மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

வாய்நிறைய வெற்றிலையை மென்றபடி கபிலரின் குடிலுக்கு வந்தார் வாரிக்கையன். காலையிலேயே பெரியவர் வந்துள்ளாரே என வேகமாக வெளியில் வந்து திண்ணையில் உட்கார்ந்தார் கபிலர்.

உள்ளிறங்கும் வெற்றிலையின் சாற்றுக்கு இடையூறில்லாமல் பேச்சைத் தொடங்கினார். “எதிரிநாட்டு அரசன் வீழ்ந்துவிட்டான் என்பதன் குறியீடாக அவன் நாட்டுக் காவல்மரத்தை வெட்டியெடுத்துச் செல்வார்கள். பறம்பின் காவல்மரம் எதுவெனத் தெரியாது. அதனால் பறம்பைக் காக்கும் கொற்றவையின் குழந்தையான தேவவாக்கு விலங்கினை எடுத்துச்சென்றால் பறம்பை வென்றதாகப் பொருள். அதனால்தான் காலம்பன் கூட்டத்தை அனுப்பி தேவவாக்கு விலங்கினை எடுத்துவரச் சொல்லியுள்ளான் பாண்டியன் என்று நீங்கள் சொன்னதாக வீரர்கள் சொல்கிறார்களே அது உண்மையா?”

மெல்லும் வெற்றிலையை இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஒதுக்கியபடியே பக்குவமாய்ப் பேசினார் வாரிக்கையன். வெற்றிலையின் சிறப்பு, மெல்லுகிறவரின் வாயில் எவ்வளவு ஊறுமோ அதே அளவு அருகில் இருப்பவரின் வாயிலும் ஊறும். கபிலர் கைநீட்டும்பொழுதே வாய் அசையத் தொடங்கிவிட்டது.  

வாரிக்கையன் ஒவ்வொரு வெற்றிலையாய் எடுத்துக் கொடுத்தார். வாங்கி, தடம்பார்த்து மடித்தபடியே கபிலர் சொன்னார், “இதுவும் காரணமாக இருக்கலாம் என்றுதான் சொன்னேன். இதுதான் காரணம் என்று சொல்லவில்லை.”

“இது காரணமாக இல்லாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறதா?”

“இருக்கிறது.”

மூன்று வெற்றிலைகளை ஒன்றாக மடித்து இடதுகடவாயின் கடைசிப்பல்லுக்குக் கொடுத்தபடி வாரிக்கையன் கேட்டார் “என்ன அது?”

“இந்தக் காரணத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டிருந்தால், அவற்றை ஏன் துறைமுகத்துக்கும் கலங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்? யவனர்கள் விலங்குகளையும் பறவைகளையும் அவர்களின் நாட்டுக்கு வாங்கிச்செல்வர். சற்றே வேறுபட்டு இருக்கிறது என்பதால் இதனை வாங்கியிருக்கலாம் என்றுகூடத் தோன்றும். ஆனால், நம் வீரர்கள் சொல்லும் குறிப்பைப் பார்த்தால் தேவவாக்கு விலங்குகளை யவன நாவாய்களில் ஏற்றியதாகத் தெரியவில்லையே. தமிழ்வணிகர்களின் கலங்களில்தான் ஏற்றுப்பட்டுள்ளன.”

“எப்படி அவையெல்லாம் யவன நாவாய்கள் இல்லையென உங்களால் சொல்ல முடிகிறது?”

“எல்லாம் பட்டறிவுக்கணக்குதான். உங்கள் வாய்க்குள் போகும் வெற்றிலைகள் மட்டும் ஆண்வெற்றிலைகளாக இருக்கின்றன அல்லவா? அதுபோல அறிவைத்  தன்னியல்பாக்கிக்கொள்வதுதான்.”

“கண்டறிகிறானடா கபிலன்” என்று சிறுவனைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுவதுபோல கபிலரைப் பாராட்டிய வாரிக்கையன் தொடர்ந்து கேட்டார், “பின்னர் எதற்குத்தான் அவர்கள் இதனை எடுத்துச்சென்றனர்?”

“இந்தக் கேள்வி ஏன் உனக்குத் தோன்ற மறுக்கிறது எனப் பாரியிடம் கேட்டால், அவன் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடுகிறான். ‘வேந்தர்கள் எந்தச் செயல் செய்தாலும் அது அவர்களின் அதிகாரத்துக்கானது. மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாரியும் தேக்கனும் வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. “எங்கே போகிறார்கள்?” எனக் கேட்டார் கபிலர்.

இடப்பக்கமாகத் திரும்பி உதடுகுவித்து வெற்றிலை எச்சிலைத் துப்பியபடி வாரிக்கையன் சொன்னார், “வாயில் வெற்றிலை இருக்கும்பொழுது அதற்கு மட்டுந்தான் வாயசைக்க வேண்டும். சாறு உள்ளிறங்கும்போது ஓசையை வேகமாக வெளியேற்றக் கூடாது, அருகில்போய்க் கேளுங்கள்.”

புறப்பட்டுப் போனார் கபிலர். பாரியும் தேக்கனும் நாகப்பச்சை வேலியினருகே இருந்த காலம்பனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். காலம்பனோடு திரையர்குல வீரர்கள் ஏழுபேர் இருந்தனர். அறுவர் இளம் வீரர்கள்; ஒருவர் மிகவும் வயதான கிழவர். அவரது பெயர் ஏதோ சொன்னார்களே என்று நினைவுகூர்ந்தபடியே போனார் கபிலர். அருகில் போனவுடன் நினைவிற்கு வந்தது. அவரது பெயர் அணங்கன்.

திரையர்குல வீரர்கள் நீண்ட பயணத்துக்கான ஆயத்தத்தோடு இருப்பதை அறியமுடிந்தது. பெரியவர் அணங்கன் எதையோ துணியிற்சுற்றிக் கையில் வைத்திருந்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

பார்த்தபடி தேக்கன் கேட்டான், “எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்?”

“நான் போகவில்லை. இவர்கள் அறுவர்தான் போகப்போகிறார்கள். நானும் செதிலனும் இவர்களை அனுப்பிவைத்துவிட்டு வந்துவிடுவோம்” என்றான் காலம்பன்.


“அதுதான், எங்கே போகப்போகிறார்கள்?” என்று தேக்கன் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே பாரி சொன்னான், “பறம்பின் காட்டுக்குள் இவர்கள் மட்டும் ஏன் தனியாகப் போகவேண்டும். பறம்பு வீரர்களும் உடன்போகட்டும்.”

பாரி சொல்லி முடிக்கும்முன் சற்றுத் தள்ளி நின்றிருந்த பறம்பு வீரர்கள் சிலர் திரையர்களோடு இணைந்து நின்றனர்.

அவர்களைப் பார்த்தபடி காலம்பன் சொன்னான், “பறம்பு வீரர்கள் உடன்செல்ல வேண்டாமே.”

“ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்றார் தேக்கன்.

“இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது” என்றான் காலம்பன்.

பாரிக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.

“காடறியும் பயிற்சி முடித்த சிறந்த வீரர்கள் இவர்கள்” என்றான் தேக்கன்.

காலம்பன் மீண்டும் சொன்னான், “செய்யப்போகும் வேலைக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது, அதனால்தான் வேண்டாம் என்கிறேன்.”

“என்ன வேலைக்குத்தான் போகிறார்கள்?” சற்றே வேகமாக இருந்தது தேக்கனின் குரல்.

“காட்டெருமைகளின் மந்தைக்குள் நுழையப்போகிறார்கள்.”

மறுமொழி எதிர்பாராததாக இருந்தது. வியப்பைக் கடந்து ஐயமே மேலெழுந்தது.  “காட்டெருமைகளின் மந்தைக்குள் எப்படிப் போகமுடியும்? அங்கு போய் என்ன செய்யப்போகிறார்கள்?” என்றான் தேக்கன்.
 
“காட்டெருமையின் மந்தைக்குள் பல்வேறு குணங்களைக்கொண்ட காட்டெருமைகள் உண்டு. அவற்றில் மந்தையை வழிநடத்தும் காட்டெருமையைக் கண்டறியப் போகிறார்கள்.”

காலம்பன் சொல்வது கேள்விப்பட்டிராததாக இருந்தது. “காட்டெருமைகளின் குணங்களைக் கண்டறிய முடியுமா? அவற்றின் பின்கால் நரம்பில் அடித்து அதனை அசையவிடாமற்செய்ய திரையர்களால் முடியும் என்றுதானே கேள்விப்பட்டுள்ளோம். நீ புதிதாகச் சொல்லுகிறாயே?”

“அதுவெல்லாம் சூலிவேள் காலத்தில் செய்யப்பட்ட வேலைகள். அதன்பின் இத்தனை தலைமுறையாக நாங்கள் வேறு என்னதான் கற்றோம்? காட்டெருமையுடனேதான் கிடந்தோம்” என்று சொன்ன காலம்பன், செய்யப்போகும் வேலையைப்பற்றிச் சொன்னான்.

``மந்தைகளை வழிநடத்தும் காட்டெருமையை இனங்காணுவதுதான் முக்கியமான வேலை. ஒவ்வொரு

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

மந்தைக்கும் தலைமையெருமை ஒன்று இருக்கும். அது தான்தான் மந்தைக்குப் பெரிய ஆள் என்பதை நாள்தோறும் செயல்மூலம் காட்டிக்கொண்டே இருக்கும். அதனைத் தவிர அதற்கு வேறு வேலையில்லை. ஆனால், மந்தையை வழிநடத்துவது வேறொன்றாக இருக்கும். அதுதான் ஓசைகளின் மூலமான உத்தரவைக் கூட்டத்துக்கு வழங்கும். அதனைக் கண்டறிந்து நமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும். அதன்பின் அந்த மந்தையின் வழித்தடத்தை நம்மால் அறிய முடியும்.”

காலம்பன் சொல்லுவது நம்பமுடியாததாக இருந்தது. “நீ சொல்லுவது உண்மையா?” எனக் கேட்டான் தேக்கன்.

“எலியை நோக்கிப் பூனையைப் பாயவிடாமல் நிறுத்தும் ஆற்றல் பொதினி வேளிர்களிடம் இருந்திருக்கிறது. விலங்குகளின் குருதியிலிருக்கும் வெறியையும் பசியையும் குணத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது. பாம்பின் வலிமையே அதன் நஞ்சுதான். ஆனால், அதற்கே தெரியாமல் அதன் நஞ்சை உருவியெடுத்துப் பயன்படுத்தும் ஆற்றல் பறம்பு வேளிர்களுக்கு இருக்கிறது. இவற்றோடு ஒப்பிட்டால் திரையர்களாகிய நாங்கள் கற்றுள்ளது மிகக்குறைவுதான்” என்றான் காலம்பன்.

தேக்கன் சற்றே தாழ்வுணர்ச்சியுடன் அவனது தோளிலே தட்டிச் சொன்னான். “நீங்கள் எவ்வளவு குறைவாகக் கற்றிருக்கிறீர்கள் என்பது, உடல்முழுக்க வாங்கிய எனக்குத்தானே தெரியும்.”

அனைவரும் சிரித்தனர். “அவர்களை அனுப்பும் வரை நாங்களும் உடன்வருகிறோம்” என்று சொல்லி பாரியும் தேக்கனும் காலம்பனுடன் புறப்பட்டபொழுது கபிலரும் உடன் நடந்துகொண்டிருந்தார்.

திரையர் கூட்டத்திலே மிகவயதான மனிதராக அணங்கன்தான் இருக்கிறார். வந்த புதிதில் கபிலர் அவரோடு பேச முயன்றார். அவர் பேசும்முறையும் மொழி உச்சரிப்பும் புரிந்துகொள்ள மிகக்கடுமையாக இருந்தன. இவர் தமிழ்தான் பேசுகிறாரா அல்லது வேறுமொழி பேசுகிறாரா என்று அவ்வப்பொழுது குழப்பமாக இருக்கும். ஆனால், திரையர் கூட்டத்தில் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் எதுவுமில்லை. அணங்கனுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் சொற்கள் தெளிவாக இல்லையோ எனத் தோன்றியது. பொதுவாக மலைமக்கள் சொற்களை நீட்டி இழுத்தே உச்சரிப்பர். ஆனால், அணங்கனின் உச்சரிப்பு நேரெதிராக சிறிது சிறிதாக வெட்டி வெட்டி இருக்கும். இவர் ஓசையை ஏதேதோ செய்யப்பார்க்கிறார் என்று தோன்றும். மறுகணமே வயதாகிவிட்டதால் உருவாகும் நிலையிது என்று முடிவுக்குப் போவார் கபிலர். பேசவே அவ்வளவு தடுமாறும் அணங்கனை இவ்வளவு கடினமான வேலைக்கு ஏன் கூட்டிப்போகிறார்கள் என்று எண்ணியபடி நடந்தார் கபிலர்.

காலம்பன் காட்டெருமைகளின் மந்தைக்குள் போவதைப் பற்றிக் கூறினான். “ஒரு மந்தையைக் கண்டறிந்து அதற்குத் தெரியாமலேயே அதைப் பின்தொடர வேண்டும். அந்த மந்தையில் உத்தரவு பிறப்பிக்கும் எருமை எதுவெனக் கண்டறிய வேண்டும். இதற்கே வாரக்கணக்கில் ஆகும். அதுவரை காடுமலைகளில் அதன் கண்ணிற்படாமல் கொம்புகளுக்குத் தப்பி, வாலின் வாசம் பிடித்துக்கொண்டே போகவேண்டும்.

உத்தரவு பிறப்பிக்கும் எருமையைக் கண்டுபிடிப்பதுதான் மிகமிக முக்கியம். அதன் செருமலும் கனைப்பும் தலையாட்டலும் தனித்துவமிக்கதாக இருக்கும். அதனைக் கண்டுபிடித்து, கனைப்போசையை மடக்கி எதிர்கனைப்பை வெளியிட வேண்டும். அது எளிய செயலல்ல; மாமனிதர்களால் மட்டுமே முடியக்கூடியது. இப்பொழுது அதனைச் செய்யக்கூடிய ஒரே மனிதராக அணங்கன் மட்டுமே இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் போரிலே இறந்துவிட்டனர்” என்று பெரியவரைக் கைகாட்டிச் சொன்னான் காலம்பன்.

தேக்கனும் பாரியும் அணங்கனை பெருவியப்போடு பார்த்தனர். கபிலருக்கு இப்பொழுதுதான் அவர் பேசும்முறையின் காரணம் புரிந்தது. ஓசையைக்கொண்டு வேறோர் உயிரினத்துக்குள் புகமுடியும் மாமனிதனான அணங்கன் அமைதியாக முன்நடந்துகொண்டிருந்தார்.

காலம்பன் தொடர்ந்தான். “அந்தக் குறிப்பிட்ட காட்டெருமை கண்டறியப்பட்டுவிட்டாற்போதும், அதன்பின் நடக்கவேண்டியவற்றையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”

‘இவ்வளவு எளிதாகச் சொல்கிறானே!’ என்கிற வியப்போடு பார்த்தான் தேக்கன். முன்னால் போகிற அறுவரும் யார் என்பது இப்பொழுதுதான் புரியத் தொடங்கியது.

காலம்பன் சொன்னான், “காட்டெருமை யானையைவிட வலிமைவாய்ந்தது. ஆனால், யானையைப்போலக் கூருணர்ச்சி கொண்டதன்று. எளிதில் ஏமாறக்கூடியது. ஒருபோதும் அச்சத்தோடு அவற்றை அணுகக்கூடாது. சிறுபூச்சி ஒன்றை நசுக்கி அழிக்கும் ஆணவத்தோடுதான் அதனை அணுகவேண்டும். அதன் முன்புற நெற்றி இரும்பினைவிட வலிமையானது. அதனை மட்டுமே அது நம்பியிருக்கும். ஆனால் அதைத்தவிர முழுவுடலும் மிச்சமிருக்கிறதே!”

காட்டில் இதுவரை கேள்விப்பட்டிராதவற்றைக் கேட்கும் புதிய மனிதர்களைப்போல பாரியும் தேக்கனும் காலம்பனின் குரலை கவனித்துக்கொண்டிருந்தனர். கபிலரோ மூவரையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருந்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

காலம்பன் தொடர்ந்தான். “ஆண் காட்டெருமை விரைவில் காதுகேட்கும் ஆற்றலை இழந்துவிடும்.”

பறம்பின் ஆசான், பறம்பின் தலைவன், பறம்பின் விருந்தினன் ஆகிய மூவரையும் எந்த வேறுபாடும் இல்லாமல் வியப்பின் விளிம்பில் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தின காலம்பனின் சொற்கள்.

அவன் சொன்னான், “ஆண் காட்டெருமையின் காது மடல்களுக்குள் மயிர்க்கால்கள் அடர்ந்து முளைக்கும். அவற்றுள் சிறுகொடுக்குவகைப் பூச்சியினம் அதிகம் அடையும். அதனைக் காட்டெருமையால் ஒன்றுமே செய்யமுடியாது. பூச்சியினம் கட்டும் கூடு காதுகளை அடைத்துக்கொள்வதாலோ, அல்லது தொடர்ந்து உள்ளுக்குள் கொத்திக்கொண்டேயிருப்பதாலோ ஆண்காட்டெருமை கேட்கும் ஆற்றலை முழுமையும் இழந்துவிடுகிறது. ஆனால் பெண் காட்டெருமையின் காது மடல்களில் மயிர்க்கால்கள் முளைப்பதில்லை. எனவே அது காதுகேட்கும் ஆற்றலை இழப்பதில்லை.

குட்டியோடு நகரும் பெண் காட்டெருமைகளைச் சுற்றியேதான் ஆண் காட்டெருமைகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன. பெண் காட்டெருமைகள் மிகக்கட்டுப்பாடுகொண்டவை. அவை, வழிநடத்தும் தலைமையின் கனைப்பொலிகொண்டே செயல்படுபவை. மந்தைகளை வழிநடத்தும் பெண் காட்டெருமை வயதானதாகத்தான் இருக்கும். அதனை அறிந்து பின்னங்கால் நரம்பைச் சரிக்க வேண்டும். அதன் வேகத்தை முழுமுற்றாகக் கட்டுப்படுத்தியபின் நம்முடைய வேலையைத் தொடங்கவேண்டும். சீண்டலின் மூலமும் செருமலின் மூலமும் நாம் அதனை முன்னகர்த்திச் செல்லலாம். மந்தை முழுமையையும் அது நகர்த்திக்கொண்டு வந்துவிடும்.

ஆனால், இந்தக் கட்டத்தை அடைவது எளிதன்று. வேலையைச் செய்யப்போன ஆறுபேரையும் ஒரேநாளில் முட்டித்தூக்கிக் கொன்ற நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. காட்டெருமைகள் நாள்முழுவதும் இளைக்காமல் ஓடக்கூடியவை. எந்த மேட்டிலும் பள்ளத்திலும் விடாது ஓடுபவை. அவற்றின் ஓட்டத்துக்கு முழுநாளும் தாக்குப்பிடிக்கக்கூடியவன்தான் இந்தப் பணிக்குள்ளே இறங்கமுடியும். காட்டுக்குள் எங்களின் ஓட்டங்களைக் காட்டெருமைகளிடம் இருந்துதான் தொடங்குகிறோம். அவையே எங்களின் ஆசான்கள்” என்றான் காலம்பன்.

ஏறக்குறைய பேச்சற்று இருந்தனர் மூவரும். தேக்கனுக்கு நிறைய கேள்விகள் உருவாயின. ஆனால், அவையெல்லாம் மிக எளிதான கேள்விகள். ‘காட்டெருமைகளின் காதுமடல்களுக்குள் நுழைந்து காலம்பன் பேசிக்கொண்டிருக்கிறான்; அவனிடம்போய் இதனையா கேட்பது?’ என்று தோன்றியதால் எதையும் கேட்கவில்லை. அமைதியே நீடித்தது.

அமைதியைக் குலைத்து, சற்றே குரலுயர்த்தி காலம்பன் சொன்னான், “மலைமக்களுக்குப் பகைகொள்ளத் தெரிவதில்லை. ஆனால், பகை வளர்க்காமல் குலம் காக்கமுடியாது.”

காலம்பனின் ஆவேசமிகுந்த சொற்களால் தன்னிலைக்கு வந்தான் தேக்கன். ‘இப்பொழுது இதனைச் சொல்லும் காரணமென்ன?’ என்று சிந்தித்தான்.

காலம்பன் தொடர்ந்தான், “எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் நாங்கள் அவர்களை அழிக்காமல், எங்களைக் காத்துக்கொள்ளும் போரினை மட்டுமே நடத்தினோம். அதனாலேயே அழிக்கப்பட்டோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடக்கூடாது.”

குரலில் ஆவேசம் உச்சத்தில் இருந்தது.

“என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?” எனக் கேட்டான் பாரி.

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

“பச்சமலையின் நான்கு திசைகளிலும் நான்கு காட்டெருமை மந்தைகளை வழிநடத்தும் ஆற்றலை நாம் பெற்றாக வேண்டும்.அதற்கு இணையான ஆற்றல்கொண்ட படை இவ்வுலகில் இல்லை.”

தேக்கன் வியந்து நின்றபோது காலம்பன் சொன்னான், “யானைப் படைகளேயானாலும் அவை பழக்கப்படுத்தப்பட்டவைதான். காட்டெருமைகளைப் பழக்கப்படுத்த முடியாது. அவற்றின்  சீற்றம்    யானைக் கூட்டத்தை நடுங்கச்செய்துவிடும். அதுவும் பழக்கப்படுத்தப்பட்ட யானைகளைவிட வலிமைகுன்றிய உயிரினம் காட்டில் வேறெதுவும் இல்லை. விலங்குகளின் இயற்கையான ஆற்றலை எதிரிகளை நோக்கிப் பாயவிடும்பொழுது மிஞ்சுவது எதுவும் இருக்காது” சொல்லிய வேகத்தில் பாரியைப் பார்த்தான்; சுண்டாப்பூனையை ஏவி திரையர்குல வீரர்கள் எட்டுப்பேரை வீழ்த்தியவன் பாரி.

பேச்சு நின்ற கணத்தில் பாரியின் சிந்தனையிலும் சுண்டாப்பூனையே வந்து சென்றது. காலம்பன் தொடர்ந்தான், “நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம். பாண்டியர்படை அடர்மழைநாளில் எங்கள் குடில்களைச் சூழ்ந்தபொழுது அணங்கன் ஒருவன் மட்டும் வெளியில் இருந்திருந்தாற்கூடப் போதும். காட்டெருமை மந்தையைக்கொண்டு அவர்களின் யானைப்படையை முழுமுற்றாக அழித்திருப்பான்.”

காலம்பன் சொல்லிக்கொண்டிருந்தபொழுது சற்றே மெலிந்த உடலோடு அந்தக் கிழவன் காட்டெருமையின் வாசத்தை நுகர்ந்தபடி முன்னே போய்க்கொண்டிருந்தான்.

வலிமையைவிட நுட்பமே ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காலம் மீண்டும் மீண்டும் சொல்லித்தருகிறது என்று எண்ணியபடி பின்தொடர்ந்தான் பாரி.

இரண்டு நாள் நடந்து ஆறாம்குன்றை அடைந்தனர். இங்குள்ள மக்கள் எதிரிலுள்ள வெளவால் மலையின் பின்புறச்சரிவில் ஒரு மந்தை மேய்வதாகச் சொன்னார்கள். ஆபத்தான சரிவுப்பகுதி அது. அதில் இறங்கிப்போவது கபிலருக்கு நல்லதன்று: அவரை மட்டும் விட்டுவிட்டுப் போகமுடியாத நிலையில் பாரி சொன்னான், “அருகில் வந்தாகிவிட்டதல்லவா? நீங்கள் மந்தையைக் கண்டறிந்து அந்த அறுவரையும் அனுப்பிவைத்துவிட்டு வாருங்கள். நான் கபிலரை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன்.”

தேக்கனும் காலம்பனும் “சரி” என்று சொல்லி, இருவரையும் அனுப்பிவைத்தனர். 

பாரியும் கபிலரும் எவ்வியூர் நோக்கி நடக்கத் தொடங்கினர். பேச்சு காலம்பன் சொன்னதைப் பற்றியதாக இருந்தது. “பகை வளர்க்காமல் குலங்காக்க முடியாது என்று காலம்பன் சொல்கிறானே, அது சரிதானா?” எனக் கேட்டான் பாரி.

“பகை, காட்டினில் விளையும் நெருப்புபோல...   பரவிக்கொண்டும் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டும் இருக்கும்” என்று கபிலர் சொல்லி முடிக்கும் முன் பாரி சொன்னான், “ஆனால் அழித்துக்கொண்டே இருக்கும்.”

“அழித்தல் எல்லாவிதத்திலும் தவறானதா என்ன?”

“எல்லாவிதத்திலும் தவறன்று; ஆனால், எல்லாவற்றையும் அழிக்கும். ஒரு கட்டத்தில் உங்களால் பிரித்தறிய முடியாது.”

அவனது சொல்லின் ஆழத்தைப்பற்றிச் சிந்திக்கும்போதே நிறுத்தாமல் தொடர்ந்தான் பாரி, “காட்டெருமையின் காதுமடல்களில் உள்நுழைய முடியா ஓசையைக் கணிக்க முடிந்த திரையர்களால், அடர்மழையின் ஓசையில் யானைப்படை வருவதைக் கணிக்கமுடியாமற் போயிருக்கிறது. கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். பகைவளர்த்தல் அன்று.”

“நீ சொல்வது சரிதான். கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். ஆனால், அழிக்கப்பட்டவனின் குரல் அப்படித்தானே இருக்கும். நிலம் இழந்தவன், குலம் இழந்தவன் உயிர்வாழ ஒரே காரணம் பகைமுடிக்கத்தானே?”

“அதனால்தான் நானும் சொல்கிறேன். அபகரித்துக்கொண்டவன் நம்முடைய வளங்களையும் சேர்த்து மேலும் வலிமையடைவான். இழந்தவர்கள் பகை மட்டும் வளர்த்துக்கொண்டிருந்தால் வலிமை கூடாது. இருப்பது ஒரேயோர் அணங்கன். அவன் இறந்துவிட்டால் திரையர்களின் வலிமை இன்னும் குறையும்.”

பாரியின் சொற்கள் பாறைகள் உருள்வதைப் போலத்தான் எந்தக் கணத்திலும் மேலேபோட்டு அமுக்கும். அமுக்கிய சொல்லிலிருந்து மீண்டெழ கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான், “நான் உங்களை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன் என்று சொன்னதுக்கு அதுதான் காரணம். தேக்கனை காலம்பனிடம் பேசச்சொல்லியிருக்கிறேன். இப்போது பயிற்சி தேவைப்படுவது மந்தையை வழிநடத்தும் காட்டெருமைக்கன்று. உடன்செல்லும் மனிதர்களுக்குத்தான். அணங்கனைப்போல அதிதிறமையுள்ள ஆசானிடம் எவ்விதப் பயிற்சியும் பெறாமல் மாதக்கணக்கில் நாம் வீணடித்துள்ளோம். பகை நெருப்பைப்போலப் பரவும் என்று சொன்னீர்கள் அல்லவா, இங்கு என்ன நடந்துள்ளது? ஒற்றைக்குச்சியில் மட்டுமே எரியும் நெருப்பை அடுத்தகுச்சிக்குக்கூடப் பரவாமல் வைத்திருக்கிறது.”

கபிலர் சொன்ன உவமை எப்படித் தவறானது என்பதை, கபிலருக்கு பாரி சொல்லிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டபடி சற்றே அமைதியாய் கபிலர் வந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப்பின் பாரி கேட்டான், “ஏன் ஏதும் பேசாமல் வருகிறீர்கள்?”

எவ்வியூரிலிருந்து புறப்படும்பொழுது வாரிக்கையன் சொன்னார், “கற்றுக்கொண்டான் கபிலன்” என்று, இப்பொழுது நீ கல்லாத கபிலனை எவ்வியூருக்கு மீண்டும் அழைத்துச்செல்கிறாய்.”

மெல்லிய சிரிப்போடு பாரி மறுமொழி சொன்னான், “நீண்ட ஒலிக்குறிப்போடு பேசும் மலைமக்களுக்கு நடுவில் வெட்டி வெட்டி ஒலியைப் பயன்படுத்துகிறாரே என்று அணங்கனைக் கண்டறிய முயன்றது நீங்கள் மட்டுந்தான். அதைக்கூடக் கண்டறிய முடியாதவர்களாகத்தான் நாங்கள் இருந்துள்ளோம்.” பேசியபடியே குன்றின் உச்சியிலிருந்து இடப்புறமாக இறங்கத் தொடங்கினர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

உச்சிப்பொழுது. மலைமடிப்புகளை நின்று பார்க்கத்தோன்றியது. சிறிதுநேரம் குன்றின் உச்சியிலே நின்றார் கபிலர். தென்கிழக்குத் திசையைப் பார்த்தபடி சொன்னார், “அந்த மூன்றாங்குன்றைக் கடந்தால் எவ்வியூரை அடையலாம். சரிதானே.”

“இல்லை” என்றான் பாரி. எவ்வியூர் இருப்பது இடப்புறத்தில்.

“அப்படியென்றால் நாம் ஏன் தென்கிழக்குத் திசையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இடப்புறக்காட்டை அல்லவா ஊடறுத்துப் போகவேண்டும்.”

“சரியான திசையில் போவதாக இருந்தால் அப்படித்தான் போகவேண்டும். ஆனால், இக்காட்டுக்குள் பறம்பு மக்கள் யாரும் காலடி எடுத்துவைக்கமாட்டோம்.”

“ஏன்?”

“இது ஆளிக்காடு.”

“ஆளியா… கொடூர விலங்கு என்று சொல்வார்களே, அதுவா?’

“ஆம். அது ஈன்ற குட்டியின் முதல்வேட்டையே யானைதான். யானையின் தந்தத்தைப் பிய்த்து அதன் குருத்தைத்தான் விரும்பி உண்ணும் என்பார்கள்.”

``அவ்விலங்கு இன்னும் இருக்கிறதா?”

“இல்லை, எப்பொழுதோ அழிந்துவிட்டது.”

சிறிதுநேரம் பேச்சின்றி நடந்த கபிலர், “அப்படியொரு விலங்கு உண்மையாய் இருந்திருக்கும் என்று நீ நம்புகிறாயா?”

“இருந்திருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“நான் அவ்விலங்கைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எதுவும் நம்பும்படியாக இல்லை. மிகைப்படுத்தப்பட்ட கதையாக இருக்கலாம் அல்லவா?”

மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தியபடி பாரி சொன்னான், “வெறும் கதைகளை நம்ப நாங்கள் குழந்தைகள் இல்லை.”

“அப்படியென்றால் வேறு எதைவைத்துச் சொல்கிறாய்? குகைப்பாறைகளில் முன்னோர்கள் வரைந்த ஓவியம் எதுவும் இருக்கிறதா?”

“இல்லை, அவற்றைவிடப் பெரிய சான்று இருக்கிறது.”

“என்ன?”

“இம்மலைத்தொடர் முழுவதும் எறும்புக் கூட்டங்கள்போல அலைந்து திரியும் யானைகள் எதுவும் இன்றுவரை ஆளிக்காட்டுக்குள் நுழைவதில்லை.”

கபிலர் மிரண்டு நின்றார்.

“உயிரினங்களிலே அதிக நினைவாற்றல் கொண்டது யானைதான்.”

“ஆம்” என்று தலையசைத்தார் கபிலர்.

“அதுமட்டுமன்று, யானைகளுக்கு மனிதர் சொல்லும் கதைகள் தெரியாது.”

பாரியின் சொற்கேட்டு மீளமுடியாமல் நின்ற கபிலர் சற்று நேரங்கழித்துக் கேட்டார். “உங்களைப் பொறுத்தவரை. ஆளி இருந்தது வியப்பன்று, அழிந்ததுதான் வியப்பு?”

“இல்லை” என்றான் பாரி. ``எங்களைப் பொறுத்தவரை ஆளி அழிந்ததில் வியப்பேதுமில்லை.”

“ஏன்?”

“அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழமுடியாது. ஏனென்றால், அது இயற்கைக்கு எதிரானது.”

கபிலர் நிற்கும் இடம்நோக்கி மேலேறினான் பாரி, “விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது.”

கண்ணுருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கபிலரின் தோளிலே கையை வைத்து பாரி சொன்னான், “இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்”.

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...