மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் இசைக் கச்சேரிகள் என்பதுபோல, ஜனவரி என்றாலே புத்தகத் திருவிழா எனும்படியாக ஆண்டுதோறும் சிறப்பாகப் புத்தகக் காட்சி நடைபெற்றுவருகின்றது. வெளியூர்களிலிருந்து இதற்காகச் சென்னை வருகிறவர்கள் அதிகம். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்துகூட வந்து பங்கேற்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள் இருக்கிறார்கள்.

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

புத்தகக் காட்சி என்பது தமிழ் அறிவுலகத்தின் அடையாளம் போல் ஆகியுள்ளது. ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை ஒட்டி புது நூல்கள் வெளியிடப்படுகின்றன. நான் கடந்த 15 ஆண்டுகளாகத் தவறாமல் எனது புதிய நூல்களைச் சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு வெளியிட்டு வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தமிழ்ப் புத்தகங்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிகமாகியிருக்கிறது. இளைஞர்கள் படிப்பதில்லை என்பது பொய். விருப்பமான புத்தகங்களை மட்டுமே தேடிப் படிக்கிறார்கள் என்பதே நிஜம். உண்மையில் 40 முதல் 50 வயதுகளில் உள்ளவர்கள்தான் புத்தக வாசிப்பைக் கைவிட்டுவிட்டார்கள். வாழ்க்கை நெருக்கடியைக் காரணமாகச் சொன்னாலும், தொலைக்காட்சி, இணையம், அலைபேசி போன்றவை அவர்களின் நேரத்தை விழுங்கிவிடுகின்றன என்பதே உண்மை. இணையத்தில் நடைபெறும் ஆன்லைன் வர்த்தகம், புத்தக விற்பனையை மேலும் விஸ்தீரணம் செய்துள்ளது. ‘அமேசான் கிண்டில்’ போன்றவற்றின் வருகை ‘ஈ-புக்’ விற்பனைக்கான புதிய சாத்தியங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் எழுத்தாளர்களே தனது புத்தகங்களை வெளியிடலாம். 55 சதவிகிதம் ராயல்ட்டி அவர்களுக்குக் கிடைக்கும்.

புத்தக வெளியீட்டு விழாக்கள் இன்றைக்கும் அரங்கங்களில்தான் நடத்தப்படுகின்றன. இசை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதுபோல, ஒரு தொலைக்காட்சிகூட புத்தக வெளியீடுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வதே இல்லை. யாராவது முன்வந்து இதைச் செய்தால், புத்தக அறிமுகம் மக்களிடம் பரவலாகச் சென்றடையும்.

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

புத்தக வாசிப்பு என்பதை அறிவார்ந்தத் தேடுதலாக எவரும் நினைப்பதில்லை. இணையத்தில் எல்லாமே இருக்கிறது என்ற தவறான மயக்கம் பலரையும் பிடித்தாட்டுகிறது. இன்னொரு பக்கம் இலவசமாகப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்யக் கிடைக்காதா எனத் தேடுகிறார்கள். இதுதான் சமகாலச் சூழல்.

 பை பையாகப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு போகிறவர்களில் பாதிப் பேர், அதில் ஐந்து நூல்களைக்கூடப் படித்து முடிப்பதில்லை. வீட்டு அலங்காரப் பொருள்களைப்போல புத்தகங்களும் மாறிக்கொண்டிருப்பது துரதிருஷ்டமே. எது நல்ல புத்தகம் என்று வாசகன் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும் சிரமம் உருவாகிவிட்டது. சந்தை வணிகத்துக்காகப் பதிப்பகங்கள் எவ்வித முறையான உரிமையும் பெறாமல் பல புத்தகங்களைப் பதிப்பிக்கின்றன. எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ராயல்ட்டி பெரும்பான்மை யினருக்குக் கிடைப்பதே இல்லை. எழுத்தாளர்களின் அடிப்படைப் பிரச்னைகள் சார்ந்து குரல் கொடுக்க எவ்விதமான அமைப்புகளும் இல்லை என்பது கூடுதல் வருத்தம் தருகிறது.

 புத்தகக் காட்சி வழியாக வெளிக்காட்டப்படும் பிம்பம் தற்காலிகமானதே. எழுத்து சார்ந்த இந்த விற்பனைப் பெருக்கம், தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றம் உருவாகிவிட்டதைப்போன்ற பொய்த்
தோற்றத்தைத்தான் உண்மையில் ஏற்படுத்தி உள்ளது. அது வணிகச் சந்தை உருவாக்கிய மயக்கம் மட்டுமே. முந்தைய தலைமுறையில், ஒரு தீவிர வாசகன் புத்தகம் படித்து முடித்துவிட்டதும் அதைப்பற்றித் தனது நண்பர்கள் வட்டத்திற்குள் பேசுவான். புத்தகத்தை இரவல் தந்து வாசிக்கவைப்பான். முடிந்தால், அந்த எழுத்தாளருக்குக் கடிதம் எழுதுவான். சிலர் நேரில் சென்று பார்ப்பதும் உண்டு. ஆனால், இன்று படித்த புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறவர்கள் குறைவு. புதிய திரைப்படம் ஒன்றுக்கு, அது வெளியான ஒரு வாரத்தில் பல நூறு விமர்சனங்கள் எழுதிக் குவிக்கப்படுகின்றன. ஆனால், தமிழின் முக்கிய நாவல்கள் பலவற்றிற்கு, அது வெளியாகி ஒராண்டு ஆனாலும், ஒரு விமர்சனம்கூட வெளிவருவதில்லை என்பதே கசப்பான உண்மை.

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில், ஆண்டுக்கு 1,000 புதிய புத்தகங்கள் வெளியாகின்றன என்கிறார்கள், அதில் மிகக் குறைவான புத்தகங்களே தரமானவை; மற்றவை அச்சிட்ட காகிதங்கள் மட்டுமே. சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் மலிவான பிளாஸ்டிக் பொருள்களின் வரிசையில் புத்தகமும் சேர்ந்துவிட்டது துரதிருஷ்டமே. ரசிகமணி டி.கே.சி, கம்பராமாயணத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் வாசித்துக்கொண்டாடியிருக்கிறார். இப்படித் திருக்குறள், சிலப்பதிகாரம், திருவாசகம் போன்ற நூல்களைத் தனது வாழ்நாள் முழுவதும் வாசித்துக்கொண்டே இருப்பவர்களை அறிவேன். நவீன நாவல்கள் அல்லது எழுத்துகள் ஏன் அப்படி வாசிக்கப்படுவதில்லை, ஒருமுறை படித்து முடிப்பதோடு அவர்களின் தேவை முடிந்துவிட்டதா? வெறும் மனப்பாடத்தை மட்டுமே வலியுறுத்தும் அடிப்படைக் கல்வி, ரசனையில்லாத குடும்பச் சூழல், எதையும் நுனிப்புல் மேயும் பொதுப்புத்தி, வெத்துவேட்டுகளைப் பெரும் ஆளுமைகளாகக் கொண்டாடும் ஊடகங்கள் இவை யாவும் ஒன்று சேர்ந்து நமது சூழலைச் சீர்கெடுத்து வருகின்றன. இதற்கு மாற்றாக புத்தகக் காட்சிகளும் தீவிரமான புத்தக வாசிப்பும் தேவைப்படுகின்றன. 

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

‘சென்னை மாநகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் காட்சியில், 10 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகின்றன. மூன்று லட்சம் பேருக்கும் மேலாகக் காட்சியைப் பார்வையிடுகிறார்கள்’ என்று சொல்கிறார்கள். இதுபோலவே தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் புத்தகக் காட்சிகள் உற்சாகமாக வரவேற்புடன் நடைபெறுகின்றன. புத்தகக் காட்சி என்பது பெரும் திருவிழாபோலவே உள்ளது. 300 - 400 பதிப்பகக் கடைகள், அன்றாடம் மாலையில் புத்தக வெளியீடுகள், இலக்கியச் சொற்பொழிவு, புத்தகங்களை வாங்க அலைமோதும் கூட்டம் என்று காணப் பிரமிப்பாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 40 பதிப்பகங்கள் உருவாகியிருக்கின்றன. ஓர் எழுத்தாளனாகப் புத்தகக் காட்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் வாசகர்களின் ஆதரவையும் சந்தோஷமாக வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன். ஆனால், ‘புத்தகக் காட்சி என்பது வெறும் சந்தை மட்டுமே - அங்கே எழுத்தாளர்களுக்கு எந்த மரியாதையும் கௌரவமும் கிடையாது’ என்பது வருத்தமளிக்கிறது.

இதுவரை ஒரு புத்தகக் காட்சிகூடத் தமிழின் முக்கிய எழுத்தாளர் ஒருவரால் துவக்கிவைக்கப்பட்டதில்லை. அந்தக் கௌரவம் அமைச்சர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நீதிஅரசர்களுக்கும் வழங்கப்படுவது முறையானதில்லை. புத்தகக் காட்சிகளை எழுத்தாளரே துவக்கி வைக்க வேண்டும். தமிழின் மூத்த படைப்பாளிகளுக்குக்கூடப் புத்தகக் காட்சி விழாவுக்கான அழைப்பிதழ் தரப்படுவதில்லை. அரசு உயர்அதிகாரிகள், புரவலர்கள் எனப் பலருக்கும் இலவச நுழைவுச் சீட்டுகளை அள்ளி வழங்கும் புத்தகக் காட்சி நிர்வாகிகள், முக்கியமான எழுத்தாளர்களை வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே நுழையவைப்பது அவலமே.

 சிறுவர்கள் படிக்க வேண்டும் என்று ஊடகங்களில் கூப்பாடு போடும் நாம், இதுவரை அவர்களுக்காக ஒரு முறையாவது சிறப்புப் புத்தகக் காட்சி ஒன்றை நடத்தியிருக்கிறோமா; கோடை விடுமுறை நாள்களில் சிறார்களுக்கான சிறப்புப் புத்தகக் காட்சி ஒன்றை நடத்தினால் நன்றாக இருக்குமே, ‘பபாசி’ போன்ற நிர்வாகம் ஏன் அதைச் செய்ய மறுக்கிறார்கள்?

புத்தகக் காட்சியில் எந்தக் கடையில் எந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்பதை அறிந்துகொள்ள எவ்வித வசதியும் கிடையாது. தொடுதிரை வசதிகொண்ட கணினிகள், சாதாரண வீட்டு உபயோகக் கண்காட்சிகளில்கூட இடம்பெறுகின்றன. அதைப் பயன்படுத்தி வாசகர்கள் எளிதாகப் புத்தகங்களை அடையாளம் காண உதவி செய்யலாமே.

 பலசரக்குக் கடைகளில்கூட வாங்கிய பொருள்களைச் சுமப்பதற்காகத் தள்ளுவண்டி தருகிறார்கள். ஆனால், புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களைக் கையிலே சுமந்து அலைந்து வேதனைப்
படுகிறவர்களே அதிகம். கட்டண முறையில் தள்ளுவண்டிகள் தரப்படலாம்தானே.

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஆண்டுக்கு ஒரு மாதம் புத்தக வாசிப்புக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நாடெங்கும் புத்தக அறிமுகக் கூட்டங்கள், வாசிப்பு இயக்கங்கள் அரசாலேயே நடத்தப்படுகின்றன. அதை நாமும் பின்பற்றலாம்தானே.

புத்தக வாசிப்பு வீட்டில் தொடங்கப்பட வேண்டும்; கல்வி நிலையங்களில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்; சமூகத்தில் கொண்டாடப்பட வேண்டும். இந்த மூன்று நிலைகளில் மாற்றம் உருவானால் மட்டுமே புத்தக வாசிப்புத் தீவிரமாகும். தமிழகத்தில் 3,984 நூலகங்கள் உள்ளன. அதில் எத்தனை நூலகங்கள் அந்தந்த ஊரில் வசிக்கும் எழுத்தாளர்களைக் கௌரவித்திருக்கின்றன; அவர்களை அழைத்துப் புத்தகம் குறித்து உரையாற்றச் செய்திருக்கின்றன. ஏன் நூலகத்தை வெறும் புத்தகங்கள் இரவல் தரும் இடமாக மட்டும் பயன்படுத்துகிறோம் - எழுத்தாளர் சந்திப்பு, இளம் வாசகர்களுக்கான பயிலரங்கு என்று அதைக் கலாசார வெளியாக மாற்றுவதற்கு ஏன் முயல்வதே இல்லை. குறைந்தபட்சம் எழுத்தாளர்களின் புகைப்படங்களையாவது நூலகத்தில் வைக்கலாம்தானே. நூலகத்தில்கூட எழுத்தாளர்கள் படம் மாட்டப்படாது என்றால், வேறு எங்கேதான் அதை மாட்டுவது?

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் முயற்சியால் தற்போது அண்ணா நூலகம் மறுசீரமைப்புப் பெற்றுள்ளது. தொடர்ந்து இலக்கிய உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. கலாசார மையமாக நூலகம் எழுச்சி பெற்றுவருகிறது. இந்த முயற்சி தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும்.

2004-ம் ஆண்டு, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 2000 வருடப் பராம்பரியம் உள்ள ஒரு மொழி என்ற பெருமிதமும் கொண்டாட்டமும் தமிழகமெங்கும் நடந்தேறியது. தமிழ் இலக்கியம் குறித்து உலக அளவில் மிகப் பெரிய கவனம் கிடைக்கப்போகிறது; தமிழின் முக்கிய இலக்கியங்கள் யாவும் மொழியாக்கம் செய்யப்பட்டு, உலக வாசகப்பரப்பிற்குள் புதிய அலையை உருவாக்கப்போகிறது என்று புதுப்புதுக் கனவுகள் உருவாகின. புதிய தமிழ் ஆய்வு மையங்கள், சங்க இலக்கியக் கருத்தரங்குகள், உயர்அதிகாரப் பதவிகள், என்று அவசர அவசரமாக ஏதேதோ தொடங்கப்பட்டன. இதைக்கண்டு தமிழ் இலக்கியத்தின் புதிய சாதனை யுகம் தொடங்கிவிட்டதாகவே பெரும்பான்மையினர் நினைத்தனர். ஆனால், அதுவும் ஒரு பகல்கனவுதான் என்பது இந்த 13 ஆண்டுகளில் தெளிவாகி உள்ளது.

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்

செம்மொழி அறிவிப்பால், தமிழ் இலக்கியம் குறித்து உலக அளவில் முக்கியக் கவனம் எதுவும் உருவாகவில்லை. தமிழின் முதன்மைப் படைப்புகள் எதுவும் அயல்மொழிகளில் வெளியாகவில்லை. தமிழின் மரபு இலக்கியங்கள் குறித்து ஆய்வு செய்யும் இருக்கைகள் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படவில்லை. நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் எவரும் கௌரவிக்கப்படவோ, அங்கீகரிக்கப் படவோ இல்லை. மாறாக அது ஓர் அரசியல் கேலிக்கூத்தாகவே முடிந்திருக்கிறது.

பதிப்பிக்கப்பட வேண்டிய பல முக்கியப் புத்தகங்கள் 100 வருடங்களுக்கும் மேலாக மறுபதிப்புக் காணாமல் முடக்கப்பட்டிருக்கின்றன. ம.ப.பெரியசாமித்தூரன் பல ஆண்டுக்காலம் பெரும்பாடுபட்டு உருவாக்கிய ‘கலைக்களஞ்சியம்’ மறுபதிப்புக் காணாமல் முடங்கிப்போயிருக்கிறது. ‘சென்னை பல்கலைக்கழகத் தமிழ் - ஆங்கில அகராதி’ மேம்படுத்தப்படவே இல்லை. இப்படிப் பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

குறைந்தபட்சம் சுதந்திரத்துக்குப் பிறகான 50 ஆண்டுக் கால நவீனத் தமிழ் இலக்கியத்தை, ஆங்கிலத்திலோ வேறு உலக மொழிகள் எதிலுமோ அறிந்துகொள்ளும்படியான தொகை நூல் எதுவும் வெளியாகவில்லை. அதற்கான முயற்சிகளும் தொடங்கப்படவில்லை.

ஆகவே, ஒரு செம்மொழியாகத் தமிழ் தனது வலிமையை உலகிற்கு அடையாளப்படுத்த இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

 உலகத் தரத்தில் புத்தகங்களை அச்சிடும் தொழில்நுட்பம் நமக்கு சாத்தியமாகியுள்ளது. ஆனால், சந்தைப்படுத்துதலில் இன்னமும் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதே உண்மை. ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு உலகப் புத்தகக் காட்சிகளுக்குப் போய்வந்திருக்கிறேன். அந்தத் தரத்தில் எப்போது புத்தகக் காட்சிகளை நாம் நடத்தப்போகிறோம்; எழுத்தாளர்களுக்கு உரிய கௌரவம் அளித்துக் கொண்டாடப்போகிறோம்; வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அளித்து வாசிப்பு இயக்கத்தை உருவாக்கப்போகிறோம் என்பது, தீராக்கேள்வியாகவே எஞ்சியிருக்கிறது.