
மதிப்புக் கூட்டல் தொடர் - 8
மதிப்புக் கூட்டல் என்பது மண்ணில் விளையும் அனைத்துப் பொருள்களுக்கும் பொருந்தக்கூடிய தொழில்நுட்பமாகும். அந்தந்தப் பகுதிகளுக்குச் சிறப்பு சேர்க்கும் சிறப்பு வாய்ந்த விளைபொருள்களைக் கொண்டு மதிப்புக் கூட்ட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளுக்குக் கிடைக்கும் விலையைவிட அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும். அதேநேரம், மதிப்புக் கூட்டல் செய்யும் பொருள்களில் தரம் மிக முக்கியம். இதனால் சந்தை வாய்ப்பை எளிதாக விரிவுபடுத்தி லாபம் சம்பாதிக்கலாம்.

இதற்கு உதாரணமாகச் செயல்பட்டு வருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தன். வெட்டிவேர் மூலிகையில் மதிப்புக் கூட்டல் செய்துவரும் ஆனந்தனை அவருடைய தொழில்கூடத்தில் சந்தித்துப் பேசினோம்.
“எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் மதிப்பினைக் கூட்டி விற்றால், லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்ற சிந்தனை எனக்குத் தோன்றியது. எங்கள் பகுதிக்கு அருகில் கிடைக்கும் அரிய வகைப் பொருள்களை ஆராய்ந்தேன். அப்போது வெட்டிவேர் பற்றித் தெரிந்து கொண்டேன்.
வெட்டிவேரிலிருந்து என்னென்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது மனிதர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களை உருவாக்கலாம் என யோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினேன்.
அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. வெட்டிவேரின் மருத்துவக் குணம் எனக்கு பாசிட்டிவாக அமைந்தது. முதலில் 2009-ம் ஆண்டு எங்கள் பொருள்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தினோம். ஆரம்பத்தில் தயங்கியபடி வாங்கியவர்கள், அடுத்தமுறை தானாக முன்வந்து வாங்கினர். வெட்டிவேருடன் சேர்த்து பயன்படுத்தப்படும் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஏற்றது என்பது ப்ளஸ்.
மக்கள் மத்தியில் எப்போதுமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். நான் வெட்டிவேர் பொருள்களை அறிமுகப்படுத்திய நேரம், இயற்கை பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடையே பெருகி யிருந்ததும் எனக்குக் கைகொடுத் தது என்று சொல்லலாம். வெட்டி வேர் மூலம் செருப்பு, பெல்ட், பர்ஸ்கள், திரைச்சீலைகள், பாய்கள் என ஏராளமான பொருள்களை அறிமுகப்படுத்தி னோம்.
ஆரம்பத்தில், ஈரோட்டில் ஒருவரிடமிருந்து தயாரிப்புகளை வாங்கி நாங்கள் மெருகேற்றி விற்பனை செய்துவந்தோம். அதன் பின்னர், கிடைத்த சந்தை வாய்ப்புகள் எங்களைத் தனியாகவே தொழிலைச் செய்யும் அளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தன.
இதுபோக இன்றுவரைக்கும் கூட ஈரோட்டிலிருந்து வரும் மூலப் பொருள்களையும் மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறோம். அப்போது ஆரம்பித்த எங்களின் பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வெட்டிவேரில் பொதுவாகவே மருத்துவக் குணம் அதிகமாக உண்டு. அதனால் வெட்டிவேரை மதிப்புக் கூட்டி பல வடிவங்களில் விற்பனை செய்வது மக்களிடம் வரவேற்பைப் பெற்றதாக இருக்கிறது.
வழக்கமாக நாங்கள் தயாரிக்கும் பொருள்களோடு, வாடிக்கை யாளர்கள் விரும்பிக் கேட்கும் பொருள்களையும் செய்து கொடுக்கிறோம். அதில் குறிப்பிடத் தக்கது, வீணாகும் கார் டயர்களை வைத்து வடிவமைக்கும் சேர்கள். வெட்டிவேரில் செருப்புத் தயாரிக்கும்போது வேலைப்பளு அதிகமாகவே இருக்கும்.
ஏனெனில், கைத்தறி மூலம் நெசவு செய்யும்போது தினசரி மூன்று மீட்டர் அளவுக்கே வெட்டி வேரை நெய்ய முடியும். இதில் முதலில் வெட்டிவேரை வாங்கி உயரத்துக்கேற்ப பிரிக்க வேண்டும். இதனை நெசவு செய்ய மூன்று நபர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் கொடுத்து வெட்டிவேர் செருப்பைத் தயார்செய்து சரியாக 500 ரூபாய் என்ற அளவில் தருகிறோம். இந்தச் செருப்பானது, வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதாக எங்கள் வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.
சாதாரண செருப்புக்கும் இதற்கும் தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழகத்தில் கடலூரில்தான் அதிக அளவில் வெட்டிவேர் கிடைக்கிறது. இதனைத்தான் அதிக அளவில் வாங்கி பயன் படுத்துகிறோம். தற்போது வெட்டிவேர் செருப்பு உட்பட 60-க்கும் மேற்பட்ட பொருள்களைத் தமிழ்நாடு முழுவதும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். ‘இந்தியா வெட்டிவேர் நெட்வொர்க்’ சார்பில்தான் இதைச் சந்தைப்படுத்தி வருகிறோம்.
செருப்பு மட்டுமல்லாமல், எல்லா வெட்டிவேர் பொருள்களும் அமோகமாக விற்பனையாகிறது. இதற்குக் காரணம், இன்றும் நாங்கள் நெசவுத்தறியில் நெய்து விற்பனை செய்து கொண்டிருப்பதுதான். இதனால்தான் தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில் நாங்கள் இந்தப் பொருள்களை அறிமுகப்படுத்தவில்லை.
இதுதவிர, வெட்டிவேர் பொருள் களைத் தயாரிப்பது பற்றிய பயிற்சி களையும் கொடுத்து வருகிறேன். மேற்கு வங்கத்திலிருந்து எங்களிடம் வந்து பயிற்சியெடுத்து பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். வெட்டிவேர் மட்டுமல்லாமல் வெட்டி வேர் புல், ஹோலிகிராஸ், வாழைநார் ஆகியவற்றிலும் பொருள்கள் தயாரித்து வருகிறேன்.அனைத்துத் தயாரிப்புகளுக்குமே நல்ல தேவை இருக்கிறது.
இதற்காக மாதத்துக்கு மூலப்பொருள் களுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. மூலப்பொருள்களைப் பதப்படுத்த 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அதன்பின் பொருள் உற்பத்திக்கு அதன் தேவையைப் பொறுத்து ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.
சராசரியாக ரூ.70 ஆயிரம் ரூபாய் முழுமையாகச் செலவாகும். சராசரியாகப் பொருள்கள் ரூ.1,20,000-க்கு விற்பனையாகும். இதன் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
இப்போது சென்னையிலும், திண்டுக்கல்லிலும் கேஷ் ஆன் டெலிவரியை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதுதான் எங்கள் இப்போதைய இலக்கு. இதனைப் படிப்படியாக மாநிலம் முழுவதும் கொண்டுபோக வேண்டும் என்பது எங்கள் எதிர்கால இலக்கு.
இந்த பிசினஸில் வெற்றிகரமாக வருவதற்கு எங்களுக்கு முழு ஆதரவையும் அளித்தவர் கவின்கேர் நிறுவனத்தின் அசோக்குமார்தான். அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு வெட்டிவேரைப் பயன்படுத்தி ஏராளமான பொருள்களை உருவாக்கக் காரணமாக அமைந்தது. எங்கள் அனைத்துப் பொருள்களையும் ஆன்லைனில் TINGOBEE.COM என்ற வலைதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறோம்” என்றபடி விடை கொடுத்தார்.
(மதிப்புக் கூடும்)
துரை.நாகராஜன்
படங்கள்: அ.குரூஸ்தனம்
வெட்டிவேரின் மகத்துவம்!
வெட்டிவேரானது அனைத்து வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பார்ப்பதற்குக் கோரைப்புல் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளமாக வளரும் தன்மைகொண்டது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்தபின் புல்லையும் வேரையும் வெட்டி, நடுவில் உள்ள துண்டை மீண்டும் நடலாம். இதன் வேர் கறுப்பு நிறமாக மணத்துடன் இருக்கும்.

மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சரும நோய்களுக்குத் தீர்வாகவும், பல பொருள்களைச் செய்யவும் பயன்படுகிறது. இந்த வெட்டிவேரானது பல வழிகளில் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும் சமீப காலமாக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுநீரில் உள்ள நச்சு உலோகங்களை நீக்கி நல்ல நீராக மாற்றவல்லது. விவசாயத்தைப் பொறுத்தவரை, மண் அரிப்பைத் தடுப்பதோடு, நிலத்திலுள்ள விஷத்தன்மையை முறிக்கும் குணமும் இதற்கு இருக்கிறது. இதன் வேரானது அதிக ஆழத்தில் செல்வதால், நிலச்சரிவைத் தடுக்கும் வல்லமை கொண்டது என்கிறார்கள். இதனால், மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் இதனைப் பெருமளவு நடவு செய்திருக்கிறார்களாம்.