மற்ற எபிசோடுகள்
Published:Updated:

“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா

“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா
பிரீமியம் ஸ்டோரி
News
“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா

படங்கள் : மீ.நிவேதன்

ள்ளிவாசலில் சிறப்பாக குர்ஆன் ஓதியதற்காகப் பரிசு பெற்ற பெண் ஒருவர், திடீரெனத் தொழுவதை நிறுத்திக்கொள்கிறார். அதன் பிறகு, தொழச் சொல்லி மிரட்டலாகவும் கெஞ்சலாகவும் வந்த கோரிக்கைகளை, அவர் சட்டை செய்யவே இல்லை. முறையாகத் தொழுதுகொண்டிருந்த அவரை அதிலிருந்து விலகச் செய்தவை, அவர் வாசித்த புத்தகங்கள்தான். சுற்றத்தார் அந்தப் புத்தகங்களை `சைத்தான்’ என அழைத்து, அதைத் தூக்கி எறியச் சொல்கிறார்கள். ஆனால், அவர் புத்தகங்களை முன்பைக் காட்டிலும் இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார். அவர் வேறு யாருமல்ல, கவிஞர் சல்மா!

``இயல்பாகவே எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது. வாழ்க்கைச் சூழல்தான் அதை மேலும்

“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா

மெருகேற்றியது. ஏழெட்டு வயதில் கிடைக்கும் காமிக்ஸ்களை, ‘பாலமித்ரா’, ‘அம்புலி மாமா’ போன்றவற்றைத்தான் முதலில் வாசிக்கத் தொடங்கினேன். காலப்போக்கில் தீவிரமான வாசகியானேன். 13 வயதிற்குப் பிறகு பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாது என்பதால், வீட்டில்தான் இருக்க வேண்டும். எனக்கு எப்போது திருமணம் ஆகும் எனத் தெரியாது. வீட்டில் சமைப்பதற்கும் மற்ற வேலைகளுக்கும் ஆட்கள் இருப்பார்கள். அதனால் 24 மணி நேரம் என்பது, எனக்குக் கொடுக்கப்பட்ட பெரிய தண்டனைபோல கடந்தது. அதை எப்படி எளிதாகக் கடத்துவது என்றே அப்போது எனக்குத் தெரியாது. வாசிப்புதான் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. நட்புவட்டமும் பெரிதாக இல்லை. ஏனென்றால், ஒன்பதாம் வகுப்பு வரை உடன் படித்தவர்கள் அனைவரும் இதுபோலவே அவரவர் வீட்டில் இருப்பதால், நட்பை வளர்க்கவும் முடியவில்லை. பேசுவதற்கு ஆள்களே இல்லை. அம்மா, அக்காவுடன் எதையும் பேச முடியவில்லை. புத்தகங்கள் மட்டும்தான் என் ஒரே நட்பு. என்னால் படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தையும் கவலையையும் ஏமாற்றத்தையும் கடக்க, புத்தகங்கள்தான் உதவின.

நூலகம் என்பதே பெருங்கனவாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் 12-வது வயதில் எங்கள் ஊருக்குத் துணை நூலகங்கள் வந்தன. அதுவும் பள்ளிக்குச் செல்லும் வழியில்தான் அமைந்திருந்தது. பள்ளி முடிந்ததும் அங்குதான் செல்வேன். வீட்டுக்குத் தினமும் தாமதமாகச் செல்வதால், வீட்டில் வசவுகள் கிடைக்கும். வாசிப்பு மனநிலையில் அதைப் பொருட்படுத்துவதில்லை நான்.

“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா

தொடக்கத்தில் சின்னச் சின்னப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய நான், பிறகு பெரியார் போன்றோரின் புத்தகங்களை வாசிக்கலானேன். கிடைத்த ரஷ்ய நாவல்கள் அனைத்தையும் வாசித்து முடித்தேன். நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு நாளும் கிழமையும் மாறுமே தவிர, வேறு எதுவும் மாறாது. பெரும் தனிமையும் வெறுமையும் நிறைந்த ஒரு காலகட்டம் அது. உலகம் என்பது என்ன என்பதை எனக்குப் புத்தகங்கள்தான் காட்டின. பதின்பருவம் என்பது எல்லோருக்கும் உற்சாகமான ஒன்று. ஆனால், அதற்கான எந்தக் கூறுகளும் என்னிடம் இருந்ததில்லை. அப்போதுதான் இந்த வாழ்வின் மீது பெரும் கோபமும் விமர்சனமும் எனக்குள் உருவானது. பெரியாரின் புத்தகத்தைப் படிக்கும்போது, பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள் உருவாகின. வாழ்க்கை குறித்தும், இருத்தல் குறித்துமான சிந்தனை மாற்றம் நிகழ்ந்தது.

அதுவரை நான் நம்பியிருந்த விஷயங்களை அந்தப் புத்தகங்கள் `இல்லை’ எனச் சொல்லின. சிக்மண்ட் ஃபிராய்டு, டார்வின், தஸ்தயேவ்ஸ்கியின் புத்தகங்கள், வாழ்க்கை குறித்த புதிய சித்திரங்களை, பார்வைகளைத் தந்தன. புத்தகங்களுக்கும் எனக்குமான உறவில் நான் உருவாகிக்கொண்டிருந்தேன்.

“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மாவீட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் புத்தக வாசிப்பு குறித்து மோசமான அபிப்பிராயங்கள் இருக்கும். மார்க்ஸியம் - லெனினியம், பெரியாரின் நாத்திகம் போன்றவற்றை வாசிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் வீட்டில் உண்டு. ஆனால், எனக்குள் இருந்த தீவிரமான தேடல்களால், இதுபோன்ற கட்டுப்பாடுகளைப் பெரிதாக நான் பொருட்படுத்தவில்லை. இதற்கிடையில் சில படைப்பாளிகளோடு எனக்குக் கடிதப் போக்குவரத்து ஏற்பட்டது. நான் எழுதிய கவிதை, `சுட்டும்விழிச்சுடரி’ல் வெளிவந்தது. எஸ்.வி.ராஜதுரை, வீ.கீதா போன்ற பெரிய ஆளுமைகள், என்னுடைய கவிதைகளைக் கடிதம் வழியே சிலாகித்தனர். அது மிகப் பெரிய உந்துதலைக் கொடுத்தது. என்னுடைய நேரத்தைக் கொல்வதற்காக நான் எழுதியவற்றுக்குப் பாராட்டு கிடைத்தது. தொடர்ந்து படைப்பதற்கு எனக்குப் பெரும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.”

``நூலகத்தில் முதலில் எடுத்து வாசித்த புத்தகம், சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய `குல்சாரி’. ரஷ்ய நிலப்பரப்பை வாழ்க்கையை முன்வைத்த புத்தகம் அது. நானே வாங்கிப் படித்த புத்தகம் என்றால், `அது செவ்வாய்க்கிழமை என்பதை எப்படி மறக்க முடியும்?’ என்ற லத்தீன் அமெரிக்கப் புத்தகம்தான். வெயில் படாமல், அதிக உடல் உழைப்பு இல்லாமல் பழக்கப்பட்டுவிட்டதால், அடிக்கடி எனக்குக் கால்வலி வரும். கிராமத்தில் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், `நோய்’ எனச் சொல்லிக் கல்யாணம் செய்ய யோசிப்பார்கள் என்று, பல்லுக்குக் கம்பி போடுவதாகச் சொல்லி அழைத்துச் செல்வார்கள். விடியற்காலையில் 5 மணிக்கே பர்தா போட்டு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அப்பா முன்னால் போவார். நானும் அம்மாவும் பின்னால் செல்வோம். ஒன்றுபோல் போனால், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடித்துவிடுவார்கள் எனக் கருதி, தனித்தனியாகச் செல்வோம். நான் டாக்டரிடம் `என்னைப் படிக்கவைக்கவில்லை’ என்ற கவலையைச் சொல்ல, டாக்டர் என் அம்மா - அப்பாவிடம் சொல்ல, அப்பாவோ `எனக்கும் ஆசைதான். ஆனால், ஊரில் யாரும் பெண்பிள்ளைகளைப் படிக்கவைக்கவில்லை. முதன்முதலாக நான் படிக்கவைத்தால் என்ன சொல்வார்களோ...’ என்றார். டாக்டர், `இந்தப் பெண்ணின் கால்வலிக்குக் காரணம், வெளியே போக முடியவில்லை என்கிற மன உளைச்சல்தான். அவள் பேசுவதைப் பார்க்கும்போது அவளுக்கு அது பெரிய ஏக்கமாக இருக்கிறதுபோல’ என்று சொன்னார்.

என்னைப் படிக்கவைப்பது சாத்தியம் இல்லை எனக் கருதிய அப்பாவும் அம்மாவும் எனக்குப் பிடித்ததைச் செய்ய விரும்பி, மதுரையில் உள்ள ‘பாரதி புத்தகாலயம்’ என்ற புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. `அது செவ்வாய்க்கிழமை என்பதை எப்படி மறக்க முடியும்?’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் அவற்றோடு ஒரு மார்க்ஸியப் புத்தகம், லெனினின் கட்டுரைத் தொகுப்பு இரண்டையும் வாங்கினேன்.

வீட்டுக்கு வருபவர்கள், என் செல்ஃபில் இருக்கும் பெரியார், லெனின் இருவரின் அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு, `இவர்களின் முகத்தைப் பார்த்தால், தரித்திரம் வந்து சேரும்’ என என்னைத் திட்டிவிட்டுச் செல்வார்கள். ஒருமுறை வெளிநாட்டில் இருக்கும் எனது சின்ன மாமனார் வந்து புத்தகங்களைப் பார்த்தார். என் வீட்டில் இருக்கும் எவருக்கும் மார்க்ஸ், லெனின் பற்றித் தெரியாது. ஆனால், அவருக்குத் தெரியும். `இதையெல்லாம் படித்தால், பெண்மை இல்லாமல் போய்விடும்; உலக வாழ்க்கையின் மீது ஆசை இல்லாமல் போய்விடும்’ எனச் சொன்னார். எனக்கு அது நடந்தது.’’

திருமணத்துக்குப் பிறகு, வாசிப்பு என்பது வேறு மாதிரி மாறியது. அங்கு, இதைவிடப் புத்தக வெறுப்பு அதிகம் இருந்தது. வாசிப்பு என்பது, சிந்தனையை மாற்றக்கூடிய ஒன்று என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. `எந்தப் புத்தகமும் வீட்டுக்குள் வரக் கூடாது’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டனர். நான் கவிதைகள் எழுதுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. என் கணவருக்கும் புத்தக வாசிப்பு பிடிக்கவில்லை. அதனால் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி நான் படிக்க முடியாது.

`டி.வி பாரு இல்ல... வார இதழ்களைப் படி, போதும். இந்த மாதிரிப் புத்தகமெல்லாம் படிக்காதே’ என்று சொன்னார்கள். `படிச்சது தெரிஞ்சா, கிழிச்சு எறிஞ்சிருவேன்’ என்றும் மிரட்டினார்கள். சுந்தர ராமசாமி, எந்தெந்தப் புத்தகங்களை நான் அவசியம் வாசிக்க வேண்டும் எனக் கடிதங்கள் வழியே தெரிவிப்பார். என்னால் நேரடியாக எந்தப் புத்தகமும் வாங்க முடியாது என்பதால்,  என் அம்மாவின் வீட்டு முகவரி கொடுத்து, அவர்கள் அதை வாங்கிவைத்து, பிறகு யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்து கொடுப்பார். ஒளித்துவைத்துத்தான் புத்தகங்களை அப்போது வாசித்து வந்தேன்.

“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா

அப்போதுதான் `சல்மா’ என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டு எழுதத் தொடங்கினேன். அதற்கு முன்னர் வரை சொந்தப் பெயரில்தான் எழுதினேன். புனைப்பெயரில் எழுதும்போது, எனக்குள் மனநெருக்கடி உருவானது. `யாருக்கும் பிடிக்கவில்லை என்பதற்காக, என் பெயரை ஏன் நான் மாற்ற வேண்டும்?’ என்ற கோபம் எனக்குள் எழுந்தது. `எனக்குப் பிடிக்காததை அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் போய் அவர்களை மாற்றச் சொல்கிறேனா? ஆனால், அவர்கள் மட்டும் என்னை எழுத வேண்டாம் எனச் சொல்கிறார்களே!’ என்கிற கோபம் எழுந்தது.

மற்றவர்களுக்காகக் கல்வி, சுதந்திரம், நட்பு எனப் பலவற்றை விட்டுக்கொடுத்து விட்டேன். கடைசியாக நான் வந்து சேர்ந்திருக்கும் இடம் எழுத்து. அதில் மட்டும்தான் நான் நிறைவாக உணர்கிறேன். அதையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம், `வாழ்வதற்கான காரணம்தான் என்ன?’ என்ற கேள்வியை எனக்குள் உருவாக்கியது. தற்கொலை செய்துகொள்ளலாம் எனப் பல நேரம் நினைத்துள்ளேன். எழுத்து என்னை உயிர்ப்போடு வைத்திருந்தது; நம்பிக்கையளித்தது. எழுத்துதான் என் அடையாளம் என முடிவெடுத்தேன்.

இந்தச் சமூகக் கட்டுப்பாட்டை மறுக்கவும் முடியவில்லை; ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. `இந்த வாழ்க்கையிலிருந்து நீ வெளியேறுவது என்பது, அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால், உனக்குப் படிப்பு இல்லை. இங்கிருந்து வெளியேறிவிட்டு, வேறு எங்கு போய் நீ நிற்பாய்? பெண்களுக்கு இந்த உலகம் பாதுகாப்பானதல்ல’ எனச் சொல்லி, `பெயரை மாற்றிக்கொண்டு எழுது’ என வ.கீதா சொன்னார். பல இதழ்களில் என் கவிதைகள் வெளியாகின. கவிதைத் தொகுப்பு வந்த பிறகும்கூட ‘யாருக்கும் எதுவும்’ தெரியாது. என் புகைப்படத்தையோ, முகவரியையோ தர மாட்டேன் எனச் சொல்லிவிட்டேன். என் கவிதைகள் பற்றிய விமர்சனக் கூட்டத்தில்கூட `சல்மா என்ற பெயரில் யாரோ ஆண் எழுதியிருக்கிறார்!’ என்றுதான் அப்போது  நினைத்தார்கள்.’’

“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா

``என் சேகரிப்பில் ஜி.நாகராஜனும் அசோகமித்திரனும் மிக முக்கியமானவர்கள். சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’, பிரபஞ்சனின் சிறுகதைகள், தி.ஜானகிராமனின் `அம்மா வந்தாள்’, `மரப்பசு’ போன்றவை, நான் வாசித்த காலகட்டத்தின் நினைவுகளோடு என்னிடம் இருப்பவை. ஜி.நாகராஜனின் `நாளை மற்றும் ஒரு நாளே’ என் தனிமையான காலகட்டத்தில் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. `ஜே.ஜே சில குறிப்புகள்’ என்னைப் பைத்திய மனநிலைக்கே கொண்டு சென்றது. அப்போது சுந்தர ராமசாமியின் மீது ஒரு பைத்தியமாகவே இருந்தேன். ஆனால், அவர் பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு 20, 25 வயது இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். பிறகு அவரைச் சந்தித்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. (சிரிக்கிறார்) அசோமித்திரனின் `ஒற்றன்’ புத்தகத்தை மாதம் ஒருமுறை வாசிப்பேன். அவரின் புத்தகம் ஏதேனும் ஒன்றை எப்போதும் என் தலைமாட்டில் வைத்திருப்பேன்.

ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சுஜாதா போன்றோரின் கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனநிலைகளை; சிந்தனைகளை என்னுள் தோற்றுவித்தவை. வறுமை, பசி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. பசி என்றால் என்ன என்பதை இவர்களின் கதைகள்தான் எனக்கு முதன்முதலாக உணர்த்தின. இந்த இடத்தில்தான் இலக்கியத்தின், வாசிப்பின் முக்கியத்துவம் புரிந்தது. நம்மால் எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்திட முடியாது; அனுபவிக்க முடியாது. ஆனால் வாசிப்பு, நமக்கு அவற்றையெல்லாம் கொடுக்கிறது. வாசிப்பின் வழியே சக மனிதர்களை நெருங்கி உணர முடிகிறது. வாசிப்பும் ஒரு வாழ்க்கையே.’’

சந்திப்பு  : வரவணை செந்தில்