மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்

படம் : ப.சரவணகுமார்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்

தைகள் எழுத ஆரம்பித்ததிலிருந்து எப்போதும் அவரது ஊரைத் தனது பெயரின் அருகிலேயே வைத்துக்கொண்டிருந்தார். எண்பதுகளில் நான் அவரை அறிந்துகொண்டபோதே அவர் ‘மேலாண்மை’ பொன்னுச்சாமியாகத்தான் இருந்தார். திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்தாலும் சரி, மதுரைப் பக்கத்திலிருந்து வந்தாலும் சரி, கோவில்பட்டிக்கோ அல்லது சாத்தூருக்கோ இரவு 10 மணிக்குள் சென்றுசேர்ந்தால்தான் `மேலாண்மறை நாடு’ எனும் சிறிய ஊருக்கான கடைசி பஸ்ஸைப் பிடிக்க முடியும். இல்லையென்றால், விடியற்காலை 4:30 மணிக்குப் புறப்படும் முதல் பஸ்ஸுக்காக சாத்தூரிலோ அல்லது கோவில்பட்டியிலோ காத்திருக்க வேண்டும். அதுமாதிரியான சமயங்களில் அந்த ஊர் நண்பர்களைச் சந்தித்து இலக்கியமும் அரசியலும் பேசி, சிரிப்புச் சத்தங்களோடு அந்த இரவுகளை உற்சாகமாக்கிக்கொள்வார் மேலாண்மை பொன்னுச்சாமி. சாத்தூருக்கு இரவு நேரங்களில் வர நேரிட்டால், அவர் வந்து கதவைத் தட்டும் இடங்களில் ஒன்றாக எங்கள் சங்க அலுவலகமும் இருந்தது.

அதுபோன்ற இரவுகளில் ரியலிஸம், மேஜிக்கல் ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம், சர்ரியலிஸம் பற்றிய தீவிரமான விவாதங்களே பிரதானமாக இருக்கும். சோஷலிஸ யதார்த்தவாதத்தை ஆதரித்து உரக்கப் பேசுவார். எழுத்தாளர்கள் கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நட்பாக அவரைப் பெரும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். `செம்மலர்’ பத்திரிகையில் மேலாண்மையின் கதைகள் அக்காலகட்டத்தில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன. பொன்னுச்சாமி என்பவர் `மேலாண்மை பொன்னுச்சாமி’யான கதையை, நாளாக நாளாகத் தோழர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்

விவசாயிகள் போராட்டத்தில் கால்சட்டை அணிந்த பையனாக பொன்னுச்சாமி கலந்துகொண்டது, கதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் அவருக்கு இருந்த ஆர்வத்தை எஸ்.ஏ.பெருமாள் போன்ற தோழர்கள் தூண்டிவிட்டது, `செம்மலர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தோழர் கே.முத்தையா, பொன்னுச்சாமியை அரவணைத்துக்கொண்டது போன்ற விஷயங்கள் அவர் ஓர் எழுத்தாளராக பரிணமிக்க ஆதாரமாக இருந்தவை. மானாவாரி நிலத்தில் விவசாயம், பெட்டிக்கடையைவிட கொஞ்சம் பெரிய மளிகைக்கடை, பலசரக்கு வாங்க ராஜபாளையம் செல்வது என வாழ்வின் ஓட்டங்களுக்கிடையே கதைகள் எழுதிக்கொண்டிருந்தார்.  

பார்க்கும் பழகும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் அவருக்குக் கதைகளை வைத்திருந்தனர். தீப்பெட்டி ஆபீஸ்கள், கூட்டுக் குடும்பப் பிரச்னைகள், கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை, வரதட்சணைக் கொடுமை, வறுமை நிறைந்த தனது நிலத்தின் வலி போன்றவற்றை அழுத்தமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்னும் துடிப்பு அவருடைய கதைகளில் வெளிப்பட்டது. கதைகளெங்கும் கரிசல் பூமியின் வாசம் வீசிக் கிடந்தது. `சிபிகள்’ என்னும் முதல் தொகுப்பு வெளிவந்து, எழுத்தாளர் சங்கத் தோழர்கள் அது பற்றிப் பேச ஆரம்பித்த பிறகு, மேலும் கதைகளில் வேகம் கூடியது.

சில வருடங்களுக்கு முன்னர், கலை இரவில் கலந்துகொள்வதற்காக தேவகோட்டைக்குப்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்

பயணமாகிக்கொண்டிருந்தோம். பேச்சுவாக்கில் கவிஞர் லஷ்மிகாந்தன், “சமீபத்தில் வெளிவந்த பொன்னுச்சாமியின் கதைகளில் பாலுறவு குறித்த விஷயங்கள் அதிகம் இருக்கின்றன” என்றார். “அந்தக் கதையின் மாந்தர்கள் அப்படிப்பட்டவர்கள். தமிழ் இலக்கிய உலகம் இதுவரை சரியாகத் தொட்டிராத ஆட்டிடையர்களின் வாழ்வு அப்படியாகத்தான் இருக்கும். அவர்களுடைய குடும்பங்களில் மிகச் சாதாரணமாக நாம் கேட்கவும் கூசுகிற வார்த்தைகள் சரளமாகப் புழங்கும். வயசுக்குவந்த பெண்ணைக்கூட கோபம் வந்தால் வீட்டில், “அங்க என்ன ஊம்பயா போன?” எனப் பேசுவதை இயல்பாகக் கேட்க முடியும். அதில் ஆபாசம் இருக்காது. செக்ஸ் குறித்த உங்களது இலக்கணங்களும் ஒழுக்கங்களும் அங்கு சர்வசாதாரணமாக மீறப்படும்”என்று மேலாண்மை பொன்னுச்சாமி சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. அவர் குறிப்பிட்ட விஷயங்கள் எனது சகல கற்பிதங்களையும் புரட்டிப்போடுவதாக இருந்தன.

வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் அவரது பார்வைக்கும், அதை எழுத்தில் கொண்டுவரும் லாகவத்துக்குமிடையே இடைவெளி இருந்ததாக ஒரு பார்வை உண்டு. ‘லௌகீக வாழ்வின் பிரச்னைகளை முக்கியமாகப் பேசும் அவருடைய கதைகளில், நுட்பமும் அழகியலும் வாசகனை வசீகரிக்கும் மொழிநடையும் இல்லை’ என்பது அவர் மீதான விமர்சனமாக இருந்தது. வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம்கொண்ட எழுத்தாளர் பெருமக்களே அதை முன்வைத்தனர். நான்கைந்து கதைகள் எழுதிய நானும்கூட அவரிடம் அப்படிச் சொல்லியிருக்கிறேன். “இப்படிப் பேசிட்டும் யோசிச்சிட்டும் இருக்கிறதாலதான் உங்களை மாதிரியான ஆள்கள் கதைகளே எழுதுறதில்லை” என விமர்சனம் சொன்னவர்கள் மீதே ஒரு புது விமர்சனத்தைச் சுமத்திவிட்டு, அவர் பாட்டுக்குத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

பிரபல பத்திரிகைகளில் அறிவிக்கப்படும் போட்டிகளுக்குக் கதைகள் அனுப்புவதில் பெரிய எழுத்தாளர்களுக்கு ஒவ்வாமை உண்டு. அதில் ஏதோ ஓர் இழிவுள்ளதாகக் கருதியவர்களும் உண்டு. ஆனால், மேலாண்மை பொன்னுச்சாமிக்கு இந்தப் பிரச்னையெல்லாம் கிடையாது. தயக்கமின்றி அனுப்புவார். அனுப்பிய கதைகள், ‘ஆனந்த விகடனி’லும் ‘கல்கி’யிலும் பரிசுகள் பெற்றன. அதன்பிறகு, அவரது எழுத்துக்கான வாசகப் பரப்பு மேலும் விரிவடைந்தது. கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பரிசு பெற்றன. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் பரிசும்கூட அவரைத் தேடி வந்தது. இன்றும்கூட `அரும்புகள்’ கதையைப் படிக்கும்போது நம் கண் கலங்குவதை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. வறுமைமிகுந்த நாள்களில் எழுத்துகளே அவருக்கு ஆசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தன. எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்த 32 பேர்களில், மேலாண்மை பொன்னுச்சாமியும் ஒருவர்.

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்

சங்கப் பணிகளுக்காக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள எங்கள் வங்கியின் கிளைக்குச் சென்ற சமயம், ஒருநாள் அவர் வீட்டுக்கு நானும் தோழர் காமராஜும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றிருந்தோம். “யோவ், என்னய்யா இப்படி திடீர்னு?!” என வரவேற்றதில் ஆச்சர்யமும் சந்தோஷமும் பொங்கின. அவரின் துணைவியாரை அழைத்து அறிமுகம் செய்து, கோழியடிக்கச் சொல்லி மதிய உணவு அளித்தார். அவரது உலகத்தை அன்றுதான் பார்த்தோம். குறுகலான சந்துகளில் அவருடைய கதை மாந்தர்கள் அங்கே நடமாடிக்கொண்டிருந் தார்கள். நிறைய கதைமாந்தர்கள்... மிகச்சிறிய கிராமம்!

சாத்தூரில் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்று நடத்துவதற்கான அழைப்பிதழை அனுப்ப, அவரிடம் முகவரி கேட்டோம்.  “மேலாண்மை பொன்னுச்சாமி, மேலாண் மறைநாடு” என்றார். வீட்டு எண், தெருப் பெயரைக் கேட்டபோது, “அதெல்லாம் வேண்டாம். அவ்வளவுதான் அட்ரஸ்” என்றவர் சிரித்துக்கொண்டே, “எழுத்தாளர்னு பேருக்கு முன்னால எழுதிருங்க அய்யா!” என்றார். ‘எழுத்தாளர்’ அவருக்கான முகவரி அதுதான்.

தமிழ் உலகை, `மேலாண் மறைநாடு’ எனும் அந்தச் சிறிய ஊரின் பெயரை உச்சரிக்கவைத்த மனிதராக அவர் இருந்தார். அவ்வளவு உள்ளொடுங்கிய சிறிய கிராமத்திலிருந்து வந்து பல்கலைக்
கழகங்களிலும் பிரபல பத்திரிகைகளிலும் புத்தகக் கடைகளிலும் ஓர் அடையாளமாக இடம்பெற்றிருக்கிறாரே என யோசித்தபோது, அவருடைய நம்பிக்கையும், உழைப்பும், கடும் முயற்சிகளும் வியப்பைத் தந்தன.

எழுத்தில் மும்முரமாக இருந்தபோதும், தான் சார்ந்த இயக்கத்தின் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். ஊர் ஊராகச் சென்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்புகளை ஏற்படுத்துவது, அவர்களோடு தொடர்ந்து உறவுகளைப் பேணுவது, மாநிலம் முழுவதும்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்

நடந்துகொண்டிருந்த கலை இலக்கிய இரவுகளில் கலந்துகொள்வது என நாள்களை அர்த்தமிக்கதாக வைத்திருந்தார். சக எழுத்தாளர்களைக் காட்டிலும் புதிய எழுத்தாளர்களைக் கண்டறிவது, அவர்களோடு உரையாடுவது, அவர்களை வளர்த்தெடுப்பதில் தனிக்கவனம் செலுத்திவந்தார். சாத்தூரைச் சேர்ந்த தோழர் காமராஜ் முதன்முதலாகச் ‘செம்மலரி’ல் எழுதிய `பூச்சிக்கிழவி’ சிறுகதை வெளிவந்த மாதத்தில், கல்கியில் வெளிவந்த அவருடைய `அக்கதை’ என்னும் சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு கிடைத்திருந்தது. `பூச்சிக்கிழவி’தான் அருமையான கதை, அதற்குத்தான் இலக்கியச் சிந்தனை பரிசு கிடைத்திருக்க வேண்டும். அவர்களின் மதிப்பீடு தவறானது’ என எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த அபூர்வமான மனோபாவம் அவருக்கு இயல்பாகவே இருந்தது.

அன்றைக்கு ‘ஆனந்த விகடனி’ல் அவரது கதை வெளியாகியிருக்கும். அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் யாரும் அது பற்றி விசாரிக்கவோ, பேசவோ செய்திருக்க மாட்டார்கள். கூட்டம் முடிந்து கிளம்பும்போது, “யோவ், இன்னிக்கு விகடன்ல என் கதை ஒண்ணு வந்திருக்கு. படிச்சிட்டுச் சொல்லும்” எனச் சொல்லிவிட்டுப் போவார். அன்று முழுக்க அந்த எழுத்தாளனுக்குள் என்னவெல்லாம் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்ற வலியும், நம்மைப் பற்றிய குற்ற உணர்வும் மேலோங்கும். அடுத்தமுறை பார்க்கும்போது அது பற்றிய எந்த நினைவும் இல்லாமல், முகமெல்லாம் மலர்ந்து கண்களும் சேர்ந்து சிரிக்க, கைகளைப் பற்றிக்கொண்டு நிற்பார். சோர்வுகளை, பாரங்களை விலக்கி, தன்னைப் புதிதாக வைத்துக்கொள்ளும் சாதுர்யம் பெற்றிருந்தார். அவரிடமிருந்த பாமரத்தனம்தான் அதற்கான வலிமையைத் தந்திருக்க வேண்டும்.

கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, செக்காவ், மைக்கேல் ஷோலக்கோவ், ஜிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுத்துகளையெல்லாம் அறிந்தவர் என்பதற்கான அறிகுறிகள் சுத்தமாக அவரிடம் தென்படாது. மார்க்ஸியம் கற்று, அரசியலை அலசும் தோரணையும் இருக்காது. அப்படியொரு அசலான கிராமத்து மனிதனின் தோற்றமும் மொழியும் எப்போதும் அவரிடம் இருந்தன. கதைகளை எழுதுபவராக வெளிப்படாமல், அந்தக் கதைகளின் மாந்தர்களில் ஒருவராகத்தான் அவர் எப்போதும் வெளிப்பட்டார்.

வெறுமனே பொன்னுச்சாமியாக அவரது பெயரை உச்சரித்தால், என்னவோ போலத்தான் இருக்கிறது. ஒருமுறை சிவகாசியில் நடந்த கலை இலக்கிய இரவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் வந்திருந்தார். பிரபல பத்திரிகைகளில் எழுதுவதால் ஏற்பட்டிருந்த அறிமுகத்தால், மேலாண்மை பொன்னுச்சாமிதான் சிவகுமாரை அழைத்திருந்தார். தன்னுடைய ஓவியங்களை ஆங்காங்கே டி.வி-கள் வைத்து விவரித்தார் சிவகுமார். அவ்வப்போது `பொன்னுச்சாமி...’ என இவரை அழைத்ததும், “அந்த டி.வி-யில் படம் தெரியுதான்னு பாருங்க பொன்னுச்சாமி” என மேலாண்மையைப் பார்க்கச் சொன்னதும் தாங்க முடியாததாக இருந்தது பலருக்கு. கலை இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அதிகாலை நான்கு மணிக்கு டீ குடிக்கும்போது, “உங்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. `பொன்னுச்சாமி’ என உங்களைப் பெயர்சொல்லிக் கூப்பிட்டது ஏனோ எங்களுக்குப் பிடிக்கவில்லை’ எனத் தோழர்கள் பலரும் மேலாண்மையிடம் குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். எதுவும் சொல்லாமல் அமைதியாகத் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார் அவர்.

சாகித்ய அகாடமி விருது கிடைத்த செய்தி அறிந்ததும், அவரைப் பார்க்க சாத்தூரிலிருந்து நண்பர்கள் பலருமாக அவரது வீட்டுக்குச் சென்றோம். கட்டிப்பிடித்துக்கொண்டு `ஹா... ஹா...’ என்று வாய்விட்டுச் சிரித்த அவரது முகத்தில், ஐந்தாம் வகுப்பு வரைகூட படிக்காமல் காலத்தை வென்ற பெருமிதம் இருந்தது. அன்று பேசிக்கொண்டிரு க்கும்போது, அவர் சொன்ன விஷயம் போகும்வழியெல்லாம் மனதோடு வந்துகொண்டிருந்தது. “ஆரம்பத்துல கதை எழுதி அனுப்புவேன், பத்திரிகையில வந்திரும். கதை வெளியான பத்திரிகையும்கூட வீட்டுக்கு வந்திரும். ஆனா, இந்த ஊர்ல அதைப் படிச்சுப் பேச யாரும் கிடையாது. இங்கிருந்து மெனக்கெட்டு வேலையெல்லாம் விட்டுட்டு கோவில்பட்டிக்குப் போய் நண்பர்களைப் பார்ப்பேன். பிடிபட்ட எலியைச் சாக்குமூட்டையில் கட்டி, தரையில் அடிப்பதுபோல விமர்சனம் செய்வார்கள்” என்று  சொல்லிவிட்டு, மீண்டும் `ஹா... ஹா...’ எனப் பெரிதாகச் சிரித்தார். இதே விமர்சனத்தை மற்றவர்கள் சொல்லக்கேட்டு நானும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஆனால், அன்று சிரிக்க முடியவில்லை.

முப்பது வருடங்களுக்கும் மேலான அவருடனான பழக்கத்தில் கடைசி சில வருடங்கள் தொடர்பு இல்லை. `சென்னையில் மகனோடும் மகளோடும் இருந்தார்’ எனத் தோழர்கள் சொன்னார்கள். சென்னையிலும் அவர் மேலாண்மறை நாட்டு மனிதராகவே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கெங்கோ இருக்கிறவர்களெல்லாம் இணையம் வழியே உரையாடிக்கொள்ளவும், தொடர்ந்து உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் சாத்தியமான இந்தக் காலகட்டத்திலும் அந்த எளிய மனிதர் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் இயங்காமல்தான் இருந்தார். ஆனால், அவரது மரணச் செய்தி மட்டும் ஃபேஸ்புக் வழியே எல்லோருக்கும் சென்றடைந்தது.

எழுத்தாளர் சங்க மாநாடுகள், கலை இலக்கிய இரவுகள், மாநிலக் குழுக் கூட்டங்கள், மாவட்டக் குழுக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், திடுமென இரவில் சாத்தூர் வந்து நிற்கும் அவருடன் விடிய விடிய நடத்திய மறக்க இயலா உரையாடல்கள் எனக்  காலம் நொறுங்கி, சுற்றிலும் இறைந்து கிடக்கிறது. அவற்றை எடுத்து ஒவ்வொன்றாகக் கோத்துப் பார்க்கும்போது, அவர் மீதான விமர்சனங்கள் எல்லாம் களைந்து, மலர்ந்த முகத்தோடு  “என் கதையைப் படிச்சிட்டுச் சொல்லும்யா!” என்று மேலாண்மை விடைபெற்றுச் செல்லும் காட்சியே நிலைத்து நிற்கிறது. ஆம்... மனம் முழுக்க அவர் விடைபெற்றுச் செல்லும் காட்சி!