மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு! - 06

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 6

ம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் முழுமையாக நுகர்வோரைச் சென்றடைவதில்லை. அறுவடைக்குப்பின் பல காரணங்களால் ஏராளமான விளைபொருள்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால், விவசாயி களுக்கு வருவாய் இழப்பும்  நாட்டில் உணவுப் பொருள்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது என்கிறது ஓர் ஆய்வு. விளைபொருள்களைப் பதப்படுத்தி நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்துவதன் மூலமும், மதிப்புக் கூட்டுதல் மூலமும் இந்த இழப்புகளைத் தடுக்கலாம். இதன் மூலமாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுவதோடு, உணவுப் பொருள் பற்றாக்குறையும் எளிதாக நீங்கும்.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு! - 06

விளைபொருளைப் பதப்படுத்தும் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் பரவலாக விவசாயிகளாலும், தொழில்முனைவோர் களாலும் செய்யப்பட்டு வருகிறது. மதிப்புக் கூட்டலுக்குப் பெரிய முதலீடுகள்  தேவையில்லை. சிறிய அளவு பணவசதி இருந்தாலே போதும்.

உயர்வு தந்த மதிப்புக் கூட்டல்

வெறும் 10 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த விவசாயி அவர். விவசாயம் மட்டுமே அவரது தொழிலாக இருந்தது; இப்போதும் இருக்கிறது. வெறும் 10 ஏக்கர் நிலத்தில் கிடைத்த வருமானத்தில் 140 ஏக்கர் நிலம் வாங்கி, அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அதை மட்டுமே மூலதனமாக வைத்துக் கொண்டு இரண்டு கார், டிராக்டர், நர்சரி எனப் பட்டையைக் கிளப்பி வருகிறார். இதற்கெல்லாம் காரணம், இவர் நிலத்தில் விளையும் விவசாயப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்யாமல் மதிப்புக் கூட்டி விற்பனை செய்ததுதான்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் ராஜேந்திரன். அங்கே இருந்த 10 ஏக்கர் நிலத்தின் மூலம் கிடைத்த  விவசாய வருவாயில், திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் அருகே 140 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். மதிப்புக் கூட்டலில் சம்பாதித்துவரும் விவசாயி மற்றும் தொழில்முனைவோரான ராஜேந்திரனைச் சந்தித்தோம்.
 
கைகொடுத்த மாற்று வழி

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு விவரம் தெரிந்தது முதல் என் தொழில் விவசாயம்தான். எனக்கு மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு நெல், வாழை எனப் பல பயிர்களைப் பயிரிட்டு வந்தேன். அதனால் போதிய வருமானம் கிடைத்தது. அதற்குப்பின், 10 ஏக்கரில் நெல்லிக்காய் பயிரிட்டேன். நெல்லியை அறுவடை செய்து ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி சந்தைகளுக்கு கொண்டு செல்வேன். நெல்லிக்காய் கிலோ 30 ரூபாய், 20 ரூபாய், 10 ரூபாய் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்குப் போகும். நிலையான விலை கிடையாது. சில நேரங்களில் நெல்லிக்காயைக் கேட்கக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். அதனால், பாலக்காட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். பாலக்காட்டில் எவ்வளவு விலை போகிறதோ, அதைக் கொடுப்பார்கள். அதனால் நமது நெல்லிக்கு வேறு என்ன மாதிரியான வழியில் விலையை நிர்ணயிப்பது என யோசித்தேன். அதற்கு நான் தேர்ந்தெடுத்த வழி, மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பம். அதுதான் இப்போது நான் இருக்கும் நல்ல நிலைக்குக் காரணம்” என்றவர் தொடர்ந்தார்.

நிலையான விலை

“மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பொருளை வேறு வடிவத்திற்கு மாற்றி அதன் உண்மைத்தன்மை மாறாமல் சந்தைப்படுத்தலாம். இதனால், கிலோவுக்கு விலை கிடைத்த நிலை மாறி, நமது பொருளுக்கு நிலையான விலை கிடைக்கும். நமக்கு ஒரு விவசாயியாகவும், தொழில்முனைவோராகவும் சமூகத்தில் ஒரு அந்தஸ்தும் கிடைக்கும்.

இந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அது, நம் வியாபாரத்தின் எல்லையை விரிவுபடுத்த உதவும். ஒரு கிலோ நெல்லிக்காயை 20 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 3.5 கிலோவுக்கு 70 ரூபாய் கிடைக்கும். அந்த 3.5  கிலோவை ஒரு லிட்டர் நெல்லிக்காய் சாறாகக் கொடுத்தால் அதன் விலை 220 ரூபாய். இதுதான் மதிப்புக் கூட்டல் வியாபாரத்தின் லாபம். இதைப் புரிந்துகொண்டால் போதும்.

ஏற்றுமதியாளராக உயர்வு

புதிய தொழில்முனைவோர், விவசாயியிடமிருந்து கிலோ 70 ரூபாய்க்கு நெல்லிக்காயை வாங்கி மதிப்புக் கூட்டல் செய்து அதிக விலை வைத்து விற்பனை செய்வார். ஆனால், இதை ஒரு விவசாயி செய்ய நேரிடும்போது அதிகமான லாபம் வைத்து விற்பனை செய்யத் தேவையில்லை. இப்போது நான் வைத்திருக்கும் 140 ஏக்கர் நிலம் முழுக்க இயற்கை விவசாயம்தான். 1995 முதல் மதிப்புக் கூட்டல் தொழில் செய்து வருகிறேன். இப்போது எனக்கு மதிப்புக் கூட்டலில் 22 வது வருடம். இந்தத் தொழிலில் இறங்குவதற்குமுன்னரே அதைப் பற்றிய அனுபவத்தைத் தேடிக் கற்றுக்கொண்டேன். தொழில் ஆரம்பித்த காலகட்டத்தில் நன்றாகப் போகவில்லை. ‘புதிதாக ஆரம்பித்த தொழில்தானே... நிச்சயமாக வருமானம் கிடைக்கும்’ எனக் கடைசி வரை நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அந்த நம்பிக்கைதான் இன்றைக்கு அமெரிக்கா, மலேசியா, கத்தார், சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நெல்லிச்சாறை ஏற்றுமதி செய்ய வைத்திருக்கிறது. இந்த மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பம் ஏற்றுமதியாளராகவும் என்னை உயர்த்தியிருக்கிறது.

தொழில் விரிவாக்கம்

ஆரம்பத்தில் சந்தை வாய்ப்பு கடினமாகவே இருந்தது. விவசாய நிகழ்ச்சிகள், சந்தைகள், கண்காட்சிகள் எனப் பல நிகழ்வுகளுக்கும் சென்று என் மதிப்புக் கூட்டல் பொருள்களைச் சந்தைப்படுத்தினோம். மதிப்புக் கூட்டலில் நெல்லிச்சாறை மட்டும் தயாரித்து வந்தேன். பின்னர் நெல்லியில் கற்றாழை கலந்து மதிப்புக் கூட்டுதல், நெல்லியில் திரிபலாச்சாறு தயாரித்தல் எனப் பல கட்டமாக விரிவுபடுத்தினேன்.

தரம் முக்கியம்

நெல்லி பொதுவாகவே மருத்துவக் குணம் மிகுந்தது என்பதால் விற்பனைக்குச் சந்தை பெரிதாகவே உதவியது. மதிப்புக் கூட்டல் மட்டுமல்லாமல், மார்கெட்டிங்கும் தெரிந்திருப்பது அவசியம். இதுவரை எனக்குத் தெரிந்த அளவில் மார்கெட்டிங் செய்து வந்தேன். இதுதவிர, என் பிள்ளைகளை உணவுப்பதப்படுத்துதல் தொழில்நுட்பம் மற்றும் மார்கெட்டிங் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். எதிர்கால சந்தைப்படுத்துதலுக்குப் படிப்பும், துறை சார்ந்த அனுபவமும் மிக அவசியம்.  மதிப்புக் கூட்டல் பொருள்களைத் தயாரிக்கும்போது பொருள்களின் தரம் மிக முக்கியம். லாபம் அதிகமாகக் கிடைக்க வேண்டுமென்று கலப்படம் செய்தால், உங்கள் சந்தை வாய்ப்பு உங்களை விட்டுப் போய்விடும். முதன்முதலில் சந்தை வாய்ப்புக்காக உள்ளூர், தமிழ்நாடு என ஆரம்பித்து பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா வரைக்கும் கொடுத்து வந்தேன். இப்போது தேவை அதிகம் இருப்பதால், வட மாநிலங்களுக்கும் நெல்லிச்சாறு அனுப்பி வருகிறேன். இந்த பிசினஸை முறைப்படி செய்தால் நிலையான வருமானம் நிச்சயம்’’ என்று முடித்தார் ராஜேந்திரன்.

நீங்களும் இந்தத் தொழிலை செய்து பார்க்கலாமே!

துரை.நாகராஜன்

படங்கள்: வீ. சிவக்குமார்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு! - 06

எவ்வளவு லாபம் கிடைக்கும்?

நெல்லியை மதிப்புக் கூட்டல் செய்வதன் மூலம் சூப்பர் லாபம் பார்க்கலாம் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்வதைவிட, நான் செய்துவரும் பிசினஸ் மூலமான வருமானத்தை உதாரணமாகச் சொன்னால் உங்களுக்குச் சுலபமாகப் புரியக்கூடும். நான் ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் முதல் 30 ஆயிரம் லிட்டர் வரையிலான (சராசரியாக 15 ஆயிரம் லிட்டர்) நெல்லிச் சாறை விற்பனை செய்து வருகிறேன். ஒரு லிட்டர் நெல்லிச்சாறு தயாரிக்க மூன்றரை கிலோ நெல்லிக்காய் தேவைப்படும்.

ஒரு கிலோ நெல்லிக்காய்க்கு 20 முதல் 40 ரூபாய் (சராசரி 30 ரூபாய்) வைத்தால், உற்பத்தி பொருளுக்கு 105 ரூபாய் வரை செலவாகும். அடுத்ததாக பாட்டில், பேக்கிங், மின்சாரம், ஆள் கூலி, மார்க்கெட்டிங் என லிட்டருக்கு 95 ரூபாய் வரை செலவாகும். மொத்தமாக 200 ரூபாய் உற்பத்தி செலவாக ஆகக்கூடும். ஒரு லிட்டர் நெல்லிச்சாறின் விற்பனை விலை 220 ரூபாய். விற்பனை விலையில் செலவுத் தொகையைக் கழித்தால் 20 ரூபாய் லாபமாகக் கிடைக்கக்கூடும். மொத்தமாக 10 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்தால் 2 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். சில சமயங்களில் மாதம் 5 ஆயிரம் லிட்டர், சில சமயங்களில் மாதம் 30 ஆயிரம் லிட்டர் என விற்பனையில் மாற்றம்  இருக்கவே செய்யும். ஆனால், ஆண்டுக்கு எனக் கணக்கிட்டால் நிலையான சராசரி வருமானம் கிடைக்கும் என்பது என் அனுபவம்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு! - 06

முகேஷின் ராசியால் ஏற்றத்தில் ஆர்.காம்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது அதிரடி அறிவிப்புகள்மூலம் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அனில் அம்பானியின் நிறுவனமோ தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

தற்போது, இவர்களின் தந்தை திருபாய் அம்பானி யின் 85-வது பிறந்த நாளன்று, அனில் அம்பானி யின் ஆர்.காம் நிறுவனத்தின் வயர்லெஸ் தொடர்பான ஸ்பெக்ட்ரம், டவர், ஃபைபர் ஆப்டிக் பொருள் கள் மற்றும் டெலிகாம் கட்டுமானப் பொருள்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது. அப்படி வாங்கிய பிறகு ஆர்.காம் பங்குகள் தொடர் ஏற்றத்தில் இருக்கிறது. முகேஷின் ராசி காரணமோ!

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு! - 06

ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களின் புதிய நிறுவனம்!

ஆன்லைன் மூலம் பொருள்களை வழங்கும்  நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கி பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கும் சச்சின் பன்சலும், பின்னி பன்சலும் இப்போது தனியாக ஒரு புதிய நிறுவனத்தைக் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கியிருக்கிறார்கள். சபின் என்று அந்த நிறுவனத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். சச்சின் - பின்னி என்கிற இருவரின் முதலெழுத் துக்களை வைத்து இந்தப் பெயரை உருவாக்கி யிருக்கிறார்கள். இனி ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு வரும் முதலீடுகள் அனைத்தும் இந்தப் புதிய நிறுவனத்தின் மூலம் கொண்டுவரப்படும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!