மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

மூன்று வகையான திட்டங்களை முன்வைத்தான் கருங்கைவாணன். மழைக்காலம் முடிந்துவிட்டது; இனி நெடுங்கோடைதான். எனவே  கோடைக்காலத்துக்கேற்ப உத்திகளை வகுத்தான். பாண்டியப் பெரும்படையின் வலிமை அளவற்றது; வேறெந்தப் பேரரசுடனும் ஒப்பிட முடியாதது; தொடர்ந்து எண்ணற்ற வெற்றிகளை ஈட்டிவருவது. அறுவடைக்காலம் முடிந்ததும் இதுபோல் இன்னொரு மடங்கு வீரர்களைத் திரட்ட முடியும். எனவே, கருங்கைவாணன் வகுத்த திட்டத்தில் இடம்பெற்றிருந்த வீரர்களின் எண்ணிக்கை இந்த மண் அறியாதது.

``பாண்டியப்படை கேடயத்தோடு வாள் உரசும் ஓசையை, மூன்றாம் மலை கடந்து பாரி உணர்வான்’’ என்றான் கருங்கைவாணன். அவனது திட்டங்களையும் போர் உத்திகளையும் கண்டு பொதியவெற்பனும் முசுகுந்தரும் வாயடைத்துப்போயினர். திதியன், கருங்கைவாணனின் நிழல்போல் எந்நேரமும் உடன் இருந்தான். மலைப்பகுதியில் அமைக்கவேண்டிய உத்திகளைப் பற்றி அவன்தான் ஆலோசனைகளை வழங்கியவன். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் திட்டங்களை வகுத்திருந்தனர்.

போரில், வழக்கமாக வெற்றியே நோக்கமாக இருக்கும். ஆனால், இந்தப் போரில் அதைக் கடந்த நோக்கங்கள் நிறைய இருந்தன. ஆறாப்பகையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய தேவையிருந்தது. வாழ்வில் இதுவரை அடையாத அவமானத்தை அடைந்தவனாகக் கூனிக்குறுகிப்போயிருக்கிறான் கருங்கைவாணன். அவன் வழிநடத்திய ஒரு போரில்கூட பாண்டியர் படை தோல்வியைத் தழுவவில்லை. ஆனால், அவனது தவறுதலான கணிப்பால் நெஞ்சுக்குழிக்குள் ஈட்டியை இறக்கிவிட்டனர் திரையர்கள். பகலையும் இரவையும் கடக்க முடியாமல் துடிக்கும் ஒருவனாக அவன் இருக்கிறான். வேதனைக்கு அணுஅணுவாக முகங்கொடுக்கும் கருங்கைவாணன், எப்போதும் அரண்மனையில் தலை கவிழ்ந்தே நிற்கிறான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

போருக்கான அனுமதியைப் பேரரசர்  தராமல் காலங்கடத்தும் ஒவ்வொரு நாளும் அவன் அடையும் வேதனை அளவற்றதாக இருக்கிறது. இந்த முறை வகுக்கப்பட்டுள்ள திட்டத்தைப் பேரரசர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தான் அவன்.

நேற்று மிக நீண்டநேரம் வைகையின் தென்துறை நிலைமாடத்தில் இருந்த பேரரசர், அதன் பிறகு யாரையும் சந்திக்கவில்லை. காலையில் அவரின் வருகைக்காக இளவரசனும் முசுகுந்தரும் கருங்கை வாணனும் காத்திருந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பேரரசர் வருகை தந்தார். அவரது முகத்தை மகிழ்வோடு எதிர்கொள்ள இன்னும் யாருக்கும் துணிவு வரவில்லை. வணங்கி வரவேற்ற அவர்கள், குனிந்த தலையை நிமிர நீண்டநேரமானது.

கருங்கைவாணன், போருக்கான மூன்றுவிதமான திட்டங்களையும் விளக்கினான். தோல் மடிப்புகளை ஒவ்வொன்றாக விரித்து விரித்து, படை நகர்வுகளையும் தாக்குதலையும் மிகுந்த நிதானத்தோடு சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் பேரரசர், கவனமாகக் கேட்பதைப்போல்கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அவரின் கண்ணசைவுகள் எல்லாவற்றையும் எளிதில் கடந்து போய்க்கொண்டிருந்தன. யாராலும் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எதிர்பார்ப்புதான் என்ன என்பது விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

அவர் அடுத்த பணிக்காக அவையை விட்டு நீங்கியபோது கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூனிக்குறுகிப்போயினர். முசுகுந்தர், கலங்கிய முகத்தோடு அவருக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தார்.

முன்புபோல் கலங்கிப்போயிருக்கவில்லை பொற்சுவை. அவளின் முகம் தெளிவுகொண்டிருந்தது. காலம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும்; கற்றுக்கொள்ளும் சுவை அறிந்தவளுக்குக் கணக்கின்றிக் கற்றுக்கொடுக்கும். வெளிமாடத்தில் நின்றபடி சக்கரவாகப் பறவை பறந்து சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே இருந்த காலம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் என்னதான் நிகழ்கிறது என்பதை அறியத் தொடங்கினாள்.

வைப்பூரில் நெருப்புப் பற்றிய செய்தி வந்தபோது, அரண்மனையே அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தது. ஆனால், அவள் அதிர்ச்சியடைய அதில் ஒன்றுமில்லை. நெருப்பினும் கொடும் அழிவை அகவாழ்வில் கண்ட ஒருத்திக்கு, நெருப்பின் சூடு புதியதாகத் தாக்க என்னவிருக்கிறது? மூழ்கிய கலங்களைப் பற்றியும் மிதந்த சாம்பலைப் பற்றியும் நாள் கணக்கில் பேசினர். அதற்கு வெகுநாள்களுக்கு முன்பிருந்தே அவள் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏறக்குறைய அவளின் அனைத்துக் கனவுகளுக்கும் அதுதான் நிகழ்ந்தது; எந்தவித மிச்சமுமின்றி நிகழ்ந்தது. வைப்பூருக்காவது வைகை மிஞ்சியது; பொற்சுவைக்கு மிஞ்ச எதுவுமில்லை.

துயரம், தன்னுள் மட்டுமல்ல... அரண்மனையின் வெளி முழுவதும் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்தாள். குலசேலரப்பாண்டியனும் பொதியவெற்பனும் சூல்கடல் முதுவனும் ஒருசேர மனமொடிந்து கிடப்பதாகக் கேள்விப்பட்டாள். மேல் மாடத்தில் வீற்றிருந்த அவளை, வைகையின் இளங்காற்று தழுவிக் கடந்தது. நெருப்பும் துயரமும் தன்னை நோக்கி வர மறுப்பதை அறிந்தபோது வைகை நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

அழிவு நீக்கமற நிகழ்ந்துவிட்டது. மணவிழாவின் நினைவுப்பரப்பெங்கும் துயரம் பரவிக்கொண்டிருப்பதைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் அமைதியுடன் கவனித்தபடி இருந்தாள். நீண்ட தனிமை அவளுக்குத் தேவைப்பட்டது. தனித்திருத்தல், அவளின் இயல்புக்கு முற்றிலும் மாறானது. ஆனாலும் அதற்குள் புகுந்தாள். நீண்டநாள்களாக சுகமதியைக் கண்டு பேசவில்லை.

மாதங்கள் சில ஓடிய பிறகு இப்போதுதான் சுகமதியை அழைத்துவரச் சொல்லி, பணிப் பெண்களை அனுப்பினாள்.  

பின்தொடர்ந்து போன முசுகுந்தர் விரைந்து நடந்து அவரை அணுகவும் முடியாமல், மிகவும் பின்தங்கியும்விடாமல் நடந்து வந்தார். அதாவது, பேரரசருக்குப் பின்னால் அமைச்சர் நடந்து வருகிறார் என்பதைப் பேரரசர் உணரக்கூடிய நிலையில் வந்துகொண்டிருந்தார்.

முசுகுந்தரின் மனம், பேரரசரைப் புரிந்து கொள்ள இடைவிடாது முயன்றுகொண்டிருந்தது. வைப்பூரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் பாண்டிய நாட்டின் புகழில் நிரந்தரமான கறை விழுந்துவிட்டது என்று பலரும் பேசுகின்றனர். அதைச் செய்தவர்களை அழித்தொழித்தால் மட்டுமே, இந்தக் கறையை அகற்ற முடியும்; பேரரசின் புகழை நிலைநாட்ட முடியும். ஆனால், பேரரசர் ஏன் தாக்குதலுக்கான அனுமதியைக் கொடுக்க மறுக்கிறார்?

``வைப்பூர்த் துறைமுகத்தைப் புதுப்பிக்கும் பணியை உடனடியாகச் செய்ய வேண்டும்; முன்னிலும் பெருந்துறைமுகமாக அதை வடிவமைக்க வேண்டும்’’ என்று வெள்ளிகொண்டார் கேட்டதற்கும் பேரரசர் அனுமதி வழங்கவில்லை.

பேரரசின் வலிமை என்பது, அழிக்கப்பட்ட ஒன்றை அதைவிடப் பல மடங்கு சிறப்போடு கட்டி எழுப்புவதில் உள்ளது. ``துறைமுகம் என்பது செல்வத்தின் கண்; நாம் அதை விரைந்து செப்பனிட வேண்டும்” என்று வெள்ளிகொண்டார் கேட்டுள்ளார்.

``எரித்தவனை அழிக்காமல், எரிக்கப்பட்ட பொருளை மீண்டும் அலங்கரிக்க நினைப்பது அவமானம்” என்று கூறியுள்ளார் பேரரசர்.

அப்படியென்றால் பாரியை வீழ்த்திவிட்டுத்தான் வைப்பூரைப் புதுப்பிக்கும் பணியைச் செய்யும் முடிவோடு இருக்கிறார் என்பது புரிகிறது. பிறகு ஏன் படையெடுப்புக்கான எந்தவித அனுமதியும் வழங்க மறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் முசுகுந்தரின் மனம் தவித்தது.

பேரரசர், சித்திரக்கால் மண்டபத்துக்குள் நுழைந்தார். குழம்பிய மனதோடு அவரின் பின்னாலேயே போன முசுகுந்தர், அரசரைப் பார்க்க அனுமதி கேட்டு, பணியாளனை உள்ளே அனுப்பினார்.

சுகமதி உள்ளே நுழைந்தாள்.

கார்காலப் பள்ளியறையிலிருந்து வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி மாறப்போவதால், இங்கிருந்து அங்கு எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களைப் பணிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சுகமதியைப் பார்த்ததும் உள்ளறைக்குப் போய் செய்தி சொன்னாள் ஒருத்தி. உள்ளிருந்த பொற்சுவை, மாளிகையின் நடுமண்டபத்துக்கு வந்தாள். வேலை செய்துகொண்டிருந்த பணிப் பெண்கள் இடம் விட்டு வெளியேறினர்.

நடுவில்  இருந்த பெருங்கட்டிலில் பட்டுமெத்தைப் படுக்கையின் மீது செந்நிறப்  பட்டால் வடிவமைக்கப் பட்ட எலிமயிர்ப் போர்வை ஒழுங்கற்ற மடிப்போடு கிடந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுகமதியின் கண்கள் சட்டெனத் திரும்பி உள்நுழையும் பொற்சுவையைப் பார்த்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

பார்த்த கணத்தில் இயல்பான பேச்சு தொடங்கியது. ``கார்காலம் முடிந்துவிட்டது. எனவே, வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி இடம்பெயர்வது அரண்மனை வழக்கமாம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன சுகமதி” என்றாள்.

சற்றே மெல்லிய குரலில் ``எல்லாம் வழக்கப்படி தான் நடக்கின்றனவா?” என்று கேட்டபடி இடப்புறமாகத் திரும்பி ஒழுங்கற்ற போர்வை மடிப்பைப் பார்த்தாள் சுகமதி.

அசட்டுச் சிரிப்போடு பொற்சுவை சொன்னாள், ``நானும் உன்னைப்போல்தான் நினைத்தேன். இதே கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன்.”

சுகமதிக்குப் புரியவில்லை.

``எல்லாம் வழக்கப்படி நடக்கின்றனவா? அப்படி நடக்கவில்லையே என முடிவுசெய்து உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், காலம் தாழ்த்திதான் உணர்ந்தேன் எல்லாம் வழக்கப்படிதான் நடக்கின்றன.”

சுகமதி கேட்டதன் பொருள் சற்றே வெளிப்படையாகத்தான் இருந்தது. ஆனால், பொற்சுவை சொல்வதற்குள் என்ன பொருள் இருக்கிறது என்பது புரியவில்லை.

`வெளிப்படையாகவே கேட்போம்’ என்று சுகமதிக்குத் தோன்றியது. படுக்கையின் அருகில் வந்தாள், எலிமயிர்ப் போர்வையை மெள்ளத் தொட்டுப் பார்த்தபடி, ``இந்தப் போர்வை உங்கள் இருவரின் உடல்களை உணர்ந்ததா?”

``அதை நீ அறியவேண்டாம் சுகமதி. என்னைப்போல் நீயும் சிக்கிக்கொள்ள நேரிடும்.”

பழைய சுகமதியென்றால் தலை கவிழ்ந்து சொற்களை உள்வாங்கி நிதானமாக அடுத்த வினாவைக் கேட்டிருப்பாள். ஆனால், இப்போது அப்படியல்ல. கவிழ்ந்த தலையைச் சட்டென நிமிர்த்திக் கேட்டாள், ``உண்மையில் நீங்கள் யாரிடம் சிக்கிக்கொண்டுள்ளீர்கள், காதலனிடமா... பொதியவெற்பனிடமா?”

``பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ள மாட்டாள். அவள் சிக்கிக்கொள்வது அவளிடம் மட்டும்தான்” எனக் கண நேர இடைவெளியின்றிச் சொற்களை எறிந்துவிட்டு நடந்தாள் பொற்சுவை. சுகமதிக்கு எதிர்பாராத பதிலாக இருந்தது.

பொற்சுவை தொடர்ந்தாள், ``ஆண் ஒருபோதும் பெண் மனதைக் கண்டறிய முடியாது. பெண்ணுடல், பிரித்தறிய முடியாத மர்மங்களின் சேர்மானம். ஆண்களால் கணிக்கவே முடியாத கற்பாறை. எனவே, ஆணைக் கண்டு எனக்கு எப்போதும் பயம் இல்லை. நான் சிக்கிக்கொண்டிருப்பது என்னிடம்தான்.”

``உங்களிடமே நீங்கள் சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்றால், உங்களை விடுவிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்றுதானே பொருள்!”

``உனது பேச்சுமொழியே மாறிவிட்டது சுகமதி. முன்னிலும் தெளிவாகப் பேசுகிறாய்” என்று சுகமதியை வெகுவாகப் பாராட்டினாள். ஆனால், அவளின் சிக்கல் என்னவென்று மட்டும் சொல்லவில்லை.

பொற்சுவையின் பின்னால் நடந்தபடியிருந்த சுகமதி, தான் எழுப்பிய கேள்வியிடமிருந்து மட்டும் நகரவில்லை, ``பெண் மனதை ஆண் கணிக்கவே முடியாது என்றா சொல்கிறீர்கள்?”

``ஆம், அதில் என்ன ஐயம்? நதியின் ஆழத்தைப் படகு அறியாது. நீரின் போக்கில் நகர்வதே அதற்கு இன்பம் பயக்கக்கூடியது. அதன் தேவையும் அதுதான்.”

``எல்லா ஆண்களையும் அப்படிச் சொல்லிவிட முடியுமா?”

``ஆண் என்ற வடிவத்துக்கு விதிவிலக்குகள் இல்லை சுகமதி.”

அதிர்ந்தாள். அவளது முகம், பொற்சுவை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியது.

``நீலம் என்பது வானத்தின் விதியல்ல, இயல்பு. விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும். இயல்பாக இருந்தால்?”

சுகமதி திகைத்து நின்றாள்.

கா
ரணம் புரியாத திகைப்பிலும் குழப்பத்திலுமிருந்து முசுகுந்தர் மீளவில்லை. உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தார்.

பேரரசரின் அழைப்பை, பணியாளன் வந்து சொன்னான். உள்நுழைந்தார் முசுகுந்தர்.

பேரரசரைப் பார்த்துவிட்டுச் சிலர் வெளியேறினர். அவர்கள் யாரென முசுகுந்தரால் அறிந்துகொள்ள முடியவில்லை. யாராக இருக்கும் என்ற சிந்தனையிலேயே பேரரசரின் முன் வந்து நின்றார்.

வந்து நின்ற கணத்தில் பேரரசர் கேட்டார், ``நாம் செய்த பிழை என்ன அமைச்சரே?”

அழுத்திக்கொண்டிருந்த கட்டி வெடித்ததைப்போல் இருந்தது. இந்தக் கேள்வியைக்கூட இத்தனை நாள் அவர் கேட்கவில்லை. வாழ்க்கை முழுவதும் சந்தித்திராத அவமானத்தை இந்தக் காலத்தில்தான் முசுகுந்தர் சந்தித்தார். வைப்பூரின் அழிவுக்குப் பிறகு ஒற்றைக் கேள்விகூட அவர் கேட்கவில்லை. அந்தப் பெரும் அழிவை நேரில் பார்த்தவர் முசுகுந்தர்தான்.  எதையும் கேட்க மறுத்ததன்மூலம் உருவான நிராகரிப்பை, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

`இப்போதாவது கேட்டாரே!’ என்று சற்றே ஆறுதலுடன் சொன்னார், ``தேவாங்கைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் திரையர்கள்தானா என்பதைச் சோதிக்கத் தவறியது.”

``இல்லை. `திரையர்கள் வீழ்ந்து விட்டார்கள்’ என்று கருங்கைவாணன் சொல்லியதை நம்பியது.”

பேரரசரின் எண்ணம் எவ்வளவு உள்ளோடியதாக இருக்கும் என்பதை நன்கு தெரிந்த முசுகுந்தரே முதல் கேள்வியிலேயே மூச்சுமுட்ட நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``படைவீரர்கள் தாம் தோற்றவுடன் வீழ்வார்கள். குலம் காக்கும் போராளிகள் ஒருபோதும் வீழ மாட்டார்கள்; கடைசிக் கணத்திலும் வெகுண்டெழுவார்கள்.”

பேரரசரின் சொல் முசுகுந்தருக்கு எந்தச் சொல்லையும் விட்டுவைக்க வில்லை.

``வெற்றி என்பது, போர் வீரர்களாலும் போர் உத்திகளாலும் நிகழ்வது என்று நம்புகிறான் கருங்கைவாணன். இல்லை,  இறுதியாக  அது கனிவது எதிரி தரும் வாய்ப்பில்தான். எதிரியையே நம்மால் கணிக்க முடியாதபோது, அவன் தரும் வாய்ப்பை நம்மால் எப்படி அறிய முடியும்?”
 
``இ
யல்பாக அமைந்த வாய்ப்புகள் அல்ல, திட்டமிட்டே உருவாக்கப்பட்ட வாய்ப்புகள்” என்றாள் பொற்சுவை.

சுகமதி அதிர்ச்சி நீங்காமல் அவள் சொல்வதைக் கவனித்தாள்.

``மணவிழாக் காலத்திலும், மணம் முடிந்த பிறகும் இளவரசர் நாட்டியப் பெண் நீலவல்லியுடன் மட்டுமே இருந்தார். எனது அருகில் வராதது, எனது தேவையாகவும் இருந்தது. எனவே, அந்த நாள்களை எனது விருப்ப நாள்களாக அமைத்துக்கொண்டேன். நான் நானாக இருப்பதால் கிடைக்கும் இன்பம் பறிக்கப்படாமல் இருந்தால் மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சி எல்லையின்றி நீடித்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

ஆனாலும் உள்ளுக்குள் ஓர் ஐயம் உருவாகியபடியே இருந்தது. `எல்லாவற்றுக்கும் விதி செய்துள்ள இந்தப் பேரரசில் இதற்கு மட்டும் விதியின்றி இருக்காதே! விதியை மீறிச்செயல்பட வாய்ப்பில்லையே!’ எனத் தோன்றியது. சிறிது சிறிதாக விசாரித்தேன். அரண்மனைபோல உண்மைகள் எளிதில் ஒழுகுமிடம் வேறுண்டா என்ன? முழு உண்மையும் வெளிப்பட்டது.”

பொற்சுவை என்ன சொல்லவருகிறாள் என்பதைத் திகைப்போடு கவனித்தாள் சுகமதி.

``இளவரசனுக்கு மனைவிமீது காதல் கூடாது. அது நாணத்தக்க நடத்தை. காதல் மரியாதையை உருவாக்கும்; மரியாதை பணிவை உருவாகும். மனைவியிடம் பணிவதுபோல் இழிசெயல் இன்னொன்றில்லை. மனைவியின் அன்புக்கும் அழகுக்கும் பணிவது ஆண்மையல்ல. மனைவி மீது மோகம்கொள்ளுதல் அரச நடவடிக்கையிலிருந்து அவனது சிந்தனையை மாற்றும்.”

பொற்சுவை சொல்வதை சுகமதியால் உள்வாங்க முடியவில்லை.

அவள் தொடர்ந்தாள், ``இவை எல்லாம்தான் இளவரசனின் அகவாழ்வு பற்றி அரண்மனையில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள். ஆனால், காமத்தை விதிகளால் கட்டுப்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, காமம்கொண்டே அதை ஒழுங்கு படுத்த விதியமைத்துக்கொண்டனர்.

எலிமயிர்ப் போர்வையைச் சற்றே விலக்கி, மெத்தையில் அமர்ந்து, தலையணையில் சாய்ந்தபடி சுகமதியைப் பார்த்தாள் பொற்சுவை.

அடுத்து சொல்லப்போகும் சொல்லை நோக்கியபடி இருந்தாள் சுகமதி. பொற்சுவை தொடர்ந்தாள், ``வழக்கமான வடிவுடைய பெண்ணாக இருந்தாலே மணம் செய்யப்போகும் இளவரசன் அவளின் மீது காதல்கொண்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசகுலம், பேரழகு கொண்ட ஒருத்தியை மணப்பெண்ணாகத் தேர்வுசெய்துவிட்டால் எவ்வளவு கவனம்கொண்டு செயல்படும்?! எனது  வாழ்க்கையிலும் அதுதான் நடந்துள்ளது.

மணப்பெண்ணாக என்னைத் தேர்வுசெய்த உடனே முடிவுசெய்துள்ளனர், ‘இவ்வளவு அறிவும் அழகும் படைத்த ஒருத்தியிடம் இளவரசன் எக்காரணம்கொண்டும் மயங்கிவிடக் கூடாது’ என்று. எனவே என்னைவிட அழகுவாய்ந்த ஒருத்தியைத் தேடத் தொடங்கியுள்ளனர்.”

சுகமதி, இமை மூடாத வியப்பில் உறைந்து நின்றாள்.

``அழகுக்கலையின் பேரழகி என்று வர்ணிக்கப்பட்ட வேணாட்டு மங்கை நீலவல்லியைக் கண்டறிந்துள்ளனர். மணவிழாவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெருவிருந்தின் நடன அரங்கில் இளவரசரின் முன் அவளது அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது. கலையின் உச்ச சுழற்சியில் காமத்தின் கனியைப் பொதியவெற்பனுக்குப் பரிமாறியுள்ளாள் நீலவல்லி.

திருமணத்துக்கு முன் விருந்தினரோடு நாட்டியம் காண அரசியார் என்னை அழைத்ததாக நீ வந்து சொன்னாய் அல்லவா? அதை இயல்பான நிகழ்வாக நாம் நினைத்தோம். அது இயல்பாக நடந்ததன்று; முன்னேற்பாட்டோடு இளவரசனுக்கும் தெரியாமல் நடத்தப்பட்டது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

கலையின் வழியாக ஆணுக்குள் இறங்குபவள், இயல்பாகவே அடியாழம் வரை இறங்க முடியும். அப்படித்தான் அவள் அவனுக்குள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளாள். அரண்மனையில் மணவிழா என்பது மணப்பெண்ணைச் சுற்றி மட்டும் நடப்பதல்ல; அதற்கு எதிர் திசையில் இன்னொரு பெண்ணைச் சுற்றியும் நடக்குமாம்.

மணப்பெண்ணின் வாசனையை நுகர்வதற்குச் சற்றுமுன் இன்னொருத்தியின் வாசனையில் அவன் கரைக்கப்படுகிறான். அந்த வாசனையிலிருந்து அவன் மீள நெடுங்காலமாகும். அக்கால இடைவெளி இயல்பாகவே மணப்பெண்ணின் மீதான புதுமையை உள்ளுக்குள் உதிரச்செய்துவிடும்.”

கேட்டுக்கொண்டிருக்கும் சுகமதி என்ன ஆகிறாள் என்பதைக்கூடப் பார்க்க பொற்சுவை ஆயத்தமாகவில்லை. அவள் பேசியபடியே இருந்தாள்.

பேச்சை இழந்து நின்றார் முசுகுந்தர்.

``போர் என்பது, எதிரியின் மீது தொடுக்கும் ஓர் ஆயுதம்தான். அதுபோல வலிமையுடைய வேறு பல ஆயுதங்களும் இருக்கின்றன.  நான்   அவற்றை      உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் பேரரசர்
பேரரசரின் அமைதிக்குக் காரணம், சிறிது சிறிதாக முசுகுந்தருக்குப் புரியத் தொடங்கியது. அவர் பல வழிகளில் இயங்கிக்கொண்டிருக்கிறார். புதிய வழிமுறைகளையும் அதற்கான மனிதர்களையும் அவர் கண்டறிந்துவிட்டார் என்பது தெரிகிறது. ஒருமுறை பாதிப்பை உருவாக்கிவிட்டால் அனைவரின் மீதிருக்கும் நம்பிக்கை எப்படிப் பொய்த்துப் போகிறது என்பதை வெட்கத்தோடு ஏற்றுக்கொள்பவராக முசுகுந்தர் தலைகவிழ்ந்து நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``இம்மண் காணாத பெரும் படையோடு நிற்கும் கருங்கைவாணன், நான் ஏவப்போகும் ஒற்றை ஆயுதம்தான். அதைப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்துவேன். ஆனால், மற்ற ஆயுதங்களை உருவாக்க சற்றே காலம் தேவைப்படுகிறது.”

``அதன் பொருள், நான் தேவைப்படவே இல்லை என்பதல்ல. எப்போது என்பதை அவர்கள் முடிவுசெய்கிறார்கள்.”

கலங்கிப்போய் இருந்த சுகமதி, அவள் பேச்சை உள்வாங்கும் வலிமையற்று நின்றாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 62



``பொருத்தமான நேரத்தில் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடப்பட்டதால் சில நாள்களுக்கு முன் அவர் இங்கு வந்தார்.” சொல்லி நிறுத்தினாள் பொற்சுவை.

`என்ன நடந்தது?’ எனக் கேட்க சுகமதிக்குத் துணிவு வரவில்லை, அமைதியானாள். ஆனால், பொற்சுவை யிடமிருந்தும் எந்தச் சொல்லும் வரவில்லை. அமைதியே நீடித்தது. கொடும் அமைதியைப் பொறுக்க முடியாமல் பொற்சுவையை நிமிர்ந்து பார்த்தாள். அவளோ படுக்கையில் படுத்தபடி மாளிகையின் மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

`ஏன் திடீரெனப் பேச்சை நிறுத்திவிட்டாள்?’ என்று எண்ணியபடி சுகமதியும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தாள். அமைதி நீடித்தபடியே இருந்தது.

மெல்லிய குரலில் பொற்சுவை கேட்டாள், ``மேலே வரையப்பட்டுள்ளது என்ன தெரியுமா?”

அண்ணாந்து பார்த்தபடியே சுகமதி சொன்னாள், ``விண்மீன்களும் கோள்மீன்களும் வரையப்பட்டுள்ளன.”

மெத்தையில் சாய்ந்துபடுத்து நிலைகொத்தி அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அது பொதியவெற்பன் பிறந்தபோதிருந்த வானியல் அமைப்பு. இந்த அமைப்பு கொண்டவன் தனது வழித்தோன்றல்களை உருவாக்குவதற்கான காலக்குறிப்பு உள்ளதாம். அதைக் கணித்தே அவன் இந்த அறைக்கு அனுப்பப்பட்டான்.”

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத சுகமதி, எலிமயிர்ப் போர்வையிலிருந்து மெள்ள கைகளை விலக்கினாள்.

அசைவறிந்து அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அப்படி என்னால் விலகிவிட முடியாதே சுகமதி.”

கதறவேண்டும் எனத் தோன்றியது. கட்டுப்படுத்த முயன்றாலும் கண்கள் பீறிடத் தொடங்கின.

``வேட்டை விலங்கைக் கண்டு எந்த விலங்கும் அழுவதில்லை சுகமதி. வேட்டையின் ஒரே விதி போராடுதல் மட்டும்தான்.”

சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்தாள். ``நள்ளிரவுக்குப் பிறகு திடீரென எனது அறைக்குள் அரண்மனையின் முதுபெண்கள் நுழைந்தனர். விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு எழுந்தேன். விளக்கொளியில் கண்கள் கூசின. எனது உடலை அவர்கள் சடங்குப்பொருளாக்கினர். முதலில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் புரிந்துகொண்டேன். முற்றிய தேறலின் கடிமணம் காற்றில் மிதந்து வந்தபோது அவர்கள் எல்லோரும் அறையைவிட்டு வெளியேறினர்.

எனது உடலை இவர்கள் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை, குனிந்து இங்கும் அங்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது மூச்சுக்காற்று எனது முகத்தில் பட்டது.”

பேரரசர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அடுத்தடுத்து வந்து முகத்தில் அறைந்து கொண்டிருந்தது.

``இதுவரை கருங்கைவாணன் நடத்திய அனைத்துப் போர்களிலும் பாண்டிய நாடு வெற்றிபெற்றது என்பது உண்மை. ஆனால், அவை அனைத்தும் படையின் வலிமையால் அடையப் பெற்ற வெற்றியே. தளபதியின் வலிமையாலும் தந்திரத்தாலும் அடைந்த வெற்றி என எதுவுமில்லை. திரையர்களை வெற்றிகொண்டதற்குத் திதியனே காரணம்.”

பேரரசர் இதைச் சொல்வது எதற்காக என, முசுகுந்தரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சொல்லை அத்துடன் நிறுத்திய பேரரசர் எழுந்து முசுகுந்தரை ஒரு பார்வை பார்த்தபடி அவை விட்டு அகன்றார்.

`இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? இந்தப் பார்வைக்கு என்ன பொருள்? கருங்கைவாணன் போதிய திறமைகொண்டவனல்லன் என்று சொல்கிறாரா அல்லது அவனை மட்டுமே நம்பி படை நடத்த முடியாது என்று சொல்கிறாரா? திதியனின் தந்திரத்தைப் பாராட்டுகிறாரா? அவர் பயன்படுத்திய இந்தச் சொற்களின் வழியாக நான் புரிந்துகொள்ளவேண்டியது என்ன? மற்றவர்களுக்கு நான் சொல்லவேண்டிய செய்தி என்ன? இப்போது தீட்டப்பட்டுள்ள எந்தத் திட்டமும் குறைந்த அளவுகூடத் தகுதியான திட்டமில்லை என்பதைத்தான் அவர் சொல்லிச் செல்கிறாரா?’

சிந்தித்தபடியே நீண்ட நேரம் அந்த இடம் விட்டு அகலாமல் அப்படியே நின்றார் முசுகுந்தர்.

``எவ்வளவு நேரம்தான் அப்படியே நிற்பாய்? வா” என்று கைபிடித்து இழுத்தாள் பொற்சுவை.

உயிரற்ற ஒருத்தியாய் அவளின் இழுவைக்கு உடன்போனாள் சுகமதி.

``பரவிக்கிடப்பது அடர் இருளென்றாலும் அதிகாலையில் செவ்வொளி பரவத்தானே செய்யும். முழுமையாக வேட்டையாடப்பட்டதாக உணர்ந்த பிறகுதான் இன்னொன்றையும் உணர்ந்தேன்.”

சுகமதியின் உயிரற்ற கண்கள் அவளை நோக்கி மெள்ளப் புருவம் உயர்த்தின.

``எவ்வளவு வேட்டையாடப்பட்டாலும் என்னிடமிருக்கும் எதையும் எடுத்துச் சென்றுவிட முடியாதல்லவா? மறுநாள் காலை நிலைக்கண்ணாடி முன் வெகுநேரம் நின்றேன். மெள்ளப் புன்னகைத்துப் பார்த்தேன். எனது புன்னகை என்னிடம்தான் இருந்தது. நான் எதையும் இழக்கவில்லை என்று உணர்ந்தபோதுதான், என்னை வேட்டையாட முடியாது என்பதையும் உணர்ந்தேன்.”

பேசியபடியே கைபிடித்து இழுத்துக்கொண்டே படிகளில் ஏறினாள். `எங்கே அழைத்துச் செல்கிறாள்?’ என்ற குழப்பத்திலே வந்தாள் சுகமதி.  மேல்நிலையில் இருக்கும் ஓர் அறைக்குள் நுழைந்ததும் சொன்னாள், ``இதுதான் வேனிற்காலப் பள்ளியறை.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

பொற்சுவை சொன்னதும் சட்டெனத் தலை நிமிர்த்தி மேற்கூரையைப் பார்த்தாள் சுகமதி. அங்கேயும் வானியல் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்தபடி பொற்சுவையைப் பார்த்தாள்.

``இது, நான் பிறந்த வானியல் அமைப்பைக் குறிக்கும் ஓவியம்.”

மூர்ச்சைகொண்டு நின்றாள் சுகமதி.

மெல்லிய சிரிப்போடு சொன்னாள் பொற்சுவை, ``ஒருவேளை, இனி எனது வேட்டைக்கான காலமாக இருக்குமோ!”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...