மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

னந்த விகடனுக்கும், எனக்கும் தொடர்பு ஏற்படுத்தியதில் ஞாநிக்குப் பெரும் பங்குண்டு. ‘வறுமையில் வாடும் வக்கீல்கள்’ என்று ஒரு கட்டுரை, ஜூனியர் விகடனில் வெளியானது. அக்கட்டுரை பற்றியத் தகவல், முகப்பு அட்டையிலும் போடப்பட்டது. பல ஜூனியர் வக்கீல்களுக்கு சீனியர்கள் பணம் கொடுப்பதில்லை என்றும், பலரும் வறுமையில் மதிய நேரத்தில் உணவில்லாமல் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. உடனே கொதித்தெழுந்த வக்கீல்களும், அவர்களது சங்கங்களும் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் மீது குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர். இதுபோன்று பல நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

 ஒருநாள் மாலை, இது பற்றி ஞாநி என்னிடம் கூறியபோது, `அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பது உண்மைதானே, ஜூனியர் வக்கீல்களின் நிலைமை பற்றி இந்திய பார் கவுன்சில் எடுத்த ஒரு கணிப்பில், இப்படிப்பட்ட தகவல்கள் வந்துள்ளனவே’ என்று சொன்னார். அடுத்த நாளே ஆசிரியரிடமிருந்து என்னைச் சந்திப்பதற்கு அழைப்பு வந்தது. ஞாநியும், நானும் அவரைச் சந்தித்தோம். பார் கவுன்சிலின் கணிப்பு அடங்கிய கட்டுரையை அவரிடம் கொடுத்தேன். அவர் உடனே அவரது வழக்குகளில் என்னை ஆஜராகும்படி கேட்டுக்கொண்டார். நான் பார் கவுன்சிலிலும், வழக்கறிஞர் சங்கத்திலும் நிர்வாகியாக இருந்திருப்பதனால், எனக்கு முதலில் தயக்கம் இருந்தாலும் பின்னர் அவ்வழக்குகளில் ஆஜராகி வெற்றியும் பெற்றோம். அதே சமயத்தில், வக்கீல்களின் கோபத்திற்கும் ஆளானேன்.

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

அவ்வழக்கு நடைபெறும்போதே ஆசிரியர் என்னை சட்டம் தொடர்பான பிரச்னைகள் பற்றி ஜூ.வி-யில் கட்டுரைத் தொடர் எழுதச் சொன்னார்.  முதலில் தயங்கிய என்னை, ‘ஆர்டர் ஆர்டர்’ என்ற தலைப்பில் அக்கட்டுரைத் தொடரை எழுதுவதற்கு உற்சாகப்படுத்தியவர் ஞாநிதான். தன்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் அனைவரையும் அவர் ஈடுபடும் அனைத்து நடவடிக்கைகளிலும் எப்படியாவது சிக்கவைப்பதில் அவர் ஞானிதான். அவர் எடுத்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றிலும் என்னை நடிக்க வைத்தார்.

தற்போது கர்நாடக இசை வல்லுநர் டி.எம்.கிருஷ்ணா, சபாக்களிடமிருந்து கர்நாடக இசையை மீட்டு

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறிவருவதுபோல், ஞாநி வார இதழ் ஒன்றில் சபாக்களில் நடத்தப்படும் நாடகங்களின் தரத்தைப் பற்றி விமர்சிக்கும் வகையில் ‘பொய்முகங்கள்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அதைப் பார்த்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சிறப்பு அதிகாரி கோபமடைந்ததுடன் ஞாநியை அந்த நாளிதழிலிருந்து வேலை நீக்கம் செய்தார். ஞாநிக்கு ஆங்கில நாளிதழில் தொடர்ந்து வேலை செய்ய விருப்பமில்லை. ஆனால், நான் கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கில் தொழிலாளர் நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவருக்காக நான் வாதாடி வெற்றிபெற்றேன். அநேகமாக ஏகபோக குழுமங்களால் நடத்தப்படும் இதழ்களில் வேலைபார்க்கும் இதழியலாளர்கள் அப்படிப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவது அரிதே. நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற ஞாநி, மறுபடியும் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களிலேயே அவ்வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஆங்கில ஊடகங்களில் வேலைபார்ப்பது சோர்வு தருவதுடன், மக்களைச் சென்றடைய பயன்படாது என்பது அவரது உறுதியான எண்ணம். அதன்பிறகு தொடர்ந்து அவர் தமிழ் ஊடகங்களில் மட்டுமே வேலைசெய்தார்.

ஊடகங்கள் எம்மொழியிலிருந்தாலும் ஞாநியின் பாணி தனி பாணி. அவர் ஆங்கில நாளிதழில் வேலைபார்க்கும்போது அவருக்கான பணி உயர் நீதிமன்றச் செய்திகளைச் சேகரிப்பதாக இருந்தது. அதற்கு முன்னர் உயர் நீதிமன்றச் செய்தியா ளர்களாகச் சுருக்கெழுத்தாளர்களை மட்டுமே அனுப்பி வைப்பார்கள். அவர்களும் நீதிபதிகளின் உத்தரவைச் சுருக்கெழுத்தில் எடுத்து அதை தட்டச்சு செய்து தாங்கள் வேலைபார்க்கும் நாளிதழில் சமர்ப்பிப்பார்கள். கிட்டத்தட்ட நீதிமன்றச் செய்திகளை வாசிக்கும்போது, அரசாங்க கெசட் போன்ற அனுபவத்தைத் தரும். நீதிமன்றங்களைச் சுற்றி நடக்கும் எந்தச் செய்திகளையும் அவர்கள் சேகரித்து சமர்ப்பிக்க மாட்டார்கள்.

ஞாநி உயர் நீதிமன்ற நிருபராகப் பணியாற்றியபோது பலமுறை அவரைச் சந்திக்க நேர்ந்தது. நீதிபதிகள் முன்னால் செங்கோல் எடுத்துச் செல்லும் தபேதார்கள் காலில் காலணி இல்லாததைப் பார்த்துக் காரணம் கேட்டார். பின்னர் அதைப் பற்றிப் பலரிடம் விசாரித்து இப்படிப்பட்ட கொடுமையை அவர் செய்தியாகத் தனது நாளிதழில் வெளியிட்டார். இது பல நீதிபதிகளின் கோபத்தை சம்பாதித்தது. அதேபோல், மாவட்ட நீதிபதிகள் மாநகரப் பேருந்துகளின் நெரிசலில் தொங்கிக்கொண்டு பயணிப்பதைக் குறித்து விமர்சனங்கள் வந்ததையொட்டி, உயர்நீதிமன்றம் அவர்களுக்காக ஒரு மினி பேருந்தை வாங்கியது. ஆனால், அப்பேருந்து பல நாள்களும் பணிமனையிலேயே பூட்டிவைத்திருந்ததைப் பார்த்த ஞாநி, அதையும் ஒரு புகைப்படச் செய்தியாக வெளியிட்டதில் எங்கள் தலைமை நீதிபதிக்கு வந்ததே கோபம். நிருபர்களுக்குக் கொடுக்கப்பட்ட வசதிகளை ரத்துசெய்து விடுவேன் என்று எச்சரித்தார். உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைச் சேகரிக்க அனுப்பப்பட்டவருக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் எப்படிக் கண்ணில்பட்டன என்பது வியப்பளிக்கும். அதுதான் ஞாநி!

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

ஞாநி போன்றவர்களின் வருகைக்குப் பிறகு நீதிமன்றங்களிலிருந்து வரும் செய்திகள் புதுமாதிரியாக இருந்தன. தீர்ப்புகள் மட்டுமின்றி நீதிபதிகள், வக்கீல்கள், வழக்காடிகள் பற்றிய பல தகவல்களை ஊடகங்கள் சுவைபட அளிக்கத் தொடங்கின.

பாதல் சர்க்காரின் நாடகங்களுக்கான பயிற்சிப் பட்டறையில் அனுபவம் பெற்ற ஞாநி, தனக்கென ஒரு தெருநாடகக் குழுவொன்றை ‘பரீக் ஷா’ என்ற பெயரில் தொடங்கினார். பிரமாண்ட மேடைகளில் வண்ணக் கலவையிலான செட்டிங்குகளுடன் நடைபெறும் நாடகங்களைத் தவிர்த்து, பூங்காக்களிலும் பொதுவெளிகளிலும் தெருவோரங்களிலும் அவரால் நாடகங்கள் நடத்தப்பட்டன. சபா நாடகங்களில் போடப்படும் துணுக்குத் தோரணங்களைத் தவிர்த்து மக்கள் பிரச்னையை முன்னிலைப்படுத்தும் நாடகங்களை ஞாநி அறிமுகப்படுத்தியதுடன், கலை மக்களுக்காக என்பதை உறுதியாக நம்பினார். அதுமட்டுமின்றி இப்படிப்பட்ட கலைகளை மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்லும் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும் நம்பினார்.

இரட்டிப்பு பஸ் கட்டண உயர்வை எதிர்த்துத் தற்போது தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஒரு கடுமையான பஸ் கட்டண உயர்வை எதிர்த்து ஞாநி நடத்திய எதிர்ப்பு இன்றைக்கும் மறக்க முடியாது. எல்லோரையும் அண்ணா சாலையிலுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அலுவலக வாயிலில் கூடச்செய்தார். ஆளுக்கு ஒரு பலூனைக் கையில் பிடித்துக்கொண்டு நடைப்பயணமாக அண்ணா சாலையில் உலா வந்தோம். இனி கட்டணம் செலுத்த முடியாத மக்களுக்கு இப்படி பலூனைப் பிடித்துக்கொண்டு நடராஜா சர்வீஸ்தான் பாக்கியிருக்கிறதென்று அவர் உணர்த்திய பாங்கை அனைவரும் ரசித்தனர்.

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

எல்லாவற்றிலும் வித்தியாசமான ஞாநி, தனது நாடகமொன்றின் இடைவேளையில் தனது கல்யாணத்தையும் நடத்தியதுதான் விநோதம். தான் உறுதியாக நம்பிய சடங்கு மறுப்பை நிறைவேற்றும் வகையில் அவர் தனது திருமணத்தை அறிவித்ததோடு, தன் மனைவிக்குத் தாலியும் கட்டவில்லை. நாடகத்தின் பார்வையாளர்களுக்கு அளிக்கப்பட்ட தேநீர் மட்டுமே திருமண விருந்தாக இருந்தது. அதேபோல், தான் உறுதியாக நம்பியவற்றை அவர் தனது வாழ்க்கையிலும் நிறைவேற்றினார். தன் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேயே இருக்கும் பள்ளிகளில் தனது மகனைச் சேர்க்காமல், நகராட்சிப் பள்ளியொன்றில் சேர்த்துப் படிக்கவைத்தார். இப்படித் தனது நம்பிக்கைகளை வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பவர் ஒரு சிலரே.

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

ஆரம்பத்திலிருந்து தன்னை எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைத்துக்கொள்ளாத ஞாநி, பொதுப்பிரச்னைகளில் கலந்துகொள்வதற்கு மேடைகளின் வித்தியாசத்தைப் பார்த்தது கிடையாது. தி.மு.க அரசை, குடியரசுத் தலைவர் வீட்டுக்கு அனுப்பியதை எதிர்த்து நாங்கள் இருவரும் சேர்ந்து கூட்டங்கள் நடத்தினோம். மண்டல் கமிஷனின் பரிந்துரையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்  நடைபெற்றபோது, ‘மண்டல் குழுவின் அறிக்கை – சமூகநீதியா? அநீதியா?’ என்ற தலைப்பில் சிறிய பிரசுரம் ஒன்றைக் கொண்டுவந்து அதைக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விநியோகித்தோம். இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினோம். பல மனித உரிமைகளுக்கு எதிரான பிரச்னைகளில் பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் எங்களால் நடத்தப்பட்டன. ஆனால், கருத்துக்கு எதிராகக் கருத்து சொல்வதற்குப் பதிலாக  ஞாநியைத் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரைத் தாக்கியவர்கள் சிலர் உண்டு. அதில் சில அறிவுஜீவிகளும் அடங்குவர். தி.மு.க தலைவருக்கு வயதாகிவிட்டது. அதே சமயத்தில் ஸ்டாலின் அரசியலில் பங்குபெற்று ஆண்டுகள் பல ஆகிவிட்டதனால், அவரைத் தி.மு.க முன்னிறுத்த வேண்டும் என்று அவர் கூறிய கருத்திற்கு எதிராக ஒரே மேடையில் வசைபாடிய சில வீரர்களும் உண்டு. அதற்காக ஞாநி தனது கருத்து கூறும் உரிமையை என்றைக்கும் கைவிட்டதில்லை.

சட்டத்தின்படி நடக்கவும், சமுதாய மாற்றத்திற்காக உழைக்கவும் அவர் தயங்கியதில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வி.பி.சிங், தமிழகத்தில் அரசியல் சுற்றுப் பயணம் செய்தபோது அவருடன் பயணம் செய்த ஞாநி அவரது பேச்சுகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். தனது கூட்டங்களை வீடியோ மூலம் பதிவும் செய்தார். பூந்தமல்லியில் வி.பி.சிங் பேசிய கூட்டத்தில் பதிவுசெய்த வீடியோவில் சிவராஜனும், தனுஷும் தெரியவந்தனர். அப்படிப்பட்ட வீடியோ காட்சிகள் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னரே தெரியவந்தது. அந்த வீடியோ ஆதாரம் கொலைகாரர்கள் முன்கூட்டியே தீட்டிய திட்டத்திற்கான அடிப்படை ஆதாரமாக இருந்தது. அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஞாநி ஒப்படைத்ததுடன், சிறப்பு நீதிமன்றத்திலும் அதற்கான சாட்சியத்தைப் பதிவுசெய்தார். இலங்கைத் தமிழரின் பிரச்னைக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வந்த ஞாநி, சட்டத்தில் விதிக்கப்பட்ட கடமையையும் நிறைவேற்றத் தவறவில்லை.

அரசியல் கட்சிகளுடைய போக்கைக் கடுமையாக விமர்சித்த ஞாநி, தேர்தல்களில் யாருக்கும் வாக்கில்லை என்ற ‘நோட்டா’ உரிமையைப் பற்றி எழுதிவந்தார். இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் விதி எண். 49(O) என்ற பிரிவின் கீழ்தான் அந்த உரிமை வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிரிவிலுள்ள ‘O’ என்ற எழுத்தை முன்னிலைப்படுத்தித்தான் தன்னுடைய கட்டுரைத் தொடர்களை ‘ஓ பக்கங்கள்’ என்ற பெயரில் எழுதிவந்தார். அவருடைய கட்டுரைகளால் ஈர்க்கப்பட்ட வாசகர்களின் ஆதரவைக் கண்ட பின்னரே அதே தலைப்பில் அவரது கட்டுரைகள் தமிழகத்தின் மூன்று முன்னோடி இதழ்களில் வெளிவந்தன. வேறு யாருக்கும் அப்படிப்பட்ட கௌரவம் கிடைத்திருக்காது.

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடுப்பதற்காகவே 1954-ம் வருடம் அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசு தமிழ்நாடு நாடக நிகழ்த்துதல் சட்டத்தைக் கொண்டுவந்தது. அச்சட்டத்தின் கீழ் பொதுமேடைகளில் நாடகம் போடுபவர்கள் தங்களது நாடகங்களைக் காவல்துறையிடம் காட்டி அவர்களது தணிக்கைக்குப் பிறகுதான் மேடையில் நிகழ்த்த முடியும். இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தி.மு.கவும், அ.தி.மு.கவும் பல நாடகங்களைத் தடை செய்தனர் அல்லது அதற்கான அரங்கங்களைக் கிடைக்கவிடாமல் செய்தனர். மராட்டியத்திலும், வங்கத்திலும், கர்நாடகத்திலும் மேடை நாடகங்கள் வளர்ந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் நாடகக் கலை வளராததற்கு இச்சட்டமும் ஒரு காரணம்.

இதைப் பற்றித் தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்த ஞாநி, 2012-ம் வருடம் இச்சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்து, அச்சட்டம் அரசமைப்பு விதிகள் அளித்த கருத்துரிமை சுதந்திரத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்ததுடன் அச்சட்டத்தையும் நான் ரத்து செய்துவிட்டேன். அதுவரை நான் நீதிபதியானதை ஏற்றுக்கொள்ளாத ஞாநி, முதன்முறையாக என்னைப் பாராட்ட முற்பட்டார். நான் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அன்று அவர் உயர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து அங்கிருந்து நண்பர்களுடன் நடைப்பயணமாகக் கடற்கரை ரயில் நிலையத்திற்குச் சென்று மின்ரயிலில் ஏறி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். அதற்கு மறுநாளே அவரது ‘கேணி’யில் என்னைப் பேச அழைத்து என்னுடைய நீதிமன்றப் பணிகளைப் பற்றி ஒரு சிறப்பான அறிமுக உரையாற்றினார்.

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)
ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் வக்கீல்கள் செயல்பாடுகள் பற்றி உயர் நீதிமன்றம் என் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்தது. அக்குழுவில் மக்கள்/வழக்காடிகள் சார்பாக ஞாநியையும் உயர் நீதிமன்றம் நியமித்தது. அக்குழு விவாதங்களில் அவர் பங்குகொண்டு பல ஆலோசனைகளைக் கூறியதுடன் அக்குழுவின் அறிக்கையில் அவர் கையொப்பமிட்டார். நாங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து பொதுத்தொண்டாற்றியது அதுவே இறுதி.

இன்றைக்கு ஊடகங்கள் மாபெரும் அளவில் வளர்ந்திருப்பினும் குழந்தை களுக்கான இலக்கியங்கள், இதழ்கள் வளர்ச்சி பெறவில்லையே என்பது ஞாநியின் தொடர் குறையாகும். தன்னுடைய வாழ்நாளில் குழந்தைகளுக்கான இலக்கியங்களோடு மற்ற கலைகளைப் பெருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தனக்கு வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளுக்கான கலை இலக்கியங்களில் மட்டுமே ஈடுபடுவேன் என்று அவர் எப்போதும் கூறுவார். அதேபோல் மாணவர்களின் வளர்ச்சியைப் பெருக்க வேண்டும்; அதற்கு மாற்று யோசனை தேவை என்று கூறி வந்த அவர், தன்னை திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் ஆலோசனைக் குழுவில் இணைத்துக்கொண்டதோடு, அப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்குக் கடந்த பத்து ஆண்டுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)

ஞாநி என்றைக்கும் தலைமுறை இடைவெளி என்ற பேச்சை ஏற்றுக்கொண்டதில்லை. அதற்கு ஏற்றாற்போல் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டவர்களை நோக்கியபோது, அதில் இருபதிலிருந்து அறுபது வரை உள்ள பலரும் இருந்தனர். அதுதான் ஞாநி. இன்றைக்கு கருத்துச் சுதந்திரம் கடுமையாகத் தாக்கப்பட்டு வரும் வேளையில் ஞாநியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனாலும், அவருடைய கருத்தாலும் செயல்களாலும் ஈர்க்கப்பட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் அவரது கருத்தியலை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது உறுதி.