Published:Updated:

வெள்ளி நிலம் - 28

வெள்ளி நிலம் - 28
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 28

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன் கதை: இமயமலைப் பகுதியில் ஒரு பௌத்த மடத்தில் தொன்மையான மம்மி ஒன்று கிடைக்கிறது. அதைக் கடத்த ஒரு கும்பல் வருகிறது. அந்தக் கும்பலைச் சிறுவன் நோர்பா பார்த்துவிடுகிறான். இந்தக் கடத்தலை ஆராயவரும் காவல் அதிகாரி பாண்டியன் நோர்பாவையும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸையும் சேர்த்துக்கொண்டு ஒரு துப்பறியும் குழுவை அமைத்துத் தேடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் குளூக்களை வைத்து இமாலயம், நேபாள், பூட்டான், திபெத் எனத் தேடிச்செல்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் தகவலை வைத்து, அடுத்தடுத்த இடங்களுக்குப் பயணமாகிறார்கள். இறுதியில் தொன்மையான மதமான பான் மதத்தின் ஒரு பானைச் சந்திக்கிறார்கள்... அவர் தனக்கு வேண்டிய ஒரு பொருளைப்பற்றி பாண்டியன் குழுவைச் சொல்லச் சொல்லி மிரட்டுகிறார்... 

வெள்ளி நிலம் - 28

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், கவலையுடன் பாண்டியனைப் பார்த்துவிட்டுப் பானிடம், “சொல்லுங்கள்” என்றார்.

“வாருங்கள்” என்று சொல்லி அவர்களைப் பான் அழைத்துச்சென்றார். அணி அணியாக நின்றுகொண்டிருந்த ஆளுயரச் சிலைகளின் நடுவே அவர்கள் சென்றார்கள்.

``உயிருள்ள ராணுவம்போலவே இருக்கிறார்கள்” என்றான் நோர்பா.

பான், அங்கிருந்த ஒரு கற்குவியலை நோக்கிச்சென்றார். அவை, கற்கள் அல்ல; உடைந்த களிமண்சிலைகளின் பகுதிகள் எனத் தெரிந்தது.

அவர், அவற்றின் அருகே இருந்த ஒரு சிலையைச் சுட்டிக்காட்டினார். அது, பெண் தெய்வத்தின் சிலை. அதற்கு, ஓநாயின் முகம் இருந்தது. எட்டு கைகள் இருந்தன. அவற்றில் ஒரு கை மட்டும் உடைந்திருந்தது.

“இந்தச்சிலை, தொன்மையான பான் மதத்தின் தொன்மையான போர்த்தெய்வம். இதற்கு, பெக்ட்ஸே என்று பெயர். மங்கோலியர்களும் இதை வழிபடுகிறார்கள்.பெக்ட்ஸேயின் பழையவடிவம் இது” என்றார் பான்.

டாக்டர் இந்தியில், “அதன் கைகளில் இருப்பவற்றைப் பாருங்கள். வலப்பக்கக் கைகளில் தாமரையும் உடுக்கும், வாளும் மணிமாலையும் உள்ளன. இடப்பக்கக் கைகளில், மின்னல் கதிரும், மழுவும், கதையும் உள்ளன. ஒருகை உடைந்துள்ளது” என்றார்.

“ஆம், இது தொன்மையான கொற்றவையின் சிலை” என்றான் பாண்டியன்.

“கொற்றவை, தென்னாட்டின் மிகப் பழைமையான தெய்வம். அதை, முதலில் குகைகளில் படங்களாக வரைந்து வழிபட்டார்கள். பின்னர்தான் சிலைகள் வந்தன” என்றார் டாக்டர்.

“நீங்கள் பேசுவதைக் கேட்டால், உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்” என்றார் பான். “இதோ இந்தக் கற்குவியல்களில் அந்த உடைந்த பகுதி இருக்கலாம். அது என்ன என்று அறியாமல் கண்டுபிடிக்கமுடியாது. சொல்லுங்கள்” என்றார்.

“அது மண்டை ஓடு” என்று பாண்டியன் சொன்னான்.

“சொல்லாதீர்கள். சொன்னதுமே நம்மைக் கொன்றுவிடுவான்” என்றார் டாக்டர்.

“சொல்லுங்கள்...” என்று பான் கேட்டான்.

“சொல்லி என்ன லாபம்? சொன்னதுமே எங்களைக் கொன்றுவிடுவீர்கள்.”

“சொல்லாவிட்டாலும் கொல்வேன்” என்றார் பான். “ஆனால், சொல்லாவிட்டால், உங்கள் குடும்பத்தையும் தேடிச்சென்று கொல்வேன். சொன்னால் உங்கள் குடும்பங்கள் உயிர்தப்பும். வெளியே நிற்கிறானே லீ பெங் ஸூ அவன், எவரை வேண்டுமென்றாலும் தேடிச்சென்று கொல்வான்.”

“அதற்குமுன், நான் சிலவற்றைப் பேசவேண்டியிருக்கிறது பான்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “நீங்கள் இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்?.”

“நான் சீனாவின் ராணுவ அதிகாரி. உளவுத்துறையின் தலைவர். திபெத்தைச் சீனாவிலிருந்து பிரிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராடும் பொறுப்பில் இருப்பவன்.”

“இல்லை” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “இதுவரை நீங்கள் சொன்ன அனைத்தும் சரியாக இணைகின்றன. ஒன்றே ஒன்று மட்டும் மிஞ்சியிருக்கிறது.”

பான், கண்கள் சுருங்க “என்ன?” என்றார்.

“இங்கே, சீனாவின் உளவுக்கருவிகள் இல்லை. ஆகவே, நீங்கள் உண்மையைச் சொல்லலாம் கர்னல் பான்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“என்ன உளறுகிறாய்?” என்றார் பான் கோபமாக.

“ஸ்கிஜின்போ மம்மியிலும் பிற இடங்களிலும் இருந்த எழுத்துகள் எல்லாமே, சீனாவின் புராதனமான லியாங்ஷு நாகரிகத்தைச் சேர்ந்தவை” என்றார் டாக்டர்.

“ஆம், அதற்கென்ன? பான் மதம் அங்கே உருவாகியிருக்கலாம்” என்றார் பான்.

“ஆம், யாங்த்ஸே நதிக்கரையில் இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாகரிகம் இருந்தது. உலகிலேயே தொன்மையான நாகரிகம் அதுதான் என ஆய்வாளர்கள் பலர் நினைக்கிறார்கள். நகரங்களை அமைத்திருக்கிறார்கள். பருத்தியில் ஆடை நெய்திருக்கிறார்கள். மிக மிக ஆச்சர்யமான விஷயம். அன்று சீனாவில் யானைகள் இருந்திருக்கின்றன. தந்தத்தால் அவர்கள் பல பொருள்களைச் செய்திருக்கிறார்கள்.”

“என்ன சொல்லவருகிறாய்?” என்றார் பான் பல்லைக் கடித்தபடி.

“அங்கே சுடுமண்ணால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகள் கிடைக்கின்றன. அவர்களின் தெய்வங்கள்தான் பின்னர் பலவகைகளில் உருமாறி, சீனாவிலுள்ள அத்தனை மதங்களிலும் வழிபடப்படுகின்றன. பான் மதத்தின் தெய்வங்கள் அனைத்துமே அங்கே பிறந்தவைதான்.”

“ஆம், இதெல்லாம் பொதுவான உண்மைகள்” என்றார் பான்.

``லியாங்ஷூ நாகரிக மக்கள் மரகதத்தில் சிலைகளைச் செய்திருக்கிறார்கள். ஆகவே, அது ‘மரகத நாகரிகம்’ என அழைக்கப்படுகிறது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் .

“திருவாளர் பான், உங்கள் கையில் உள்ள மரகத மோதிரத்தின் அர்த்தம் என்ன?”

``விளையாடுகிறாயா? சுட்டுத்தள்ளி விடுவேன்” எனச் சீறியபடி பான், தன் துப்பாக்கியை எடுத்தார்.

“சுட மாட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் அறிந்த ரகசியம் தேவைப்படுகிறது...” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“சொல்! அந்த ரகசியத்தைச் சொல்” எனப் பான் கூவினார்.

“முதலில், உங்கள் ரகசியத்தைச் சொல்லுங்கள்... நீங்கள் யார்?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“சொல்கிறேன்” என்றார் பான். “நான் சீனாவின் கிழக்கு எல்லையில் கடலோரமாக உள்ள ஜியாங்ஸு மாநிலத்தைச் சேர்ந்தவன். யாங்த்ஸே நதி ஓடும் இப்பகுதிதான், உலக நாகரிகம் தோன்றிய இடம். நாங்கள் தனி நாடாகவே 5000 வருடம் வாழ்ந்தவர்கள். எங்கள் மொழி ‘வு.’ எங்கள் நிலம் சீன சக்கரவர்த்திகளால் கைப்பற்றப்பட்டது. நாங்கள் சீனாவின் பகுதியாகச் சேர்க்கப்பட்டோம்.” சீற்றத்துடன் பான் சொன்னார், ‘`இன்று எங்கள் பண்பாடு அழிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மதம் தடைசெய்யப்பட்டுள்ளது. எங்கள் தெய்வங்களை எங்கள் மக்களுக்கே தெரியவில்லை. வு மொழி பேசுபவர்கள் சில ஆயிரம்பேர்கூட இல்லை. எங்கும் மாண்டரின் மொழி மட்டுமே பேசப்படுகிறது. ஷாங்காய் நகரமே எங்கள் நிலம்தான். அங்கே, எங்கள் லியாங்ஷூ பண்பாட்டின் ஒரு துளிகூட இல்லை.”

வெள்ளி நிலம் - 28

“ஆம்” என்றார் டாக்டர்.

“அதை மீட்கவே நாங்கள் போராடுகிறோம். மிகச்சிறிய ஒரு விடுதலைக்குழுவை உருவாக்கியிருக்கிறோம். மிக ரகசியமாகச் செயல்படுகிறோம். அதிகாரத்தை அடைவதற்காகச் சீன ராணுவத்துக்குள்ளேயே ஊடுருவியிருக்கிறோம். எங்கள் பான் பண்பாட்டின் மிச்சங்கள் இருப்பது திபெத்தில்தான். அதைக் கண்டுபிடிக்கவே நான் இங்கே வந்தேன். இங்குள்ள பான் மதத்தினரை எல்லாம் அடையாளம் கண்டுகொண்டோம். திக்ஸே மடாலயத்தில் உள்ள முதியபிட்சு, முதலிய ஏராளமானவர்கள் எங்கள் ஆதரவாளர்கள்தான்.”

பாண்டியன் ஏதோ சத்தத்தைக் கேட்டான். அவன் கை, ஏதேனும் ஆயுதம் கிடைக்குமா எனத் தேடியது. ஆனால், அங்கே கற்கள் மட்டுமே இருந்தன.

“இந்தப் புதையலைக் கண்டடைந்ததுமே எனக்குத் தெரிந்துவிட்டது. இதைப்போலப் பலமடங்கு பெரிய புதையல் அங்கே யாங்த்ஸே நதிக்கரையில் உள்ளது. அதைக் கண்டுபிடிப்பதற்கான எல்லா குறியீடுகளையும் இங்கிருந்தே கண்டுபிடித்தேன். ஒன்றே ஒன்று மட்டும் பாக்கி. அது, இந்தச் சிலைதான். இதன் கையில் இருந்த அடையாளம் என்ன?”

பாண்டியன் குனிந்து ஒரு கல்லை எடுத்தான். ஆனால், பான் எதையும் கவனிக்கவில்லை.

“லியாங்ஷூ பண்பாடு போன்றதுதான் இந்து மதமும். கிரேக்க மதமும் எகிப்திய மதமும் அவற்றைப் போன்றவைதான். உலகின் மிகத் தொன்மையான மதங்கள் இவை. இவற்றைப் பான் மதங்கள் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். ஒன்றில் ஒரு கேள்விக்குப் பதில் இல்லை என்றால், இன்னொன்றில் இருக்கும். சொல்லுங்கள்... அந்த உடைந்த கையில் இருந்தது என்ன?”

சடார் என்ற ஓசையுடன் கதவு திறந்தது. கையில் சிறிய எந்திரத் துப்பாக்கியுடன் லீ பெங் ஸூ தோன்றினார். “அசையாதீர்கள்...கையைத் தூக்குங்கள்” என்றார்.

அவர்கள் கையைத் தூக்கினார்கள்.

“எனக்குச் சந்தேகம் வந்தது. உங்கள் ஒற்றன் அனுப்பிய ஒரு செய்தியை இடைமறித்து வாசித்தபோதுதான், கர்னல் பான்” என்றார் லீ பெங் ஸூ. “இறந்தவர்களின் நிலம் எழுந்துவிட்டது. ‘ஈராயிரம் ஆண்டு தனிமை கலைக’ என்ற வரியை வாசித்ததும் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். உங்கள் போக்கில் உங்களைவிட்டு, பின்னால் வந்தேன். இந்த இந்தியர்களை நீங்கள் உடனடியாகக் கொல்லாதது ஆச்சர்யமாக இருந்தது. இந்த இரவில் இங்கே இவர்களைக் கூட்டிவந்தது, இவர்களிடமிருந்து எதையோ அறிவதற்காகத்தான் என நினைத்தேன். நான் நினைத்தது சரிதான்.”
பான் பேசாமல் பார்த்தபடி நின்றார்.

“கதை முடிந்துவிட்டது கர்னல்... என்னுடன் வாருங்கள். பெய்ஜிங்கில் உங்களை விசாரிப்பார்கள்... உங்களிடமிருந்து உங்கள் தோழர்களைப் பற்றிய செய்திகளை வரவழைப்பார்கள்...’’ என்றார் லீ பெங் ஸூ.
பிறகு பாண்டியனிடம், “நீ இந்திய உளவாளி. உன்னை எல்லாம் சுட்டுத்தள்ள வேண்டியதுதான்” எனத் துப்பாக்கியைத் தூக்கினார்.

அதேகணம் நாக்போ உறுமியபடி பாய்ந்து லீ பெங் ஸூவின் கழுத்தைக் கவ்வியது. அவர், நிலைதடுமாறிப் பின்னால் விழுந்தார். துப்பாக்கி படபடவென வெடித்துக் கூரையில் பட்டது. கூரையின் செங்கல் உடைந்து தெறித்தது. எந்திரத்துப்பாக்கி அப்பால் விழுந்தது.

பான் லீ பெங் ஸூவை நோக்கி ஓடினார். அலறியபடி புரண்ட லீ பெங் ஸூ தன் துப்பாக்கியால் பானைச் சுட்டான். அவர் அலறியபடி விழுந்தார். நெஞ்சில் குண்டு பாய்ந்திருந்தது. ரத்தம் பெருகி ஆடையை நனைத்தது.

நாக்போ லீ பெங் ஸூவின் கழுத்தை  விடாமல் கவ்விக் குதறியது. அதற்குள், வெளியே காவலர்களின் ஓசை கேட்டது.

“ஆட்களை அழைத்துக்கொண்டு லீ பெங் வந்திருக்கிறார்... நாம் தப்பமுடியாது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“பார்ப்போம்” என்று பாண்டியன் சொன்னான். அவன் ஓடிச்சென்று லீ பெங் கொண்டுவந்த இயந்திரத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டான்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் ஓடிச்சென்று, பானைத் தூக்க முயன்றார் “நான் பிழைக்க மாட்டேன். அந்த ரகசியத்தைச் சொல்லுங்கள். நான் என் தோழர்களுக்குச் செய்தி அனுப்பிவிட்டு இங்கேயே செத்துவிடுகிறேன். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எங்கள் போராட்டம் தொடரும்” என்றார் பான்.

“அது கொற்றவை. அவள் கையில் இருந்தது மண்டை ஓடு... மரகத மண்டையோடு என நான் ஊகிக்கிறேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பான், “நன்றி...” என்றார். தன் பையிலிருந்து ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியை எடுத்தார் “சுதந்திரப்போர்கள் அழிவதே இல்லை... நன்றி நண்பர்களே” என்றார். பின்பு  வு மொழியில் அதில் பேசத் தொடங்கினார்.

அதற்குள் நோர்பா , லீ பெங் ஸூவின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். அவனும் பாண்டியனும் சுட்டுக்கொண்டே முன்னால் சென்றனர். காவலர் அலறியபடி கீழே விழுந்தார்கள்.

பாண்டியன், “நாம் சுடுவோம் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே வீழ்த்திவிட்டோம்... ஆனால், இன்னும் இருவர் இருக்கிறார்கள்” என்றான்.

“ஆம், அவர்கள் வசதியான இடத்தில் ஒளிந்திருக்கிறார்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“ஒன்று செய்யலாம்...” என்று சொன்ன நோர்பா, நாக்போவை மெள்ள கைகாட்டினான். அது தவழ்ந்தபடி முன்னால் சென்றது. அது செல்லும் ஒலி கேட்டு ஒருவன் அதைச் சுட எழுந்தான். உடனே பாண்டியன், அவனைச் சுட்டு வீழ்த்தினான்.

இன்னொருவன் வெறியுடன் சுடத் தொடங்கினான். ஓசை, பல இடங்களில் எதிரொலித்தது. சுவர்கள் உடைந்து தெறித்தன.

பாண்டியன் தவழ்ந்தபடியே முன்னால் சென்று, சட்டென்று எழுந்தான். அவனை எதிர்பாராத அந்த வீரன் சுதாரிப்பதற்குள், அவனைச் சுட்டான்.

பின்னர், ஓசையே இல்லை. ஆழ்ந்த அமைதி நிலவியது. “அவ்வளவுதான் என நினைக்கிறேன்...” என்றான் பாண்டியன்.

வெள்ளி நிலம் - 28

அவர்கள் சுரங்கப்பாதை வழியாக வெளியே சென்றார்கள்.

“இங்கிருந்து எப்படித் தப்புவது?” என்றான் நோர்பா.

“முதலில் நம்மால் செய்ய முடிவதைச் செய்வோம்” என்றான் பாண்டியன்.

“இந்தக் குகையை மூடுவோம்... இது இங்கே இருப்பது பானுக்கு மட்டும்தான் தெரியும். சீனர்கள் இதைக் கண்டுபிடிக்கக் கூடாது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“எப்படி மூடுவது? அதன் சூத்திரம் நமக்குத் தெரியாதே?” என்றான் பாண்டியன்.

“எனக்குத் தெரியும்... நான் அந்த எழுத்துகளை வாசித்தேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்”அது என்ன?” என்றான் பாண்டியன்.

“எவரிடமும் சொல்லமாட்டேன்...” என்றார் டாக்டர். விளக்கை அணைத்துவிட்டு, அவர் அந்தச் சுவரில் இருந்த அடையாளங்களை அழுத்த, நரநரவென்ற ஓசையுடன் சுரங்கப்பாதை மூடியது.

“நாம் மட்டுமே அறிந்த ரகசியம்...” என்று நோர்பா சொன்னான்.

“எனக்கும் தெரியும்” என்றது நாக்போ.

அவர்கள் வெளியே வந்தபோது, தொலைவில் ஒரு சிறிய மின்குமிழியின் வெளிச்சம் சுழல்வது தெரிந்தது.

“இந்திய உளவுத்துறையின் அடையாளம்” என்றான் பாண்டியன். 

அவர்கள், அந்தத் திசை நோக்கி ஓடினார்கள். அங்கே நின்றிருந்த ஜம்பா “ஓடி வாருங்கள்” என்றான்.

அவர்கள் அவனருகே ஓடிச்சென்றார்கள்.

ஜம்பா, “இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் வந்துகொண்டிருக்கிறது” என வானைக் காட்டினான். ஹெலிகாப்டரின் விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது.

“பனிப்புயல் மறைப்பதனால், சீனர்கள் உங்களைத் தொடர்ந்து வரமுடியாது” ஜம்பா சொன்னான்.

“நீ சீனாவின் ஒற்றன் என்றார் பான்” என்றான் பாண்டியன்.

“அவர்களுக்கு நீங்கள் வருவது தெரியும் என எனக்குத்தெரிந்தது. ஆகவே, நானே சென்று உங்களைக் காட்டிக்கொடுத்து சீனாவின் ஒற்றனாகக் காட்டிக்கொண்டேன். நான் தலாய்லாமாவின் பக்தன். திபெத்தியர்களுக்கு அவர்தான் தெய்வம். அவருக்காகத்தான் நான் இந்தியாவின் உளவாளியாக இருக்கிறேன்” என்றான் ஜம்பா.

ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. அவர்கள் ஓடிச்சென்று அதில் ஏறிக்கொண்டார்கள். அதில்  இருந்த கேப்டன், “சீக்கிரம்... பனிப்புயல் வந்துகொண்டிருக்கிறது. அதற்குமுன்னால் நாம் செல்லவேண்டும்” என்றார்.

ஹெலிகாப்டர்மேலே ஏறியது. தொலைபேசியில் கர்னல் மகேந்திரன் அழைத்தார். “பாண்டியன், நலமாக இருக்கிறீர்களா?”

“ஆம் நலம்” என்றான் பாண்டியன்.

``சரியான சமயத்தில் ஜம்பா செய்தி அளித்தான்... வாருங்கள். அங்கே என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.”

நோர்பா கீழே பார்த்தான். ஒன்றுமே தெரியவில்லை. பனிப்பாளம் மட்டும் விரிந்துகிடந்தது.

“சாப்பாடே போடமாட்டீர்களா? பசிக்கிறது” என்று நாக்போ சொன்னது.

“இந்தியா போனதும் உனக்குப் பன்றி இறைச்சி உண்டு” என்றான் நோர்பா.

“ஆகா” என்று நாக்போ வாலை ஆட்டியபடி நாக்கால் மூக்கை நக்கிக்கொண்டது.

(முற்றும்)

வெள்ளி நிலம் - 28

லியாங் ஷு பண்பாடு (Liangzhu culture)

சீனாவின் மிகத்தொன்மையான இந்தப் பண்பாடு, 1936-ல்தான் முதல்முறையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. அதன் பின்னர், மேலும் மேலும் நகரங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள தொன்மையான நாகரிகம் என்பது ஹரப்பா நகரம். அது, 4000 ஆண்டுகள் தொன்மையானது. அதற்கு 2000 ஆண்டுகள் தொன்மையானது, இது. அதாவது, கற்கால நாகரிகம். உலோகங்கள் இக்காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்தப் பழங்காலத்திலேயே சிறிய நகரங்களை அமைத்திருக்கிறார்கள். அந்தக் கட்டடங்களின் அமைப்பை வைத்துப் பார்த்தால், அன்று ஆட்சிசெய்தவர்கள்- குடிமக்கள்-அடிமைகள் என்ற பாகுபாடு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது. விரிவான முறையில், இறந்தவர்களுக்குச் சடங்கு செய்திருக்கிறார்கள். அதற்கு, மரகதத்தால் ஆன பொருள்களைப் பயன்படுத்தினார்கள்.