.

‘ஹேய்ய்ய்ய்’ எனக் கூச்சல் போட்டவாறு ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து ஊஞ்சல் ஆடினார்கள். ஓடிப் பிடித்து விளையாடினார்கள். இடுப்பு அளவே ஆழம் இருந்த ஆற்றில் இறங்கி, ஒருவர்மீது இன்னொருவர் நீரை இரைத்து விளையாடினார்கள். மூழ்கி மூழ்கி எழுந்தார்கள்.

பாட்டி சொன்னதுபோல அங்கே சென்ற சற்று நேரத்தில் இருட்டிவிட்டது. நிலாவும் மேகங்களால் மூடப்பட்டிருந்ததால், இருள் வேகமாகச் சூழ்ந்து தண்ணீரைக் கறுப்பாகக் காட்டியது.

‘‘திவ்யா, இப்போ போய்ட்டு காலையில் வரலாம். இருட்டுல ஒண்ணுமே தெரியலை’’ என்றான் விக்னேஷ்.

‘‘சரி’’ என்று திவ்யா சொன்னதும் அவர்கள் ஆற்றைவிட்டு மேலே வந்தார்கள். அப்போதுதான், ஒரு பாறைமீது அமர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள்.

‘‘ஹேய் யார் நீ?’’ எனக் கேட்டாள் திவ்யா.

‘‘என் பேரு கிரி’’ என்றான் அந்தச் சிறுவன். பாறையிலிருந்து கீழே இறங்கினான்.

‘‘இந்த ஊரா நீ? உன்னை நான் பார்த்ததே இல்லியே’’ எனக் கேட்டாள் திவ்யா.

‘‘இது தாத்தா ஊர். ஒரு விருந்துக்கு வந்தேன். இதோ விருந்துக்காக சுட்ட பணியாரம். சாப்பிடுங்க” என்று ஒரு தூக்குச் சட்டியில் இருந்த பணியாரத்தை நீட்டினான்.

இவர்கள் தயக்கத்துடன் எடுத்துக்கொண்டார்கள். நடந்துகொண்டே சாப்பிட்டார்கள். ரொம்பவும் சுவையாக இருந்தது அந்தப் பணியாரம்.

‘‘நல்லா இருக்கில்லே. எல்லாமே என் பாட்டியும் அத்தையும் செஞ்சது. மத்தவங்களுக்கு சமைச்சுப்போட்டு, அவங்க வயிறாரச் சாப்பிடுறதைப் பார்க்கிறதே தனி சுகம்னு பாட்டி அடிக்கடி சொல்லும். ஊரில் இருக்கிறவங்களையும் அடிக்கடி கூப்பிட்டு விருந்து வைப்பாங்க. நீங்களும் வந்து கலந்துக்கறீங்களா?’’ என்றான் கிரி.

‘‘நாங்க வீட்டுக்குப் போகணுமே. பாட்டி, தாத்தாகிட்டச் சொல்லி, நாளைக்கு வேணும்னா வறோம்’’ என்றாள் திவ்யா.

ஒரு பேய்க் கதை சொல்லட்டுமா?

‘‘சரி, நான் கிளம்பறேன்’’ என்றபடி அந்தச் சிறுவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

‘‘திவ்யா, அவன் மறுபடியும் அந்தப் பக்கமே போறானே. ஆத்துக்கு அந்தப் பக்கம் வீடு இருக்கா?’’ எனக் கேட்டாள் பிரியா.

‘‘தெரியலையே’’ என்றாள் திவ்யா.

அவர்கள் நான்கு பேரும் வீட்டுக்கு வந்ததும், ‘‘சரி, குளிச்சு விளையாடியதில் நல்லா பசி எடுக்கும். சாப்பிட வாங்க’’ என்றார் பாட்டி.

‘‘மெதுவாவே சாப்பிடுறோம் பாட்டி. ஆத்தங்கரையில் பணியாரம் சாப்பிட்டோம்’’ என்றான் விஜய்.

‘‘அங்கே யாரு பணியாரம் விக்கிறது?’’ எனக் கேட்டார் தாத்தா.

திவ்யா நடந்ததைச் சொல்லி, ‘‘ஆமா தாத்தா அந்தப் பக்கம் யாருடைய வீடு இருக்கு?’’ என்று கேட்டாள்.

‘‘நீங்க சொல்றதைப் பார்த்தால், அந்தப் பங்களாவின் பின்பக்கம் போறதுக்கான பாதை அது. அந்த பங்களா பெரியவர்தான் எல்லோரையும் கூப்பிட்டு விருந்து வைப்பார். அந்த இடத்தில் எப்படிப் பையன் வந்தான். திருவிழா சமயத்தில்தான் விருந்து நடக்கும். இப்போ யாரு விருந்து நடத்துறது? இதுக்குத்தான் தனியா போக வேணாம்னு சொன்னேன்’’ என்று பதறினார் பாட்டி.

நான்கு பேரும் திகைத்துப்போனார்கள். திவ்யாவுக்கு முதல் முறையாக பயம் வந்தது.

‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்லே. ஊருக்குள்ளே இருக்கிற ஏதோ ஒரு பையனாதான் இருப்பான். இன்னும் கொஞ்ச நேரம் ஆத்தங்கரையில் இருந்துட்டுப் போகலாம்னு திரும்பிப் போயிருப்பான். சும்மா பசங்களை பயமுறுத்தாதே. நீங்க டிரெஸ் மாத்திட்டு வாங்க சாப்பிடலாம்’’ என்ற தாத்தா, பாட்டியை அடக்கினார்.

நான்கு பேரும் கொஞ்சம் குழப்பத்துடனே அறைக்குள் சென்றார்கள். அப்போது பாட்டியும் தாத்தாவும் ஏதோ கிசுகிசுப்பாகப்  பேசிக்கொள்வதுபோல தோன்றியது.

அவ்வளவுதான் ஃப்ரெண்ட்ஸ்... கதை முடிஞ்சு போச்சு. இப்போ கேள்விகள். தாத்தா ஏன் பாட்டியை அவ்வளவு அவசரமா அடக்கினார்? அவர் சொன்ன மாதிரி அந்தப் பையன் மறுபடியும் ஆத்தங்கரைக்குத்தான் போனானா? மத்தவங்க சொல்ற மாதிரி அந்தப் பங்களாவில் பேய்கள் இருக்கா? நிறைவேறாத ஆசையோடு செத்தவங்கதான் பேயா வருவாங்கன்னா, அவங்களின் நிறைவேறதா ஆசை விருந்து வைக்கிறதுதானே? பேய்கள் என்றாலே கெட்டதுதான் செய்யணுமா என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வேற எந்தப் பக்கத்திலும் இல்லை ஃப்ரெண்ட்ஸ். நீங்க சொல்ற பதில் எதுவா இருந்தாலும் அதுதான் கரெக்ட்!