மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

வனத்தின் சாகசத் தளபதி ஹிப்பாலஸ், வஞ்சி மாநகரத்தில் வந்திறங்கினான். வைப்பூர்த் துறைமுகம் பற்றி எரிந்து பல மாதங்களாகப்போகின்றன. நீண்டநாள்களாக வைப்பூர்க் கோட்டையிலேயே இருந்தவன், பிறகு ஓரிரு இடங்களுக்குப் பயணம் போய் இப்போது வஞ்சியை வந்தடைந்துள்ளான். அவனோடு எபிரஸ், திரேஷியன், கால்பா, பிலிப் ஆகியோர் வந்துள்ளனர்.

பெருவணிகன் வெஸ்பானியன் தலைமையில் யவனத்திலிருந்து ஆறு நாவாய்களில் பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்குப் புறப்பட்டனர் யவனர்கள். `மீனாள்’ என்று யவனத்தில் எழுதப்பட்ட யானை வடிவம் தாங்கிய நாற்சதுர நாணயத்தோடும் எண்ணற்ற பரிசுப்பொருள்களோடும் பாண்டிய நாட்டில் வந்திறங்கினர்.

இந்தப் பெருஞ்சிறப்பு, தமிழ்நிலத்தில் எந்த மன்னனுக்கும் தரப்பட்டதில்லை. அதற்குக் காரணம், யவன வணிகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பாண்டிய நாட்டு முத்துகள். அதன்பொருட்டே யவனப் பெருவணிகன் வெஸ்பானியனும் அரச பிரதிநிதிகளும் துறைமுகப் பொறுப்பாளர்களும் வருகைபுரிந்தனர்.

இவர்கள் வருகைபுரிந்த ஆறு நாவாய்களும் வைகை ஆற்றில் சாம்பலாகக் கரைந்தன. வெஸ்பானியன் நெருப்பிலே மாண்டான். வேதனைகளையும் இழப்புகளையும் தாங்க முடியவில்லை. கடக்க முடியாத துயரங்களைக் கடக்க வழியின்றி நாள்கணக்கில் குடித்தான் ஹிப்பாலஸ். கம்பீரமிக்க தனது நாவாய் எரிந்தபடியே மூழ்கிய காட்சி, அவன் கண்களைவிட்டு எளிதில் அகல மறுத்தது.

எல்லோரையும்போல இது விபத்து என்றுதான் அவனும் முதலில் நினைத்தான். ஆனால், பிறகுதான் செய்தி தெரியவந்தது, பறம்பு வீரர்கள் பற்றவைத்த நெருப்பு என்று. ஆனாலும் காரணம் எளிதில் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. சேர அரசுகளான குட நாட்டுக்கும் குட்ட நாட்டுக்கும் பறம்போடு பன்னெடுங்காலப் பகை இருக்கிறது. பாண்டியனோடு எந்தப் பகையும் பறம்புக்கு இல்லையே. பிறகு ஏன் பறம்பு வீரர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ய வேண்டும் என்பது, விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

காரணம் அறியாமல் வைப்பூர்க் கோட்டையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவோடு இருந்தான். செய்திகள், எல்லா முனைகளிலிருந்தும் ஹிப்பாலஸுக்கு வந்துகொண்டிருந்தன. கடலோடிகள், பெருவணிகர்கள், கடற்கரைப் பணியாளர்கள், வைப்பூர் மக்கள், பாண்டிய அரண்மனைப் பணியாளர்கள், போர்வீரர்கள் என எல்லோரும் ஆளுக்கோர் உண்மையை ஹிப்பாலஸுக்குச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தொகுத்தபடியே இருந்த அவன், கடைசியாகக் கேள்விப்பட்டது தேவாங்கு பற்றிய செய்தியை.

அந்தக் கணத்திலிருந்து அவனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. `திசை உணர்த்தும் ஒரு விலங்கா!’ காலம் முழுவதும் கடலிலேயே பயணப்படும் ஒருவனுக்கு, தேவாங்கு போன்ற விலங்கு நம்ப முடியாத கற்பனையாகத்தான் இருக்கும். ஆனாலும் எல்லா வகைகளிலும் அவன் அதை உறுதிப்படுத்தினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

குலசேகரப்பாண்டியன் அந்த விலங்கைக் கைப்பற்றப் பறம்புக்குத் திரையர்களை அனுப்பிவைத்ததை அமைச்சர்கள்மூலமே தெரிந்துகொண்டான். திரையர்களோடு பறம்பு வீரர்கள் உடன் வந்துதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏனென்றால், விடுதலையான திரையர் குடும்பங்களும் கப்பலிலிருந்து தப்பித்த திரையர்குல வீரர்களும் பறம்புக்குள்தான் நுழைந்துள்ளனர். எனவே, எல்லாம் பாரியின் செயல்தான் என்பதைக் குலசேகரப்பாண்டியன் உறுதிசெய்துள்ளான் என்பது வரை ஹிப்பாலஸுக்குத் தெரியவந்தது.

ஆனாலும், அந்த விலங்கைப் பார்க்காமல் அவனால் நம்ப முடியவில்லை. அந்த விலங்குகள் எல்லாம் பறம்பு வீரர்களால் மீட்கப்பட்டுவிட்டதாகவும் மிஞ்சிய சில, நெருப்பிலே எரிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். ஒன்றிரண்டாவது எஞ்சியிருக்காதா என்று ஹிப்பாலஸ் தொடர்ந்து முயன்றான். அவன் முயற்சி வீண்போகவில்லை.

வைப்பூர்த் துறையில் நெருப்பு பற்றுவதற்கு முன்னரே இரண்டு கலங்கள் துறையை விட்டு வெளியேறியுள்ளன. இறலித்தீவுக்கும் தெங்கின்தீவுக்கும் பயணமான அவை இரண்டிலும் தேவாங்குகள் இருந்திருக்கின்றன. சூழ்கடல் முதுவன் யாரும் அறியாதபடி நள்ளிரவுக்கு முன்னதாகவே அந்தக் கலங்களை வெளியேற்றியுள்ளான் என்பதை ஹிப்பாலஸ் அறிந்தான். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

எப்படியாவது அந்தக் கலங்களில் உள்ள தேவாங்குகளைப் பார்த்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்தான். வைப்பூரிலிருந்து கொற்கைக்கு வந்தவன் சிறிய வடிவிலான வங்கத்தை எடுத்துக்கொண்டு இறலித்தீவுக்குப் புறப்பட்டான். அங்கு போய் சூழ்கடல் முதுவனுக்கு நம்பகமான வணிகத் தோழனிடம் அதிகப்படியான விலைபேசி தேவாங்கைக் கைப்பற்றினான். அதைப் பார்த்த கணத்திலிருந்து இப்போது வரை அவனது வியப்பு நீங்கவில்லை.

`கடலின் எல்லாவித ஆபத்துகளையும் நீக்கும் தேவதை இது!’ என அவன் தேவாங்கை வர்ணித்தான். இப்படியொரு விலங்கு இருக்கும் செய்தி யவனத்தை எட்டுமானால், உலகெங்கும் இருக்கும் கடல் வணிகர்கள் அனைவரும் பாண்டிய நாட்டை முற்றுகையிடத் தொடங்கிவிடுவர். மற்றவர்கள் அறியும் முன், இந்த விலங்கை நாம் கைப்பற்ற வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தான் ஹிப்பாலஸ்.

இறலித் தீவிலிருந்து மீண்டும் கொற்கைக்குத் திரும்பிய அவன், நேராக மதுரைக்குச் சென்றான். குலசேகரப்பாண்டியனைக் கண்டு பேசிவிட்டுத்தான் இப்போது வஞ்சி மாநகருக்கு வந்துள்ளான்.

அவனது வருகை உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. யவனத்தின் பெருமைமிகு வணிகர்களும் கடல் பயண சாகசத் தளபதிகளும் வந்துள்ளதை மகிழ்வோடு வரவேற்றான் உதியஞ்சேரல்.

அவனுடைய உற்சாகத்துக்கு இப்போது கூடுதல் முக்கியத்துவம் இருந்தது. வணிகப் போட்டியில் சேரனின் மிளகை, பாண்டியனின் முத்து கடந்து முன் சென்றுவிட்டது. எனவே, யவன வணிகர்களின் முதல்மரியாதை பாண்டியனை நோக்கியே கடந்த சில ஆண்டுகளாக இருப்பதை யாவரும் அறிவர். அதன்பொருட்டே பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்கு யவனத்திலிருந்து சிறப்பு ஏற்பாட்டோடு பலரும் வந்து பங்கெடுத்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

ஆனால், வைப்பூரில் பற்றிய தீயால் யவன வணிகர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியனின் நற்பெயரில் அழிக்க முடியாத கரும்புகை படிந்துவிட்டது. வைப்பூரில் ஏற்பட்ட இழப்பிலிருந்து எந்த ஒரு வணிகனும் எளிதில் மீண்டுவிட முடியாது. பாண்டியனால் ஏற்பட்ட கசப்பையும் கண்ணீரையும் கடலோடிகளால் எளிதில் கடந்துவிட முடியாது. நெருப்பின் சூட்டைக் கடல் மறக்க, நீண்ட காலமாகும். அதுவரை வஞ்சி நகரே வணிகத்தின் தலைவாசலாக இருக்கும் என்று கணித்தான் உதியஞ்சேரல்.

வைப்பூரில் பற்றிய நெருப்பு, பாண்டியப் பேரரசுக்குப் பெருங்களங்கத்தை உருவாக்கியது உண்மைதான். அதனால் யவன வணிகர்கள் கடுஞ்சினம்கொண்டிருந்ததும் உண்மைதான். ஆனால், இறலித்தீவுக்குப் போய் தேவாங்கை ஹிப்பாலஸ் நேரில் பார்த்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதனால்தான் அவன் மீண்டும் கொற்கைக்குத் திரும்பினான். மதுரைக்குப் போய் குலசேகரப்பாண்டியனைக் கண்டான்.
கடுங்குற்றச்சாட்டைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அவன் திரும்பி வந்திருப்பதாக குலசேகரப்பாண்டியன் நினைத்தார். ஆனால் ஹிப்பாலஸ், ``தங்களைக் கண்டு நன்றி சொல்லவே வந்தேன்”  என்றான். பேரரசருக்கு விளங்கவில்லை.

``காலம் முழுவதும் கடலிலேயே வாழ்வைக் கழிக்கும் கடல்மனிதன் நான். திசை அறியும் ஆற்றல்கொண்ட விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காகவே உங்களைக் கண்டு நன்றி சொல்ல வந்தேன். பாண்டிய நாட்டு வானியல் அறிஞர்களின் ஆற்றல் பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளேன். எமது நாட்டின் மூத்த அறிஞர்கள், பாண்டியர்களைப் பற்றி எண்ணற்ற குறிப்புகளை எழுதிவைத்துள்ளனர். நாட்டை 365 பாகங்களாகப் பிரித்து, நாள்தோறும் ஒவ்வொரு பாகத்தில் குடியிருப்பவர்கள் அரசுக்குத் திறை கட்ட வேண்டும் என்று விதி செய்தவர்கள் பாண்டியர்கள். `பல தலைமுறைக்கு முன்பே ஆண்டை நாள்கணக்கில் துல்லியமாகப் பகுத்து, அதை நிர்வாகத்தோடு இணைத்த அறிவு பாண்டியர்களுடையது’ என எழுதிவைத்துள்ளனர். உங்களின் வானியல் ஆற்றலை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திசை காட்டும் விலங்கொன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்த உங்களின் பேரறிவுக்கு, எங்களின் மரியாதையைச் செலுத்துகிறோம். நீங்கள் கண்டறிந்தது மகத்தான ஒன்று. கடல் இருக்கும் வரை இந்தக் கண்டுபிடிப்புக்காகப் பாண்டியப் பேரரசின் புகழை உலகம் பாடும்” என்றான் ஹிப்பாலஸ்.

அவமான உணர்வால் துவண்டுபோயிருந்த குலசேகரப்பாண்டியனுக்கு, மீண்டும் புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது ஹிப்பாலஸின் பேச்சு. பறம்பின் மீதான பழிவாங்கும் உணர்வு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்தில், அதற்கு இன்னொரு பரிமாணத்தை அவன் வழங்கினான்.

நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் நிலத்துக்கும் யவனத்துக்கும் இடையில் கடல் வணிகம் நடந்துவருகிறது. நுரைதள்ளும் கரைவழிப் பயணமாக இரு நிலத்துக் கடலோடிகளும் பல தலைமுறைகளைக் கழித்துவிட்டனர். இரு நாகரிகங்களும் எண்ணற்றவற்றைப் பரிமாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இரு நிலப்பரப்புகளில் இருப்பவர்களும் கண்டு பெரிதும் வியக்கும் கண்டுபிடிப்பாக தேவாங்கு இருக்கிறது. `சாகசத் தளபதி’ என்று உலகெங்கும் பெயர்பெற்ற ஹிப்பாலஸ், தனது மிகப்பெரிய நாவாய் எரிந்த துயரைக் கடந்து, கண்டறியப்பட்ட தேவாங்குக்காக, தன்னை வணங்கி நிற்கிறான் என்றால் அது எளிதான ஒன்றல்ல.

ஹிப்பாலஸும் குலசேகரப்பாண்டியனும் அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றி நிறைய பேசினர். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது உதியஞ்சேரலைப் பார்க்க வந்துள்ளான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

பறம்பின் மீதான உதியஞ்சேரலின் போர்த் திட்டங்களைப் பற்றித்தான் அவன் உரையாடினான். ஹிப்பாலஸுடன் எபிரஸ், திரேஷியன் இருந்தனர். குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தன் கொல்லிக்காட்டு விதையைப் பெற்றுத்தருவதாகக் கூறி, பறம்புக்குச் சென்று பாரியிடம் வணிகம் பேசியதையும், அதன் பொருட்டு கை துண்டிக்கப்பட்டதையும் கூறிய அவர்கள், குடநாட்டினர் இப்போது உதியஞ்சேரலோடு இணைந்து பறம்புக்கு எதிராகச் செய்யும் முயற்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

யவனர்கள் இங்கு நிகழும் எல்லாவற்றையும் அறிந்துவைத்துள்ளது உதியஞ்சேரலுக்கு வியப்பளிக்கும் ஒன்றாக இல்லை. பல தலைமுறைகளாகச் செழித்தோங்கியிருக்கும் வணிகம், அரசியலுக்குள் ஆழமான வேர்களைச் செலுத்தியிருக்கும் என்பதை அவன் அறிவான்.

ஆனால், பாரியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நீண்டநெடுங்காலமாக சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பது குட்டநாடு. உதியஞ்சேரலின் தந்தையான செம்மாஞ்சேரலைக் கொன்றழித்தவன் பாரி. அதற்குப் பல காலத்துக்கு முன்பே பகை தொடங்கிவிட்டது. உதியஞ்சேரல் பட்டமேற்ற பிறகு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறான்.

அவனோடு முரண்பட்டு விலகியிருந்த குடநாட்டு வேந்தன் குடவர்கோவும் இப்போது இணைந்து செயல்பட முன்வந்துள்ளான். இது சூழலை மிகவும்  ஏதுவாக மாற்றியுள்ளது என்று உதியஞ்சேரல் எண்ணிக்கொண்டிருக்கும் போதுதான் வைப்பூரின் மீதான பாரியின் தாக்குதல் நடந்துள்ளது.

எதிரிகளின் எண்ணிக்கையை, பாரி போதுமான அளவுக்கு அதிகப்படுத்திக்கொண்டான். இதைவிட நல்லகாலம் இனி வாய்க்காது என்று உதியஞ்சேரல் நினைத்துக்கொண்டிருந்தபோது தான் ஹிப்பாலஸ் வந்துசேர்ந்துள்ளான். பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

வைகையின் தென்கரைப் படித்துறையில் இருந்த நிலைமாடத்தில் தனித்திருந்தார் குலசேகரப்பாண்டியன். பொழுது கவியக் காத்திருந்தது. ஆற்றங்கரை எங்கும் கூடு திரும்பும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது. வைகை சீற்றமின்றி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், குலசேகரப்பாண்டியனின் எண்ணவோட்டம் அப்படியில்லை. அது கட்டுக்கடங்காமலே இருந்தது. நீண்டநெடும் அரசியல் அனுபவம், அவருடைய எண்ணங்களை வழிநடத்த முடியாமல் திணறியது. அவர் சிறிது நேரம் நடப்பதும் பிறகு உட்காருவதும் உட்கார்ந்த உடனே எழுந்து நடப்பதுமாக இருந்தார்.

தொலைவில் காவல் வீரர்கள் நின்றிருந்தனர். அவர்களைக் கடந்தே முசுகுந்தரும் மற்றவர்களும் நின்றிருந்தனர். யாரும் நெருங்க முடியாச் சீற்றம்கொண்டிருந்தார் பேரரசர். ஓடும் வைகை, மூழ்கும் கலங்களைக் கண்களுக்குக் காட்டிக் காட்டி மறைத்துக்கொண்டிருந்தது. அவர் தனிமையில் சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் எவ்வளவோ இடங்கள் உண்டு. ஆற்றங்கரை மண்டபத்துக்குப் போனால் வைப்பூரின் நினைவே மீண்டும் மீண்டும் வரும். எனவே, அதைத் தவிர்க்கலாம் என்றுதான் பலரும் சொல்லிப்பார்த்தனர். ஆனால், பேரரசர் வேறு எங்கும் போகாமல் தொடர்ந்து இங்குதான் வருகைதந்தார். அதற்குக் காரணமும் இருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

பாரியின் புகழ், நிலமெங்கும் பரவியிருந்தது. அது ஆள்வோருக்கு இயல்பாகப் பொறாமையை உருவாக்கியிருந்தது. இடைவிடாது பாடித் திரியும் பாணர்கள் தங்கள் குரல் நாளங்கள் விடைப்புற்று வலியெடுக்கும்போதும் பாரியைப் பற்றியே பாடுகின்றனர். சொற்களுக்குள் உருளும் பாரியின் நினைவு, குரல் நாளங்களுக்கு இதம் தருவதாக பாணர் குலமே கருதியது. தோற்பறையை நெருப்பிலே சூடேற்றி ஒலியெழுப்பும் பக்குவத்துக்குக் கொண்டுவருதல்போல பாடிக் களைத்த குரல் நாளங்களை மீண்டும் பாடும் பக்குவத்துக்குக் கொண்டுவர பாரியைப் பற்றிய பாடல்கள் உதவி செய்வதாகவும் பேசினார்கள். பாரியைப் பற்றிய பாணர்களின் பேச்சும் பாட்டும் இசையும் கூத்தும் வேந்தர்களின் ஆழ்மனதில் வெறுப்பை இடைவிடாது உமிழ்ந்துகொண்டிருந்தன. புகழைப் பழுக்கக்காய்ச்சி வேந்தர்களின் அடிநெஞ்சில் இடைவிடாமல் ஊற்றினர். அது எல்லா வகைகளிலும் வினையாற்றிக்கொண்டே இருந்தது.

பாரியின் மீது வெறுப்பும் பொறாமையும் குலசேகரப்பாண்டியனுக்கும் உண்டு. ஆனாலும் தேவாங்குக்காகப் போர் தொடுக்க வேண்டும் என்று கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூறியபோதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல்கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல்கொண்டது. பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது பகை உருவாகவேயில்லை. அதன்பொருட்டே குலசேகரப்பாண்டியன் போர்தொடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. பெரும் மலைத்தொடருக்குள் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்ற வளமிக்க போர்ப்படை மட்டும் போதாது; அதை வழிநடத்துபவர்களுக்கு ஆறாப்பகை இருக்க வேண்டும். அதுதான் அவர்களைச் சினம் குறையாமல் இயக்கிக்கொண்டேயிருக்கும். பகை, கணம்தோறும் ஊறிப் பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னைப் பெருக்கிக்கொள்ள இயல்பாகப் பயன்படுத்திக்கொள்ளும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.

இப்போது பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது தீராப்பகை உருவாகிவிட்டது. நகரும் நதிநீரை கணம்தோறும் பார்த்தவண்ணமே அந்தப் பகையைக் கொழுந்துவிட்டெழச் செய்துகொண்டிருக்கிறார் குலசேகரப்பாண்டியன்.

பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே உதியஞ்சேரலும் ஹிப்பாலஸும் பேசிக்கொண்டிருந்தனர். உதியஞ்சேரல் வயதில் மிக இளையவன். ஹிப்பாலஸைப்போல நெடிய உயரம்கொண்டவன். அவனது அறிவுக் கூர்மையைப் பலரும் பாராட்டுவதை எத்தனையோ முறை கேட்டுள்ளான் ஹிப்பாலஸ். 

குலசேகரப்பாண்டியன் பறம்புக்கு எதிரான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக ஹிப்பாலஸ் சொன்னபோது, உதியஞ்சேரல் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

சிற்றலைகள் எழுந்தபடியிருந்த பேரியாற்றின் கரையில் கண்களை அங்குமிங்குமாக ஓடவிட்டவாறு உதியஞ்சேரல் சொன்னான், ``பகைமைகொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்குத் தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே, பாண்டியன் இப்போது எடுக்கும் முடிவால் பறம்புக்கு எந்த ஆபத்தும் நிகழப்போவதில்லை.”

உதியஞ்சேரலின் உரை கேட்டு அதிர்ச்சியானான் ஹிப்பாலஸ். பறந்துவந்த மீன்கொத்தி ஒன்று சட்டென மீனைக் கொத்தித் தூக்கியதைப் பார்த்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``தேவாங்கின் ஆற்றலைக் கண்டறிந்தது பாண்டியனின் அறிவுக்கூர்மையைக் காட்டுகிறது. ஆனால், அதைப் பிடித்துவர திரையர்களை அனுப்பியது மலைமக்களைப் பற்றிய அறிவற்றதனத்தையே காட்டுகிறது.”
ஹிப்பாலஸ், புரியாமல் விழித்தான்.

``நாம்     இவ்விடம்  வந்து   இருபொழுது களாகின்றன. அந்த மீன்கொத்தி, நீண்டநேரம் நாணலில் உட்கார்ந்திருந்தது. பிறகு அந்த மரக்கிளையில் போய் உட்கார்ந்திருந்தது; காற்றிலே வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்துக்காக அது காத்திருந்தது. அந்தக் கணம் வந்தவுடன் மலையின் மேலிருந்து பாய்ந்து இறங்கும் வீரனைப்போல காற்றைக் கிழித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனைக் கவ்வித் தூக்கியது.

நீருக்குள் இருக்கும் மீனை நீரைவிட்டு வெளியில் இருக்கும் ஓர் உயிரினம் வேட்டையாடுவதைப்போல சவால் நிறைந்தது வேறில்லை. நீரின் மேற்பரப்பில் நீந்திக்கொண்டிருக்கும் மீன், மீன்கொத்தியின் அலகைத் தாண்டிய ஆழத்துக்குப் போகும் முன் காற்றைக் கிழித்துக் கீழிறங்கி வரவேண்டும். அப்படியென்றால், எவ்வளவு துல்லியமான கணிப்பு தேவை. பார்வையின் கூர்மை, சிறகு அசைக்கும் வேகம், கொத்தித் தூக்கும் அலகின் துடிப்பு எல்லாம் ஒருங்கிணைய வேண்டும். ஆனால், எந்தக் காத்திருப்பும் ஆயத்தமும் இல்லாமல் கடகடவெனக் காட்டுக்குள் இறங்க முடிவெடுத்தான் பாண்டியன். அவனது அறியாமை எல்லையற்றது” என்றான் உதியஞ்சேரல்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

வயதில் மிக மூத்தவரான பேரரசர் குலசேகரப்பாண்டியனின் அரசியல் நடவடிக்கையை, சொற்களால் இடித்துத் தள்ளினான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
``பறம்பின் மீது போர் தொடுப்பது என நான் முடிவெடுத்து, பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் நாணலின் மீது உட்கார்ந்தும் கொப்பில் அமர்ந்தும் காற்றில் பறந்தபடியும்தான் இருக்கிறேன். நீரை நோக்கிப் பாயும் நேரம் இன்னும் கைகூடவில்லை” சொல்லும்போது அவன் கண்கள் சிவந்தன. முறுக்கேறிய கைகளின் ஆவேசத்தை அவனால் கட்டுப்படுத்த முடிந்தது.

``அந்தக் கணம் வரை நான் காத்திருப்பேன். சீவப்பட்ட என் தந்தையின் தலைக்கு ஈடாக, பாரியின் தலையை மண்ணில் சரிப்பேன்.” சொற்களிலிருந்த உறுதி ஹிப்பாலஸையே உலுக்கியது.

``குடநாடும் நீங்களும் பறம்புக்கு எதிராகப் போர்புரிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அறிகிறேன். அதேபோல பாண்டியருடனும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கலாம் அல்லவா?”
``அதற்கான தேவையும் இல்லை. அதனால், எந்தப் பலனும் நேரப்போவதில்லை.”

``ஏன்?”

``எங்களைவிட மூன்று மடங்கு பெரும்படை பாண்டியர்களிடம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால், பாண்டிய நாட்டின் நிலவியல் அமைப்பு, பச்சைமலைத் தொடரின் தன்மை இவற்றைக்கொண்டு பார்த்தால், கீழ் திசையிலிருந்து பறம்பை எதுவும் செய்துவிட முடியாது. காரமலையைக்கூட அவர்களால் தாண்ட முடியாது. மேலேறும் பாண்டியர் படையை அழித்தொழிக்க, பாரிக்கு அதிகப்பொழுது தேவைப்படாது.”

``பேரரசின் படையை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியும் என்றா சொல்கிறீர்கள்?”

``பறம்பின் ஆற்றல் என்ன என்று பத்தில் ஒரு பங்குகூட பாண்டியர்களால் உணர முடியாது. அதனால்தான் அறிவீனமான செயல்களைச் செய்துதொலைக்கிறார்கள்.”

உதியஞ்சேரலின் கோபத்துக்கான காரணத்தை ஹிப்பாலஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ``குடநாடும் குட்டநாடும் பச்சைமலைத் தொடரின் பெருங்காட்டின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறோம். எங்களாலேயே அவனது ஆற்றலை இன்று வரை அளவிட முடியவில்லை. எல்லை கடந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறான் அவன். அப்படி இருக்கும்போது, எங்கோ இருந்த திரையர்களையும் அவர்களோடு சேர்த்துவிடும் மூடத்தனத்தைக் கண்டு சினம்கொள்ளாமல் என்ன செய்வது?”

உதியஞ்சேரலின் சினத்துக்கான காரணத்தை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

``இதுவரை பாரியின் புகழை மட்டுமே பாடிக்கொண்டிருந்த பாணர்கள், இப்போது `வேந்தர்களை மீறிய வீரம்கொண்டவன் பாரி’ எனப் பாடுகின்றனர். வேளிர்களை வேந்தர்களுக்கு இணையாகச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் தளம் அமைத்துக்கொடுத்துவிட்டான் பாண்டியன்.”

உதியஞ்சேரல் அடுக்கடுக்காக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கேட்டபடி நின்றுகொண்டிருந்தான் ஹிப்பாலஸ். அடுத்து என்ன சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை.

பேரியாற்றைப் பார்த்துக்கொண்டே பேசிய உதியஞ்சேரலின் முகத்தில் சற்றே மாறுபட்டதன்மை வெளிப்பட்டது. இழுத்து மூச்சுவாங்கி விட்டபடி சொன்னான், ``நடந்தவை எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கும்போது பாண்டியன் செய்தது எல்லாமே பிழை. ஆனால், பறம்பின் வீரர்கள் செய்த பிழையும் ஒன்று இருக்கிறது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்கவேண்டியுள்ளது.”

இவ்வளவு நேரம் நிகழ்ந்த உரையாடலில் மிக முக்கியமான ஒன்றைப் பற்றி இப்போது உதியஞ்சேரல் பேசுவதாக ஹிப்பாலஸுக்குத் தோன்றியது.

சற்றே ஆர்வத்தோடு கேட்டான், ``என்ன அது?”

``இளமாறனை வெட்டி வீசியது.”

ஹிப்பாலஸ் வியப்பு நீங்காமல் பார்த்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

``மையூர்கிழாரின் மகன் இளமாறனின் தலையை வெட்டி வீழ்த்தியதன் மூலம் வெங்கல் நாட்டின் பகையைத் தேடிக்கொண்டனர். எந்தக் காரணம்கொண்டும் பறம்புக்குத் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதிபூண்ட குலம் அது. ஆனால், இன்று வெங்கல் நாட்டுத் தலைவர் மையூர்கிழார் தன் மகனின் சாவுக்குப் பழிதீர்க்கச் சூளுரைத்துள்ளார். வெங்கல் நாட்டின் பல ஊர்கள் பச்சைமலைத் தொடரில் உள்ளடங்கியுள்ளன. பறம்பின் ஊர்கள் பலவற்றோடு அந்த மக்களுக்கு நல்ல உறவு உள்ளது. இது எங்களுக்குக்கூடக் கிடைக்காத வாய்ப்பு.”

ஹிப்பாலஸின் கண்கள் அசைவற்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

உதியஞ்சேரல் இறுதியாகச் சொன்னான், “குலசேகரப்பாண்டியன் சரியாகத் திட்டமிடுபவனாக இருந்தால், பாரியின் முடிவைத் தீர்மானிப்பவனாக மையூர்கிழாரை மாற்ற முடியும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...