
28.12.2017 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...
நான் மார்த்தாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவள் கணவன்தான் எடுத்தான். மார்த்தா ஓய்வு நாளில் செல்பேசியைப் பயன்படுத்துவதில்லை. அது நீண்ட வார இறுதி.
``ஹாய், நான் சாம்’’ என்றான்.
என் பெயரைச் சொன்னதும், உற்சாகமாக ``ஹாய், எப்படி இருக்கிறாய்?” என்றான்.
நான் உற்சாகத்தைக் காட்ட முயன்றாலும் என் குரல் காட்டிக்கொடுத்தது. ``நலமாக இருக்கிறேன்...” என்றேன். “எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.”
அவன் ``என்ன ஆயிற்று? நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றான்.

``எடுத்துச் சொல்லும்படி நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால்...’’ என்று தயங்கினேன். ``நான் மார்த்தாவைச் சந்திக்க வேண்டும். தனிமையில். அவளிடம் சற்று நேரம் பேச வேண்டும்.”
அவன் ``ஆம், நீ அவளிடமே பேசலாம். அவளால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்” என்றான். ``அவள், உள்ளே வேலையாக இருக்கிறாள். சற்றுப் பொறு.”
மார்த்தா பேசியபடி வருவது கேட்டது. அவளுடைய இரு பெண் குழந்தைகளின் குரல்கள். ``ஹாய் மகா, எப்படி இருக்கிறாய்? குரல் கேட்டு நெடுநாள்களாகின்றன” என்றாள்.
“நான் உன்னைச் சந்திக்க வேண்டும் மார்த்தா.”
அவள் ஒரு கணம் தயங்கி ``திங்கட்கிழமை சந்திக்கலாம், சாயங்காலமா” என்றாள்.
``இல்லை, நான் உடனே சந்திக்க வேண்டும். இன்றைக்கே. முடியுமென்றால் இன்னும் சில மணி நேரத்தில்.”
அவள் ``என்ன சொல்கிறாய்? இன்று விடுமுறை. சாம் வீட்டில் இருக்கிறார். குழந்தைகளுக்கு விடுமுறை” என்றாள்.
``மார்த்தா” என்றபோது என் குரல் இடறியது. ``நான் இக்கட்டில் இருக்கிறேன். மிகப்பெரிய துயரத்தில் இருக்கிறேன். எனக்கு வேறு எவரையும் பார்க்கத் தோன்றவில்லை... வேறு யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்.”
அவள் ``ஜானுவுக்குத் தெரியுமா?” என்றாள்.
``தெரியாது” என்றேன்.
``மன்னித்துவிடு மகா. அது சரியல்ல.”
அவள் தொலைபேசியை வைக்கப்போகிறாள் என எண்ணி, ``மார்த்தா... மார்த்தா...” என்று கூவினேன். ``நான் உன்னைச் சந்தித்தாக வேண்டும். இல்லாவிட்டால், நான் செத்துவிடுவேன்!”
அவள் பெருமூச்சுடன் ``சரி, நீ இங்கேயே வா” என்றாள். ``சாம் இன்றைக்கு வெளியே போக வேண்டும் என்று சொன்னார். நான் சொல்லிக்கொள்கிறேன். எப்போது வருவாய்... சாயங்காலமா?”
நான் ``ஒரு மணி நேரத்தில்...” என்றேன்.
``என்ன சொல்கிறாய்... எங்கே இருக்கிறாய்?”
நான் ``மார்த்தா, நான் உன்னைச் சந்திக்கக் கிளம்பி வந்துவிட்டேன். வந்துகொண்டே இருக்கிறேன். ஊருக்கு இன்னும் 70 கிலோமீட்டர்தான்.”
அவள் பெருமூச்சு விட்டு ``வா” என்றாள்.
நான் சென்றபோது சாம் பட்டறையில் இருந்தான். என் காரின் ஒலி கேட்டு வெளியே வந்து ``ஹாய்” என்றான். கையில் ரம்பம், உடலெங்கும் மரப்பொடி.
``என்ன வேலை?” என்றேன்.
``ஒரு புத்தக அடுக்கு... சிறியது” என்றான். ``மார்த்தா உள்ளே இருக்கிறாள்.”
நான் ``நன்றி” என்றேன்.
``நீ வருத்தமாக இருக்கிறாய்...” என்றான் சாம்.
``ஆமாம் சாம்” என்றேன்.
``மார்த்தாவிடம் சொல், அவள் எல்லாவற்றுக்கும் தீர்வு
வைத்திருப்பாள், வாழ்த்துகள்.”
அவன் உள்ளே செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். மார்த்தா முன் பக்கம் நீர்க்காப்பு உடையுடன் வெளியே வந்து புன்னகைத்து ``வா...” என்றாள். நான் உள்ளே சென்றேன். கோட்டைக் கழற்றி நிலைக்கொக்கியில் மாட்டும்போது ``குழந்தைகள் எங்கே?” என்றேன்.
``நீச்சல்” என்றாள். கூடத்தில் சோபாவில் அமர்ந்தேன்.
அவள் ``என்ன குடிக்கிறாய்... இந்தியக் காபி?” என்றாள். நான் புன்னகைத்தேன்.
16 ஆண்டுகளுக்கு முன்னர் அவள் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ வந்தபோது நான் அருந்தும் இந்தியக் காபி என்னும் பொருளைக் கண்டு திகைத்தாள். ``ஏறத்தாழ டிம்ஹார்ட்டன் காபி போல” என்று கண்டுபிடித்தாள்.
``இது, இந்திய நவீனப் பண்பாட்டின் சரியான அடையாளம். காபிப்பொடி ஐரோப்பியர் கொண்டுவந்தது. சிகிரித்தூள் நாங்கள் கண்டுபிடித்தது. பாலும் சீனியும் போட்டு கீர்போல அதைச் செய்வது எங்கள் தொன்மையான பாரம்பர்யம்” என்றேன். ``நாங்கள் அந்த மூன்று அம்சங்களின் வெற்றிகரமான கலவை, தெரியுமா?”
அவள் கண்களில் நீர்வரச் சிரித்தாள். அன்றெல்லாம் எல்லாவற்றுக்கும் சிரித்துக்கொண்டிருந்தோம்
.
மிகச்சரியான ஃபில்டர் காபி. அதைக் கையில் வாங்கி முகர்ந்ததுமே என் மனநிலை மாறிவிட்டது. முகம் புன்னகையில் விரியும் தசை அசைவை நானே உணர்ந்தேன். அதுவரை முகம் இறுகி இருந்தது என்பது அப்போது தெரிந்தது. அவள் என் எதிரே அமர்ந்துகொண்டு ``பரவாயில்லை, கொஞ்சம் தெளிந்துவிட்டாய்” என்றாள்.
``ஆம்” என்றேன்.
``தனியாகப் பேச வேண்டுமா... அந்த அறைக்குச் செல்வோமா?” என்றாள்.
``ஆம்” என்றேன். தனி அறைக்குள் சென்று அமர்ந்ததும், நான் மேலும் எளிதானேன். கால்களை நீட்டி சோபாவில் அமர்ந்தேன். இதமான குளிர். வெளியே பறவைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. காற்றில் மணி ஓசை எழுந்தது. ``மார்த்தா, நீ மிக அழகாக இருக்கிறாய்” என்றேன்.
அவள் சிரித்து “நன்றி” என்றாள்.

``என்ன பிரச்னை... ஜானுவிடம் ஏதாவது சண்டையா?” என்றாள்.
நான் அதுவரை அவளிடம் எப்படிப் படிப்படியாக எல்லாவற்றையும் சொல்வது எனத் திட்டமிட்டு ஏராளமான சொற்றொடர்களை உருவாக்கிக்கொண்டு வந்திருந்தேன். ஆனால், நேரடியாக ``மார்த்தா, உனக்கு என் அம்மாவைத் தெரியுமே!” என்றேன்.
``ஆம்” என்றாள். ``அப்பா இறந்த பிறகு `இங்கேதான் இருக்கிறார்கள்’ என்று ஒருமுறை சொன்னாய்.”
``ஆமாம்” என்றேன். “என் அம்மா, மிகச் சம்பிரதாயமான பின்னணி கொண்டவள்; அப்பாவுக்கு அடங்கி வாய் பேசத் தெரியாமல் 43 ஆண்டுக்காலம் வாழ்ந்தவள். சொந்தமாக அவளுக்கு எனக் கருத்துகள் ஏதும் இருந்ததில்லை. சொந்தமாக உணர்ச்சிகள் இருந்திருக்கலாம். அதைக்கூட அவள் காட்டிக்கொண்டதில்லை.”
மார்த்தாவுக்கே அதெல்லாம் தெரியும். நான் மார்த்தாவைத் திருமணம் செய்துகொண்ட தகவல் தெரிந்ததும் அப்பா போனில் நாலாந்தரக் கெட்டவார்த்தைகளை இறைத்தார். சாபம்போட்டு மின்னஞ்சல் செய்தார். நான் துணிந்து மார்த்தாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். என்னைத் தெருவிலேயே நிற்கவைத்து வசைபாடினார். அருகே கிடந்த தென்னை மட்டையை எடுத்து அடிக்க வந்தார். அம்மா, கூடத்துக்குள் நின்று ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு வார்த்தை சொல்லவில்லை.
``அப்பா ஏழு வருஷங்களுக்கு முன்பு இறந்தார்” என்றேன். ``அது வழக்கமான இறப்பு இல்லை.”
மார்த்தாவின் முகம் சுருங்கியது. அவள் கண்களில் வந்த மாற்றத்தைக் கவனித்தேன். அவளுடைய ஒவ்வொரு முகபாவமும் எனக்கு எத்தனை நெருக்கமாகத் தெரிந்திருக்கிறது என வியந்தேன். நீளமான மூக்கும் மெல்லிய உதடுகளும் இளம்பச்சைக் கன்னங்களும்கொண்ட ஒடுங்கிய முகம். நான் இளமையில் கண்டிருந்த எலிசபெத் அரசியின் புகைப்படங்களை அவள் நினைவுறுத்தினாள். அவளிடம் நான் முதலில் சொன்னதே அதைத்தான். ஓர் அலுவலக விருந்தில்.
``அப்பாவும் அம்மாவும் மட்டும்தான் திருச்சியில் தனியாக இருந்தார்கள். அப்பாவுக்கு உயர் ரத்த அழுத்தம். இரண்டு முறை இதய அடைப்பு வந்தது. ஆனால், அவரே கட்டிய வீட்டை விட்டு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அம்மாதான் அவரைப் பார்த்துக்கொண்டாள். வீட்டில் சமையல் எல்லாம் அவள்தான். ஒரு பெண் வந்து தூய்மை வேலைகளை மட்டும் செய்வாள். அப்பாவைத்தான் தெரியுமே, எது செய்தாலும் குற்றம். எவ்வளவு கவனித்தாலும் போதாது. உடல்நிலை மோசமாகும்தோறும் குணம் கெட்டுக்கொண்டே சென்றது.”
``ஆமாம். மறுபக்கம் எதிர்ப்பே இல்லாமல் இருக்கும்போது குரூரம் அப்படி வளர்ந்துகொண்டே போகும்” என்று மார்த்தா சொன்னாள்.
``அது ஒரு பக்கம். இன்னொரு பக்கமும் உண்டு. என் அப்பா, வீட்டுக்கு வெளியே ஒரு வாயில்லாப் பூச்சி. அவரைவிடப் பணமும் அதிகாரமும் உள்ளவர்களைக் கண்டால், அவரை அறியாமல் குழைய ஆரம்பித்துவிடுவார். அரசாங்க வேலையில் கூழைக்கும்பிடு போட்டே 36 ஆண்டுக்காலம் வேலை பார்த்ததால் வந்த குணம். அந்த இழிவை, அவர் வீட்டுக்குள் இப்படித் திமிர்கொண்டு சமன்செய்துகொண்டார்.”
மார்த்தா புன்னகைத்தாள். நான் ``அப்பா அன்று காலை சோபாவில் அமர்ந்திருந்தார். அம்மா வெளியே சென்று பால்காரனிடம் பால் வாங்கிக்கொண்டு உள்ளே வந்தாள். வழியில் கால் விரல் நாற்காலி முனையில் முட்டிவிட்டது. வலியுடன் முனகியபடி அவள் குனிந்து நின்றாள். அப்பா அதுதான் சாக்கு என வசைபாட ஆரம்பித்துவிட்டார். வழக்கம்போல அப்போது வாயில் என்ன வருகிறதோ, எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கு அந்த வலியில் எப்படியோ ஒரு வெறி வந்துவிட்டது. பால்செம்பைத் தூக்கி அவர்மேல் அடித்திருக்கிறாள்” என்றேன்.
``ஓ” என்றாள் மார்த்தா.
``எங்கள் வீட்டில் 50 ஆண்டுகளாக இருக்கும் ஓட்டுப்பித்தளைச் செம்பு. ஒரு கிலோவுக்கு மேல் எடைகொண்டது. அப்பா அடிபட்டதும் ஒரு மூச்சொலி மட்டும் எழுப்பி அப்படியே பக்கவாட்டில் சரிந்துவிட்டார். உண்மையில், அம்மா அதைக் கவனிக்கவில்லை. கோபத்துடன் சமையலறைக்குச் சென்று கொஞ்ச நேரம் நின்றிருக்கிறார். அழுகை வந்து நன்றாக அழுது முடித்த பிறகு வந்து பார்த்தால், சோபாவில் அவர் விழுந்திருக்கிறார். அருகே போய்க் கூப்பிட்டாள். பலமுறை கூப்பிட்டும் பதில் இல்லை. மெள்ள தொட்டு உலுக்கினாள். அப்பா இறந்துகிடந்தார்.”
மார்த்தா இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டாள். மூச்சு நின்று நின்று வருவதுபோல கழுத்து அசைந்தது.
``அம்மா அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள். நான்கைந்து மணி நேரம் மூச்சுப்பேச்சு இல்லாமல் அங்கேயே கிடந்திருக்கிறாள். பிறகு நினைவு வந்து எழ முடியாமல் தவழ்ந்து சென்று, பக்கத்து வீட்டு மாரிமுத்துவைக் கூப்பிட்டாள். அவர்தான் என்னைக் கூப்பிட்டு இறப்புச் செய்தி சொன்னார். நானும் ஜானகியும் உடனடியாகக் கிளம்பிச் சென்றோம். அப்பாவின் சடலத்தை ஆஸ்பத்திரியில் குளிர்ப்பெட்டியில் வைத்திருந்தார்கள். அம்மா, தீவிரக்கண்காணிப்புப் பிரிவில் இருந்தாள். அடிக்கடி மயக்கம் வந்து நினைவிழந்துகொண்டிருந்தாள். அப்பாவின் இறுதிச்சடங்கு நடந்தது எதுவும் அம்மாவுக்குத் தெரியாது.”
மார்த்தா பெருமூச்சு விட்டாள்.
நான் ``நான்காவது நாள் கொஞ்சம் நினைவு திரும்பியபோது அம்மா என்னைக் கண்டு கதறி அழுதாள். என்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னாள். `அவளை வெளியே போகச் சொல்’ என்று ஜானகியைப் பார்த்துக் கை நீட்டிக் கூச்சலிட்டாள். நான் ஜானகியை வெளியே அனுப்பிவிட்டேன். அதற்குள் மீண்டும் மயக்கம் வந்துவிட்டது. மீண்டும் நினைவுவந்தபோது கதறி அழுது கூச்சலிட்டாள். அவளால் சொல்ல முடியவில்லை. கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. அவள் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதைக் கண்டு நான், உளவியலாளர் டாக்டர் நரேனிடம் சொன்னேன். அவர் ஏழு அமர்வுகளில் அவளிடம் பேசினார். அதன் பிறகு என்னிடம் நடந்ததைச் சொன்னார்” என்றேன்.
``உளவியலாளரிடம் சென்றது மிக நல்ல விஷயம். அம்மா அதையெல்லாம் உன்னிடம் சொல்லியிருந்தார் என்றால், அந்த உரையாடலே மிகப்பெரிய சித்ரவதையாக ஆகி, மேலும் சிக்கலை உருவாக்கியிருக்கும்” என்றாள் மார்த்தா.
``நரேன் என்னிடம் நடந்ததைச் சொன்னபோது நான் ஆடிப்போய்விட்டேன். என்னால் முதலில் நம்பவே முடியவில்லை. கதைகளில்தான் இப்படி நிகழும் என்பதே என் எண்ணம். அவர் சொன்னபோது நான் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. இரவெல்லாம் மனம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அன்றே வீட்டைக் காலிசெய்துவிட்டு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். அடுத்த நாள் முதல் நான் மூளையமைதி மாத்திரைகள் போட ஆரம்பித்தேன். நான் சமநிலைக்கு மீள 15 நாள் ஆனது.”
``புரிகிறது” என்றாள் மார்த்தா.
``நரேன் எல்லாவற்றையும் வழிநடத்தினார். அம்மாவிடம் எதுவும் தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், அவரே சில நாளில் சொல்வார் என்றும் சொன்னார். அம்மா உடனே தற்கொலை செய்துகொள்ளத்தான் நினைத்திருக்கிறார். ஆனால், நினைவு தவறிக்கொண்டே இருந்ததால் அதற்கு முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளக்கூட ஓர் ஆரோக்கியம் தேவைப்படுகிறது அல்லவா?”
நான் சிரித்தபோது மார்த்தா சிரிக்கவில்லை. என் சிரிப்பே கோணலாக இருந்தது என உணர்ந்தேன். ``அம்மாவை நானும் ஜானகியும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டோம். மெதுவாகத் தேறி வந்தாள். நரேன் அவள் செய்தது தவறு அல்ல, அது வெறும் தற்செயல்தான் என்பதைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு சொற்களில் அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். ஏற்கெனவே அவருடைய இதயம் மிகப் பலவீனமாகவே இருந்தது. ``அது ஒரு வகை இயற்கை மரணமேதான்’’ என்றார். பிறகு அம்மாவே அப்படிச் சொல்ல ஆரம்பித்தாள். அதற்குள் விசா வந்துவிட்டது. அவளை அமெரிக்காவுக்கு அழைத்து வந்துவிட்டேன்.”
``அமெரிக்கா கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு, அம்மா என்னிடம் நடந்ததைச் சொன்னாள். சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுதாள். நானும் அழுதேன். நான் அவளை எப்படியெல்லாம் சமாதானம் செய்ய வேண்டும் என்று முன்னரே யோசித்துவைத்திருந்தேன். ஆகவே, அப்போது என்னால் நன்றாகப் பேச முடிந்தது. ஆனால், அழுது முடிந்ததுமே அம்மா தெளிவாகிக்கொண்டே சென்றது எனக்குள் ஏமாற்றத்தை உருவாக்கியது. நான் சொன்ன ஆறுதல்களை எல்லாம் அவள் அப்படியே ஏற்றுக்கொண்டதும், அவள் தவறே செய்யவில்லை என்று நான் சொன்னபோது அவளும் அதை ஒப்புக்கொண்டதும் என் ஏமாற்றத்தை வளர்த்தன.”

“ஆக, பிரச்னை இதுதான். இல்லையா?” என்றாள் மார்த்தா.
``ஆம். அம்மா அமெரிக்கா வந்தபோது ஒரு பக்கம் மிரட்சியுடனும் இன்னொரு பக்கம் குழந்தைத்தனமான ஆர்வத்துடனும் இருந்தாள். விமானநிலையத்தில் எலிவேட்டரில் ஏறுவதற்கு மிகவும் தடுமாறி விழப்போனாள். ஒருவழியாக நான் அவளைப் பிடித்து அதில் ஏற்றியபோதுதான் முதல்முறையாகப் புன்னகை புரிந்தாள். அமெரிக்காவின் குளிரும் வெள்ளை முகங்களும் அவளை அந்நியப்படுத்தக் கூடாது என, நான் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டேன். இங்கு உள்ள கோயில்களுக்கும் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கும் சினிமாவுக்கும் அழைத்துச் சென்றேன். நானும் ஜானகியும் யாராவது ஒருவர் எப்போதும் கூடவே இருந்தோம். அம்மாவை தனியாகவே விடவில்லை.”
``ஜானுவுக்குத் தெரியுமா?” என்றாள் மார்த்தா.
``ஆமாம், அம்மாவே அவளிடம் சொல்லச் சொன்னாள்” என்றேன்.
`` `அம்மாவை நிறைய செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்’ என்று நரேன் சொன்னார். ஆகவே, ஓர் எண்ணம் வந்தது. இங்கே எனக்குத் தெரிந்த ஓர் அம்மா இந்தியச் சமையல் செய்து இணையம் வழியாக தேவையானவர்களுக்குக் கொடுத்தனுப்பும் தொழில் செய்கிறார். அம்மாவை, அவர்களுக்கு சமையலுக்கு உதவியாக அனுப்பினேன். அம்மா, மிகச்சிறந்த சமையல்காரர். சீக்கிரத்திலேயே அம்மாவின் சமையலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அம்மாவுக்கும் அதில் மிகப்பெரிய ஈடுபாடு வந்துவிட்டது. காலையிலேயே உற்சாகமாகக் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தாள். விதவிதமாகச் சமைக்க ஆரம்பித்தாள். தன் சமையலுக்கு வரும் பாராட்டுகளை என்னிடம் ஒவ்வொன்றாகச் சொல்வாள்.”
``அது நல்ல உத்திதான்” என்றாள் மார்த்தா. ``எதையாவது செய்யும்போது மனம் விலகிவிடுகிறது.”
``மிகச் சீக்கிரத்திலேயே அம்மா மீண்டுவந்தாள். அவளே இங்கே ஓர் அம்மாவிடம் சென்று ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டாள். ஜானகியிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள். அம்மாவின் மாற்றத்தை ஓர் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். புடைவை கட்டுவதை விட்டுவிட்டாள். கூந்தலைக் குட்டையாக நறுக்கிக்கொண்டாள். அவளே தினமும் காலையில் காரை ஓட்டிக்கொண்டு வேலைக்குச் செல்கிறாள். கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்கிறாள். அங்கே அவளுக்கு என நிறைய தோழிகள் உருவாகிவிட்டார்கள். அவர்கள் சேர்ந்து சுற்றுலாவுக்கெல்லாம் செல்கிறார்கள். அம்மா இப்போது அந்த நிறுவனத்தின் பங்குதாரர். நிறையவே சம்பாதிக்கிறாள். கிட்டத்தட்ட சுதந்திரமாக வாழ்கிறாள். என் வீட்டில் தங்கியிருப்பதால் மட்டும் என்னிடம் எங்கே போகிறாள் எனச் சொல்கிறாள். மற்றபடி முன்புபோலப் பேச்சு ஏதுமில்லை.”
மார்த்தா என்னை நோக்கியபடி பேசாமல் இருந்தாள். நானும் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். ``வேறென்ன?” என்றாள்.
``மார்த்தா, அம்மாவை மாற்றியது நான். அதில் நான் வெற்றியும் பெற்றேன். ஆனால், என்னால் இந்த மாற்றத்தைத் தாள முடியவில்லை.”
மார்த்தா ``ஏன்?” என்றாள்.
``தெரியவில்லை. என்னால் இப்போது அம்மாவை நேருக்குநேர் பார்க்கவே முடியவில்லை. அம்மாவை நினைத்தாலே என் மனம் எரிகிறது. பல சமயம் இரவுகளில் தூக்கமே இல்லை. நான் இப்போது மீண்டும் மூளையமைதி மாத்திரைகள் சாப்பிடுகிறேன். என்னால் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.”
மார்த்தா கைகளைக் குவித்து அதன்மேல் முகத்தை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
``நான் அம்மாவின் பழைய புகைப்படங்களை இரவெல்லாம் பார்க்கிறேன். அம்மாவும் அப்பாவும் நானும் இருக்கும் பழைய படங்களைப் பார்த்தால், நெஞ்சுருகி அழத் தொடங்கிவிடுகிறேன். என் அவஸ்தையை ஜானகியிடம் சொன்னேன். `உனக்கென்ன பைத்தியமா?’ என்கிறாள். `அம்மா மகிழ்ச்சியாக இருப்பதில், உனக்கு என்ன பிரச்னை?’ என்கிறாள். என்னை அவளும் புரிந்துகொள்ளவில்லை. நான் முழுத்தனிமையில் இருக்கிறேன்.”
என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை. குரல் உடைந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன்.
``என் அப்பா இப்போது அடிக்கடி கனவில் வருகிறார். இறந்தபோது இருந்த வடிவில் அல்ல, அலுவலகம் செல்லும் பழைய தோற்றத்தில். ஒருமுறை `சரியாகப் படிக்கவில்லை’ என என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பதுபோல கனவு. அப்பாவின் ஆவி அமைதி அடையவில்லையோ என எண்ணி, ஊருக்குப் பணம் அனுப்பி ராமேஸ்வரத்திலும் காசியிலும் புத்தகயாவிலும் சடங்குகள் செய்யவைத்தேன். திருவண்ணாமலையிலும் சிதம்பரத்திலும் மோட்சதீபம் ஏற்றினேன். ஆனாலும் கனவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.”
“இரண்டு நாள்களுக்கு முன் ஒரு கனவு. அப்பா சடலமாக உறைந்து கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கிறார். நான் உள்ளே பார்க்கிறேன். சடலமாகவே அவர் அழுதுகொண்டிருக்கிறார். அப்படியே எழுந்து அமர்ந்து நடுங்கினேன். வியர்வை வழிந்தது. மூச்சு சீரடைய நெடுநேரமாகியது.
காலையில் அம்மா கிளம்பிக்கொண்டிருந்தபோது அவளிடம் `கொஞ்சம் பேச வேண்டும்’ என்றேன். கூடத்திலேயே நின்று `என்ன?’ என்று கேட்டாள். என் கனவைச் சொன்னேன். `ஊருக்குச் சென்று அனைவருமாகச் சேர்ந்து ஒரு சடங்கு செய்தால் அப்பாவுக்கு அமைதி கிடைக்கும்’ என்றேன். முகம் சுளித்து `கிறுக்குத்தனம், இனிமேல் இதைப் பற்றி என்னிடம் பேசாதே!’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
நான் அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்தேன். மாலை, அம்மா அவள் தோழி மேகியுடன் வந்தாள். ஒரே சிரிப்பு, பேச்சு, கும்மாளம். இரவு ஜானுவிடம் சொன்னபோது `அம்மா சொன்னது சரிதான். உனக்குக் கிறுக்கு’ என்றாள். காலையில் அம்மா தோழிகளுடன் மேரியன் ஏரியில் படகுத் தங்கலுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள். நான் வீட்டில் அமர்ந்திருந்தேன். கிறுக்குப்பிடித்துவிடும் எனத் தோன்றியது. என்னால் தாங்க முடியவில்லை. உன்னைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
மார்த்தா தன் கை நகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் தலைகுனிந்து சோபாவின் தோலுறையை நெருடிக்கொண்டிருந்தேன். மார்த்தா மூச்சொலியுடன் நிமிர்வதை உணர்ந்து, நிமிர்ந்து நோக்கினேன். ``நான் என்ன செய்ய வேண்டும் மகா?”
``எனக்குத் தெரியவில்லை.”
``நான் உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். நானும் சாமும் குழந்தைகளும் உன் உறவு என்றே நீ நினைக்கலாம். நீ தனிமையானவனாக எண்ணிக்கொள்ளவேண்டியதில்லை.”
``நன்றி மார்த்தா” என்றேன்.
``நீ எதையாவது செய்ய ஆரம்பிக்கலாம் மகா. சாம் போல. கைகளால் செய்யக்கூடிய எதையாவது. மரவேலை, கடைசல்வேலை, தோட்டவேலை. இந்தியர்கள், மூளையை உடம்பிலிருந்து பிரித்துத் தனியாக வைத்திருக்கிறார்கள். அது தானாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.”
நான் புன்னகைத்தேன். மார்த்தா ``உனக்கு இன்னொரு காபி தேவைப்படும் என நினைக்கிறேன்” என்றாள்.
``எப்போதுமே அது உனக்குச் சரியாகத் தெரிகிறது” என்றேன்.
மார்த்தா இன்னொரு ஃபில்டர் காபி கொண்டு வந்தாள். நான் அதைக் குடித்தபோது மெய்யாகவே மெள்ள அனைத்திலிருந்தும் விடுபட்டேன்.
``மார்த்தா, இந்தக் கனவுகள்... நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்? உளவியலாளரைப் பார் என்று மட்டும் சொல்லாதே.”
``எனக்குத் தோன்றுவதைச் சொல்லவா?”
``சொல்... நிச்சயமாக அது எனக்கு முக்கியமானது.”
``நீ ஒருமுறை ஊருக்குப் போய் வா. உன் மதத்தின் சடங்குகளை எல்லாம் முறையாகச் செய்” என, மார்த்தா என் கண்களைக் கூர்ந்து பார்த்துச் சொன்னாள், ``உன் அப்பாவை நீதான் கைதவறுதலாகக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொள். அதற்குரிய எல்லாவற்றையும் செய். மீண்டுவிடுவாய்.”
``என்ன சொல்கிறாய்?” என்றேன்.
``ஒரு சின்ன உளவியல் நாடகம்... வேறொன்றுமில்லை”
``சரியாகிவிடும் என்கிறாயா?”
``நம்பு. கண்டிப்பாக!”
நான் பெருமூச்சு விட்டு கோப்பையை வைத்தேன். ``நன்றி. நீ எப்போதும் சரியானதைச் சொல்வாய் என்று சாம் சொன்னார்.”

``அவரிடம் நான் தச்சுவேலை செய்யச் சொன்னேன்” என்று சிரித்தாள். சோழி நிறப் பற்கள். நான் ஜானகியைப் பெண் பார்க்கப் போனபோது அவளுடைய வெண்பற்களைத்தான் முக்கியமாகக் கவனித்தேன்.
``நீ சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். இன்று நான் சாமுக்காக இத்தாலியச் சமையல் செய்யலாம் என்றிருக்கிறேன்.”
``நிச்சயமாக” என்றேன்.
``சரி, சாமிடம் பேசிக்கொண்டிரு. ஒரு மணி நேரம்” என்றாள்
``மார்த்தா” என்றேன்
``என்ன?” என்று திரும்பினாள்.
``நான் வந்தது இதையெல்லாம் சொல்வதற்காக மட்டும் அல்ல.”
அவள் புருவம் சுருங்கப் பார்த்தாள்.
``உன்னிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். மனமார...”
``சேச்சே என்ன இது?” எனச் சிரித்தாள்.
``இல்லை, நீ என்னை மன்னிக்க வேண்டும்.”
``மகா, நான் உன்மேல் கோபமே கொள்ளவில்லை.”
``இதுபோதும்... இதுவும் என்னை ஆறுதல்படுத்தும் என நினைக்கிறேன்” என்றேன்.
``அரான்சினி செய்கிறேன். உங்கள் ஊர்ப் பலகாரம்போலவே இருக்கும்...” என்றாள் மார்த்தா. நான் புன்னகைத்தேன்.
- ஜெயமோகன், ஓவியங்கள்: ஸ்யாம்
(28.12.2017 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)