மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

கதமலையின் முகடுகளில் குதிரைகள் பாய்ந்து போய்க்கொண்டிருந்தன. பாரி, காலம்பன், கபிலர் ஆகிய மூவரைத் தொடர்ந்து வீரனொருவன் கூடுதலாக ஒரு குதிரையைக் கையிற்பிடித்தபடி பின்தொடர்ந்தான். அக்குதிரையில் உணவுப்பொருள்களின் சிறுமூடைகள் ஏற்றப்பட்டிருந்தன. இவர்கள் எவ்வியூரிலிருந்து புறப்பட்டு மூன்று நாள்களாகி விட்டன.

கபிலர் இளைஞராய் இருந்தபொழுது குதிரையேற்றப்பயிற்சி பெற்றிருக்கிறார். ஆனால் அதன்பின் நீண்டகாலம் குதிரையேற்றத்தில் ஈடுபடவில்லை. எவ்வியூர் வந்தபின் அவ்வப்பொழுது குதிரையில் ஏற்றி ஒன்றிரண்டு மலைத்தொடருக்கு உதிரன் அழைத்துச்செல்வான். அப்பழக்கம் இருந்ததால்தான் இப்பயணத்தில் அவரால் பங்கெடுக்க முடிந்தது.

இதுவரை மூன்று மலைகளையும் இரு ஆறுகளையும் கடந்துவிட்டார்கள். ஆனால் பயணம் இன்னும் நெடுந்தொலைவு. வடக்கும் தெற்குமாக நீள்கோடெனக் கிடப்பதுதான் பச்சைமலைத்தொடர். இக்கோடு சில இடங்களில் நான்கு மடிப்புகளாகவும் சில இடங்களில் ஏழெட்டு மடிப்புகளாகவும் இருக்கிறது. ஆனாலும் பெருமடிப்புகளாக உள்ள மூன்று மடிப்புகளைத்தான் காரமலை, நடுமலை, ஆதிமலை என அழைக்கின்றனர். இம்மலைத்தொடரில் உள்ள முகடுகளும் துண்டிக்கப்பட்ட தனிக்குன்றுகளும் எண்ணிலடங்காதவை. இவற்றிற்கிடையில் வழிந்தோடும் ஆறுகளைக் கணக்கிட முடியாதுதான். ஆனாலும் பேராறுகளுக்குப் பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நீள்மடிப்பு மலைத்தொடரின் வடவெல்லை முதல் தென்னெல்லை வரை இருப்பவர்கள்தாம் பதினான்கு வேளிர்குடியினர். இம்மலைத் தொடரின் சிறுபகுதியில்தான் பறம்புநாடு இருக்கிறது. ஏறக்குறைய அதன் நடுவில் எவ்வியூர் உள்ளது. எவ்வியூரிலிருந்து குதிரையில் புறப்பட்டால் பறம்பின் வடக்கு எல்லையைச் சென்றடைய எட்டுநாள்களாகின்றன. ஐந்துநாள் பயணத் தொலைவில் காழகமலையுள்ளது. அதன் அடிவாரத்தில் இருப்பதுதான் உப்பறை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

அதனை நோக்கிய பயணத்தின் மூன்றாம் நாள் அகதமலையில் பயணித்துக்கொண்டி ருந்தனர். கபிலர் இதுவரை பறம்பின் காடுகளை நடந்துதான் கடந்துள்ளார். முதன்முறையாக அகலவிரிந்து கிடக்கும் பெருங்காடுகளை மலைச் சரிவின் இருபக்கமும் பார்த்தபடி விரைந்து கொண்டிருக்கிறார். பறம்பின் அரண்போன்ற அமைப்பு என்னவென்பதை, காணும் காட்சிகள் உணர்த்திக்கொண்டிருந்தன. இயற்கையின் பெருவிரிப்பிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் கவனமாய்க் கடிவாளத்தை இழுத்துச்செல்ல வேண்டியிருந்தது.

காடுகளின் மீதான வியப்பேதும் காலம்பனின் கண்களில் இல்லை. வனத்தின் ஆதிப்பிளவு களினூடே முளைத்து வந்தவன் அவன். பாசிபடர்ந்து குளுமையேறிய ஈரப்பாறையையும் வெக்கையை உமிழ்ந்துதள்ளும் கரும்பாறையையும் இரு தோள்களெனக்கொண்டவன். அவனது வியப்பெல்லாம் முன்னால் விரைந்து சென்று கொண்டிருக்கிற பாரி எவ்வடையாளங்களைப் பாதைகளாக்கிக் கடந்துகொண்டிருக்கிறான் என்பதுதான்.

குதிரைகள் இளைப்பாற சிற்றோடையின் அருகில் நின்றான் பாரி. ஓடையில் நீர் சிறுத்து ஓடிக்கொண்டிருந்தது. “இவ்வாண்டு கோடையின் உக்கிரம் மிகக்கடுமையாக இருக்கும்” என்று சொன்னபடி நீரினை அள்ளிப்பருகினான். அப்பொழுதுதான் குதிரையை விட்டு இறங்கிய கபிலர் இடுப்பில் கைகளைவைத்து முதுகைப் பின்புறமாக வளைத்துக்கொடுத்தபடி கேட்டார், “கோடையின் கடுமை அதிகமாக இருக்குமென்றா சொல்கிறாய்?”

“ஆம். நாம் உப்பறை சென்று திரும்புகையில் இவ்வோடை முற்றிலும் வற்றியிருக்கும்.”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?”

“கோடை தொடங்கிய முதல் மாதத்திலேயே நீர்சுரப்பு குறைந்துவிட்டது. இம்மாதத்தில் நீர் இழுத்தோடவேண்டும். ஆனால் இதன் போக்கைப் பாருங்கள். உள்ளே நகரும் மீனின் வேகம்கூட நீருக்கு இல்லை. பாறை இடுக்குகள் இன்னும் பத்து நாளுக்குள் இவ்வோடையைக் குடித்துவிடக்கூடும்.”

பாரியின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கணிப்பினைச் சொல்லிக்கொண்டிருந்தது. சிற்றோடைகள் வற்றி முடித்த வேகத்தில் ஆறுகள் காயத்தொடங்கும் என்று சொல்லியபடி ஓடையைக் கடந்து மீண்டும் குதிரையில் ஏறினான்.

“இவ்வோடைதான் அகதமலையின் எல்லை. இதனைக் கடந்தால் தொடங்குவது வெப்புமலை. சற்றே செங்குத்தாய் மேலேற வேண்டும்” என்று சொல்லியபடி சிறிது தொலைவு மேலேறியவுடன் கைநீட்டிக் காண்பித்தான். இறங்குமலையில் மிகத்தொலைவில் பாறையின்மீது வெள்ளை விழுதென சிறுத்தநீர் செங்குத்தாய் இறங்குவது தெரிந்தது. “அதோ தெரிகிறதல்லவா! அந்த அருவியில் பெருவெள்ளம் கொட்டும். ஆனால் அதனைத்தொடர்ந்து ஓடும் ஆற்றைக் கண்ணால் பார்க்க முடியாது. இவ்வடர் காட்டில் மரங்களுக்கூடே அது முழுமுற்றாக மறைந்துவிடும். எனவே இதற்கு  மறையாறு என்று பெயர்.”

குதிரையை நிறுத்தி, காலம்பனும் கபிலரும் அவ்வடர் காட்டினைப் பார்த்தனர். பாரி சொன்னான், “இக்காட்டில்தான் வேறெங்கும் இல்லாத ஓர் உயிரினம் உள்ளது. நெடுங்காது முயல்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு மட்டும்தான் எலிகளின் காதினைப்போன்ற குறுங்காது முயல் உள்ளது. அதன் குருதியில்தான் பறம்பின் வீரர்கள் பிடித்து நிற்கும் வில்லின் நாண்கள் ஊறவைக்கப்படுகின்றன.”

அருவியைப் பார்த்துக்கொண்டிருந்த காலம்பனும் கபிலரும் வியப்பு நீங்காமல் பாரியின் பக்கம் திரும்பினர்.

பாரி சொன்னான், “சமவெளி மனிதர்கள் பயன்படுத்தும் வில்லின் ஆற்றலைவிட மலைமக்கள்

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

பயன்படுத்தும் வில்லின் ஆற்றல் மிகவலிமையானது. மலைமக்களில் மற்றவர்கள் பயன்படுத்தும் வில்லிலிருந்து அம்பு போய்ச்சேரும் தொலைவைவிட மூன்றுமடங்குத் தொலைவிற்குப் பறம்பின் வீரன் பயன்படுத்தும் அம்பு போய்ச்சேரும். அதற்கு முக்கியமான காரணத்தில் ஒன்று வில்லில் பூட்டப்படும் நாணின் இழுவைத் திறன். நாங்கள் பயன்படுத்தும் நரம்பினைக் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்துவிடுவோம். இழுத்துத் தள்ளும் அதனது விசை அளவிட முடியாததாக இருக்கிறது.”

வியப்பு நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்த இருவரும் இப்பொழுது குதிரையை நகர்த்தியே ஆகவேண்டியிருந்தது. ஏனென்றால், பாரி பேசியபடி முன்னால் போய்க்கொண்டிருந்தான். வெப்புமலையின் வடபுற இறக்கத்தில்தான் சூளூர் இருக்கிறது. இன்று இரவு தங்கல் அங்குதான். மூன்று நாள் பயணத்தின் வழியில் ஊர்கள் இல்லை. மிகத்தள்ளி ஒன்றிரண்டு குன்றுகளைத்தாண்டித்தான் ஊர்கள் இருந்தன. அங்கு போய்த் திரும்பினால் மிகக்காலந்தாழும் என்பதால் வழியில் உள்ள குகைத்தளங்களிலேயே தங்கினர். இன்றுதான் ஊரினில் தங்கப்போகின்றனர்.

பாரி வருகை ஊர்மக்களை மகிழ்ச்சிக்கூத்தாடச் செய்யும். வந்த மறுநாள் காலையிலேயே புறப்படுவது இயலாத செயல். ஆனால், புறப்பட்டே ஆகவேண்டிய நிலையை எடுத்துச்சொல்லிப் புரியவைப்போம் என்றுதான் பாரி அதனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான்.

குதிரைகள் ஏற்றத்தில் மிகவும் மெதுவாக ஏறின. காலம்பனின் குதிரை ஒரு நாளில் இரண்டு முறை மாற்றப்பட்டது. பயணவழியில் நீண்டுகிடக்கும் படர்பாறை இருந்தது. குதிரையை விட்டு இறங்கினான் பாரி. அருகில் வந்ததும் மற்றவர்களும் இறங்கினர். சமதளப்பாறையாகத்தானே இருக்கிறது. இதற்கு ஏன் குதிரையை விட்டு இறங்கினான் பாரி என்ற எண்ணம் மற்ற இருவருக்கும் ஏற்பட்டது.
இறங்கி நடந்தபடி பாரி சொன்னான். “சூளூர்தான் முடியனின் ஊர். அங்குதான் அவன் குடும்பம் இருக்கிறது.”

முடியன் என்பது பெயரன்று, தேக்கனைப்போல அது ஒரு பட்டம். சமவெளி அரசுகளில் படைத்தளபதி என்ற பட்டம் இருப்பதுபோல பறம்பிலுள்ள பட்டமிது. ஆனால், இந்தச் செய்தி காலம்பனுக்குத் தெரியுமா என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பாரி சொன்னான், “நாம் கடந்து வந்த ஓடை எழுவனாற்றில் போய்ச் சேருகிறது. அந்த ஆற்றுக்கு நீர்ப்பிடிப்பு ஓடைகள் மிகக்குறைவு. எனவே வேகமாக வற்றிவிடும். பச்சைமலையின் உள்ளிடுக்கின் வழியாகவே நீண்டதொலைவு பயணிக்கும் இவ்வாறு குறும்பியூர்க் கணவாயின் வழியாகக் கீழ்த்திசையில் திரும்பி, சமதளத்தை நோக்கிப் பாய்கிறது. கரடுமுரடற்ற பாதையாக இதன் வழித்தடம் அமைந்திருக்கிறது.”

குதிரைகள் பாறையை மிதித்து நடக்கும் ஓசையும் பாரி பேசும் ஓசையும் மட்டுந்தான் கேட்டன. இருவரும் மிக அமைதியாக பாரி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். “இயற்கையின் மாபெரும் அரணால் சூழப்பட்ட பறம்பினைத் தாக்க எதிரிகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பு எழுவனாறுதான்” என்றான் பாரி. காலம்பனும் கபிலரும் அதிர்ந்தனர்.

“கோடைக்காலத்தில் இவ்வாற்றின் வழித்தடத்தைப் பயணவழியாகப் பயன்படுத்த முடியும். அதற்கேற்ற தன்மையுடன்தான் இதன் அமைப்பிருக்கிறது. குறும்பியூர்க் கணவாயில் இவ்வாற்றின் வழித்தடம் பற்றி உள்ளே நுழைபவன் எவ்வியூரின் அருகிலுள்ள குன்றுவரை வந்துசேரலாம். ஆனால் அதில் மூன்று சிக்கல்கள் உண்டு. ஒன்று, பறம்புக்குள் இப்படியொரு வழித்தடம் இருக்கிறது என்பது வெளியாட்களுக்குத் தெரிய வாய்ப்பேதுமில்லை. இரண்டு, குறும்பியூர்க் கணவாயிலிருந்து இந்த வெப்புமலைவரை வந்து சேர்வதற்குள் இவ்வாற்றில் பல ஆறுகளும் ஓடைகளும் இணைகின்றன. அவற்றின் அகலமும் எழுவனாற்றின் அகலமும் ஒன்றுபோல்தான் இருக்கின்றன. எனவே மூல ஆறு எது என்பதனை எளிதில் கண்டறிய முடியாது. இணையும் ஆறுகளின் வழியே திரும்பினால் இயற்கையின் பெரும் பொறிக்குள் போய்ச் சிக்கி மீளமுடியாமல் அழிவார்கள்.

மிகச்சரியான வழியைத் துல்லியமாகக் கண்டறிந்து பலநாள் பயணப்பட்டு இந்த வெப்புமலை அடைந்து விட்டார்கள் என்று வைத்துக்கொண்டால் அதன் பிறகு இதனைக்கடந்து ஒருவன்கூட எவ்வியூரை நோக்கித் தென்திசையில் சென்றுவிட முடியாது” என்றான் பாரி.

குதிரைகள் படர்பாறையை நடந்து கடந்துவிட்டன. ``மேலேறிப் பயணத்தைத் தொடர்வோம்; பொழுதாகிக் கொண்டிருக்கிறது” என்று சொல்லி, குதிரையின் மேல் ஏறினான். காரணம் தெரியாமல் குதிரையின் மீது ஏற மற்ற இருவருக்கும் மனமே இல்லை.

முதன்முறையாக காலம்பன் பாரியின் சொல்லை மறுத்து நின்றான். குதிரையில் ஏறியபடி பின்னால் திரும்பிப்பார்த்த பாரி, கடிவாளத்தை இடதுபக்கமாக இழுத்தபடி அவர்களை நோக்கித் திருப்பினான். குதிரை கனைத்தபடி திருப்பியது. “ஏனென்றால் இங்குதான் சூளூர் இருக்கிறது. இவ்வுலகின் தலைசிறந்த வீரர்கள் இவ்வூரில்தான் பிறக்கிறார்கள்” சொல்லும்பொழுதே உரத்தது பாரியின் குரல். “பறம்பின் மாவீரனே இம்மலையைக்காக்கும் பெரும்பொறுப்பினை ஏற்று முடியனாகிறான். இதுவரை முடியன் பட்டத்தை ஏற்றவர்கள் அனைவரும் சூளூர்க்காரர்களே. பறம்பில் உள்ள மற்ற வீரர்கள் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்த நாணேற்றி எய்யும் அம்பின் தொலைவை வெறும் நரம்பில் நாணேற்றி சூளூர்க்காரர்கள் எய்துமுடிப்பர்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

காலம்பனும் கபிலனும் வியந்து நிற்க, பாரி கேட்டான், “இன்றைய நிலையில் பறம்பில் வில்வித்தையில் மாவீரன் யார் தெரியுமா?”

சற்றும் எதிர்பாராத கேள்வியாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நீலனின் திறன் பற்றி தேக்கன் நிறைய சொல்லியுள்ளார். உதிரனின் ஆற்றலைப்பற்றிய பேச்சுவந்தபொழுது வாரிக்கையன் சொன்ன செய்திகள் மிகுந்த வியப்பினை ஏற்படுத்தின. ஆனாலும் முடியனைப்பற்றி இதுவரை யாரும் எதுவும் பேசியதில்லை. இப்பொழுது பாரி சொல்லும் குறிப்பிலிருந்து பார்த்தால் அவனாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அவர்களிடம் விடையை எதிர்பார்க்காமல் பாரி சொன்னான், “அம்மாவீரனின் பெயர் இரவாதன். முடியனின் ஒரே மகன். இன்றிரவு நமக்கான விருந்தினை ஏற்பாடு செய்து காத்திருக்கிறான்.  காலந்தாழ்த்தாமல் குதிரையேறுங்கள்.”

செம்மாஞ்சேரலிடமிருந்து விடைபெற்று வஞ்சித்துறைக்கு வந்தான் ஹிப்பாலஸ். சோழனின் படையெடுப்பு பற்றி இருவருக்கும் தெரியவேண்டிய செய்தி இருந்தது. அதனை அறியத்தான் ஹிப்பாலஸ் புறப்படுகிறான். சூழலை சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் மிகுந்த துடிப்போடு இருந்தனர். சோழப்படையெடுப்பின் காரணம் தெரியாவிட்டாலும் பறம்பின் மீதுதான் படையெடுக்கிறான் என்பதை அறிந்ததிலிருந்து உதிரஞ்சேரலின் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியபடி இருந்தது. பறம்பின் மீது யார் படையெடுத்தாலும் அதன் இறுதி வெற்றியை அடையப்போகும் வாய்ப்பு தனக்குத்தான் என்பதில் அவன்மிக உறுதியாக இருக்கிறான்.

ஹிப்பாலஸ்ஸின் நாவாய் வஞ்சியிலிருந்து புறப்பட்டது. தன்னோடு எபிரஸ்ஸையும் கால்பாவையும் அழைத்துக் கொண்டான். திரேஷியனும் பிலிப்பும் வஞ்சியிலேயே இருந்தனர். புகாரின் பெருஞ்செல்வந்தர்களும் வணிகர்களும் கால்பாவின் நட்புக்காகப் பல்லாண்டுகளாக ஏங்கிக்கிடப்பவர்கள். அவனுடைய நாவாய்கள்தாம் புகார் வணிகர்களின் செல்வங்களுக்கான வடிகாலாக இருந்தன. ஹிப்பாலஸ் அதனால்தான் கால்பாவை உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

உதியஞ்சேரலுக்கு நன்குதெரியும், ஹிப்பாலஸ் புகாரை அடையும்பொழுது செங்கனச்சோழனின் படை பறம்புமலையின் அடிவாரத்தைச் சென்றடைந்திருக்குமென. ‘படை புறப்பட்டுவிட்டது’ என வந்த ஒற்றுச்செய்தியை ‘படை ஆயத்தமாகிறது’ என்று மட்டும் ஹிப்பாலஸ்ஸுக்குச் சொன்னான் உதியஞ்சேரல். அப்படியிருந்தும் ஹிப்பாலஸ்ஸை அனுப்பி வைப்பதற்குக் காரணம் இருக்கிறது. யவனர்களால் மட்டுமே அரசவையின் அனைத்து உண்மைகளையும் முழுமையாகவும் எளிதாகவும் அறியமுடியும். செங்கனச்சோழன் படையெடுப்பின் முழுநோக்கம் என்ன என்பதை அறிந்துகொள்ளத் திட்டமிட்டான் உதியஞ்சேரல்.

சூளூரிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டனர். ஐந்தாம் நாள் மாலைக்குள் உப்பறையை அடைய வேண்டும். எனவே, இன்றைய பயணத்தொலைவை சற்று கூடுதலாகத் திட்டமிட்டான் பாரி. மற்றவர்களுக்கும் அது புரிந்து கவனமாகவும் விரைவாகவும் செயல்பட்டனர். இன்றைய நாள் முழுவதும் கபிலருக்கு இரவாதனின் நினைவே இருந்தது. வில்லடியின் மாவீரன் என்று பாரி அவனைப்பற்றிச் சொன்ன சொல்லிலிருந்தே சிந்தனை அவனைச் சூழ ஆரம்பித்தது. நேற்றிரவு அவனைப் பார்த்தகணம் முதல் எண்ணங்கள் அவனை விட்டு விலகவில்லை. அவ்விளம் வீரனின் துடிப்பும் அவனது பேரன்பும் கபிலரைக் கிறங்கவைத்தன.

குதிரைகள் விரைந்துகொண்டிருந்தன. மலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து மறுகுன்றுக்குத் திரும்பும் இடத்தில் குதிரையை இழுத்து நிறுத்தினான் பாரி.

மற்ற இருவரும் அவன் சொல்லப்போவதைக் கேட்க ஆயத்தமாயினர். “நாம் இவ்விடம் வளையாமல் நேராகப் பயணித்தால் வடதிசை நோக்கிச் செல்வோம். இத்திசையில் குன்றுகள் தவறாமல் ஊர்கள் உண்டு. ஒவ்வோர் ஊரின் தன்மையும் ஒவ்வொரு வகையானது.  ஒருநாளைக்கு ஐந்து முதல் ஆறு ஊர்களை நம்மால் பார்க்க முடியும். தொடர்ந்து பயணித்தால் மூன்று நாள் பயணத்தொலைவில் இருப்பதுதான் தந்தமுத்தம். அவ்வூரைச் சேர்ந்தவர்கள்தாம் முதன்முதலில் யானைகளுடனான மொழியை உருவாக்கியவர்கள். இன்றளவும் யானைகளைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் அறிவுத்திறன் வேறு யாருக்கும் இல்லை” என்று மிகச்சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குதிரையைக் கிளப்பினான்.

பாரியின் குதிரை மலையின் பக்கவாட்டுச் சரிவில் இடப்புறமாகத் திரும்பியது. எதையோ கேட்க வாயெடுத்த காலம்பன் கேட்காமல் நிறுத்திக்கொண்டான். சரிவுப்பாதையின் தன்மை மிக ஆபத்தானதாக இருப்பதை உணர்ந்ததால் பேச்சை நிறுத்திக் கவனமாகக் கடந்தான். யானைகளைப்பற்றி பாரி சொல்லத் தொடங்கியதும் காலம்பனிடமிருந்து கேள்வி எழும் என்று கணித்தார் கபிலர். எழும் கேள்வியைக் கேட்கத்தொடங்கி நிறுத்திய காலம்பன் ஆபத்தான அவ்விடம் கடந்ததும் கேட்டான். “உனது பயணத்தின் போக்கு எனக்கு இப்போது வரை புரியவில்லை.”

என்ன கேட்கிறான் என்று கபிலர் விழித்ததைப்போலவே பாரியும் திகைத்தான். காலம்பன் சொன்னான், “எவ்வடையாளத்தை வைத்து உனது குதிரை போகிறது? எதனைப் பாதையென்று யூகித்துப் பயணிக்கிறாய்? புறப்பட்டதிலிருந்து நான் அதனைத்தான் உற்றுக் கவனித்து வருகிறேன். உனது பயணப்பாதை எனக்குப் பிடிபடவேயில்லை.  ஆனால், எவ்விடமும் தயங்கி நிற்காமல் பயணித்தபடியே இருக்கிறாய்” என்றான் காலம்பன்.

பாரி சொன்னான் “மலையின் எல்லாப் பாதைகளையும் விலங்குகளே உருவாக்குகின்றன. நாங்கள் கடமான் உருவாக்கும் பாதையையே பயன்படுத்துவோம். முகடுகளின் வழியான நெடும்பயணத்துக்கு அதுவே ஏற்றது. ஆனால் அதிலும் சிக்கல்கள் உண்டு. கடமான் பாதை, பாறை மடிப்புகளில் போய்ச் சேர்ந்தபிறகு மீண்டும் எவ்விடமிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிவது எளிதன்று. தொடங்கும் இடத்தை மிகக்கவனமாகக் கண்டறியாவிட்டால் எத்திசை போய்ச் சேருவோம் என்பதே தெரியாது. அடர்காட்டுக்குள் போய் மாட்டிக்கொண்டு வெளியேற வழியின்றி நிற்போம்.”

நேற்றைய பயணத்தின்பொழுது படர்பாறை வந்ததும் பாரி குதிரையை விட்டு ஏன் இறங்கினான் என்பது இப்பொழுதுதான் விளங்கியது. பாதை மீண்டும் தொடங்கும் இடத்தைக் கண்டறியவே இறங்கியுள்ளான் என்று காலம்பன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது கபிலர் கேட்டார், “மண்ணில் அழுத்தமற்ற இவ்வகைப்பாதைகள் எளிதில் மறைந்துவிடும் ஆபத்து இல்லையா?”

“கடமான் பாதை ஒருபொழுதும் அழியாது. அதன் காலடித்தடத்தையும் அதன் பற்கள் புற்களைக் கடிக்கும்வித்தையும் தெரிந்த ஒருவர் அதன் வழித்தடத்தைக் கண்டறிவது கடினமன்று. கொம்புகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முட்களையும் புதர்களையும் விட்டு விலகியே பாதையை அது உருவாக்கி வைத்திருக்கும். ஒருவகையில் குதிரைப்பயணத்துக்கு இவ்வகைப்பாதையே ஏற்றது” என்று சொன்ன பாரி, குதிரையின் கடிவாளத்தைச் சற்றே கவனப்படுத்தியபடி சொன்னான், “இதில் முக்கியமானது கடமான் பாதையிலிருந்து விலகி மீண்டும் அதன் மற்றொரு பாதையில் போய்ச் சேருவதுதான். அவ்விடைப்பட்ட தொலைவில் பாதைக்குறிப்புகளை நாம் உருவாக்கியுள்ளோம்.”

“இவ்வளவு கடினமான அமைப்புகொண்ட பாதையை எப்படி எல்லோராலும் நினைவில் கொள்ள முடியும்?” எனக் கேட்டார் கபிலர்.

“பறம்பின் அனைத்துத் திசைகளிலிருந்தும் இவ்வகைப் பாதைகள் எவ்வியூரை நோக்கி அமைந்திருக்கின்றன. அப்பாதையில் தொடர்ந்து காவல்வீரர்கள் குதிரைகளில் பயணித்தபடிதான் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, அத்திசையில் உள்ள ஊர் மக்களுக்கும் இவ்வகைப்பாதையைப் பற்றிய தெளிவு உண்டு. ஆனால், எவ்வியூரில் இருந்து செல்லும் அனைத்துப் பாதைகளையும் கண்டறிந்து, அனைத்துத் திசைகளின் எல்லைவரை பயணிக்கக்கூடியவர்கள் மிகச்சிலரே. வாரிக்கையன், தேக்கன், கூழையன், முடியன் உள்ளிட்ட ஏழுபேரால் மட்டுமே அது முடியும்” என்றான் பாரி.

ஹிப்பாலஸ் புறப்பட்டுப்போன அன்றைய நாளே குடநாட்டு வேந்தனுக்கு ஓலை அனுப்பினான் உதியஞ்சேரல். ஓலை கண்டதும் குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் வஞ்சியை நோக்கிப் புறப்பட்டனர். செப்பனிடப்பட்ட பாதை அமைப்பு இருந்ததால் விரைந்து வந்தனர்.

அவர்கள் வந்த செய்தி உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன் தளபதி துடும்பனுடனும் அமைச்சன் நாகரையனுடன் அவைக்குள் நுழைந்தான். உள்ளே குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் காத்திருந்தனர். வழமையான மரியாதைகள் முடிந்தவுடன் உதியஞ்சேரல் சொன்னான், “நாம் முன்பு திட்டமிட்டதைப்போல ஆளுக்கு ஒருமுனையிலிருந்து படைநடத்தி முன்செல்ல வேண்டாம். சூழல் நமக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளது. பாண்டியனின் பெரும்படையும் சோழப்படையும் பறம்பினைத் தாக்க முற்பட்டுள்ளன. அத்தாக்குதல் தொடங்கும் செய்திக்காக நாம் காத்திருப்போம். அவர்களின் தாக்குதலை எதிர்கொள்வது பாரிக்கு எளிதன்று. அவனது முழுமையான ஆற்றல் பறம்பின் கிழக்கு, வடகிழக்கு முனைகளில் குவிக்கப்படும். அந்த நேரத்தில் நம் இரண்டு படைகளும் ஒரேமுனையில் பறம்புக்குள் நுழைவோம்.

நமது பெருங்தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றல் பாரியிடம் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவனது படைவலிமை முழுவதும் அவ்விரு எதிரிகளை நோக்கி வெகுதொலைவுக்கு அப்பால் குவிக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அவனால் வீரர்களை நம்மை நோக்கி எளிதில் நகர்த்தி வரமுடியாது. எந்தப் பச்சைமலைத்தொடர் அவனுக்கு இதுநாள் வரை அரணாக இருந்ததோ, அதே மலைத்தொடர்தான் அவன் விரைந்து வந்துசேர முடியாத பெருந்தடையாக இருக்கப்போகிறது. கிழக்கிலும் வடகிழக்கிலும் இருக்கும் தொலைவோடு ஒப்பிட்டால் சரிபாதித் தொலைவிற்கு நாம் உள்ளே போனாலே போதும், நடுமலையில் நிலைகொண்டுவிடுவோம். அதன்பிறகு காடு நமக்கான அரணாக மாறும்.”

தாக்குதலின் திட்டத்தை உதியஞ்சேரல் விளக்கியவிதம், கேட்டுக்கொண்டிருந்தவர்களை உறைய வைத்தது. உதியஞ்சேரலின் மனதுக்குள் முழுமையாகப் போர் தொடங்கியிருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

ப்பறையை அடைந்து இருநாள்களாகிவிட்டன. ஆனாலும் கபிலர் இன்னும் வியப்பின் ஆழத்திற்குள்ளிருந்து மீளவில்லை. அவரால் எளிதில் நம்பக்கூடியதாக இது இல்லை. உப்பறையென்பது பச்சைமலைத் தொடரின் கருவறை என்றே சொல்லலாம். இங்கு பெரியகுளமொன்று இருக்கிறது. எக்காலத்திலும் நீர்வற்றாத குளமது. இக்குளத்தின் நீர் உப்பேறியிருக்கும். இம்மண்ணிலும் உப்புத்தன்மை மிக அதிகமாக இருக்கும்.

குளம் நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தான் பாரி. “வடகோடியிலிருந்து தென்கோடிவரை நீண்டுகிடக்கும் இப்பச்சை மலைத்தொடர் முழுவதும் இருக்கும் விலங்குகள் ஆண்டு தவறாமல் இவ்விடத்துக்கு வந்துவிடுகின்றன. இவ்வுப்புநீரை அருந்துவது மட்டுமன்றி, இம்மண்ணையும் தின்கின்றன. ஏன் என்பதற்கான காரணம் இன்றுவரை புரியவில்லை. விலங்குகளின் நோய்க்கான மருந்தாக இம்மண் இருக்கிறதா அல்லது ஈனும் காலத்தில் இம்மண்ணின் ஆற்றல் அதற்குத் தேவைப்படுகிறதா என்று எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், பச்சைமலைத் தொடரிலிருக்கும் எல்லா விலங்குகளும் இக்குளத்துக்கு வராமல் இருக்காது. இக்குளம் பற்றிய அறிவு அவற்றின் குருதிக்குள்ளே இருக்கும்போல. தலைமுறை தலைமுறையாக அவை இவ்விடம் வந்து இத்தண்ணீரைக் குடித்து, இம்மண்ணைத் தின்றுவிட்டுச் செல்கின்றன.”

குருதிக்குள் உறைந்திருக்கும் நினைவிலிருந்து மேலெழுந்துகொண்டிருந்தது பாரியின் சொல். அவன் மேலும் சொன்னான், “ஒருவகையில் விலங்குகளின் தாய்நிலம் இதுதான். இவ்விடத்துக்கு வந்து செல்வதற்கான பாதை எல்லா விலங்குகளுக்கும் தெரிந்திருக்கிறது. இவ்விடமிருக்கும் ஊரின் பெயர் `அறல்.’ இவ்வூர்க்காரர்கள் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்பது காலகாலத்துப் பழக்கம். பறம்பில் உழவுசெய்து வாழ்வது இவர்கள் மட்டுந்தான். இவர்கள்தாம் ஆதியிலே உழவைக் கண்டறிந்ததாகச் சொல்லுவார்கள்” என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

“உழவும் வேளிர்குலம் கண்டறிந்ததுதானா?’ எனக் கேட்டார் கபிலர்.

“இதற்கான விடையை நீங்கள்தாம் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். விலங்குகளின் தாய்நிலமான இந்த உப்பறை பறம்புக்குள் இருப்பதால்தான் பதினான்கு வேளிர்குலத்திலும் பறம்பின் வேளிர்கள் முக்கியத்துவங்கொண்டவர்களாக மாறினர்.”

“அதனால்தான் வேளிர் குலச்செல்வங்கள் அனைத்தும் பறம்பிலே கொண்டுவந்து பாதுகாக்கப்படுகின்றனவா?”

“பறம்பு அனைத்தையும் பாதுகாக்கும். இக்காட்டின் செடிகொடிகளையும், உயிரினங்களையும் காக்கும் பொறுப்பைத்தான் மனிதர்களாகிய எமக்கு இயற்கை அளித்துள்ளது” சொல்லியபடி குளக்கரையில் மண்டியிட்டான் பாரி.

என்ன செய்யப்போகிறான் எனத் தெரியாத திகைப்பில் கபிலரும் காலம்பனும் அவனைப் பார்த்திருக்க, நீரருந்தும் விலங்கினைப்போலக் குனிந்து முகத்தினை நீருக்கு அருகில் கொண்டுசென்றான்.
“இக்காட்டின் எல்லா உயிர்களைப்போல இவ்வுப்பூநீர் குடித்தே எம் வேளிர்குலமும் உயிர்வாழ்கிறது. இந்நீரையும் நிலத்தையும் விலங்கினங்களையும் செடிகொடிகளையும் காத்தல் என்பது எமது உயிரினும் மேலானது” என்று அவன் கூறிய சொற்கள் நீருள் புதைந்திருக்கும் ஆதி உப்பின் மீது படிந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்த கபிலரும் காலம்பனும் குளத்து நீரில் வாய்வைத்துக் குடித்துக்கொண்டிருக்கிறான் பாரி என நினைத்தனர்.

முகமெங்கும் நீர் வழிய நிமிர்ந்தான் பாரி. கண்திறவாமல் வான்நோக்கி நாடியை உயர்த்தினான். அவனது தொண்டைக்குழிக்குள் இருந்த உப்புநீரின் வழியே பீறிட்டு வெளிவந்தது ஓசை.

கணநேரத்தில் காட்டை உலுக்கிய ஓசையது. ஓசை வெளிப்பட்ட கணத்தில் கபிலரும் காலம்பனும் அஞ்சி அகன்றனர். எந்த வகையான ஓசையிது என்பது இருவருக்கும் பிடிபடவில்லை. விட்டுவிட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது ஓசை. பாரி வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. திகைத்துப்போய் நின்றபொழுது காலம்பன் கணித்தான். வேட்டையைத் தொடங்கும் கணத்தில் விலங்குகளின் உள்மூக்கிலிருந்து வெளிப்படும் உறுமலோசை இது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...