மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன்

பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன்

பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன்

பேராசிரியர் நன்னன், பெரியாரின் பெருந்தொண்டர். காலம் முழுவதும் அவருடைய கொள்கைகளைத் தன் எழுத்து, பேச்சு மூலம் பரப்பியவர். வாழ்ந்த நாள்களின் அளவிலும் பேராசிரியர் நன்னன் பெரியாரையே பின்பற்றியுள்ளார்  என்பது பெரும் வியப்பாக உள்ளது.

ஆம், தந்தை பெரியார் 17.09.1879-ல் பிறந்து, 24.12.1973-ல் மறைந்தார். அவர் வாழ்ந்த காலம், 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாள்கள்.
 
பேராசிரியர் நன்னன், 30.07.1922-ல் பிறந்து, 07.11.2017 அன்று மறைந்தார். வாழ்ந்த காலம், 95 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாள்கள். இந்த ஒருங்கிணைவு நம்மை மலைக்கவைக்கிறது.

இது குறித்து, ஒரு காணொலியிலும் பேராசிரியர் நன்னன் கூறியிருப்பதைப் பார்க்க முடிந்தது. சற்று உடல்நலமின்றிப் படுக்கையில் இருந்தபோது, “இனி நான் மறைந்தாலும், ‘அந்தக் கிழவன்’ வயசுக்கு இந்தக் கிழவனும் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறான் என்றுதானே உலகம் சொல்லும்” என்று சொல்லிச் சிரிக்கிறார் நன்னன். பெரியார் வயதுக்கு நாமும் வாழ்ந்துவிட்டோம் என்பது அவருக்குச் சாவிலும் கிடைத்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் என்னைத் தொலைபேசியில் அழைத்த ஐயா நன்னன், “வரும் ஜூலை 30 அன்று நடக்கவிருக்கும் என் பிறந்த நாள் விழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது நான் உள்பட எங்கள் குடும்பத்தார் அனைவரின் விருப்பம். வந்துவிடுங்கள்” என்றார். எனக்குப் பெருமகிழ்ச்சி. இருப்பினும், அந்த நாளில் நான் வெளிநாடு செல்லக்கூடும் என்ற எண்ணம் இருந்தது. அதை ஐயாவிடம் சொன்னேன். சற்றும் தயங்காமல் அடுத்த நொடி அவர் என்ன சொன்னார் தெரியுமா, “அதற்கென்ன, அடுத்த வருடம் ஜூலை 30 -ல், அடுத்த பிறந்த நாள் விழாவிற்கு வந்துவிடுங்கள்” என்றார்.

பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன்

அந்தத் தன்னம்பிக்கை என்னை மலைக்கச் செய்தது. அவர் சொன்னபடியே, அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை அடையாறு முத்தமிழ் மன்றத்தில் நடந்தபோது நான் அதில் கலந்துகொண்டேன். அது எனக்கு வாய்த்த பெருமை!

1971 தொடங்கி, ஐயாவுடன் எனக்கு அறிமுகம் உண்டு. என் நண்பர்கள் பொன். செல்வகணபதி,  செம்பை சேவியர், மறைந்த து.மூர்த்தி உள்ளிட்ட பலர், 1970-களின் தொடக்கத்தில் அவருடைய மாணவர்கள். அவர்கள் மூலமாகவே ஐயாவுக்கு நான் அறிமுகமானேன். நான் நேரடியாக அவரிடம் வகுப்பில் பயின்றதில்லை என்றாலும், அவரின் நூல்கள் வழியும், உரைகள் வழியும் பயின்ற அவருடைய மாணவன்தான் நானும்!

40 ஆண்டுகளுக்கு முன்னர், நான் சென்னை, எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரியில் ஆசிரியனாகப் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில், கல்லூரி முத்தமிழ் விழாவுக்கு பேராசிரியரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். நடிகர் ராஜேஷ் இன்னொரு சிறப்பு விருந்தினர். அப்போதுதான் ராஜேஷ் நடித்திருந்த `சிறை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.எனவே, மாணவர்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டும், மேடையில் அவரை நடித்துக் காட்டும்படியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

எனக்குள் ஓர் அச்சம். ராஜேஷ் பேசி முடித்ததும் மாணவர்கள் கலைந்து போய்விடுவார்களோ என்று. கல்லூரி முதல்வருக்கும் அந்தக் கவலை இருந்தது.  “ஐயாவை முதலில் பேசச் சொல்லலாமா” என்று கேட்டார். “வேண்டாம். அது முறையாக இருக்காது” என்று கூறிவிட்டேன். நாங்கள் எதிர்பார்த்தபடியே, ராஜேஷ் பேசியதும் கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு பேராசிரியர் பேசத்  தொடங்கினார்.

பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன்

ஐந்து நிமிடத்துக்குள், எல்லா சத்தமும் அப்படியே அடங்கிவிட்டன. வெளியில் நின்ற மாணவர்களும் உள்ளே வந்துவிட்டனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அந்த அவையை ஐயாகட்டிப்போட்டுவிட்டார். எளிமையான நடை, ஆழமான செய்திகள் - அப்படியே மாணவர்கள் மயங்கிப்போய்க் கேட்டனர்.

ஒரு பொதுக்கூட்டத்தில் - அரக்கோணம் அல்லது திருவள்ளூர் என்று நினைக்கிறேன் - ஐயாவும் நானும் கலந்துகொண்டோம். படிப்பறிவு மிகுதியாக இல்லாத உழைக்கும் மக்கள், எண்ணிக்கையில் கூடுதலாக அரங்கில் இருந்தனர். என் இலக்கிய நடை அங்கு அவ்வளவாக எடுபடவில்லை. எனக்குப் பிறகு ஐயா பேசினார். மக்கள்மொழியின் வீரியத்தை அங்குதான் நான் உணர்ந்தேன். மக்களிடம் பேசும்போது அவர்களுக்குப் புரியும் வண்ணம் பேச வேண்டும் என்று அன்று முடிவு செய்துகொண்டேன்.

அந்தக் கூட்டத்தில்தான், “நாங்க எல்லாம் கடவுள் இல்லைனு சொல்றோம்னு வருத்தப்படாதீங்க. கடவுள் இல்லையேனுதான் நாங்களும் வருத்தப்படுறோம். கடவுள் இருந்தா உங்களப்போல உழைக்கிறவங்களுக்கெல்லாம் நல்லது செஞ்சிருப்பார். ஏமாத்துறவன எல்லாம் தண்டிச்சிருப்பாரேனு கவலைப்படுறோம்” என்றார். மக்கள் கைதட்டி வரவேற்றனர். அன்று ஐயா சொன்னது, பிறகு ஒரு புகழ் பெற்ற திரைப்படத்தில்கூட இடம்பெற்றது.

பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்! - சுப. வீரபாண்டியன்



கூட்டம் முடிந்து திரும்பும்போது என்னிடம், “ஒண்ணும் வேணாம், பெரியாரோட பேச்சத் தொடர்ந்து கேளுங்க. மக்கள்கிட்ட எப்படிப் பேசுறதுனு புரிஞ்சுபோகும்” என்றார். மண விழாக்கள் பலவற்றில் அவர் தலைமையில் நான் உரையாற்றி இருக்கிறேன். ‘பெரியாரின் கொள்கைகளில் ஒன்று சிக்கனம்’ என்பதை வலியுறுத்திப் பேசுவார்.

சமூகக் கொள்கைகளில் பெரியாரைப் பின்பற்றிய பேராசிரியர் நன்னன், மொழிக் கொள்கையில் தூய்மை, இலக்கணப் பிழையின்மை ஆகியவற்றில் மிகுந்த கவனம் உடையவர். எல்லோருக்கும் புரியும்வகையில், ‘தமிழைத் தமிழாக்குவோம்’, ‘எது வேண்டும், தமிழா, கிமிழா?’ போன்ற அரிய நூல்களை உருவாக்கித் தந்துள்ளார்.

‘குட்டிச்சுவர்’, ‘சிண்டுமுடிதல்’ போன்ற வழக்குச் சொற்களுக்கெல்லாம்கூட உரிய விளக்கங்களை அவர் தன் நூலில்  தந்துள்ளார். 

உணவாக்கும் முறைகளில்கூட நாம் தமிழில் எத்தனை வகைகளைக் கொண்டிருக்கிறோம் என்று நீண்ட பட்டியல் ஒன்றை அவர் தன் நூலில் தரும்போது, நமக்கே ஒரு பெருமிதம் வருகிறது.  சிலவற்றைப் பார்ப்போம்:

சோறு ஆக்குதல்
குழம்பு வைத்தல்
கீரை கடைதல்
பால் காய்ச்சுதல்
நெய் உருக்குதல்
முறுக்குப் பிழிதல்
தோசை வார்த்தல்
உப்புமா கிளறல்
இட்டலி அவித்தல்
வடை தட்டல்
அவல்  இடித்தல்
அப்பளம் பொரித்தல்

- இவ்வாறு மொழியை மிக நுட்பமாகப் பார்த்தவர் ஐயா நன்னன்.

ஆய்ந்த அறிவு, தோய்ந்த புலமை மட்டும் அவருடைய சிறப்புகளில்லை. அவற்றை மிக எளிமையாக சின்னப்  பிள்ளைகளுக்கும் புரியும்வகையில் எடுத்துச் சொன்னதே அவருடைய தனிச் சிறப்பு!

பேராசிரியர் நன்னன்:
பெரியாரின் பின்வந்த பெரியார்
பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்.
பெரியாரை அறியாதோர் அறியார்
பெரியோரை மறந்தால் நாம் சிறியார்!