
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

பாரியும் கபிலரும் எவ்வியூருக்கு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டது. தொடர்ந்து நான்கு நாள்கள்

நடந்ததால், கபிலரின் கால்கள் துவண்டுபோய் இருந்தன. நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது என்ற எண்ணத்தோடு எவ்வியூருக்குள் நுழைந்தார். `இந்த எண்ணம் வரும்போதெல்லாம், அணங்கன் நினைவுக்கு வந்துவிடுகிறான். இந்த வயதிலும் காட்டெருமை மந்தைக்குள் நுழைய என்ன ஒரு தினவு வேண்டும்! நுழைந்துவிட்டால், எந்தக் கணமும் பல மடங்கு வேகத்தோடு ஓட வேண்டும். அந்த ஓட்டம் என்றைக்கு முடியும் எனச் சொல்ல முடியாது. எப்படி இதுவெல்லாம் அணங்கனால் முடிகிறது?’ என்று எண்ணிக்கொண்டே உள்நுழைந்தார் கபிலர்.
`தேவவாக்கு விலங்கை எடுத்துக்கொண்டு, பறம்பின் அடர்காட்டுக்குள் தொடர்ந்து அத்தனை நாள்கள் எப்படி திரையர்களால் ஓட முடிந்தது?’ என்ற கேள்விக்கான முடிச்சுகள் எல்லாம் தன்போக்கில் அவிழ்ந்துவிட்டன.
பாரி வந்ததை அறிந்து, முடியன் அவர்களை நோக்கி வேகமாக வந்தான். ஏதோ ஒரு செய்தி அவனுக்காகக் காத்திருக்கிறது என்பதைக் கபிலர் உணர்ந்தார். வேட்டுவன் பாறையிலிருந்து நீலன் அனுப்பியுள்ள வீரர்கள் வந்துள்ளதாக அவன் சொன்னான்.
`நீலன் வராமல் ஏன் வீரர்களை அனுப்பியுள்ளான்?’ என்று எண்ணிய கபிலர், ``சரி, நான் போய் ஓய்வெடுக்கிறேன்” என்று சொல்லி விடைபெற முயன்றார்.
``வந்துள்ள செய்தி, உங்களோடு தொடர்புடையது” என்றான் முடியன்.
கபிலர் சற்றே வியப்படைந்தார். ``எனக்கு என்ன செய்தி வந்திருக்கப்போகிறது?!” என்று சொல்லிக்கொண்டிருக்க, வீரர்கள் இருவர் அறைக்குள் வந்தனர்.
பாரியையும் கபிலரையும் வணங்கிவிட்டு, ``உங்களைப் பார்க்க மூவர் வந்துள்ளனர்” என்று கபிலரைப் பார்த்தபடி சொன்னார்கள்.
``என்னைப் பார்க்கவா?!” என்று திகைப்புற்றுக் கேட்டார் கபிலர்.
கபிலர் கேட்டு முடிக்கும் முன் பாரி சொன்னான், ``கபிலரைப் பார்க்க வந்துள்ளவர்களை அழைத்து வந்திருக்கலாமே. ஏன் நிறுத்திவைத்து வந்தீர்கள்?”
வீரர்கள் சொன்னார்கள், ``அவர்களில் ஒருவர் மிக வயதானவர். அவரால் மலையேற முடியாது.”
வியப்பும் குழப்பமுமாக இருந்தது. `யாராக இருக்கும்?’ என்று கபிலர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் வீரர்கள் சொன்னார்கள், `` `எனது பெயரைச் சொன்னால் அவரே இங்கு வந்துவிடுவார்; போய்ச் சொல்லுங்கள்’ என்று எங்களை அனுப்பிவைத்தார்.”
கபிலருக்கு இன்னும் வியப்பு கூடியது. `நாம் இங்கு இருப்பதை அறிந்து இவ்வளவு உரிமையோடு வீரர்களை அனுப்பிவைத்தது யார்?’ என எண்ணிக்கொண்டிருக்கையில் வீரன் சொன்னான், ``அவரின் பெயர் திசைவேழர்.”
பெயர் சொல்லப்பட்ட கணத்தில் கபிலரின் முகத்தில் ஏற்பட்ட வியப்பைப் பார்த்தபடி கேட்டான் பாரி ``யார் இந்தப் பெரியவர்?’’
அகலத் திறந்திருந்த கபிலரின் கண்கள், ஒளியை உமிழ்ந்தன. வியப்பை உதிர்க்க முடியாமல் திணறியது முகம். கைகளை உயர்த்திக் காட்டி ``வானியல் பேராசான்” என்றார்.

சொல்லை உச்சரித்த விதத்திலேயே அவரின்பாலுள்ள வாஞ்சையும் மதிப்பும் வெளிப்பட்டன. அதைப் பார்த்து மகிழ்ந்தபடி பாரி சொன்னான், ``அவரை, சிவிகையில் வைத்துச் சுமந்து வரச் சொல்லிவிடலாமா?”
``வேண்டாம் பாரி. அவர் மிக வயதானவர். என் பொருட்டு அவருக்குச் சிறு தொந்தரவுகூட வந்துவிடக் கூடாது. நானே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்.”
``சரி” என்று ஏற்றுக்கொண்ட பாரி, ``தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்திருக்கிறீர்கள், மிகவும் களைப்பாக இருக்கும். ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு புறப்படுங்கள்.”
``வந்துள்ளது பேராசான். எனது மனம் எப்படி ஓய்வெடுக்கும் பாரி? தாயைத் தேடும் கன்று எத்தனை மலைகளைக் கடந்தாலும் துவண்டுவிடவா செய்யும்?”
அவரது உணர்ச்சிக்குள் இருக்கும் உண்மையைப் பாரியால் உணர முடிந்தது. `தேக்கன் இருந்தால் உடன் அனுப்பிவைக்கலாம். அவனோ காலம்பனோடு இருக்கிறான்’ என்று சிந்தித்தபடியே உதிரனையே அழைத்துக்கொண்டு போகச் சொன்னான். ``சரி’’ என்று ஏற்றுக்கொண்டு விடைபெற்றுக் குடிலுக்குப் போனார் கபிலர்.

மறுநாள் காலை எழுந்ததும், ``கபிலர் புறப்பட்டுவிட்டாரா?” எனப் பாரி கேட்டான்.
``அவர் இந்நேரம் ஆதி மலையில் பாதித் தொலைவைக் கடந்திருப்பார்’’ என்றனர் வீரர்கள்.
கபிலர் வேட்டுவன் பாறைக்கு வந்தபோது திசைவேழர் வந்து ஐந்து நாள்களுக்குமேல் ஆகியிருந்தது. அவரைக் காணும் பொழுதைக் கனவுபோலச் சுமந்து வந்தார் கபிலர். `எத்தனை ஆண்டுகளாகிவிட்டன? விரிவடங்கா வானத்தின் விந்தைகளைப் பேசி முடியாத நாள்கள்தான் எத்தனை... எத்தனை!! காலம் கரைகிறதா... நகர்கிறதா?’ என முடிவுறாத பேச்சுகளை எண்ணியபடி திசைவேழர் இருந்த குடில் அருகே வந்தார் கபிலர்.
முதன்முறையாகக் கபிலர், வேட்டுவன் பாறைக்கு வந்த அன்று, அவரைத் தங்கவைத்திருந்த குடில் அது. விரிந்து நீண்ட திறளி மரத்தாலான பலகையில் உட்கார்ந்திருந்தார் திசைவேழர். கபிலர் வருவது தொலைவிலேயே தெரிந்தது. அங்கு இருந்தவர்கள் எழுந்து அவரை வரவேற்றனர். அளவுகடந்த மகிழ்வோடு வந்த கபிலர், திசைவேழரை வணங்கி மகிழ்ந்தார். பெருங்கவியை ஆரத்தழுவிக்கொண்டார் திசைவேழர். கண்களில் கசிந்தது பேரன்பு.
கபிலர் வந்தது அறிந்து வேட்டூர் பழையனும் நீலனும் குடிலுக்கு வந்தனர். வந்து ஐந்து நாள்களாகிவிட்டதால், இவர்கள் அனைவரையும் திசைவேழர் அறிவார். ஆனாலும் பெயர் சொல்லிப் புகழ்ந்தார் கபிலர். நீலனை `மகன்போல்’ எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார். பேசிக்கொண்டிருக்கும்போது பெண் ஒருத்தி சிறு கூடையில் நாவற்பழம் கொண்டுவந்து வைத்தாள். யார் எனப் பார்த்தார் கபிலர். தனக்கு மகர வாழையில் காரத்துவையல் கொடுத்தவள். கபிலரை வணங்கியபடி அதே சிரிப்போடு அந்த இடம் விட்டு நகர்ந்தாள். இப்போது கைக்குழந்தையோடு இருந்தாள்.
திசைவேழர், கூடையில் வைக்கப்பட்ட நாவல் ஒன்றை உண்பதற்காக எடுத்தார். அதைக் கவனித்த கபிலர், ``வேண்டாம். அதை வைத்துவிடுங்கள்’’ எனச் சொல்லி, இன்னொரு பழத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தார்.
``உண்பதற்கேற்ப கனிந்துதான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறீர்?” எனக் கேட்டார் திசைவேழர்.
கபிலர் சொன்னார், ``அது குழிநாவல்; கார்ப்புச் சுவை அதிகமாக இருக்கும். அதன் பிறகு எந்த நாவலைத் தின்றாலும் கார்ப்புச் சுவை போகாது. எனவே, அதை எடுத்தவுடன் உண்ணக் கூடாது. இதோ சிறுநாவல். இதிலிருந்து தொடங்கலாம். இதற்கடுத்து உண்ணவேண்டியது...” என்று சொல்லி, கூடையைக் கிளறியபடியே சற்றே பெருத்த வெண்ணாவலை எடுத்தார். திசைவேழர் வியப்போடு பார்த்தார்.
கபிலர் ஒவ்வொரு நாவலாக எடுத்து திசைவேழருக்குக் கொடுத்துக்கொண்டே அதன் பெயர், தன்மை, சுவைநுட்பம் என, பழத்தின் சிறப்புகளைக் கூறி மகிழ்ந்தார். கூடையில் இருந்த அனைத்துப் பழங்களைப் பற்றியும் அவரால் விளக்க முடிந்தது. அருகில் இருந்த வேட்டூர் பழையனும் நீலனும் வியப்பேறிய விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.
பழத்தை உண்டபடி நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். ``சிறிது நேரம் நடந்துகொண்டே பேசுவோம்’’ எனச் சொல்லிப் புறப்பட்டனர். வலக்கையை ஊன்றுகோலில் அழுத்தி, இடக்கையைத் தோதாகப் பிடித்து அழுத்தி எழுந்தார் திசைவேழர். வலதுகாலை மடக்கி நீட்ட முடியாத நிலையைப் பற்றிப் பேசியபடியே இருவரும் சிறிது தொலைவு நடந்தனர். அவர்கள் தனியாகப் பேச விரும்புவது அனைவருக்கும் புரிந்தது. எனவே, மற்றவர்கள் குடிலிலேயே இருந்தனர்.

கோல் ஊன்றி நடந்தபடியே திசைவேழர் கேட்டார், ``பறம்பில் வாழ்வனுபவம் எப்படி இருக்கிறது?”
``இதுதான் வாழ்வு எனத் தோன்றுகிறது.”
முதல் சொல்லே முழுமைகொண்டிருந்தது. சற்றே திகைப்புற்றார் திசைவேழர். கபிலர் உச்சரிக்கும் சொற்களின் வலிமையை நன்கு உணர்ந்தவர் அவர்.
கபிலர் தொடர்ந்தார், ``இயற்கையைப் பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வு முழுவதும் நான் கற்றுக்கொண்டவற்றை வந்த முதல் நாளே என்னை எடைபோட்டுப் பார்க்கவைத்தவர்கள் பறம்பு மக்கள்.’’
கபிலர் உணர்ச்சி மேலிட்டவராக இருக்கிறார் என திசைவேழருக்குத் தோன்றியது.
``எண்ணற்ற செடிகொடிகளுக்கும் எண்ணிலடங்காத பூக்களுக்கும் இவர்கள் பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளனர். இத்தனை வகையான பூக்களையும் அதன் பெயர்களையும் நாம் எங்கேயும் காண முடியாது” என்று சொன்ன கபிலர், மிக மகிழ்வோடு சொன்னார், ``கடந்த வாரம், நாங்கள் அடர்காட்டுக்குள் மிக முக்கியமான வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது என்னுடன் வந்த பாரி, ஓர் இடத்தில் அப்படியே நின்றான். என்ன காரணம் எனப் புரியாமல் உடன் வந்த அனைவரும் நின்றோம். பாரி எதைக் கவனிக்கிறான் என்பதை, அனைவரின் கண்களும் உற்றுநோக்கின.
பாறையின் மீது வேர்போல தேன் நிறத்தில் படர்ந்து இருந்த சிறு கொடியில் மலர்ந்திருந்தது பூ. அதன் இதழ்கள், காற்றடிக்கும்போது சாய்ந்து எரியும் சுடர்போல இருந்தது. அதைப் பார்த்தபடி பாரி சொன்னான், ``இந்த வகைப் பூவை, இதுவரை நான் பார்த்ததில்லை.’’
``ஆம். இது புதுவகையான செடியாக இருக்கிறது’’ என்றனர் மற்றவர்கள்.
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாரி, ``இந்தப் பூவுக்கு நீங்களே ஒரு பெயர் சூட்டுங்கள்’’ என்றான்.
`பூவுக்கு எப்படிப் பெயர் சூட்டுவது... நிறம்கொண்டா, மணம்கொண்டா... அதன் தனிச்சிறப்பு அறிந்தா?’ என்று எண்ணங்கள் ஓடியபடியே இருந்தன.
கபிலர் உற்சாகத்தோடு பேசுவதைக் கேட்டபடி நடந்துகொண்டிருந்த திசைவேழர், ``என்னதான் பெயர் சூட்டினீர்?” என்றார்.
``அந்தப் பூவைப் பார்த்த கணமே பாரியின் எண்ணத்தில் பெயர் தோன்றியிருக்கும். அந்தப் பெயர், பூவின் வேரிலிருந்து விளைந்ததாக இருக்கும். அதேபோன்ற தோற்றம்கொண்ட பூக்களுக்கு என்ன பெயர் உள்ளது என அனைத்தையும் ஒப்பிட்டு, பெயரைச் சிந்தித்திருப்பான் பாரி. எனவே, நான் உடனடியாக ஒரு பெயரைச் சொல்லிவிட முடியாது அல்லவா? `சிந்தித்துச் சொல்கிறேன்!’ என்று கூறியுள்ளேன்” என்றார்.
``நீங்கள் பெயர்வைக்கும் வரை அது பெயரற்ற `பூ’தானா?”
திசைவேழரின் சொல்லுக்குள் சற்றே எள்ளல் இருப்பதுபோல் கபிலருக்குத் தோன்றியது.
திசைவேழர் தொடர்ந்தார், ``அந்தச் செடி வேறு இடத்திலும் இருக்குமல்லவா? அங்கு அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் அல்லவா?”
``இருக்கலாம். வேறு எங்கேயாவது அந்தச் செடி இருக்கலாம். அதற்கு மனிதர்கள் பெயரிட்டிருக்கலாம்” என்றார் கபிலர்.
தலையை நிமிர்த்தாமலேயே மெல்லிய குரலில் திசைவேழர் கேட்டார், ``அப்படியென்றால், அறியாதவர்களுக்கு நடுவில் இருப்பதை அறிவென்று ஏற்க முடியுமா?”
திசைவேழர் சொல் அதிர்ச்சியைக் கொடுத்தது. ``அறியாதவர்கள் என்று, பறம்பு மக்களையா சொல்கிறார்?’’ நம்ப முடியாமல் கேட்டார், ``எப்படி இப்படியொரு சொல்லைச் சொன்னீர்கள்?”
``நீங்கள் ஒன்றை அறிய நினைக்கும்போது உங்களின் அறியாமையை மற்றவர்கள் அறிந்துகொள்ளுதல் இயற்கைதானே?”
திசைவேழரின் சொற்கேட்டுத் திகைத்து நின்றார் கபிலர். அவருக்குள் இந்தச் சொல் உருத்திரண்டு வர, பூ மட்டும் காரணமல்ல என்பது புரியத் தொடங்கியது.

திசைவேழர் சொன்னார், ``இயற்கை பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே, அது சரிதானா?”
பதற்றம், உடலெங்கும் பரவியதை உணர முடிந்தது. பறம்பே தனது உடலாக மாறிவிட்டதைப்போல் இருந்தது. அதன்மீது சொல்கொண்டு எறிவதைக்கூட உடல் ஏற்க மறுக்கிறது, ஆனாலும் தன்னை நிதானப்படுத்தியபடி கபிலர் கேட்டார், ``சரியில்லை என்று எப்படித் தோன்றியது உங்களுக்கு?’’
``தனது உள்ளங்கையில் இருக்கும் ஒன்றின் ஆற்றலையே மதிப்பிட முடியாதவர்களாக இவர்கள் இருப்பதால்.”
``எதைச் சொல்கிறீர்கள்?”
``தேவாங்கு விலங்கைச் சொல்கிறேன்.”
புதுப் பெயராக இருக்கிறதே என நினைத்த கபிலர், தேவவாக்கு விலங்கைத்தான் இப்படிச் சொல்கிறார் எனப் புரிந்துகொண்டார். ``அதன் ஆற்றலைப் பறம்பு மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றா சொல்கிறீர்கள்?”
``ஆம். அதன் ஆற்றலை இப்போது வரை பாரியும் பறம்பு மக்களும் புரிந்துகொள்ளவில்லை.”
கபிலருக்குள் விடை தெரியாமல் உருண்டுகொண்டிருந்த கேள்வி, இப்போது திசைவேழரின் சொல் முனையில் வந்து நின்றது. புருவம் உயர்த்தியபடி திசைவேழரைப் பார்த்து ``என்ன அதன் ஆற்றல்?”
``அது கடலை வெல்லும் ஆற்றல்கொண்ட உயிரினம்.”
கபிலர் அதிர்ந்து நின்றார். அவரின் முகக்குறிப்பு அறிந்து திசைவேழர் தேவாங்கின் சிறப்பைப் பற்றிப் பேசத் தொடங்கினார். எப்போது உட்கார்ந்தாலும் வடதிசை நோக்கியே உட்காரும் அதன் ஆற்றலை, மெய்சிலிர்த்தபடி விளக்கினார். ``பொதிகை மலையில் இதைப் போன்ற உடல் அமைப்பைக்கொண்ட விலங்கு உண்டு. ஆனால், அதற்கு இத்தகைய ஆற்றல் இல்லை. இது ஒருமரத்து விலங்கு. நீண்ட நெடுங்காலம் குறிப்பிட்டதொரு மரத்திலே வாழக்கூடியதால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் இயற்கையின் அதிசிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது” என்றார்.
கபிலர் மெய்மறந்து கேட்டார். இந்த விலங்குக்காகப் பாண்டியன் ஏன் இவ்வளவு முயன்றான் என்ற விடையின்றித் தத்தளித்த கேள்விக்கு, விடை தெரிந்தது. நூற்றாண்டுகளாகத் தொடரும் யவன வணிகத்துக்கு இதுபோன்ற ஒரு விலங்கு எவ்வளவு முக்கியமான பங்காற்றும் என்பதை, கபிலரால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிந்தது. பாண்டியனின் பெருமுயற்சிக்குப் பின்னிருந்த உண்மை வெளிவந்தது.
நடையை நிறுத்தி அருகில் இருந்த சிறு பாறையில் சாய்ந்து நின்றார் கபிலர். கோல் ஊன்றியபடி நின்றுகொண்டிருந்த திசைவேழர் சொன்னார், ``கடலையும் வானையும் இணைக்கும் பேராற்றல்கொண்ட உயிரினமாக இது இருக்கிறது. இதைப் பெற வேறு வழியே இன்றிதான் திரையர்களை அனுப்பிவைத்தார் குலசேகரபாண்டியன். நீங்கள் பறம்பில் இருப்பது அப்போது தெரிந்திருந்தால் உங்கள் மூலமே முயன்றிருப்பார் பேரரசர்.”
கபிலர் அசைவின்றி உட்கார்ந்திருந்தார். குலசேகரபாண்டியனின் முயற்சி தொடர்வதை அவரால் உணர முடிந்தது.
திசைவேழர் சொன்னார், ``அந்த அரிய உயிரினத்தால் பறம்புக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை. அதன் ஆற்றல் வெளிப்படப்போவது கடலில்தான். எனவே, அதைக் கொடுத்து உதவ, பாரிக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.’’
கபிலரின் அமைதி நீடித்தது.
சிறிது நேரத்துக்குப் பிறகு திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”
``பாரி எப்போதும் வியப்புக்குரிய தோழன்தான். ஆனால், இப்போது அந்த வியப்பு மேலும் அதிகரிக்கிறது.”
கபிலரின் சொல்லுக்குப் பொருள் புரியவில்லை. கண்களை உருட்டியபடி பார்த்தார் திசைவேழர்.
கபிலர் சொன்னார், `` `தேவவாக்கு விலங்கை இவ்வளவு முயன்று எடுத்துச் செல்லவேண்டிய தேவை என்ன?’ என்று பலமுறை நான் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், இந்தக் கேள்விக்கு விடையறிய பாரி ஒருபோதும் முயன்றதே இல்லை. எனக்கு அது பெருவியப்பைக் கொடுத்தது. வற்புறுத்திக் காரணம் கேட்டால் சொல்வான், `வேந்தர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களின் அதிகார நலனுக்கானது; மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று. மிக வேகமாக அவன் முடிவுக்கு வந்துவிடுகிறானோ என அப்போது தோன்றியது. ஆனால், இப்போது தெரிகிறது, அவனுடைய சொற்கள் எவ்வளவு ஆழமானவை என்று.”
பாறையை விட்டு எழுந்து, திசைவேழரைப் பார்த்தபடி கபிலர் மேலும் சொன்னார், ``இயற்கையைப் பற்றிய பேரறிவு மட்டுமல்ல, மனிதர்களைப் பற்றிய பேரறிவும் சேகரிக்கப்பட்டுள்ள இடமாக `பறம்பு’ இருக்கிறது.”
தனது சொல்லைத் தனக்கு எதிரானதாக்கிக்கொண்டிருக்கிறார் கபிலர் என்பது திசைவேழருக்குப் புரிந்தது. இருவரும் சிறிது நேரம் பேச்சின்றி நின்றனர்.
நேர்முகம் பார்ப்பதைத் தவிர்க்க எழுந்து நடந்தபடி திசைவேழர் சொன்னார், ``ஆற்றலை அறிவதும் பயன்படுத்துவதும்தான் மனிதனை வெல்லற்கரியவனாக மாற்றியுள்ளன.”
``மனிதன் வெல்லற்கரியவனாக மாறவேண்டியது யாருடைய தேவை?” என்றார் கபிலர்.
சற்றும் இடைவெளியின்றி திசைவேழர் சொன்னார், ``இயற்கையின் தேவை.”

இளக்காரமானதொரு சிரிப்போடு கபிலர் சொன்னார், ``இல்லை. ஆசைக்கு அடிமைப்பட்ட கணத்தில் மனிதன் எடுத்துக்கொண்ட உறுதி அது.”
``அது ஆசையல்ல, இயல்பு. இயற்கையின் தன்மை அதுதான். ஆற்றல்கொண்டதை மட்டுமே அது அரவணைத்துக்கொள்ளும். எனவே, மனிதன் ஆற்றலைப் பெருக்கவே வாழ்வை அமைத்துக்கொள்கிறான்.”
``அது, மனிதன் இயற்கைக்குக் கொடுத்துள்ள விளக்கம்.”
``தேவாங்கு விலங்கு கடலிலே இருக்கும்போது கிடைக்கும் பயன் எல்லையற்றது. அதன் ஆற்றல் துலங்குமிடம் அதுதான். அந்த இடத்திலே அதைப் பயன்படுத்துதல் அனைவருக்கும் நன்மை செய்வதுதானே?”
``இதைப் பாரியிடம் கேட்டால், என்ன சொல்வான் தெரியுமா?”
``என்ன சொல்வான்?”
`` `அதைப் பயன்படுத்த மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்பான்.”
திசைவேழரின் நடையின் வேகம் கூடியது. ``இந்தக் கேள்வியை எப்போதோ கடந்து வந்துவிட்டனர் நம் முன்னோர்கள். மலைக்காடுகளில் மட்டுமே விளைந்த தானியக்கதிரின் விதைகளைச் சேகரித்து நதிக்கரையில் நட்டுவைத்தபோதே இதைப் போன்ற கேள்விகளெல்லாம் இறந்துவிட்டன. பயனளிக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் விதி” என்று கூறிய திசைவேழர், சற்றே சினத்தோடு குரல் உயர்த்திச் சொன்னார், ``நீங்கள் எழுப்புவது இயற்கையின் மீதான உரிமை பற்றிய கேள்வியல்ல; இயற்கையின் இயங்கு விசையைப் புரிந்துகொள்ளாத அறியாமையிலிருந்து எழும் கேள்வி.”
திசைவேழரின் சினத்தை சற்றே எள்ளலோடு எதிர்கொண்ட கபிலர் கூறினார் ``நீங்கள்தான் முதலிலேயே சொல்லிவிட்டீர்களே, `அறிவுதான் அறியாமையின் அடையாளம்’ என்று.”
சினம் மேலேறாமல் கட்டுப்படுத்த முயன்றார் திசைவேழர். கபிலரை இணங்கவைப்பதுதான் முக்கியமானது. அந்தச் செயலை வெற்றிகரமாகச் செய்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி அவரை கருத்துகள்மூலம் வெல்வது மட்டும்தான். எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடியபடியிருக்க திசைவேழர் சொன்னார், ``வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்துகொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு.”
சொற்களின் வலிமை அறிந்த இருவர், எதிரெதிர் திசையிலிருந்து அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தேவாங்கில் தொடங்கி அதைத் தர மறுக்கும் பாரியை நோக்கி உருண்டன சொற்கள். அதை எதிர்கொள்ள, கபிலருக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால், இப்படியொரு பணிக்கு திசைவேழர் எப்படி இணங்கினார் என்பதே அவரின் சிந்தனையாக இருந்தது.
``ஒரு தவளை இடும் முட்டையிலிருந்து பல்லாயிரம் தலைப்பிரட்டைகள் உருவாகின்றன. அவை எல்லாம் உயிர்வாழுமேயானால், இந்தப் பூமியில் தவளையைத் தவிர வேறு உயிரினமே இருக்காது. ஒரேயொரு கொக்கு, நாள் ஒன்றுக்கு எண்ணாயிரம் தலைப்பிரட்டைகளை விழுங்கி வாழ்கிறது. இந்த அழிவுகளின் மூலம்தான் இயற்கை சமநிலையைப் பேணுகிறது.”
திசைவேழரின் சொற்களைக் கேட்டபடி கபிலர் அமைதியாக நடந்தார். அழிவுகளின் நியாயத்தைப் பேசத் தொடங்கி, அடுத்து அழித்தலின் அவசியத்தில் வந்து பேச்சு முடியும். திசைவேழர் எதை நோக்கி வருகிறார் என்பதை, கபிலரால் கணிக்க முடிந்தது.
``வலதுகையால் ஊன்றுகோலை இறுகப்பிடித்து இடதுகையால் அழுத்திக்கொடுத்துதான் உங்களால் எழுந்திருக்க முடிந்தது. இவ்வளவு தளர்ந்த நிலையிலும் நெடுந்தொலைவு பயணித்து என்னைக் காண வந்துள்ளீர்கள் எனப் பெருமகிழ்வடைந்தேன். ஆனால், உங்களின் நோக்கம் எனது மகிழ்வை உதிரச்செய்துவிட்டது” என்று சொன்ன கபிலர், சற்றே தயக்கத்தோடு அதேசமயம் உறுதியான குரலில் கேட்டார், ``உங்களுக்கு உடன்பாடற்ற செயலை ஒருபோதும் நீங்கள் செய்ய மாட்டீர்கள். அப்படியிருக்க, எதன் பொருட்டு இந்தச் செயலில் உங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது?”
திசைவேழர் சொன்னார், ``சான்றோர் போற்றும் பெருங்கவி பறம்பில் உள்ளான் என்ற பெருமகிழ்வுடனே இங்கு வந்தேன். என் கால்கள் இதனினும் தளர்ந்துபோயிருப்பினும் நான் இங்கு வந்திருப்பேன் அல்லது உன்னால் மலையிலிருந்து இறங்கி வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பினும் நான் மலையேறி அங்கு வந்திருப்பேன். ஏனென்றால், வாழ்வு முழுவதும் நான் பயணித்த பாதையில் இப்படியோர் ஆற்றல்கொண்ட உயிரினத்தைக் கண்டதில்லை.”
திசைவேழரின் குரலில் உணர்ச்சி மேலேறிக் கொண்டிருந்தது. ``எனது இளம்பருவத்தில் நாடியைத் தூக்கி அண்ணாந்து வானத்தை உற்றுப்பார்க்கவைத்தார் என் தந்தை. அன்றிலிருந்து இன்று வரை வானக்கோடுகளின் ஊடேதான் நான் வளைந்தும் நெளிந்தும் போய்க் கொண்டிருக்கிறேன். ஒளி அண்டங்களின் மடிப்புகளுக்குள் பேதலித்து நின்ற காலங்கள் எத்தனையோ! முன்னோருக்கு முன்னோர் என எத்தனை தலைமுறைகளாக வானியலின் வியப்புகளுக்குள் மூழ்கிக்கிடக்கிறோம். கதிரவனும் விண்மீன்களும் இன்றி மூடப்பட்ட அறைக்குள் நம்மால் திசை அறிய முடியும் என்று ஒருவன் சொன்னால், அவனை `மூடன்’ என்று சொல்லியிருப்பேன். ஆனால், தேவாங்கு என்ற இந்தச் சின்னஞ்சிறு உயிரினம் நம் அறியாமையைத் தகர்த்துவிட்டது. எல்லையில்லாத அகண்ட வானத்தைத் துளையிட்டுப் பார்ப்பதைப்போல இருக்கிறது, அது வடதிசை நோக்கி உட்கார்ந்திருப்பது.
இனி நம் பாய்மரங்களுக்கு, கடலும் காற்றும் பொருட்டல்ல. நடந்துகொண்டிருக்கும் தேவாங்கு உட்காரும் கணத்தில் திசைகள் தாமே வந்து மீகானின் சொல் கேட்க உள்ளன. இந்த ஆற்றல், வேந்தர்களுக்கு மட்டுமல்ல... மனிதர்கள் அத்தனை பேருக்கும் பயனளிக்கப்போகும் ஒன்று. இதை நாம் தவறவிட்டுவிடக் கூடாது. இந்த அறிவின் அவசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும். மலைமக்கள், வாழ்வின் இயக்கத்தைப் பிடித்து அடுத்த கட்டத்துக்கு நகர முடியாத மந்தநிலைகொண்டவர்கள். நீதான் பாரியிடம் இதை எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்.”

நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்தபடி மறுமொழியின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.
வேகம் குறையாமல் திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”
``நீங்கள் சொல்வது எல்லாமே எனக்குப் புரிகிறது. ஆனால், நான் சொல்வது மட்டும் உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் தேவாங்கினால் ஏற்படும் பயனைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது தேவாங்குக்கான பயன் அல்ல என்பது உங்களுக்குப் புரியவில்லை. உங்களின் பயனுக்காக அதைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லாததைப்போல, அனுமதி கொடுக்கும் உரிமை பாரிக்கும் இல்லை. இழக்கக்கூடிய வாழ்விடத்தில் எந்த உயிரையும் இயற்கை உருவாக்கவில்லை. எனவே, தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணிவேரை அறுத்துக்கொள்வதற்கு நிகர். பயன்பாட்டுக் கணக்குகளும் பண்டமாற்றுக் கணக்குகளும் எல்லாவற்றுக்கும் எப்படிப் பொருந்தும்? நாடியைத் தூக்கி வானத்தைப் பார்த்தபடி உங்கள் தந்தை விதைத்த கனவுக்கு விலை சொல்ல முடியுமா உங்களால்?”
கபிலரின் குரல் திடமாக ஒலித்தது. சொற்களைச் செங்குத்தாகக் கீழ்நோக்கித் தள்ள புலவனுக்குத் தெரியும். ஆசானாக மதிக்கும் ஒருவரின் மீது அந்தச் செயலைச் செய்யக் கூடாது என நினைத்தார். ஆனால், எண்ணங்களை மீறிச் சொற்கள் உருண்டன.
``தேவாங்கு மட்டுமல்ல, பாரியும் அப்படித்தான். என்ன விலை கொடுத்தாலும் சினம்கொண்டாலும் வீழ்ந்து பணிந்தாலும் திசை மாற மாட்டான்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...