மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

வ்வியூரிலிருந்து கபிலரை அழைத்துவந்த உதிரன், வேட்டுவன் பாறையில் உள்ள எல்லோருடனும் பேசி நலம் விசாரித்துக்கொண்டிருந்தான். திசைவேழரும் கபிலரும் தனியே பேச எழுந்து சென்றபோது, நீலனும் உதிரனும் இன்னொரு திசை நோக்கி நடந்து சென்றனர். இரு திசைகளையும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் வேட்டூர் பழையன். கற்றறிந்த அறிஞர்கள் இருவர் வலப்புறம் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, பறம்பின் இணையற்ற வீரர்கள் இருவர் இடப்புறமாகப் பேசியபடி நடந்துகொண்டிருந்தனர்.

உதிரனிடம் நீலன் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. ``எவ்வியூருக்குக் கூழையனிடமிருந்து நாள் தவறாமல் செய்தி வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே..?” என்று தொடங்கினான்.

``ஆம், சேரகுடியினர் இருவரும் போருக்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தச் செய்திகளைக் கூழையன் நாள்தோறும் அனுப்பிக்கொண்டிருக்கிறான். உதியஞ்சேரலைவிடக் குடநாட்டினரிடம்தான் நாம் கூடுதல் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. அவர்கள் தளபதி எஃகல்மாடன் பற்றி மிகக் கொடுமையான கதைகள் மக்களிடம் பரவியிருக்கின்றன. பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்கள் யாரையும் கண நேரம்கூட அவன் உயிரோடு வைத்திருப்பதில்லையாம். உடல்களைச் சிதைத்துக் கொல்வதை அவன் வழக்கமாக வைத்திருக்கிறானாம். `கோளூர்சாத்தனின் கைகளை வெட்டிய முடியனின் தலையை எடுக்காமல் நான் ஓய மாட்டேன்’ எனச் சூளுரைத்தபடி அலைகிறானாம்” என்றான் உதிரன்.

அவன் சொல்லியதைப் பற்றி சிந்தித்தபடி வந்துகொண்டிருந்தான் நீலன். ``பறம்பினைச் சுற்றியுள்ள வேறெந்த நாட்டினருக்கும் இல்லாத வாய்ப்பு குடநாட்டினருக்குத்தான் உண்டு. நில அமைப்பின் தன்மையைக் கணக்கில் கொண்டால் அவர்களால் பச்சைமலையின் நடுப்பகுதி வரை வந்து சேர முடியும். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்துவதாக நினைத்துதான் அவர்கள் ஏமாற்றம் அடைவர். ஏனென்றால், அதன் தொடர்ச்சியாக உள்நுழைந்தால் கரும்பாறைப் பிளவுக்குள் எளிதாகச் சூழப்பட்டு முழுமுற்றாக அழிக்கப்படுவர்” என்றான்.

அடுத்த கேள்வியை நீலன் கேட்கும் முன்னர் உதிரன் கேட்டான், ``சோமப்பூண்டின் பானம் குடிக்க வந்தபோது மீட்டுவந்த கப்பல் அடிமைகளைப் பற்றிக் கூறினாயே, அவர்களின் தலைவன் இன்னும் அப்படித்தான் இருக்கிறானா அல்லது ஏதாவது பேசுகிறானா?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

``இப்போது முழுமையாகக் குணமடைந்து விட்டான். மிகக் கொடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இத்தனை மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் அவன் எதையும் வாய் திறந்து பேச ஆயத்தமாக இல்லை. எவ்வளவு முயன்றும் அவன் கூட்டத்தைப் பற்றிய உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

உடன் இருக்கும் வீரர்கள் தலைவனின் உத்தரவின்றி ஒரு சொல்கூட உதிர்க்க மறுக்கிறார்கள். அவனது கண் அசைவை வைத்தே பணிபுரிகின்றனர். தேர்ந்த போர்க்குடியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடும் உறுதியும் எளிதில் வராது” என்றான்.

``கபிலர் அவரின் ஆசானோடு ஓரிரு நாள்கள் தங்குவார். நாம் போய் அவனைப் பார்த்து வரலாமா?”

``விடிந்ததும் புறப்பட்டுப் போவோம்” என்றான் நீலன்.

பிலரும் திசைவேழரும் குடிலுக்குத் திரும்பும்போது நண்பகல் கடந்திருந்தது. அவர்களுக்கான உணவு ஏற்பாடாகியிருந்தது. திறளி மரப்பலகையில் உட்கார்ந்ததும் திசைவேழர் சொன்னார், ``உணவு அருந்தியதும் நாங்கள் புறப்படுகிறோம்.”

``உங்களின் வலதுகாலை மடக்கி எழ முடியாததைப் பற்றி நீங்கள் சொன்னதால், மருத்துவர்கள் மூலிகைகளைப் பறித்துவந்து காத்திருக்கிறார்கள். இன்னும் இரு தினங்கள் தங்குங்கள். அவர்களின் மருத்துவத்தால் முழுமையாகக் குணமடைந்து செல்வீர்கள்” என்றார் வேட்டூர் பழையன்.

மறுமொழி ஏதுமின்றி அமைதியாக இருந்தார் திசைவேழர். வந்த நோக்கம் நிறைவேறாத மனநிலை மட்டுமன்று, இதுவரை தான் கண்டிராத ஒரு கபிலரையும் அவர் கண்டுள்ளார். அவருடைய உணர்வுகள் கொந்தளிப்பாக இருந்தன. பேரரசுக்காகத் தூது வந்ததைப்போல தன்னை கபிலர் நினைத்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அமைதி நீடித்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த கபிலர், ``மருத்துவம் பார்த்துக்கொண்டு குணமடைந்து செல்வதுதான் நல்லது” என்றார்.

திசைவேழரின் மனம் அதை ஏற்கவில்லை. பறம்பைப் பற்றிக் கூறிய சொற்கள் அவரைக் கூசிக்கொண்டிருந்தன. ஆனால், நீட்டி மடக்க முடியாத வலதுகால் அவரது மறுப்புச்சொல்லை மடக்கிப் பிடித்துக்கொண்டது. என்ன செய்வது என அறியாமல் திணறிக்கொண்டிருந்தவர், கபிலரின் சொல்லுக்கு இணங்கித் தலை அசைத்தார்.

மாலை நேரம் நெருங்கியதும் மருத்துவர்கள் பச்சிலைகளையும் மரப்பட்டைகளையும் கொண்டுவந்திருந்தார்கள். திறளி மரப்பலகையில் உட்கார்ந்திருந்த அவரை, வலதுகாலை மட்டும் பலகையின் மேல் நேராக நீட்டச் சொன்னார்கள்.

திசைவேழரால் செய்யவே முடியாத பெருஞ்செயலாக அது இருந்தது. வளைந்த கால் அவ்வளவு எளிதில் நீண்டுகொள்ள ஆயத்தமாக இல்லை. அவரால் எவ்வளவு முடியும் என்பதைக் கணிப்பதற்கே மருத்துவர்கள் இதைச் செய்யச் சொன்னார்கள். அவர் முடிந்தவரை கால்களை நீட்ட முயன்றார். ``அரைவட்ட விண்மீன் கூட்டம் ஒருபோதும் நேர்க்கோட்டு சாட்டைக்கம்பு வெள்ளியாக மாறாது” என்று காலை அழுத்திக்கொண்டே சொன்னார். அவரது சொல்லைக் கேட்டுச் சிரித்தார் கபிலர்.

மருத்துவர்கள் பச்சிலையையும் பட்டையையும் கைக்கருவிகளால் ஒன்றாக்கி அரைத்துக் கொண்டிருந்தனர். அடிநரம்பு, சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. வலி உச்சந்தலையைத் தொட்டது. மருத்துவர்கள் அரைத்துக் கொண்டிருக்கும் மூலிகைகளைப் பார்த்தபடி, ``என்ன மருந்து இது?” எனக் கேட்டார் திசைவேழர்.

மூத்த மருத்துவர் சொன்னார், ``புலி முன் ஆடு.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

திசைவேழருக்குப் புரியவில்லை. அவர்கள் சற்றே விளக்குவார்கள் என எதிர்பார்த்தார். மருத்துவர் மூவரும் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். தலைமாட்டில் இருந்த கபிலரைப் பார்த்தார். அவருக்கும் அதற்கான பொருள் புரியவில்லை. மருத்துவர்களைப் பார்த்து கபிலர் கேட்டார், ``அப்படியென்றால் என்ன... மூலிகையின் பெயரா?”

``இல்லை. மருந்தின் சேர்மானத்தையும் நோயின் தன்மையையும் வைத்து நாங்கள் முடிவுசெய்வோம். எங்களின் மருந்துக்கு முன், இந்த நோயானது புலிக்கு முன் ஆடு போல கண நேரத்தில் பதுங்கி ஒடுங்கும். சில நேரத்தில் நோயும் மருந்தும் புலிக்கு முன் புலி போல சம அளவில் நிற்கும். சில நேரத்தில் மருந்தால் கட்டுப்படுத்த முடியாத அளவில் நோய் இருக்கும், புலியை வீழ்த்தும் யானைபோல” என்றார் அவர்.

திசைவேழர் வியப்புடன் பார்த்தார். `மருத்துவத்தைத் தொடங்கும் முன்னரே, புலிக்கு முன் ஆடு போல, இந்த நோயானது மருந்துக்கு முன் பதுங்கி ஒடுங்கும் என எப்படி துணிந்து சொல்ல முடிகிறது இவர்களால்?’ என்று சிந்தித்தபடியே படுத்திருந்தார். வலி உச்சந்தலையைத் தொட்டுத் திரும்பிய இடத்தில் இப்போது புலியும் ஆடும் உலவிக்கொண்டிருந்தன. மனம் வேறொன்றைக் கணித்துக்கொண்டிருக்க, வலி நினைவில் தங்க இடமின்றி மறந்தொழிந்தது.

இரவு நெடுநேரமாகியும் தூக்கம் வரவில்லை. காலில் கட்டு போடப்பட்டிருந்ததால் அசையாமல் படுத்திருக்கவேண்டியிருந்தது. மனம் அலைமோதிக்கொண்டிருந்தது. அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் கபிலர் உட்கார்ந்து திசைவேழரைக் கவனித்தபடி இருந்தார். உரிமை கலந்த இயல்பான பேச்சு இருவரிடமும் இல்லை. `நாம் சற்று கடுமையாகப் பேசிவிட்டோமோ!’ என்ற எண்ணம் இருவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது.

அமைதியைக் குலைக்கும் சொல்லைக் கண்டறிய முடியாமல் கபிலர் தவித்துக்கொண்டிருக்கும்போது திசைவேழரின் மெல்லிய குரல் கேட்டது, ``பல ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலையில் தற்செயலாக ஒரு பாணர் கூட்டத்தைக் கண்டேன். ஒருவார காலம் என்னோடு சேர்ந்து அவர்கள் பயணப்பட்டார்கள். அந்தப் பயணத்தின்போது நான் யார் என்பதை உடன் வந்த மாணாக்கர்கள் மூலம் அறிந்து கொண்டனர். அதன் பிறகு அந்தப் பாணர் குழுவின் தலைவன் நாஞ்சிலன் என்னிடம் வானியல் பற்றி பல ஐயங்களைக் கேட்டான். நான் அவற்றுக்கெல்லாம் விடை சொல்லியபடி வந்தேன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

பயண வழியில் விலகிச் செல்லும் இடம் வந்தது. அப்போது அவன் சொன்னான், `பச்சைமலைத்தொடரில் வியப்புறு கனியான கருநெல்லி உள்ளது. அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்கலாம். சென்றமுறை நான் பறம்புக்குச் சென்றபோது நடுமலையின் முகட்டில் அந்த மரத்தைக் கண்டேன். பயிற்சிபெற்ற வீரர்களைத் தவிர மற்றவர்களால் ஏறிச்செல்ல முடியாத பெருமுகடு அது. அந்த அதிசயக் கனியைப் பறித்து யாருக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற எண்ணம் உருவானதால், நான் அதைப் பெரிதாகக் கருதவில்லை. உங்களைப் போன்ற வானியல் பேராசானுக்கு அந்தக் கனி உண்ணக் கிடைத்தால் எவ்வளவு நன்மைபயக்கும்! அடுத்த முறை பறம்பு செல்கிறபோது பாரியிடம் கேட்டு அந்தக் கனியைக் கொண்டுவந்து உங்களுக்குத் தருவேன்’ என்று சொல்லிச் சென்றான்.

அவன் சொல்வதை நான் உண்மை என நம்பவில்லை. பகலிலே விண்மீன் கூட்டத்தை எப்படிப் பார்க்க முடியும்? அவன் ஏதோ கற்பனையாகப் பேசுகிறான் என்று நினைத்தேன். ஆனால், திசைகாட்டும் விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகு, இப்போது எனது எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது. அந்தச் செய்தியை அறிந்த நான் அப்போதே பறம்புக்கு வந்திருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது.”

திசைவேழர் சொல்வதை வியந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர். என்ன சொல்வது எனப் பிடிபடவில்லை. சற்றே திணறி மீண்டார். பேச்சற்றிருந்த கபிலரைப் பார்த்து, ``எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்?” எனக் கேட்டார் திசைவேழர்.

``கருநெல்லியைப் பற்றி பாரி என்னிடம் சொல்லியுள்ளான். `அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்க முடியும். அந்த ஆற்றல் அதற்கு உண்டு என, குலநாகினிகள் சொல்வார்கள்’ என்று கூறியுள்ளான். அந்தக் கனியைப் பாரிகூடப் பார்த்ததில்லை. ஆனால், அதைப் பார்த்த ஒருவர் உங்களிடம் வந்து சொல்லியுள்ளார் என்பது எவ்வளவு முக்கியமான செய்தி! என்னால் நம்பவே முடியவில்லை” என்று வியப்பில் திணறினார் கபிலர்.

`இயற்கையைப் பற்றிய மனிதப்பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது’ என்று கபிலர் சொன்ன சொல்லின் ஆழம் காண முயன்றார் திசைவேழர்.

``பகலில் அல்ல, இரவில்கூட விண்மீன்களைப் பார்க்க முடியாத அளவுக்கு, அகந்தையும் ஆணவமும் சில நேரங்களில் கண்களை மறைத்துவிடுகின்றன” என்றார் திசைவேழர்.

இதற்கு என்ன மறுமொழி சொல்வதெனத் தெரியவில்லை. அசையும் அவரது வலதுகால் பாதத்தை மெள்ளப் பிடித்தபடி, ``அசைய வேண்டாம். எல்லாம் சரியாகும்” என்றார் கபிலர்.

பெரும்புலவனின் கைவிரல்கள் பாதத்திடம் பேசிய மொழி கேட்டு திசைவேழரின் கண்கள் கலங்கின.

திகாலையில் புறப்பட்ட நீலனும் உதிரனும் இரு குன்றுகள் தாண்டி அருவியின் அருகில் இருந்த மருத்துவக் குடிலை வந்தடைந்தனர். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவு மிகக் கடினமான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் இந்த இடம்வைத்தே மருத்துவம் பார்த்தனர். இப்போது அந்த வீரனின் உடல் முழுமையாகக் குணமாகிவிட்டது. நெடிய உயரமும் எல்லையற்ற வலிமையும்கொண்ட அவனது உடலை, சிதைவிலிருந்து முழுமையாக மீட்டிருந்தனர் பறம்பு மருத்துவர்கள்.

நீலனும் உதிரனும் அந்த இடம் வந்து தலைமை மருத்துவரைக் கண்டு வணங்கினர். ``எல்லா வகைகளிலும் அவன் குணமாகிவிட்டான்” என்றார் அவர்.

``ஆனால் பேசத்தான் மறுக்கிறான். அதுதான் ஏன் எனப் புரியவில்லை” என்றார் உடன் இருந்த இன்னொரு மருத்துவர்.

``மற்ற வீரர்களோ, தலைவனின் உத்தரவின்றிப் பேசுதல் முறையன்று என்று சொல்கிறார்கள்” என்றார் அருகில் இருந்த உதவியாளர்.

``அவர்களின் குலம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களும் மரணத்தைவிடக் கொடும்வேதனையை அனுபவித்து மீண்டுள்ளனர். அதனால், அச்சம் அவர்களின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும். எவரையும் எளிதில் நம்பிவிட முடியாத மனநிலையில் அவர்கள் இருக்கக்கூடும். பறம்பைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே, நம்பிக்கைகொள்ள முடியாத தயக்கமே அவர்களைப் பேசவிடாமல் செய்கிறது என நினைக்கிறேன்” என்றார் தலைமை மருத்துவர்.

எல்லாவற்றையும் கேட்ட இருவரும் புறப்பட்டு அந்த வீரனைக் காணச் சென்றனர். நாய்களை நன்கு பழக்கக்கூடியவர்களாக அந்த வீரர்கள் இருந்தனர். வேட்டைநாய்கள் அனைத்தையும் மிக அணுக்கமாக வைத்திருந்தனர். சுற்றிலும் இருந்த வீரர்கள் நீலனைக் கண்டதும் எழுந்து வணங்கி வழிவிட்டு நின்றனர். அவர்கள் தலைவன், குடிலுக்குள் தனித்திருந்தான். நீலனும் உதிரனும் உள்நுழைந்து அவன் முன் அமர்ந்தனர்.

உடல் முழுக்க வெட்டுத் தழும்புகள் இடைவெளியின்றி இருந்தன. பார்த்த கணம், உதிரனுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. `இவ்வளவு காயங்களையும் மீறி உயிர்பிழைத்து உட்கார்ந்திருக்கிறானே!’ என்ற வியப்பே ஆட்கொண்டது. சிதைந்த உடலை மீண்டும் இறுக்கிக்கட்டும் உடற்பயிற்சியைத் தொடங்கிவிட்டான் என்பதை நீலனால் உணர முடிந்தது. சென்றமுறை பார்த்ததற்கும் இந்தமுறை பார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவனுடைய கண்கள் கணித்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

அவனை உற்றுப்பார்த்தபடி உதிரன் சொன்னான், ``உனது குடிலுக்குப் பின்னால் இருக்கும் அருவியின் இடப்புறம் சிறிது தொலைவு நடந்தால் வீரன் ஒருவனின் நடுகல் உண்டு. அவனது பெயர் கடுவன். கடுவனின் கதையை யாவரும் அறிவர். அதைக் கேட்டுத் தெரிந்துகொள். உனக்கு இனி தேவைப்படும் மருத்துவம் அதுதான்” சொல்லிவிட்டு எழுந்தான் உதிரன்.

வந்த இருவரும் நீண்டநேரம் பேசுவார்கள் என அவன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களோ, ஒற்றைச் சொல்லை மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர். தொலைவில் இருவரின் உருவமும் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

து ஒரு கொடும் கோடைக்காலம். மழையின்றி விளைச்சல் பாதித்ததால் சமவெளியில் இருந்த மனிதர்களின் சேமிப்புகள் எல்லாம் தீர்ந்தன. உண்ண உணவு ஏதும் இல்லாமல், மனிதர்கள், உணவு தேடி எங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

எவ்வளவு கொடும்பஞ்சம் வந்தாலும் மலைவாழ் மக்களைக் கிழங்குகள் கைவிடாது. ஏழு வகைக் கிழங்குகள் மலையில் விளைகின்றன. நீரின்றிச் செடிகொடிகள் எல்லாம் செத்து மடிந்தாலும் மண்ணுக்குள் கிடக்கும் இந்தக் கிழங்குகள் மனிதனின் உணவுக்காக என்றென்றும் காத்திருப்பவை.

சித்திரவள்ளிக்கிழங்கும் காட்டுவள்ளிக் கிழங்கும் இதர கொடிகளும் மனிதர்கள் உண்ண எப்போதும் கிடைக்கக்கூடியவை. அவைகூட விளையாத கொடும்பஞ்சகாலம் என்றால் இருக்கவே இருக்கிறது நூரை, சவலன், நெடுவன், தீச்சி, நாச்சி, சம்பை, நூழி எனும் ஏழு வகையான கிழங்குகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆழத்தில் விளைந்துகிடப்பவை. நிலம் அறிந்த மனிதர்கள் அந்தக் கிழங்குகள் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் கண்டு தோண்டி எடுப்பர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 65சமவெளியில் உண்ண வழியில்லாத நிலையில், பலரும் கிழங்குகளைத் தேடி மலைகளில் ஏறினர். போதன் என்பவன், பட்டினிகிடக்கும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, கிழங்கு தேடிப் பச்சைமலையில் ஏறியுள்ளான். காலையிலிருந்து உச்சிப்பொழுது வரை தேடி அலைந்துள்ளான். மிகச்சிறிய அளவிலான இரு கிழங்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனாலும் விடாமல் தேடி அலையும்போது பாறை ஒன்றில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்துள்ளான். இளைஞனின் காலில் ஏதோ காயம்பட்டுக் குருதி வழிந்து ஓடியது. பச்சிலைகளைப் பறித்து, காயத்தின்மீது தேய்த்தபடி உட்கார்ந்திருக்கிறான் அந்த இளைஞன். அவன் மலைமகன் என்பதை, பார்த்ததும் போதன் புரிந்துகொண்டான். `இவனிடம் கேட்டால் நமக்கு வழி பிறக்கும்!’ என நினைத்து, ``எத்திசை போனால் கிழங்கு கிடைக்கும்?” எனக் கேட்டான்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் போதன் கையில் வைத்திருந்த இரு கிழங்குகளையே உற்றுப்பார்த்தான். ``கேள்விக்கு விடை சொல்லாமல், கைகளில் இருக்கும் கிழங்குகளையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டான் போதன்.

அதற்கு அந்த இளைஞன், ``நீ கையில் வைத்திருப்பது நூழிக்கிழங்கின் வகை. புதிதாகச் சாப்பிடுகிறவர்களுக்கு இது ஒவ்வாது. இதில் உள்ள கருவிதைகள் செரிமானம் ஆகாது” என்றான்.

``வீட்டில் கொடும்பட்டினியில் கிடக்கிறார்கள். அவர்களின் பசிக்கு எதுவும் உணவுதான். புதிதாகக் கிழங்குகள் கிடைக்க வழியிருந்தால் சொல்” எனக் கேட்க, இளைஞனோ அருவி விழும் பாறையைக் காட்டி, “அந்தத் திசையில் போய்ப்பாருங்கள், சித்திரவள்ளிக்கிழங்கு கிடைக்கும்” என்றான்.

``சரி” என்று கூறிப் புறப்படும்போது போதன் கேட்டான், ``நீ பறம்பைச் சேர்ந்தவனா?”

``ஆம். எனது பெயர் கடுவன்.”

“அப்படியென்றால் உன்னை நம்பலாம்” எனச் சொல்லி, கையில் வைத்திருந்த நீர்க்குடுவையையும் கிழங்குகளையும் அவனிடம் கொடுத்துவிட்டு. “இதைப் பார்த்துக்கொள். நான் அந்த இடம் சென்று கிழங்கைத் தோண்டிவந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றான்.

அலைந்து தவித்து, மிகவும் சோர்வுற்று இருக்கும் ஒருவன் சொல்கிறானே என்று கடுவனும் அதை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவைத்தான்.

போதன் சென்ற பிறகு காயங்களில் வழியும் குருதி நின்றுவிட்டதா எனப் பார்த்தபடி கடுவன் உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் போதன் வைத்துவிட்டுப் போன இரு கிழங்குகளும் நீர்க்குடுவையும் இருந்தன. சிறிது நேரத்தில் பெருமுயல் ஒன்று கடுவன் உட்கார்ந்திருந்த பாறையின் வலப்புறமாகத் தவ்விப் புதருக்குள் ஓடியது.

பார்த்தவுடன் கடுவனுக்கு போதனின் உயிரற்ற குரல் நினைவுக்கு வந்தது. கொடும்பட்டினியில் குடும்பம் கிடப்பதால் நூழிக்கிழங்கை எடுத்துப் போகிறான். `இது புதியவருக்குச் சேராதே!’ என நினைத்தவன், `இந்த முயலைப் பிடித்துக்கொடுத்தால் அவன் குடும்பத்துக்கு உணவாகும்’ எனச் சிந்தித்தபடி கையில் இருந்த மூங்கில்குச்சியை எடுத்துக்கொண்டு சட்டெனப் புதரை நோக்கித் தாவினான்.

அந்தப் புதர் முழுவதும் கிண்டிப் பார்த்தான், முயல் தென்படவில்லை. எந்தத் திசையில் போயிருக்கும் எனக் கால்தடம் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. மழைக்காலத்தில் எளிதில் தடம் அறியலாம், கோடையில் தடம் அறிவது கடினம். எங்கே போயிருக்கும் எனக் கணித்துக் கீழ்திசை நோக்கி, புதர்களைக் கிளறியபடி போனான். நீண்ட தொலைவு கீழிறங்கிச் சென்றான். முயல் அவனது கண்ணில் படவே இல்லை. மிகவும் சோர்வடைந்து பாறை நோக்கி நடந்தான்.

புதர்களுக்குள் நுழைந்து இங்குமங்கும் தேடியதில் குச்சிகள் கிழித்து, காயத்திலிருந்து மீண்டும் குருதி வழிந்தது. `பச்சிலையைத் தேய்ப்போம்!’ என எண்ணியபடி பாறையின் மீது ஏறி அமர்ந்தான். காய்ந்த குச்சிகளின் கீறல் அளவற்றதாக இருந்தன. `எப்படியாவது பிடிக்க வேண்டுமே என்ற பதற்றத்தில், நிதானமின்றிப் புதருக்குள் ஓடியுள்ளோம்’ என நினைத்தபடி பச்சிலையை எடுத்துத் தேய்த்தான்.

காயத்தில் எரிச்சல் அதிகமாக இருக்கிறதே என்று பற்களைக் கடித்துக்கொண்டே பாறையைப் பார்த்தான். வைத்துவிட்டுப் போன இடத்தில் அந்த இரு கிழங்குகளும் இல்லை. நீர்க்குடுவை மட்டும் ஓரத்தில் உருண்டுகிடந்தது. சற்றே பதற்றமடைந்து இங்குமங்குமாகத் தேடினான். எங்கும் இல்லை. ஏதோ விலங்கு வந்து அதைத் தின்றுவிட்டுப் போய்விட்டது என்பது தெரிந்தது.

போதன் வந்து கேட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில், பாறையைச் சுற்றி எங்காவது விழுந்துகிடக்கிறதா எனத் தேடினான். எதுவும் கண்களில் படவில்லை. நேரமாகிக்கொண்டிருந்தது. `அடுத்து என்ன செய்யலாம்?’ எனச் சிந்தித்தான். எங்கிருந்தாவது வேறு கிழங்குகளைத் தோண்டி எடுத்துவந்துவிடலாமா என எண்ணிக்கொண்டிருந்தபோது தொலைவில் போதன்  வருவது தெரிந்தது.

கடுவன், பதற்றத்தோடு அவனது வரவைப் பார்த்துக்கொண்டிருந்தான். போதனின் கையில் சித்திரவள்ளிக்கிழங்குகள் சில இருந்தன. சற்று மகிழ்வோடுதான் அவன் வந்தான். “நீ சரியான இடத்தைச் சொன்னாய், உனக்கு நன்றி” என்று சொல்லியபடியே பாறையின் மீதிருந்த நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டு கிழங்குகளைத் தேடினான். அவற்றைக் காணவில்லை. அப்பக்கம் இருக்குமோ என நினைத்து கடுவனின் பின்திசையில் பார்த்தான். அங்கும் இல்லை. தேடியபடியே, “எங்கே கிழங்குகள்?” என்றான்.

கடுவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தயக்கத்தில் சொற்கள் வரவில்லை.

போதனின் கண்கள் தேடியபடியே “கிழங்குகள் எங்கே?” என மீண்டும்  கேட்டான்.

தயக்கத்தோடு கடுவன் சொன்னான், ``அவற்றை ஏதோ விலங்கு தின்றுவிட்டது.”

அதிர்ச்சியானான் போதன். தலையை மறுத்து ஆட்டி “என்ன சொல்கிறாய்..?” எனக் கேட்டான்.

“முயலொன்று பார்வையில் பட்டது, உங்களுக்குக் கொடுக்கலாமே என அதைப் பிடிக்க ஓடினேன். அந்த நேரத்தில் ஏதோ ஒரு விலங்கு, கிழங்குகளைத் தின்றுவிட்டது” என்றான் மிகுந்த கவலையோடு.

அதிர்ச்சியிலிருந்து மீளாத போதன், “முயல் எங்கே?” என்றான்.

``பிடிக்க முடியவில்லை. தப்பிச்சென்று விட்டது.”

``என்னை ஏமாற்றப்பார்க்கிறாய். கிழங்குகளைத் தின்றுவிட்டு, என்னிடம் மறைக்க, பொய் சொல்கிறாய்” என்றான்.

கடுவன் மிகுந்த பதற்றத்துக்குள்ளானான், “நான் பொய் சொல்லவில்லை. உங்களுக்குக் கொடுக்கத்தான் முயலைப் பிடிக்கப் போனேன், அவசரத்தில் கிழங்கை எடுத்துக்கொண்டு போகாமல் இங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. என்னை மன்னியுங்கள்” என்றான்.

போதனோ, “நீ பறம்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் நம்பினேன், என்னை நீ ஏமாற்றிவிட்டாய்” என்றான்.

சொற்கள் கடுவனை நிலைகுலையச்செய்தன. அவன் மீண்டும் மீண்டும் தனது நிலையை விளக்கிச் சொல்ல முயன்றான். போதன் அவனது சொல்லை நம்பவில்லை. “கிழங்கை நீ உட்கொண்டுவிட்டு விலங்கின் மீது பழிபோடுகிறாய்” என்று உறுதியாகச் சொன்னான்.

“சரி, தின்று முடித்துவிட்டாய். இனி நான் புலம்பி என்ன ஆகப்போகிறது, கொடும்பஞ்சம் பறம்பு மக்களையும் மாற்றிவிட்டது” என்று துயருற்றுப் புலம்பியபடியே புறப்பட்டான் போதன்.

சிறு பாறையின் மீது நின்றுகொண்டிருந்த கடுவன் இடுப்பில் இருந்த குறுங்கத்தியை எடுத்தபடி, ``ஒரு கணம் நில்லுங்கள்” என்றான்.

நடக்கத் தொடங்கிய போதன் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

பாறையின் மீது இருந்த கடுவன், குறுங்கத்தியை அடிவயிற்றின் இடப்புறம் அழுத்தி உள்நுழைத்தான்.

போதனுக்கு அவன் என்ன செய்கிறான் என்பது புரியவில்லை.

அடிவயிற்றின் இடப்புறம் உள்நுழைத்த கத்தியை வலப்புற முனைவரை கண்ணிமைக்கும் நேரத்தில் இழுத்தான்.

அப்போதுதான் போதனுக்கு அவனது செயல் புரிந்தது.

கத்தியை இழுத்துக்கொண்டிருக்கும்போதே கடுவன் சொன்னான், “எனது வயிற்றில் கிழங்கேதும் இருக்கிறதா எனப் பாருங்கள். செரிமானம் ஆகாத கருவிதைகள் ஒன்றேனும் இருக்கிறதா எனவும் பாருங்கள்” என்று சொல்லியபடி வேலையை முடித்தான்.

பதறிய போதன் அவனை நோக்கி ஓடும்போது பாறையிலிருந்து சரிந்துகொண்டிருந்தான் கடுவன். “என்னை மன்னித்துக்கொள்” என போதன் கதறியபடி அவனது தலையை ஏந்திப்பிடித்தபோது கடுவன் சொன்னான், “பறம்பின் மக்கள், நம்பிக்கைக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...