மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

புலியூர் முருகேசன்

“பிறப்பின் வழி தகுதி நிர்மாணிக்கும் ஒரு கசட்டுச் சமூகத்தின் எச்சத்துக்குள் ஜீவிப்பதென்பதே பெரும் கசப்பு. அக்கசப்பைத் தின்று செரித்து, எழுத்தாய் கழிக்கிறேன். அதன் வீச்சம், புரையோடிக் கிடக்கிற இச்சமூகத்தின் வீச்சம். நான் எதிர் எறிகிற வார்த்தைகளின் வெம்மை, எதிரிகளின் உயிரை உலுக்குகிறது. அவர்களின் ஆதிக்க மூளையின் ஊனைப் பொசுக்குகிறது. அதற்கான அவர்களின் எதிர்வினைதான் என்னை இடைவிடாது எழுதவைக்கிறது. சாதி மமதைகளுக்கு எதிரான என் குரல் எல்லா இழப்புகளையும் கடந்து உயிர்த்துக்கொண்டே இருக்கும்; நானில்லாக் காலங்களிலும்!”

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

படம்: கே.குணசீலன்

கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த, புலியூர் முருகேசன், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகப் பணிபுரிகிறார்.  ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘உடல் ஆயுதம்’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். ‘மூக்குத்திகாசி (முப்பாலி)’ என்ற நாவலும், ‘மக்காச்சோளக் கணவாய்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஒரு கதைக்காகக் கடும் எதிர்ப்பை எதிர்கொண்ட புலியூர் முருகேசன், தற்போது தஞ்சாவூரில் வசித்துவருகிறார்.

தனலெட்சுமி பாஸ்கரன்

“முரண்கள் நிறைந்த வாழ்க்கைச் சுழலில் உழன்று முழுகி மெதுவாய் மேலெழுகையில், என் கைகளில் முத்துக் குவியல்களாய் அனுபவங்களின் கூறுகள்! அவற்றை என் குறுங்கவிதைகள் வழியே கடத்துகிறேன். புரிதலுக்கு ஏற்ற எளிமையும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் மென்மையுமாக மனிதர்களின் மனதில் அமர்ந்து உறவாட வேண்டும் என்பதே என் கவிதைகளுக்கு நான் உடுத்தும் இலக்கணம். இசையிலும் மொழியிலும் என் கவிதைகள் எப்போதும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.” 

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

படம்: தே.தீட்ஷித்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள அழியாநிலை என்ற கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி பாஸ்கரன், மத்தியக் குடும்பநலத் துறையின் முதுநிலை எழுத்தராக, திருச்சி விமான நிலையத்தில் பணிபுரிகிறார். ‘அம்மா உன் உலகம்’, ‘பறையொலி’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தற்போது ஹைக்கூ கவிதைத் தொகுப்பு ஒன்று வெளிவர இருக்கிறது. இவர் வீணை இசைக்கலைஞரும்கூட.

சூர்யநிலா

“கவிதையும் கவிதை சார்ந்த வாழ்வும் பூரணமிக்கவை. அப்படியொரு வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. எழுத்துதான் என் கம்பீரம். அதுதான் என் ஆளுமை. என்னிலிருந்து எழுத்தைக் கழித்தால், ஏதுமற்றவன் நான். கவிதைகளை வலிந்தேற்க, நான் என் சுயவாழ்வைப் பகடையாடியிருக்கிறேன். அதில் இழப்புகளின் வலியாற்றி எழுத்தே என்னை ஆற்றுப்படுத்துகிறது. நான்தான் என் படைப்புகளுக்கான கச்சாப்பொருள். நான் தீர்ந்தபின், நானாக இந்தப் பிரபஞ்சத்தில் உலவித் திரியும் என் படைப்பு.”  

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

படம்: எம்.விஜயகுமார்

சேலம், ஆத்தூரைச் சேர்ந்த சூர்யநிலா, ஜவ்வரிசி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் கணக்கராகப் பணிபுரிகிறார். ‘சில்லுகள்’, ‘இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு’, ‘அங்கு நீயும் இங்கு நானும்’, ‘புனலில் மிதக்கும் முகம்’ ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். ‘எழுத்துக்களம்’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இவரது இயற்பெயர் மு.ரவிச்சந்திரன்.

ரத்திகா

“குழந்தைகளின் உலகத்தில் வாழ்பவள் நான். அவர்களின் இயல்பிலிருந்தே என் கவிதைகள் துளிர்க்கின்றன. குழந்தைகளின் சிதைவற்ற பார்வையும், கபடமில்லாச் செயல்பாடும், பதற்றமில்லா நகர்வுகளுமே என் கவிதைகளின் தன்மையும். தன்னையும் ஒரு குழந்தையாகச் சிருஷ்டித்துக்கொண்டு, என் கவிதை இந்த உலகத்தின் மேனியில் தவழ்ந்து திரிகிறது. என்றும் என் கவிதைகளுக்கு முதுமையில்லை. தீண்டா வெளியாகக் காலம் அவற்றைச் சுற்றிச் சுழலும்.”

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

படம்: தே.தீட்ஷித்

திருச்சியைச் சேர்ந்த ரத்திகா, திருவளர்ச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். ‘தேய்பிறையின் முதல் நாளிலிருந்து’ என்ற கவிதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். குழந்தைகளின் உலகத்தை உள்ளடக்கிய நாவல் ஒன்றும் புதிய கவிதைத் தொகுப்பு ஒன்றும் விரைவில் வெளிவர இருக்கின்றன. இவரது இயற்பெயர் சகுந்தலை.