
படம் : க.பாலாஜி
வினாக்கள்?
“உயிர்ப்போடு இருக்கிறோம் என்பதன் அடையாளம்.”
வானம்பாடிகள்?
“புதுக்கவிதையில் பாரதி, பாரதிதாசன் வழியில் சமுதாய அரசியல் உள்ளடக்கத்தைக் கவிதையில்

வெளிப்படுத்தப் பயன்பட்ட ஓர் இயக்கம்.”
ஆத்மார்த்தமான சகபயணி?
“இன்குலாப்.”
திராவிடம்?
“இன உணர்வின் வழியாக ஒன்றுபடுவதற்கான ஒரு கொள்கை. இந்திய தேசியத்தின் உள்ளே ஒரு துணை தேசியத்தை வார்த்தெடுக்க முடியும் என்பதை நம்பும் இயக்கம்.”
வாசித்துக்கொண்டிருக்கும் நூல்?
“ ‘பறவை பார்த்தல்’ - கவிதை நூல்.”
பாப்லோ நெருதா?
“அரசியலுக்குக் கவிதையின் அழகையும் கவிதைக்கு அரசியலின் கம்பீரத்தையும் கொண்டுவந்த கவிஞன். என் மூத்த பையனின் பெயர்.”

மீனவர் தோணிகள்?
“கடலோடு போனவர்கள்
மீனோடும் வரவில்லை
படகோடும் வரவில்லை.”
பாரதிதாசன்?
“என் முதல் நாவல் வெளிவரக் காரணமானவர்; தன்னுடைய கடைசிக் கடிதத்தை எனக்காக எழுதியவர்.”
வாழ்வின் அர்த்தம்?
“வாழ்விற்கான திறப்புகளைப் தேடிப் பெறுவதும் அதைப் பயன்படுத்துவதும்.”
இன்றைய பக்தர்களும் மத குருமார்களும்?
“வணிகமாகிவிட்ட பக்தியின் இரு பிரிவிலும் உண்மையானவர்கள் இல்லை.”
நவீனக் கவிதைகள்?
“மக்கள் மத்தியில் போகாத கவிதைகள்... புரிந்துகொள்ள முடியாத கவிதைகள்... புரிந்துகொள்ள வேண்டாம் என்றேகூட எழுதப்படுகிற கவிதைகள்... இப்போக்கு மாறி, கவிதையில் எளிமை கூடும்போது வெற்றி காணும் சாத்தியங்கள் உண்டு.”
நந்தன்கள்?
“ ‘சேரி’ என்று ஊருக்கு வெளியே ஒரு வாழிடம் இருக்கும்வரை நந்தன்கள் இருக்கத்தான் செய்வார்கள்.”
பழைய காதலிகள்?
“மரபுக் கவிதைகளைத் தவிர வேறு யாருமில்லை.”
சந்திப்பு : அழகுசுப்பையா ச.