
கவிதை: கனிமொழி.ஜி

நெரிசல் விலகி நெடுநேரம் நடந்த ஈரப் பாதையில்
ஒரு ஜோடி காலடித் தடங்கள் மட்டுமே என் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன...
அவற்றிலும் சில கடலுக்குள் இறங்கியிருந்தன…
அது தவிர அங்கே ஏதுமில்லை
அலையொதுக்கிய மலர்ச்சரமோ
நெகிழிப் பையோ
ஒற்றைக் காலணியோ, உடைந்த கட்டுமரமோ ஏதுமில்லை….
ததும்பிக்கொண்டிருந்த கடலைத் தவிர...
வட்டமாய் சிவந்த கதிர் இன்னும் சற்று நேரத்தில் கடலைக் கைவிட்டு மேலெழும் உத்தேசத்திலிருந்தது…
மெல்லிய சிறு தளிரைப்போல காலையில் இவ்வளவு நெருக்கத்தில் நான் இதற்குமுன் கடலைக் கண்டதேயில்லை…
கடல், மணலில் தனியே ஒரு சிறுவனைப் போல விளையாடிக்கொண்டிருந்தது
இங்கேயிருக்கும் கடல் பற்றி
யாருக்கும் தெரியவில்லை
அதன் இருத்தலை எவரிடமும் தெரிவிக்க இயலவில்லை
இரு கைகளைக் குவித்து அள்ளிக்கொண்டபோது விரலிடுக்கில் இறங்கி மீண்டும் அது ஓடிவிட்டது
இந்தத் தளும்பலை இங்கேயே
விட்டுவிட்டு வர மனமில்லை
இந்தக் கடலுக்கு சாட்சியாய் நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன்..