
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
பொழுதுவிடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. நண்பகல் கடந்த சிறிது நேரத்திலேயே ஒளி அகன்றுவிடும். எனவே, வேகமாக நடக்க வேண்டும் என முடிவுசெய்து குகையை விட்டு வெளியேறினர். இரவு முழுவதும் கடுமழை பெய்ததால் சரிவில் நடந்து மேலேறுவது எளிதல்ல என்பது தெரியும். கவனமாக நடந்து செல்லத் துணிந்தனர். மலையெங்குமிருந்து நீரூற்று கசிந்துகொண்டே இருந்தது. நீரோடும் பாறையை அழுத்தி மிதித்தாலும் வழுக்கும், அழுத்தாமல் மிதித்தாலும் வழுக்கும். பாறையின் செதில்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே காலடியை முன்னெடுக்க வேண்டும்.

பாறைகளைக் கடக்கும்போது பாரி முன்னால் நடந்தான். பாறையின் தன்மை அறிந்து ஆதினிக்கு வழிகாட்டிச் சென்றான். மண்ணை மிதித்து நடக்கும்போதும் அதே அளவு கவனம் தேவை. பல நேரம் ஆதினியை முன்னால் நடக்கவைத்துப் பின்னால் வந்துகொண்டிருந்தான்.
இறங்கும் நீரையும் பாறையையும் மண்ணையும் வேர்களையும் குனிந்து பார்த்தபடியே நீண்டநேரம் நடந்துகொண்டிருந்தாள் ஆதினி. எங்கும் நீர் இழுத்து ஓடியபடியே இருக்க, தொடர்ந்து நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. சற்றே ஓய்வு தேவைப்பட்டது. ஓரிடத்தில் நின்று இளைப்பாறியபடி பார்வையை எல்லாப் பக்கங்களிலும் ஓடவிட்டாள். அப்போதுதான் ஆபத்தின் அளவு புரிந்தது. செங்குத்தான பெருஞ்சரிவின் நடுவில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஆதினி அதிர்ச்சிக்குள்ளானாள்.
“இந்தச் சரிவிலா இரவில் நடந்தோம்?”
“ஆம். இந்தப் பெருஞ்சரிவில்தான் நடந்தோம். அதுவும் காதல்கொண்டே.”
பாரி சொல்வது தனது செயலைத்தான் என்பது புரிந்தது. ஆனாலும் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. ``இந்த இடத்தைப் பகலில் பார்த்த ஒருவர், இங்கு இரவில் நடக்கத் துணிய மாட்டார்” என்றாள்.
``இரவிலே நடந்த ஒருவர், பகலில் எளிதில் நடந்து கடப்பார்” என்றான்.
அவனது சொல் ஆதினிக்கானது. அவன் சொல்லில் இருக்கும் உண்மையை அவளது மனம் ஏற்றது. கால்கள் முன்னிலும் வீரியத்தோடு முன்னகர்ந்தன. ஒற்றைச் சொல்லால் விசை கூட்டும் வித்தையை பாரியின் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனத் தோன்றியது.
`அவனை நினைத்து மகிழத்தான் எவ்வளவு இருக்கின்றன!’ என்று எண்ணியபடியே நடந்தாள்.
``பின்னிக்கிடக்கும் வெண்சாரைகள் அந்த இடம் விட்டு விடியும் வரை நகராது. நீ அஞ்ச வேண்டாம்” என்று நேற்றிரவு அவன் கூறிய சொல்லிலிருந்துதான் எல்லாம் மாறின. `அவை இந்தப் பக்கம் திரும்பாது என்றால், நாம் ஏன் அந்தப் பக்கம் திரும்ப வேண்டும்?’ எனத் தோன்றியது. அவ்வளவு நேரமும் வெண்சாரையைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதினி, பாரியின் பக்கம் திரும்பினாள்.
மெல்லிய ஒளி அவனது முகத்தில் பூசி மறைந்தது. வெண்சாரைகள் இரண்டும் இறுக்கி முறுக்கிக்கொள்ளும்போது ஒளியின் அளவு இரு மடங்கு அதிகமானதுபோல் இருந்தது. ஆனால், அதை அவர்கள் கவனிக்கவில்லை; முறுக்கி இறுகும் வெண்சாரைகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தலைக்குப் பின்புறமாக குகை விட்டு வெளியே பேரிடி விடாது விழுந்துகொண்டிருந்தது. கால்களின் கீழ்ப்புறம் வெண்சாரைகள் இறுகிப் புரண்டுகொண்டிருந்தன. மழையின் பேரோசை கூடியபடியே இருக்க, காற்றெங்கும் நீர் மிதந்துகொண்டிருந்தது. இவற்றில் எதையும் காதல் பொருட்படுத்தவில்லை.
இப்போதுதான் அவற்றை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கொண்டே நடந்தாள். தங்களைச் சுற்றி எவையெல்லாம் இயங்கின என எண்ணிப் பார்த்தாள். எதை நினைத்தாலும் தாங்கள் இயங்கியதில்தான் எண்ணங்கள் முடிவடைகின்றன. `பாரிக்கும் இப்படித்தான் எண்ணங்கள் ஓடுமா? அவனது உள்மனம் இப்போது எதை நினைத்துக் கொண்டிருக்கும்?’ ஆதினியின் சிந்தனை, பாரியை நோக்கி ஓடியது. அவன் கவனமாகச் செடி கொடிகளை விலக்கி முன்நடந்து கொண்டிருந்தான்.
அவனுடைய சொற்களின் வழியே, செயல்களின் வழியே அவனது எண்ண ஓட்டத்தைக் கண்டறிய முயன்றபடியே வந்தாள். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆனாலும் ஆதினி தொடர்ந்து முயன்றாள். பெரும்பள்ளம் ஒன்றின் மேலேற வசதியாக அவளைக் கைபிடித்துத் தூக்கினான். அவள் பாரியின் கண்களைப் பார்த்தபடியே முன்காலைத் தூக்கி வைத்து மேலேறினாள். அந்தக் கண்களில் எதையும் கண்டறிய முடியவில்லை. `ஆண்களின் கண்கள் மொழியற்றவையோ!’ எனத் தோன்றியது.

`இல்லையே, நேற்றிரவு என்ன செய்வது என அறியாத கணத்தில் அவன் பார்த்த பார்வைதானே காமத்துக்குள் கட்டற்ற வேகத்தில் நம்மை இழுத்துச்சென்றது. `பெண் கண் செருகும்போது தொடங்கும் ஆட்டம், ஆண் கண் செருகி இருக்கும்போது முடிவுறுகிறது’ எனச் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால், இவை எல்லாம் யாரால் பார்த்தறிய முடியும்? மற்றவர்கள் பார்க்க முடியாது, சம்பந்தப்பட்டவர்களால் பார்க்கவே முடியாது. அப்புறம் எப்படி இவை எல்லாம் கதைகளால் சொல்லப்படுகின்றன?’ மனதுக்குள் எண்ணியபடியே நடந்தாள்.
குறுகிய பள்ளத்தில் நீரின் வேகம் சற்றே அதிகமாக இருந்தது. முதலில் அதைக் கடந்த பாரி, அவள் கடப்பதற்குக் கைகொடுத்து இழுத்தான். அவள் கடந்து வந்ததும் முன்னே நடக்கவிட்டுப் பின்தொடர்ந்தான்.
அப்போதுதான் கவனித்தான், ஆதினியின் முதுகில் சிறிய சிறிய கீறல்கள் கோடுகளாய் அங்குமிங்குமாக இருந்தன. `கற்படுக்கையால் இப்படி நேர்ந்துவிட்டதே!’ எனக் கவலை கொண்டான். மழை பெய்து குளிர் நீங்காமல் இருப்பதால் எரிச்சல் தெரியாமல் இருக்கிறது. கோடைக்காலமாக இருந்தால் கடும் எரிச்சல் இருந்திருக்கும் என எண்ணியவனுக்கு, அதன் ஆபத்து அப்போதுதான் புரியவந்தது, `இப்படியே போனால் இவள் தோழிகள் கேள்விகள் கேட்டே இவளைத் திணறடித்து விடுவார்களே!’ என்று.
என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்படி நடந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் எல்லோரின் விருப்பமும் இருக்கும். இதுபோன்ற தடயங்கள்தான் அவர்கள் பயன்படுத்தப்போகும் ஆயுதங்கள். நிலைமையை ஆதினியால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும். ஏனென்றால், அவளது முதுகில் இருக்கும் தடயங்கள் அவ்வளவு. இதைப் பற்றித் தெரியாமல் ஆதினி ஏதோ சிந்தனையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பாரி, ``நீ சிறிது நேரம் இங்கே இரு. நான் அருகில் இருக்கும் செம்பாறை வரை போய் வருகிறேன்” என்றான்.
``ஏன்?” எனக் கேட்டாள் ஆதினி.
``உனது முதுகு முழுவதும் பாறையின் செதில்களால் கீறப்பட்ட கோடுகளும் தடயங்களும் நிறைய இருக்கின்றன. தோழிகள் பார்த்தால் கேலிசெய்வார்கள்” என்றான்.
அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்றைப் பற்றிப் பாரி பேசினான். அவனது சொல்லில் இருப்பது அளவிட முடியாத காதல். அதனால்தான் அடுத்த கணமே அது உள்ளுக்குள் இன்பத்தைச் சுரக்கிறது. அவன் காமத்தின் தடயங்களை மறைக்கப் பார்க்கிறான். அந்தக் கணத்தைக் கற்பனையில்கூட அடுத்தவர் நெருங்கக் கூடாது எனத் தவிக்கும் ஆணின் தவிப்புதான் காதலின் ஆகச்சிறந்த பரிசு என அவளுக்குத் தோன்றியது.
அவனது சொல்லைக் கடக்க முடியாமல் நின்றிருந்த ஆதினியைப் பார்த்துப் பாரி சொன்னான், ``செம்பாறையின் ஓரம் இழுத்தோடும் நீரில் பொன்போல மின்னும் மண் துகள் படிந்திருக்கும். அந்த மண் துகளை எடுத்துவந்து முதுகில் பூசிவிடுகிறேன். அது ஒளியை மினுக்கிக்கொண்டிருக்கும். பார்ப்பவர்களுக்கு மினுக்கும் ஒளிதான் தெரியுமே தவிர, முதுகில் உள்ள கீறல்கள் எளிதில் தெரியாது” என்றான்.
நுனிநாக்கால் மேலுதடைத் தொட்டு நனைத்துக் கொண்டாள். சிரிப்பை மறைக்க அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

ஆனால் பாரி கண்டறிந்தான், ``ஏன் சிரிக்கிறாய்?”
``முதுகெல்லாம் ஏன் பொன்மணல் படிந்திருக்கிறது எனக் கேட்டால்?”
``படுத்திருக்கும்போது ஒட்டியிருக்கும் எனச் சொல்.”
``அதனால்தான் பாரியின் முதுகில் பொன்மணல் ஒட்டவில்லையோ எனக் கேட்பார்கள்.”
ஒரு கணம் திகைத்துப்போனான்.
அவன் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து சிரித்தாள். அடுத்தடுத்து எழும் வினாக்களை நோக்கி அவள் உள்ளே போய்க்கொண்டிருந்தாள். திகைத்த இடத்திலே பாரி நின்றுவிட்டான். கேலி விளையாட்டில் பெண்கள் செல்லும் ஆழம் ஆண்களால் அறிய முடியாதது. இது, பெண்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட கலையின்பம். அதனால்தான் எழப்போகும் வினா பாரிக்குத் திகைப்பை உருவாக்கிய கணமே ஆதினிக்குச் சிரிப்பை உருவாக்கியது. தோழிகள் கேட்கப்போகும் வினாக்களுக்குள் நுழைந்தபோது அவளது சிந்தனை திக்குமுக்காடியது. `வெண்சாரைகளின் நிழலில் எங்களின் காமம் நிகழ்ந்தது எனச் சொன்னால் நிலைமை என்ன ஆகும்!’ வேளிர் குலம் முழுக்க தலைமுறை தலைமுறையாக இந்தக் கதை நிலைத்துவிடும் என அவளுக்குத் தெரியும்.
எத்தனை தலைமுறைகளாலும் முதுகில் கீறல்கொண்ட இளம்பெண்கள் இந்த வினாவிலிருந்து தப்பவே முடியாது. காலம்காலமாகப் பாரியின் குறியீடாக பதில்கள் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கும். அவன் செய்யப்போகும் செயல் எல்லா இளம்பெண்களின் முதுகிலும் படிந்துவிடும் என நினைத்தபடி பாரியின் கையைப் பிடித்து, ``பொன்மணல் துகள் வேண்டாம். தோழிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள்.
அவள் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. `என்ன சொல்லி சமாளிப்பாள்?’ எனச் சிந்தித்தபடியே அவன் நடந்தான். அவனுக்குள் வினாக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால், எண்ணங்கள் கேட்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தன. சிறுபாறையின் மேலே ஏறி அவளைக் கைபிடித்துத் தூக்கிவிட்டான்.
மேலேறியவுடன் நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி. எதிரில் சமவெளி விரிந்துகிடந்தது. `செங்குத்தான பெருஞ்சரிவை அதற்குள் ஏறிக் கடந்துவிட்டோமா!’ வியப்பு குறையாமல் முன்னும் பின்னுமாகத் திரும்பிப் பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. வியப்போடு பாரியைப் பார்த்தாள். அவன் உள்ளும் வெளியுமாக இயக்கும்விதம் மேலும் மேலும் வியப்பூட்டுவதாக இருந்தது.
கதிரவன், எதிர்க்குன்றின் பின்னால் மறையத் தொடங்கினான். இருவரும் சிறிது தொலைவு சமவெளியில் நடந்து சென்றனர். எதிரில் சிறுமேடு ஒன்று இருந்தது. ``இந்த மேடு ஏறி இறங்கினால், கீழ்த்திசையில் நாம் நிறுத்தி வந்த தேர் இருக்கும். நான் குதிரைகளைக் கண்டறிந்து வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு” என்று சொல்லி நடந்தான்.
காற்று சற்றே அதிகரிக்கத் தொடங்கியது. மாலையானதும் இன்றும் கடுமழை வரப்போகிறது எனச் சிந்தித்தபடி குதிரைகளைப் பிடித்துவர விரைந்தான்.
ஆதினி அவன் வரும் வரை மரத்தடியில் அமர்வோம் என நினைத்து, அருகில் இருந்த செங்கிளுவை மரத்தின் அருகே போய் உட்கார்ந்தாள். குதிரைகளை நோக்கி விரைந்த பாரி, ஏதோ எண்ணம் தோன்ற, திரும்பி ஆதினியைப் பார்த்தான். அவள் அப்போதுதான் செங்கிளுவையில் சாய்ந்தாள்.
``மரத்தை விட்டு விலகி வந்து ஓய்வெடு. நான் விரைந்து வருகிறேன்” என்று சொல்லியபடி ஓடினான். அவள் மரம் விட்டு நீங்கினாள். அருகில் இருந்த சிறுபாறையின் மீது உட்கார்ந்து மரத்தைப் பார்த்தாள். `ஏன் அதன் அருகே உட்கார வேண்டாம் என்று சொன்னான்?’ என்று சிந்தித்தபடியிருந்தாள்.
சற்று நேரம் கழித்து குதிரைகளோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே குன்றின் மேல் நடந்தனர். குதிரையைத் தொட்டு வருடும் ஆசையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகூசியபடி அதனுடைய முதுகை வருடிக் கொண்டே கேட்டாள், ``ஏன் மரத்தை விட்டு அகலச் சொன்னீர்கள்?”
``காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. அந்த மரம் பெருங்காற்றைத் தாங்காது. அதனால்தான் தள்ளி உட்காரச் சொன்னேன்.”
``பார்த்தால் வலிமையான மரம்போல் தெரிந்தது. அதனால்தான் அருகில் போனேன்.”
``மலையுச்சி மரங்களின் தன்மையைக் கணிப்பது சற்றே கடினம். எளிதில் நம்மை ஏமாற்றிவிடும்.”
``நீங்கள் எப்படிக் கண்டறிந்தீர்கள்?”

``உதிரும் அதன் இலையை வைத்துதான்.”
``இலையை வைத்தா?”
``ஆம், இலையில்தான் மரத்தின் குறிப்பு இருக்கிறது.”
குதிரைமீதிருந்த கையை விலக்கி அவனைப் பார்த்தாள்.
பாரி சொன்னான், ``உதிரும் இலையின் நுனிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா, அடிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா அல்லது சம எடையுடன் காற்றை வெட்டி வெட்டி மிதந்து வருகிறதா என்பதை இலையின் கீழ்ப்புறம் உள்ள நரம்பின் தன்மையே தீர்மானிக்கிறது. மரங்களுக்கு வயது ஆக ஆக நரம்பின் பிடிமானமும் கன அளவும் மாறும். அது மாற மாற உதிரும் இலையின் தன்மையும் மாறும். எனவே, உதிரும் இலை எந்த நிலையில் உதிர்கிறது என்பதை வைத்தே மரத்தின் வயதையும் ஆற்றலையும் சொல்லி விடலாம்.”
``வியப்பாக இருக்கிறது” என்றாள் ஆதினி.
``இதிலென்ன வியப்பு இருக்கிறது... ஓடும் நரியைப் பார்த்தவுடன் வயதைச் சொன்னார் உன் தந்தை. அதுதான் வியப்பு.”
சொல்லிக்கொண்டிருக்கும்போதே தொலைவில் தேர் நிற்பது தெரிந்தது. பாரி கை நீட்டி அதைக் காண்பித்தான். அதைப் பார்த்தபடியே ஆதினி கேட்டாள், ``தேரின் நேரெதிர் திசையில்தானே கீழே இறங்கினோம். இப்போது இடப்பக்கமாக ஏறி வருகிறோம்?”
``காட்டில் எதையும் நாம் தீர்மானிக்க முடியாது. காடுதான் தீர்மானிக்கும். நாம் பார்க்கப்போனது ஒன்றை; பார்த்தது வேறொன்றை. அப்படித்தான் எல்லாமும்.”
பேசியபடியே தேரை நெருங்கினர். கதிரவன் மலையில் சரிபாதி மறைந்துவிட்டான். காற்றின் வேகம் கூடியபடி இருந்தது. குதிரைகளைத் தேரில் பூட்ட முன்புறமாகப் போனான் பாரி. ஆதினி, வலப்புறமாகத் தேரை நோக்கி நடந்தாள். காற்று பலம்கொண்டு வீசியதில் குதிரை காதுவிடைத்து, கனைத்தது. அதன் கழுத்துப் பகுதியைத் தடவிக்கொடுத்து அமைதிப்படுத்த முயன்றான். அப்போது ஆதினி அழைக்கும் குரல் கேட்டது. குதிரை மீண்டும் எதிர்காற்றில் துள்ளிக் கனைத்தது. குதிரையை அருகில் இருந்த சிறு மரத்தில் கட்டிவிட்டு ஆதினியின் அருகில் வந்தான்.
அவள் தேர்ச்சக்கரத்தின் அருகில் உட்கார்ந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாள் என்று எண்ணியபடி அருகில் வந்தான் பாரி. தேர்ச்சக்கரத்தின் ஆரக்காலில் முல்லைக்கொடி ஒன்று முழுச்சுற்று சுற்றி, தலையை வெளிப்புறமாக நீட்டியபடி இருந்தது. இன்னொரு கொடி பக்கத்தில் இருந்த ஆரக்காலில் பாதி சுற்றி, தலை நீட்டியிருந்தது.
அருகில் வந்த பாரி அதைப் பார்த்தான். கொடியின் தளிர், காற்றுக்கு அசைந்தபடி ஆரக்காலைத் தழுவியிருந்தது. ஆதினியின் முகத்தைப் பார்த்தான். சற்றே பதற்றத்தோடு இருந்தாள். ``தேரை எடுத்தால் இரு கொடிகளும் அறுந்துவிட வாய்ப்புள்ளது. இந்த முல்லைக் கொடியைப் பக்குவமாகப் பின்னோக்கிச் சுழற்றி வெளியில் எடுத்துவிடலாமா?” எனக் கேட்டாள்.
பாரி, எதுவும் சொல்லாமல் முல்லைக் கொடிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்று பெரும்வேகத்தோடு வீசியது. நின்றிருந்த தேர், சற்றே அசைந்துகொடுத்தது. சட்டென சக்கரத்தை இறுகப்பிடிக்க முயன்றாள் ஆதினி. ஆனால், பாரியின் கை அதைப் பிடித்துக் கொண்டிருந்தது. இது நிகழ்ந்துகொண்டிருக்கும் போது குன்றுக்குப் பின்னால் சடசடவெனப் பேரோசை கேட்டது. அதிர்ந்து திரும்பினாள்.
திரும்பாமலே பாரி சொன்னான், ``அந்தச் செங்கிளுவை விழுந்துவிட்டது.”

ஆதினிக்கு, பதற்றம் இன்னும் அதிகமானது. விழுந்த மரத்தில் அடைந்திருந்த பறவைகள் கலைந்து வெளியெங்கும் ஓசையெழுப்பின. அதைக் கவனித்தபடியே ஆதினியிடம் சொன்னான், ``இலையில் மரத்தின் குறிப்பு இருந்ததைப்போல இந்த முல்லைக்கொடிகளில் இருக்கும் குறிப்பு என்னவென்று பார்.”
அவள் முல்லைக்கொடிகளை உற்றுப் பார்த்தாள். சக்கரத்தின் ஆரக்காலை முழுமையாகச் சுற்றிய கொடி, தலையாட்டியபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அது ஆரத்தைச் சுற்றியிருக்கும் விதத்தைக் கவனித்தாள். எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. எங்கே என்று சிந்தித்தபோது வெண்சாரைகளின் நினைவு வந்தது. அதே பின்னல்கொண்டு வளைந்து மேலேற முயன்றது முல்லைக்கொடி. பக்கத்து ஆரத்தின் மீதும் அதே முயற்சியைச் செய்து கொண்டிருந்தது இன்னொரு கொடி.
கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதினியின் கண்கள் கலங்கின. பாரியைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்கள் எண்ணில்லா சொற்களைப் பேசின. ஆண்களின் கண்களைப் படித்தறிய வேறு வழியுண்டா என மனம் பதறியது. ஆனாலும் தொடர்ந்து முயன்றாள். `இடப்புறம் இருப்பதுதான் நானா?’ என்று ஆதினியின் ஆழ்மனம் கேட்க, `இல்லை வலப்புறம் இருக்கும் கொடிதான் உனது சாயலில் தலைசாய்ந்தே இருக்கிறது’ என்று பாரி சொல்ல, மனதுக்குள் நீங்கா உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. `வெண்முல்லையும் வெண்சாரையும் வடிவத்திலும் வாசனையிலும் ஒன்றே!’ என ஆழ்மனம் சொல்லியது. காற்று வீறுகொண்டு வீசியது. ஆதினி, பாரியின் கைகளை இறுக அணைத்துத் தோள் சாய்ந்தாள்.
``குகை நமக்கானதாக மாறியதுபோல, தேர் முல்லைகளுக்கானதாக மாறிவிட்டது” என்றான் பாரி.
வெட்கம் கலையாத சிரிப்போடு ஆதினி சொன்னாள், ``நேற்று நாகம் கற்றுக்கொடுத்தது. இன்று முல்லை கற்றுத்தருகிறது.”
``காடு, கணம்தோறும் நமக்குக் கற்றுத்தந்து கொண்டேதான் இருக்கும்” எனச் சொல்லியபடி தேர் விட்டு நகர்ந்தான் பாரி. தன் விரல்களால் சக்கரங்களின் ஆரங்களைத் தொட்டு வருடியபடி அந்த இடம் விட்டு எழுந்தாள் ஆதினி.
இருவரும் நடக்கத் தொடங்கினர். ஆதினி மெல்லிய குரலில், ``படர்வது குறுமுல்லை. ஒரு மலர் பூத்தால் போதும். காடே மணக்கும்” எனச் சொல்லிவிட்டு, பாரியின் முகத்தைப் பார்த்தாள்.
‘என்ன பொருள் இதற்கு?’ பாரியின் கண்கள் தடுமாறின. பெண்ணின் கண்கள் சொல்வதை முழுமையாகக் கற்க ஆண்களால் முடியுமா என்ன? ‘உதிரும் இலையின் குறிப்பு தெரிந்த உனக்கு வீசும் பார்வையின் பொருள் புரியாதா?’ என்று கேட்பதுபோல் இருந்தது.

இருவரும் காதல் மயக்கம் கலையாமல் நடக்கத் தொடங்கினர். பொன்மணல் துகள் மனமெல்லாம் மின்னிக்கொண்டிருந்தது. கீறல் தழும்புகளிலிருந்து குறுமுல்லையின் நறுமணம் கசியத் தொடங்கியது. பாரியின் வலக்கையைத் தனது இடக்கையால் பின்னியபடி நடந்தாள். வெண்சாரை ஒருபுறமும் குறுமுல்லை மறுபுறமுமாகப் படர்ந்து கொண்டிருந்தன. இருவரும் எவ்வியூர் நோக்கி நடந்தனர்.
இன்றும் ஐவகைக் குறிஞ்சியில் மலர்ப்படுக்கை அமைத்திருப்பர். ஆனால், மலராத முல்லையின் மணமேந்தி, சுடரின்றிப் பரவும் ஒளியேந்தி வந்துகொண்டிருக்கும் இந்தக் காதலர்களின் இரவை மற்றவர்களால் எதுகொண்டு அலங்கரிக்க முடியும்?
போகும்போது கட்டிப்போட்டிருந்த குதிரைகளைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தனர். இரு குன்றுகளைத் தாண்டியபோது எதிரில் பாணர் கூட்டம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எவ்வியூர் வந்து திரும்பும் பாணர்களை, வீரர்கள் அழைத்துக்கொண்டு போயினர்.
``பாரி தேரில்தானே வந்ததாகச் சொன்னார்கள். இப்போது குதிரைகளைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து போவானேன்?” என்று ஒரு பாணன் கேட்க, ``அதோ, தேர் அங்கே நிற்கிறது. அருகில் போய்ப் பார்த்தால் காரணம் தெரியப் போகிறது” என்று இன்னொரு பாணன் சொன்னான்.
``முல்லைக்குத் தேரைக் கொடுத்ததாகப் பாணர்கள் பாடுகிறார்களே அது உண்மையா?” என்று கபிலர் கேட்டதற்குத்தான் இந்த முழுக் கதையையும் பாரி சொல்லி முடித்தான். கேள்வி என்னமோ முல்லைக்கொடியைப் பற்றித்தான். ஆனால், பாரி தனது திருமணக் காலத்திலிருந்து நடந்ததை விளக்கியதற்குக் காரணம், காலம்பன் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
சோமப்பூண்டின் பானம் இருந்தும் அன்று யாரும் ஒரு குவளைகூடக் குடிக்கவில்லை. பாரி நடந்ததைச் சொல்லி முடிக்கும்போது அனைவரும் பெரும்வியப்பில் மூழ்கிப் போயிருந்தனர். முல்லைக்கொடி பற்றிக் கேட்ட கபிலரோ, இராவெரி மரம் பற்றிக் கேள்விப் பட்டதும் அதிர்ந்துபோனார். ``இதைத்தான் வடதேசத்து முனிகள் `ஜோதி விருட்சம்’ எனச் சொல்கிறார்களோ!’’ எனக் கேட்டார்.
தேக்கனின் வியப்பு வேறுவிதமாக இருந்தது. ``நீயும் ஆதினியும் வெண்சாரையைப் பார்த்தீர்களா? இதுவரை சொல்லவேயில்லையே” எனக் கேட்டார். பாரியைப் பற்றிய தேக்கனின் வியப்பு காலகாலத்துக்கு நீங்காது என்பது அவரின் பார்வையிலேயே புலப்பட்டது.
காலம்பனின் வியப்பு முல்லைக்கொடியோ, வெண்சாரையோ அல்ல; `ஆயுதங்களைக் கூர்மையாக்கும் கல் இருக்கிறதா? பல்வேறு தாதுக்களை ஆற்றலாக மாற்றத் தெரிந்த பொதினியின் பதினெட்டுக் குடிகள். அவர்கள் எதையெல்லாம் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்?’ அடுக்கடுக்காய் மேலெழுந்தபடி இருந்தது காலம்பனின் வியப்பு.
எல்லோரும் வியந்ததைப்போல பாரியும் வியப்பு நீங்காமல்தான் இருந்தான். இந்த நிகழ்வு எப்படி வெளியில் தெரிந்திருக்கும் என எண்ணிப்பார்த்தான். ``பேசியபடி தங்களைக் கடந்துபோன பாணர்கள் தேர்ச்சக்கரத்தில் முல்லைக்கொடி பின்னிக்கிடப்பதைப் பார்த்துப் பாடல் புனைந்துள்ளனரோ?!” என்றான்.
கேள்வி, கபிலருக்கு வியப்பைக் கொடுத்தது. ``நிலமெங்கும் உனது புகழைப் பரப்பும் குறியீடு இதுதான்” என்றார் கபிலர்.

``படர வழியின்றிக் கொடி தவித்தால் யாராக இருந்தாலும் அதற்கு வழிசெய்துவிட்டுத்தானே போவார்கள். இதில் வியக்க என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் தேக்கன்.
``மலைமக்களின் வாழ்வை சமவெளி மனிதர்கள் புரிந்துகொள்வது எப்படி எளிதில்லையோ, அதேபோல்தான் சமவெளி மக்களின் எண்ண ஓட்டங்களையும் சிந்தனை நிலையையும் மலைமக்கள் புரிந்துகொள்வதும் எளிதல்ல” என்றார் கபிலர்.
தேக்கனுக்கு அவர் சொல்லவருவது விளங்கவில்லை,
``உங்களுக்கு இது வாழ்வின் பகுதி. எனவே, நின்றுபார்க்க ஒன்றுமில்லை. ஆனால், தவித்து அலையும் மக்களுக்கு இது கனவு. எனவே, கடக்க வழியின்றிப் பாடியபடியே இருக்கின்றனர்.”
கபிலரின் சொற்கள் ஆழத்துக்குப் போயின. அதைப் பற்றிய சிந்தனையும் அவ்வாறே. இரவெல்லாம் பேசினர். சோமப்பூண்டின் பானம் விட்டு மனமும் உடலும் வெளியேறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர். குடியும் இரவும் அவர்களை விட்டு அகன்றன.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...