நாட்டில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு விடுதிகளில் நடைபெறும் பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள் கவலையளிக்கக்கூடியவை என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். மேலும் 20 முதல் 30 சதவிகித பாலியல் குற்றச்செயல்கள், குழந்தைகள் பாதுகாப்பு விடுதிகளில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நாடு தழுவிய அளவிலான பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு பராமரித்து வரும் பாலியல் குற்றவாளிகள் தொடர்பான ஆவணத்தில் இதுவரை நான்கு லட்சத்து 40,000 பேர் இடம்பெற்றுள்ளனர். பாலியல் குற்றவாளிகள் பட்டியலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாலியல் குற்றங்களை உடனடியாகக் கண்டறிந்து, விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவர் பேசுகையில், `நாடு முழுவதும் சுமார் 20 முதல் 30 சதவிகிதம் வரையிலான பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில்தான் நடக்கின்றன. அத்தகைய குற்றங்களைக் கண்காணித்து, குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பீகார் மாநிலம் முஸாபர்பூரில் உள்ள பாதுகாப்பு விடுதியின் காப்பாளர், ஏராளமான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. ஆனால், அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படவில்லை. எனவே, இதுபோன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகளை அனைத்து மாநில டி.ஜி.பி-க்களும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் காவல்நிலையங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது" என்றார்.