``மதம், வாழ்வின் வழிதான். ஆனால், அதில் பின்பற்றப்படும் காலத்துக்குப் பொருந்தாத நடைமுறைகள் புறந்தள்ளப்படவேண்டும். பெண்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. நம்பிக்கை என்னும் பெயரில், மத நம்பிக்கைகளில் தொடர்ந்து வரும் ஆணாதிக்கத்தை அனுமதிக்க முடியாது. உடல் சார்ந்த கூறுகளைக் கொண்டு தனித்தனியாக விதிக்கப்படும் விதிகள் சட்டத்துக்குப் புறம்பானவை” என்று தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார், அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா.
நீதிபதி சந்திரசூட், ``பெண்களின் வழிபாட்டு உரிமையை, மத நடைமுறைகள் என்னும் பெயரில் மறுப்பது குற்றம். பெண்களைக் குறைவாக நடத்தும் இந்த நடைமுறை அரசியமைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்று கூறியிருக்கிறார்.
2006-ம் ஆண்டு சபரிமலை கோயிலில் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர், `கோயிலுக்குள் பெண் ஒருவர் வந்துவிட்டுச் சென்றதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன'' என்று பிரசன்னம் சொன்னார். இதே ஆண்டில் கன்னட நடிகை ஜெயமாலா கடந்த 1987-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு சபரிமலை சென்றதாகவும், ``கோயில் தந்திரிகள் உதவியுடன் ஐயப்பனைத் தொட்டு வணங்கினேன்'' என்றும் வெளிப்படையாக அறிவித்தது, அவருக்கு எதிராகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
திரைப்பட நடிகையும், கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ஜெயமாலா, இத்தீர்ப்பு குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில், ``இதை விட மகிழ்ச்சியான விஷயம் என் வாழ்வில் இருக்க முடியாது. பெண்ணினத்துக்கும், இந்த ஆலய நுழைவுக்காகப் போராடிய பெண் அமைப்புகளுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், இறைவனுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என்றும், ``இது வரலாற்றில் ஒரு சிறந்த தீர்ப்பு" எனவும் நெகிழ்ந்திருக்கிறார்.
எந்த வயதுப் பெண்ணும் ஐயப்பனை தரிசிக்க முடியும் என்னும் வரலாற்றுத் தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, ``இது மிகச்சிறந்த தீர்ப்பு. ஒரு சாதிப் பிரிவினருக்கும், ஒரு பாலருக்கும் மட்டுமே இறைவன் சொந்தமல்ல என்னும் தீர்ப்பு வரவேற்கப்படக்கூடியது. இந்து மதத்தில் நல்லதொரு மாற்றத்துக்கு வழிவகுக்கும் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார்.
மார்ச் 10-ம் தேதி, ராஜ்ய சபாவில், திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்முறை (Marital Rape) மீதான கேள்விக்கு பதிலளித்தபோது, ``சர்வதேச அளவில் ஒரு கருத்தாக்கமாக இருந்துவரும் மெரைட்டல் ரேப் என்னும் குற்றம், இந்தியச் சூழலுக்கு ஒத்துவராத ஒன்றாக இருக்கிறது. இங்கு நிலவும் கல்வி, வறுமை, சமூக மதிப்பீடுகள், சடங்குகள், மத நம்பிக்கைகள், சமூக மனநிலை, பொதுக்கருத்து, மற்றும் திருமணத்தின் மீதான புனிதக்கருத்து ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், திருமண அமைப்புக்குள் நடக்கும் பாலியல் வன்முறையைக் குற்றமாகக் கருதமுடியாது” என மேனகா காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உரிமைச் செயற்பாட்டாளர்களாலும், பெண்ணியவாதிகளாலும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாலும் மிக வன்மையாக எதிர்க்கப்பட்ட கருத்து அது.
``இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இனிமேல் பெண்கள் கோயிலுக்கு செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதை அவர்களே தீர்மானிக்கலாம். சம உரிமை வெல்லட்டும்” எனத் தெரிவித்திருக்கிறார் தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலைவரான ரேகா ஷர்மா.
பூமாதா அமைப்பின் தலைவரும், பாலின சமத்துவச் செயற்பாட்டாளரான த்ரிப்தி தேசாயிடம் பேசினேன். மஹாராஷ்டிராவின் ஷனி சிங்னாபூர் கோவில், மஹாலஷ்மி கோவில், த்ரியம்பகேஷ்வர் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் நுழைவுப் போராட்டங்களை முன்னெடுத்தவர் த்ரிப்தி. ``பெண்கள் உடலிலிருந்து வெளிவரும் திரவமா, அவர்களது புனிதத்தைத் தீர்மானிக்கும்? மதத்துக்குள் இருக்கும் ஆணாதிக்கப் போக்குக்கு, இந்த வரலாற்றுத் தீர்ப்பு பெரிய அடியைக் கொடுத்திருக்கிறது. இது முடிவல்ல, தொடக்கம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.