மற்ற எபிசோடுகள்
Published:Updated:

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

வாசித்ததும் மறக்க முடியாததும்படங்கள் : எம்.விஜயகுமார்

`பிடித்த  ஐந்து புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்றால், அவ்வளவு புத்தகக் கூட்டத்திலிருந்து எப்படித் தேடிப் பொறுக்குவது? பள்ளி நாள்களிலிருந்தே படித்து ரசித்த புத்தகங்கள் நூற்றுக்கும் மேல். நான் ஆங்கிலவழிப் பள்ளியில் பயின்ற காரணத்தால், தமிழ்ப் புத்தகங்களைவிட அதிகமாக ஆங்கிலப் புதினங்களையே வாசித்தேன். ஜேன் ஆஸ்டின், சார்லஸ் டிக்கன்ஸ், டியூமா (Alexandre Dumas) எனத் தொடர்ந்து படித்தவற்றிலேயே மிகுந்த தாக்கத்தையும் பரபரப்பையும் பள்ளி நாள்களில் ஏற்படுத்தியது, சார்லொட்டே புரான்டே (Charlotte Bront) என்கிற பெண், 19-ம் நூற்றாண்டில் எழுதிய `ஜேன் அயர்’ (Jane Eyre) என்ற புத்தகம்.

அதில், ஜேன் அயர் கதாநாயகியாகவும் தனித்தன்மையும் மனஉறுதியும்கொண்ட பெண்ணாகவும் சித்திரிக்கப்பட்டிருந்தது, பதின் வயதில் என்னை மிகவும் கவர்ந்தது. ஜேன், அசாதாரண அழகி மட்டுமல்ல; சூட்சுமப் பார்வைகொண்டவள், சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கத் துணிந்தவள். கட்டுப்பாடான 19-ம் நூற்றாண்டுச் சூழலில் அப்படிப்பட்ட ஒரு பெண் சித்திரிப்பு அலாதியானது. கதையில் மர்மங்களும் நிறைந்திருந்ததால், கதை துல்லியமாக இன்றும் நினைவில் நிற்கிறது.

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

ஜேன் அயர், ஓர் அநாதை. மிஸ்ஸஸ் ரீட் என்கிற பணக்காரக் கொடுமைக்கார மாமி, அவளை வளர்க்கிறாள். பிறகு, அவள் விடுதியில் தங்கிப் (ஏழைகள்) படிக்கும் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள். ஆரம்ப வருடங்களில், கஷ்டப்பட்டுப் படிப்பைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். அந்த வாழ்வு பாதுகாப்பாக இருந்தாலும், ஜேன் அயருக்கு அலுக்கிறது. `ஒரு சீமானின் மகளுக்கு ஒரு கவர்னஸ் [செவிலி/ஆசிரியை] தேவை’ என்ற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறாள். அங்கிருந்து கதை சூடுபிடிக்கிறது. ‘தோர்ன் ஃபீல்ட்’ என்கிற அந்த மாளிகையைப் பராமரிப்பவள் ஃபேர்ஃபாக்ஸ் என்கிற பெண்மணி. சீமான் ராச்செஸ்டரின் மகள் அடேல். அதுவரை பிரான்ஸில் வளர்ந்த சிறுமி. ஜேனுக்கு பிரெஞ்சு தெரிந்திருந்ததாலேயே வேலை கிடைக்கிறது. சிறுமிக்கு அவளைப் பிடித்துப்போகிறது.

ராச்செஸ்டர், தோர்ன் ஃபீல்டில் இருப்பதே இல்லை. அபூர்வமாகத்தான் வருவார். பணியாள்கள் எல்லோரும் பயப்படுகிறார்கள். ஜேனும் அவரும் முதலில் சந்திப்பதே அட்டகாசமாக இருக்கும். அவளுடைய பயமற்ற பேச்சும், துணிச்சலான பார்வையும் ராச்செஸ்டரைக் கவர்கிறது. `அவரது வெளிப்புறக் கண்டிப்பு அவருடைய முகமூடி’ என்று ஜேன் உணர்கிறாள். அவருடைய இறந்துபோன மனைவியின் மகள் அடேல் எனப் புரிந்துகொள்கிறாள். ராச்செஸ்டருக்கு, அடேல் மேல் பிரியமில்லை எனத் தெரிந்தவுடன், ஏதோ மிகப்பெரிய ஏமாற்றம் அவர் மனதில் இருப்பதாகத் தோன்றுகிறது. தோர்ன் ஃபீல்டில் மர்மமான சில விஷயங்கள் நடக்கின்றன. யாரோ நடு இரவில் சிரிப்பார்கள். ராச்செஸ்டர் வந்திருந்த ஒரு சமயத்தில் அவரது படுக்கை அறையில் தீப்பற்றுகிறது. ஜேன், அவரைக் காப்பாற்றுகிறாள்.

ஜேனுக்கும் ராச்செஸ்டருக்கும் இடையே நட்பு மலர்ந்து காதலாகி, திருமணம் வரை செல்கிறது. அது ஃபேர்ஃபாக்ஸுக்குப் பிடிக்கவில்லை என்று ஜேனுக்குத் தோன்றுகிறது. திருமணம் நடக்கும் சமயத்தில் மேஸன் என்பவர் திடீரெனத் தோன்றி, ``அந்தத் திருமணம் நடக்க முடியாது’’ என்கிறார். ராச்செஸ்டரின் மனைவியான தன்னுடைய சகோதரி, உயிரோடு இருப்பதாகச் சொல்கிறான். ஜேனுக்கு அதிர்ச்சி  ஏற்படுகிறது. ராச்செஸ்டர், ``அது உண்மைதான். வாருங்கள். அவளை உங்களுக்குக் காண்பிக்கிறேன்’’ என்று எல்லோரையும் தோர்ன்ஃபீல்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கு மாளிகையின் மூன்றாம் தளத்தில் இருந்த அவரின் மனைவி பெர்தா, பித்துப்பிடித்தவள், அபாயகரமான மனநிலையில் இருப்பவள் என்பது அவள் மிருக வெறியுடன் எல்லோர் மீதும் பாய்வதன் மூலம் தெரியவருகிறது. மாளிகையை எரித்த தீ, அவள் வைத்ததுதான் என்று ஜேன் உணர்கிறாள். ஆனாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

அங்கிருந்து ஓடிவிடுகிறாள்.

மூன்று நாள்கள் அலைந்து பசி மிகுந்த நிலையில் மூர்ச்சித்து விழுந்தவளை, இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரன்கொண்ட குடும்பம் காப்பாற்றுகிறது. ஜான் என்கிற அந்தச் சகோதரன் மதபோதகன். சகோதரிகள், ஜேனை மிக அன்புடன் கவனித்துக்கொள்கிறார்கள். அதிசயத் திருப்பம் ஒன்று ஏற்படுகிறது. ஜேனின் மாமா எழுதிவைத்த உயிலின்படி, அவளுக்கு 20,000 பவுண்டு கிடைக்கிறது. ஜானின் குடும்பத்துக்கும் `அவர் மாமா’ எனத் தெரியவந்ததும், அந்தச் சொத்தை தான் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதாக ஜேன் சொல்கிறாள். ஜான் அவளை மணந்துகொள்ள விரும்புகிறான். இந்தியாவில் அவன் மேற்கொள்ளவிருந்த தனது மதப் பிரசாரப் பணியில் அவள் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறான். அவள் மறுத்துவிடுகிறாள். ராச்செஸ்டரை அவளால் மறக்க முடியாதது ஒரு காரணம். தவிர, மத விஷயத்தில் ஜான் காட்டும் கடுமை அவளுக்கு  ஏற்புடையதாக இல்லை. ஒருநாள், ராச்செஸ்டர் அவளை அழைப்பதுபோல பிரமை ஏற்படுகிறது. உடனடியாக தோர்ன்ஃபீல்டுக்குக் கிளம்புகிறாள்.

தோர்ன்ஃபீல்ட்,  தீக்கு இரையாகி உருமாறிப்போயிருக்கிறது. யாருமே அங்கு இல்லை. அவளைக் கண்டு குரைத்த நாயின் சங்கிலியைப் பிடித்தபடி ராச்செஸ்டர் வருகிறார். பார்வை இழந்திருக்கிறார் என்பதைக்கண்டு அதிர்ச்சியடைகிறாள். பெர்தா மறுபடியும் தீ வைத்ததில் எல்லோரும் இறந்து, அவர் தப்பினார். ``பார்வை மட்டும் போனது’’ என்று அவர் சொல்கிறார். கடைசியில் கதை சுபமாக முடிகிறது.  

பதின் வயதில் என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய கதை அது.

ன்னை உலுக்கி அழவைத்த புத்தகம் `Cry, the beloved country’ என்ற தென் ஆப்பிரிக்காவைப் பின்னணியாகக்கொண்ட நாவல். ஆலன் பேட்டன் (Alan Paton) என்கிற வெள்ளையர் எழுதியது. தென் ஆப்பிரிக்கர்களிடையே ஏற்பட்டு வந்த கலாசாரக் குழப்பங்களை, மரபு சார்ந்த பழங்குடி இனத்து வாழ்க்கைமுறைகளில் நிகழ்ந்த மாற்றங்களினால் ஏற்பட்ட குழப்பங்களை, திசைகெட்டுப் போகும் இளைஞர்களை, இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த வெள்ளையர் ஆட்சியை, நிறத் துவேஷம் ஏற்படுத்திய அடிமைத்தனத்தை, முதிய கறுப்பர் ஒருவர் மற்றும் முதிய வெள்ளையர் ஒருவரின் மன உணர்ச்சிகள், தாபங்கள், வருத்தங்கள் வழியாக வெகு நுணுக்கமாக, மிக அழகிய, நெகிழவைக்கும் நடையில் நாவல் பின்னிக்கொண்டுபோகிறது.

 ஒரு கிராமத்தில் வசிக்கும் ஸ்டீஃபன் குமாலோ என்ற ஏழைப் பாதிரியார், ஜொஹன்னஸ்பர்கில் [ஜோபர்க்] இருந்த அவருடைய நண்பர் குமாலோவின் தங்கை கர்ட்ரூட் (Gertrude) நோய்வாய்ப்பட்டிருப்பதாக, வந்து பார்த்துவிட்டுப் போகும்படி அழைக்கிறார். ஏழை குமாலோ, அந்த நெடும் பயணத்தை மேற்கொள்கிறார். ஜோபர்குக்குச் செல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. ஜோபர்குக்கு அவருடைய மகன் அபுசலேம் சென்றது பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஜோபர்கை அடைந்ததும், குமாலோ தன் தங்கையைச் சந்திக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்காக அவள் அங்கு விலைமகளாகியிருப்பதும், அவளுக்கு ஒரு மகன் இருப்பதும் தெரிகிறது. அவளைத் தன்னுடன் கிராமத்துக்கு வந்துவிடச் சொல்கிறார். தம்முடன் தனக்கு அளிக்கப்பட்ட ஜாகையில் வைத்துக்கொள்கிறார். தனது மகனைக் கண்டுபிடிக்கும் வேட்டை தொடங்குகிறது.

குமாலோவுடைய சகோதரன் ஜான், ஜோபர்கில் தொழிலதிபராகச் செல்வாக்குடன் இருக்கிறான். பழங்குடி இனத்துத் தார்மிக மதிப்பீடுகளை மறந்தவன்போல இருக்கிறான். அவனுடைய மகனுடன் அபுசலேம் இருந்ததாகவும், ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்ததாகவும் தகவல் கிடைக்கிறது. குமாலோ அங்கு சென்று விசாரித்ததில் அபுசலேம் சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்ததும், ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கியிருப்பதும் அறிய முடிகிறது. மகனைக் காண்பதற்கு முன்னர் தினசரிகளில் ஒரு கொலையைப் பற்றி விவரம் தெரியவருகிறது. இனத் துவேஷத்தை எதிர்த்துவந்த ஆர்தர் யார்விச் என்கிற ஒரு வெள்ளையரை, கறுப்புத் திருட்டுக்கும்பல் கொலை செய்ததாக, அபுசலேம் கைதாகிறான். கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அபுசலேம், கொலையில் தனது சித்தப்பா மகன் மேத்தியூவுக்கும் பங்கு இருந்ததாகச் சொல்கிறான். ஆனால், செல்வாக்கினால் ஜான் தனது மகனைத் தண்டனையிலிருந்து தப்பிக்க வழிசெய்கிறான். அபுசலேமுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குமாலோ மனமுடைந்துபோகிறார். மகன் கர்ப்பமாக்கிய பெண்ணை அவனுக்கு சிறையிலேயே மணமுடித்து, அந்தப் பாவத்தைக் கழுவுகிறார். அபுசலேம், செய்த தவறுக்கு வருந்தி அழுகிறான். பிறக்கப்போகும் குழந்தைக்கு, புனித பீட்டரின் பெயரைச் சூட்டச் சொல்கிறான்.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ஆர்த்தரின் தந்தை, மலைப்பிரதேசத்தில் விவசாயம் செய்பவர். மழைக்காகக் காத்திருக்கும் வேளையில், கறுப்பன் ஒருவனால் மகன் கொலை செய்யப்பட்டான் என அறிந்து மிகுந்த ஆத்திரத்துடனும் துக்கத்துடனும் ஜோபர்க் வருகிறார். இனத் துவேஷம்கொண்டவர். மகனின் அறையில் மகன் எழுதிய கட்டுரைகள் இன வேற்றுமை ஏற்படுத்தியிருக்கும் கொடுமைகள், கறுப்பினத்தில் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பதைப் படிக்கிறார். மிகவும் நெகிழ்ந்து மனது மாறுகிறது. அவரும் குமாலோவும் யதேச்சையாகச் சந்திக்கிறார்கள். குமாலோ, தனது மகன் செய்த குற்றத்துக்காக மன்னிப்பு கேட்கிறான். இருவரிடையே துளிர்க்கும் நட்பு, நெகிழ்ச்சியூட்டுவது. அபுசலேமின் வழக்கின் தீர்ப்பைக் கேட்க இருவரும் சேர்ந்தே நீதிமன்றம் செல்கிறார்கள். அபுசலேமுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என, தனது தங்கையை அழைத்துக்கொண்டு செல்ல முடிவெடுத்தபோது, தங்கை விடுதியைவிட்டுப் போய்விட்டிருக்கிறாள். தன்னுடைய இனத்தின் கட்டுக்கோப்புக் குலைந்து போய்விட்டது என்று குமாலோவுக்கு துக்கம் எழுகிறது. அபுசலேம் தூக்கிலிடப்படும் தருணத்தில் குமாலோ மலை உச்சியில் தனியாக அமர்ந்து தனது மகனுக்காகவும் சீர்குலைந்துபோன இனத்துக்காகவும் கண்ணீர் வடிக்கிறான்.

என் மனத்தை உலுக்கிய நாவல் இது.

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

சோகமித்திரனின், `18-வது அட்சக்கோடு’. மிக உணர்வுபூர்வமாக, உணர்ந்து அதிர்ந்த ஓர் எழுத்தாளரின் சொந்த பால்ய அனுபவங்களைப் போன்ற வெளிப்பாடு. அவர் வளர்ந்த, சென்ற நூற்றாண்டின் 40-களின் ஹைதராபாத் நகரம், ஒரு சிறிய உலகமாக விரிகிறது. பதின்வயதுச் சிறுவன் சந்திரசேகரனின் - சந்துருவின் பார்வையில் கதை வளர்கிறது. அவன் செல்லும் சந்துகளில், ரயில்வே காலனியான லான்ஸர் பார்ராக்ஸ்களில் நாமும் செல்கிறோம். மிகக் கூர்மையான பார்வை சந்துருவுக்கு. வீட்டுக்குள் இருக்கும் வாழ்வும், வெளியே ஒரு வரலாற்றுக் கொந்தளிப்பில் இருக்கும் நகரமும் வெவ்வேறு துருவங்கள் என உணர்ந்து குழப்பமடைகிறான். நெருங்கிய நண்பர்களாக, விளையாட்டுத் தோழர்களாக வேற்றுமை பாராமல் இருந்த பல இனத்துக் கும்பலில் திடீரென முளைக்கும் சுவர்கள், சந்தேகங்கள், அச்சங்கள்... சற்றுகூட மிகை உணர்ச்சி இல்லாமல் இயல்பாக விரியும் கதைப்போக்கு.

அவன் வசிக்கும் ரயில்வே காலனி, செகந்திராபாத் கன்டோன்மென்ட்டின் சந்துகள் ஒரு பக்கம், நிஜாமின் ஹைதராபாத் மறுபக்கம். அங்கு ஏற்பட்டுவந்த மாற்றம், திறந்தவெளிகள், சினிமா அரங்குகள், நிஜாம் கல்லூரி... எனச் சந்துருவுடன் நாமும் அலைகிறோம். சுதந்திரம் கிடைத்த ஆண்டு, ஹைதராபாத் ரசாக்கர்களின் பிடியில் நிலைகுலைந்துபோவது, சாமான்யனை பீதியடையவைத்த கலவரங்கள், போலீஸ் அத்துமீறல்கள் எல்லாம் அந்தச் சிறிய நாவலில் மிகக் கச்சிதமாக அடிமனத்து ஆழத்திலிருந்து பீறிட்ட நினைவுகளாக விரிவது அற்புதம்!

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

உச்சக்கட்டமாகக் கடைசிப் பக்கங்களில் இருள் சூழ்ந்த தெருக்களில் சந்துரு நடக்கிறான். எங்குமே வெளிச்சம் இல்லை. லான்ஸர் பார்ராக்ஸின் இரண்டு வரிசைகளிலும் அவன் நடக்கிறான். இந்துக்கள், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர்கள் என அடுத்தடுத்து வசித்த வீடுகள். சில வீடுகளில் யாரும் இல்லாததால், விளக்கு இல்லை. இருந்தவர்கள் வீட்டிலும் சில மாதங்களாக இருளுக்குப் பழக்கிக்கொண்டிருந்தார்கள். அப்படியானால், யார் வீட்டிலும் விளக்கு தேவைப்படும் நோயாளிகளோ, பால் தேவைப்படும் குழந்தைகளோ, மாணவனோ இல்லையா? நாட்டில் நடப்பதெல்லாம் வீட்டுக்குள் புகுந்துவிட்டதுபோல இருக்கிறது. இருட்டில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த சந்துருவுக்கு ஏற்படும் அனுபவம்தான் நாவலின் அதிர்வைத் தரும் உச்சம். அந்தக் கடைசிப் பத்தியைப் படித்து ஏற்பட்ட அதிர்வு, அதை நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஏற்படுகிறது இன்னமும்.

லக்கிய உலகத்தில் பெரிய சலனத்தை ஏற்படுத்திய, பாராட்டைப் பெற்ற பெண்ணிய நாவல் இது. `The Handmaid’s Tale’ (பணிப்பெண்ணின் கதை), கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மார்கரேட் ஆட்வுட் (Margaret Atwood) 1985-ம் ஆண்டில் எழுதியது. நாவலை எழுதும் காலத்தில் மார்கரேட் ஆட்வுட் மேற்கு பெர்லினில் வசித்துவந்தார். பெர்லினைச் சுற்றிச் சுவர் இருந்தது. சோவியத் சாம்ராஜ்யம் வலுவாக இருந்த

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

சமயம். இரும்புத் திரைக்குப் பின்னால் இருந்த சில நாடுகளுக்கு மார்கரேட் செல்லும்போது காற்றில் பீதி இருந்ததையும், ரகசிய சமிக்ஞைகளுடன் இலக்கியவாதிகள் பேசுவதையும் கண்டிருக்கிறார்.
‘ கட்டடங்கள் மறைவதையும், ஸ்தாபனங்கள் அழிவதையும் சுட்டிக்காட்டுவார்கள். மின்னல்போல மாற்றம் வருவது சாத்தியம் எனத் தோன்றும். இது நடக்கவே நடக்காது என நினைப்பது, பேதமை எனத் தோன்றும். எது வேண்டுமானாலும்,  எங்கு  வேண்டுமானாலும் நடக்கக்கூடும்.’ இதையெல்லாம் பூடகமாக நாவலில் சொல்ல நினைத்தார் மார்கரேட்.

நாவலின் கதைக்களம் அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகம் உள்ள மாஸசூஸட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் நகரம். ஜில்லியட் குடியரசில் சட்ட சாசனமும் நாடாளுமன்றமும் இல்லாத
17-ம் நூற்றாண்டு பியூரிட்டன் மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி. ஜில்லியட் குடியரசின் ரகசியக் கண்காணிப்புப் பணி, பல்கலைக்கழக நூலகத்திலேயே செயல்படுகிறது. அதன் சுவர்களில், தவறு செய்தவர்களின் தூக்கிலிடப்பட்ட உடல்கள் தொங்கும். நாவலின் முக்கியமான கரு - சுற்றுச்சூழலில் இருக்கும் நச்சுத்தன்மையால் மக்கள்தொகை சுருங்கிவருகிறது என்பது.

ஜில்லியட் குடியரசின் ஆளுநர்கள், கர்ப்பம் தரிக்கக்கூடிய ஆரோக்கியமான பெண்களைத் தங்களின் பணிப்பெண்களாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள், குழந்தை பெற்றுத் தர வேண்டும். அவர்கள் கருவிகள் மட்டுமே. சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களுடைய உடை சிவப்பு. ரத்தத்தை அடையாளப்படுத்துவது. தவிர, அவர்கள் தப்பிக்க நினைத்தால் எளிதில் அடையாளப்படுத்தக்கூடியது. மனைவிகளின் உடை நிறம் நீலம். தூய்மை. கதை நாயகியின் பெயர் ஆஃப்ரெட். (Offred)  Fred என்ற ஆணுக்குச் சொந்தமானவள் என்று பொருள். Offered - காணிக்கை/ பலிகடா என்றும் பொருள்கொள்ளலாம். அவள்தான் தனது அனுபவங்களைப் பதிவுசெய்கிறாள். அவள் எழுதிவைத்த குறிப்பு, பின்னாளில் ஒரு பல்கலைக்கழகச் சம்மேளனத்தில் வாசிக்கப்படுகிறது. `பெண்களும் மனமாச்சரியம்கொண்ட மனிதப்பிறவிகளே’ என்று சொல்லும் சேதி இது. என்னைப் பெரிதும் சலனப்படுத்திய நாவல்.

காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி

ந்த வரிசையில் எனக்குப் பிடித்த மற்றொரு நாவல் `The Grapes of Wrath’ என்ற அமெரிக்க நாவல். ஜான் ஸ்டீன்பெக் (John Steinbeck) எழுதியது. சென்ற நூற்றாண்டின் 30-களின் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியைப் பின்னணியாகக் கொண்ட கதை. வறட்சி, பஞ்சம், வங்கியில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பித் தர இயலாத குறுநில விவசாயிகள், அதைப் பயன்படுத்தி லாபம் பார்க்க நினைத்த வங்கிகளின் ஆதிக்க நில ஆக்கிரமிப்பு, தாங்கள் வாழ்ந்த நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு உள்ளான ஓக்லஹாமா மாநில மக்கள், அங்கிருந்து விடியலைத் தேடி அவர்கள் மேற்கொள்ளும் பயணம்...  இதுவே கதைக் கரு.  

விவசாயிகள் நிலத்தை இழந்து தவிக்கும் தவிப்பு, வேலைவாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்ட இயற்கை வளம்மிக்க கலிஃபோர்னியாவை நோக்கிய அவர்களது நெடிய அசாதாரணப் பயணம், வழியில் சந்திக்கும் ஏமாற்றம், பயம், எதிர்பாராத தருணத்தில் சக யாத்ரிகர்களிடம் சந்திக்கும் மனிதநேயம், காசு உள்ளவர்களின் மூர்க்கம், இரக்கமின்மை... இவ்வளவுக்கும் ஈடுகொடுக்கும் பெண் என்ற ஆளுமையின் துணிச்சல்... காருண்யம்.

என்னை மிக மிக நெகிழவைத்த புத்தகம் இது.

புத்தகத்தின் தொடக்கமே, மிக வறண்ட பயங்கர மண் காற்று வீசும் ஓக்லஹாமா பிரதேசத்தின் வர்ணனையுடன் தொடங்குகிறது. சுடுகாடுபோல இருக்கும் கிராமம். வாழ்ந்த வீடுகளைக் காலிசெய்துவிட்டு, எல்லோரும் பிழைப்பைத் தேடிப் போய்விட்டார்கள். அங்கு எலிகள் மட்டுமே வசிக்கின்றன. சோள வயல்கள் எல்லாம் காய்ந்து, மண்காற்றில் உருத்தெரியாமல் சாய்ந்துகிடக்கின்றன. அந்தக் காட்சியை அத்தனை கவிதை அழகுடன் எழுத முடியுமா எனப் பிரமிப்பு ஏற்படுகிறது.

ஆங்கில நடை சொக்கவைக்கிறது. ஆசிரியரின் துல்லியமான பார்வையில் சேதி இருக்கிறது. காற்றில் ஒரு சீற்றம் இருக்கிறது. காய்ந்த வயிற்றின் சீற்றம். வாழ்ந்த மண்ணைவிட்டு நிர்பந்தமாகக் கிளம்ப நேர்ந்த மக்களின் ஆன்மாக்களில் கவியும் சீற்றம், கனம் மிகுந்த திராட்சைக் குலைகள்போல கொடி தாங்க முடியாத கனம். `எல்லோரும் ஒன்று சேர்ந்தால் விடிவுக்கு வழியுண்டு’ என்ற சேதியை ஸ்டீன்பெக் சொல்லத் துணிகிறார்.

நினைவைவிட்டு நீங்காத படைப்பு. இப்படி என் மனதை வருடிய நாவல்கள் மலையாய் எனக்குள் குவிந்துள்ளன. அதை குறுகிய நூல் இழையில் அணைத்து ஆள நினைப்பது சாத்தியமே அல்ல!