Published:Updated:

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்
பிரீமியம் ஸ்டோரி
News
கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் : காயத்ரி.ஆர்., ஓவியங்கள் : செந்தில்

சந்தகாலத்துக்கான உழவு, விதைப்பு, காற்று, மலர்கள், பரிச்சயமான பறவைகள் என வழக்கமான வசந்தத்துக்காக நாங்கள் ஏக்கத்துடன் காத்திருந்தோம். சமயங்களில் கொஞ்சமாகவோ அதிகமாகவோ பெய்யும் மழை, வெவ்வேறு விதமாக ஒளிரும் சூரியன். ஆனால், எந்த மாற்றமும் இல்லாத நிலமும் பயிர்களும்... இதுதான் வசந்தகாலம். விதைகளை நாசமாக்கி, எங்களுடைய வழக்கமான ஏர்பாதையை மாற்ற வந்தான் பகைவன். எங்களுக்குப் ப்ரியமான விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் மரம் எரிவதுபோல் அநியாயமாக எரிந்துபோயின.

வழியில் அவர்கள் மரங்களுக்கும், கிராமங்களுக்கும், காடுகளுக்கும், நகரங்களுக்கும் ஒவ்வொன்றாகத் தீ வைத்தனர். நெருப்பில் படபடக்கும் மரங்களும், கற்களும், அவற்றிலிருந்து வரும் கரும்புகையும்... மெழுகின் மென்மையில்லாத இந்தக் கொடூரமான மெழுகுவத்தியை அவர்கள் எந்தக் கடவுளுக்காக ஏற்றினார்கள்? இதில் நாம் எந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க வந்திருக்கிறோம்?  நாமும் தீயில் உருகி நெருப்புத் துகள்களாக வானத்தை நோக்கிச் செல்ல வேண்டுமா? நம்மில், நமது குழந்தைகளில், நமது வேலையில், நம் உழைப்பின் எல்லாப் பயன்பாடுகளிலும் என்னவென்று மிஞ்சும்? குருத்திலேயே தங்கிவிடுமா, பழுக்குமா அல்லது அழுகுமா? தீர்ப்பளிக்கவோ தேர்ந்தெடுக்கவோ எந்த உரிமையும் இல்லை. தேசம் முழுவதும் தீக்குளிக்க வேண்டுமா? நமது கிறிஸ்தவக் கடவுள் தூங்கிவிட்டாரா? இந்த நெருப்பும் ரத்தமுமாக இருக்கும் ஆட்சியிலிருந்து நம்மை மீட்க, கிராமத்திலிருந்து யாராவது ஒரு ஃபகீர் வர வேண்டுமா?

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

தியாகத்துக்கு ஏதாவது பலன் இருக்க வேண்டுமானால், வாழ்வின் துடிப்பு உயிர்ப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தக் காயங்கள் ஆறும்போது உயிரின் துடிப்பு மீண்டும் சீறிப் பாயும். ஆனால், எங்கள் வசந்தகாலத்தை வன்முறையால் அழித்த இந்த பயங்கரத்தில் என்ன தீர்வை எதிர்பார்க்க முடியும்? முன்பு பூத்துக் குலுங்கும் ஆப்பிள், பீச், ப்ளம் ஆகிய மரங்களின் நறுமணத்தைச் சுமந்து வந்த காற்று, இப்போது வன்முறையின் வித்துகளைச் சுமந்துகொண்டு வருகிறது. நம் அன்றாட வாழ்வின் வழக்கமான நடைமுறைகளில் சடாரெனப் பீறிட்டுப் பாயும் பயம், கோழைத்தனம், இயலாமை, வெறுப்பு எல்லாம் நமக்குள் உருவாகிக்கொண்டு வருகின்றன.

நம்மிடையே சிலர் கண்களை மூடிக்கொண்டு வாழ்க்கையின் அன்றாட காரியங்களைத் தவிர வேறு எதுவும்

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

நடக்காததுபோலவும், இனி வரவிருக்கும் மாற்றங்களை இந்தக் காலாவதியான அன்றாட காரியங்கள்தான் விரட்டிக்கொண்டிருப்பதுபோலவும்  பிடிவாதமாக இருக்கிறார்கள். கடந்தகாலத்தை, வலுக்கட்டாயமாகப் பிடித்துவைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். ஆண்கள் வயல் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். வந்திருக்கும் வசந்தகாலத்தை மட்டுமே அவர்கள் காண விரும்பினார்கள். தங்கள் வாழ்வின் மீது படிந்துவிட்ட கொடும் பருவத்தை அவர்கள் காண விரும்பவில்லை. வருடத்தின் இந்தப் பருவத்தில் வழிவழியாகச் செய்துவந்த துப்புரவுப் பணிகளில் பெண்கள் ஈடுபட்டனர். இந்தத் துப்புரவுப் பணிகளால் போரின் கொடுமைகளை வென்றுவிட முடியும் என நம்புகிறார்களா என்ன?

வயதான ஜான், எதுவும் நடக்காததுபோல் தன் நிலத்தை உழுதார். அவர் மனைவி ஸோஃபி ``அந்த நிலத்தைப் புதிதாக உழுது என்ன பயன்?’’ என்று புலம்பிக்கொண்டி ருந்ததை அவர் காதில் போட்டுக்கொள்ள வில்லை. வேலை செய்து செய்து, காய்த்துப்போயிருந்த கைகள் இனி பயன்படாது எனத் தெரிந்துபோயிற்று. இத்தனை நாள்கள் வேலை செய்து அனுபவம் பெற்ற கைகளுக்கு, இனி வேலை இல்லை. முதன்முறையாக ஸோஃபியின் கைகள் தங்களின் தோல்வியைக் கண்டன. ஸோஃபியின் கைகள் உபயோகமற்றவையாக, தோல்வியடைந்தவையாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஸோஃபி, கறுப்பு உடையின் மேல் விரிந்திருந்த தன் மறுதலிக்கப்பட்ட  கைகளைப் பார்த்தாள். அவள் உடுத்தியிருக்கும் அந்தக் கறுப்பு உடையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் குறிப்பிட்ட சில நாள்களிலும் உடுத்துவதுதான் வழக்கம். அது சந்தோஷமான நாளாக இருந்தாலும் சரி, துக்க நாளாக இருந்தாலும் சரி. தொன்றுதொட்டு பழக்கத்திலிருந்துவரும் துக்ககரமான நாளை அறிவிக்கும் இந்தக் கறுப்பு உடையும் வெள்ளைத் தொப்பியும், இப்போதெல்லாம் எப்போதும் அணியும் உடையாக மாறிப்போயின.

குருட்டு நம்பிக்கையுடனும் விடாப்பிடியான மனஉறுதியுடனும் அந்த ஊரிலிருந்தது நிச்சயமாக மேடம் பிஷோன்தான். அவர் எல்லா நாற்காலிகளுக்கும் உறை அணிவித்துக்கொண்டிருந்தார். வேலைக்
காரி போன பிறகு, அவரே மெதுவாகவும் கச்சிதமாகவும் நாஃப்தலீன் உருண்டைகளை எங்கு வேண்டுமோ அங்கே வைத்தார். விதவிதமான மோதிரங்களை அணிந்த அவருடைய பருத்த கைகள், கணக்கை சரி பார்த்தன; பிறகு தண்ணீர்க் குழாயை, ஒயின் அலமாரியை, பறவைக்கூண்டை, ஜாம் பாட்டிலின் லேபிளை. சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டே மரத்தாலான ஜன்னல் மறைப்பைக் கீழே இழுத்தார்; ஜெரானியத்
துக்குத் தண்ணீர் ஊற்றினார்.

மேடம் பிஷோனின் கணவர் லேசாகக் கனைத்துக்கொண்டு மூக்குக்கண்ணாடியைத் துடைத்துக்கொண்டே, ``யுலாலீ, தாமதிக்காமல் உடனே கிளம்ப வேண்டும், இப்போதே!’’ எனக் கூறியதும், மேடம் பிஷோன் தலையைத் தூக்கிப் பார்த்தார். வருடத்துக்கு ஒருமுறை விடுமுறையில் சுற்றுலா செல்லும்போது எப்படி எல்லா விஷயங்களும் ஒழுங்காக இருக்கின்றனவா எனச் சோதிப்பாரோ, அப்படியே ஒவ்வொன்றையும் பார்த்தார். அந்த வீட்டுத் தலைவியின் மூளைக்குள் எல்லா வீட்டுச் சாமான்களும் வரிசைக்கிரமமாக ஏறின. இந்தப் பயணம் அதுவரை அவர் மேற்கொண்ட பயணங்களிலிருந்து மாறுபட்டது என்பதற்கான அறிகுறி எதுவும் அவரிடம் இல்லை. பிறகு, ஒருநாள் தன் வீடு அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டது எனத் தெரியவந்தபோதுதான் தன்னுடைய ஆழ்மனதில் இருக்கும் அந்தப் பொருள்களுக்கு  மரச்சாமான்கள், அறைகள், சுவர்க் காகிதங்கள், சரிகைத் திரைச்சீலைகள், க்ரோஷே படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள் என எல்லாவற்றுக்கும் விடைகொடுத்தார். அவருடைய நினைவில் ஒரு சிறிய பொருள்கூட தப்பவில்லை. (ஒரு கண்ணாடி உறையினுள் வைத்திருந்த அவர் திருமணத்தின்போது அணிந்திருந்த தலைக்கிரீடம், சட்டம் போட்டு சுவரில் மாட்டி வைத்திருந்த - போரில் கொல்லப்பட்ட தன் மகனின் பட்டப் படிப்புச் சான்றிதழ் உட்பட).

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

ஃபார்மஸிஸ்ட், வெள்ளைக்கோட்டில் புருவத்தைச் சுருக்கியபடித் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தார். பழைய சடங்குகளின் சக்திமீது அவருக்கு நம்பிக்கையில்லை. அவை காலாவதியாகி வெகுநாள்களாகி விட்டன. பூர்த்திசெய்ய இயலாத கோரிக்கைகள் நிறைந்த புதிய காலகட்டத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். எல்லாப் பக்கங்களிலிருந்தும் வரும் காயமடைந்தவர்களுக்கு, போதுமான மருந்தோ, களிம்போ, பேண்டேஜ் துணிகளோ அவரிடம் இல்லை. இரவும் பகலும் அயராது வேலைசெய்து அலமாரிகளைக் காலிசெய்து கொண்டிருந்தார். அவர் மகள், (பள்ளிக்கூடம் செல்லும் சிறுமி) கடினமான வேலைகளில் ஈடுபட்டிராத தன் பிஞ்சு விரல்களால் பேண்டேஜ் துணிகளைத் தயார்செய்துகொண்டிருந்தாள்.

உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்து வந்த காயம்பட்டவர்களுக்கு எல்லாம் வெள்ளை பேண்டேஜ் காத்துக்கொண்டிருந்தது. ஃபார்மஸிஸ்ட்டின் குட்டிப்பெண்ணும் அங்கு இருந்த நர்ஸுகளும் படுக்கைவிரிப்பு, திரைச்சீலை, மேசைத்துணி, பாதிரியாரின் அங்கி என எல்லாவற்றையும் நீளமான பட்டியாகக் கிழித்தனர். கிராமத்தில் எங்குமே வெள்ளைத் துணி கிடைக்காமல்போனபோது, பாதிரியார் தனது பிரார்த்
தனைத் துணியை எடுத்துக் கிழித்துக் கொடுத்தார்.

எங்களிடையே சிலர் தங்களின் பலவீனம் காரணமாக இன்னும் புறப்படாமல் இருந்தனர். ஆனால், வேறு வழியில்லை... புறப்படத்தான் வேண்டும். ஏனென்றால், பகைவன் இன்று இரவுக்குள் ஊர் வந்தடைந்துவிடுவான். இத்தனை ஆண்டுகளாகக் கல்வீடுகள் தங்கள் நிழலுக்குள் பதுக்கி வைத்திருந்த மனிதர்களை வெளியே விட்டுத்தான் ஆக வேண்டும். வயதானவர்களும், மாற்றுத் திறனாளிகளும், மருத்துவர்களிடமும், ஃபார்மஸிஸ்ட்டுகளிடமும் தங்கள் வலியைப் போக்க மருந்து கேட்டனர். அத்தனை வலிகளோடும் தாங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும் என விரும்பினர். சோகமான ஆந்தைக் கண்களைப் படபடக்கவைக்கும் வலுத்த சூரிய வெளிச்சத்தின் முன்னே கண்களைச் சுருக்கிக்கொண்டு நிற்க அவர்கள் விரும்பவில்லை.

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

தண்ணீர்த்தொட்டியைப்போல அந்த ஊர் காலியாகி, மறுபடியும் நிறைந்து கொண்டிருந்தது. வேறு ஊர்க்காரர்கள் எங்களுடன் ஒன்றாகக் கலந்தனர். குண்டு வெடித்த அன்றும்கூட நிறைய  வாடகை வாங்கிய அந்தப் பெண்மணி நடத்தும் பிஸ்த்ரோவில்(கூட) ஆள்கள் இருந்தனர்.

அந்தப் பெண்மணியிடம் `கேதரீன்’ என்கிற பணிப்பெண் இருந்தாள். (அவளை நாங்கள் `உண்ணிப்பூச்சி’ என்று அழைப்போம்.) அந்த பிஸ்த்ரோவில் கீழே ஆள்கள் நிறைந்து இருந்ததால், மேலே இருக்கும் அவளுடைய சிறிய அறையை கேதரீன் புதிதாக வந்த நதாலியுடன் பகிர்ந்துகொள்ள நேர்ந்தது. நதாலி, பகைவர்களால் கான்வென்டிலிருந்து துரத்தப்பட்ட கன்னியாஸ்திரீ.  பயந்த கண்கள், ஒட்ட வெட்டப்பட்ட செந்நிற முடி, புள்ளிகள் விழுந்த குழந்தை முகம் - இதுதான் நதாலி.

இரவுகளில் கேதரீன் அவளது படுக்கையில் படுத்துக்கொண்டு வானத்தில் தென்படும் தீ மழையை, உலக அழிவுக்கான அறிகுறியை, ஒருவிதப் பரவசத்தோடு பார்த்துக்கொண்டி ருந்தாள். அவள் முன்னே அந்த இளம்வயது கன்னியாஸ்திரீ சுவர்களையும், இரும்புக் கதவுகளையும், தங்களுக்கு விதிக்கப்பட்ட சட்டத்திட்டங்களையும் கடந்து, மூன்று உறுதிமொழிகளை நெஞ்சில் சுமந்துகொண்டு நடுங்கியபடி இருந்தாள். மிகச் சமீபத்தில் சொல்லப்பட்ட அந்த மூன்று உறுதிமொழிகளும் இந்தப் புது உலகத்தில் அதற்குள்ளாக உபயோகம் இல்லாமல், மதிப்பிழந்துபோயின.

தேசம் இடிந்துகொண்டிருந்தது. அநாதைகளைப்போல் ஓடும் கன்னியா ஸ்திரீகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் கான்வென்ட் தவித்தது. `இரும்புக் கதவுகளும் சுவர்களும் விழுந்தால் தானும் தப்பிக்கலாம்’ என நினைத்தாள் கேதரீன். அவள் நரம்புகளுக்குள் வெறி மின்சாரமாகக் கொதித்துக்கொண்டே பாய்ந்தது. அதேசமயம் ஒரு பக்கம் பனிபோல உறைந்துகொண்டும் இருந்தது. அவளது வெளுத்த முகம் எதையும் வெளிக்காட்ட வில்லை. ஆனால், விடுதலை நிச்சயமாகியது. புதிய வசந்தகாலத்தை, இந்த உலகின் மீது கொடுமையாகப் படரப்போகும் வசந்தகாலத்தை அவள் உணரும் நேரம் வந்துவிட்டது.

நதாலியிடமிருந்து வாடகைப் பணமாகப் பறித்துக்கொண்ட வெள்ளிப் பதக்கத்தை ஆட்டி ஓசை எழுப்பியபடியே, ``நீ உண்ணிப்பூச்சியின் இடத்தில் இருந்துகொள்’’ என்று சொன்னாள் அந்த இடத்தை நிர்வகிக்கும் பெண்மணி.

கேதரீன் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவளுடைய குறுகிய இதயத்தில் முதல்முறையாக வன்முறையை நடுக்கத்துடன் உணர்ந்தாள். இதுவரை எல்லோரும் அவள்மீது திணித்த கோரமான துன்பத்தால் ஏற்பட்ட நடுக்கம் அது.

நதாலி சன்னமான குரலில், ``எனக்கு உன் இடத்தைப் பறித்துக்கொள்ள இஷ்டமில்லை மிஸ். நீ என்னிடம் அன்பாக நடந்துகொள்கிறாய். நான் தரையில் படுத்துக்கொள்கிறேன். அது எனக்கு நம் பிதாவின் துன்பத்தை உணர்த்தும்.’’

கேதரீன் யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்ததில்லை. அடர்த்தியான புருவங்களின் உள்ளே அவளின் அனல் கக்கும் விழிகள் இருந்தன. முக்காடு இல்லாத அந்தக் கன்னியாஸ்திரீயை, அவள் அறியாமல் வெறுப்பை உமிழும் கண்களால் பார்த்தாள்.

கேதரீனின் உருவம் சிறியது. அவள் தோள்கள் அந்த `பியர்’ மேடையைத் தொடும் உயரம். அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த மேடைக்குப் பின்னால் `பியர்’ கிளாஸ்களைக் கழுவிக்கொண்டிரு க்கிறாள். அவள் தலை அந்த மேடையின் ஓர் அங்கம்போல் இருக்கிறது என்று, குடித்த `பியர்’ கிளாஸ்களை அவளின் கறுப்புத் தலையின் மேல் வைத்து, பெரும் வெடிச்சிரிப்புடன் அங்கு வரும் ஆண்கள் அடிக்கடி அவளைக் கிண்டல் செய்வது உண்டு.

``இன்னும் கொஞ்சம் பியர், ஏய் உண்ணிப்பூச்சி... சீக்கிரம் குடு குள்ளி!’’

அன்று மாலை கேதரீனுக்கு, எப்போதுமே அச்சத்திலும் அசதியிலும் அடங்கிக் கிடக்கும் தன் உடம்பைக் கொஞ்சம் நீட்டி ஓய்வெடுக்க வேண்டும்போல் இருந்தது. தினம்தோறும் வெட்கத்தாலும் அவமானத்
தாலும் குனிந்திருந்த தலையை, நிமிர்த்த ஆசைப்பட்டாள். ஒருமுறை சிறிய பாம்பு ஒன்றைப் பார்த்தது ஞாபகம் வந்தது. நாக்கை நீட்டிக்கொண்டு ஆக்ரோஷமாகத் தன் வாலில் நின்றுகொண்டு தைரியமாகத் தன்னைப் பெரிதாகக் காண்பித்துக்கொள்ள முற்பட்டது அந்தச் சின்னஞ்சிறிய பாம்பு. ஆனால் கேதரீன், தன்னை ஒருபோதும் தன்னம்பிக்கையோடு வெளிப்படுத்திக் கொண்டதில்லை. குனிந்துபோவதே அவள் இயல்பு. குனிந்து குனிந்தே அவள் உடல் வளர்ச்சி தடைபட்டுப்போனது. அடிபட்டே வளர்ந்த குழந்தையின் தோள்களும், ஓரப்பார்வையும், குனிந்த தலையும், கெஞ்சும் அடிமை மனோபாவத்தையும் கொண்டிருந்தாள் கேதரீன். அன்றைய தினம் அவளது முதல் சுதந்திரமான பேச்சு மெதுவான தொனியுடன் தயங்கித் தயங்கி வெளிப்பட்டது. ஆனாலும், அடிமைப்பண்பின் வழக்கமான குணாதிசயங்களோடு, (கீழ் நோக்கும் கண்களுடன், வியர்த்து ஈரமான கைகளுடன்) கபடமான குற்றமுள்ள தோற்றத்துடன்தான் பேசினாள். அவளுக்குள் பெரிய உருமாற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறி, அவள் பேசும்போது ஒழுங்கில்லாமல் அலட்சியமாக ஆங்காங்கே வார்த்தைகளுக்கு இடையே இடைவெளிவிடுவதும், குரலில் வெறுப்பு தொனிப்பதும்தான்.

``நடிப்பதை நிறுத்து. உனக்கு நன்றாகத் தெரியும், என்னை யாரும் `மிஸ்’ என அழைப்பதில்லை. நான் உண்ணிப்பூச்சி. இனிமையான சொற்களால் என்னை ஏமாற்ற வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். நான் படுப்பது தரையில்தான். ஆனால், நீ சொல்வதுபோல் அது என் இடம். பழைய குதிரைக் கம்பளியாக இருந்தாலும், இது என் அருமையான கம்பளி. இதைப் பாதுகாப்பது என் உரிமை. நீ சொல்வதுபோல்

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

சிலுவைதான் உன் உரிமை.’’

நதாலி அழுதுகொண்டே அசதியினால் தூங்கினாள். அந்த மரத்தாலான தரை, கடினமான மரத்தைப்போல முடிச்சுகளையும் சிராய்ப்புகளையும்கொண்டிருந்தன.

நதாலி, சிலுவையை மார்போடு அணைத்துக்கொண்டாள். அவள் இடைவிடாமல் மெதுவாக ஜபித்துக் கொண்டே இருந்தாள். ``எங்கள் பிதாவே... உம்முடைய சித்தத்தின்படி ஆகக் கடவது, தீயவற்றிலிருந்து எங்களை ரட்சியும்’’ என்ற வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள்.

கருமையான வெற்றுக் கண்ணிமைகள், கேதரீனின் வறண்ட கண்களை மூடியிருந்தன. அவள் ஜபித்துக்கொண்டிருக்கவில்லை. அவளுடைய முழு உடலும் கிளர்ந்து அழுதுகொண்டிருந்தது. ``இந்த தினசரித் துக்கத்திலிருந்து என்னை விடுவியுங்கள். தீயவை என்னை ஆக்கிரமிக்கட்டும். ஏனெனில், அவையே என் வடிகால். அதன் மூலம் மட்டுமே நான் வாழ்க்கையைக் காண முடியும்.’’

ஒருநாள் நகரத்தின் மேயர், மக்கள் கூட்டத்தால் வெடித்துவிடும் நிலையில் இருந்த அந்த ஊரைக் காலிசெய்ய உத்தரவிட்டார். அன்று காலையில் மக்கள் வீதிக்கு வந்து நடக்க ஆரம்பித்தனர். வழியில் மற்ற ஊர்களின் மக்களும் சேர்ந்துகொண்டனர். ஒரு நாடே தன் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க ஆரம்பித்திருந்தது.

நாங்கள் தோற்றுவிட்டோம். எங்கள் பந்தம் அறுந்து சுதந்திரமானோம். ஒவ்வொருவரும் அவர்களின் சிறையை, கவசத்தை, உறையை, பழக்கத்தை, மரபுகளை, நிறை குறைகளை, வீடுகளை, தோட்டத்தை, சாமான்களை, நிலத்தை, குடும்பத்தைவிட்டு நடந்தனர். இந்தச் சுதந்திர மனிதர்கள், சாலையில் தங்கள் ஆதாரத்தைத் தளர்வாகத் தேடினார்கள்; சுதந்திரத்தை எண்ணி வருந்தினார்கள்.

சேதமடைந்த வீடுகளின் உள்புறம் தெளிவாகத் தெரிந்தது. மேயர் வீட்டின் வரவேற்பறை எல்லோருக்கும் காணக் கிடைத்தது. மக்களின் ஆழ்மனதில் இருந்ததெல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தன. அவர்களுக்குள் குற்றமற்ற பூர்ஷ்வாக்கள், தைரியமான விவசாயிகள், ஆதரவளிக்கும் நல்ல பெண்கள், கோழைகள், துரோகிகள் அனைவரையும் இனம் கண்டுகொள்ள முடிந்தது. மற்ற சாதாரண நாள்களில் எப்படிப்பட்டவர்கள் எனத் தெரியாதவர்களுடைய உண்மையான முகம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. மக்கள், சல்லடையால் சலிக்கப்பட்டார்கள்; பெரும்பாலும் அழுக்கானவர்களாக, சுயநலவாதிகளாக இருந்தனர். ஓர் ஆள், அழுதுகொண்டிருந்த குழந்தையிடமிருந்து பழத்தைப் பிடுங்கித் தின்றான். உயரமான ஓர் இளைஞன், வழியில் இருந்த ஒரு மூதாட்டியைத் தள்ளிவிட்டு முன்னேறினான். அந்த நீண்ட பயணத்தில் பல குழுக்கள் உருவாகின. இறந்துகிடந்தவர்கள் மட்டுமல்லாது வயதானவர்கள், இயலாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோரும் சாலையோரத்தில் வரிசையாக நின்று வழியை மறித்தனர்.

புறப்படும்போது அங்குமிங்குமாக அழிந்துகொண்டுவரும் பழைய விஷயங்களைக் காப்பாற்றவும் முயற்சி நடந்தது. மேடம் பீஷோன் பறவைக்கூண்டை தன் மடியில் வைத்துக்கொண்டு காரில் போனார். பிஸ்த்ரோ உரிமையாளரின் பெண் நீனா, தன்னையும் அழைத்துச் செல்லும்படி கெஞ்சிய நதாலியைப் பொருட்படுத்தாமல் சைக்கிளில் புறப்பட்டாள்.

சிறிது நேரம் கழித்து எல்லோரும் எங்களுக்குச் சமமாக வேண்டியிருந்தது. மேடம் பீஷோனின் வண்டியில் பெட்ரோல் தீர்ந்துபோய் எங்களுடன் நடந்தார். நீனா, எங்களை வெறுப்புடன் பார்த்தபடி நடந்து
கொண்டிருந்தாள். அவளைத் தள்ளிவிட்டுவிட்டு சைக்கிளைப் பிடுங்கிக்கொண்டு போனான் வலுவான ஓர் இளைஞன்.

கேதரீனின் முதலாளிகள் அவளைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்கள். இவ்வளவு நாள்கள் அவளை அடிமையாக்கிச் சிதைத்துவிட்டு இப்போது அவள் வேண்டாம் எனப் போய்விட்டார்கள்.

`கேதரீன், அழுக்கான அந்த டம்ளர்களைக் கழுவு’, `உண்ணிப்பூச்சி... உன் மார்புச் சளியை ஆற்றில் போய்க் கழுவிக்கொண்டு வா’, `உண்ணிப்பூச்சீஈஈஈ...’, `அழுக்கு மிருகமே’, `அநாதையே’, `பாவத்தின் அடையாளமே’, `கேதரீன், உனக்கு இரண்டு வெள்ளை உடுப்புகள் போதும் வாழ்நாளுக்கு, நீ வளரப்போவதில்லை புழுவே’, `கேதரீன், இரவுச் சாப்பாட்டுக்கு மீனின் தலையும் கண்ணும் உனக்குப் போதும். நீ குடும்பம் இல்லாத அநாதை. நாங்கள் உனக்கு சாப்பாடு போடுகிறோம் என்ற நன்றி இருக்கட்டும்’, `கேதரீன், உன்னுடைய சின்ன உடம்புக்குக் கொஞ்சநேரத் தூக்கம் போதுமானது’, `வாடிக்கையாளர்கள் போன பிறகு எல்லாவற்றையும் கழுவி வைத்துவிட்டு நீனாவுக்கு புது டிரெஸ் ஒன்று தைத்துவிடு. நாளை அவள் பதிவாளரின் வீட்டு பார்ட்டிக்குப் போக வேண்டும்.’

இப்போது யாருக்கும் தேவைப்படாத உண்ணிப்பூச்சி மனிதர்கள், மிருகங்கள், பழுதான வண்டிகள் மத்தியில் ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டாள். இந்த மோசமான உலகத்தில் தனியாகிப்போனாள். ஆனால், சுதந்திரமாக இருந்தாள். தன் வாழ்நாளின் முதல் வசந்தகாலத்தை நுகர்ந்தாள். புகை, சூரியனை மறைத்தது. நிலங்கள் சூறையாடப்பட்டன. தான் புதிதாக அனுபவிக்கும் வசந்தகாலத்தை, தன்னைச் சுற்றிப் பரவவிட்டாள். அவளுடைய அமைதிக்குள் ஒருவகையான பிரார்த்தனை பீறிட்டது.

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

``நான் கேதரீன். அநாதை. சிறு வயதிலிருந்து பிஸ்த்ரோவில் சீட்டாடும் மனிதர்களின் பின்னால் வெளிறிப்போன ஒரு முகமாக இருந்தேன். அழுக்குப் பிடித்த சுவர்களின், பிசுக்குப் படிந்த மேஜைகளின் ஒரு பகுதியாகிப்போனேன். இப்போது தப்பித்துவிட்டேன். படத்தின் சட்டம் கீழே விழுந்தது. அடைபட்டிருந்த நான், வெளியே நானாக வந்தேன். என்ன ஓர் உருவம்! குறுகிய மார்பு, விசித்திரமான முகம், பெரிய வளைந்த எலும்பான நெற்றி. இந்தப் பெரிய நெற்றி என் முகத்தை முழுவதும் ஆக்கிரமித்து, மற்றதை விழுங்கிவிடுகிறது. `எமனின் தலை’ என எல்லோரும் சொல்வது உண்மைதான். ஏனென்றால், என் தீர்க்கமான கண்கள் என் பெரிய நெற்றியினுள் காணாமல்போய் விடுகின்றன. என் தலைமுடியும் பின்னால் இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டுக் கறுப்பு அரக்கைத் தேய்த்தாற்போல் இருக்கிறது. என் இறுக்கமான தோலுக்குப் பின்னால் இருக்கும் எலும்புகள் துருத்திக்கொண்டிருக் கின்றன.

என் வயதா... சரியாகத் தெரியாது. சந்தோஷமில்லாத, முடிவில்லாத வேலைகள் வருடக்கணக்கில் செய்ததற்கு ஓர் அளவில்லை. அடி, வேலை, சாபம் எல்லாவற்றையும் சமாளித்திருக்கிறேன். அத்தனை நாள்களும் பயங்கரமான ஒரு நீண்ட நாளாகத் தோன்றுகின்றன. இப்போதுதான் எனக்கு வசந்தகாலம் வந்திருக்கிறது. எனக்கு வேறு யாரையும் தெரியாது. ஆனாலும், எனக்கு இது பிடித்திருக்கிறது.

ஒரு பெண் விழுந்துகொண்டிருக்கிறாள். எனக்கு இன்னும் அந்த தேவ வாக்கியம் ஞாபகம் இருக்கிறது. `கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்தக் காலம் வேதனையானது’. நான் உண்ணிப்பூச்சி, பழைய கடற்செடியைப் போன்று காய்ந்துபோனவள். திணறடிக்கப்பட்ட, சரியாகப் புரிந்துகொள்ளப்படாத அவளைப் பார்த்துக் கத்தினேன், `சபிக்கப்பட்டவளே!’ நான் ஒன்றுமில்லாதவள், மற்றவர்களால் சூறையாடப்பட்டவள். ஏழ்மையின் அருமையான உதாரணம் நான். அழகில்லாமல், கையில் காசு இல்லாமல், வயிற்றில் குழந்தை இல்லாமல், நெஞ்சில் ஒருவருமில்லாமல், மற்றவர்கள் கடக்கத் தவறும், தயங்கும் தடைகளை நான் எளிதில் கடப்பேன். என்னுடைய கூர்மையான கண்கள், உலகின் இந்த உயரிய விஷயங்கள் எதையும் இல்லாக்குறையாக உணரவில்லை!’

நாங்கள் ஓட வேண்டியிருந்தது. ஏனென்றால், எதிரி எங்களை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தான். கூடவே எடுத்துக்கொண்டு போனதெல்லாம் தடையாகின.  உணர்ச்சிவசப்பட்டவர்களும் பேராசைக்காரர்களும் முன்னேற முடியாமல் தவித்தனர். அநேகமாக அவர்கள் தங்கள் பாரத்தோடு இறந்துபோவர்.”

கேதரீனிடம் எப்போதுமே பொக்கிஷங்கள் இருந்ததில்லை. அவள் தப்புசெய்பவளைப்போல வேகவேகமாக மூச்சு விடுவதை நிறுத்தினாள். யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் நடந்தாள். அவளுடைய நாசி விரிந்து, யாராலும் தடுக்க முடியாத சுதந்திரமான காற்றை, அந்த நாளின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டது.

அதிகாரம் இல்லாமல் போயிற்று. மற்ற எல்லாவற்றையும்போல அதிகாரம் ஊழல் மலிந்து இறந்துபோயிற்று. நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். எங்கள் பெருமைக்குரிய மெலிதான பாரம்பரியம் நொறுங்கியது. `சுதந்திரம்’ என்ற திடீர் மாற்றம் வந்திருக்கிறது. ஏன் இந்த முட்டாள்கள் வெற்றுடம்புடன் இரும்புக்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்? கவனியுங்கள் சிப்பாய்களே, உலகமே சுதந்திரமாகிவிட்டது. இனி முதலாளி இல்லை, தொழிலாளி இல்லை, தந்தைகள் இல்லை, தனயன்களும் இல்லை. ஏன் இந்தச் சிப்பாய்களும் தங்களை விடுவித்துக்கொள்ளக் கூடாது?

நதாலி, தன்னுடைய சுதந்திரத்தை நினைத்து அழுதாள். தன்னை உருவாக்கிச் சரியாகவும் பாதுகாப்பாகவும் நடத்திக்கொண்டு சென்ற விதிகளை நினைத்து அழுதாள். அவள் எடுத்துக்கொண்ட மூன்று உறுதிமொழிகளும் அவளின் குழந்தை இதயத்துக்கு ஆறுதல் அளிக்கவில்லை. இனி அமைதியான பிரார்த்தனை நேரமோ, பாதுகாப்பிடமோ இல்லை. அவளைச் சுற்றி அழுகுரலும் தாங்கொணாத் துயரமும்தான் இருந்தன.

``எனக்கு ஆதரவளித்த விதிகளே, இந்த உலகில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் பல வேலைகள் இருக்க, கடவுளின் சேவையைத் தேர்ந்தெடுத்த என்னை, கடவுளிடம் கொண்டுசேர்த்திருக்கலாம்! கடவுளே, இந்த ஒழுங்கீனமான நாள்கள் உங்களிடமிருந்தா வந்தன? இப்படிப்பட்ட நாள்கள் உங்களுடையதாக இருக்க இயலாது - ஒரு மையப்புள்ளி இல்லாத இந்த நாள்கள். பூமி, தன் மையத்தைவிட்டு பாதையிலிருந்து விலகிவிட்டது. நாங்கள் சிலுவையின் மையமாக இருந்த மனிதர்கள் வாழும் கோளிலிருந்து கும்பலாகத் தள்ளிவிடப் பட்டோம்.’’

நதாலி, பயந்தபடி கேதரீனைப் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தாள். கேதரீன் அதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நடந்தாள். எதிரி எங்களுக்குப் பின்னால், எங்களுக்கு மேலே இருக்கிறான். இப்போது எங்கள் முன்னாலும். நாங்கள் தலைதெறிக்க ஓடினோம். ஏனெனில், எங்கள் முன்னாலும் எங்களைச் சுற்றிலும் எதிரிகள் எல்லாப் பக்கங்களிலும் நெருங்கினர். தப்பிக்க வழி இல்லை.

ஒரு சிப்பாய், வழியை மறித்தான். ``பிரச்னையில்லாமல் போ உண்ணிப்பூச்சி.’’ அவன் கறுப்பான, சிறிய ஓர் உயிரினத்தை நிறுத்த மாட்டான். ஏனென்றால், அவன் தூரத்திலிருந்தே நதாலியைப் பார்த்துவிட்டான். அவன் நதாலிக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

``வென்றவனுக்குக் கப்பம் கட்டாமல், இதற்கு மேல் செல்ல முடியாது அன்பே!”

``நதாலி, கடவுளுக்காகப் படைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே, இதோ உன் தியாகத்துக்கான நேரம், நிலையில்லாத வாழ்வால் முன்பே வகுத்தமைக்கப்பட்ட  நிகழ்ச்சிக்கான உன் நேரம் வந்துவிட்டது. வென்றவன், வலிமையான கரங்களால் உன்னைத் தூக்கிக்கொண்டு செல்கிறான்; உன் நகங்களும் பற்களும் போராடியும்கூட, தன் மெலிதான செந்நிறத் தலைமுடியுடைய தங்க நிறப் போர்ப் பரிசைக் கவர்ந்து செல்கிறான்.’’
 
கேதரீன், நதாலியின் கூக்குரலைக் கேட்டும் பின்னால் திரும்பாமல் நடந்தாள். அவளுக்குத் தன் உடம்பைக் கிண்டல் செய்து சிரித்த பெண்களின் ஞாபகம் வந்தது. `மற்றவர்களின் தவறுக்காக ஒருவர் அனுபவிக்கத்தான் வேண்டும். அதுதான் நியாயம்.’

இரவு வந்ததும் உண்ணிப்பூச்சிக்குச் சாப்பிடவோ குடிக்கவோ மனமில்லை. உடலில் பலமுமில்லை. அவள் பாதங்கள் காயங்களால் எரிந்தன. சிறிது தூரத்தில் ஒரு கிழவன் ஒரு போத்தலிலிருந்து ஒயின் குடித்துக்கொண்டிருந்தான். ஆனாலும், அவளுக்குப் பிச்சை கேட்க விருப்பமில்லை. அவள் தவித்தபடி சாவதற்கு ஆயத்தமானாள். அதுதான் அவளுக்குப் பெருமையும் மரியாதையும்.

வயலுக்கு நடுவே புல்லும் வைக்கோலும் நிறைந்த ஒரு கொட்டகை தென்பட்டது. தன் நோகும் கால்களை அந்த மிருதுவான புல் மெத்தையின் மேல் கிடத்தினாள். இரவு வந்தது. சத்தங்களின் நடுவே ஏற்படும் இடைவெளியில் வசந்தகாலம் எப்போதும்போல் ஊடுருவியது. இனி அழுகை, வெடிகுண்டு, சத்தமான விமானங்கள் இல்லை. இரவின் இருண்ட நெஞ்சுப்பகுதியைச் சொந்தம் கொண்டாடும் இரவுப்பூச்சிகள் பல வருடங்களாகப் பழகிய உரிமையுடன் அவற்றின் உலோகம் போன்ற ரீங்காரத்துடன் எங்களைச் சூழ்ந்துகொண்டன.

வசந்தகாலத்தின் இனிமையான இரவு. உண்ணிப்பூச்சிக்குப் பாத்திரங்கள் கழுவும் வேலையோ, தரையைத் துடைக்கும் வேலையோ இல்லை. ``ஏய் உண்ணிப்பூச்சி! காதலிக்க அருமையான இரவு. ஆனால், உனக்குக் கவலை இல்லை. நீ ஒருபோதும் அழகாக மாற முடியாது!’’ தன் காதலனின் கையோடு கை சேர்த்துக்கொண்டு வரும் நீனாவின் குரலை இனி கேட்க வேண்டாம்.

காய்ந்த வைக்கோலின் வாசனை, அதன்மேல் வியர்வையில் நனைந்த வெண்மையான ஒரு முகம் நிலவொளியில் ஒளிர்கிறது. மங்கலான வெளிச்சத்தில் இதோ உன் முதல் ஆண்மகன்.

அவன் குடித்திருந்தான். வெயிலால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைப்போல் இருந்தான். ``அவனால் உன்னைச் சரியாகப் பார்க்க முடியவில்லை உண்ணிப்பூச்சி. உன்னுடைய முகம் அவனுடைய போதையான கண்ணின் முன் நிழலாடுகிறது. அவன் உனக்கு சாக்லேட்டும் ஒயினும் வைத்திருக்கிறான். அவன் உன் உடுப்பைக் கழற்றுகிறான். உன்னுடைய கறுப்பு நிற உடை, உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவன் கைகள் செயலிழந்து விகாரமாக இருக்கின்றன. அவனுடைய வறண்டுபோன மூளை உன்னுடைய தீண்டத்தகாத உடலில் மாற்றம் செய்கிறது. ஒரு கண நேரம் நீ இளவரசியாக மாறியதை அறிய மாட்டாய்.’’

கடுமையான தூக்கம் உடனே காதலனை ஆட்கொள்கிறது.

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்

மனிதர்கள் மற்றும் மிருகங்களின் சத்தம்; உழுத நிலங்கள். ஆ! இந்த அறுவடை வித்தியாசமாக இருக்கப்போகிறது. அன்று விதைக்கும் நாள். நான் நடுங்கிக்கொண்டிருந்தேன்.

கேதரீன் தூங்கவில்லை. அவள், தன்னருகில் குடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருக்கும் மனிதனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தச் சிப்பாய், பச்சை நிறச் சீருடையில் மிகவும் இளமையாகத் தெரிந்தான். அவ்வப்போது தூக்கத்தில் சிரித்தான். அவன் பற்கள் சிறிதாகப் பளீரென இருந்தன.

விடியற்காலை, வானத்தைக் கலைத்தது. சிப்பாய் புரண்டு படுத்தான். தன்னுடைய தளர்ந்த கைகளால் துணையைத் தேடினான்.

கேதரீன் எழுந்து நின்றாள். கடைசி முறையாக அந்தப் பையனைப் பார்த்தாள். மிகவும் இளமையாக, மிகவும் அழகாக இருந்தான். அவன் போதை தெளிந்து என்னைப் பார்க்கக் கூடாது. அவன் எழுந்து என்னைப் பார்த்த பிறகு, அவன் செய்த தவறை நினைத்து என்னை அவமானப்படுத்தும் வகையில் சிரிக்கக்கூடும். அதை என்னால் சகிக்க இயலாது. அவனுக்கு தான் ஓர் உண்ணிப்பூச்சியுடன், மற்றவர்களின் கேலிக்கும் வெறுப்புக்கும் ஆளான ஒரு வேலைக்காரியுடன் உறவு வைத்துக்கொண்டது எப்போதும் தெரியக் கூடாது.

கத்தி, வெளிச்சத்தில் பளீரிட்டது. அவள் சில மிருகங்களைக் கொல்ல வேண்டியிருந்தது. ரத்தம் சூடாக, பிசுபிசுப்பாக இருந்தாலும் அவளால் அதைச் செய்ய முடிந்தது.

கேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்



இந்த பலமான உடலில் எந்த இடத்தைத் தேர்வுசெய்வது? மார்பு வேண்டாம். அங்கே நான் என் தலையைச் சாய்த்திருந்தேன். தொண்டைதான் சரியான தேர்வு!

அவள் கத்தியை முழுவதுமாக அதன் கைப்பிடி வரை சொருகினாள். ரத்தம் பீறிட்டு அவள்மேல் தெறித்தது.

சட்டென அவனுடைய ஒரு கண் திறந்தது. நீல நிறத்தில் குழந்தைக் கண்கள். அந்தக் கண்களில் பயத்தைவிட வியப்பு மேலிட்டிருந்தது. கேதரீனின் கைகள் நடுங்கின.

நிலைத்து நின்றுவிட்ட அந்த நீல நிறக் கண்களில் அவள், தான் பார்த்தறியாத இளமைக்காலத்தையும் தோற்றத்தையும் கண்டாள்.

(பனிக்காலம் 1946 - 1947)

பிரெஞ்ச் இலக்கியம் என்றாலே சார்த்தர், காம்யூ போன்ற இலக்கிய ஆளுமைகளையே தெரிந்துகொண்டிருக்கும் நாம், கனடாவின் முக்கியமான பிரெஞ்ச் பேசும் பிரதேசமான கெபெக்கின் படைப்பாளிகளை அவ்வளவாகத் தெரிந்துகொள்ளவில்லை (Quebec-ஐ கெபெக் என்றுதான் உச்சரிக்க வேண்டும்).

1759-60-ம் ஆண்டுகளில் நடந்த பிரிட்டிஷ் படையெடுப்பில், பிரெஞ்சுப் படைகள் சரணடைந்தபோது அங்கிருந்த பிரெஞ்சு மக்கள் தங்களை ‘வெளியேற்றப்பட்டவர்களாக’ உணர்ந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் இன்றளவும் தங்களுடைய பிரெஞ்ச் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் கவனமாகவே இருக்கிறார்கள். கனடாவில் அறிவிப்புப் பலகைகளில்கூட ஆங்கிலத்தைவிட பிரெஞ்ச் எழுத்துக்களின் அளவுதான் அதிகமாக இருக்கும்.  தாங்கள் வாழும் தேசத்திலேயே அந்நியர்களாக வாழும் மனநிலையைப் பதிவுசெய்த கெபெக்கின் அப்போதைய எழுத்தாளர்களில் ஆன் எபெரும் ஒருவர்.

1916-ம் ஆண்டு ஒரு பூர்ஷ்வா குடும்பத்தில் பிறந்த ஆன் எபெர், பூர்ஷ்வா சமூகத்தைவிட விளிம்புநிலை மனிதர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். பெரும்பாலும் அவரின் கதாபாத்திரங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, ஏழ்மையில் உழலும், தனிமையில் வாடும் நபர்களாக இருந்தார்கள். ஆயினும், அவர்களைப் பாவப்பட்டவர்களாக, கோழைகளாக அல்லாமல் உறுதியானவர்களாகப் படைத்தது அவரின் தனிச் சிறப்பு.

ஆயுள் முழுவதும் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்த எபெர், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்ற ‘கமுராஸ்கா’ என்ற நாவலில் தன் காதலனுக்காகக் கணவனைக் கொலை செய்யும் பெண்ணைப் பற்றி எழுதினார். எபெரின் கவிதைகளும் அவருடைய புனைகதைகளைப் போலவே சிறப்பானவை. 2000-ம் ஆண்டில் எலும்புப் புற்றுநோயால் இறந்தார். 1940-களில் அவரை ஏற்க மறுத்த கெபெக் சமூகம், பின்னர் அவரின் கதைகளுக்கு அங்கீகாரம் அளித்து விருது வழங்கியது. இப்போது எபெரின் நூற்றாண்டைத் தபால்தலை வெளியிட்டுக் கொண்டாடித் தீர்க்கிறது.