நடப்பு
தொடர்கள்
Published:Updated:

எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!

எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி

புல்லட் ரயில், ரோ ரோ படகு சேவை எனப் பல திட்டங்கள் நம் நாட்டில் செயல் படுத்தப்பட்டு இருந்தாலும், கடந்த ஆண்டு மே மாதம் துவங்கி இன்றுவரை அதிகம் பேசப்படுவது நிதி ஆயோக்கின் மின்சார வாகனத் திட்டம். 2030-ல் மின்சார வாகனங்களை (Electric Vehicle - EV) மட்டுமே மக்கள் பயன்பாட்டில் இருக்குமாறு இந்தியாவை மாற்ற வேண்டும் என்று கடந்த மே மாதம், மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது நிதி ஆயோக்.

மின்சார வாகனங்களின் பயன்பாடு 2030-க்குள் பரவலாக்கப்பட்டால் 37% கார்பன் மாசுபாட்டையும், 64% எரிபொருள் தேவையையும் குறைக்கலாம். கூடுதலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்காகச் செலவழிக்கப்படும் ரூ. 3.9 லட்சம் கோடியை இந்திய அரசு சேமிக்கலாம் என்றும் கூறியிருந்தது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு இந்தத் துறையில் எந்தவிதமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளன, இந்தியாவின் மின்சார வாகனத் திட்டத்தில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்னென்ன?

எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!

    சவால் 1: மின்சாரப் பற்றாக்குறை 

நம் நாட்டில் மின்சார வாகனங்கள் பரவலாக்கப்படுமா னால் 9000 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படும். இந்தியாவின் மின்சார உற்பத்தி 2015-16-ம் நிதியாண்டில் 1107 கி.வாட் இருந்தது. மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு வந்தபிறகு நமக்கு 1200 கி.வாட் மின்சாரம் தேவை ஏற்படும்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி, தற்போது     2022-க்குள் 175 கிகா வாட் மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உருவாக்க முயன்று வருகிறது நம் நாடு. இதில் 100 கிகா வாட் உற்பத்தியைச் சூரிய ஒளிசக்தி மூலம் பூர்த்தி செய்ய உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. போதுமான அளவுக்கு மின்சாரத்தை நம்மால் தயாரிக்க முடியும் என்றால் மட்டுமே நம்மால் இந்தச் சவாலை எளிதில் சமாளிக்க முடியும்.

   சவால் 2: சார்ஜிங் ஸ்டேஷன்கள்

மின்சார கார்களுக்கு ரீசார்ஜ் செய்ய அதிக எண்ணிக்கையில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தேவை. நம் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இந்த  சார்ஜிங் ஸ்டேஷன்கள் தற்போது உள்ளது. தமிழகத்தில் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்கூட இதுவரை இல்லை. இதற்கான நடவடிக்கைகள் இனிதான் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

   சவால் 3: அதிக விலையிலான லித்தியம் பேட்டரி

எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!



தற்போது மிடில் கிளாஸ் மக்களின் தேர்வாக இருப்பது டீசல் கார்கள். டீசல் காரைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.5 செலவாகிறது. பெட்ரோல் காரைப் பயன்படுத்தி னால் ஒரு கிலோ மீட்டருக்க ரூ.5.5  செலவாகிறது. இயற்கை எரிவாயுவை (CNG) பயன்படுத்தும் போது கிலோ மீட்டருக்கு ரூ.2  செலவாகும். ஆனால்,  இயற்கை எரிவாயு அனைத்து இடங்களிலும் பரவலாகக் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், நாம் ஒரு மின்சார காரைப் பயன்படுத்தினால் கிலோ மீட்டருக்கு 1.1 ரூபாய் செலவாகும். மின்சாரமும் நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. மின்சார வாகனங் களைப் பயன்படுத்துவது மூலம் நாம் வருடத்திற்கு ரூ.20,000 வரை சேமிக்கலாம்.

ஆனாலும், மின்சார வாகனங்களை வாங்குவதில் இருக்கும் இன்னொரு பெரிய சிக்கல், பேட்டரியின் விலை. மின்சார வாகனங்களுக்கு லித்தியம் பேட்டரி தேவை. இந்த லித்தியம் பேட்டரியின் விலை தற்போது ரூ.5 லட்சம். இந்த பேட்டரிக்கு குறிப்பிட்ட கால அளவுதான் வாழ்க்கை. ரூ.5 லட்சத்துக்கு பேட்டரி வாங்கி 10 வருடங்களுக்கும் குறைவாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றால், இந்த வாகனங்களை வாங்க யோசிப்பார்கள்.

  மின்சார வாகனங்களுக்கு மானியச் சலுகை


ஆனால், அதிக சலுகைகளைக் கொடுப்பதன் மூலம், மக்களை மின்சார வாகனத்தை வாங்க வைக்கலாம். குறைந்த தூரமும், அதிக நேரமும் இயக்கும் கால் டாக்ஸி மற்றும் பேருந்து வைத்துத் தொழில் செய்பவர்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதால், அதிக லாபம் ஈட்டலாம்.

   மின்சார வாகனத்தை நோக்கி  மக்களைக் கவர்ந்திழுக்க மத்திய அரசு சில சலுகைகளைத் தரவிருக்கிறது. இலவச பார்க்கிங், இலவசமான டோல் கட்டணம், மின்சார கார்களுக்கு இலவச சார்ஜ் போன்ற வசதிகளைக் குறிப்பிட்ட கால அளவிற்குத் தருவதால், மக்கள் மின்சார வாகனங்களை அதிகம் வாங்குவர். இப்படி ஊக்கத் தொகை தருவ தால், ஆயில் இறக்குமதி செய்யும் கம்பெனிகளுக்கும், பெட்ரோல் நிலையம்  வைத்திருப்பவர்களுக்கும் தொழில் நஷ்டம் ஏற்படலாம். மேலும், பெட்ரோல், டீசல் விலை குறையவும் வாய்ப்புள்ளது.

இந்திய அரசாங்கம் 2015 முதல் ‘Faster Adoption and Manufacturing of Electric Vehicles (FAME)’ எனும் திட்டம் மூலம் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் மானியம் வழங்கிவருகிறது. உங்கள் வீட்டுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஒரு மின்சார வாகனம் வாங்க விரும்பினால் http://www.fame-india.gov.in/ModelUnderFame.aspx எனும் இணையதளத்துக்குச் சென்று நீங்கள் வாங்கும் வாகனத்திற்கு எவ்வளவு மானியம் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்றெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் மார்ச் 2018 வரை செயல்பாட்டில் இருக்கும். திட்டத்தை மத்திய அரசு வேகமாகச் செயல்படுத்தினாலும், மாநில அரசு ஆமை வேகத்தில்தான் வேலை செய்கிறது. 

எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!

   சப்பை கட்டும் இ.இ.எஸ்.எல்

இந்தத் திட்டத்தின் கீழ் புது டெல்லியைச் சேர்ந்த இ.இ.எஸ்.எல் (EESL) எனும் மத்திய அரசு நிறுவனம் டாடா மோட்டார்ஸிடமும், மஹிந்திராவிடமும் 10,000 மின்சார வாகனங்களை முன்பதிவு செய்தது. ஆனால், இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் எந்த நகரத்திலும் பரவலாக இல்லை. இந்த சார்ஜிங் ஸ்டேஷன் குறைபாட்டால்    இ.இ.எஸ்.எல் நிறுவனம் டாடாவிடமிருந்தும், மஹிந்திராவிடமிருந்தும் பெறவேண்டிய முதல் 500 மின்சார கார்களை வாங்குவதில் தாமதமானது. டெல்லியில் 4000 சார்ஜிங் ஸ்டேஷனை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனமான எக்ஸிம் டெலிசிஸ்டம்ஸ்  (Exicom Tele-Systems) வேலையைத் துவங்கியதும் கார்களை வாங்கிவிடுவோம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது இ.இ.எஸ்.எல். 

தற்போது கர்நாடகா அரசாங்கமும் இந்தத் திட்டத்தின் கீழ் 40 பேருந்து, 100 கார் மற்றும் 500 ஆட்டோ என்று மொத்தம் 640 வாகனங்களை முன்பதிவு செய்துள்ளது. மேலும், பெங்களூரு முழுவதும் சார்ஜின் ஸ்டேஷன்களை உருவாக்க 60% மானியமும் பெறவுள்ளது. இந்த மின்சார வாகனங்களைக் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெயருக்கென்று அசோக் லேலாண்டின் மின்சாரப் பேருந்தைச் சிலமுறை டெஸ்ட் செய்துள்ளனர். இதுதவிர, சொல்லிக்கொள்ளும் விதமாக எந்த மாநில அரசாங்கத்திடம் இருந்தும் முயற்சிகள் இல்லை.

   மெத்தனால் இன்ஜின் வேண்டும்

2030-ல் மின்சார வாகனங்களை மட்டுமே வைத்திருப்போம் என்று ஆரம்பித்த நிதி ஆயோக், இப்போது பெட்ரோல்-டீசலுக்குப் பதிலாக மெத்தனால்-ஹைப்ரிட் இன்ஜினைப் பயன்படுத்துமாறு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதற்கு அந்த அமைப்பின் சார்பில் சொல்லப்படும்  காரணம், “மின்சார வாகனங்களுக்கு அதிகம் தேவைப்படும் லித்தியம் எனும் மூலப்பொருள் சுலபமாகக் கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் லித்தியத்தின்மீது கவனம் செலுத்துவதால், இந்த மூலப் பொருள் நிலையாகக் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. அதனால் வேறு வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முயற்சியில் உள்ளோம்’’ என்று சொல்லியிருக்கிறது.

இந்தியாவில் மின்சார கார்கள் பரவலாக்கப்படுவதற்கு மிக முக்கியமான தேவையாக இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷனை உருவாக்க அதிக உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. இதற்கு அதிக நிதியைச் செலவிட வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், தற்போது நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையில் மெத்தனால் ஹைப்ரிட் கார்கள் ஒரு நல்ல மாற்றாக இருக்கும். மெத்தனால் திரவத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். மேலும், வாகனங்களில் இதைப் பயன்படுத்தினால் காற்றுமாசும் குறையும். மெத்தனால் பயன்படுத்தி ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம் காரிலேயே மின்சாரத்தை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது நிதி ஆயோக். ஹைபிரிட் கார்களுக்கு 43% ஜி.எஸ்.டி-யை நிர்ணயித்துவிட்டு, ஹைபிரிட் கார் பயன்படுத்தச் சொல்கிறது அரசு.

   மின்சாரக் கனவு நிறைவேறுமா?

அமெரிக்கா, ரஷியா, சீனா, லண்டன் என்று ஒவ்வொரு நாடும் மின்சார வாகனங்களின் விற்பனையைத் தங்கள் நாட்டில் அதிகப்படுத்த போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. உலகளவில் லித்தியம் எடுப்பதில் சீனா 4-ம் இடத்தில் இருந்தாலும், சீன கார் தயாரிப்பாளர்கள் மற்ற நாடுகளில் உள்ள லித்திய சுரங்கங்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டாப் கியரில் போய்க்கொண்டிருக்கும் நார்வே, 2016-ம் ஆண்டு 40 சதவிகிதம் மின்சார கார்களை விற்பனை செய்தது, 2017-ல் 52% கார்களை விற்பனை செய்து ஏறுமுகத்திலேயே உள்ளது. பத்து வருடங்களைக் கடந்த பின்னும் 50% வளர்சியில்தான் இருக்கிறது நார்வே. அமெரிக்காவும், லண்டனும் இன்னும் அந்த அளவு வளர்ச்சியைக்கூட அடையவில்லை. இந்தியாவிற்கு இந்தக் கனவை அடைய 13 வருடங்கள் உள்ளது.

எலெக்ட்ரிக் கார்களை வீதிக்குக்கொண்டுவர இப்படிப் பல சிக்கல் களும், சவால்களும் இருந்தாலும், எதிர்காலத்தில் அதன் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, இந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்படும் என்பது சந்தேகமில்லை. மின்சார கார்களினால் நம் எதிர்காலம் மின்மயமாகும் என நம்பிக்கையோடு காத்திருப்போம்!

 -ரஞ்சித் ரூஸோ

எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!

இ-கார்கள் அறிமுகம்... களமிறக்கும் கம்பெனிகள்!

எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்துவதில் நம் நாட்டில் பல பிரச்னைகள் இருந்தாலும், கார் தயாரிக் கும் நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் ஜரூராக இருக்கின்றன.

ரூ.6.5 லட்சம் விலை யில் டாடா நியோ என்கிற காரையும், ரூ.12 லட்சம் விலையில் டாடா டிகார் எலெக்ட்ரிக் என்கிற காரையும், ரூ11 லட்சத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் என்கிற காரையும் டாடா நிறுவனம் வெளியிடப் போகிறது. நிசான் நிறுவனம் ரூ.20 லட்சத்தில் நிசான் நோட் இ-பவர் என்கிற காரையும் அறிமுகப் படுத்தப் போகிறது. இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிக இ-கார்கள் வெளியிடப்படும் என நம்பலாம்!

எலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு!

வேகமெடுக்காத இரு சக்கர மின் வாகனங்கள்!

மின்சாரத்தில் இயங் கும் இரு சக்கர வாகனங் களின் விற்பனை குறிப் பிட்டுச் சொல்கிற   மாதிரி இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுக்க சுமார் 4.4 லட்சம் இரு சக்கர மின் வாகனங்கள்   விற்பனை ஆகியிருக்கிறது.

பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் ஒரு மாதத்தில் சுமார் 18 லட்சத்துக்கு மேல் விற் பனையாக,  ஆண்டொன் றுக்கு சராசரியாக 44 ஆயிரம் என்கிற அளவில் தான் மின்சாரத்தினால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகிறது.

எதிர்காலத்தில் இந்த வகை வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்!