2017 ஸ்பெஷல்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

துளிர்ப்பு

தன்னை எரித்து மின்மினிப் பூச்சிபோல்
வெளிச்சப் புள்ளியாக
சுற்றிச் சுற்றி வருகிறது
கவனிக்கப்படாத ஓர் ஊமை அன்பு.
வெறுமை நிரம்பப் போகிற வாழ்வில்,
வேகமாக ஓடிக் களைத்து,
எல்லா அன்றாடக் கசடுகளும்
ஒழிந்த ஒரு நாளில்...
அந்த மினுங்கலின் பிரமாண்டம் உணர்வாய்.
அந்த உள்ளுறைத் தீயின்
பரிசுத்தத்துக்கு ஏங்கி
கண்ணீர் துளிப்பாய்.

- ஸ்ரீவி சிவா

சொல்வனம்

கருக்கல் கவிதை

இரவெல்லாம் கடவுளோடு
விளையாடிக் களைத்து
கோணல் மாணலாய்
உறங்கிக்கொண்டிருக்கும்
குழந்தைகள்தான்
விடியலில் விழிக்கும்
அம்மாக்கள் படிக்கும்
அன்றைய முதல்கவிதை.

- திரு வெங்கட்

பாசிப் பறவை

மழைக்குப் பின்
நெருப்பில்லாமல் புகைகிறது
வைக்கோல் போர்.
தன்னிச்சையாய் இடமாறுகிறது
நத்தை.
கூரையிடுக்கிலிருந்து புறப்பட்டது
கறுப்புத் தொடர்வண்டியென
அட்டைப்பூச்சி.
கட்டுத்தரையிலிருந்து
கரைந்தோடிய சாணத்தால்
தெருவோரம் புதிதாய் முளைத்தது
வயற்காடு.
நிறைந்த குளத்தில்
மூழ்கியெழுந்த வெண் நாரை
தூரிகையில்லாமல் பச்சைநிறத்தில்.
குளத்தில் கிடந்த பாசியோ
நாரையின் உதவியால்
சிறகு முளைத்த பறவையென.

- தமிழ் தென்றல்