கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிச்சய லாபம் கொடுக்கும் சிறுதானிய மதிப்புக் கூட்டல்! - 05

மதிப்புக் கூட்டல் தொடர்-5
மதிப்புக் கூட்டல் எனும் மகத்தான தொழில் வாய்ப்பு, புதியதொழில் முனைவோர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒரு சாதாரண நபரின் வருமானத்தைப் பல மடங்கு உயர்த்துவதும் இம்மதிப்புக் கூட்டலே என்றால், அது மிகையல்ல. மதிப்புக் கூட்டல் தொழில் செய்வதற்கு மிகப்பெரிய இடம் தேவை, பணவசதி தேவை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறான ஒன்று. இன்றையக் காலகட்டத்தில் ஒரு பொருளுக்கான சந்தை வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. அதை மதிப்புக் கூட்டல் தொழில்களின் மூலம் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மதிப்புக் கூட்டல் தொழிலைச் சிறிய இடத்தில் செய்து, அதிக லாபம் பார்த்து வருகிறார் தி.நகரைச் சேர்ந்த சித்த மருத்துவர் மகேஸ்வரி.

மகேஸ்வரி, கடந்த பதினைந்து ஆண்டுகளாக மதிப்புக் கூட்டல் தொழில் செய்து வருகிறார். ஆரம்பகட்டத்தில், தன்னுடைய கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்து வந்தார். அதன் பின்னர் அவரது நட்பு வட்டாரங்கள், சமூக வலைதளங்கள் எனப் பல தரப்புகளிலிருந்தும் ஆர்டர்கள் குவியவே, மதிப்புக் கூட்டல் பொருள்கள் தயாரிப்பதில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் விளைவாகப் பொருள்கள் அதிகமாகவும், தரமானதாகவும் தயாரிக்கப்பட்டன. அதிகமான தேவை இருப்பதால், பொருள்களைத் தரமாகக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்து வருகிறார். மதிப்புக் கூட்டலுக்கான இத்தொடரில், தான் செய்துவரும் சிறுதானிய மதிப்புக் கூட்டல் தொழில் பற்றியும் அதன் சந்தை வாய்ப்பைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார் மகேஸ்வரி.
“இன்றைய நகர வாழ்க்கையில், உடல் ஆரோக்கியம் காக்கும் இயற்கைப் பொருள்களுக்கும், சிறுதானியப் பொருள்களுக்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் வழியாக வந்த ஊக்கம்தான் சிறுதானியங்களின் மதிப்புக் கூட்டல் பக்கம் என்னைத் திருப்பியது. முதலில் என்னுடைய கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளைக் காப்பதற்காக மட்டும்தான் மதிப்புக் கூட்டல் தொழில் செய்ய ஆரம்பித்தேன். முதலில் மூலிகைகளை வைத்துப் பொடிகள், தின்பண்டங்களைத் தயாரித்தேன். அதன் பின்னர், அனைத்து மக்களும் பயன்படுத்தும் அளவில் மதிப்புக் கூட்டல் பொருள்களை அதிகமாகத் தயாரித்தேன். இதுவரையில் எந்தவிதமான விளம்பரங்களும் கொடுத்தது கிடையாது. நீங்கள் விளம்பரங்களுக்குக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு பொருள்களைத் தரமானதாகத் தயாரித்துவிடலாம். இப்போதைய காலகட்டத்திற்கு சமூக வலைதளங்களே போதுமான விளம்பரத்தைக் கொடுத்து விடுகின்றன. இதுபோக, பொருள்கள் தரமாக இருந்தால், நட்பு வட்டாரங்களில் இருக்கும் அனைவரும் விளம்பரதாரர்கள்தான். இவற்றின் மூலம் மட்டும்தான் அதிக வருமானம் பார்க்க முடியும்.
மதிப்புக் கூட்டலில் மிக முக்கியமானது, சந்தை வாய்ப்புகள் இருக்கும் பொருள்களைத்தான் முதலில் தயாரிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான பொருள்களை உற்பத்தி செய்துவிட்டு விற்பனைக்காகக் காத்திருக்கக் கூடாது. அதிகப் பொருள்களை உற்பத்தி செய்து, நாள் கணக்கில் வைத்து விற்றால் அதன் தரமும், சுவையும் குறையும் வாய்ப்புண்டு. அதனால், எப்போதுமே ஆர்டர்களை வாங்கிக் கொண்டு, சந்தையில் தேவையுள்ள பொருள்களை உற்பத்தி செய்வதுதான் வருமானம் பார்க்க நல்ல வழி” என்று முன்னுரை கொடுத்தவர், மதிப்புக் கூட்டல் பொருள்களின் தயாரிப்புத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.
இட்லிப் பொடி
“பாத்திரத்தில் ஊற்றிய எண்ணெய் சூடேறும்போது கட்டிப் பெருங்காயத்தைப் போட்டு வறுக்க வேண்டும். கடலைப் பருப்பு சேர்த்து லேசாகச் சிவக்கும் வரை நன்றாக வறுக்க வேண்டும். அதோடு கறுப்பு உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர் கறிவேப்பிலை சேர்த்து, பருப்பு வகைகள் நன்கு சிவக்கும்படி வறுக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்னர், மிளகாய் மற்றும் கறுப்பு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து இறக்க வேண்டும். நன்கு ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் சேர்த்துப் பொடிக்கவும். சுவையான இட்லிப் பொடி தயார். இதில் முடக்கத்தான், ஆவாரை போன்ற மூலிகைகளைப் பொடி செய்து கலந்தால் முடக்கத்தான் இட்லிப் பொடி, ஆவாரை இட்லிப் பொடி எனப் பல வகைகளில் தயார் செய்யலாம். நான் 12 பொடிகளைத் தயாரிக்கிறேன்.
ஊறுகாய்
பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாய்த் தூள், கறுப்பு உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு மூன்று நிமிடம் கிளறவும். அதன் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆறவிட்டுக் கிளறிவிட வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு, அதனை நூல் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மசாலா மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகியவற்றில் நன்றாகக் கலப்பதற்காக ஐந்து நாள்கள் முதல் 7 நாள்கள் காத்திருக்க வேண்டும். பின்னர் அந்தப் பாட்டிலைத் தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, இரண்டு வார காலத்துக்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது ஊறுகாய்த் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும். இதில் கொடம்புளி, மரச்செக்கு நல்லெண்ணெய், கறுப்பு உப்பு போன்றவற்றைச் சேர்த்துச் செய்தால் உடலுக்கு ஆரோக்கியம் தரும். ஊறுகாயின் சுவை, தரம் ஆகியவை கூடும்.
அப்பளம்
கறுப்பு உளுத்தம் பருப்பைச் சுத்தம் செய்து மாவாக அரைத்து, சலித்துக்கொள்ள வேண்டும். சலித்த மாவைக் கவனமாகத் தட்டில் கொட்டி, சீரகத்தையும் கலந்து, அளவாகக் கறுப்பு உப்புச் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் தெளித்து இறுக்கமாகப் பிசைந்து கொள்ள வேண்டும். பெருங்காயத்தைக் கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து அதையும் மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், அந்த மாவின்மீது நன்றாக எண்ணெய்யைத் தடவி உருண்டையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நமக்குத் தேவையான அளவுகளில் வட்ட வடிவமாகவோ அல்லது சதுரமாகவோ தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும்.
சிறுதானிய லட்டு
சிறுதானியங்களில் தினை, சாமை, வரகு உள்ளிட்ட எல்லா வகையான தானியங்களையும் கொண்டு லட்டு தயாரித்துக்கொள்ளலாம். உளுந்தை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பவுடராக்க வேண்டும். பின்னர் பொட்டுக்கடலையைச் சேர்த்து வறுத்து ஆறியதும் நைஸான பவுடராக்க வேண்டும். ஊறிய சாமையை நீர் விட்டு கிரைண்டரில் சிறிதளவே உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவுடன் உளுந்துமாவு, பொட்டுக்கடலைமாவு சேர்த்துப் பிசையவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யைக் காயவைத்து, பிசைந்த மாவைத் தேன்குழல் அச்சில் சேர்த்துத் தேன்குழல்களாக எண்ணெயில் பிழிந்துவிடவும்.
இருபுறமும் வேகவைத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்து ஆறியதும், சிறு துண்டுகளாக ஒடித்து வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைச் சேர்த்து ஒரு கப் நீர் விட்டுக் கொதிக்கவிட்டு, வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும். இதில் தேங்காயையும், ஏலக்காய்த் தூளையும் சேர்த்து பதம் வந்ததும் இறக்கி, ஒடித்த தேன்குழல் துண்டுகளைச் சேர்த்து மிதமான சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும். இந்த லட்டு பல நாள்கள் கெடாமல் இருக்கும்.
மேலும், சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி மிக்ஸ் எனும் உணவுப் பொருளைத் தயாரிக்கலாம். இதுதவிர, தோசை மிக்ஸ், மூலிகை பவுடர்கள், சூப் பொடிகள் எனப் பல பொருள்களைத்் தயாரித்து வருகிறேன்” என்றார் மகேஸ்வரி.
(மதிப்புக் கூடும்)
துரை நாகராஜன்
படங்கள்: க.மீனாட்சி

சந்தை வாய்ப்பும், வருமானமும்!
“சிறுதானியம் பற்றிய விழிப்புஉணர்வு இப்போது பெருகி வருவதால் விற்பனை வாய்ப்பும் பெரிய அளவில் இருக்கிறது. சிறுதானியப் பொடிகள், மூலிகை சூப், மூலிகைப் பொடிகள், அப்பளம், மூலிகைத் தேநீர்ப் பொடிகள், கஞ்சி மிக்ஸ், தோசை மிக்ஸ், அவல், ஊறுகாய், சிறுதானிய லட்டுகள் என ஒரு பிரிவுக்குப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரித்து வருகிறேன். இதுபோக மரச்செக்கு எண்ணெய் போன்ற பொருள்களைத் தனியாக வாங்கி, அதை பாக்கெட் செய்து விற்பனைக்கு அனுப்புகிறேன். என்னுடைய தயாரிப்புக் கூடம் 10 அடி நீளம் 10 அடி அகலம் மட்டுமே கொண்டது. அதற்குள்தான் இவ்வளவு பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
பொதுவாக மருந்து எடுத்துக்கொள்வதில் சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்குப் பின் என இருவேளைகளை நாம் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், உண்ணும் உணவையே மருந்தாகக் கொடுத்துவிட்டால் அதற்கான தேவையே இங்கு இருக்காது. இத்தொழிலை, எடுத்தவுடன் அதிக பொருள் செலவில் ஆரம்பித்து விடக்கூடாது. பயிற்சிகளை முறையாக எடுத்துக் கொண்டு மதிப்புக் கூட்டல் தொழில் செய்வது மிக அவசியம். இது சம்பந்தமான பயிற்சிகளை என்னால் வழங்க எனக்கு நேரம் கிடையாது. ஆனால், தொழில் செய்யத் தயாராக இருப்பவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். இத்தொழிலைப் பொறுத்தவரை நாம் பார்க்கும் மொத்த வருமானத்தில் செலவு 50% போக, லாபமாக 50% கிடைக்கக்கூடும். ஒரு பொருளை அப்படியே விற்பனைச் செய்வதை விட்டுவிட்டு, மதிப்புக் கூட்டல் மூலமாகச் செய்தால் எளிதில் வருமானம் ஈட்டலாம். என்னைப் பொறுத்தவரை மதிப்புக் கூட்டல் என்பது மகத்தான கலையாகும்’’ என்றார் மகேஸ்வரி.

ஆதார் - பான் கார்டு இணைப்பு... காலக்கெடு நீட்டிப்பு!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆதார் கார்டுடன் மற்ற சேவைகளை இணைக்கும் பணிக்கான காலக்கெடு, 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 கோடி பான் கார்டுகளில், இதுவரை
14 கோடி பான் கார்டுகள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில், பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை பயோமெட்ரிக் ஐடென்டிஃபையருடன் இணைக்கும் வேலையும் துரிதமாக நடந்து வருகிறது. இதுவரை 70 சதவிகிதம் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, திட்டமிடப்பட்ட 100 கோடி வங்கிக் கணக்கு களில், 70 கோடி கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.