Published:Updated:

வெள்ளி நிலம் - 27

வெள்ளி நிலம் - 27
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 27

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன் கதை: இமயமலைப் பகுதியில் ஒரு பௌத்த மடத்தைச் சீரமைக்கும்போது ஒரு மம்மி கிடைக்கிறது. அந்த மம்மியைக் கடத்திச்செல்ல ஒரு கும்பல் முயல்கிறது. அதில் ஏதோ விபரீதம் இருப்பதால், அதைப் பற்றித் துப்புத் துலக்கக் காவல் அதிகாரி பாண்டியன் தலைமையில் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், சிறுவன் நோர்பா மற்றும் அவனது செல்ல நாய் நாக்போ ஆகியோர் கொண்ட டீம் களத்தில் இறங்குகிறது. ஒவ்வொரு விஷயமாகத் துப்புத்துலக்க அவர்கள் டீம் இமாலயம், நேபாள், பூட்டான், திபெத் என்று செல்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு திடுக் திருப்பத்துடன் அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்று இறுதியில் பிரதான வில்லனான லீ பெங் ஸூவை நெருங்குகிறார்கள். அவரும் ஏன் இதைச் செய்கிறோம் என்று விளக்கிச்சொல்லி அவர்களை ‘அரசர்களின் சமவெளி’ எனும் இடத்துக்கு அழைத்துச்செல்கிறார்...

ள்ளிரவைக் கடந்ததும் வானத்திலிருந்த நீராவி முழுக்கப் பனியாக மாறி மண்ணில் விழுந்து முடிந்தது. அதன்பின், காற்று தெளிவடைந்தது. பனிப்பாளமாக இருந்த தரையிலிருந்து மெல்லிய ஒளி எழத் தொடங்கியது. ஆகவே, பார்வை தெளிந்துகொண்டே வந்தது. ‘‘இப்போது நன்றாகவே தெரியத் தொடங்குகிறது” எனப் பாண்டியன் முணுமுணுத்தான்.

பனிப்பாளங்களின் அகவெளிச்சம் மென்மையான நிலவொளிபோல இருந்தது. அதில், மலையடுக்குகளும் சாலையும் தெரியத் தொடங்கின. பான், சாலையைப் பார்த்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தார். பாண்டியன் இந்தியில் மெள்ள, ‘‘இவர் ஏன் நம்மைக் கொல்லாமல் இதையெல்லாம் சொல்கிறார்... ஏன் அழைத்துச்செல்கிறார்?” என்றான்.

“நம்மிடமிருந்து இன்னும் எதையோ அறிந்துகொள்ள விரும்புகிறார்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“எனக்கு இந்தி தெரியும்” என்றார் லீ பெங் ஸூ.

பாண்டியன் பெருமூச்சுடன் “ஆம், நான் ஊகித்திருக்க வேண்டும்” என்றான்.

அவர்கள், ‘சோங்க்யே’ எனப்படும் இறந்தவர்களின் சமவெளியை அடைந்தார்கள். அதன் தொடக்கத்தில் பனிமலை ஒன்றின் அடியில் ரிவோ டெச்சென் என்னும் தொன்மையான பௌத்த மடாலயம் அமைந்திருந்தது. பனி வெளிச்சத்தில் நிழலுருவாக அது தெரிந்தது.

“திபெத்தின் தொன்மையான மடாலயங்களில் ஒன்று இது. உண்மையில் இது, முன்பு பான்மதத்தின் ஆலயமாக இருந்தது. இப்போது, பௌத்தர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளே மைத்ரேய புத்தரின் சிலை உள்ளது” என்றார் லீ பெங் ஸூ.

வெள்ளி நிலம் - 27

“இங்கே இருக்கும் புத்தபிட்சுக்கள்தான்,  இறந்தவர்களின் சமவெளியில் உள்ள கல்லறைக் குன்றுகளைப் பார்த்துக் கொள்கிறார்கள்” என்று பான் சொன்னார்.

ஆள் உயரமான இரு கல்தூண்கள், அவர்களுக்கு முன்னால் தெரிந்தன. அவற்றில் சிம்ம உருவம் செதுக்கப்பட்டிருந்தது. “இவை Stele எனப்படும் குலக்குறித் தூண்கள். உலகமெங்கும் பழங்குடிகள் இப்படித் தூண்களை நிறுவுவதுண்டு” என்றார் டாக்டர்.

“சிம்மங்கள் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது” என்றான் பாண்டியன்.

“சீனர்களின் சிலைகளில் சிம்மங்கள் முக்கியமானவை. அவை காலம், மரணம் ஆகியவற்றைக் குறிக்கின்றன. நுழைவுவாயில்களில் சிம்மங்களை அவர்கள் நிறுவுவதுண்டு. ஆண் சிம்மம் வலப்பக்கம் இருக்கும். அது, உலக உருண்டையைக் காலால் பற்றிக்கொண்டிருக்கும். பெண்சிம்மம், இடப்பக்கம் இருக்கும். உண்மையில், சிம்மங்கள்தான் இவர்களின் பழைமையான அடையாளம். அதைத்தான் பாம்புடன் இணைத்துப் பிற்பாடு, டிராகனாக மாற்றிக்கொண்டார்கள்” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார்.

அவர்களின் கார் உள்ளே சென்று நின்றது. அவர்களைச் சுற்றி, எட்டு பனிமூடிய குன்றுகள் தெரிந்தன. பனிவிழுவது முற்றிலும் ஓய்ந்திருந்ததனால் மிகத்தெளிவாக அவற்றைக் காணமுடிந்தது.

இங்கு, இன்று இருக்கும் கல்லறைக்குன்றுகளில் மிகப்பெரியது, அதோ அந்த நதியின் கரையில் இருப்பதுதான். என அவர்களைப் பான் அழைத்துச்சென்றார்.

“இந்த நதிக்கு, ‘சோன்க்யி’ என்று பெயர். ஆண்டில் ஆறுமாதம்தான் நீர் ஒழுகும். ஆறுமாதம் உறைந்தே கிடக்கும்” என்று சுட்டிக்காட்டினார்.

அந்தப் பெரிய பனிக்குன்றை அவர்கள் அணுகினர்.

‘‘இது, கி.பி 6-ம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட மாமன்னர் சாங்ஸ்டன் காம்போ அவர்களின் கல்லறை. அவர்தான் ஜோக்காங் மடாலயத்தைக் கட்டியவர்” என்று பான் சொன்னார்.”அவர்தான் திபெத்துக்குப் பௌத்த மதத்தைக் கொண்டுவந்தவர். அவரைப் புத்தரின் மறுபிறப்பாகவே இங்கே நினைக்கிறார்கள்.”

“ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன்.” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“அவர், திபெத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ‘நாம்ரி காம்போ’ யார்லங் சமவெளியை ஆட்சிசெய்தார். ஆனால்...” என்று நிறுத்திய பான், “அவருடைய முன்னோர் சீனாவிலிருந்து வந்தவர்கள். அவர், திபெத்தில் இருந்தும் நேபாளத்தில் இருந்தும் அரசியரை மணந்தார். ஆனால், அவருடைய முதன்மையான மனைவியாகிய  வென்சாங், சீன அரச குடியைச் சேர்ந்தவர். டாங் வம்சத்தைச் சேர்ந்தவராகிய சீனச் சக்கரவர்த்தி டைஸோங் அவர்களின் மகள்” என்றார்.

அவர்கள், அந்தப் பனிமேட்டை அடைந்தார்கள். “1983-ல் இந்த மேட்டை விரிவாக ஆராய்ந்தது சீன அரசு. இப்போதிருக்கும் வடிவில்  இது மறு அமைப்பு செய்யப்பட்டது. இந்தக் குன்றுக்குள் கற்களால் கட்டப்பட்ட சிறிய கல்லறை உள்ளது.”

அதற்குள் செல்ல ஒரு சிறிய வாசல் இருந்தது. அது, இரும்புக்கதவால் பூட்டப்பட்டிருந்தது. பான், அதன்மேல் படிந்திருந்த பனிப்பொருக்குகளைத் தட்டி உதிர்த்தார். அதன் மின்னணுப் பூட்டில் தன் கட்டை விரலை வைத்தார். அவருடைய கைரேகையைப் புரிந்துகொண்டு, அது ‘ர்ர்ர்’ என்று ஓசையிட்டது. சிவப்பு விளக்குகள் எரிந்தன. அவர், அந்தக் கதவைத் திறந்தார்.

“உள்ளே வாருங்கள்... குனிந்து வரவேண்டும்” என்றார் பான்.

அவரைத்தொடர்ந்து அவர்களும் உள்ளே சென்றார்கள். கல்லறைக்குள் செல்வது வரை மிகவும் குனிந்துதான் செல்லவேண்டியிருந்தது. உள்ளே நிற்க இடமிருந்தது. பான், ஒரு சிறிய விளக்கை ஏற்றினார். அறைக்குள் ஒளி நிறைந்தது.

வெள்ளி நிலம் - 27

அதற்குள் ஒரு வெள்ளிச் சவப்பெட்டி இருந்தது. அதைப் பான் திறந்தார். அதற்குள் பொன்னால் செய்யப்பட்டு, வைரங்கள் பதிக்கப்பட்ட மார்புக்கவசம் இருந்தது. அதைத்தவிர, வைரங்கள் பதிக்கப்பட்ட குண்டலங்களும் பலவகையான மாலைகளும் இருந்தன. ‘‘இவை, சாங்ஸ்டன் காம்போ அவர்களுக்குரியவை” என்றார்.

உள்ளே சீனத்து வெண்களிமண்ணால் செய்யப்பட்ட இரு படைவீரர் சிலைகள் இருந்தன. அருகே, ஏழு குதிரைச் சிலைகள் இருந்தன. “இவ்வாறு இறந்தவர்களுடன் அவர்களின் வீரர்களையும் குதிரைகளையும் சிலையாகச் செய்துவைப்பது, சீனாவில் உள்ள வழக்கம். எகிப்திலும் இவ்வழக்கம் இருந்தது” என்றார் பான்.

பான், அங்கிருந்த பித்தளைப் பெட்டிகளைத் திறந்தார். “பொன் நாணயங்களும் வைரங்களும் இருந்தன. அவை, சீன அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன” என்றார்.

அவர் அந்தச் சவப்பெட்டியைச் சுட்டிக்காட்டி, ‘‘1983-ல் இதைக் கண்டுபிடித்தோம். இதற்குள்தான் சாங்ஸ்டன் காம்போ அவர்களின் மம்மி இருந்திருக்கிறது.”

‘‘ஆம், இதன் வடிவம் அதற்குப் பொருத்தமானது” என்றார் டாக்டர்.

“முதலில் இங்கே இருந்த மம்மி காணாமலாகிவிட்டது என்றுதான் நினைத்தோம். அப்போதுதான் , அருகே வெறும்தரையில் சாதாரணமாகப் புதைந்துகிடந்த அந்த மம்மி கிடைத்தது. நான் காட்டினேன் அல்லவா... அது, சாங்ஸ்டன் காம்போ அவர்களின் மம்மிதான்.”

“அது எப்படி வெளியே சென்றது?” என்றான் பாண்டியன்.

“13-ம் நூற்றாண்டிலேயே அதை எவரோ வெளியே கொண்டுசென்றிருக்கிறார்கள். அந்த மம்மியின் உடலில் இருந்த ரசாயன மாற்றங்களை வைத்து அதைக் கண்டுபிடித்தோம்” என்றார் பான்.

‘‘கொள்ளையர்களா?” என்றான் பாண்டியன்.

“இல்லை. அவர்கள் இந்த வைரத்தைக் கொள்ளையடிக்கவில்லையே. அவர்கள் மம்மியின் உடலில் வேறு எதையோ தேடியிருக்கிறார்கள்.”

“எதை?” என்றான் பாண்டியன்.

“நாம் தேடியதைத்தான்” என்று பான் புன்னகைசெய்தார். “அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நாம் கண்டுபிடித்துவிட்டோம்.”

‘‘சாங்ஸ்டன் காம்போ பௌத்தர் அல்லவா? அவர் பான் மதநம்பிக்கை கொண்டவரா?” என்றான் நோர்பா.

“அவருக்குச் சீனத் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய சீன அரசி, பான் மதத்தைச் சேர்ந்தவர். ஆகவே, அவர் சீனாவிலிருந்து வந்த பான் மதத்தை நம்பியிருக்கலாம்” என்றான் பாண்டியன்.

வெள்ளி நிலம் - 27

“ஆம், சாங்ஸ்டன் காம்போவின் காலகட்டத்தில், திபெத்தில் எட்டு பெரிய அரசுகளும் பல சிறிய அரசுகளும் இருந்தன. அனைத்தையும் அவர் ஒன்றாகச் சேர்த்தார். மாளிகைகளைக் கட்டினார். பெரிய படையை உருவாக்கினார். அதை அவர் எப்படிச் சாதித்தார் என்ற கேள்விக்கு இதில் விடை இருக்கிறது” என்றார் பான்.

“எப்படி?” என்றான் பாண்டியன்.

“அன்று, இங்கே இருந்த அனைத்து மன்னர்களுமே பான் மத நம்பிக்கை கொண்டவர்கள். பான் மதத் தெய்வங்களின் அருள், அவருக்கு இருக்கிறது என அந்த மன்னர்கள் நம்பியதனால்தான், அவர்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். அதோடு, அவருக்கு மிகப்பெரிய புதையல்களும் கிடைத் திருக்கலாம்” என்றார் பான்.

“எப்படி?” என்றான் பாண்டியன்.

“அதைத்தான் நாங்கள் கண்டுபிடித்தோம். அதற்குத்தான் நீங்கள் உதவினீர்கள்” என்றார் பான். 

“நாங்களா?

“ஆம், காட்டுகிறேன் வாருங்கள்” என அவர் அவர்களை வெளியே அழைத்துச்சென்றார். மீண்டும் கைரேகையை வைத்து அந்தக் கல்லறையைப் பூட்டினார்.

லீ பெங் ஸூவிடம் “இங்கே நின்றுகொள்...” என்று ஆணையிட்டுவிட்டு, அவர்களைக் கூட்டிச்சென்றார்.

அங்கே, ஒரு சிறிய மேடு இருந்தது. அதனருகே நான்கு ஆள் உயரக் கல்தூண் ஒன்று நின்றது. அதிலும் சிங்கம் பொறிக்கப்பட்டிருந்தது.

“இது ஸாங்க்ஸ்டன் மன்னரின் பேரன் டைரேட் சாங்ஸ்டனின் கல்லறை. இதற்குள் ஒன்றுமே இல்லை” என்றார் பான். 

அதற்குள் அவர்களை அழைத்துச்சென்றார். அது, மிகச்சிறிய அறை. சுவர்கள் செங்கல்லால் ஆனவை. சிற்பம் ஏதும் இல்லை.

உள்ளே அவர், விளக்கால் வெளிச்சத்தை உருவாக்கினார். சுவர்களின் செங்கற்களில் ஏதோ எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன.

பான், “இதைத் திறக்கும் சூத்திரம்தான் சீன எழுத்துக்களாக இருந்தன. மம்மிகளின் உடலில் இருந்தும் திரைச்சீலைகளில் இருந்தும் மிலரேபா குகையில் இருந்தும் நான் சேர்த்து அதை எடுத்தேன்” என்றார்.

பின்னர் , விளக்கை அணைத்தார். அந்த எழுத்துக்களைக் கைகளால் தொட்டுத்தொட்டு எதையோ செய்தார். கரகரவென ஓசை கேட்டது. மொத்தக் குகைச்சுவரும் மெள்ள அசைவதுபோல இருட்டுக்குள் தெரிந்தது.

மீண்டும் அவர் வெளிச்சம் வீசியபோது, அங்கே ஒரு சுரங்கம் திறந்திருந்தது. “வாருங்கள்... மிகச்சிறிய சுரங்கப்பாதை. அமர்ந்தும் தவழ்ந்தும்தான் செல்ல வேண்டும்” என்றார் பான்.

அவர்கள் உள்ளே சென்றார்கள். எலிகளைப்போல ஊர்ந்து செல்லவேண்டியிருந்தது. சில இடங்களில் புழுக்களைப்போல செல்லவேண்டியிருந்தது. புழுதியும் கெட்ட காற்றும் நாற்றமடித்தன. மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உள்ளே சென்றதும் பான் எழுந்து நின்றார். அவர்கள், அருகே சென்று நின்றனர்.

வெள்ளி நிலம் - 27

“பாருங்கள்” என்றார் பான்.

பாண்டியன், “ஆ” எனக் கூவிவிட்டான்.

அது, மிகப்பெரிய கூடம். கற்களால் கட்டப்பட்டிருந்தது. அதன் நடுவே, 20 அடி உயரமான ஷென்ரப் மிவோச்சேயின் சிலை இருந்தது. நோக்க நோக்க அது தெளிந்து வந்தது. 16 கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தியிருந்தன. பானின் கையில் இருந்த வெளிச்சத்தில், அதன் கண்கள் சிவந்து ஒளி பெற்றபடியே வந்தன. சிறிய விளக்குகள்போல ஆயின.

“சிவந்த வைரங்களைக் கண்களாகப் பதித்திருக்கிறார்கள்” என்றார் பான்.

அதன் பற்களில் வெண்ணிற வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. கழுத்தில் நீலநிறமான வைரங்களால் ஆன ஆரம். காதில் வைரக்குண்டலங்கள். அதன் உடலெங்கும் வைரங்கள் தெளிந்து வந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில், அச்சிலை தகதகவென மின்ன ஆரம்பித்தது.

“உலகிலேயே மதிப்புமிக்க வைரம், ‘கோகினூர்.’ உலகிலேயே மிகப்பெரிய வைரம், ‘குல்லினன்.’ இந்த ஒரு சிலையின் உடலில் 1000 கோகினூர்களும் 1000 குல்லினன்களும் உள்ளன. உலகின் மிகப்பெரிய செல்வம் என இந்த ஒரு சிலையையே சொல்லிவிடமுடியும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“இந்தக் கூடமெங்கும் சிலைகள் உள்ளன. எல்லாமே ஆளுயரச் சிலைகள்” என்று பாண்டியன் சொன்னான்.

அந்தச் சிலைகள் அனைத்துமே வெண்களிமண்ணால் செய்யப்பட்டவை. ஆனால், வண்ணங்கள் இருந்தன. உண்மையான மனிதர்களின் அளவுள்ளவை. உண்மையான மனிதர்களைப்போலவே வண்ண ஆடைகள் அணிந்திருந்தன. தோல் காலணிகளும் இடைப்பட்டைகளும் இருந்தன. இடையில் உடைவாள்கள், மார்பிலும் தோள்களிலும் கவசங்கள். அனைவருமே படைவீரர்கள் என்று தோன்றினர்.

‘‘ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஒரு ராணுவமே உள்ளது’’ என்றான் நோர்பா.

“இதேபோல நூற்றுக்கும் மேலான கூடங்கள் இங்கே உள்ளன. முழுக்கச் சிலைகளும் புதையல்களும்தான். கேளா ஒலியலை வழியாக நான் அவற்றைக் கண்டுபிடித்திருக்கிறேன்” என்றார் பான்.

“குயின் மன்னரின் சுடுமண் ராணுவம்போல உள்ளது” என்றார் டாக்டர்.

‘‘இந்தப் பெரும்புதையலைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கமுடியும் . பெரிய ராணுவத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும். அனைத்தையும்விட மேலாக, இந்தத் தெய்வங்களின் அருள் தங்களுக்கு இருக்கிறது என்று மக்களை நம்பச்செய்தால், மக்கள் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள். சாங்ஸ்டன் காம்போ மன்னர் செய்தது அதைத்தான். அவருக்கு இந்த இடத்தின் ரகசியத்தை அவருடைய சீன அரசி வென்செங் சொல்லிக்கொடுத்தாள். இப்போதும் அதைச்செய்ய சிலர் முயல்கிறார்கள்.”

‘‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’’ என்றார் டாக்டர்.

“எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்தாக வேண்டும். ஒரு குறியீடு. அதை உங்களால் ஒருவேளை சொல்லமுடியும் என நினைக்கிறேன்” என்றார் பான்.

(அடுத்த இதழில் நிறைவுபெறும்.)

வெள்ளி நிலம் - 27

களிமண் ராணுவம்.

1974-ல் சீனாவில் உள்ள ஸியாங் மாநிலத்தில் உள்ள லிங்டாங் மாவட்டத்தில், விவசாயிகள் கிணறு வெட்டும்போது சில களிமண் சிலைகளைக் கண்டெடுத்தனர். மனித அளவுகொண்டவை அவை. சீனக் களிமண்ணால் செய்யப்பட்டவை. பின்னர், அப்பகுதியை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், ஆயிரக்கணக்கில் சிலைகளைக் கண்டெடுத்தார்கள். உலகில் கிடைத்த மிகப்பெரிய தொல்பொருள் குவியல் இதுதான்.

இதுவரை 8,000 படைவீரர்கள், குதிரைகளுடன் 520 தேர்கள், 150 போர்க்குதிரைகள் 200 வண்டிகள் இங்கே கிடைத்துள்ளன. இப்போது, சீன அரசு அகழ்வை நிறுத்திவிட்டது. இன்னும் சுடுமண்சிலைகள் உள்ளே புதைந்திருக்கலாம் என்கிறார்கள்.

கி.மு 200 வாக்கில், சீனாவை ஆண்ட குயின் வம்சத்து மன்னர்களால் உருவாக்கப்பட்டவை இந்தச் சிலைகள். மன்னர் இறந்தபோது, இவையும் சேர்த்துப் புதைக்கப்பட்டன.