
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

கருப்பன்குடி மூதாதையர்தாம் அதைக் கண்டறிந்தனர். எத்தனை தலைமுறைகளுக்கு முன்னர் அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. `எண்ணிலடங்கா காலத்துக்கு முன்னர் அது நிகழ்ந்தது’ எனச் சொல்வார்கள். அந்த ஆற்றுக்கு அப்போது பெயரிடப்படவில்லை. பெயரில்லாத அந்த ஆற்றின் வலக்கரை முழுவதும் செவல்படிந்த சிறுமண் பரப்பு. அதில் புதர் மண்டிய புற்காடு.
புல்லின் வகைகள்தாம் எத்தனை எத்தனை! வடிவத்திலும் நிறத்திலும் அவை ஏற்படுத்தும் வாசனையிலும் வகைப்படுத்த முடியாதவையாகத்தானே இன்று வரை இருக்கின்றன. பறவைகளும் விலங்குகளும் மேய்ந்தறியும் புல்லைக்கொண்டே மனிதன் தனக்கானதைக் கண்டறிந்தான். ஆவினத்தை மேய்த்துக் கொண்டிருக்கையில், புதர் ஒன்றில் நீள்தோகை கொண்ட பெரும்புல் விளைந்து கிடந்திருக்கிறது. மேய்த்துக்கொண்டிருந்தவன் அது என்ன வகைப் புல் என்பதை அறிய அதன் தோகையைக் கைகளால் பறித்துப்பார்க்க முயன்றிருக்கிறான். தோகையின் பக்கவாட்டுக் கூர்மை கிழித்துவிடக்கூடியதாக இருந்தது. அதன் நீள்தண்டு சற்றே வேறுபட்டு இருந்ததையும் பார்த்திருக்கிறான்.
மேய்ச்சல்வெளிதான் மனிதன் இயற்கையின் நுட்பத்தைக் கவனிக்கக் கிடைத்த முதற்பெரும் வாய்ப்பு. பறந்து அலையும் தும்பிகள் காலூன்றாப் புற்கள் எவை என்பது தொடங்கி, நீண்டிருக்கும் புல் நுனியில் செருகி நிற்கும் பனித்துளியின் கனம் வரை அனைத்தையும் அவன் அறிவின் சேகரமாக மாற்றிக்கொண்டிருந்தான்.

கருநீல நிறமும் நெடுநீள் தோகையும் உடைய அந்தப் புல்லின் தண்டுப்பகுதியை ஒருநாள் தற்செயலாகக் கடித்துப்பார்த்தான். அதன் சாறு அவன் அறிந்திராத தித்திப்பைக் கொடுத்தது. மீண்டும் கடித்தான், தித்திப்பின் அளவு குறையவேயில்லை. மீண்டும் மீண்டும் கடித்துச் சுவைத்தான். சுவை குறையாத இந்தப் புல்லைப் பற்றித் தன் கூட்டத்தார் அனைவருக்கும் போய்ச் சொன்னான். அனைவரும் வந்து கடித்துச் சுவைத்தனர். அதைச் `சுவைப்புல்’ என்றே அழைத்தனர்.
அந்தச் சுவைப்புல் தனது கணுக்களிலிருந்து முளைவிடுவது அறிந்து, கரணைகளாக அதை வெட்டிப் புதிய இடத்தில் நட்டுவைத்தனர். கணுக்கள் தழைத்துப் பெரும்புற்களாகின. பல கரணைகளை ஒரே இடத்தில் பரவலாக நட்டுவைக்க சுவைப்புல் பெருங்காடென வளரத் தொடங்கியது.
இந்த அரிய புல்லைப் பற்றி மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கினர். `கருப்பன் குடியினர், அரியவகை சுவைப்புல்லைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்’ என்ற செய்தி பரவ, பலரும் அவர்களிடம் வந்து சுவைப்புல்லைக் கேட்டு வாங்கிச் சென்றனர். நாளடைவில் `சுவைப்புல்’ என்ற பெயர் நீங்கி, அந்தக் குடியின் பெயரால் `கரும்பா புல்’லென்றும் `கரும்பெ’ன்றும் அதற்குப் பெயர் விளங்கிற்று.
தலைமுறைகள் பல கடந்தோடின. கருப்பன் குடியினர் கரும்பின் எண்ணற்ற நுட்பங்களைத் தங்களது பட்டறிவில் சேகரித்திருந்தனர். கணுக்களின் முகம் பார்த்துக் கரும்பின் சுவையைக் கணிக்கும் பேரறிவைப் பெற்றனர். புதிய நிலங்களில் எந்த வகைக் கரணைகளை நடவேண்டும் என்றும், எந்த வகைக் கரும்புகள் தித்திப்பின் உச்சம் எனவும் அவர்கள் துல்லியமாக அறிந்தனர். பனைச்சாற்றிலிருந்து காய்ச்சப்பட்ட இனிப்புக் கட்டியைப்போலக் கரும்பஞ்சாற்றிலிருந்தும் இனிப்புக் கட்டியைக் காய்ச்சி எடுத்தனர். செய்தி எங்கும் பரவியது. கரும்பென அழைக்கப்படும் சுவைப்புல் அரிதினும் அரியதொன்றாக எல்லோரும் பேசிய காலத்தில்தான், அந்தக் கொடும் தாக்குதல் நடந்தது.
பயிரிடுதலின் நுட்பத்தை அறிய தலைமுறை தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுள் புதைந்திருந்த கருப்பன் குடியினரின் மீது திடீர்த் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் தங்களைச் `சோழர்குடி’ என முழங்கினர். இரக்கமற்ற கொடும்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கருப்பன் குடியினர் சிதைவுற்று வீழ்ந்தனர்.
அவர்களை வெட்டி வீசி விளைநிலங்களையும் செல்வங் களையும் கைப்பற்றுவதுதான் அந்தக் காலத்து நடைமுறை. ஆனால், சோழர்குடியின் தலைவன், கருப்பன் குடியினரின் அறிவையும் ஆற்றலையும் நன்கு உணர்ந்தவனாக இருந்தான். எனவே, அந்தக் குடியினரை முழுமுற்றாக அழிக்கவில்லை. எல்லோரையும் விளை நிலங்களில் அடிமைகளாக மாற்றினான். கரும்பை எவ்வளவு அதிகமாக விளையவைக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக விளையவைத்தான்.
கரும்பின் சுவை எங்கும் பரவியது. பனைவெல்லத்தையும் ஈச்சவெல்லத்தையும் கரும்பின் வெல்லச்சுவை மிஞ்சியது. தலைமுறைகள் பல கடந்தாலும் கருப்பன் குடியின் அடிமை வாழ்வு முடிந்தபாடில்லை. அவர்கள் அளவுக்குக் கரும்பை அறிந்த மனிதக்கூட்டம் எதுவும் உருவாகவில்லை. இந்த நிலையில்தான் யவன வணிகம் தொடங்கியது. சேரனின் மிளகுதான் முதலில் யவனர்களை ஈர்த்தது. அந்த வணிகமே பெருமளவு நடந்துகொண்டிருந்தது. அப்போது இந்த நிலத்தில் வேறேதும் புதுமையாகக் கிடைக்காதா எனப் பல யவன வணிகர்கள் கடற்கரை நகரங்களுக்குத் தொடர்ந்து வரத் தொடங்கினர். அவர்களுக்குத் தரப்பட்ட விருந்தொன்றில் கரும்பு பரிமாறப்பட்டது. அதன் தித்திப்பும் தீஞ்சுவையும் அவர்களையும் மயக்கின.
கரும்பின் கெட்டிப்பாகும் விளையவைக்கக் கூடிய விதத்தில் கரும்பின் கரணைகளும் யவனம் நோக்கி நாவாய்களில் பயணப்படத் தொடங்கின. சோழ அரசனின் அவையில் யவனத்தேறலும் மினுக்கும் பாண்டங்களும் மாற்றுப்பொருளாக வந்திறங்கின. காலம் ஓடியபடி இருந்தது.
தம் குலத்தின் விடுதலையைத் தாம் பெற்றே ஆகவேண்டும் என்ற வேட்கையில் அவ்வப்போது கருப்பன்குடி வீரர்கள் முளைத்தெழுவர். ஆனால், அது எப்படியும் சோழனுக்குத் தெரிந்துவிடும். அந்தச் செயல் செய்தவர்களை அழித்தொழிப்பர். ஆனாலும் மொத்தக் குடியையும் அழிக்காமல் பாதுகாத்தனர். கரும்பின் வியப்புறும் சுவையும் நுட்பமும் சோழர்களுக்குத் தேவையாக இருந்தன.

தீஞ்சுவைப் புல்லைக் கண்டறிந்த குடி, எண்ணிலடங்கா தலைமுறைகளாகக் கண்ணீர் சிந்தியபடியே இருந்தது. முளைத்தெழும் கரும்பின் முன் பகுதியில் கருப்பன் குடியின் கண்ணீர் தேங்கியே இருக்கும் என மக்கள் கருதினர். எப்படியாவது இந்த நிலையிலிருந்து மீளவேண்டும் எனத் திட்டமிட்டது வீரர்களின் கூட்டம் ஒன்று. அதற்குத் தலைமையேற்றவன் ஈங்கையன்.
எத்தனையோ முறை அழிக்கப்பட்ட அவர்களின் போராட்டத்தை இந்தமுறை அழித்துவிட முடியாதபடி நன்கு திட்டமிட்டான். ஈங்கையன் இணையற்ற வீரனாக இருந்தான். `தனிமனிதப் போரில் அவனை வெல்லக்கூடிய மனிதர்கள் எவரும் இல்லை’ எனப் பெயரெடுத்தான். தன் தோழர்களையும் அதேபோல வளர்த்தெடுத்தான். அவனது அறிவுக்கூர்மையும் ஆற்றலின் வலிமையும் பெரும்நம்பிக்கையைக் கொடுத்தன.
ஆனால், சோழன் இப்போது சிறுகுடியன் அல்லன்; பேரரசன். தன் மகன் செங்கனச் சோழனுக்கு சோழவேலன் முடிசூட்ட நாள் குறித்திருந்தான். முடிசூட்டு விழாவுக்கு முன்னர் நடக்கும் களப்பலி சடங்குக்காக சோழர்களின் குதிரைகள் கரும்புக் காட்டுக்குள் சீறிப்பாய்ந்தன. மீண்டும் எதிர்பாராத தாக்குதல். கருப்பன்குடி வீரர்கள் சிதைந்தனர். எதிரிகளின் படையை ஈங்கையன் தன்னந்தனியாக எதிர்கொண்டான். அவனது வாள்வீச்சில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தான் சோழநாட்டுத் தளபதி உறையன்.
ஆவேசமும் அதிசிறந்த வீரமும் உடைய ஈங்கையனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினான் உறையன். முடிசூட்டு விழாக் காலத்தில் சோழப்படை பின்வாங்கிய செய்தி பேரரசனை எட்டுமாயின் தன்னைக் கொன்றளிப்பான் என முடிவு செய்த தளபதி, இரவோடு இரவாகப் பல மடங்கு படை திரட்டினான். பின்வாங்கி ஓடியவன், விரைந்து திரும்பி வருவான் என ஈங்கையன் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது விடிவதற்குள் பெரும் படையோடு வந்து நிற்பான் என எதிர்பார்க்க வில்லை. எண்ணற்ற இனக்குழுக்களை அழித்து, பேரரசாக வளர்ந்து நிற்கும் அரசாட்சிக்கு முதுகெலும்பாக இருப்பது இத்தகைய படைவளம்தான்.
எதிரிகளின் படையை முடிந்தவரை போரிட்டு அழித்தனர் ஈங்கையனின் படையினர். சோழத் தளபதி உறையன் இந்தமுறையும் பின்வாங்க நேருமோ என அஞ்சும் அளவுக்கு இருந்தது ஈங்கையனின் தாக்குதல். ஆனால், அவனது வீரர்கள் பலரால் நிலைமையை நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எண்ணிக்கையில் மிகக் குறைந்த அவர்கள், கடுந்தாக்குதலுக்குப் பிறகு முழுமுற்றாகச் சூழப்பட்டனர். வீழ்ந்தவர்களை முழுமையாகக் கொன்றழிக்கத்தான் நினைத்தான் உறையன். ஆனால், இவர்களின் உடலமைப்பையும் வலிமையையும் கணித்து மிக நல்ல விலைக்கு விற்கலாம் என முடிவுசெய்து, விலங்கிட்டு இழுத்துச் சென்றான்.
அவன் கணித்ததுபோலவே, கடல் வணிகர்கள் மிக நல்ல விலைகொடுத்து இந்த அடிமைகளை வாங்கினர். புதிய அடிமைகளை அடிமைத் தொழிலுக்குப் பழக்குவது கொடூரமிக்கதொரு செயல். விலைக்கு வாங்கப்பட்டவர்களை ஊனமாக்காமல் அவர்களை உடலாலும் உள்ளத்தாலும் கூனிக்குறுகி உணர்ச்சியற்ற உயிரினமாக மாற்ற வேண்டும். இதைச் செய்து முடிக்க கப்பல் தலைவன் ஒவ்வொருவனும், ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றுவான்.
ஈங்கையன் கூட்டத்தை விலைக்கு வாங்கிய கப்பலின் தலைவனோ, அவர்களுக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் விலங்கு பூட்டி, கப்பலின் மேல் தளத்தில் அமரவைத்தான். கப்பல், புகாரிலிருந்து வைப்பூருக்கு வந்து சேர்ந்தது. வைப்பூரில் பொருள்கள் ஏற்ற இன்னும் இரண்டு நாள்களாகும் என்ற நிலையில் புதிதாக வாங்கியவர்களை முழு அடிமைகளாக மாற்றும் வேலையில் இறங்கினான். வாங்கப்பட்டவர்களின் தலைவனான ஈங்கையனை மீகானின் கூம்புமாடக் கம்பத்தில் கட்டினான். என்ன செய்யப்போகிறான் என்று மற்றவர்கள் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தபோது அருகன்குடியில் வாங்கிய புதுச்சாட்டையோடு மூன்று பேர் மூன்று திசையில் நின்றனர்.
விளாசல் தொடங்கியது. விலங்கின் நரம்பிலும் மரத்தின் நரம்பிலும் செய்யப்பட்ட புதுச்சாட்டைகள் இடைவிடாமல் ஈங்கையனை வெட்டிச் சிதைத்தன. கண்கொண்டு பார்க்க முடியாத கொடுமை நடந்தேறியது. மற்ற வீரர்கள் கதறித் துடித்தனர். இழுபடும் சாட்டையின் வீச்சுக்கு ஏற்ப குருதித் துளிகள் நீண்டு சிதறின. எது செய்தும் காதுகொடுத்துக் கேட்க அங்கு யாருமில்லை. பகல் முழுவதும் அடித்தனர். உடலெங்கும் ரத்தவிளாறாக மாறிக் காலடியில் நிறைந்து நின்றது செங்குருதி. விலங்கிடப்பட்ட நிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் உள்ளம் ஒடுங்கிச் சிதைவுற்று அடிமைத்தனத்துக்குள் ஆழப்புதைய வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள்.
மாலை மங்கியபோது ஈங்கையன் முழுமையாக நினைவிழந்தான். கப்பலில் ஏற்றப்படவேண்டிய பொருள்கள் வந்து சேர்ந்தன. அவற்றைக் கப்பலில் ஏற்றும் வரை அடிப்பதை நிறுத்தி அந்தப் பணியைச் செய்யத் தொடங்கினர். கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஈங்கையன் மயங்கிய நிலையில் தலை தொங்கிக்கிடந்தான். விலங்கிடப்பட்ட அவன் தோழர்கள் செய்வதறியாது துடித்துக் கிடந்தனர். இந்த நிலையில்தான் துறைமுகத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து பெருநெருப்பு எழுந்தது. கப்பலில் இருந்தவர்கள் அதை அணைக்க ஓடினர். விலங்கிடப்பட்ட அடிமைகள் தங்களையோ, தங்கள் தலைவனையோ விடுவிக்க என்ன செய்வதென்று தெரியாமல் கதறித் துடித்தனர்.
நேரம் ஆக ஆக, நெருப்பு எங்கும் பரவியது. ஒருகட்டத்தில் அவர்கள் இருக்கும் கப்பலின் விளிம்புப் பகுதியில் நெருப்பு மேலேறிக் கொண்டிருந்தது. அவர்கள் பெருங்கூச்சல் எழுப்பினர். அப்போதுதான் திரையர் கூட்டம் நெருப்பினுள் நுழைந்து அவர்களை மீட்டது.
கபிலரும் உதிரனும் வேட்டுவன் பாறையிலிருந்து மீண்டும் எவ்வியூருக்குப் புறப்பட்டனர். வழியில்தான் ஈங்கையனின் கதையை உதிரன் கபிலருக்குச் சொல்லிக் கொண்டுவந்தான். ``இத்தனை மாதங்களாகியும் ஈங்கையனும் அவன் கூட்டத்தாரும் தாங்கள் யார் என்பதை வாய் திறந்து பேசவில்லை. `சோழப் பேரரசன்தான் தங்களின் எதிரி எனத் தெரிந்தால் யாரும் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள்’ என்று அவர்கள் நினைத்துள்ளனர். அதுமட்டுமன்று, யாரிடமும் நம்பிக்கைகொள்ளும் சூழலும் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்கள் பேச்சற்று இருந்துள்ளனர்.
நம்மவர்கள் அவர்களை மீட்டதும் இங்கு வந்ததிலிருந்து நல்லதொரு மருத்துவம் செய்து அவர்கள் தலைவன் ஈங்கையனைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு நம் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியுள்ளது. ஆனாலும் நாம் யார் என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் பேச மறுத்துள்ளனர். கடுவனின் கதையை அறிந்த பிறகுதான் நம்பிப் பேசத் தொடங்கினான் ஈங்கையன். அவர்களின் குடி அடைந்த துயரம் சொல்லிமாளாது” என்றான் உதிரன்.
கேட்டுக்கொண்டே நடந்த கபிலர், ``அடிக்கரும்பின் தித்திப்புக்காக மனம் எத்தனை முறை ஏங்கியுள்ளது! ஆனால், அவையெல்லாம் இந்தக் குடியின் குருதியில்தானே விளைந்துள்ளன. `பூத்த கரும்பும் காய்த்த நெல்லும் உடையது சோழனின் கழனி’ என்று புலவர்கள் பாடுகின்றனர். ஆனால், அந்தக் கழனி கரும்பாக்குடி சிந்திய குருதியால்தான் உலராமல் இருக்கிறது” என்றார்.
உதிரன், கபிலரின் சொற்களைக் கேட்டபடி அமைதிகொண்டு நடந்தான்.

``நெருப்பிலே அழிந்துவிடாமல் இவர்களை மீட்டெடுத்ததன் மூலம் வாழ்வெல்லாம் மகிழ்ந்துண்ட கரும்பஞ்சாற்றுக்கும் வெல்லத்துக்கும் கைம்மாறு செய்துள்ளோம்” என்றார் கபிலர்.
``திரையர்கள் இருந்ததால்தான் இவர்களை மீட்டெடுக்க முடிந்தது. ஈங்கையனின் உருவ அமைப்பைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவ்வளவு திறன்வாய்ந்த ஒருவனைக் கம்பத்திலிருந்து பிய்த்தெடுத்துத் தோளிலே போட்டுத் தூக்கிக்கொண்டு நெருப்பிலிருந்து வெளியேறுவதெல்லாம் இயலுகிற செயலன்று” என்றான் உதிரன்.
சற்றே அமைதியுடன் நடந்த கபிலர் சொன்னார், ``வெற்றிலையும் கரும்பும் மனித குலம் இருக்கும் வரை தேவைப் பட்டுக்கொண்டே இருக்கும். தமது இலையாலும் தண்டாலும் சாற்றாலும் மனிதனுக்கு அருமருந்தைத் தந்தபடியேதான் இருக்கும். அந்த அரிய பயிரினங்களைக் கண்டறிந்த ஆதிகுடிகள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுகிறார்கள்! அவர்கள் கண்டறிந்த உயிர்ச் செல்வங்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?” ஏக்கப்பெருமூச்சோடு பாறையைப் பிடித்து மேலேறிக் கொண்டிருந்தார் கபிலர்.
சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியைத் தளர்த்தவல்லது. இதைவிடக் கடினமான செங்குத்துப்பாறையைக்கூட குனிந்து உட்காராமல் நிமிர்ந்தபடி மேலேறிய கபிலர் இந்தச் சிறு பாறையைக் கடக்க உட்கார்ந்து நகர்கிறார். அவரின் செயலை உன்னிப்பாகக் கவனித்த உதிரன், பேச்சை மாற்றி அவரின் எண்ணங்களைத் திருப்ப முயன்றான்.
``உங்களைக் காண வந்த பெரியவரோடு இரண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள் அல்லவா?” என்றான்.
பாறையைக் கவனமாய்க் கடந்த பிறகு நிமிர்ந்த கபிலர், ``ஆம், திசைவேழரோடு இருவர் வந்திருந்தனர்” என்றார்.
``அவர்களில் ஒருவனாவது படைவீரனாகவோ, ஒற்றனாகவோ இருப்பான் என நானும் நீலனும் நினைத்தோம். ஆனால் அப்படியன்று; இருவருமே அவரின் மாணவர்கள்தாம்.”
``அவர் காலத்தைக் கணிக்கும் பேராசான். இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் மாமனிதர்களைப் பயன்படுத்திவிட முடியாது. இயற்கையின் பேரியக்கத்தைக் கணித்துக் கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் கீழ்மைக்குத் துணை போக மாட்டார்கள்.”
கபிலர் சொல்லி முடிக்கும் முன்னர் சற்றும் இடைவெளியின்றி உதிரன் கேட்டான், ``பாண்டியப் பேரரசுக்காகத்தானே அவர் இங்கு வந்தார்?”
``இல்லை. அவர் நம்பும் உண்மைக்காக வந்தார். இயற்கையின் உள்நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே அகப்படும். அப்படியொன்று தெய்வவாக்கு விலங்கின் வடிவில் அகப்பட்டுள்ளது. அதை இழந்துவிடக் கூடாது என்ற தவிப்பில்தான் வந்துள்ளார்” என்றார்.
``அவரின் கூற்றில் உண்மை இருக்கிறதா?” எனக் கேட்டான் உதிரன்.
அடுத்த பாறையில் ஏறாமல் அப்படியே நின்றார் கபிலர்.
பாறையின் மேலேறிய உதிரனுக்கு, கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.
``நான் எங்கே நிற்கிறேன்?” என்று கேட்டார் கபிலர்.
``கீழே நிற்கிறீர்கள்” என்றான் உதிரன்.
``காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது” என்றார்.
கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.
கபிலர் விளக்கினார். ``உண்மை என்பது, இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாக கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.”
கபிலரும் உதிரனும் எவ்வியூர் அடைந்தபோது தேக்கனும் காலம்பனும் ஊர் திரும்பியிருந்தனர். அனங்கனும் அவன் குழுவினரும் காட்டெருமைக் கூட்டத்தோடு எந்த மலையில் அலைகிறார்கள் என்பதைப் பற்றிப் பலரும் அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.
கபிலர் வந்து சேர்ந்ததும் விசாரிப்புகள் எல்லாம் அவர் பக்கமாகத் திரும்பின. அவரின் ஆசானைப் பற்றி அறிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருந்தது. பாட்டாப்பிறையில் பெரியவர்கள் காத்திருந்தனர். ஆனால், பாரியைப் பார்க்கப் போன கபிலர் நள்ளிரவு வரை வரவில்லை.
பாரியின் அவையில்தான் அந்த உரையாடல் நடந்தது. தனக்கும் திசைவேழருக்கும் நிகழ்ந்த சந்திப்பைப் பற்றி முழுமையாக விளக்கினார் கபிலர். உடன் தேக்கனும் முடியனும் இருந்தனர். திசைவேழர் வந்ததன் நோக்கத்தைப் பாரியால் கணிக்க முடிந்தது, ``தேவவாக்கு விலங்கு வடதிசை நோக்கித்தான் உட்காரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கு இப்படியொரு பயன்பாட்டுக் காரணம் இருக்கும் என நினைக்கவில்லை” என்றான் பாரி.
``அது வடதிசை நோக்கி மட்டுமே உட்காரும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியுமா?” எனக் கேட்டார் கபிலர்.
``இதுகூடவா தெரியாமல் இருப்போம்?” என்றான் முடியன்.
``தேவவாக்கு விலங்கை `கொற்றவையின் குழந்தை’ என்றுதானே சொல்கிறோம். கொற்றவைக்கு `வடக்குவா செல்லி’ என்றொரு பெயர் உண்டு என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா? கொற்றவைக் கூத்தின்போது அனைத்து நாள்களும் அது கீழிறங்கி வந்துதானே பழத்தை எடுத்தது. அப்போதெல்லாம் அது உட்கார்ந்ததை நீங்கள் கவனித்து அறியவில்லையா?’’ எனக் கேட்டான் பாரி.
கபிலர் திகைத்துப்போனார். ``அவை மிகவும் அஞ்சியபடி வந்து பழத்தை எடுத்துச் செல்வதைக் கூர்ந்து கவனித்தேன். ஆனால், அவற்றின் தனித்த நடவடிக்கையைக் கவனத்தில்கொள்ளவில்லை” என்றார் கபிலர்.
உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தேக்கன், இடுப்புத் துணியில் மடித்து வைத்திருந்த வெற்றிலையை எடுத்துக்கொண்டே சொன்னார், ``திசைவேழரின் வருகையிலும் நாம் கவனிக்கத் தவறும் தனித்த விஷயங்கள் இருந்துவிடக் கூடாது.”

தேக்கனின் சொல் சற்றே கடுமையானதாகத் தான் இருந்தது. ஆனாலும் இன்முகத்தோடுதான் கபிலர் அதை எதிர்கொண்டார். ``கவனம் தவறிவிடக் கூடாது என்பதில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன்.’’
``பாண்டியனின் பெருந்துறைமுகமான வைப்பூர்த் துறைமுகமே நம்மவர்களின் தாக்குதலால் அழிந்திருக்கிறது. அப்படியிருந்தும் இவ்வளவு மென்மையான முயற்சியைப் பாண்டியன் ஏன் செய்கிறான்?” எனக் கேட்டார் தேக்கன்.
கபிலரிடம் இதற்கான விடை இல்லை. சிந்தித்தபடி அமைதியானார்.
``பெருந்தாக்குதலுக்கான ஆயத்த முயற்சியில் இருப்பவர்கள், நாங்கள் அப்படியல்ல எனக் காட்டிக்கொள்ள முயல்வார்கள். இந்த முயற்சி அப்படிப்பட்ட ஒன்றுதான்” என்றார் தேக்கன்.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ``அதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்று சற்றே மெல்லிய குரலில் சொன்னார் கபிலர்.
அதைக் கவனித்த பாரி கேட்டான், ``உங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றியது?”
``முதலில் மிகுந்த சினத்தோடு பறம்பைக் குற்றம்சாட்டிப் பேசிய திசைவேழர், எனது விளக்கத்துக்குப் பிறகு சற்றே அமைதியானார். அவரின் நோக்கம், திசையறியும் ஒரு விலங்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதில் ஐயம் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் அவரின் முகம் மிகவும் வாடியிருந்தது. நான் அவரை நன்கு அறிவேன். எளிதில் தளராத மனிதர் அவர். அவரின் கண்கள் ஒன்றுக்கு மேற்பட்டமுறை கலங்கின. அதற்குக் காரணம் உள்ளுக்குள்ளிருந்த குற்றவுணர்வு. அங்கு நடக்கும் பல முயற்சிகளை அவர் அறிவார். அதைப் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் உள்மனம் அவரைக் கலங்கச் செய்திருக்கும்” என்றார்.
அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தேக்கன், ``புலி முன் ஆடு என்பது திசைவேழருக்குச் சொல்லப்பட்ட சொல்லன்று; பாண்டியனுக்காகச் சொல்லப்பட்ட சொல். பறம்பின் முன் அவனது பெரும்படை அடங்கி ஒடுங்கும் என்பது பாண்டியனின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்” என்றார்.
ஒரு கணம் உறைந்துபோனார் கபிலர். `அங்கு பேசிய பேச்சு அதற்குள் எப்படி இங்கு வந்து சேர்ந்தது!’ திகைத்த கண்களோடு தேக்கனைப் பார்த்தார். அவர் வெற்றிலையை மெல்வதற்கு ஏற்ப நன்றாக மடித்துக்கொண்டிருந்தார்.
``உதிரன் கரும்பாக்குடியின் கதையைச் சொன்னான். எனக்கு அவர்களைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. அவர்கள் யார் எனத் தெரிந்த பிறகும் ஈங்கையனை அழைக்காமல் ஏன் வந்தீர்கள் என உதிரனைத் கோபித்தேன்” என்றான் பாரி.
பேச்சின் போக்கை எவ்விடம் மாற்ற வேண்டும் என்பதைப் பாரி அளவுக்கு நன்கு உணர்ந்தவர் யாருமில்லை என்பது கபிலருக்குத் தெரியும். திசைவேழர், தனக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் நிறைய பேசினார். அந்தப் பேச்சுகள் எல்லாம் இங்கு வந்து சேர்ந்தி ருக்கின்றன. அவர் என்னவெல்லாம் பேசினார் என்பது கபிலருக்குக்கூட முழுமையாகத் தெரியாது. அவரின் எண்ண ஓட்டங்களைக் கண்டறிய மருத்துவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு இருந்திருக்கும். அவர் சொன்ன சொற்களிலிருந்து தான் தேக்கன் இந்த முடிவுக்குப் போயுள்ளார் என்பதைக் கபிலர் உணர்ந்தபோது, அதுகுறித்த பேச்சை நீட்டிக்க வேண்டாம் என்றுதான் பாரி ஈங்கையனின் பேச்சை எடுத்தான்.
பாரியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கபிலர் சொன்னார், ``நாங்கள் மலை ஏறும்போது தான் ஈங்கையனின் கதையை உதிரன் என்னிடம் சொன்னான். அவர்களைப் பார்க்காமல் வந்துவிட்ட கவலை எனக்கும் உண்டு.”
வெற்றிலையை வாயில் மென்றபடி தேக்கன் கேட்டார், ``என்ன சொன்னார் வேட்டூர் பழையன்?”
`உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் எதுவும் சொல்லப்போகிறாரா அல்லது என்னிடம் சொல்லியது எதுவும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கப்போகிறதா?’ என நினைத்துக்கொண்டே, ``நான்கு நாள்கள் அல்லவா! நிறைய பேசினோம். குறிப்பாக, நீலன் - மயிலாவின் மணவிழா பற்றி கண்கள் பூக்கப் பேசினார்” என்றார்.
மென்று சுவைத்த வாயின் அசைவு சட்டென நின்றது. காலம் தாழ்த்துவது அழகல்ல எனத் தோன்றியபடியேயிருந்த எண்ணத்தைக் கிளறிவிட்டது கபிலரின் சொல். திரும்பிப் பாரியைப் பார்க்க நினைத்தவர், அதைத் தவிர்த்து மீண்டும் கபிலரின் பக்கம் திரும்பினார்.
தேக்கனின் எண்ண ஓட்டத்தை மட்டுமன்று, பழையனின் எண்ண ஓட்டத்தையும் நன்கு அறிந்த பாரி சொன்னான், ``இந்தக் கார்காலத்தில் தான் மணவிழாவை முடிவுசெய்திருந்தோம். ஆனால், எதிர்பாராத பலவும் நடந்துவிட்டதால் மணவிழாவை நடத்த முடியாமல் போய்விட்டது. அதற்காக இனியும் காலம் கடத்த வேண்டாம். உப்பறைக்குப் போய் வந்த மூன்றாம் நாள் மணநாளாக முடிவுசெய்து செய்தி அனுப்புங்கள்” என்றான் பாரி.
நீண்டநாள் பேச்சு அந்தக் கணமே முடிவானது தேக்கனுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. உடனே சம்மதித்தான்.
கபிலரும் மகிழ்வடைந்தார். `உப்பறைக்குப் போய் வந்த உடன்’ என்று பாரி ஏன் சொன்னான் என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.
``உப்பறை எங்கே இருக்கிறது? போய் வர எவ்வளவு நாள்களாகும்?” எனக் கேட்டார்.
``போய் வர ஒரு மாதமாகும். ஆண்டுக்கு ஒருமுறை பறம்பின் தலைவன் அங்கு போய்த் திரும்புவது காலகாலப் பழக்கம். இந்த முறை சற்று தாமதமாகிவிட்டது” என்றான் தேக்கன்.
நீலன், மயிலாவின் மணவிழா ஏற்பாடு உறுதியான மகிழ்வில் வெற்றிலையை வேகவேகமாக மடித்து வாயில் திணித்துக் கொண்டே கேட்டான், ``நீங்கள் என்னோடு இருந்து மணவிழா வேலையில் பங்கெடுக்கிறீர்களா அல்லது பாரியோடு உப்பறைக்குப் போய் வருகிறீர்களா?”
கைநீட்டி வெற்றிலையைக் கேட்டார் கபிலர்.

மறுமொழியேதும் சொல்லாமல் கை நீட்டுகிறாரே எனச் சிந்தித்தபடி வெற்றிலையைக் கொடுத்தார் தேக்கன்.
வாங்கி அதைத் தோதாக மடித்துக்கொண்டே கபிலர் சொன்னார், ``இந்தக் கேள்விக்கு நான் சொல்லித்தான் விடை தெரிய வேண்டுமா உங்களுக்கு?”
சிரித்தான் பாரி.
வெற்றிலையை வாயில் மென்றபடியே முடியன் சொன்னான், ``தேவவாக்கு விலங்கு திசை மாறியா உட்கார்ந்துவிடப்போகிறது!”
மீண்டும் சிரித்தான் பாரி.
கிடைத்த வாய்ப்பைக்கொண்டு தேக்கனை நோக்கிச் சொல்லைச் சுழற்றினார் கபிலர், ``இத்தனை நாள்களாகியும் தனித்த விஷயங்களைக் கவனிக்கவில்லையா நீங்கள்?”
அறையெங்கும் பொங்கி வெடித்தது சிரிப்பு.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...