
படங்கள் : ரமேஷ் கந்தசாமி
நவீனத் தொழில்நுட்பம் தமிழக வாழ்வுக்குள் மிகத் தீவிரமாக நுழைந்துள்ள சூழலில், பிறமொழிப் பயன்பாட்டுச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழ்க் கலைச்சொல் வளத்தைக் கூடுதல் பலப்படுத்தி வருபவர் கவிஞர் மகுடேசுவரன். ‘விகடன் தடம்’ இதழுக்காக அவரது வாசிப்பு, புத்தகச் சேகரிப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
“விகடன் தடம் இதழின் இந்தப் பகுதியில் எனக்கு முன்பாகப் பேசியவர்களில் பெரும்பாலானோர்

குறிப்பிட்டிருந்ததைப்போல நானும் என் தொடக்கக் கால வாசிப்பை ‘பாலமித்ரா’, ‘அம்புலிமாமா’விலிருந்துதான் தொடங்கினேன். எப்படியோ என் கைக்கு வந்த ஒரு பொட்டலமாக மடிக்கப்பட்ட காகிதத்திலிருந்த கதையைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருந்தேன். இதைக் கவனித்த என் அப்பா, உடனே கடைக்குப் போய் ‘பாலமித்ரா’, ‘அம்புலிமாமா’ ஆகிய புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். அப்போது கிராமத்தில் வசித்து வந்தோம். எனவே, மாதம் ஒருமுறை மட்டும்தான் புத்தகங்கள் புதிதாகக் கிடைக்கும்.
எனவே, ஒருமுறை வாங்கிக்கொடுக்கப்படும் புத்தகத்தைத்தான் மாதம் முழுவதும் திரும்பத் திரும்ப படித்து வருவேன். இப்படியான நிலையில் ஆறாம் வகுப்பில் திருப்பூரில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதுதான் மிகப் பெரிய நன்மையைச் செய்தது. அதாவது பள்ளிக்கு அருகிலேயே நகர நூலகம் இருந்தது. தற்போது அதுதான் மாவட்ட நூலகம். அங்குதான் வரலாறு, வாழ்க்கை வரலாறு என்று புதிய உலகங்களைக் காட்டிய நூல்களைச் சந்தித்தேன். வாசிப்பைச் சாத்தியப்படுத்தியது என் பள்ளிதான். நந்தகோபால மேல்நிலைப் பள்ளி. அங்கிருந்த ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டி அறிவுசார் புத்தகங்களை வாசிக்க மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். இன்றைக்கு அப்படி ஒரு சூழலை எங்கும் காண முடியவில்லை. புத்தக வாசிப்பு ஆர்வம் என்பது இயற்கையாகவே எனக்குள் இருந்துள்ளது. அந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட என் தந்தை அதை ஊக்குவித்தார்.
வெறும் 800 ரூபாய் சம்பளம் வாங்கியபோதே 1,000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்குவேன். புத்தகங்களின் மீது அவ்வளவு ஆர்வம் இருந்தது. இன்றைக்கு புத்தகங்களை வாங்குவது இலகுவான விஷயம். ஆனால், அன்றைய நிலைமை அப்படி இருக்கவில்லை. வார இதழான ‘மாலைமதி’யை தெருவில் ஒருவர் வாங்கினால், அதைக் குறைந்தது 30 பேராவது படிப்பார்கள். கவிஞர் புவியரசு குறிப்பிடுவார் ‘நாங்கள் அச்சடித்த வானம்பாடி இதழ்கள் குறைவுதான். ஆனால், அதைப் படித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு புத்தகத்தையே 500 பேர் படித்ததெல்லாம் எனக்குத் தெரியும்’. புத்தகம் எப்போதும் தேங்குவதாக இருக்கக் கூடாது. அப்படி நூலகத்தின் பெயரால், சேகரத்தின் பெயரால் தேங்கும் புத்தகங்கள் மீண்டும் மீண்டும் பலரால் வாசிக்கப்பட வேண்டும்.

இன்றைய காலத்தைப்போல கவனத்தைச் சிதறவைக்கும் பல்வேறு ஊடகங்கள் அன்று இல்லை. சினிமா அல்லது நாடகங்கள் என்ற இரண்டுதான் உண்டு. அங்கும்கூட மாதம் ஓரிரு முறைதான் செல்ல முடியும். எனவே, நிறைய நேரமிருந்தது. அந்நேரத்தை வாசிப்பிற்கு என ஆக்கிக்கொண்டேன். வாசிக்க வாசிக்கப் புத்தகத்தை மதிப்புமிக்க ஒரு கலைப்பொருள்போல் பார்க்கப் பழகிக்கொண்டேன். ஒரு பக்கத்தைக்கூட கசங்காமல் கிழிக்காமல் படிப்பது, நேர்த்தியாகக் கையாளுவது என்று சில நல்ல பழக்கங்களைக் கைக்கொண்டேன். பின்பு ஒருமுறை, இந்த நல்ல பழக்கம் எப்படி நமக்குள் வந்தது என்று யோசித்தால், என்னை அறியாமலேயே புத்தகங்களை நெடுநாள் சேகரிக்க வேண்டும் என்ற ஆசைக்கு ஆட்பட்டிருக்கிறேன் என்பது புரிய வந்தது.
இன்ன புத்தகம் என்றில்லாமல் தொடக்கத்தில் கிடைத்த அனைத்துப் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன். பின்னர், அப்படியே மெல்லக் கவிதைகள் பக்கம் நகர்ந்தேன். கவிதைகள் எனக்குள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின. ‘வானம்பாடி’ வகை கவிதைகளை மனப்பாடம் செய்து படிக்கும் அளவுக்கு ஆர்வத்துடன் வாசித்தேன். இந்தக் கவிதை ஆர்வம் என்பது சிறுவர் இதழ்களுக்குக் கவிதை புனைந்து அனுப்பும் அளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. 13 வயதிலேயே ‘கோகுலம்’ இதழில் என் கவிதை பிரசுரமாகியது. ஆனால், அது வானம்பாடியின் சாயல் எதுவுமில்லாமல் மரபு நடையில் இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அறிவுத்துறை சார்ந்த நூல்களை நோக்கியதாக என் பயணம் இருந்தது.
90-களில் கஸ்தூரிரங்கன் கைகளுக்குக் ‘கணையாழி’ வந்தவுடன் கல்கி ஏஜென்ட்கள் மூலம் இதழ் விநியோகம் செய்யப்பட்டது. அதனால் திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் இதழ் வரத்தொடங்கியது. அதில் மாதம் ஒரு குறுநாவல் வரும்; செறிவான கதைகள் இருக்கும். அதன் உள்ளிருக்கும் கட்டுரைகளில் வரும் மேற்கோள்கள் நம்மை இன்னும் அறிந்துகொள்ளத் தூண்டும். தீவிர வாசிப்பை நோக்கிய பாதையை அது அமைத்துக் கொடுத்தது. இப்படியாக வாசிப்பு தொடர்ந்துகொண்டிருந்த நேரத்தில் ஒரு சின்னப் புத்தகம் எனக்குள் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அது ‘முதலாளித்துவம் என்றால் என்ன?’ என்கிற புத்தகம். முன்னேற்றப் பதிப்பகப் புத்தகங்களைக் கையில் எடுத்தால், அதில் நிறைந்துள்ள பல வார்த்தைகள் நம்மை அச்சுறுத்தும். ஆனால், இந்தப் புத்தகம் மிக அழகாக அதன் தலைப்பை புரியவைத்தது. இதற்கு அடுத்து, ‘கூலி உழைப்பு என்றால் என்ன?’ என்கிற புத்தகமும் கிடைத்தது. இரண்டையும் படித்தவுடன் எனக்கு ஒட்டு மொத்தத் திருப்பூரும் வேறு வடிவில் காட்சியளித்தது; பொருள் தந்தது. ஒருவருக்குள் இப்படியான திறப்புகளை நிச்சயமாகப் புத்தகங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நம்புகிறேன். அந்த இரண்டு புத்தகங்களும் இன்னமும் என்னிடம் இருக்கின்றன.
அதுபோல, மொழி குறித்த ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது திரு.வி.க-வின் எழுத்துகள்தான். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழி சார்ந்த நூல்களை, அகராதிகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். தற்போது நான் மொழி சார்ந்த அபூர்வ நூல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன் / வருகிறேன். 1800-களில் வந்த மொழி நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். மாகடல் கார்த்திகேய முதலியார் எழுதிய தமிழின் முதல் மொழிநூலைப் பெரிய தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தேன்; பெற்றேன். அதேபோல ‘குடும்பம் அரசு தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்’ என்கிற புத்தகத்தை நிறையவே தேடித்தான் அடைந்தேன். அது ஒருகாலத்தில் சாதாரணமாகக் கிடைத்த புத்தகம். ஆனால், அதை வாசிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய வயதில் அதைத் தேடி அலைந்து படிக்க வேண்டியதாக இருந்தது.
நாமக்கல் கவிஞர் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ படிக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த நூலின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு குறளின் முடிவிலும் அடுத்த குறளுக்கான தொடர்பு இருப்பதாக அதில் நிறுவியிருப்பார். மிகச்சிறப்பான தெளிவுரை; 600 பக்கங்கள் கொண்டது. ஆனால், அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதே நாமக்கல் கவிஞர் எழுதிய சிறிய திருக்குறள் தெளிவுரைதான் கிடைத்தது. ஆனால், பாருங்கள்; வியப்பிலும் வியப்பாக ஒருநாள் நண்பர் அதைப் பரிசாகக் கொண்டுவந்து கொடுத்தார். எந்தப் புத்தகத்தை நாம் தேடுகிறோமோ, அது நம்மைத் தேடி வந்து அடைந்துவிடுகிறது என்று கவித்துவமாகப் புரிந்துகொண்டேன். உண்மையில், நாம் எப்படிப் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோமோ அதுபோலவே, புத்தகங்களும் அதற்கான வாசகனைத் தேடிக்கொண்டுதானிருக்கின்றன.
‘மரணத்தின் பின் மனிதர் நிலை’ என்கிற புத்தகம், தற்போது விற்பனையில் இல்லை. அது என்னிடம் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆளுமைகளின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பதான புத்தகம் அது. பெரிய மனமாற்றத்தை எனக்குள் ஏற்படுத்திய புத்தகம் அது. எனக்கு மட்டுமல்ல அதைப் படிக்கும் யாருக்குமே மனமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
‘விளக்குகள் பல தந்த ஒளி’ பல்வேறு தலைப்பின் கீழ் உலகின் மிகச் சிறந்த கருத்துகளைக்கொண்ட புத்தகம். தமிழின் முதன்மையான ஆளுமைகள் பலரிடமும் இந்தப் புத்தகம் உள்ளது. யாவரிடமும் இருக்க வேண்டிய உலகப் பொதுநூல் இது. அதுபோல் ‘சார்பியல் தத்துவம் என்றால் என்ன?’ என்ற ஐன்ஸ்டீனின் புத்தகம். மிகச் சின்ன நூல். ஆனால், மிகப் பெரிய பார்வையை வழங்கக்கூடியது. முன்னேற்றப் பதிப்பகத்தின் ‘மஞ்சள் பிசாசு’ நூல், ‘தங்கம் ஏன் உலகின் மதிக்கக்கூடிய உலோகமாக இருக்கிறது; அதற்கு மட்டும் ஏன் இவ்வளவு மதிப்பு’ என்பதில் தொடங்கி தங்கம் குறித்த அறிவியல் கருத்தினையும், பொருளாதாரக் கருத்தினையும் தெளிவாக விளங்கவைக்கும்.
‘துப்பாக்கி : எஃகு கிருமி’ என்கிற புத்தகமும் நிலவியல் அரசியல் குறித்து விரிவாகப் பேசுகிற நூல். பல்வேறு படிப்பினைகளை நமக்குத் தரும். உலகம் முழுக்கப் பல பிரதேசங்களை நிலப்பகுதிகளை ஐரோப்பியர்கள் சீரழித்த வரலாற்றை அந்த நூல் பேசுகிறது. மேற்படி நூல்களைத்தான் நான் புதிய வாசகர்களுக்குப் பரிந்துரைப்பேன். நாவல், சிறுகதை போன்ற புனைவு சார்ந்த புத்தகங்களெல்லாம் அவரவர் வாசிப்பு விருப்பம் சார்ந்துதான் தேர்வு செய்ய முடியும். ஆனால், மேற்படி புத்தகங்கள் அனைவருக்கும் அறிவுத்தளத்தில் இயங்க உதவி செய்யும்”
சந்திப்பு: வரவனை செந்தில்