மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

ஞ்சித்துறைக்கு அதிகாலையிலேயே வந்துவிட்டான் உதியஞ்சேரல். மன்னன் வந்ததால் பிற வணிக நடவடிக்கைகள் எல்லாம் சற்றே நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. அரச மாளிகையில் விருந்தினராகத் தங்கியிருந்த ஹிப்பாலஸுக்குச் செய்தி தெரிந்தபோது விடிந்து நீண்ட நேரமாகியிருந்தது. உதியஞ்சேரல் அதிகாலையிலேயே எழுந்து துறைமுகத்துக்கு ஏன் போனான் என்ற காரணம் புரியாத குழப்பத்தில் வேகவேகமாகப் புறப்பட்டு, துறைமுகம் நோக்கி விரைந்தான்.

யவனக் காவல் வீரர்கள் அறுவர் சூழ அவனது வண்டி புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் வந்து அவனுடன் இணைந்தான் திரேஷியன். பெரும்படையையும் வழிநடத்திச் செல்லும் வல்லமைகொண்ட அவனை ஹிப்பாலஸ் எந்நேரமும் உடன்வைத்துக்கொண்டான். இருவரும் துறைமுகம் அடைந்தபோது சேர அமைச்சன் நாகரையன் இருவரையும் வரவேற்றான்.

துறைமுக மாளிகையில் அரசன் இருப்பதாகக் கூறி, இருவரையும் அங்கு அழைத்துச்சென்றான். உதியஞ்சேரல், தன் தளபதி துடும்பனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஹிப்பாலஸ் இங்கு வந்து நாள்கள் பல ஆகிவிட்டன. ஆனால், குட்டநாட்டுத் தளபதியை இதுவரை பார்க்கவில்லை. அரசவையிலும் அவன் இல்லை. போர் நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதால் தளபதி அவைக்கு வந்து சேர நாளாகும் என, விசாரித்ததில் தெரியவந்தது. அவன் எங்கு போயிருக்கிறான் என்பது அரண்மனையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளைப் பெறுவது யவனர்களுக்குக் கடினமில்லை. ஆனால், அரசனைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் செய்தி தெரியவில்லை என்பதை ஹிப்பாலஸ் உறுதிப்படுத்திக்கொண்டான். அதனால்தான் தளபதியின் நடவடிக்கையை அறியவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

அரண்மனை நடவடிக்கைகளை அறிந்துகொள்வதில் பெருவணிகர்கள் எப்போதும் மிகக் கவனமாக இருப்பர். அவர்களால்கூட இந்தச் செய்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சற்றும் எதிர்பாராமல் இன்று காலை துறைமுக மாளிகையில் அரசனோடு அமர்ந்திருந்தான் தளபதி துடும்பன். ஹிப்பாலஸும் திரேஷியனும் இன்றுதான் அவனை முதன்முதலாகப் பார்க்கின்றனர். முதல் தோற்றத்திலேயே அவன்தான் குட்டநாட்டுத் தளபதி என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது.

திரேஷியன்போல மிக உயரமான உருண்டு திரண்ட உடலமைப்போடு இருந்தான் துடும்பன். யவன விருந்தினரை எழுந்து வணங்கினான். ஹிப்பாலஸ் மன்னனுக்கு முகம்மன் கூறி இருக்கையில் அமர்ந்தான்.

``அதிகாலையிலேயே வந்துவிட்டீர்களா மன்னா?” என்று பேச்சைத் தொடங்கினான் ஹிப்பாலஸ்.

``ஆம். கப்பல்கள் வந்துவிட்ட செய்தி கிடைத்ததும் புறப்பட்டு வந்தேன்” என்றான்.

என்ன கப்பல், எங்கிருந்து வந்துள்ளது என்று எந்த விளக்கமும் இல்லாமலிருந்தது உதியஞ்சேரலின் கூற்று.

சற்று அமைதிக்குப் பிறகு ஹிப்பாலஸை அழைத்துக்கொண்டு மாளிகையின் பின்புறப் படிக்கட்டின் வழியாக மேல்மாடத்துக்கு நடந்தான் உதியஞ்சேரல். துடும்பனும் திரேஷியனும் கீழேயே இருந்தனர்.

துறைமுகத்தில் வரிசைகொண்டு நிற்கும் கப்பல்களை மேல்மாடத்திலிருந்து பார்த்தனர் இருவரும். துறைமுகம் எங்கும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதையும் புதிதாக நிறைய கப்பல்கள் வந்துள்ளதையும் பார்த்தபடி ஹிப்பாலஸ் நின்றுகொண்டிருந்தான்.

``நான் நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்தது இன்று வந்து சேர்ந்துள்ளது” என்றான் உதியஞ்சேரல்.

``உங்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே அதை உணர்த்துகிறது” என்றான் ஹிப்பாலஸ்.

``சாலமலையைக் கடந்தே பறம்பின் எல்லைக்குள் நம்மால் நுழைய முடியும். படைகள் எளிமையாக நுழையக்கூடிய வாகான பகுதிகள் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவற்றின் வழியே உள்நுழைவதற்குத்தான் இதுவரை முயன்றுள்ளோம். அவ்வாறு முயலும்போதெல்லாம் எளிய வழியிலிருந்து அடர்காட்டு வழியே நம்மை உள்ளிழுத்துத் தாக்கும் திட்டத்தை நிறைவேற்றுவான் பாரி. இந்த முறை நமது திட்டமே அடர்காட்டு வழியே உள்நுழைவதுதான் என்று நான் முடிவுசெய்துள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் முடிவுறுவதற்காகத்தான் நான் காத்திருந்தேன்’’ என்று சொல்லியபடியே மாடத்திலிருந்து கீழிறங்கி, துறைமுகம் நோக்கி நடந்தான் உதியஞ்சேரல். அவனைப் பின்தொடர்ந்தான் ஹிப்பாலஸ்.

வந்து நிற்கும் புதிய கப்பல்களிலிருந்து பொருள்களை இறக்குவதற்கான ஆயத்தவேலைகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. எண்ணற்ற படைவீரர்கள் வரிசையாக வந்து நின்றவண்ணம் இருந்தனர். இவர்கள் என்ன பொருளை இறக்கப் போகிறார்கள் எனத் தெரியாத குழப்பத்தில் இங்கும் அங்கும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான் ஹிப்பாலஸ்.

`இதைத் தாண்டி அருகில் செல்ல வேண்டாம்’ என்று மன்னருக்குச் சொல்வதற்காக, குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டிருந்தான் துடும்பன். அந்த இடம் வந்ததும் உதியஞ்சேரல் நின்றான். உடன் வந்த ஹிப்பாலஸும் மன்னனோடு சேர்ந்து நின்று கொண்டான். காலை நேரக் கடற்காற்று சற்று அதிகமாக வீசியது. அலைகள் விடாது வந்து கரை மோதி ஓசை எழுப்பியபடியிருந்தன. படைவீரர்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

``அப்படி என்னதான் கொண்டு வந்திருக்கிறார்கள்?’’ என்று ஹிப்பாலஸ் ஆவலோடு கலன்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென ஊளையிடும் ஓசை கேட்டது. எங்கிருந்து இந்த ஓசை வருகிறது என அவன் சிந்திப்பதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணற்ற ஓசைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பேரோசையாக மாறி, கரையில் நிற்பவர்களை நடுங்கச் செய்தன.

உதியஞ்சேரல், ஒரு கணம் மிரண்டு நின்றான். ஹிப்பாலஸுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அளவிட முடியாததாக இருந்தது. ``அந்தக் கப்பலுக்குள் என்னதான் இருக்கிறது? அலையை மிஞ்சும் பேரோசை நம்மை  நிலைகுலையவைக்கிறது” என்றான்.

ஏற்பட்ட அதிர்ச்சியைக் கடந்து மகிழ்ச்சியை வெளிக்காட்டத் தொடங்கினான் உதியஞ்சேரல். ``இதைக் கொண்டுவரத்தான் இவ்வளவு காலமானது. கடைசியாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டான் என் தளபதி” என்று பாராட்டினான். தோள் தட்டிப் பாராட்டு பெறும் துடியனின் பக்கம் திரும்ப ஹிப்பாலஸ் முயன்றான். ஆனால், அவனுடைய கண்களோ கப்பலைவிட்டு அசையவில்லை. அங்கு தீவிரமான வேலை ஏதோ நடந்துகொண்டிருக்கிறது.

கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும்மரச்சட்டங்களின் வழியிலான நாற்சதுரக் கூடுகளை இரும்புக்கம்பிகளால் கட்டி மேலேற்றிக்கொண்டிருந்தனர். ஊளையின் ஓசை பெருகியபடியே இருந்தது. அதைவிடப் பெருங்குரலில் பேசினான் உதியஞ்சேரல், ``இந்தக் கப்பல் எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா?”

`தெரியாது’ என்று ஹிப்பாலஸ் தலையை மறுத்து ஆட்டினான்.

``நக்கவாரத் தீவிலிருந்து.”

அதிர்ந்தான் ஹிப்பாலஸ். ``அந்தத் தீவுக்குள் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் மட்டுமே இருப்பதாகத்தானே கேள்விப்பட்டுள்ளேன். அங்கு எப்படி?”

அந்தத் தீவு மிக நீளமானது. அதன் கீழ்ப்புறம் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் உள்ளனர். மேற்புறம் இன்னொரு மனிதக்கூட்டம் உள்ளது. அவர்களுடன்தான் நாம் உறவை உருவாக்கியுள்ளோம்.”

மரச்சட்டத்தால் ஆன பெருங்கூண்டு ஒன்றை, கப்பலின் மேல்தளத்திலிருந்து கரைக்குக் கொண்டுவர முயற்சி நடந்தது. அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு அவை வெளிப்படுத்திய பேரோசை, வீரர்களை அஞ்சி நடுங்கவைத்தது. ஆனால், அந்த மரச்சட்டகங்களைக் கொண்டுவந்த அந்தத் தீவுவாசிகள் அந்த ஓசையைப் பொருட்படுத்தவேயில்லை.

கழுத்தை மேலும் உயர்த்தியபடி பார்த்துக்கொண்டிருந்த ஹிப்பாலஸின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

``நிலப்பரப்பெங்கும் இல்லாத புது வகையான விலங்கு இது” என்றான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸின் ஆர்வம் எல்லை கடந்ததாக இருந்தது. முழு விசையோடு மரச்சட்டகங்களைச் சறுக்குப்பலகையின் வழியே கப்பலின் மேலிருந்து கரைக்கு இறக்கினர். மீண்டும் ஊளையிடும் ஓசை, காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

உதியஞ்சேரல் சொன்னான், ``இவைதான் தோகைநாய்கள்.”

ஹிப்பாலஸ் கேள்விப்பட்டதில்லை. ஊளையிடும் ஓசையின் மிரட்டல் ஒருபக்கம். அவற்றை மரச்சட்டங்களின் வழியாகக் கட்டியிழுக்க வீரர்கள் படும் பாட்டைப் பார்த்தபடி, உதியஞ்சேரலின் கூற்றைக் கேட்கத் தொடர்ந்து முயன்றான் ஹிப்பாலஸ். தலையை இந்தப் பக்கம் திருப்புவதா அந்தப் பக்கம் திருப்புவதா என்ற குழப்பம் கணம்தோறும் ஏற்பட்டபடி இருந்தது.

அருகில் இருந்த துடும்பன்தான் சொன்னான், ``தீவுகளில் மிகக் கொடுமையான மனிதர்களும் விலங்குகளும் இருப்பது நக்கவாரத் தீவில்தான். அந்தத் தீவில் உள்ளதிலேயே மிகக் கொடுமையான விலங்கினம் இதுதான்.

கீரியைப்போன்ற நீள்வடிவ உடலும் வாலும் கொண்ட அமைப்பு. வால் நிறைய தோகையும் கொண்டது. நாயின் அளவு உயரம் உடையது. உடல் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு அதனுடைய நீள்வாய். குதிரையின் கழுத்துப் பகுதியை ஒரே கடியில் எடுத்துவிடக்கூடியது. இதன் சிறப்பே தரையில் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதே அளவு வேகத்தோடு புதரின் மீதும் மரக்கொப்பின் மீதும் ஓடுவதுதான். மரத்தின் மீதிருந்து பாய்ந்து கீழிறங்கும்போது அதன் வால் பகுதி சிலிர்த்து தோகை முழுவதும் விரிந்துவிடும். பெரும் ஊளையோடு மரத்தின் மீதிருந்து விரிந்த தோகையோடு பாய்ந்து இறங்கும் இதைப் பார்த்தால் எப்படையும் சிதறித் தெறிக்கும்.

குறிப்பாக, அடர்காட்டில் எதிரியின் படையில் இருக்கும் விலங்குகளை அழிக்க,  இதற்கு இணையான இன்னொரு விலங்கு இல்லை. பாரியின் பெரும்பலமாக எல்லோரும் சொல்வது அவனது குதிரைப்படையைத்தான். தோகைநாயின் தாக்குதலால் அவனது குதிரைப்படை உருத்தெரியாமல் அழியும்” என்றான்.

ஊளையிடும் ஓசை காதடைக்கச் செய்தது. காலை வெயில் சுள்ளென அடித்துக்கொண்டிருந்தது. ஹிப்பாலஸால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. துடும்பன் விடாமல் பேசினான். பல நாள்களாகக் கடற் பயணம் செய்ததால், தோகைநாயின் ஓசை துடும்பனுக்குப் பழகிவிட்டது. ஆனால், மற்றவர்களுக்கு அப்படியல்ல. ஒவ்வொரு மரச்சட்டகத்திலும் மூன்று தோகைநாய்கள் இருப்பதுபோல வடிவமைத்திருந்தனர்.

ஹிப்பாலஸ், சட்டகங்களுக்குள் அதன் உருவத்தை உற்றுப்பார்க்க முயன்றான். ஆனால், நிற்காமல் அது உள்ளுக்குள் சுழன்றபடி பெருங்கத்தல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்குமேல் இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என முடிவுசெய்து, ``மாளிகைக்குப் போவோமா?” எனக் கேட்டான். சரியெனச் சொல்லி அழைத்துவந்தான் உதியஞ்சேரல்.

மாளிகைக்கு வந்ததும் இருவருக்கும் பழச்சாறு கொடுக்கப்பட்டது. அருந்தியபோதுதான் சற்று தெளிச்சி வந்தது. ஆனால்,  ஊளையின் ஓசை நிற்காமல் கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த நாய்களைப் போரில் பயன்படுத்த, தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட மனிதர்களும் மரச்சட்டகங்களுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் உடலமைப்பும் உடலின் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் பொருள்களும் காண்போரை நடுங்கச்செய்வதாக இருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

ஹிப்பாலஸின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. ஆனால், உதியஞ்சேரலின் எண்ணங்கள் நிதானம்கொண்டிருந்தன. ``கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தொடர்ந்து முயன்றுவருகிறோம். குடநாட்டினரும் அவ்வப்போது முயல்கின்றனர். அப்படியிருந்தும் பறம்புநாட்டை வீழ்த்த முடியவில்லை. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?”

மற்ற எல்லோரையும்விட பறம்பை மிக நன்கு புரிந்துவைத்துள்ளவன் உதியஞ்சேரல்தான் என்பது ஹிப்பாலஸுக்குத் தெரியும். எனவே, அவனது கேள்விக்கு சிந்தித்து விடை சொன்னான், ``அரண் அமைத்து நிற்கும் பறம்புநாட்டின் மலைகள்தான் காரணம்.”

``இல்லை” என்றான் உதியஞ்சேரல்.

தொடர்ந்து அவன் சொல்லப்போகும் சொல்லை உற்று கவனித்தான் ஹிப்பாலஸ். தோகைநாயின் நீள் ஊளை சத்தம் காதுகளுக்குள் இடைவிடாது  அறைந்துகொண்டிருந்தது.

ஓசைகளில் எத்தனையோ வகையுண்டு. அவற்றில், வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை ஒரு வகை. ஆனால், சில ஓசைகள் உள்ளுக்குள் கூர்மைகொண்டு இறங்கக்கூடியவை; ஆழ்மனதில் இருக்கும் அச்சங்களை எளிதில் கிளறிவிடக்கூடியவை. தோகைநாயின் ஓசை வெளிப்புறமும் பெருக்கெடுக்கிறது. அதே நேரத்தில் ஆழ்மன அச்சத்தையும் விடாமல் கிளறுகிறது. எனவே, மனதை நிலைகொள்ளச் செய்ய முடியவில்லை. அந்த ஓசை நின்ற கணத்தில் உதியஞ்சேரல் சொன்னான், ``பறம்பின் மலைகள் அல்ல, பாதைகள்தான் காரணம்.”

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``என்ன சொல்கிறாய்?” என்றான்.

``பறம்புநாடு முழுவதும் மனிதர்கள் உருவாக்கிய பாதைகளே கிடையாது என்பது மட்டுமல்ல, மனிதர்கள் பாதைகளை உருவாக்கக் கூடாது என்பதிலும் பாரி திடமான முடிவோடு இருக்கிறான்.’’

``பாதையை உருவாக்காதது பெரும்பலம் என்று சொல்ல முடியுமா?”

``அவன் இருப்பிடம் நோக்கி எப்படிப் போவது?” என மறுகேள்வி கேட்டான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸ் சற்றே அமைதியானான்.

``இப்பெரும் மலைத்தொடர் இயற்கையின் பேரரண். இதில் எவ்வியூர் எங்கே இருக்கிறது? போய்த் திரும்பும் ஒற்றர்களுக்கும் பாணர்களுக்கும் எவ்வியூர் எப்படி இருக்கிறது என்றுதான் சொல்லத் தெரிகிறதே தவிர, எங்கே இருக்கிறது எனச் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திசையையும் குறிப்பையும் சொல்கிறான். ஒன்றுபோல் சொன்ன இரண்டு ஒற்றர்களை இதுவரை நான் காணவில்லை.”

ஹிப்பாலஸ் மலைத்துப்போய்க் கேட்டுக்கொண்டிருந்தான்.

``நாம் மலைக்குள் படை நடத்திப் போவதெல்லாம் தோராயமான கணிப்பில்தான்” என்று உதியஞ்சேரல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஹிப்பாலஸ் கேட்டான், ``அப்படியென்றால் பறம்பு மலைத்தொடர் முழுவதும் பாதைகளே இல்லையா?”

``உண்டு. விலங்குகள் உருவாக்கிய பாதைகள் உண்டு.”

``அதைப் பயன்படுத்தி முன்னேற முடியாதா?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

வலதுகையை நீட்டியவுடன் இன்னொரு குவளை பழச்சாறு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி அருந்தியபடியே உதியஞ்சேரல் சொன்னான், ``காடுகளில் பாதைகளை விலங்குகளே உருவாக்குகின்றன. அதிலும் குறிப்பாக, யானைகள்தான் பெரும்பாலான பாதைகளை உருவாக்கக்கூடியவை. வேறு சில விலங்குகளும் பாதைகளை உருவாக்குகின்றன.”

ஹிப்பாலஸ் இரண்டாம் குவளை பழச்சாற்றில் பாதி குடித்தபடி அவசரமாகக் கேட்டான், ``யானைப் பாதையை மனிதர்களால் பயன்படுத்த முடியுமல்லவா?”

``முடியும். காட்டு வழிகளில் அமைந்துள்ள பாதைகள் எல்லாம் விலங்குகள் உருவாக்கிய பாதைகள்தான். அதன் பிறகு மனிதர்கள் தமது தேவைக்காக அதை விரிவுபடுத்தி அமைத்துக்கொள்கின்றனர். ஆனால், பறம்பில் அந்த வேலை எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் விலங்குப் பாதைகளைத் துல்லியமாகக் கணித்து நடக்கக்கூடிய மலைமக்கள் நிறையபேர் நம்மிடம் உண்டு”.

``அவர்களை முன்களத்தில் பயன்படுத்தி, சிக்கலைத் தீர்க்க முடியாதா?’’

``முடியாது.”

``ஏன்?” என்று வேகமாகக் கேட்டான் ஹிப்பாலஸ்.

சற்றே நக்கலான சிரிப்போடு உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் பாதைகள் எல்லாம் எவ்வியூருக்கா போய்ச் சேர்கின்றன? பாரி, காட்டு மனிதர்களின் கூட்டத்துக்குத்தான் தலைவன்; காட்டு விலங்குகளுக்கு அல்லவே!’’

அதிர்ந்து பார்த்தான் ஹிப்பாலஸ்.

குடித்து முடித்த குவளையைக் கீழே வைத்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் எல்லாப் பாதைகளும் இறுதியாகப் போய் முடிவது ஏதாவதொரு நீர்நிலையில்தான்.”

ஹிப்பாலஸ் கண்கள் அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். சமவெளி மக்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது மேய்ச்சல். ``மலைவாசிகளுக்கு மேய்ச்சல் தெரியாது. நாயைத் தவிர எதையும் வளர்த்துப் பழகாதவர்கள். மடுவிலிருந்து பால் பீச்சிக் குடிக்கத் தெரியாத அறிவிலிகள்” என்றான், சற்றே கோபத்தோடு.

`பாதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், இதை ஏன் சொல்கிறான்?’ என ஹிப்பாலஸ் சிந்தித்துக்கொண்டிருக்கையில் உதியஞ்சேரல் சொன்னான், ``மேய்ச்சல் தெரிந்த மனிதர்களாக இருந்தால் மலையில் எவ்வளவு தொலைவு ஆவினங்களை மேய்த்தாலும் இரவில் வந்து ஊரடைவார்கள். இயல்பாகவே அந்த ஊரை நோக்கிப் பல பாதைகள் உருவாகிவிடுகின்றன. ஆனால், அங்கு அதற்கும் வழியில்லை” என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

``எந்தப் பாதையையும் பாரி உருவாக்கிக்கொள்ளவில்லையா?”

``பெரும்பாலும் விலங்குகளின் பாதைகளையே பயன்படுத்துகிறான். தேவையான இடங்களில் மட்டும் விலகிச் செல்ல சிறுபாதைகளை உருவாக்கியுள்ளான். ஆனால், அவை மற்றவர்கள் கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. விலங்குகளின் பாதைகளிலிருந்து அவர்கள் எந்த இடம் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்பு அல்லது அடையாளம் எது என இன்று வரை தெரியவில்லை. அடையாளம் தெரியாமல் பாதையை விட்டு சற்று விலகினாலும் போதும், அடர்காட்டுக்குள் மீள முடியாமல் சிக்கிக்கொள்வோம்” என்றான்.

``அவனிடம் வலிமையான குதிரைப்படை இருக்கிறது என்கிறாய். குதிரைப்படையை வைத்துள்ள ஒருவன் எப்படி பாதைகளின் அடையாளங்களைப் பிறருக்குத் தெரியாமல் காப்பாற்ற முடியும்?”

“இன்றுவரை அவனால் முடிகிறது. நான் அறிந்தவரை பறம்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்தப் பாதை பற்றிய குறிப்பு தெரியும் என்று கருதுகிறேன்.”

``இது படை நடத்துவதற்கான அடிப்படையான சிக்கல். இதற்கு வழிவகை தெரியாமல் போர் தொடுக்க முடியாதே?”

``ஆம்” என்று மகிழ்வோடு சொன்ன உதியஞ்சேரல், ``இதற்கு வழிவகை தெரிந்ததால்தான் இப்போது போர் தொடுப்பதற்கான முயற்சியைத் தீவிரப்படுத்துகிறேன்.”

சற்றும் எதிர்பாராத பதிலாக இருந்தது. ஆர்வத்தோடு ஹிப்பாலஸ் கேட்டான், ``இந்தச் சிக்கலுக்கு என்ன வழிவகை கண்டாய்?”

பெரும் ஊளை ஓசை மீண்டும் கேட்டது. அடுத்த கப்பலிலிருந்து மரச்சட்டகங்களை இறக்கத் தொடங்கிவிட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், முன்பைவிட இந்த ஓசை இன்னும் கூர்மையாகக் காதின் உள்மடிப்புகளில் போய்க் குத்துவதாக இருந்தது. ஹிப்பாலஸ் தனது விரல்களால் காதுத் துளையை அடைப்பதற்காகக் கைகளைக் கொண்டுசென்றபோது, ஓசையோடு சேர்ந்து உதியஞ்சேரல் பீறிட்டான், ``தோகைநாய்கள்...”

`ஆமாம் தோகைநாய்கள்தான் கத்துகின்றன. இதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறான்?’ என்று ஹிப்பாலஸ் எண்ணியபோது கேள்விக்கான விடையாக இதைச் சொல்கிறான் என்பது புரிந்தது.

ஆத்திரம் கலந்த ஆர்வத்தோடு முன்பல்லைக் கடித்துக்கொண்டே உதியஞ்சேரல் சொன்னான். ``முன்கள தோகைநாயை பறம்பின் குதிரைப்படையின் மீது ஏவிவிட்டால், அது குதிரைகளின் குரல்வளையை அறுத்தெரியும். இது என்ன வகை விலங்கு? இதை எப்படி வீழ்த்துவது எனத் தெரியாத குழப்பத்தில் குதிரைப்படையின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வாங்கத் தொடங்குவார்கள் எதிரிகள். திரும்பிச் செல்லும் குதிரைகளைப் பின்தொடர்ந்து கடைசி வரை போகக்கூடியது தோகைநாய். அடர்காட்டுக்குள் மறைந்தபடி தொடரும் தோகைநாயை எளிதில் அவர்களால் வீழ்த்திவிட முடியாது. குதிரைப்படைகள் போய்ச் சேரும் கடைசி எல்லை வரை ஒரு தோகைநாய் போய்ச் சேர்ந்தால் போதும். கைவசம் இருக்கும் மீதத் தோகைநாய்கள் அதன் வாசனை பிடித்தே எந்த எல்லைக்கும் போய்விடக்கூடியவை.

குதிரைப்படையின் அழிவும் எவ்வியூர் நோக்கிய வழியும் ஒருங்கே நமக்குக் கிடைக்க உள்ளன. இந்தப் புதிய விலங்கின் எதிர்பாராத தாக்குதல் எதிரிகளை நிலைகுலையச் செய்துவிடும். அவர்களின் தாக்குதலால் தோகைநாய்கள் சில மரணிக்கலாம். ஆனால், அவர்களின் குதிரைகளை முழுமுற்றாக இவற்றால் அழிக்க முடியும். இவற்றின் குருதி தாகவேட்டை, எதையும் மிச்சம் வைக்காது.”

ஹிப்பாலஸ் வியந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். தோகைநாயின் ஓசையைவிட ஆழத்தில் இறங்கிக்கொண்டிருந்தது உதியஞ்சேரலின் குரல். அவனது நுட்பமான திட்டமிடுதல், ஹிப்பாலஸை திகைப்பிலிருந்து மீள முடியாமல் செய்துகொண்டிருந்தது.

``மாலை அரண்மனைக்கு வாருங்கள், எனது முழுத்திட்டத்தையும் விளக்குகிறேன்” என்று சொல்லி விடைபெற்றான் உதியஞ்சேரல்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

துறைமுகத்திலிருந்து வஞ்சி மாநகரின் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தான் ஹிப்பாலஸ். பகல் உணவு ஆயத்தமாக இருந்தது. ஆனால், அவனது எண்ணங்கள் உதியஞ்சேரலின் தீர்மானமான குரலிலிருந்து விடுபட முடியாதபடி இருந்தன.

நீண்ட நேரம் கழித்துதான் உணவருந்த வந்தான். அவனது வருகைக்காக திரேஷியன், எபிரஸ், கால்பா, பிலிப் ஆகிய நால்வரும் காத்திருந்தனர். உணவு மேசையிலும் அவனது வியப்பின் குரல் தொடர்ந்தது. உணவருந்திவிட்டு மீண்டும் பேசினான்.

``பாண்டியனின் செல்வச் செழிப்பையும் படையின் வலிமையையும் ஒப்பிட்டால் சேரனின் வலிமை சிறியதுதான். ஆனால், பறம்பைக் கைப்பற்றும் திட்டத்தில் சேரன் பெற்றிருக்கும் அனுபவமும் அவனது அறிவுநுட்பமும் பெரும்வியப்பில் ஆழ்த்துகின்றன. பாண்டிய பெரும்படை கீழ்த்திசையிலிருந்து முன்னேறும்போது சேர அரசர்கள் இருவரும் ஒருங்கிணைந்து தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்தால் பறம்பின் அரசனால் சில நாள்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்றே கருதுகிறேன்” என்றான் ஹிப்பாலஸ்.

எபிரஸ் பேசத் தொடங்கினான். வழக்கமாக இதுபோன்ற பேச்சுகளில் மாலுமி கருத்து சொல்வது கிடையாது. ஆனால், இங்கு இருக்கும் யாரையும்விட, தமிழ்த் துறைமுகங்களுடனும் மன்னர்களுடனும் மிக நீண்டகாலப் பழக்கம் கொண்டவன் அவன்தான். எனவே, அவனது கருத்துக்கு ஹிப்பாலஸ் மிகுந்த மதிப்பு கொடுப்பான். எபிரஸும் எளிதில் பேசக்கூடியவன் அல்லன். ஆழ்கடலின் அமைதி எப்போதும் அவனுள் குடிகொண்டிருக்கும், மிகச்சில நேரங்களில்தான் அமைதியைக் கலைப்பான்.

``சேர அரசர்களான குடநாட்டு மன்னனும் குட்டநாட்டு மன்னனும் எத்தனையோ முறை பறம்பின் மீதான தாக்குதலை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இதுபோல புதிய உத்திகளைக் கண்டறிந்து அந்த நம்பிக்கையில்தான் தாக்குதலைத் தொடங்குகின்றனர். ஆனாலும், அவர்களால் தொடக்கக் கட்டத்தைக்கூடத் தாண்ட முடியவில்லை” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் எபிரஸ்.  

``அது உண்மையாக இருக்கலாம். இப்போது முழு வீச்சில் இறுதிப்போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள். பாண்டியனும் பறம்பை நோக்கிப் படையைக் கிளப்பப் போகிறான் எனத் தெரிந்ததும், நிலைமையை இன்னும் தீவிரப் படுத்தியுள்ளனர். ஏனென்றால், அதன் பலன் தங்களுக்கே கிட்ட வேண்டும் என்று அவர்கள் மிக உறுதியாக உள்ளனர். இந்தப்  படையெடுப்பைப் பற்றி முழுமையாக விளக்கத்தான் இன்று இரவு என்னை அழைத்துள்ளான்” என்றான் ஹிப்பாலஸ்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

அவர்கள் தொடர்ந்து பேசியபடியிருந்தனர். இரவு கவியத் தொடங்கியது. அரண்மனையின் அழைப்புக்காக ஆவலோடு காத்திருந்தான் ஹிப்பாலஸ். அதுவரை அவனோடு பேசிக்கொண்டிருந்தனர் மற்ற நால்வரும். பொழுது நீண்டுகொண்டேபோனது. அழைப்பு ஏதும் வரவில்லை. காரணமும் புரியவில்லை. ஆனாலும் காத்திருந்தான்.

`மிகுந்த உற்சாகத்தோடு உதியஞ்சேரல் சொல்லிச் சென்றானே... பிறகு ஏன் இன்னும் அழைக்காமல் இருக்கிறான்?’ என்று சிந்தித்தபடியிருந்தான் ஹிப்பாலஸ். முன்னிரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. இனி அழைப்பு வர வாய்ப்பில்லை எனத் தெரிந்து தூங்கச் சென்றனர். 

ஹிப்பாலஸால் தூங்க முடியவில்லை. உதியஞ்சேரல் சொன்ன செய்திகள் பலவும் நினைவில் வந்துகொண்டேயிருந்தன. தோகைநாய்களின் ஊளையை உதியஞ்சேரலின் குரல் விஞ்சியதை அவன் மனதுக்குள் மீட்டியபடியே இருந்தான். ஆனாலும் அவனது நினைவுப்பரப்பு எங்கும் தேவாங்கின் முகமே பரவியிருந்தது. பெருங்கடலுக்கு நடுவே நாவாய்களுக்குத் திசைகாட்டி அழைத்துச் செல்லும் அதன் ஆற்றல் அவனை விடாது தூண்டிக்கொண்டேயிருந்தது. நீலக்கடல் எங்கும் குறுக்கும் நெடுக்குமாக நாவாய்கள் கடந்து கொண்டிருக்கும் காட்சி அகல மறுத்தது. இமை மூடும்போதெல்லாம் தேவாங்கின் வட்டக்கண்கள் அவனை எட்டிப்பார்த்தபடியே இருந்தன.

பொழுது விடிந்து நெடுநேரமானபோதும் அவன் அறையிலிருந்து எழுந்து வரவில்லை. மற்ற நால்வரும் அவனுக்காகக் காத்திருந்தனர். நடுப்பகலில்தான் எழுந்து வந்தான். அப்போதுதான் அரண்மனையிலிருந்து வரச்சொல்லி அழைப்பும் வந்தது. வேகவேகமாகப் புறப்பட்டுப் போனான்.

அரசவைக்குள் நுழையும் வரை உடன் வந்த திரேஷியன், அவனுக்கான எல்லையறிந்து நின்று கொண்டான். உள்ளே போன ஹிப்பாலஸால், உதியஞ்சேரலைப் பார்த்த கணத்தில் அவனது முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர முடிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

சற்று அமைதிக்குப் பிறகு உதியஞ்சேரல் பேசத் தொடங்கினான். ``நேற்று மாலை என் ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தி என்னைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதனால்தான் உங்களை அழைக்க முடியவில்லை” என்றான்.

ஹிப்பாலஸ் உற்று கவனித்தான்.

``செங்கனச்சோழன் பெரும்படையோடு பறம்பின் மீதான போருக்கு ஆயத்தமாகிவிட்டான்” என்றான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``சோழன் ஏன் பறம்பின் மீது போர் தொடுக்க வேண்டும்?”

``அதுதான் எனக்கும் புரியவில்லை. இதுவரை பறம்பின் மீது அவர்களுக்கு எந்தப் பகையும் உருவாகவில்லை. அப்படியிருக்க, அவன் ஏன் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறான்?” என்று கூறிய உதியஞ்சேரல், சற்றே அமைதிக்குப் பிறகு சொன்னான், ``அவனது படையின் தன்மையையும் எண்ணிக்கைகளையும் பற்றி என் ஒற்றர்கள் சொல்லும் கணக்கை என்னால் நம்பவே முடியவில்லை.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...