
2018 பட்ஜெட் எதிர்பார்ப்புகள் முதலீட்டில் என்னென்ன மாற்றங்கள் தேவை?
வருகிற பிப்ரவரி 1-ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த பட்ஜெட்டில் நிதித் துறை தொடர்பாக என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என இந்தத் துறை சார்ந்த சில நிபுணர்களிடம் கேட்டோம். அவர்கள் சொன்ன எதிர்பார்ப்புகள் இனி...

“பங்குகளைப் பரிசாகக் கொடுத்தால் வரி விலக்கு அளிக்க வேண்டும்!”
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“டிவிடெண்ட் விநியோக வரிகளை(DDT) அகற்றினால் நல்லது. பங்குகளிலிருக்கும் நீண்டகால மூலதன ஆதாய வரிச் சலுகைகளைத் தொடர வேண்டும். சில பங்குச் சந்தை முகவர்கள், எஸ்.டி.டி வரி நீக்கத்தை வலியுறுத்துவதோடு, நீண்டகால மூலதன ஆதாய வரி விலக்கு நிலையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகின்றனர். இவ்வாறாக, எஸ்.டி.டி வரி நீக்கத்தோடு நீண்டகால மூலதன ஆதாய வரி நீக்கத்தை ஒப்பீடு செய்வது தேவையற்றது. அந்த வரி நீக்கமானது இனியும் தொடர வேண்டும்.
பட்டியலிடப்பட்ட பங்குளையும் மியூச்சுவல் ஃபண்டுகளையும் பரிசாகவோ, நன்கொடையாகவோ அளிக்கும்போது, அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். அதன்மூலம் பங்குச் சந்தை குறித்த விழிப்பு உணர்வு பெருகும். இ.எல்.எஸ்.எஸ், வங்கி வைப்பு நிதி, இ.பி.எஃப் மற்றும் பி.பி.எஃப் என ஒவ்வொரு முதலீடுகளுக்கும் ஒவ்வொரு முதிர்வுக் காலம் இருக்கிறது.
அப்படியல்லாமல், அனைத்து விதமான சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் முதிர்வுக் காலம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதில் மையப்படுத்தப்பட்ட கே.ஒய்.சி செயல்பாடு இருக்க வேண்டும்.”

‘‘கடன் திட்ட முதலீடுக்கு வரிச் சலுகை!’’
ச.ராமலிங்கம், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்
‘‘சிறு முதலீட்டாளர்களின் நீண்டகால சேமிப்பை, நிறுவனப் பத்திரச் சந்தையில் ஈர்க்க கடன் சார்ந்த பங்குச் சேமிப்புத் திட்டம் (Debt Linked Savings Scheme) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பெரிய நிறுவனங்கள், பத்திரச் சந்தைகளில் அதிக அளவில் ஈடுபட இது வழிவகுக்கும்.
சில்லறை முதலீட்டாளர்கள் தங்கள் நீண்டகால சேமிப்புக்களை நிறுவனப் பத்திரச் சந்தையில் முதலீடு செய்கிற மாதிரி, ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்க் ஸ்கீம் (ELSS) போன்று டி.எல்.எல்.எஸ் (DLSS)-க்கும் 80சி-யின்கீழ் ரூ.1,50,000 வரிவிலக்கு கிடைக்க வேண்டும். இதன் லாக் இன் பீரியட் 5 ஆண்டு களாக இருக்க வேண்டும். இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால், கடன்சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் 80C-ன் கீழ் வரிவிலக்குப் பெற இயலும்.’’
‘‘வரி விலக்குக்கான உச்சவரம்பை அதிகப்படுத்த வேண்டும்!’’

எஸ்.சதீஷ்குமார், ஆடிட்டர்
‘‘தற்போது விலைவாசி உயர்ந்துள்ள சூழலில் வருமான வரி விலக்கு அடுக்குகளை (Slabs) மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். வருமான வரி விலக்குக் கான தொகையை ரூ.2.5 லட்சத்தி லிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை 10%, ரூ.10 லட்சத்தி லிருந்து ரூ.25 லட்சத்துக்கு ரூ.20%, ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சத்துக்கு 30% வரி விதிக்க வேண்டும். இப்படி மாற்றியமைத் தால், வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

வீட்டுக் கடனுக்குத் திரும்பக் கட்டும் வட்டியில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம்தான் அனுமதிக்கப்படுகிறது. இதனால், பெரிய லாபம் இல்லை. முன் போல் வீட்டில் குடியிருந்தால் ரூ.2 லட்சம், வாடகைக்கு விட்டிருந்தால் முழு வட்டிக்கும் விலக்கு எனக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக் காணும். அதேபோல, 80C-யின்படி ரூ.1.5 லட்சம் வரை தான் வருமான வரிக் கழிவுக்கு க்ளெய்ம் செய்ய முடியும். இதனை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்பட வேண்டும். அப்படிக் கொண்டு வரப்பட்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல, மக்களின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி.யை விலக்க வேண்டும்.

“கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் உத்தரவாதமான வருமானம்!’’
சுரேஷ் பார்த்தசாரதி, முதலீட்டு ஆலோசகர்
‘‘அமைப்புச் சாராத துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புக்கான திட்டம் எதுவும் தற்போது எதுவுமில்லை. இந்த நிலையில், தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்-ல் இருப்பதுபோல, 80CCD பிரிவின்கீழ் மியூச்சுவல் ஃபண்டில் ரூ50 ஆயிரம் வரையிலான பென்ஷன் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
80C பிரிவின்கீழ் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை முதலீடு செய்பவர்களுக்குத் தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும். வட்டி விகிதங்கள் குறைந்துவருவதால், கடன் சார்ந்த ஃபண்டுகளில் நீண்டகால மூலதன ஆதாயத்தின் கால வரம்பை தற்போதுள்ள மூன்று ஆண்டுகள் என்பதிலிருந்து குறைக்க வேண்டும். நீண்டகால மூலதன ஆதாயம் பெற விரும்புகிறவர்கள் என்.ஹெச்.எ.ஐ மற்றும் ஆர்.இ.சி (NHAI & REC) பாண்டில் தற்போது நிறைய முதலீடு செய்கிறார்கள். அதேபோல், பாண்டுகளை அறிமுகம் செய்ய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் அனுமதியளிக்க வேண்டும்.
தங்கப் பத்திரங்களுக்குக் கிடைப்பது போன்ற உத்தரவாதமுள்ள வருமானத்தை உறுதி செய்வதன் மூலம், முதலீட்டாளர்களை கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளின் பக்கம் கவனத்தை மாற்ற இயலும். மேலும், தங்கப் பத்திரங்கள் வெளியிடக் காத்திருப் பவர்களும், தங்கத்தில் முதலீடு செய்பவர் களும்கூட கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வருவார்கள்.’’
- தெ.சு.கவுதமன்
‘‘அனைவருக்கும் வீடு உறுதி செய்யப்பட வேண்டும்!’’

எம்.முரளி, மேனேஜிங் டைரக்டர், ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்
‘‘பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, ரெரா (RERA) போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படையான, நம்பகமான நிறுவனங்கள் மட்டுமே இனி செயல்பட முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே ரியல் எஸ்டேட் துறையில், தனிநபர் பங்கு மூலதனமானது 2017-ல் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இந்திய வீட்டுவசதிச் சந்தைக்குள் நுழைய பெரிய பென்ஷன் ஃபண்ட் திட்டங்கள் ஆர்வம் காட்டுகின்றன. பட்ஜெட்டில், வீட்டு வசதித் திட்டங்களில் அதிக கவனம் தரப்படுமென நிதி அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன்மூலம் தரமான வீடுகளும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படக்கூடும். ஏற்கெனவே 2014-ல் மத்திய அரசு அறிவித்தபடி ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப் பளிக்கும் உறுதிமொழியை நிறைவேற்றும்விதமாகவும் 2018 பட்ஜெட் அமைய வேண்டும்.
முக்கியமாக, அனைவருக்கும் வீடு என்ற இலக்கின் படி, இந்தியாவிலுள்ள அனைவருக்கும் வீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மானியங்களை, வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். வீடு தேவைப்படும் சரியான நபர்களுக்கு, சரியான விலையில் வீடுகள் கட்டித் தருவது உறுதிசெய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் ‘பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா’வில் 20% அமல்படுத்தப்பட்டாலே நம் நாட்டின் ஜிடிபி-யானது 50% உயர்வடையக்கூடும். ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் இந்தத் திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவதன்மூலம் நம் நாட்டின் தரத்தை உயர்த்த முடியும். பத்திரப் பதிவுத் துறை கணினிமயமாக்கப்பட்டதன் காரணமாக, லஞ்சம் தருவது குறைந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் குறைந்திருப்பதால் இனி வீடுகளின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, இனி ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கலாம்.’’