நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் - 2017 உற்சாகம்... நம்பிக்கை... விடாமுயற்சி!

#NanayamAwards2017
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2017 விருது வழங்கும் நிகழ்ச்சியானது சென்னையில் கடந்த வாரம் நடந்தது. தமிழகம் முழுக்க உள்ள சாதனை படைத்த பிசினஸ்மேன்கள் இதில் கெளரவிக்கப்பட்டனர். ஒன்பது பிரிவுகளின் கீழ் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டுகள் வழங்கப்பட்டன.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், முதலாளி என்பவர் யார் என்று பேசினார்.
“முதலாளி என்ற சொல் அதிகாரம் என்றும், பயம் என்றும் பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மையில் நிறுவனத்தின் முதல் தொழிலாளிதான் முதலாளி. ஒரு கனவைச் சுமந்து அதை நிறைவேற்ற துடிப்பவன் முதலாளி. அந்தக் கனவில் பிறரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு வளர்ச்சியைத் தருபவன் முதலாளி.

நிறுவனத்தின் அத்தனை பிரச்னைகளையும் சவால்களையும் முதல் ஆளாகச் சந்திப்பவன் முதலாளி. தோல்விகளையெல்லாம் தனதாக்கிக்கொண்டு வெற்றியைப் பகிர்ந்துகொள்பவன் முதலாளி. அப்படிப்பட்ட சிறந்த தொழில் முனைவோர்களுக்கு நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் வழங்கிக் கெளரவிப்பதில் பெருமிதம் கொள்கிறது” என்று பேசினார்.
லைஃப்டைம் அச்சீவ்மென்ட் விருது
அடுத்து, விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. வாழ்நாள் சாதனையாளர் விருது (LifeTime Achievement Award) சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில் “ஒரு பிசினஸுக்குப் பணம், மூலப் பொருள் என எல்லாவற்றையும் வாங்கிவிடலாம். ஆனால், ஊக்கத்துடன் உழைக்கும் நல்ல ஊழியர்களை வாங்குவது கடினம்.

ஒரு நிறுவனம் தரமான பொருள்களைத் தயாரித்தாலும், பெரிய முதலீட்டில் நவீனத்துவ மாகச் செயல்பட்டாலும், அந்த நிறுவனத்திலுள்ள ஊழியர்களே அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.
அப்படிப் பட்ட ஊழியர்கள் பெரும் கனவு களோடு வேலைக்கு வருகிறார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றுவது ஒரு நிறுவனத்தின் பொறுப்பு. அதனை நாங்கள் நிறைவேற்றியதால்தான், கடந்த 50 ஆண்டுகளில் ஒருநாள்கூட வேலை நிறுத்தம் இல்லாமல் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்த விருதினை வழங்கிப் பேசிய ஸ்ரீராம் குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.தியாகராஜன், “நாங்கள் தொழில் தொடங்க எங்களுக்கு ஊக்கமாக இருந்தது டி.வி.எஸ் நிறுவனம்தான்’’ என்று பாராட்டினார்.
செல்ஃப் மேட் ஆன்த்ரபிரனர் விருது
கே.பி.ஆர் மில் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமிக்கு செல்ஃப் மேட் ஆன்த்ரபிரனர் அவார்டு வழங்கப் பட்டது. கே.பி.ராமசாமி கோவை, பெருந்துறைக்கு அருகில் கள்ளியம்புதூர் என்கிற குக்கிராமத் தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். வெறும் ரூ.8,000 முதலீட்டில் தன்னுடைய பிசினஸைத் தொடங்கியவர், இன்றைக்கு சுமார் ரூ.5,000 கோடிக்கு மேல் பிசினஸ் செய்துவருகிறார்.
கே.பி.ராமசாமிக்கு இந்த விருதினை டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் வழங்கினார். விருதைப் பெற்றுக் கொண்டு பேசினார் கே.பி.ராமசாமி.

“உற்சாகம்தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியம். தொழிலாளர்கள் உற்சாகமாகப் பணியாற்றினால் தான் அந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சியடைய முடியும்’’ என்றார்.
பிசினஸ் மென்டார் விருது
இந்த விருது கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தின் தலைவர் சி.கே. ரங்கநாதனுக்கு அளிக்கப்பட்டது. பிசினஸ் தொடங்க விரும்பும் பல ஆயிரம் பேருக்கு வழிகாட்டுதல் இல்லாத தால் அவர்களுடைய இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படு கிறது. சிறு பிரச்னையைக்கூட சமாளிக்க வழி தெரியாமல் பிசினஸையே விட்டுவிடும் நிலைகூட ஏற்படுகிறது.

ஆனால், கவின்கேர் ரங்கநாதன் தன்னால் முடிந்தவரை தொழில் முனைவோர்களுக்குத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடைய பிசினஸ் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறார். அதற்காக அவருக்கு பிசினஸ் மென்டார் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டது. சி.கே.ரங்கநாதனுக்கு டை (TiE) சென்னை அமைப்பின் தலைவர் வி.சங்கர் விருது வழங்கினார்.

இந்த விருதினை ஏற்றுக்கொண்ட சி.கே.ரங்கநாதன், ‘‘வாடிக்கை யாளர்கள் அக்கறையோடு கவனிக்கும் எந்த நிறுவனமும் எப்போதும் தோற்றுப்போனதாகச் சரித்திரம் இல்லை. வாடிக்கை யாளர்களைக் கவனியுங்கள். நீங்களும் தொழிலில் ஜெயிப்பீர்கள்’’ என்றார்.
பிசினஸ் மென்டார் விருது (அமைப்பு)
கோவையில் இன்று தொழில் துறையில் வளர்ச்சியில் முக்கிய நகரமாக வளர்ச்சியடைய முக்கிய மான காரணம் கொடீசியாதான். கோவை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் இருக்கும் சிறு, குறு தொழில்முனைவோர்களின் வளர்ச்சியில் கொடீசியா பெரும் பங்கு வகிக்கிறது. தொழில் முனைவோர் வளர்ச்சியிலும் தொழில்துறை வளர்ச்சியிலும் பங்கு வகிக்கும் இந்தக் கொடீசியா அமைப்புக்கு பிசினஸ் மென்டார் (அமைப்பு) விருது வழங்கப்பட்டது.

கொடீசியாவின் தலைவர் வி.சுந்தரத்துக்கு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் விருது வழங்கினார். விருதினைப் பெற்றுக்கொண்ட வி.சுந்தரம் பேசுகையில், “எங்கள் சீனியர்களின் விடாமுயற்சியும், குழுவாகச் செயல்பட்டும் இந்த அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு 5000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம்’’ என்றார். நாணயம் விகடன் அளித்த விருதினைப் பெற கொடீசியா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்ததைக் கண்டு விழாவுக்கு வந்தவர் ஆச்சர்யம் அடைந்தனர்.

கோல்டன் ஃபீனிக்ஸ் விருது
ஒரு பிசினஸைத் தொடங்கி வளர்ந்து அடிபட்டு மீண்டும் ஜீரோ நிலைக்கு வந்து, மீண்டும் அங்கிருந்து எழுந்து பெரும் வெற்றி கண்டவர் கேப்லின் பாயின்ட் நிறுவனத்தின் தலைவர் சி.சி.பார்த்திபன். தோல்வி என்னும் சாம்பலிலிருந்து மீண்டுவந்த அவருக்கு கோல்டன் ஃபீனிக்ஸ் விருதை வழங்கி கெளரவித்தார் எம்.எம் ஃபோர்ஜிங் நிர்வாக இயக்குநர் வித்யாசங்கர்.

“வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களைப் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும். கஷ்டங்களையே நினைத்துக்கொண்டிருந்தால் உடைந்து போய் நோயாளியாகவே வாழ்க்கையைத் தள்ள வேண்டியிருக்கும். எனவே எதையுமே பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தைரியமும் விடா முயற்சியும் என்னை உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்தவனை உங்கள் முன்பு நிறுத்தியிருக்கிறது. தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவல்ல. ரிஸ்க் எடுத்துச் செயல்பட்டால் நிச்சயம் வளர முடியும்” என்றார்.
சோஷியல் கான்சியஸ்னஸ் விருது
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாகத் தரமான மருத்துவத்தை அனைவருக்கும் பொதுவாக வழங்கிவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சோஷியல் கான்சியஸ்னஸ் விருது வழங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவர் (எமரிட்டெஸ்) டாக்டர் நம்பெருமாள்சாமிக்கு பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் தலைவர் எஸ்.வி. ஆறுமுகம் விருது வழங்கினார்.

விருதினைப் பெற்றுக்கொண்ட டாக்டர் நம்பெருமாள்சாமி பேசிய தாவது... “டாக்டர் வெங்கடசாமியின் வழியில் இன்றும் அரவிந்த் கண் மருத்துவமனை தரமான மருத்துவத்தை மலிவான விலையில் ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாமல் வழங்கி வருகிறது. இந்தக் கொள்கையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை. தமிழக அளவில் கண் அறுவைச் சிகிச்சையில் 45% அரவிந்த் கண் மருத்துவமனையில்தான் செய்யப் படுகின்றன’’ என்றார்.
பிசினஸ் இன்னோவேஷன் விருது
நம் தலைமுறையின் தலையாய பிரச்னையை எடுத்து அதற்குப் புதுமையான தீர்வினைத் தந்ததற்காக மேட்ரிமோனி டாட்காம் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான முருகவேல் ஜானகி ராமனுக்கு மிகச் சிறந்த பிசினஸ் இன்னோவேஷன் விருது வழங்கப்பட்டது. முருகவேல் ஜானகிராமனுக்கு சி.ஐ.ஐ (தமிழ்நாடு) தலைவர் பி.ரவிச்சந்திரன் விருது வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்டு பேசினார் முருகவேல் ஜானகிராமன்.

“தேவைதான் நம் வாழ்க்கையில் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொண்டு நிறைவேற்றினால் நீங்கள் பிசினஸில் ஜெயிக்கலாம்’’ என்றார்.
ரைசிங் ஸ்டார் விருது
நியாயமான வட்டியில் ஏழை களுக்குக் கடன் வழங்கத் தொடங்கப்பட்ட குறுங்கடன் நிறுவனம் ஒன்று, இன்று ஈக்விட்டாஸ் ஸ்மால் பேங்க் என ஒரு வங்கியாகவே மாறி, வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான பி.என்.வாசுதேவனுக்கு ‘ரைசிங் ஸ்டார்’ வழங்கப்பட்டது.
இந்த விருதை பொன்ப்யூர் கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாடு சி.ஐ.ஐ. அமைப்பின் துணைத் தலைவருமான எம்.பொன்னுசாமி அளித்தார்.
விருதினைப் பெற்றுக்கொண்ட வாசுதேவன், “வாழ்க்கையில் ஏதேனும் ஒருசில தருணங்களில் நம்பிக்கை குறையும். ஆனால், நம்பிக்கையைத் தளரவிடாமல் முயன்று மேல்நோக்கி வர வேண்டும்’’ என்றார்.
ஸ்டார்ட் அப் சேம்பியன் விருது
கிரெடிட் கார்டு துவங்கி இன்ஷூரன்ஸ், கடன், முதலீடு என அனைத்து வங்கிச் சேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் தீர்வு வழங்குகிறது பேங்க் பஜார் நிறுவனம்.
இந்த நிறுவனத்தைத் தொடங்கிய அதில் ஷெட்டிக்கு, லைஃப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சேர்மன் எஸ்.அபயகுமார் விருது வழங்கினார்.
ஸ்டார்ட் அப் சேம்பியன் விருதைப் பெற்றுக்கொண்டு அதில் ஷெட்டி பேசியதாவது... ‘‘வாடிக்கையாளர்கள் மகிழும் வகையில் சேவை அளித்தால்தான் நம்மால் வளர முடியும். மொபைல் போன் வழியாகவே வீட்டில் இருந்தே பாதுகாப்பாக ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் என அனைத்திலும் முதலீடு செய்ய முடியும்’’ என்றார்.
- ஜெ.சரவணன், ஞா.சக்திவேல் முருகன், தெ.சு.கவுதமன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், எஸ்.தேவராஜ், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணக்குமார், தே.அசோக்குமார், க.பாலாஜி

இந்தியா தனது முழுத் திறனையும் பயன்படுத்த வேண்டும்!
அனந்த நாகேஸ்வரன், சர்வதேசப் பொருளாதார நிபுணர்
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன் சிறப்பு உரையாற்றினார். இந்தியாவில் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பேசினார். “இந்தியாவில் முறைப்படுத்தப்படாத துறைதான் மிக அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நிறுவனங்கள் வெறும் நான்கு சதவிகிதம் மட்டும்தான்.
இந்தியாவில் ஊக்கத் திட்டங்கள் அனைத்தும் நிறுவனங்களின் அளவைப் பொறுத்து வழங்கப்படுகிறதே தவிர, செயல்பாட்டை வைத்து வழங்கப்படுவதில்லை. இதனால், நிறுவனங்கள் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்துவதற்காகவே அளவில் வளர முயற்சி செய்யாமலேயே இருக்கின்றன. முறைப்படுத்தாத துறையில் படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. இதனால், அவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட துறைகளின் கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்வதினால் ஏற்படும் வளர்ச்சி மற்றும் பலன்கள் குறித்துத் தெரிவதில்லை. முறைப்படுத்தப்படாத துறைகளில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு கல்வி, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகிறது. மற்றவையெல்லாம் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. கார்ப்பரேட் கவர்னன்ஸ் அறிவு மிகவும் அவசியம். தனியார் நிறுவனங்கள் அதற்கான கல்வியை ஊக்குவிக்க முதலீடு செய்யலாம்” என்று பேசினார்.