
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
இன்று நாம் டிஜிட்டல் உலகில் வசித்து வருகிறோம். பலருக்கும் பல விஷயங்களைச் செய்ய நேரமில்லை. இன்டர்நெட், ஸ்மார்ட் ஃபோன், போக்குவரத்து வசதிகள் எனப் பல வசதிகள் வந்தபிறகு, நமது நெட்வொர்க் பெரிதாகிவிட்டது. பழைய காலத்தில் 10 வாடிக்கை யாளர்களை மட்டுமே நிர்வகிக்க முடிந்த ஒருவரால், இன்று அதைப்போல் 10 மடங்கு வாடிக்கையாளர்களை நிர்வகிக்க முடிகிறது. இவையெல்லாம் நல்ல விஷயங்கள்தான்.

ஆனால், இந்த வேகமான உலகில், நமது சுய நிதி முன்னேற்றத்தைக் கணக்கிட மறந்துவிடுகிறோம். நம்முடைய பைக் அல்லது காரை சில மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறோம். அதைப்போல, நமது வீட்டை வருடத்துக்கு ஒருமுறை, பராமரிப்பு செய்து அழகுபடுத்திக் கொள்கிறோம். வருடத்துக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று ஹெல்த் செக்-அப் செய்துகொள்கிறோம். இவற்றைப்போலவே நம் நிதி சார்ந்த வரவு செலவு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை வருடத்துக்கு ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது அவசியம்தானே?
2017-ம் வருடம் முடிந்து 2018 தொடங்கப்போகிறது. நமது நிதி நிலைமையை ரிவியூ செய்துகொள்ள இது ஒரு நல்ல தருணம். “எல்லாம் நன்றாகத்தானே சென்றுகொண்டிருக்கிறது; நான் ஏன் எனது நிதி ஆலோசகரின் உதவியுடனோ அல்லது சுயமாகவோ இந்த வருடாந்திர ரிவியூவை செய்துகொள்ள வேண்டும்?” என நீங்கள் கேட்கலாம். வாழ்க்கை என்பது ஒரு நேர்க்கோடு அல்ல. அதில் ஏற்ற இறக்கம் இருக்கும். சில சமயத்தில் வாழ்க்கை நம்மை இமயத்தின் உச்சத்திற்கு எடுத்துச்செல்லும். அதே நேரத்தில் அதலபாதாளத்திலும் வீழ்த்திவிடும்.

வருடாந்திர ஹெல்த் செக்-அப் செய்யும்போது, நமக்கு வெளியில் தெரியாத நோய்கள் ஏதும் நமது உடம்புக்குள் இருக்கின்றனவா என்று சிலசமயங்களில் கண்டுபிடிக்கிறோம் அல்லவா? அதுபோல ஏதும் ஆபத்துகள் நம்மை எதிர்நோக்கி உள்ளதா, அல்லது நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோமா என்பது போன்ற பலவற்றையும் இந்த ஃபைனான்ஷியல் செக்-அப் நமக்குக் காண்பித்துக் கொடுக்கும்.
நீங்கள் பர்சனல் ஃபைனான்ஸ் அனுபவம் மிக்கவராக இருந்து, போதுமான நேரமும் இருந்தால் இந்த ரிவியூவை நீங்களே செய்து கொள்ளலாம். இல்லையென்றால், உங்கள் நிதி ஆலோசகருடன் அமர்ந்து இதைச் செய்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் நிதி ஆலோசகருடன் இந்த ரிவியூவைச் செய்வதென்றால், அவரே உங்களுக்கு ஒரு மாதிரி படிவத்தைக் கொடுப்பார். அதில், உங்களின் நிதி நிலைமை பற்றிய அனைத்துக் கேள்விகளும் இருக்கும். நீங்களாக ரிவியூ செய்துகொள்ளப் போகிறீர்கள் என்றால், நிதி சார்ந்த உங்களின் ஆவணங்களையும், விவரங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள் (பார்க்க : வருடாந்திர ஆய்வுக்குத் தேவையான விஷயங்கள் பெட்டிச் செய்தி).

இந்த வாரத்தில் ஒரு விடுமுறை நாளன்று, கணவன், மனைவி, குழந்தைகள் என அமருங்கள். இந்த அமர்வில், சென்ற வருடத்தில் சம்பாத்தியம், செலவு, சேமிப்பு, முதலீடு போன்றவை எவ்வாறு இருந்தது..?, உங்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா அல்லது உபரி வந்துள்ளதா என்பதை அலசுங்கள். சென்ற வருடம் நீங்கள் செய்த சிறந்த செயல்களுக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாராட்டிக் கொள்ளுங்கள். செய்த தவறுகளை அடையாளம் கண்டு, இனிவரும் வருடத்தில் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். குறிப்பாக, எந்தெந்த முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
* முடிந்தால் சுருக்கமா,க இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட் மற்றும் கேஷ் ஃப்ளோ ஸ்டேட்மென்ட் ஒன்றை நிறுவனங்கள் தயாரிப்பதைப்போல தயாரியுங்கள். இதை நேரடியாகச் சென்ற வருடத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
* உங்களின் வருமானத்தை முதலில் அலசுங்கள். உங்கள் தகுதி/ உழைப்புக்கேற்ப வருமானம் கிடைத்துள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால், அதிக வருமானம் பெறுவதற்கு உங்களின் தகுதியை எவ்வாறு உயர்த்திக்கொள்வது என ஆலோசியுங்கள். ஏதாவது புதிதாகக் கற்க வேண்டுமா என்று பாருங்கள். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிடுங்கள். தற்போதைய நிதி நிலைமையில் உங்களின் அந்தச் செலவைச் சமாளிப்பது எப்படி என்றும் யோசியுங்கள். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இந்த அலசல் பொருந்தும்.
* கடந்த வருடம் வந்த வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் சேமித்தீர்கள் / முதலீடு செய்தீர்கள் என்று கணக்கிடுங்கள். இது, அதற்கு முந்தைய வருடத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்தறியுங்கள். இனி வரும் வருடத்தில் இந்தச் சதவிகிதத்தை எவ்வளவு உயர்த்த முடியும் என்று ஆலோசியுங்கள். நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல; எவ்வளவு சதவிகிதம் சேமிக்கிறீர்கள் / முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்களின் சம்பாத்தியம் அதிகரிக்கும்போது, உங்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டுச் சதவிகிதம் அதிகமாக வேண்டுமென்பது முக்கியமான விஷயம். உதாரணத்துக்கு மாதம் ரூ.10,000 சம்பாதிப்பவரின் சேமிப்புச் சதவிகிதம் 5% (ரூ.500) ஆக இருக்கலாம். அதுவே 20,000 சம்பாதிப்பவரின் சேமிப்புச் சதவிகிதம் 10 சதவிகிதமாக இருக்க வேண்டும். மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிப்பவரின் சதவிகிதம் 40 சதவிகிதமாக இருக்க வேண்டும்.
* உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் போதுமான ஹெல்த் இன்ஷூரன்ஸ் உள்ளதா என்று பாருங்கள். டாப்-அப் இன்ஷூரன்ஸ் ஏதும் தேவையா என்பதையும் ஆராயுங்கள்.
* டேர்ம் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸை, சம்பாதிக்கும் அனைவருக்கும் எடுப்பது குறித்து ஆராய்வது அவசியம். உங்களின் சம்பாத்தியம் உயர்ந்து, கடன் அதிகமாகியிருந்தாலும், உங்கள் சம்பாத்தியத்தைச் சார்ந்து இருப்பவர்கள் அதிக மாகியிருந்தாலும் இன்ஷூரன்ஸை உயர்த்துவது குறித்து யோசிக்க வேண்டும்.
* உங்களின் வீடு, கார், வீட்டு உபயோகப் பொருள்கள், தொழில் போன்றவற்றின் காப்பீட்டை எடுத்து, போதுமானதாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
* உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகள் குறித்து ஆலோசியுங்கள். அந்த இலக்குகளுக்காக நீங்கள் செய்துள்ள முதலீடுகள் போதுமானதா அல்லது இன்னும் முதலீட்டை அதிகரிக்க வேண்டுமா என்று பாருங்கள். இதில், உங்களின் பல வாழ்க்கைத் தேவைகளான ஓய்வூதியம், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவு, வீடு, கார், டூர் போன்றவை அடங்கும்.
* உங்கள் தேவைகளுடன் உங்கள் முதலீடுகள் பொருந்துகிறதா என்று பாருங்கள். அவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று கவனியுங்கள். அஸெட் அலோகேஷன் குறித்தும் கலந்தாலோசியுங்கள். அசையாச் சொத்துகள் வாங்குவதும், விற்பதும் இதில் அடங்கும். முதலீடு செய்யத் தொடங்கியபின் எல்லாப் பணத்தையும் ஒரே ஒரு முதலீட்டில் போடாமல் தங்கத்தில் இவ்வளவு, மியூச்சுவல் ஃபண்டில் இவ்வளவு, பங்குச் சந்தையில் இவ்வளவு என்று பிரித்து முதலீடு செய்யுங்கள்.
* வருமானவரிச் செலுத்துவது, அதிலுள்ள சலுகைகள், சலுகைகளை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்வது குறித்துப் பேசுங்கள். வரியைச் சேமிக்கும் முதலீடுகளைச் செய்துள்ளீர்களா என்று பாருங்கள்.
* உயில் எழுதுவது குறித்தும், ஏற்கெனவே எழுதியிருந்தால் அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் உரையாடுங்கள்.
* உங்களின் உதவித் தேவைப்படும் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கு எந்தளவுக்கு உங்களால் உதவி செய்ய முடியும் என்று பாருங்கள். அதற்காக நிதி ஒதுக்கத் தேவை யிருந்தால் ஒதுக்குங்கள்.
* சமூகத்துக்கு உங்களின் பங்களிப்பு குறித்துக் கலந்துரை யாடுங்கள். பணமாக இருக்கலாம் அல்லது நேரமாக இருக்கலாம்; ஆனால், நாம் ஒவ்வொருவரும் இந்தச் சமூகம் மேம்பட ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
இவை தவிர உங்களுக்கு வேறு ஏதும் தோன்றினால், அவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவ்வளவையும் பேசுவது பெரிதல்ல; பேசும்போதே குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். மேலும், செயல்திட்டம் ஒன்றையும் தயாரித்துக்கொள்ளுங்கள். இதன்மூலம், உங்களுக்கு நிதி சார்ந்த விஷயங்களில் முழுமையான தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் உட்கார்ந்து நீங்கள் திட்டமிட்டால், இனிவரும் ஆண்டுகள் உங்களுக்கு வளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
படம்: தி.விஜய்

வருடாந்திர ஆய்வுக்குத் தேவையான விஷயங்கள்!
* ஒரு வருட பேங்க் ஸ்டேட்மென்ட்/ பாஸ்புக்.
* நீங்கள் வாங்கியிருக்கும் அனைத்துக் கடன்களுக்கான ஸ்டேட்மென்ட்.
* தற்போதைய மதிப்புடன், நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முதலீடுகள் மற்றும் சொத்துகளின் ஸ்டேட்மென்ட் – டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட், பி.எஃப், பங்குகள், சொந்தத் தொழில்களில் உள்ள பங்கு போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.
* பல்வேறு விதமான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் – லைஃப், ஹெல்த், வீடு, வாகனம், மற்றும் பிற.
* உங்களின் கடந்த வருட மொத்தச் செலவுகள் – குடும்பச் செலவுகள், கல்வி, போக்குவரத்து, ஆடை ஆபரணங்கள், பல்வேறு வரிகள் எனப் பிரித்திருந்தால் மிகவும் நல்லது.
* உங்களது வருமான விவரங்கள் – மாத வருமானம்/ ஆண்டு வருமானம், போனஸ்.
* உங்களது வருங்காலத் தேவைகள்/ நோக்கங்கள்/ ஆசைகள் – குறுகிய காலம், நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட காலம் எனப் பிரித்துக்கொண்டால் மிக நன்று.

உலகப் பணக்காரர்கள்... முதலிடத்தில் பில்கேட்ஸ்!
ஃபோர்ப்ஸ் பத்திரிகை யின் கருத்துப்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் 2017-ம் ஆண் டின் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டின் முதல் காலாண்டுத் தொடக்கத்தில், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் முத லிடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 86 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், தொடர்ந்து நான்காவது ஆண்டாக பில்கேட்ஸ் அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார். அதேபோல கடந்த 23 ஆண்டுகளில் 18 முறை நம்பர் 1 இடத்தில் இருந் துள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.